Tuesday, February 21, 2012

பிழைகளுடன் கவிதை - ஜெயகணேஷ்

இங்கு எது முதல்?
எண்ணமா
எண்ணிக்கையா
குறியீடா
நீயா
நானா
யாருக்கேனும் தெரியுமா?

பதிவுகள் முக்கியமா?
பகிர்தல்கள் முக்கியமா?
இல்லை
படைத்தல்கள் முக்கியமா?
மூலம் தெரியா முகவுரைகள்
என்ன சாதிக்கும்?

படிதல் படிகளாகி
ஏற்றிவிடுவது
எதை எதை?

எதில் புதைந்திருக்கிறது
என்பதை
எதில் பதுக்கி வைத்திருக்கிறார்கள்?

முதலில்
எதைத் தேடுவது

எதையா?
எப்படியையா?
எப்பொழுதையா?
எங்கேயையா?

தேடிக் களைக்கையில்
என்னைத்
தேடவேண்டியதிருக்கிறதே
என்ன செய்ய?

ஆழம் அறிய
நீளம் தேவையில்லையாம்
நியாயம் கேட்கிறார்கள்.

கூனிக் குறுகுகையில்
நீளம்தேட
ஆழம் ஒத்துழைக்க மறுக்கிறது

கழிவுக்கான பாதையில்
கனவுகளை மேய்த்தலால்
என்ன பயன்?

மறக்கையில்
மறுக்கையில்
கிளை தாவுகிறது
மனம்.

தொலைவுகளில்
தொலைகையில்
பாதங்களில் பதிகின்றன
பதிவுகளின் படிமங்கள்.

(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மாவிபகவின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment