Monday, January 18, 2016

படைப்பரங்கமும் கலந்துரையாடலும் - 2/2016

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் 2016 ஆம் ஆண்டின் இரண்டாவது படைப்பரங்கமும் கலந்துரையாடலும் ஜனவரி 17 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிவரை அருப்புக்கோட்டை மதி இல்லத்தில் நடைபெற்றது. படைப்பரங்கில்…

          தோழர் சத்யா ‘18’ என்ற மாயா எதார்த்த அறிவியல் புனைகதையின் பகுதி இரண்டை வாசித்தார். இன்றைய நவீன அறிவியலின் எதிர்கால சாத்தியங்களையும் புனைவின் சாத்தியங்களையும் உள்ளடக்கியதாக இருந்த இந்தக் கதையின் போக்கு அனைவரையும் ஈர்ப்பதாக இருந்தது.

          தோழர் தமிழ்க்குமரனின் நாவல் ‘கடூழியம்’ பகுதி 14 மற்றும் 15 வாசிக்கப்பெற்று பகுதியின் மீதான பார்வைகள் முன் வைக்கப்பட்டன.

          தோழர் மதிகண்ணன் தோழர் ரமேஷ் எழுதி மாவிபக’வின் ‘இன்று புதிதாய் பிறந்தோம்’ கவிதைத் தொகுப்பில் வெளியான கவிதையை வாசித்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கவிதை இன்றைக்கும் பொருத்தப்பாடுடையதாய் இருப்பதற்குக் காரணம் சமூகம் மாறாமல் இருப்பதே என்ற கருத்து கலந்துரையாடலில் முன்னெழுந்தது.

          தோழர் கேகே’யின் கவிதை காலந்தோறும் நிகழ்த்தப்படும் ஆதிக்கத்தின் வன்முறைகளை முன்வைத்து அதன் மீதான கேள்விகளை எழுப்பிச் சென்றது.

          கருத்தரங்கின் தொடக்கமாக தோழர் சுப்புராயுலுவின் ‘சாதியும் வர்க்கமும்’ – ஒரு அம்பேத்காரியப் பார்வை முன்வைக்கப்பட்டு அதன் மீதான கருத்துகள் மூலம் கட்டுரை செழுமைப்படுத்தப்பட்டது.

          தோழர் அஷ்ரஃப் ‘இணையத்தில் வர்க்கம்’ என்ற தலைப்பிலான தன்னுடைய கட்டுரையின் முதல் பகுதியாக இணையமும் அதனைப் பயன்படுத்தும் சமூகமும் என்ற கருத்துரையை முன்வைத்தார். அடுத்த கூட்டத்தில் தொடர்வார்.


படைப்பரங்கையும் கருத்தரங்கையும் தோழர் கேகே ஒருங்கிணைத்தார்.

Tuesday, January 12, 2016

அமைதியான குழாயடி – ஜென்னிமா இந்துமதி (VII std)

சிவகாமியம்மாள் என்றாலே எங்கள் தெருவில் இருக்கும் எல்லா வீட்டுக் காரர்களுக்குமே பயம்தான். வாரம் ஒருமுறை தெருவிற்கான பொதுக் குழாயில் தண்ணீர் வரும்போது சிவகாமியம்மாளின் சத்தம் அடுத்த தெரு வரைக்கும் கேட்கும். அவர்கள் வைத்ததுதான் குழாயடியில் சட்டமாக இருக்கும். நாங்கள் அந்தத் தெருவிற்குக் குடிபோன புதிதில் அவர்களின் சத்தத்தைக் கேட்டுப் பயந்து போயிருக்கிறேன். அவர்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில்தான் நாங்கள் குடிபோயிருந்தேன் என்பதால் எனக்கு மற்றவர்களைக் காட்டிலும் அதிக பயமாக இருந்தது.
அவர்களுடன் நான் இணக்கமாகப் பழகினேன். அவர்களும் என்னுடன் நன்றாகத்தான் பழகினார்கள். ஆனால் குழாயில் தண்ணீர் வரும் நேரத்தில் அந்த நட்பும் இணக்கமும் எங்கே போகும் என்பதே தெரியாது. நான் வாயே திறக்க மாட்டேன். இருந்தாலும் “கல்லுளி மங்கன் மாதிரி இருக்கிறதப் பாரு ஊமக் கொட்டான்” என்று என்னையும் வம்புக்கு இழுப்பார்கள்.
மூன்று நாட்கள் சொந்த ஊருக்குக் குலதெய்வம் கோயிலுக்குச் சாமி கும்பிடப் போய்விட்டு வந்த சிவகாமியம்மாள் வலது கையில் தீக்காயத்துடன் வந்தார்கள். கூழ் ஊற்றும்போது கையில் ஊற்றிக் கொண்டதாகச் சொன்னார்கள். நல்ல வேளையாக காயம் பெரிய அளவில் இல்லை என்றாலும், வீக்கம் இருந்ததால் அவர்களால் வீட்டு வேலைகளைச் சரிவரச் செய்ய முடியவில்லை. நான் வீட்டு வேலைகளில் அவர்கள் கேட்காமலே அவர்களுக்கு உதவி செய்தேன். ‘‘ரொம்ப நன்றிம்மா” என்றார்கள். “இதற்கெதுக்கும்மா நன்றி. பக்கத்துல இருக்கிறவங்க ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருக்குறதுதானே நல்லது” என்றேன். தெருவில் இருக்கும் மற்றவர்களும் சிவகாமியம்மாளுக்குச் சிறுசிறு உதவிகள் செய்தார்கள். அந்த வாரம் தண்ணீர் வந்தபோது அவர்கள் வீட்டிற்கு நான்தான் தண்ணீர் எடுத்து வைத்தேன். சிவகாமியம்மாள் தண்ணீர் பிடிக்க வராததால் அன்றைக்கு குழாயடி மிகவும் அமைதியாக இருந்தது. சிவகாமியம்மாளுக்கு கை சரியான பிறகும் எங்கள் குழாயடி இப்போதும் அமைதியாகத்தான் இருக்கிறது.
செற்றாரைச் செறுத்தலில் தற்செய்கை சிறந்தன்று
(பகைவரைத் தண்டிப்பதைவிட, அவருக்க நன்மை செய்தல் சிறந்தது)
 – மதுரைக் கூடலூர்கிழார் – முதுமொழிக்காஞ்சி – சிறந்த பத்தில் 9ஆம் பாடல்

LIC ஊழியர் சங்கத்தின் கருத்தரங்கில்....



அருப்புக்கோட்டையில் 2016 ஜனவரி 6அன்று
அனைத்திந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் சார்பில்
அம்பேத்கர் நினைவுக் கருத்தரங்கம் நடைபெற்றது.


நிகழ்வில் மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் செயலர் தோழர் கேகே கலந்து கொண்டு இன்றைய சமூகச் சூழலில் அம்பேத்கரின் சிந்தனைகள் என்ற தலைப்வில் கருத்துரை வழங்கினார்.


தன்னுடைய உரையில் இன்றைய இந்தியச் சூழலில் அடிப்படைவாத சக்திகளால் ஒடுக்கப்படுகின்ற வெளிப்பாட்டுச் சுதந்திரம், பங்கேற்புக்கான உரிமைகள், சமூக சமத்துமின்மை போன்றவற்றைச் சுட்டிக் காட்டி இப்படியான சூழலில் அம்பேத்கரின் சிந்தனைகள் பற்றி உரை நிகழ்த்தினார். அம்பேத்காரிய, பெரியாரிய, கம்யூனிஸ செயல்பாட்டாளர்கள் ஒன்றினைய வேண்டிய புள்ளிகளை தோழர் கேகே’யின் உரை தொட்டுச் சென்றது.

படைப்பரங்கமும் கலந்துரையாடலும்


இடம் - மதி இல்லம்.

நாள் - 2016 ஜனவரி 17 ஞாயிறு

நேரம் - சரியாக பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை

கலந்துரையாடலுக்கான விவாத முன்வைப்புகள்

தோழர் முனியசாமி   – கிராமப்புறங்களில் வர்க்கம்

தோழர் அஷ்ரஃப்      - மின்னணு ஊடகங்களில் வர்க்கம்

ஒருங்கிணைக்க தோழர் விஜி

வரவேற்கவும் நன்றி கூறவும் தோழர்கள் கேகேயும் வருணும்

Friday, January 8, 2016

படைப்பரங்கமும் கலந்துரையாடலும்

          மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் 2016 ஆம் ஆண்டின் முதல் படைப்பரங்கக் கூட்டம் முதல் ஞாயிறான ஜனவரி 3 ஆம் நாள் நடைபெற்றது. படைப்பரங்கில்…

          தோழர் சுப்புராயுலு ‘குழந்தை’ என்ற தலைப்பில் கவிதையும்

          தோழர் மாணிக் 2004 ஜனவரி 29ன் நாட்குறிப்பையும்

          தோழர் தமிழ்க்குமரன் ‘கடூழியம்’ நாவலின் இரண்டு அத்தியாயங்களையும்

          தோழர் மதிகண்ணன் ‘எழுத்துப் பிழை’ என்ற கதையையும்

          தோழர் சத்யா ‘18’ என்ற தலைப்பிலான அறிவியல் புனைகதையின் பகுதியையும் வாசித்தனர்.

          தோழர் வருண் ஒருங்கிணைத்த படைப்பரங்கில் தோழர்கள் படைப்புகளின் மீதான தங்கள் பார்வையைப் பதிவு செய்தனர்.

          தொடர்ந்து தோழர் மாணிக் சமூக வலைத் தளங்களில் சாதியம் என்ற தலைப்பிலான தன் விவாதக் குறிப்புகளை முன்வைத்து விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.

          தொடரும் கருத்தரங்கில் தோழர் அஷ்ரப் சமூக வலைத் தளங்களில் வர்க்கம் என்ற தலைப்பிலான தன் விவாதக் குறிப்புகளையும்

          தோழர் முனியசாமி கிராமங்களில் வர்க்கம் என்ற தலைப்பிலான தன் விவாதக் குறிப்புகளையும் முன்வைக்க உள்ளனர்.