Monday, April 16, 2012

கொல கொலயா முந்திரிக்கா - மதிகண்ணன்

கடந்த நூற்றாண்டின் இறுதியாண்டுகளில் பேச்சு வாக்கில் வந்த வாக்கியங்களுள் “இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் காகம் வடை திருடிய கதை பிறக்கும் குழந்தைகளில் மரபணுக்களிலேயே பதிந்திருக்கும். அந்த அளவிற்கு அந்தக் கதை எல்லோருக்கும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது“ என்பதும் ஒன்று. தமிழகத்தில் தமிழில் மட்டுமே கல்வி கற்பிக்கப்பட்டு வந்த நாட்களில் அந்தக்கதையின் ‘காக்கை ஏமாந்தது‘ என்ற முடிவும், ஆங்கிலவழி கல்வி முறை பிரபலப்படுத்தப்பட்ட பின்னர் கதை ‘புத்திசாலிக் காகம்‘ என பெயர் மாற்றப்பட்டு ‘நரி ஏமாந்தது‘ என்ற முடிவும் கொண்டதாக இருந்து வருகின்றது. ஏமாந்த பாட்டியைப் பற்றிப் பேசாமல் திருடிய காக்கைக்காகவும், ஏமாற்ற நினைக்கும் நரிக்காகவும் பரிந்து பேசிய கதை மீது மாற்றுக் கருத்து உண்டென்றாலும், முந்தைய முடிவின் நீதியாக ‘திருடிய பொருள் நிலைக்காது‘ என்பதுவும், பிந்தைய முடிவின் நீதியாக ‘ஏமாற்ற நினைப்பவர் ஏமாந்து போவார்‘ என்பதுவும் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால், இன்று அந்தக் கதை குழந்தைகளுக்குச் சொல்லப்படுவதில்லை. அந்தக் கதையைச் சொல்லிய ஆசிரியர்கள் இதே போன்ற வேறு பல சர்வதேசக் கதைகளை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். அல்லது நகர்த்தப்பட்டிருக்கிறார்கள். முந்தைய மூன்றாம் தலைமுறையினர் நெடுந்தொடர்களில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் முந்தைய இரண்டாம் தலைமுறையினரான நடுவயதினரை வெறிநாயாய் விரட்டும் வாழ்க்கை கதைசொல்லிகளாக வைத்திருக்கவில்லை.
இப்படி நாம் தொலைத்த கதைகள் ஏராளம். சுண்டக்காயும் பாட்டியும் கதை, ஏழு அண்ணன் தம்பிகளுடன் பிறந்த கடைசித் தங்கையின் கதை, ஏழு மலை ஏழு கடல் தாண்டும் பல சாகசக் கதைகள்... இப்படிப் பல கதைகளைத் தொலைத்துள்ளோம். தமிழ் நாட்டில் கம்பராமாயணம் படித்து ராமனையும், சீதையையும், ராவணனையும், லட்சுமணனையும், அனுமனையும் தெரிந்து கொண்டவர்கள் பீஸ்ரேட் (piece rate) பிரசங்கிகளாக இருக்கிறார்கள். கம்ப ராமாயணம் படிக்காத கிராம மக்களுக்கு ராமாயணப் பாத்திரங்கள் பற்றி நன்றாகத் தெரியும். கம்பன் எழுதியதைவிட இவர்கள் நிறையவே கதைகள் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பாத்திரத்திரத்திற்கும் தனித்தனிக் கதைகளும் கொண்டது இவர்களின் கதையாடல் மரபு. அனைத்தையும் இவர்கள் கதைசொல்லல், கதைகேட்டல் மரபின் வழியாகவே கற்றிருக்கிறார்கள். குரு சிஷ்ய மரபுவழிக் கற்றலைத் தாண்டிய தனிமனிதத் தொடர்புவழிக் கற்றல் மரபு இவர்கள் கற்றுக் கொண்ட மரபு. இவர்கள் கதைசொல்லியின் மீது மரியாதையும் அன்பும் கொண்டவர்களாக இருந்தார்கள். இந்தக் கதைசொல்லல் மரபின் தொடர்ச்சியாக இன்று மிகமிகப் புதியதென்று சொல்லிக்கொண்டிருக்கும் ‘ஒத்த வயதினர் இணைந்து கற்றல்‘ ‘தானே கற்றல்‘ (pear group learning, self learning) போன்ற கற்றல் முறைகளை ஒத்த விளையாட்டுகளும் அவர்களிடம் இருந்திருக்கின்றன. விளையாட்டுகள் வழி என்னதான் கற்றுவிட முடியும்?
இரண்டு அணியினர் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அணி 1 :  “ராசா வீட்டில் கல்யாணம்.“
அணி 2 :  “யாருக்குக் கல்யாணம்?“
அணி 1 :  “ராசா மகளுக்குக் கல்யாணம்.“
அணி 2 :  “அப்படியா சந்தோஷம்“
அணி 1 :  “கல்யாணத்துக்குப் பூசணிக்காய் வேணும்“
அணி 2 :  “பூசணி இப்பத்தானே விதை நட்டுருக்கு. போயிட்டு பெறகு வாங்க“
அணி 1 :  “ராசா வீட்டுல பூசணிக்கா பறிச்சுட்டு வரச் சொன்னாங்க“
அணி 2 :  “இப்பத்தான் முள விட்ருக்கு. . போயிட்டு பெறகு வாங்க“
அணி 1 தொடர்ந்து “ராசா வீட்டுல பூசணிக்கா பறிச்சுட்டு வரச் சொன்னாங்க“ ஒவ்வொரு முறையும் ஆள் மாற்றி ஆள் சொல்லிக் கொண்டிருக்க...
அணி 2 :  “இப்பத்தான் தண்ணி பாய்ச்சீருக்கு, . போயிட்டு பெறகு வாங்க“
அணி 2 :  “இப்பத்தான் கொடி முளைச்சுருக்கு. . போயிட்டு பெறகு வாங்க“
அணி 2 :  “இப்பத்தான் களையெடுத்திருக்கு. . போயிட்டு பெறகு வாங்க“
அணி 2 :  “இப்பத்தான் பூ பூத்திருக்கு. . போயிட்டு பெறகு வாங்க“
அணி 2 :  “இப்பத்தான் பிஞ்சு விட்டுருக்கு, . போயிட்டு பெறகு வாங்க“
அணி 2 :  “இப்பத்தான் காய் காச்சிருக்கு. . போயிட்டு பெறகு வாங்க“
அணி 2 :  “இப்பத்தான் லேசா முத்திருக்கு. . போயிட்டு பெறகு வாங்க“
அணி 1 :  “அதெல்லாம் முடியாது. எப்புடி இருந்தாலும்சரி. பூசணிக்யோடதான் போவோம்“
அணி 2 :  “சரி. நல்லா முத்துனதாப் பாத்து பறிச்சுட்டுப் போங்க“
அணி 1 :  “முத்திருச்சா...?“
அணி 2 :  “முத்தல...“
அணி 1 :  “முத்திருச்சா...?“
அணி 2 :  “முத்தல...“
அணி 1 :  “முத்திருச்சா...?“
அணி 2 :  “முத்தல...“
… … … …
அணி 1 :  “பரவாயில்ல... இதப்பறிச்சித்தா...“
அணி 2 :  “முடிஞ்சாப் பறிச்சுக்கங்க“
அணி 1 :  “ஏய்... வந்துரு வந்துரு... இந்தா வந்துரு...“
அணி 2 :  “வர...மாட்டேன்... நான் வரமாட்டேன்...“
பூசணிக்காய் விளையாட்டின்போது இரண்டு அல்லது மூன்றுபேர் மட்டுமே இருக்கக்கூடிய ராசா உத்தியாலும் எத்தனைபேர் விளையாண்டாலும் மீதி அத்தனைபேரும் இருக்கக்கூடிய தோட்டக்காரர் உத்தியில் உள்ள அனைவராலும் பாடல்போலப் ராகம்போட்டுப் பேசப்படும் விளையாட்டிடை உரையாடல் இது. (உத்தி = அணி) இந்த உரையாடல் ராசா வீட்டு ஆட்களின் (அதிகார வர்க்கத்தின்) எண்ணிக்கை குறைவையும், தோட்டக்காரர் ஆட்களின் எண்ணிக்கைப் பெருக்கத்தையும் சுட்டிக்காட்டுவதுடன், 99 விழுக்காடேயானாலும் ஒரு வார்த்தையும் மறுத்துப்பேச முடியாத தோட்டக்காரர்களின் சூழ்நிலை... ராசா வீட்டுக் கல்யாணத்தில் அவர் நிலை பற்றியும் எடுத்துரைக்கிறது. ஒரு பூசணி காயாகவோ, பழமாகவோ பயன்பாட்டிற்கு வருகின்ற அதன் வேளாண் வளர்ச்சிப் படிநிலைகளையும் விவசாயத்தை வாழ்க்கை முறையாகக் கொண்டவர்களின் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகின்றது. இறுதியில் தன்விளைச்சலைத் தக்கவைப்பதற்கான போராட்டத்தில் தோட்டக்காரர்கள் வெற்றி பெறுவதாகவே பெரும்பாலும் இவ்விளையாட்டு முடியும். தோட்டக்காரர் வென்றாலும் தோற்றாலும் மீண்டும் தொடங்கும் விளையாட்டு ‘ராசா வீட்டுல கல்யாணம்‘ என. இப்படியான விளையாட்டிடை உரையாடல்கள் பகுதிவாரியான வட்டார வழக்குச் சொற்களையும், திணைவகைப்பட்ட நிலத்தின் வேளாண் முறைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும். ஆண், பெண் இருபால் குழந்தைகள் இணைந்து விளையாடும் இவ்விளையாட்டில் ராசாவின் பெயரோ, தோட்டக்காரரின் பெயரோ குறிப்பிடப்படாமல் காலத்தால் பொதுத்தன்மை பொருந்தியதாக இருக்கும்.
இதேபோல் எலியும் பூனையும் விளையாட்டில் ‘எலி என்னா செய்யுது?‘ என வெளியில் நிற்கும் பூனையால் திரும்பத் திரும்பக் கேட்கப்படும் கேள்வி. எலியைக் காக்கும் பணியை தங்களுக்குத் தாங்களே வரித்துக் கொண்டு அரண்கட்டி நிற்கும் எலிச்சிப்பாய்கள். வட்டத்திற்கு உள்ளே எலியின் செயல்பாடுகளைக் கவனித்து பதில் சொல்வார்கள். ‘இப்பத்தா எந்திரிச்சிச்சு‘ ‘இப்பத்தான் முகங்கழுவுது‘ ‘இப்பத்தான் பல் தேய்க்குது‘ என வரிசையாக அன்றாடக் காலைச் செயல்பாடுகளைச் சொல்லி ‘எலி கிளம்பிருச்சு‘ என முடித்த பின்னர் உடல்சார் விளையாட்டு தொடங்குகிறது. அன்றாடச் செயல்பாடுகளின் பெரும்பகுதிச் செயல்பாடாய் அல்லது விளையாட்டின் பெரும்பகுதியாய் பூனையால் விரட்டப்படும் எலியைக் காக்கும் விளையாட்டு எலியும் பூனையும். “பூனையிடமிருந்து தப்பிக்க பூனைக்கு மணிகட்டிவிட்டு, சப்தம் கேட்டால் ஓடிவிடலாம்... யார் மணி கட்டுவது? என முடிவெடுக்கும் தருவாயில் பூனை வந்துவிட... எலிகள் ஓடிவிடும்... எலிகளின் பயத்தைப் போக்க முடியாது. எலிகள் ஓடி ஒளிவது என்பது விதிக்கப்பட்டது. தப்பிக்க முடியாது. எலிகளை யாராலும் காப்பாற்ற முடியாது.“ என பூனைக்கு மணிகட்டாத பெரியவர்கள் கதை சொல்லிக் கொண்டிருக்கையில் ‘இணைந்து நின்றால் எலியைக் காப்பாற்ற முடியும். விரட்டப்படும் எலி கேலிக்கு உள்ளாகாமல், விரட்டும் பூனையைக் கேலி செய்ய முடியும். தான் மூச்சு வாங்காமல், பூனையை மூச்சிரைக்க வைக்க முடியும். விரட்டப்படும் எலி லாவகமாய்த் தப்பிக்க, விரட்டும் வேகத்தில் பூனையை விழத்தட்டி மூக்குடைக்கவும் முடியும் என்பதை குழந்தைகள் விளையாட்டாகச் செய்கிறார்கள். பொதுவாகவே எளிய எலிகள் மேலிருந்து தாக்கப்படும்போது மூக்குடைவதும்... வலிய பூனைகளின் மூக்குடைப்பு கீழிருந்து நிகழ்த்தப்படுவதும் இயற்கைதானே?
பூசணிக்காய் அல்லது ராசாவீட்டுக் கல்யாணம், எலியும் பூனையும் தவிர கண்ணா மூச்சி, பூப்பறிக்க வருகிறோம், ஒருகுடம் தண்ணி ஊத்தி..., கொல கொலயா முந்திரிக்கா... ... போன்றவை இருபால் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகள். பின்னாட்களில் கள்ளன் போலிசும் இதில் இணைந்து கொண்டது. பொதுவாகவே இருபால் குழந்தைகள் இணைந்து விளையாடும் விளையாட்டுக்கள் பலவும் அல்லது அனைத்துமே நாளைய தலைமுறைக்கு சமூக உற்பத்தி சார்ந்த விஷயங்களையும், அன்றாடச் செயல்பாடுகளையும், ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைவதையும், படைப்புச் செயல்பாட்டையும் கற்பிப்பவைகளாக இருக்கின்றன. ஆனாலும், அவற்றில் பொழுதுபோக்குத் தன்மையும், மனமகிழ்ச்சிக்கான அடையாளங்களும் நீக்கமற இருக்கின்றன. துன்பம் நீக்கிய உவகை விளையாட்டின் அடிப்படை என 2600 ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியர்
“செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்று
அல்லல் நீத்த உவகை நான்கே“ (தொல்காப்பியம் நூற்பா 1205) எனச்சுட்டிக் காட்டிய விளையாட்டுகளின் தொடர்ச்சி இவை. நீண்ட பாரம்பரியம் கொண்டவை தெருவிளையாட்டுகள் என நாம் அடையாளப்படுத்தும் சமூக விளையாட்டுகள்.
சிறுவர் மட்டும் விளையாடும் விளையாட்டுகளான பம்பரம், குண்டு, கிட்டி, கல்லா... மண்ணா..., சில்லு முத்து, பச்சைக்குதிரை போன்றவை சில நேரங்களில் சிறுமிகளாலும் தனித்து விளையாடப்படும். சிறுமியர் ஆட்டமாக பல்லாங்குழி, தட்டாங்கல், தாயம், பாண்டி, தட்டா மாலை, மலைமேல் தீ, கிச்சுக் கிச்சுத் தாம்பாளம் போன்றவை சில நேரங்களில் குடும்ப உறுப்பினர்களான ஆண்குழந்தைகளையும் இணைத்து விளையாடப்படும். இளைஞர்/ஆண்களுக்கான விளையாட்டுகளாக கபடி, உறியடி, ஆடு-புலி ஆட்டம், சிலம்பம், வழுக்கு மரம், வண்டிப் பந்தயம், எருதுகட்டு போன்றவையும், சிறுமியர் விளையாடும் அதே விளையாட்டுகள் கொஞ்சம் பெரிய அளவில் பெண்களாலும் விளையாடப்படுகின்றன. பட்டம், காற்றாடி, கரகர வண்டி, சீதைப் பாண்டி போன்ற விளையாட்டுகள் யாருடைய துணையுமின்றி தனியாகவே விளையாடும் விளையாட்டுகள். ஆனால் சீதைப் பாண்டி தவிர மற்றவற்றிற்கு வேடிக்கை பார்க்கவாவது ஆட்கள் வேண்டும்.
சில்லு முத்து, செதுக்கு முத்து, கிட்டி, பச்சைக்குதிரை, கபடி, கால் தூக்கி கணக்குப்பிள்ளை,  எறிபந்து, பிள்ளையார் பந்து, குரங்கு பந்து, காற்றாடி, கள்ளன் போலிஸ், கண்ணாமூச்சி, எலியும் பூனையும், ராசாவீட்டுக் கல்யாணம், பம்பரம் போன்றவை மழைக்காலத்தில் விளையாட வானமும் பூமியும் ஒத்துழைப்பதில்லை என்பதால் அவை வேனிற் கால விளையாட்டுகள். பல்லாங்குழி, தாயம், தட்டா மாலை, ஆடு புலி ஆட்டம், பிள்ளையார் கொழுக்கட்டை, ஒத்தையா ரெட்டையா போன்ற உள்ளரங்க அமர்வு விளையாட்டுகள் மழைக்காலத்திற்கானவை.
பொதுவாக சிறுவர்களுக்கான விளையாட்டுகள் இலக்கு நிர்ணயிப்பதையும்,  குறி பார்த்து அடிப்பதையும், திட்டமிட்டு செயல்படுவதையும் கற்றுக்கொடுத்தன. கல்வி மறுக்கப்பட்ட பெண்கள் சமூகத்திற்கு குறைந்தபட்ச கல்வியாக எண்கணித்ததின் அடிப்படைகளையும் துல்லியத்தையும் கற்றுக் கொடுப்பவையாக அவர்கள் விளையாடிய விளையாட்டுகள் இருந்தன.
பிள்ளையார் பந்து என்றொரு விளையாட்டு. அந்த விளையாட்டில் கீழே சப்பட்டையான பெரிய கல், அதன்மேல் சப்பட்டையான அதைவிட கொஞ்சம் சிறிய கல். அதன் மேல்.... இப்படி வரிசையாக கீழிருந்து மேலாக பெரிதிலிருந்த சிறிதான கற்கள் அடுக்கப்பட்டிருக்கும். கொஞ்ச தூரம் தள்ளி ஒரு எறிகோடு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அந்தக் கோட்டிலிருந்து விளையாட்டின் ஒரு உத்தி கல் அடுக்கை நோக்கி பந்தை எறிவார்கள். பந்தில் எறிபட்டு கற்கள் சரிந்து விழுந்ததும் பந்து எறிந்தவர் உத்தியினர் அடுத்த உத்தியினரை பந்தால் எறியத் தொடங்குவார். எதிர் உத்தி எறி வாங்காமல் தப்பித்துக் கொண்டே கற்களை பழைய நிலைக்கு அடுக்க வேண்டும. அடுக்கும் வரை வாங்கிய எறிகளின் எண்ணிக்கை கணக்கிலெடுக்கப்படும். பின்னர் உத்திமாற்றி விளையாட்டு தொடரும். இதே போன்றதொரு விளையாட்டு உலகம் முழுவதும் ஆடப்படுவது நமக்குத் தெரியும். அதுவேறு இதுவேறு என்று நினைத்தால், கிட்டியையும் இதனுடன் இணைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
பிள்ளையார் பந்து என பின்னாட்களில் பெயரிடப்பட்டிருக்க வாய்ப்புள்ள இந்த எறிபந்து விளையாட்டு எப்போது தொடங்கியது, யார் தொடங்கி வைத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. உலகத்தின் எந்த மூலையிலுமே ஏதாவதொரு குழந்தைகள் விளையாட்டை நான்தான் கண்டுபிடித்தேன் என ஒருவர் சொன்னால் அது குழந்தை விளையாட்டே அல்ல. குழந்தைகள் தங்களுக்கான விளையாட்டுகளை தாங்களே உருவாக்கி தங்களுக்குள் பரப்புகிறார்கள். அவர்களிடமிருந்து பெரியவர்கள் கற்றுக் கொண்டு மற்ற குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கிறார்கள். சில நேரங்களில் பெரியவர்கள் தாங்களும் விளையாடுகிறார்கள்.
இப்படித்தான் 15-16ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் இங்கிலாந்துக்கு தென்மேற்குப் பகுதியிலும் கென்ட் மற்றும் கயாதுக்சுக்கு அருகிலும் உள்ள சமவெளிப்பகுதிகளில் சிறுவேளாண் தொழிலிலும், மேய்ச்சலிலும், பட்டறைத் தொழிலிலும் ஈடுபட்டிருந்த மக்களின் ஆண் குழந்தைகள் பந்தையும் மட்டையையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் விளையாட்டு மட்டை நுனி வளைந்ததாக இருந்தது. மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த மக்களின் குழந்தைகள் விளையாண்ட இவ்விளையாட்டின் பந்து அவர்களுக்கு விலையின்றிக் கிடைத்த கம்பளியை உருட்டி செய்யப்பட்டிருந்தது. ஒருவர் பந்தை உருட்டிவிட மற்றவர் கையிலிருந்த மட்டையால் அதனைத் தடுத்து அடித்து விளையாடினார். வளைந்த வடிவிலான மட்டையும்கூட மேய்ச்சல் தொடர்பான தொழிற்கருவியின் திருத்திய வடிவமாக இருக்கலாம். பதினேழாம் நூற்றாண்டுவரை இவ்விளையாட்டு கிராமப்புறச் சிறுவர்களின் விளையாட்டாக மட்டுமே இருந்திருக்கின்றது. ‘கிரேக்கேட் (Creckett) என்று பெயரிடப்பட்டிருந்த இவ்விளையாட்டு பின்னர் தொடர்ந்த மாற்றங்களுக்கு உட்பட்டு கிரிக்கெட் என அறியப்படுகிறது.
சக்செக்கில் 1611ஆம் ஆண்டில் ஒரு ஞாயிற்றுக் கிழமை இரண்டுபேர் தேவாலயத்திற்குச் செல்லாமல் கிரிக்கெட் விளையாடியதற்காக விசாரிக்கப்பட்டதற்கான குறிப்பு, முதன் முதலில் பெரியவர்கள் 1611ல்தான் கிரிக்கெட் விளையாடியதாக தகவல் தருகிறது. ஆனால் அதே ஆண்டில் தொகுக்கப்பட்ட அகராதி அதனை சிறுவர்கள் விளையாட்டு என பொருள் தருகிறது. 1660 முதலே கிரிக்கெட் சூதாடிகளின் கவனத்திற்கு உள்ளானது. ‘கவேலியேநாடாளுமன்றம் 1664 ஆம் ஆண்டுவிளையாட்டுச் சட்டம்’ (Gaming Act) என்ற சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தின்படி கிரிக்கெட் பந்தய பணம் 100 பவுண்ட்ஸைத் தாண்டக்கூடாது என சூதாட்டத்திற்கான மதிப்பு சட்டமாக்கப்பட்டது. அந்தச் சட்டம் Gaming Actதான் Gambling Act இல்லை.  17ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. சூதாட்டக்காரர்கள் தங்கள் பணம் பத்திரமாக இருப்பதற்காக தங்களுக்கென சொந்தக் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டனர். இவைகவுண்டி குழுக்கள்என்றழைக்கப்பட்டன. 18ஆம் நூற்றாண்டில் உலகின் பல நாடுகளுக்கும் கிரிக்கெட் பரவியது. இந்தியாவிலும் இதே காலக்கட்டத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தால் பரவலாக்கப்பட்டது.
1728ல் ரிச்மண்டின் கோமான் மற்றும் ஆலன் பரோட்ரிக் இருவரும் இணைந்து கிரிக்கெட்டிற்கான விதிகளைஆர்ட்டிக்கில்ஸ் ஆஃப் அக்ரிமெண்ட்என்ற நடத்தைத் திட்டத்தின் மூலம் முறைப்படுத்தினர். இந்நடத்தைத் திட்டம் சூதாடிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. முதன் முதலில் அனைவரும் அங்கீகரித்த சட்டங்கள்ஸ்டார் அண்ட் கார்டர் க்ளப்உறுப்பினர்களால் 1744ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 1774ஆம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்டன. இந்தஸ்டார் அண்ட் கார்டர் க்ளப்தான் 1787ஆம் ஆண்டுமெரில்போன் கிரிக்கெட் கிளப்பை (MCCயை) நிறுவியது. இன்றுவரை இருக்கும் இந்த MCC சர்வதேச கிரிக்கெட் சங்கத்துடன் (ICC) இணைந்து கிரிக்கெட்டின் விதிமுறைப் பாதுகாவலனாக இருந்து வருகின்றது.
நியூயார்க்கில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் கிளப்பில் 1844ல் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் நடந்த கிரிக்கெட் போட்டி முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி என்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து இல்லாத போட்டி சர்வதேச கிரிக்கெட் போட்டி இல்லை என்பது அன்றைய சூழலாக இருந்ததால் 1877ல் இங்கிலாந்தின் வழிகாட்டுதலில் அல்லது கட்டாயத்தின் பேரில் காமன் வெல்த் நாடுகள் பலவற்றிலும் விளையாடப்பட்ட பின்னர் அவை சர்வதேச அங்கீகாரம் பெற்றன.
கிரிக்கெட் பற்றித் தெரிந்துகொள்ளும்போது முக்கியமாகத் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்களில் ஒன்று இனஒதுக்கலின் ஒரு பகுதியாக 1970 முதல் 1991 வரை சிறந்த அணியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டபோதும் தென்னாப்பிரிக்க அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்கப்பட்டிருந்தது என்பது.
தடை நீங்கிய பின் தென்னாப்பிரிக்கா 1992ல் இந்தியாவுடன் நடந்த சோதனைத் தொடரில் ரன் அவுட்களை தொலைக்காட்சி சாதனம் மூலம் பார்க்க மூன்றாவது நடுவர் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு கிரிக்கெட் தொழிலுடன் இணைந்து அதற்கான தொழில் நுட்பம் வளர்ந்தது தெரிந்த விஷயம்தான். 2004ல் ICC முதல்தர சர்வதேச கிரிக்கெட் அணிகள் என 12 நாடுகளின் விளையாடும் சர்வதேச போட்டிகளைக் கொண்டுவந்தது. இன்றுவரை கிரிக்கெட்டின் சர்வதேசம் 16ஐத் தாண்டவில்லை. 1978 முதல் பெண்களுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப் பெறுகின்றன. பெண்களுக்கான கிரிக்கெட்டின் சர்வதேசம் 4.
பத்து நாடுகள் மட்டுமே உறுபினர்களாக உள்ள  சர்வதேச கிரிக்கெட் கழகத்தில் (ICC) உறுப்பினராக உள்ள, அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (Board of Control for Cricket in India – BCCI) 1928 டிசம்பரில் தொடங்கப்பட்டது. (ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாவேஇவை மட்டுமே டெஸ்ட் மேட்ச் ஆட முடியும். போனாப்போகுதுன்னு விதிவிலக்காக சில போட்டிகளில் ஆட அனுமதிகப்பட்ட நாடுகள்ஆப்கானிஸ்தான், கனடா, இர்லாண்ட், கென்யா, நெதர்லாண்ட்ஸ், ஸ்காட்லாண்ட்) இந்தச் சங்கம் இந்திய கிரிக்கெட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. BCCI அங்கீகரிக்காத எந்தப் போட்டியும் போட்டியே இல்லை. ஆனால், இது தனியார் சங்கம் என்பதால் அதன் வரவு செலவு கணக்குகளை பொதுவில் வைக்கவேண்டியதில்லை.
ஐரோப்பிய கடல் வணிகர்களால் 18ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டு, கல்கத்தாவில் 1792ல் இந்தியாவின் முதல் கிரிக்கெட் சங்கம் தொடங்கப்பட்டிருந்தாலும் 1932ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் முதல் டெஸ்ட் மேட்ச்சில் கலந்து கொள்ளும்வரை இந்தியாவில் தேசிய அணி என்ற அளவில் எந்த அணியும் கிரிக்கெட்டிற்காக இல்லை. ஆனால் 1890ல் இந்தியாவில் ரஞ்சி கோப்பை உருவாக்கப்பட்டது. 1983ல் கபில்தேவ் தலைமையில், 2011ல் டோனியின் தலைமையில் என இருமுறை, 81 ஆண்டுகால ஆட்டத்தில் உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. விளையாடத் தொடங்கி 20ஆண்டுகளுக்குப் பின்னர் 1952ல் சென்னையில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்துடன் ஆடி வென்றதே முதல் வெற்றி.
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுபவர்களுக்கு ஒரு ஆட்டத்திற்கு - முதல்தர ஆட்டக்காரர்களுக்கு ஊதியம் ரூ.1கோடி. இரண்டாம்தர ஆட்டக்காரர்களுக்கு ரூ. 50இலட்சம். மூன்றாம்தர ஆட்டக்காரர்களுக்கு ரூ.25இலட்சம். (இது பழைய ஊதியம் என சில நண்பர்கள் சொல்லுகிறார்கள்.) வெற்றிபெற வேண்டும் என்பது தேவையில்லை என்பதையும், வெற்றி பெற்றால் கிடைக்கும் வெகுமதிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விளம்பர வருமாணம் தனி. இதில் இவர்களுக்கு பாரத ரத்னா கேட்டு மக்கள் புரட்சிப் போராட்டமும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பின்னாள் பாரதரத்னா 1989முதல் இன்றுவரை ஆடிய ஆட்டங்களுக்கான ஊதியத்தை கணக்கிட்டுப் பார்த்தால் தலை சுற்றுகிறது. இந்த ரத்தினம் 99முறை சதம் அடித்துவிட்டார். இவர் எப்படியாவது 100ஆவது சதம் அடித்துவிட வேண்டும் என கோயில்களில் தேசபக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தெய்வத்தால் ஆகாது, எனினும்தன் மெய் வருத்தக் கூலி தரும். ஒவ்வொரு முறை மெய்வருந்தவும் ஒருகோடி கூலி என்றால் சும்மாவா?
ஆரம்பிச்சுட்டாங்கய்யா எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் குறை சொல்லிக்கிட்டு இருப்பாங்க. இப்பப்பாருங்க இந்த விளையாட்ட ரஷ்யா, சீனா, கியூபாவெல்லாம் விளையாடலைன்னு சொல்லப் போறாங்க.போன்ற பின்தொடரும் நிழல்களின் குரல்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டேதானிருக்கின்றன. பின் தொடரும் நிழலின் குரலிலேயும்  முரண்படாத பல இடங்கள் உண்டு. முரண்பட்ட இடத்திலேயும் ரசிக்கத்தக்க போக்கு உண்டு. கிரிக்கெட் விளையாட்டு என்ற பெயரில் அடிக்கிற கூத்துகளின்பால்தான் வருத்தமெல்லாம். கிரிக்கெட் சிறுதும் ஜனநாயகத் தன்மையற்ற ஒரு சூதாட்டம். அதனை வலிந்து திணிப்பதன்பின் உள்ள வணிகத்தன்மையும், நியாய வணிகம் தாண்டிய சூதாட்ட வெறியையும் தேசபக்தி என்ற போர்வையில் முன்னெழுப்புவதுதான் பிரச்சனைக்குரியதாக இருக்கிறது. ஹாக்கி, புட்பால், வாலிபால், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளிலும் வணிகத் தன்மை இருந்தாலும் இந்த அளவிற்கு இல்லை என்பதுடன், அவ்விளையாட்டுகள் எதன்மீதும் இந்த அளவிற்கு தேசபக்திச் சாயம் பூசப்படுவதில்லை.
இந்தத் திருவிளையாட்டு தெருவிளையாட்டுகளின் இடத்தையும் காலிசெய்து கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் கிராமத் திருவிழாக்கள் என்றால் தெருவிளையாட்டுக்கான போட்டி நடைபெறும். இன்று கிராமத் தெருவிழாக்களில்கூட இந்தத் திருவிளையாட்டுக்கான போட்டிகளே நடத்தப்பெறுகின்றன. இப்போட்டிகளில் மூன்றாம் நடுவர் தவிர்த்த அனைத்து சர்வதேச நெறிமுறைகளும் கையாளப்படுகின்றன.
மரபார்ந்த தெருவிளையாட்டுக்களில் எத்தனைபேர் விளையாட வேண்டுமோ அதற்கேற்றாற்போல் அன்றைய விளையாட்டை குழந்தைகள் தீர்மாணிப்பார்கள். ஒருசில இயலாக் குழந்தைகளோ, சிறுகுழந்தைகளோ எஞ்சுகின்றன என்றால் அவர்களையும் விளையாட்டில் இணைத்துக் கொள்வார்கள். அக்குழந்தைகளை அவர்களுக்கே தெரியாமல் ஒப்புக்குச் சப்பாணி என அவர்கள் அறிவித்துக் கொள்வார்கள். அவர்களைத் தோற்கடிக்க யாரும் முயற்சிக்கக் கூடாது. அப்படியே அந்த ஒப்புக்குச் சப்பாணிகள் தோற்கடிக்கப்பட்டாலும் அது செல்லாது. (ஒப்புக்குச் சப்பாணி = இருக்கு... ஆனா இல்லை...) இவையெல்லாம் எல்லாப் பகுதிகளிலும் யாரும் எழுதி வைத்துக் கட்டுப்படுத்தாத சட்டங்களாகவே இருக்கின்றன.
சில விளையாட்டுகளில் யாராவது ஒருவர் பட்டு வரவேண்டும். அதாவது தோற்றவர் நிலையில் இருந்து விளையாட்டைத் தொடங்க வேண்டும். பட்டு வருபவரைத் தேர்ந்தெடுப்தும்கூட விளையாட்டுதான். வட்டமாக நிற்கும் குழந்தைகளின் வட்டத்தில் தானும் நிற்கும் ஒருவர் ஒவ்வொரு குழந்தையை நோக்கியும் விரல் நீட்டி
“தப்பா ஒண்ணு...
தவளை ரெண்டு...
குச்சி மூணு...
பிஸ்கோத்து நாலு...
தேளு அஞ்சு...
தேளுக்குஞ்சு ஆறு...
வைக்கக் கடலை...
வாழைத் தோப்பு...
சுண்டக் கடலை...
சுருங்கி விழு...“ எனச் சொல்ல, ஒவ்வொருவராகச் சுருங்கி விழ கடைசியில் ஒற்றை ஆளாய் சுருங்கி விழாமல் மிஞ்சுபவர் பட்டு வருபவர். (பாடல் பகுதிவாரியாக மாறுபடும்) இங்கே மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுபவர் தன்னை நோக்கியும் விரல் நீட்டிக் கொள்ள வேண்டும். சட்டாம் பிள்ளை என்பதற்கான எந்தச் சிறப்பும் அவருக்குக் கிடையாது. இது இப்போது ஆங்கில வழிக் கல்வியின் பக்கவிளைவாக “இங்கி பிங்கி டாங்கி“ என்று மாறியிருப்பதையும்... ராகம் விரைவுபடுத்தப்பட்டிருப்பதையும் கவனிக்கலாம். சாட், பூட், ஃத்ரியும்கூட தேர்ந்தெடுப்பை விளையாட்டாய் நிகழ்த்துவதுதான்.
அணிகள் சேர்வதற்காக உத்தி பிரிப்பதும் ஒரு விளையாட்டுதான். பெரிய உத்தி (பெரிய உத்தி = அணித்தலைவர்) இருவரும் ஒரு இடத்தில் நின்று கொள்ள. ஒரே தரத்திலான இரண்டிரண்டு குழந்தைகளாகச் சேர்ந்து தனியாகச் சென்று தங்கள் இருவருக்கும் வேறு பெயர் வைத்துக் கொண்டு வருவார்கள். பெரிய உத்திகளிடம் வந்து அவர்கள் “சிங்கமா... புலியா...“ “எம்ஜிஆரா... சிவாஜியா“ “தாமரையா... செம்மலரா“ என்று தங்களுக்கு வைத்துக் கொண்ட பெயரைச் சொல்லிக் கேட்க பெரியஉத்தி ஒருவர் மாற்றி ஒருவர் தனக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து அதற்கான குழந்தைகள் வழியாக தனது உத்தியை அமைத்துக் கொள்வார்கள்.
விளையாடிக் கொண்டிருக்கும்போதே யாருக்காவது, ஒண்ணுக்கு வந்தாலோ, தண்ணீர் தவித்தாலோ, வீட்டில் போய் தலையைக் காட்டிவிட்டு வரவேண்டியதிருந்தாலோ அனைவருக்கும் தெரியும்படி சத்தமாக “தூவா...“ அல்லது “தூவாச்சி...“ என்று சொல்லிவிட்டுப் போய் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு வந்து, தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் விளையாட்டில் “தூவா முடிந்த்து“ என்று சத்தமாகச் சொல்லிவிட்டு இணைந்து கொள்ளலாம். சமூகமாக விளையாண்டாலும் தனிமனித சுதந்திரத்தில் தலையிடாதவை தெரு விளையாட்டுகள்.
தெரு விளையாட்டுகளில் பொதுவாக போட்டி இல்லை. ஆனால், வெற்றி தோல்வி உண்டு. தனிநபர் விளையாட்டுக்களில் தோற்கும் குழந்தைகளுக்கு சிறு சிறு தண்டனைகள் உண்டு. அவை நடனமாடுதல், சிறிது தூரம் நொண்டியடித்தல், தோப்புப் பாடலை அனைவரும் பாட தோப்புக்கரணம் போடுவது, கண்களை மூடிக்கொள்ளச் சொல்லி பின்னால் இருந்து தலையில் குட்டுபவரைக் கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து குட்டுதல்... போன்ற இந்தச் சிறுசிறு தண்டனைகளும்கூட விளையாட்டாகவே இருக்கும். தோற்றவர்களைப் பார்த்து “தோத்தான்... தும்பான்... சோறு சட்டி... திம்பான்...“ என தோப்புக்கரணம் இல்லாமல் தோப்புப்பாடல்/கேலிப்பாடல் பாடுவதும் உண்டு. தோற்ற குழந்தை அழுதால் அக்குழந்தையை எப்படியாவது சிரிக்க வைத்து “அழுத புள்ள சிரிச்சுச்சாம்... கழுதப்பாலக் குடிச்சுச்சாம்...“ என அழக்கூடாது என்பதற்காக, அழுகையைக் கேலி செய்வதும் உண்டு. உடன் விளையாடுபவர்களிடம் மட்டுமன்றி எதிரணியிடமும் அன்பு காட்டியவை தெருவிளையாட்டுகள்.
இப்படி அனைத்து நிலைகளிலும் முழுஜனநாயகத் தன்மைகள் கொண்ட, காலத்திற்கேற்ற, வயதிற்கேற்ற, படைப்பாற்றல் திறன் மிக்க, மகிழ்ச்சி பொங்கும், அன்பு நிறைந்த தெருவிளையாட்டுக்களின் இடம் முழுவதையும் இப்பண்புகளுக்கு எதிரான சூதாட்டம் - விளையாட்டு என்ற பெயரில் கொள்ளையடித்ததைச் சொல்வதில் என்ன தயக்கம் வேண்டியிருக்கிறது.
‘கொல கொலயா முந்திரிக்கா...‘ தெருவிளையாட்டிடைப் பாடல் இப்படித்தான் சொல்லிக் கொடுத்தது.
“கொல கொலயா முந்திரிக்கா
நரிய நரிய சுத்தி வா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்திலிருப்பான் கண்டுபிடி“ பாடலைத் தொடர்ந்து “ரகசியமாய் நம்மைச் சிக்க வைத்தவரை விரட்டி விரட்டி... அடிப்பது“ அந்த விளையாட்டின் வழியாக கற்றுக் கொண்டதுதான். விரட்டி விரட்டி அடிப்பதைக் கற்றுத்தந்த விளையாட்டு, விரட்டி அடிப்பதைக் கற்றுத்தந்ததா? சரியாக நினைவிலில்லை.
(நன்றி : உயிர் எழுத்து 2012 மார்ச்)