Friday, April 24, 2020

கட்டற்ற பாலியல் சுதந்திரமும் மீன் குழம்பு சட்டியில் சர்க்கரைப் பொங்கலும் - சத்யா


இங்கே பெண்ணியம் என்பதும் கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்பதும் ஒன்றாகவும், பிரித்தும் மாறிமாறி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இங்கே இவை இரண்டும் ஒன்றெனவும், வேறுவேறெனவும் பலகட்டமாக பகுப்பாய்வு செய்து அணுப்பிளவுக்கும் சவால்விடும் இரு பிரிவுகளாக விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இங்கே பெண்ணியம், பெண் விடுதலை போன்ற பதங்கள் சமூகத்தால் பல காலமாக தவறான புரிதலோடே அணுகப்பட்டுள்ளன. இங்கு பெரியாரின் வழிவந்தவர்களாக தங்களைத் தாங்களே அறிவித்துக்கொண்டு அதிதீவிர வறட்டு பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளிடம்  மிகப்பெரிய சிக்கல் ஒன்று உள்ளது. அவர்கள் பெரியாரின் பார்ப்பனீய எதிர்ப்பிலிருந்து கற்ற பாடத்திலிருந்து, அதாவது எப்படி பார்ப்பன எதிர்ப்பை பார்ப்பனீய எதிர்ப்பாக மாற்றிக்கொண்டார்களோ அதுபோலவே ஆணாதிக்க எதிர்ப்புக்கு ஆண்களை எதிர்ப்பது என்ற மனநிலையோடு தாங்கள் பேசும் பெண்ணியத்தினைத் தொடங்குகிறார்கள்.

இங்கு பார்ப்பனர்களும் பார்ப்பனீய எதிர்ப்பாளர்களும் எதிரெதிர் துருவமாய் நிற்பதுபோல, முதலாளிகளும் தொழிலாளர்களும் எதிரெதிர் துருவம் என்பதுபோல ஆண்களும் பெண்களும் எதிரெதிர் துருவமாக்கிவிட முடியாது, அது இயற்கையும் அல்ல என்பதை இந்த அதி தீவிர வறட்டு பெண்ணியவாதிகள் புரிந்துகொள்வதில்லை.

மேலே சொன்ன மற்ற இரண்டிலும் போலவல்லாமல் பெண்ணியத்தின் எதிராளர்கள் (ஆண்கள்) சமூகத்தில் பங்காளிகளாய் இருக்கும் நிலை இங்கே உள்ளது. எனவே இவர்களோடு தொடர்ந்த உரையாடல் நிகழ்த்திக்கொண்டேயிருக்கவேண்டிய தேவையும் உள்ளது. பாலியல் சுதந்திரம் என்பது (கட்டற்ற என்பதற்குள் இன்னும் வரவில்லை) பாலியல் புரிதல் உடைய சமூகத்தில் நிகழ வேண்டிய ஒன்று. இங்கே பாலியல் புரிதல் என்பது என்ன? இங்கே உடலுறவு என்பது இயல்பான ஒன்றாகப் பார்க்கப் படுகிறதா? இன்னும் முதலிரவு படுக்கையில் வெள்ளைத் துணி விரித்து அடுத்தநாள் காலையில் அதில் ரத்தக் கறை இல்லை என்றால் பெண்ணை அவமானப் படுத்தி வீட்டுக்கு திருப்பியனுப்பும் மக்கள் உடைய நாடு இது. சொத்து குடும்பத்துக்குள் இருப்பதற்காக 8 வயது சிறுவனுக்கு 20 வயது பெண்ணை திருமணம் செய்து அந்த சிறுவன் வயது வரும் முன் அவள் இரண்டு குழந்தைகளோடு இருக்கும் மக்களும் வாழும் நாடு இது. இவர்கள் சிறுபான்மையினர் என்று நீங்கள் கூறினால், ஆகப்பெரும் பாலியல் புரட்சி வேண்டும் நீங்கள் அவர்களைவிட சிறுபான்மையினர் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

இந்த மக்களோடுதான் நாம் விவாதம் நடத்த வேண்டியுள்ளது. இவர்களெல்லாம் பிற்போக்குவாதிகள், இவர்களிடமெல்லாம் நான் பேச தேவையில்லை. நான் நேரடியாக புரட்சிதான் பண்ணுவேன், என்பவர்கள் யாருக்காக புரட்சி பண்ணப் போகிறீர்கள்? உலகில் பாலுறவைத் தவிர வேறெந்த பிரச்னையும் இல்லாத பெண்களிடம்தான் பேசப்போகிறீர்கள்,, பாலுறவில்கூட பிரச்சினை இல்லாத பெண்களையும்கூட மண்டையை கழுவி, உனக்கு பிரச்சினை இருக்கு, என்று நம்பவைத்து பாலியல் 'சுதந்திரம்தான்', 'அந்த' பிரச்சினைகளுக்கு தீர்வு என்று நம்பவைத்து அவர்களுக்கான பிரச்சினைகளை உருவாக்கப் போகிறீர்கள் என்றால் நீங்கள் தயவுசெய்து இதனை படிக்க தேவையில்லை.

சமூக ஆய்வுகள் அனைத்தும் சொல்லும் பொதுவான கருத்து, காட்டுமிராண்டி சமுதாயத்தின் கட்டற்ற புணர்ச்சி கொண்டிருந்த அதே பெண்கள்தான் அதை தடைசெய்து சிறந்த இணை தேர்வு என்ற முடிவினை எடுத்தார்கள் (இன்னும் குடும்பம் என்ற அமைப்புக்குள் நான் வரவில்லை). ஒருபுறம் பாலியல் நோய்கள் காரணமாக இருந்தாலும், இன்னொரு முக்கிய காரணம் சிறந்த வாரிசினை உருவாக்குவதுதான். ஏனென்றால், இயற்கையின் விதிப்படி பாலுறவின் நோக்கம் இனப்பெருக்கம் மட்டும்தான். இந்தப் படிநிலையிலும்,  ஒருவனுக்கு ஒருத்தி என்பது நடை முறையில் இல்லை. குழந்தை பெறவும், கர்ப்ப காலத்தில் உணவு தேவைக்கும் ஆண் தேவைப்பட்டானேயொழிய வேறெதற்கும் இல்லை. அடுத்த இனப்பெருக்கத்துக்கு வேறு ஆணோ அல்லது அதே ஆணோ, தேர்வு பெண்ணிடம் மட்டுமே இருந்தது.

இப்போது ஒருவனுக்கு ஒருத்தி முறைக்கு வருவோம், இந்தப் பதம் உண்மையில் உயிரற்ற ஜடப்பதம், ஏனெனில் இந்த முறை ஆரம்பித்த காலம்தொட்டு அது ஒருத்திக்கு ஒருவன் என்ற முறைப்படியே இருந்து வந்துள்ளது. ஆண் பலதார மண முறையிலேயே இருந்துள்ளான். இது எவ்வாறு தோன்றியது என்பதற்கு, குடும்பத்தின் தோற்றத்தினை, கணங்களின்(clans) தோற்றத்தினை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஆதியில் குடும்பத்தின் தோற்றத்தில் பெண் பெரும்பங்கு வகித்தாலும் விரைவில் அதை ஆண் கைப்பற்றிக்கொள்கின்றான். தொடக்கத்தில் குடும்பத்தின் சொத்துக்கள் அனைத்திற்கும் பெண்ணே உரிமையாளராக இருந்துள்ளார். வாழையடி வாழையாக அவளுக்குப் பிறக்கும் பெண்களுக்கே சொத்து என்பதும் நடைமுறையில் இருந்துள்ளது. இங்கே சொத்து எனப்படுவது, உணவும், வீடும், ஆயுதங்களுமே. இந்நிலையில்தான் கர்ப்ப காலத்திலும், சொத்துக்களை நிர்வகிப்பதிலும் பெண் வீட்டில் தங்கும் நிலை ஏற்படுகிறது. ஏனெனில் சொத்துக்களை பாதுகாப்பது உணவுத்தேடலைவிட முக்கியமானதாக பெண்ணால் கருதப் படுகிறது. இப்போது சொத்து உருவாக்கத்தில் பெண்களின் செயல்பாடு குறைந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக சொத்துக்களை ஆண் கைப்பற்றிக் கொள்கிறான். என்னதான் பெண் சொத்தை நிர்வகித்தாலும் ஆணே அதன் உடைமையாளனாக மாறுகிறான்.

இப்போதுதான் சிக்கலுக்குரிய மாபெரும் மாற்றம் நிகழ்கிறது. சொத்து பெண்ணின் உடைமையாக இருந்தவரைக்கும் கவலைகள் எதுவும் இல்லை. அந்தப் பெண்ணினுடைய வாரிசுகளுக்கு இயல்பாகவே சொத்து சென்று சேர்ந்துவிடுகிறது. ஆனால் சொத்துக்களின் உடைமையாளனாக ஆண் மாறியதும் அவனது வாரிசுகளுக்கு சொத்தினை வழங்குவதில் பெரும் குழப்பம் நேர்கிறது. ஏனெனில் ஆணுக்கு அவனது வாரிசு யார் என்பதைத் தீர்மானிப்பது பெண் போன்று அவ்வளவு எளிமையாக இல்லை. எனவே ஆணுக்கு தன்னுடைய வாரிசு குறித்த தீர்மானகரமான உண்மைத்தன்மை தேவைப்படுகிறது. அப்போதுதான் ஒரு ஆணுடன் மட்டும் ஒரு குறிப்பிட்ட காலம் உறவுகொண்டு பெற்றெடுக்கும் வாரிசுகளெல்லாம் அந்த ஆணின் வாரிசுகள் என்றும், அவன் சொத்துக்கு வாரிசுகள் என்றும் ஒரு தீர்மானகரமான முடிவுக்கு வர முடிகிறது. எனவே சொத்துக்களின் வாரிசுகளைத் தேர்ந்தெடுக்கவே ஆண், பெண்ணை தன்னுடன் மட்டும் வாழும்படி நிர்பந்திக்கிறான். இதனை ஏங்கல்ஸ், 'குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம்' புத்தகத்தில் விளக்கியிருப்பார். இவ்வாறு சொத்துக்களுக்காக பெண்களை தனி ஒருவனுடன் வாழ நிர்பந்தித்த சமுதாயம், பின்பு பெண்ணையும் ஆணின் சொத்துக்களில் ஒன்றாக்கிவிட்டது.

இவை அனைத்தையும் மனதில்கொண்டு இப்போது மீண்டும் சமகாலத்துக்கு வருவோம். நம் அதிதீவிர வறட்டு பெண்ணியவாதிகள் முன்வைக்கும் கட்டற்ற பாலியல் தேவை (சுதந்திரம் என்று நான் கருதவில்லை) என்பதை கடந்த காலங்களில் பெண்களே தடை செய்திருக்கிறார்கள் என்பது புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் கட்டற்ற பாலியல் தேவை என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடுவது என்பது எந்தளவு புரிந்துகொள்ளவேண்டியதோ அதே அளவு, கட்டற்ற பாலியல் தேவை என்பது எல்லா மனிதருக்கும் பொதுவான  தீர்வல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்ததாக பாலியல் சுதந்திரம் என்பது பாலியல் தேர்வுக்கான சுதந்திரமாகவும் இருக்க வேண்டும். இங்கே பாலியல் முடிச்சு என்பது திருமணங்களால் நிகழ்த்தப்ப்படுகிறது. அதில் எந்தளவு பாலியல் தேர்வுக்கான சுதந்திரம் பெண்களுக்கு வழங்கப் படுகிறது? இங்கே பெரும்பாலான திருமணங்கள் குடும்பத்தினரால் செய்யப்படும் தெரிவுகள்தானே.
இங்கே ஆணோ பெண்ணோ இயல்பாக உறவுகொள்வதோ, காதல்வயப்படுவதோ நிகழ்கிறதா? ஒரு பெண்ணிடம் நட்பாக பழக அவளை எப்படி அணுகவேண்டும் என்று தெரியாத ஆண்கள் இந்த நாட்டில் எத்தனைகோடிபேர் உள்ளனர். அவர்களுக்கு புரிதல் ஏற்படத்தேவையில்லை என்பது எவ்வளவு பெரிய வன்முறை? இயல்பான உறவு பிரிவுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் ஆசிட் ஊற்றும் 'முன்னாள் காதலர்களை' பார்க்கிறோமே. இவர்களுக்கெல்லாம் புரிதல் ஏற்பட விவாதம் நிகழ்த்தவே தேவையில்லையா? இவர்களையெல்லாம் முட்டாள்கள்/பிற்போக்குவாதிகள் என்று தள்ளிவைப்பதன்மூலம், தாங்கள் சமுதாயத்தைவிட்டு விலகிப்போய் சிறு கூட்டமாக சுருங்கிப்போய்விடுவதை இந்த அதிதீவிர வறட்டு பெண்ணியவாதிகள் உணர்வதேயில்லையா?
குடும்பத்தின் உருவாக்கம் குறித்து மேலே கூறியவற்றிலிருந்து நாம் புரிந்துகொள்ளக்கூடியது. பெண்கள் அடிமைப்படுத்தப் பட்டதற்கு சொத்துருவாக்கமும், தனியுடைமையுமே அடிப்படைக் காரணம் என்பதேயாகும். அப்படியிருக்க மூலமான காரணத்தினை விடுத்துவிட்டு பெண்ணுக்கு விடுதலை என்பது மீன் குழம்பு செய்த சட்டியைக் கழுவாமல் சக்கரைப் பொங்கல் செய்வது போன்றதுதானே. மேலும் பெண் விடுதலை என்பது அனைத்து வகையிலுமான விடுதலையாக இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். மாறாக மற்ற காரணங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு பாலியல் விடுதலை மட்டுமே ஒற்றை இலக்காகப் பயணிப்பது என்பது ஆணுக்கு சாதகமான ஒன்றாக முடியுமேயன்றி பெண்களுக்கும், பெண் விடுதலைக்கும் கிஞ்சித்தும் பயன்தராது.
அதுபோக இந்த கட்டற்ற பாலியல் தேவையை எதோ நம் வறட்டு சித்தாந்தவாதிகள் கண்டுபிடித்துவிடவில்லை. மேட்டுக்குடி வர்க்கத்தில் இதுவெல்லாம் சகஜம். என்ன நடந்தாலும் ஸ்டேட்டஸ் காப்பாற்றுவது என்பதுதான் அங்கே பிரதானம். அந்த ஸ்டேட்டஸ் பின்னால் பங்குச்சந்தை, வணிகம் என எல்லாமே பொருளாதார காரணங்களே மிஞ்சும். தொடக்கத்திலேயே சொன்னதுபோல இங்கே தேவை பொருளாதார சுதந்திரம். இன்னும் சொல்லப்போனால் பொருளாதார தன்னிறைவு. அதன்பின்னால்தான் ஆணுடன் சண்டையிடவோ, ஏன் விவாதம் செய்யவோகூட பலத்தினை பெண்களால் பெறமுடியும். இப்போது கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்ற பெயரில் குடும்ப அமைப்பிற்குள்ளேயே இருந்துகொண்டு இந்தப் பெண்கள் சாதித்துவிடக்கூடியது என்ன? பலாபலன்களை ஆண்களுக்கு வழங்கியபடி சமூகத்துடன் நடத்தவேண்டிய விவாதத்துக்கான கதவுகளை இழுத்துமூடுவது மட்டும்தான்.
ஒட்டுமொத்த சமூகத்தின் குடும்ப அமைப்பை போலி அமைப்பு என்றும், அவ்வமைப்பில் உள்ள தங்கள் எதிர்ப்பாளர்கள் அனைவரும் பிற்போக்குவாதிகள் என்றும் கூறிக்கொள்பவர்கள், போலி அமைப்பை உடைக்க கூறும் தீர்வு கட்டற்ற பாலியல் சுதந்திரம். தங்களை  மட்டுமே  பெண்ணியவாதிகளாக அறிவித்துக்கொள்ளும் கட்டற்ற பாலியல் தேவையுடைய இந்தப் பெண்கள், குடும்ப அமைப்பை உடைத்துக்கொண்டு வெளியேறினார்களா என்றால் இல்லையே. அதற்கான பொருளாதார தன்னிறைவு பெற்றவர்களாக அல்லது அதற்கான வழிகாட்டுதல்களை பெற்றவர்களாக இல்லையே, அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு குடும்பம் என்ற அமைப்பு சமூகத்துக்காகவோ, கௌரவத்துக்காகவோ, அல்லது சொத்துக்களுக்கான (ஓர் ஆணின்)வாரிசுகளை உருவாக்கவோ தேவைப்படுகிறதே. இப்படி தன்னளவில் தோல்வியடைந்த தீர்வினை உலகப் பொதுமறையாக்க எப்படி இந்தப் வறட்டுப் பெண்ணியவாதிகள் துணிகிறார்கள்?
இப்படி சமூக பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் கொள்ளாமல் வர்க்கப்பார்வையற்ற எந்த ஒரு போராட்டமும் வெற்றியடையாதது மட்டுமல்லாமல் எதிர்த்தரப்பினை வலுவடையவே வைக்கும். ஏனென்றால் நம் கருத்துக்களால் சமுதாயத்தை வென்றடைய வேண்டியிருக்கிறது. அதை மறுத்துவிட்டு சமூகத்தை குற்றம்சொல்லி அதைவிட்டு விலகிப்ப்போவதாய் இருந்தால் நம்முடன் விவாதம் நடத்தவோ, அணிசேரவோ யாரும் வரப்போவதில்லை. மறுபடி சொல்கிறேன். நாம் சிறுபான்மையினர். மக்களை நம்பக்கம் இழுக்க ஓயாத விவாதங்கள் புரியவேண்டியுள்ளது. விவாதங்களுக்கான கதவுகளை திறப்போம். இங்கே உண்மையான தேவை வர்க்க விடுதலைதான் வர்க்க விடுதலையின் முடிவில், பெண் விடுதலையின் முடிவில் கட்டற்ற பாலியல் தேவை என்பது தனிநபர் தேர்வாக இருக்கும்.
பாலியல் தேவை மட்டுமல்ல குடும்பம் என்பதுகூட தனிநபர் தேர்வாகவே இருக்கும். எனவே இங்கு தேவை வர்க்க விடுதலை.

சுபங்களின் தொகுப்பாக காதல் சிறகை காற்றினில் விரித்து… – மதிகண்ணன்


வெகுஜன வாசிப்பில் லயித்துத் திளைத்த ஒருவரால் மட்டுமே இப்படியான ஒரு நாவலை எழுத முடியும். ஓடிப்போன தன் அக்காவை நினைத்து முப்பது ஆண்டுகளாக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தொழிலதிபரின் மகள் கதையின் நாயகி. காதல் கணவன் இறந்தபிறகு கை வேலை பலவும் செய்து ஒழுக்கசீலனாகத் தன் மகனை வளர்த்து ஆளாக்கிய ஓர் அன்பான அம்மாவின் பொறியியல் படித்த மகன் கதையின் நாயகன். நாயகியின் பச்சாதாபத்தில் தொடங்கிய நட்பு பேச்சு வார்த்தையில் காதலாகிறது. மனைவி இறந்தபின் மகளைக் கவனிக்கத் திருமணம் செய்து கொள்ளலாமல், காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்ணை வேலைக்குச் சேர்த்துக் கொண்டு அவளைத் தன் சகோதரியாய் மதிக்கும் தொழிலதிபருக்கு மகளின் காதல் விவகாரம் தெரிய வருகிறது.
மும்பையில் இருந்து ஒரு வரண் வர அவர்களை விசாரிக்கும் வேளையில் தன் காதல் விவகாரத்தை மும்பைக்காரர்களிடம் சொல்கிறாள். கதைநாயகியை அவர்கள் மும்பையில் விற்பதற்காகவே திருமணம் செய்யத் திட்டமிட்டுருக்கிறார்கள் எனத் தெரிகிறது. அவர்கள் தொழிலே அதுதானாம். அவர்களிடம் சிக்கிக் கொண்டு அவர்களின் சதிகளுக்கெல்லாம் நீண்ட நாட்களாக உடன்பட்டிருந்த ஒருவர் மனந்திருந்தி தொழிலதிபர் வீட்டில் விபரம் சொல்ல வருகிறார். வந்த அவருக்கு அங்கு வேலைக்கு இருப்பது தன் காதலி எனத் தெரிவதில் ஒரு சுபம்.
கதைநாயகியைக் காணாமல் தேடும் அவளது அப்பா, கதைநாயகன் வீட்டிற்கு வர, அவளது தாய் தன் தமக்கை என்றறிவதில் ஒரு சுபம்.
கடத்தப்பட்ட நாயகியை நாயகன் ‘வாட்டர் ஜக்’ஐ ஆயுதமாகப் பயன்படுத்தி மீட்டு வருகையில் ஒரு சுபம்.
மும்பைக் கடத்தல் பார்ட்டி கைதாவதில் ஒரு சுபம். என பின்பகுதி முழுவதும் ஏகப்பட்ட சுபம்கள்.
ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் பழைய ஜெமினிகணேசனின் படங்களில் வருவதைப்போன்ற ட்விஸ்ட்.  அத்தியாயத் தொடக்கத்தில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் வருவதுபோல் கடைசிக் காட்சியின் ரீப்ளே.
கடந்த நூற்றாண்டின் மத்தியில் வெகுஜன இதழ்களில் குடும்பக்கதை என்ற முன்னறிவிப்புடன் வந்த தொடர்கதைகளின் வடிவமும், நேர்த்தியும், கருவும் கொண்ட ‘காதல் சிறகை காற்றினில் விரித்து…” சமூக நாவல் என்று தலைப்பிற்கான அடைப்புக்குறி அடையாளத்துடன் வந்திருக்கிறது.
சிறாருக்கான நன்னெறி நாவல் என்ற அடையாளத்துடன் வந்திருந்தால் இதற்கான விமர்சனத்தை வேறு வகையில் நேர்மறையாக எழுதியிருக்க முடியுமோ என்னவோ… முடியல… ஆனா… முடிஞ்சுருச்சு… சுபம்.  0
காதல் சிறகை காற்றினில் விரித்து - நாவல்
-    காஞ்சி மீனா சுந்தர்
-    வசந்தா பிரசுரம் – சென்னை – 600033

Wednesday, April 22, 2020

கோதை ஜோதிலட்சுமி’யின் – முன்னோர் மூடர்கள் அல்லர் – தினமணி கட்டுரை மீதான பார்வை - மதிகண்ணன்


2020 மார்ச் 31ல் தினமணியின் நடுப்பக்கத்தில் ஊடகவியலாளர் கோதை ஜோதிலட்சுமி ‘முன்னோர் மூடர்கள் அல்லர்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கரோனோ வைரஸ் கிருமி பற்றி அந்தக் கட்டுரை தொடங்கியது. அதில், இறை சக்தியே அனைத்தையும் வழி நடத்துகிறது. அறிவியல் ஆராய்ச்சி போன்ற அனைத்து முயற்சிகளையும் தாண்டி இறைவன்தான் முடிவைத் தீர்மானிக்க முடியும் எனத் தீர்மானமாகத் தொடர்கிறார்.
இறுதியில்… ‘மூடக்கட்டுகள் யாவும் தகர்த்து உடல்-மன நலம் நாடுவோம். பஹுஜன ஹிதாய; பஹுஜன ஸுகாய என்பதே நம் பண்பாடு என முடிக்கிறார்.
அதி அற்புதமாய் அவர்கள் கால்நடைகளை இவர்கள் வயல்களில் மேய்த்துவிட்டு பட்டியில் அடைத்துவிட்டு “இது நம் பண்ணை” என்று அடையாளம் காட்டுகிறார்கள். இழப்புகள் இவர்களுக்கென்றும் வரத்துகள் அவர்களுக்கென்றும் அவர்கள் தீர்மானித்த விளையாட்டின் விதிமுறைகள் இவைதான் என எடுத்துக் காட்டுகின்றார்.
நான் இறைவன் இருக்கிறாரா? என்கிற பகுதிக்குக்கூட இந்த இடத்தில் வர விரும்பவில்லை. ‘இறை எல்லாவற்றையும் காக்கவல்லது என்ற நம்பிக்கை மனிதனை வழிநடத்துகிறதுஎன்கிற இடத்தில்தான் முரண்பாடுள்ளது. கிராமத்தில் ‘நோய்க்கும் பார்; பேய்க்கும் பார்என்பார்கள். இங்கே நோய்க்கான வைத்தியம் பார்க்க ஒத்துக்கொண்ட கிராமத்தின் பாமர மக்கள் அவர்களின் திருப்திக்காகப் பேய்க்கும் பார்ப்பதில் பெரிதாக ஒன்றும் பிரச்சனையில்லை என நோய்க்குப் பார்க்கச் சொன்னவர்கள் அமைதி காக்கிறார்கள். அவர்கள் அமைதி காப்பதால் பேய்களை ஒத்துக் கொண்டார்கள் என்று பொருளில்லை.
‘அறிவியல் அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும்ஆராய்ச்சிக்கு முந்தைய பூஜைகளிலும் அறிவியல் கண்டுபிடிப்பிற்கு ஆரத்தி எடுப்பது போன்ற சடங்குகளிலும் தலையிடாததற்கு உண்மையான காரணம் என்ன? நிச்சயமாக இறை நம்மைக் காக்கும் என அவர்கள் நம்புவதால் இல்லை. உடனிருக்கும் மற்றவர்களின் திருப்திக்காக ஒத்துக் கொண்டிருக்கலாம். அல்லது இந்த மூடர்களிடம் விவாதித்துச் செலவிடும் அறிவையும் நேரத்தையும் வேறு வகையில் பயன்படுத்தலாம் என அமைதி காத்திருக்கலாம். அது ஒருவகை நாகரிகம். ‘பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக நாகரிகம் வேண்டுபவர்எனும் வள்ளுவர் காட்டிய நாகரிகர்கள் அவர்கள். அந்த அமைதியை நம்பிக்கை என திசை திருப்புவது அநாகரிகம்.
‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்என்று முன்னோர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். கோதை அவர்கள் சொல்வதுபோல் முயற்சிகள் என்னதான் செய்தாலும் அதற்கும் அப்பால் இறைவனை நோக்கிப் பிரார்த்தனைகளை முன்வைப்பதுதான் வழி என்றால் முயற்சிகள் எதற்காக? இது இயங்கியலுக்கே எதிரானது. அவர் சுட்டிக்காட்டும் ‘இறுதியில் இறைவனை நோக்கிக் கை காட்டும் செய்கை ‘ஏக்கப் பெருமூச்சுஎன்று முன்னரே அடையாளம் காட்டப்பட்ட ஒன்றுதான்.
‘இறை நம்பிக்கை என்பது மனித மனத்தின் அகற்ற முடியாத ஒன்றுஎன்கிறார் கோதை அவர்கள். பட்ட பாடுகளையும், படும் பாடுகளையும் சொல்லத் தீர்க்க ஓர் இடம் வேண்டும். சொல்லிய இடத்திலிருந்து குறைகளைத் தீர்க்க ஒரு கரம் நீள வேண்டும். அப்படி இல்லாத உலகில் இறைவனின் தேவை இருக்கத்தான் செய்யும். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்என்றார் வள்ளலார். ‘எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன்என்றார் தாயுமானவர். ‘இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!என்றார் சுத்தானந்த பாரதியார். இப்படியான சிந்தனையும் அதை நோக்கிய செயல்பாடுகளும் இல்லாத மனிதர்கள் வாழும் உலகில் இறைவனின் தேவை இருக்கத்தான் செய்யும். இதைத்தான் மார்க்ஸ். ‘ஆன்மாவற்ற உலகின் ஆன்மாவாக இறைவன் இருக்கிறான்என்றார். ஆன்மா உள்ள உலகில் இறைவனின் தேவை இருக்காது. நம்முடைய செயல்பாடுகளும் சிந்தனைகளும் எழுத்துகளும் உலகை ஆன்மா உள்ள ஒன்றாக, பிற உயிர்களை நேசிக்கும் அன்புமயமானதாக மாற்றுவதற்கல்லாமல் தலைகீழானதாக இருந்தால் மூடக்கட்டுகளை உருவாக்கி உடல்-மன நலத்தைக் கெடுப்பதாகவே அமையும்.
கைகூப்பி வணங்கும் கலாச்சாரம் நமது என்பதே கற்பிதம். கைகள் இணைந்து கூம்புவதென்பது பயத்தில் விளைந்த செயல்பாடு. ஒருவர் கைகூப்பி வணங்கினால் வணக்கத்திற்குரியவர் வணங்கியவரை ஆசிர்வதிப்பார் என்பதுதான் நீங்கள் குறிப்பிடும் ‘நமதுகலாச்சாரம். சந்தித்துக் கொள்ளும் இருவரும் ஒன்றேபோல் சரிநிகர் சமானமானவர்கள் என்றால் கை குலுக்கலும், தோளோடு தோள் தொட்டுக் கொள்ளுதலுமே மனிதநேயமிக்க மரியாதைக்குரிய செயல்பாடுகள். வியாதியின் காரணமாய் விலகி நிற்பதை கலாச்சாரம் என்ற பெயரில் நியாயப்படுத்தி விலக்கி வைப்பது நவீன மனுவின் முகவர்களின் பணியன்றி வேறில்லை. அதைத்தான் அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.
நம் முன்னோர்கள் சொல்லித் தந்ததை நடைமுறைப்படுத்தச் சொல்கிறார் கோதை அவர்கள். முன்னோர்கள் ‘தையல் சொல் கேளேல்என்றும்தான் சொன்னார்கள். ‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவுஎன்றும்தான் சொன்னார்கள். நாம் எதை எடுத்துக் கொள்வது? சரியானதை யார் சொன்னாலும் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்பது அறிவின்வழி கற்ற எதார்த்தம். ‘பொம்பல சொல் அம்பலம் ஏறாதுஎன்றார்கள் முன்னோர்கள். இந்தக் கூற்று பொய் என நிரூபித்த ஒரு பெண் நம் நாடாண்டவர். மற்றொரு பெண் நம் மாநிலமாண்டவர். இந்த இருவரும் எடுத்துக்காட்டுகளாக இல்லை என்றாலும்கூட முன்னோர்களின் இந்தக் கூற்று தவறுதான். கோதை ஜோதிலட்சுமியின் கட்டுரை தினமணியின் நடுப்பக்கத்தில் வந்ததும்கூட அந்தக் கூற்றைப் பொய்ப்பித்த ஒன்றுதானே?
இத்தனையும் தாண்டி முக்கியமான கேள்வி ஒன்று தொக்கி நிற்கிறது. நமது கலாச்சாரம் என கட்டுரை பல இடங்களில் பேசுகிறது. கடைசியில் ‘பஹுஜன ஹிதாய; பஹுஜன ஸுகாயஎன்பதே நம் பண்பாடு என்கிறது. (ஒன்றைக் கவனிக்க வேண்டும். மற்ற இடங்களில் எல்லாம் நமது கலாச்சாரம். இந்த இடத்தில் மட்டும் நம் பண்பாடு.) அப்படியா? இதுதான் நம் பண்பாடா? ஆம் எனில் இந்தக் கட்டுரையில் ‘நாம்என்பது யாரைக் குறிக்கின்ற சொல்? ‘நாம்இந்தியர்கள் என்றால் பன்முக கலாச்சாரங்களின் கூட்டுத் தேசமான இந்தியாவில் ஒத்திசைவான ஒத்த கலாச்சாரம் என்று ஒன்று உண்டா? அதற்கான சாத்தியங்கள் உண்டா? சரி. ‘நாம்தமிழர்கள் என்றால் நம் பண்பாடு ஏன் சமஸ்கிருதத்தின் சொற்கூட்டால் முன்வைக்கப்படுகிறது? அது சமஸ்கிருதமா? ஹிந்தியா? தேவபாஷை?. மொத்தத்தில் தமிழ் இல்லை. ‘நாம்என்பது இந்துக்கள் என்றால் சைவமா? வைனவமா? அல்லது உள்வாங்கப்பட்ட பிற மதங்களில் ஒன்றா? அல்லது ‘நாம்என்பது பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் போன்ற அடையாளங்களில் ஒன்றிற்கானதா?
நாம் என்பதற்கான எந்த வரையறைகளுமில்லாது இந்த வகைக் கட்டுரைகள் ‘நாம்என்று அனைவரையும் ஒன்றாய்ச் சேர்த்து பொதுமைப்படுத்தி என்னபாடு படுத்தும் என்பது தெரிந்த விஷயந்தான். என்னத்தையாவது அனுப்பி ‘தமிழனா இருந்தா ஷேர் பண்ணு’ ‘இந்தியனா இருந்தா ஷேர் பண்ணுவகைப்பட்ட மொக்கை மெசேஷ்களுக்கும் இந்தவகைக் கட்டுரைகளுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. இதில் ஊடகவியலாளர் என்கிற கவசம் வேறு.
எல்லோர்க்கும் எல்லாம் என்ற மானுட விடுதலைக்கான பண்பாட்டை முன்னெடுக்க வேண்டியது இன்றைய தேவையாக இருக்கிறது என்பதை உணர்வோம். தெளிவோம். செயல்படுவோம்.
(2020 ஏப்ரல் 2ஆம் நாள் தினிமணிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் திருத்திய வடிவம். தினமணி மின்னஞ்சல் கிடைத்ததாக பதில் மின்னஞ்சல் அனுப்பியிருந்தது)
0

Friday, April 10, 2020

‘தமிழைக் காக்க தலைப்பட்ட தலைமகன்…’ - மதிகண்ணன்


‘சஞ்சாரம்: தமிழுக்குக் குழிபறிப்பு’ என்ற தலைப்பில் தனித்தமிழ் தேசிய நண்பர் ஒருவர் தான் நடத்தும் சிறுபத்திரிகையில் ஒரு பத்தி எழுதியிருந்தார். அதில் சஞ்சாரம் நாவலுக்கு நடமாட்டம் என்று பெயரிட்டிருக்க வேண்டும். தேசாந்திரி பதிப்பகத்திற்கு வழிப்போக்கன் என்று யெரிட்டிருக்க வேண்டும் என அதிஅற்புத ஆலோசனைகளை முன்வைத்திருந்தார். (தேசாந்திரிக்கு வழிப்போக்கன் என்ற மொழிபெயர்ப்பு சரியா என யாரும் என்னிடம் கேட்காதீர்கள்) எஸ்.ராமகிருஷ்ணன் பெயரை எசு.ராமகிருசுணன் என்று எழுதியிருந்தார். (இதுதான் தமிழ்ப் படுத்துறது அல்லது தமிழைப் படுத்துறது.) தமிழ்ப் பற்றிற்கு வாழ்த்துகள். எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் வளர்ச்சிக்காக எழுதுகிறார் என்று அவரிடம் யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.
இந்தப் பத்தி பற்றி நான் வேறு ஒரு திராவிடர் கழகத்தில் பொறுப்பில் இருக்கும் நண்பரிடம் கூறியபோது “உங்களுடைய சிறுகதைத் தொகுப்பிற்கு ‘ஆர்டருக்காகக் காத்திருப்பவர்கள்’ என ஆங்கிலம் கலந்து பெயர் வைத்ததையும்கூட அவர் விமர்சித்தார்” என்றார்.
“என்னவென்று விமர்சித்தார்” என்றேன் நான்.
“ஆங்கிலம் கலந்து நூலுக்குத் தலைப்பு வைக்கும் இவரை எப்படித் தமிழ் எழுத்தாளர் என்று நான் சொல்வது?” என்று கேட்டாராம்.
“நல்லது. என்னைத் தமிழ் எழுத்தாளரென்று சொல்லுங்கள் என நான் அவரிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்ளவில்லையே.. தயவு செய்து தமிழ் எழுத்தாளர் என்று அவர் என்னை அறிமுகப்படுத்திவிட வேண்டாம் என்று அன்பாகக் கேட்டுக் கொண்டதாக அவரிடம் சொல்லுங்கள்” என்றேன்.
“அந்தப் பத்திரிகையில் இந்தப் பத்தியை யார் பார்த்திருக்கப் போகிறார்கள். விடுங்கள்” என்றார் நண்பர்.
“அப்படிப் படித்தாலும் கவலைப்பட பெரிதாக ஒன்றும் இல்லை” என்றேன் நான்.
ரமேஷ் (பிரேதன்) ஒரு பேட்டியின்போது ஒன்றைச் சொன்னார். “இச்சமூகத்தில் கடைசியாக இருவர் மீந்தால், அதில் ஒருவர் பத்திரிகை நடத்துவார்” அப்படியான ஒருவராக அவர் இருக்க வாழ்த்துகிறேன் நான்.

Tuesday, April 7, 2020

தப்புகளும் தப்பித்தலும் – கவிதை - வே.சங்கரபாண்டியன் (வேசன்)

அன்புடையீர்,
நான்தான் வேசன்
தமிழ்நாட்டை எனக்கு மிகவும் பிடிக்கும்
குறிப்பாக தமிழக இளைஞர்களை!

அரசியல் என்றால் என்னவென்று கேட்டு
அரசியல் செய்யும் கெட்டிக்காரர்கள் அல்லவா? நீங்கள்!
இந்த வேசன் கூறும் விடயங்களைக் கேளுங்கள்!

நான் இல்லாத நேரம் பார்த்து
வழிகாட்ட யாருமில்லாமல்
ஏறுதழுவுதல் விடயத்தில்
வழிதவறிச் சென்று விட்டீர்கள்!

இரண்டாவதொரு முறையாக
தஞ்சைக் கருவறையில்
தமிழை ஒலிக்கவைத்து
பெருந்தவறு செய்துவிட்டீர்கள்! !
விடயங்கள் அறிந்துதான்
பதறிப்போய் எழுதினேன் இக்கடிதம்

உங்களுக்காகவே அலைபேசியில் ஐந்தாம் தலைமுறை
முன்னேறட்டும் இளையோர் தலைமுறை
உங்களிடம் கூறிவிட்டேன் பலமுறை
மறந்திடுங்கள் கீழடி வரலாற்றை
பழையன கழியட்டுமே! !

உங்களுக்காகவே ஐந்திற்கும் மேல்
புதிய மருத்துவக் கல்லூரிகள்
இன்னும்கூட கேளுங்கள்
ஏற்பாடு செய்கிறேன்!
ஆனால் அனிதாவை மட்டும் மறந்துவிடுங்கள்!

திருத்தப்பட வேண்டிய திருத்தச் சட்டங்கள் உளதென்று
திருந்தாப் பிறவிகள் சிலர் தெருவில் கூறித் திரிகின்றனர்
இளைய வர்க்கமே!
திருத்தச் சட்டம் பற்றிய
வருத்தம் நமக்கு வேண்டாம்! !

ஆசிபா கொலை நடப்பினும்
அம்பேத்கார் சிலை உடைப்பினும்
உங்களுக்குக் கவலை வேண்டாம்
அது பெரியோர் பிரச்சனை! !

தேர்வு வாகனத்தின் சாவி தந்தாலும்
வள்ளுவர் உடைக்குக் காவி தந்தாலும்
உங்களுக்குக் கவலை வேண்டாம்
அது பெரியோர் பிரச்சனை!

கூடிவாழும் பூமிபற்றி
சிந்தனை சிறிதும் வேண்டாம்!
கும்பிடும் சாமிதனை
என்றும் மறந்திடல் வேண்டாம்!

வீதியில் பெயர்மாற்றம் இந்தியில் வந்தாலும்
கவலை வேண்டாம்!
சாதியில் பெயர் மாற்றி உயர்ந்திடல் வேண்டும்
மறந்திட வேண்டாம்! !

அண்டை நாட்டு மக்களுக்கு
அரிதாய் வரும் நோய்களை
ஆராய்ந்து மருத்துவம் காண்பேன் என்றும்!
தமிழர் திறனை நிறுவுவேன் என்றும்!
அறிவின்றி யாரும் முயலாதீர்கள்! !

விவேகானந்தரின் சக்தி வேண்டுமா?
தனித்தீவு தரும் நித்தி வேண்டுமா?
இரண்டாவதைத் தேர்வு செய்யுங்கள்
இளையோர் வர்க்கமே!

மகிழ்வுதரும் பானம் என்பதால்
மறத்துவிட்டேன் சரக்கு வரியை
மகழ்ச்சிதானே வாலிபர்களே!
எல்லாம் உங்களுக்காகத்தான்! !

வாகனமுகப்பில் சேகுவேரா
பின்பக்க விளக்கில் பிடல் காஸ்ட்ரோ
சட்டைப் பையில் பிரபாகரன்
சற்றே அருகில் பாரதியார்
இன்னும் சிலரின் உருவங்களை
இருக்குமிடங்களில் எல்லாம் பதித்திடுங்கள்!
மறந்துவிடாதீர்கள் மக்களே
உருவங்களை மட்டுமே!

ஆட்காட்டி விரல் நுனியில்
மைவைக்கும் வேளையிலே
ஆளுக்கொரு ஆயிரம் தர
ஏற்பாடு செய்கிறேன்!
அதை உங்கள் அலைபேசிச் செலவுக்குப்
பயன்படுத்திக் கொள்ளுங்கள்! !

புரட்சி! புரட்சி! புரட்சியென்று
மிரட்சி பொங்கக் கத்திடுவார்!
மறந்தும்கூட காதுகளை
திறந்துவிடாதீர் அப்பக்கம்! !

இளையோர் வர்க்கமே!
உங்களுக்குள் உள்ள ஆற்றல் மிகவும் அரியது!
அணுப்பிளப்பாற்றலின் பெரியது!
ஆகவேதான் கூறுகிறேன்
பத்திரமாகப் பூட்டிவைத்துக் கொள்ளுங்கள் என்று! !

சொல்லிய விடயங்கள் யாவும்
சிந்தையில் ஏறியிருக்கும் - நம்புகிறேன்!
நெடுந்தொடர் பார்க்க நேரமாயிற்று
இன்னொருமுறை எழுத்தில் சந்திப்போம்!
கிளம்புகிறேன்! !

இப்படிக்கு
பாசாங்கில்லாத பாசத்துடன்
வேடமிடாத வேசன்
0
2020 மார்ச் 1_கல்லூரி மாணவர்களுக்கான கவியரங்கக் கவிதை

Monday, April 6, 2020

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் - கவிதை - கார்த்திகைச் செல்வம்

                        தமிழ்த்தாயே!
                        தவமிருந்தும் கிடைக்க இயலாத
தமிழ்கவி ஆசான்களை
அறிமுகப்படுத்தி இருக்கிறாயே!
அழகுபடுத்தி இருக்கிறாயே!
தவமிருந்தது பத்து மாசமா…
இல்லை –
பற்பல வருசமா…
உன்
தவ விமோசனத்தைக் கண்டு
என்
கைகளே
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தாளம் போடுகிறது.

அன்னைத் தமிழே!
ஆசான்களுக்கு
அமுதூட்டியது தாய்ப்பாலா
இல்லை
தமிழ்ப்பாலா
இடி இடியாய் முழங்க
இப்படி
இன்பத் தமிழ்க் கவிதைகளை
இசைத்து முழங்குகிறார்களே!
இதைக் கண்டால்…
என் கைகளே
தத்தரிகிட தத்திரிகிட தித்தோம்
தாளம் போடுகிறது.

அன்னைத் தமிழே!
அற்புத ஆசான்களை
அலைகடல் தமிழில்
குளிப்பாட்டி வளர்த்தாயா?
குதுகலமாய் குளித்து விளையாடுகிறார்களே
இப்படி
கவிதைகளில்!
உன்னை கண்டால் என்
கைகளே
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தாளம் தட்டுகிறது.

தாய்த்தமிழே! தாய்த்தமிழே!
உருவெடுத்து வருகின்ற
உன்னத கவிஞர்களுக்கு
ஊட்டி வளர்த்தது சோறா?
அல்லது
சோர்வு இல்லாத சொர்க்க
கவிதையா!
இப்படி எங்களை
சொக்க வைக்கிறார்களே!
உன் கைகளைக்
கண்டால்…
கன் கைகளே
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தாளம் இசைக்கிறது.

அரவணைப்பு அன்னைத் தமிழே!
கவி அறிஞர்களுக்கு
அறிவை கற்றுக் கொடுக்க
அனுப்பியது கல்விக் கூடமா?
அல்லது
கவிதைக் கலைக் கூடமா?
எழுத்துத் திறத்தாலே…
இப்படி
எழுச்சி பெறச் செய்கிறார்களே!
நீயே
உன் கைகளால்
அவர்கள் கைகளை
அணைத்துப் பிடித்து
எழுத வைத்தாயோ
முத்தமிழை!
உன்னைப் பார்த்தால்
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தாலாட்டுப் பாடுகிறது
என் கைகள்!

அட்சயப் பாத்திரமாய்
அள்ளிக் கொடுக்கும்
அருந்தமிழே!
அடக்குகிறாயே அனைவரையும்
ஆதித் தமிழுக்கு!
அனுப்புகிறாயே அனைவரையும்
அழகிய வாழ்வுக்கு!
திசை திருப்புகிறாயே
என் தனி திறமைக்கு!
வர்ணிக்க வார்த்தை இல்லை
வலிமைத் தமிழே!
ஐம்பூதங்களை அடக்கிய பூவுலகே!
என்
ஐ விரல்களும்
அடக்க துடிக்கின்றன
ஆதித்தமிழை
கவிதைகளில்!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தாளம் போடுகிறது
என் கைகள்
கவிதைகளாக!
0
2020 மார்ச் 1_ கல்லூரி மாணவர்களுக்கான கவியரங்கக் கவிதை