Thursday, October 10, 2013

அர்த்தங்கள் - இவான்

படம் வடிவமைப்பு : ஜென்னிமா இந்து மதி
புதைந்து போன சொற்களின்
அர்த்தங்களைத் தேடி
புதைந்து கொண்டிருக்கிறேன்
இதோ சிறிது தூரம் சிறிது தூரம்
எனச் சொல்லி ஆழமாய்ப்
புதைந்து கொண்டிருக்கிறேன்
என்னைப் போலவே பலர்.
உயிர்ப்பும் உணர்வும் அற்ற
ஒரு உருவம் நின்று கொண்டிருந்தது.
மெதுவாகச் சென்று உற்றுப் பார்க்கிறேன்
திடீரென ஓர் அசைவு
கொண்ட அது மெதுவாய்ப்
புன்னகைத்து கட்டித் தழுவி
நெற்றியில் முத்தமிட்டது.
அது உணர்வோடுதானிருந்தது.
கண்கள் மிளரச் சொன்னது
நாம்தான் அவைகளின் அர்த்தங்கள்.
(நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுதிய கவிதை)

முகமூடியுடன் நான் - கு.பா.

படுக்கையறை
நிலைக் கண்ணாடி
கையில் முகமூடியுடன் நான்
அகோரமாய்
பரிதாபகரமாய்...
என் முகம்.
கண்ணாடி சொல்கிறது;
ஆஹா! எவ்வளவு அழகு.
சிரமப்பட்டு
மறுபடியும் முகமூடிக்குள்
நான்.
(தேடலில் சிக்கிய அமரர் தோழர் கு.பா.வின் கவிதை)