Tuesday, December 29, 2020

மீண்டும் கதவு - மின்னிதழாக...

               ஒவ்வொருவருக்கும் தான் செய்ய விரும்பும் ஏதோ ஒன்றைப் பற்றிய ஒரு எண்ணம் இருக்கும். கற்பனையினால் மெருகேற்றப்பட்ட இந்த எண்ணத்திற்கும், இறுதியாக அவர் சாதித்துப் பெற்ற வடிவத்திற்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருக்கும். இந்த இடைவெளியைக் குறைப்பதற்குத்தான் மீண்டும் மீண்டும் முயல வேண்டியிருக்கிறது - லூயி மால்

அன்பு நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் வணக்கம்

1998 மார்ச் தொடங்கி 2012 இறுதிவரை வெளிவந்த ‘கதவு’ இதழ் மீண்டும் மின்னிதழாக ‘மாவிபக’ தோழர்களின் முயற்சியால் 2021 ஜனவரி முதல் தொடங்கப்படவிருக்கிறது. பொங்கல் நாளில் வலையேறவிருக்கிறது.

தங்கள் படைப்புகள் மற்றும் எழுத்துகள் வழியாக நீங்களும் எங்களின் பயணத்தில் இணைய வேண்டுமாய் அழைக்கின்றோம்.

படைப்புகளை pdf ஆகவோ image ஆகவோ அனுப்ப வேண்டாம்.

என்றென்றும் அன்பு

மதிகண்ணன்

ஆசிரியர் – கதவு’க்காக

+91 9443184050

editorkathavu@gmail.com

Thursday, December 24, 2020

இனிய பண்பாளர் தொ.ப இன்னுயிர் நீத்தார்.


தமிழினத்தின் பண்பாடு தொடர்பான வரலாற்று ரீதியான தரவுகளை அறிவுத் தளத்திலும் உணர்வுத் தளத்திலும் அனைவருக்கும் கற்பித்த இனிய பண்பாளர் தொ.பா என்று அன்புடன் அழைக்கப் பெற்ற பேராசிரியர் தொ.பரமசிவம் இனி மனித உடலுடன் நம்முடன் இல்லை.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தார், நண்பர்கள், மாணவர்களுடன் கல்விப் புலத்திற்கு வெளியில் அவரிடம் கற்ற மாவிபக’வும் ஆழ்ந்த வருத்தத்தைத் பதிவு செய்கிறது.

அவரது உரைகளின் வழியாகவும் எழுத்துகள் வழியாகவும் நாம் தொடர்ந்து பண்பாட்டு அசைவுகளின் தாக்கத்தை உணர்ந்து செயல்படுத்துவதே நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும்.

Sunday, December 20, 2020

தோழர் கருப்பு கருணாவுக்கு செவ்வஞ்சலி


                 தமுஎகச துணைப்பொதுச்செயலாளர் தோழர் கருப்பு கருணா அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தினை அளிக்கிறது. தோழரின் இழப்பு முற்போக்கு இயக்கங்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் மாவிபக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

தோழர் கருப்பு கருணாவுக்கு செவ்வணக்கம்.

Thursday, December 17, 2020

உரையாடல் தொடர்கிறது....


‘கதவு’ இதழை மாவிபக தோழர்களின் முயற்சியில்...

மின்னிதழாகத் தொடங்கும் திட்டம் ஒன்று உரையாடலில் இருக்கிறது.



Wednesday, December 16, 2020

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் விருதுகள் 2020-21


அன்பு எழுத்தாளர்களே…

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் கடந்த ஆண்டு சிறுகதை தொகுப்புகளில் நான்கிற்கும் தோழர் குபா நினைவு விருதும் கவிதைத் தொகுப்புகளில் நான்கிற்கும்  தோழர் சுப்புராயுலு நினைவு விருதும் வழங்கிச் சிறப்பித்தது.

இநத ஆண்டில் கொரோனோ, நாடடங்கு போன்ற காரணங்களால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நூல்கள் வெளியாகவில்லை. நாங்கள் அறிந்த வரையிலும் வெளியான ஒரு சில நூல்களில் பலவும் கொரோனோவைப் பின்னனியாகக் கொண்டவையாக இருக்கின்றன.

ஆதலால்…

2020-21 இரண்டு ஆண்டுகளுக்கும் இணைந்ததாக விருதுகள் தொடர்பான அறிவிப்பு 2021 செப்டம்பரில் வெளியாகும். அதற்குள்ளாகவே சில தோழர்கள் நூல்களை அனுப்பிவிட்டார்கள். தவறில்லை. விருதுக்கான நூல்களை அனுப்புபவர்கள் 2020-21 விருதுகள் தேர்விற்காக என்ற குறிப்புகளுடன் 2 பிரதிகள் அனுப்புங்கள். விருதுகள் தேர்விற்காக என்ற குறிப்புகள் இன்றி வரும் நூல்கள் அன்பின் காரணமாக அனுப்பப்பட்டதாகக் கருதப்படும்.

குறிப்புகள் அனுப்பத் தவறிய நண்பர்கள் / தோழர்கள் தொலைபேசி / மின்னஞ்சல் வழியாகவாவது தகவல் தரவும்.

என்றென்றும் அன்பு

மதிகண்ணன்

94431 84050

maveepaka@gmail.com

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்

Friday, December 11, 2020

நீங்க ஒரு தடவ சொல்லுங்க போதும்...

இந்தா குமாரு யாரு இவரு…. ம்… அவரேதான்…


நாங்க உங்ககிட்ட இருந்து பெருசா எதையும் எதிர்பார்க்கல…


அன்புள்ள ரஜினிகாந்த்துல ஒரு குட்டிப் பொண்ணுகூட நடிச்சீங்க…

அதாங்க எஜமான் படத்துலகூட (முத்து படத்துலயுந்தான்) அந்தப் பொண்ணுக்கு ஜோடியா நடிச்சீங்கல்லியா…

ஆன்மீக அரசியல்ன்னு ஒரு படத்துல அந்தப் பொண்ணுக்குப் பையனா நீங்க நடிச்சுட்டீங்கன்னா…

உங்கள் பிறவிப்பயன நீங்க அடைஞ்சுட்ட திருப்தியோட நாங்களும் எங்க பிறவிப்பயன அடைஞ்சிருவோங்க…


உங்களோட 70ஆவது பிறந்தநாள் அறிவிப்பாவோ… அல்லது டிசம்பர் 31 அறிவிப்பாவோ நீங்க இதமட்டும் ஒருதடவை சொன்னாப் போதும்…


நாங்க உங்ககிட்ட இருந்து வேற ஒரு ------------ யும் எதிர்பார்க்கல…


இந்தா குமாரு யாரு இவரு…. ம்… அவரேதான்…

Monday, June 29, 2020

இரவு – கவிதை - சத்யா

மேகம் உரித்த வான யாக்கையின் உடலில்
பொத்துக்கிடந்த நட்சத்திரங்களின் குறுக்கே
மினுக்கியபடி பறக்கின்றது விமானம்
மின்மினிப்பூச்சியைத் துரத்தி
தோற்ற குழந்தை
மூச்சுவாங்கியபடி டாட்டா காண்பிக்க
சிரித்தபடி தென்றலை உமிழ்கின்றது நிலவு
ஏதோவொரு யானையின் முதுகை
உரசிய மேகம் ஒன்று
நிலவை ஒளித்துக்கொள்ள
சிணுங்கும் குட்டியை அணைக்கும் பூனையின் பாவனையில்
பூமியை இழுத்து அணைத்துக்கொள்கின்றது இருள்
எதோ ஒரு பறவை அவசரமாய்
உதிர்த்துவிட்டுப் போன
சிறகினை குரைத்தபடி பின்தொடர்கிறது நாய்
விருட்டென்று திரும்பி
பயத்தில் அகண்ட கண்களோடு
அம்மாவின் கால்களைக் கட்டிக்கொள்கிறது குழந்தை
ஈரம்பட்ட கால்களை
சிலிர்ப்போடு உதறியபடி
கால்களை உரசுகின்றது பூனை
இன்னொருமுறை சொக்கிவிழும்
நாசிகளில் நுழைந்து
நெஞ்சுக்குள் நிறைகிறது
சுகந்தம் வீசும் இரவு

Saturday, May 16, 2020

அஃறுயில் - சிறுகதை - சத்யா


கடைசி கனவு:
அவள் அழுதுகொண்டிருந்தாள். இன்று மட்டுமல்ல நேற்றும், அதற்கு முன்தினமும், எத்தனை நாட்கள் என்று கணக்கு தெரியாத கொஞ்ச நாட்களாகவே அவள் அழுதுகொண்டேயிருந்தாள். அவள் கண்ணீர் வழிந்து வழிந்து சாயம்போனதுபோல  உச்சிவாக்கில் தொடங்கி காதுகளைத் தொட்டு வழிந்தோடும் வெண்ணிற நதியாய் இரண்டோ மூன்றோ முடிகள் வெளுத்து வழிந்துகொண்டிருந்தன. எத்தனையோ பிரவாகங்கள் நடந்தும் மிச்சமிருக்கும் நதியைப்போல் அவள் கண்கள் ஓயாமல் வழிந்துகொண்டிருந்தது. அழுது முடித்து ஓய்ந்து மீண்டும் சிரிப்பதற்காக, கொஞ்சம்கூட கண்ணீர் எஞ்சிவிடக்கூடாது என்ற தோரணையில், வெறித்தனமாக மொத்தக்கண்ணீரையும் அழுதுதீர்த்துத் துடைத்தெறியும் யத்தனிப்பில் அழுதுகொண்டேயிருந்தாள். அவ்வப்போது தலையை சிலிர்த்துக்கொண்டாள், தன் இரு கைகளையும் உதறி முகத்தில் அறைந்துகொண்டு கைகளும் முகமும் சிவந்ததும் ஒன்றோடொன்று ஆரத்தழுவி ஆறுதல்சொல்வதுபோல் முகத்தில் அழுத்திக்கொண்டு உடல் குலுங்க அழுதுகொண்டிருந்தாள். அழுகையில் சிறு ஒலியும் எழுப்பாமல், எழுப்பிய ஒலியும் அந்த அறையைத் தாண்டி வேறிடம் சென்றுவிடாமல் பெருஞ்சோகமடங்கிய கண்ணீரில் நனைந்த தன் அழுகையை இழுத்துப்பிடித்து தனக்குள்ளேயே தின்று செரிப்பதுபோல், அருவமாய் எழுந்து பல உருவங்களெடுத்து அவளைச் சுற்றி வட்டமிட்டு உள்ளே அழுது,  எல்லா சோகங்களையும் தலையணைக்குள் புதைக்கும் பஞ்சாகத் திணித்து அழுதுகொண்டிருந்தாள். அவளது அழுகை எந்தப்பக்கமும் மிச்சம் வைக்கவில்லை, மூக்கின் அருகே உள்விழியில் வழிந்த அதேநேரத்தில் தூக்கமின்றி கறுத்து  பல வரிகளாய் சுருக்கம் விழுந்திருந்த வெளிவிழியிலும் கசிந்து பற்பல ஓடைகளாய்க் கிளம்பி காதுகளை நோக்கி வழிந்துகொண்டிருந்தது.
அவள் அழுவதைக்கண்டு துடிதுடித்துப்போவதுபோல் மெல்லிய ஓசையுடன் அவளது கடியாரம் ஒலித்தது. தூங்கி விழிப்பதற்காக வைத்த துயிலெழுப்பி என்பதையும் தூங்க மறந்து அழுதுகொண்டிருப்பதையும் அவள் பெருமூச்சு வடிவமற்ற வார்த்தைகளாய் உமிழ்ந்தது. அந்த சிறு அறையின் சுவற்றினில் பிறைபோல் உள்ளே செதுக்கி செய்யப்பட்டிருந்த அலமாரியிலிருந்த கடியாரத்தினை எடுத்து அதன் முனகலை நிறுத்தினாள். கதவும் ஜன்னல்களும் சாத்தியிருக்கின்றனவாயெனப் பார்த்தபடி ஆடைகளைக் களைந்தாள். அருகிலிருந்த சிறு இரும்பு அலமாரியில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக தன் நிர்வாணத்தினைப் பார்த்தாள். தளரத்துவங்கிய மார்பையும் குறுக்கே வெள்ளை ரேகைகள் ஓடிய வயிறையும் தடவியபடி மீண்டும் ஊற்றெடுத்த கண்ணீரை வழித்து உடலெங்கும் தேய்க்கும் யத்தனத்துடன் நாற்காலியில் அமர்ந்தபடி கழுத்து மீறி வழிந்த கண்ணீரை மார்புகளுக்குள் தடவி பிசையத் தொடங்கினாள். கழுத்தறுத்த கோழியின் துடிப்பினைப்போல் மெதுவாக அடங்கிய விம்மலுக்குப் பிறகு உடைகளை சுருட்டி கட்டிலுக்கடியில் விசிறிவிட்டு தலையை அள்ளி முடிந்தபடி குளியலறைக்குள் சென்றாள்.
தண்ணீரை அள்ளி முகத்தில் ஊற்றினாள். அது வழிந்து தோளில் இறங்கி மார்புகளை நனைத்து சொட்டியது. மீண்டும் ஒருமுறை அழுதுகொள்ள முயன்றாள். இம்முறை கண்ணீர் வரவில்லை. குளிக்கும்போதுதான் எத்தனை நிம்மதி என்று நினைத்துக்கொண்டாள். கண்ணீர் வரவில்லையேயன்றி கண்கள் இரண்டும் வலித்தன. திடீரென அவளுக்குப் பின்னாலிருந்து அவனது கைகள் அவள் கண்களை மென்மையாக வருடிக்கொடுத்தன. பின்னால் சாய்ந்துகொள்ள அவனது வெற்று மார்பில் இவள் முதுகு மோதியது. அவன் கைகள் கண்களிலிருந்து வழிந்து கன்னங்களிலும், உதடுகளிலும் தயங்கி மார்பினைக் கட்டிக்கொண்டன. அவள் மெதுவாகத் திரும்ப அவளது காதுகளுக்குள் அவன் மீசை உரசியது. அவளது காதுகளில் கழற்ற மறந்த தோடுகளை அவன் மெதுவாக கவ்வி இழுத்து கழற்றினான். தண்ணீரும் கைகளும் உடல்முழுதும் வழிய கண்களுக்குள் உறக்கம் நுழைந்தது.
விழித்தபோது இமைகள் திடீரென தடிமனானதுபோல் இருந்தது. இப்போதல்ல அவளுக்கு சில மாதங்களாகவே இமைகள் வலுத்ததுபோல் தோன்றியது. எது உறக்கம், எது விழிப்பு, எது கனவு, எது நிஜம் கனவுக்குள் எத்தனை கனவுகள், எத்தனை முறை உறக்கத்தின் கனவு, எந்தக்கனவிலும் உறக்கம் இவளுக்கு வரவில்லை. இடுப்புக்குள் ஊசி ஏற்றிய வலி, கனவுக்குள் விழிப்பு, விழிப்புக்குள் கனவு. ஒருமுறை யானையின் கால்களை இமைகளில் வைத்தாய் கனவு. ஒருமுறையா இருமுறையா? எத்தனை முறை கனவு வந்தது. எத்தனை முறை விழிப்பு வந்தது? எத்தனை நாட்கள் கனவு வந்தது? அது கனவா, உருவெளியா? எத்தனைமுறை தோற்றங்கள் கண்டாள்? எதுவும் நினைவில்லை. கதவைத் தட்டியதும் அவன் நுழைந்ததும்கூட நினைவில்லை. எப்போது நுழைந்தான்? குளிக்கும்போதா? குளித்த பின்பா? வந்தது கனவா? நிஜமா? எப்போது வந்தது கனவு? எப்போது வந்தது நிஜம்? இது கனவா? நிஜமா? ஒன்றுமே புரியவில்லை. உண்மையிலேயே தனக்குப் புரிகிறதா இல்லையா? புரிவதுபோல் இருப்பது கனவா? இல்லை புரியாததுபோல் இருப்பது கனவா? அவள் தலையைப் பிடித்துக்கொண்டாள்
விழிப்பு விழிப்பு எப்போதும் எதிலும் விழிப்பு. உறக்கம் உறக்கம் எப்போதும் எதிலும் உறக்கம். எப்போதிலிருந்து தூங்கவில்லை என்று மருத்துவர் கேட்டபோது என்ன சொல்வது? எப்போதிலிருந்து விழிப்பென்று சொல்வதா? கடைசியாய் எப்போது தூங்கினோம் என்று சொல்வதா? மருத்துவர் நிஜம்தானா, இல்லை கனவா? இந்தப்படுக்கை மருத்துவமனைப் படுக்கையா இல்லை வீட்டுப் படுக்கையா? உடை அணிந்திருக்கிறோமா இல்லையா? குளித்தது நினைவிருந்தது. உடை மாற்றினோமா இல்லை நிர்வாணமாக வந்திருக்கிறோமா? வேகமாக சேலையைத் தொட்டுப் பார்த்தாள். சேலை தெரிவது நிஜமா, கனவா உருவெளியா? கண்ணுக்குள் பளீரென வெளிச்சம் பரவியது மருத்துவரின் ஒளிரூட்டியா, வீட்டு ஜன்னலின் பிளவுக்குள் நுழைந்து கண்ணை பிளக்கும் சூரியனா?
அவன் எதோ அதட்டியது தெரிந்ததும் மலங்கமலங்க விழித்தபடி பார்த்தாள். விரல்களுக்கு நடுவில் எரிந்துகொண்டிருந்த தீக்குச்சியில் சிகரெட்டைப் பற்றவைத்தபடி அவளிடம் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான். குடும்பத்தினைப் பற்றி என்னமோ சொல்லிக்கொண்டிருந்தான். ஊரில் பேசிக்கொண்டதைப் பற்றி என்னமோ சொல்லிக்கொண்டிருந்தான். அவன் அவ்வப்போது 'புரிகிறதா' என்று கேட்கும்போது அவன் உதடுகள் குவிந்து பின் பிரிவதை அர்த்தமற்ற வேதனையோடு பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் வார்த்தைகளெல்லாம் வடிவமிழந்து காற்றில் கரைந்து புகையாக சுருள்சுருளாய் சென்றுகொண்டிருந்தது. அவன் அவளை பார்க்காமல் எங்கேயோ கீழேயே பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தான். இவளிடம் பேசுகிறானா இல்லை கீழே யாரிடமாவது பேசுகிறானா என குனிந்து பார்த்தாள். கீழே குட்டியாக தவளையின் உயரத்தில் ஒரு நாற்காலியில் இவள் அமர்ந்திருந்தாள். எப்படி ஒரே நேரத்தில் உயரமாகவும் குள்ளமாகவும் இவளே இருக்க முடியும் என்று இவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. கீழே இருந்தவள் அவனையே வைத்த கண் வாங்காமல் அண்ணாந்து பார்த்தபடியிருந்தாள். அவன் பேசப்பேச அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தவள் தலை அப்படியே அறுந்து பின்னால் விழுந்தது. இவள் பதறிப்போய் அவளின் தலையைப் பிடிக்க குனிந்து கையை நீட்டினாள். அவன் ஏதோ கேட்டு பதறியபடி குனிந்து கீழே பார்த்தான். அவளையும், அவளது தலையையும், அவளது முண்டத்தையும், அவள் அமர்ந்திருந்த நாற்காலியையும் எதையுமே காணவில்லை.
இன்ஸாம்னியாஎன்றார் மருத்துவர். அது எப்படி வெறும் மாத்திரைகளால் மட்டும் தீர்க்க முடியாத வியாதி என்று விளக்கிக்கொண்டிருந்தார். உடற்பயிற்சி, தியானம் என்றெல்லாம் அவர் சொல்லிக்கொண்டேயிருக்க இவள் எங்கோ கிணற்றின் உள்ளிருந்து கேட்பதுபோல், நீரின் அலைகளாய் கைநீட்டி விரல்தொட்டு மருத்துவரின் குரலை காதுக்குள் நுழைத்தபடியிருந்தாள். கவலைகளை அழுது தீர்த்து மூட்டைகட்டி தூக்கிப் போடும்போது தூக்கம் வரும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவளின் கவலைகளை விசாரித்துக்கொண்டிருந்தார், அவள் என்னென்னமோ சொல்லிக்கொண்டிருந்தாலும் அவள் மனது வேறெதையோ நினைத்து புலம்பிக்கொண்டு இருந்தது. அத்தனை புலம்பல்களுக்கு மத்தியிலும் அவளுக்கு அந்த வியாதியின் பெயர் பிடித்திருந்தது. ‘இன்ஸாம்னியா’ ‘இன்ஸாம்னியாஎன்று பல முறை சொல்லிப்பார்த்துக்கொண்டாள். மருத்துவர் அவர் முன்பிருந்த தண்ணீரை எடுத்துப் பருகினார். குடித்துவிட்டு டம்ளரை கீழே வைத்தான் அவன். மீண்டும் சாராயக் குப்பியைத் திறந்து கொஞ்சம் ஊற்றிக்கொண்டான். தண்ணீரை ஊற்றிக்கொண்டு சிகரெட்டைப் பற்றவைத்தபடி அவளை நிமிர்ந்து பார்த்தான். மீண்டும் அவன் பேசத்தொடங்கியது உருவமற்ற குரல்களாக இவள் காதில் ஒலிக்கத்தொடங்கியது. அவனது சாராய நெடியுடைய, சிகரெட் மூச்சு அவளது முகத்தில் அடித்தது. புகையைத்தள்ளுவதுபோல் கையை விசிறியடித்தாள்.
**************************************************
முதல் நிஜம்:
வலித்த கையை உதறியபடி விழித்துக்கொண்டாள். உருண்டுகிடந்த அம்மிக்கல்லைத் தள்ளிவிட்டாள். கண்கள் லேசானதுபோல் இருந்தது. எத்தனை நாட்களுக்கு முன்னால் தூங்கியது? இவளுக்கு நினைவிலில்லை. எப்படி தூங்கிப்போனோம் என்று யோசித்துப்பார்த்தாள். எவ்வளவு யோசித்தும் குழப்பமாக இருந்தது. ஆனால் இனம் புரியாதவகையில் மனது தெளிவானதுபோல் இருந்தது. எங்கே உறங்கிக்கொண்டிருக்கிறோம் என்று கைகளால் தடவிப் பார்த்தாள் கட்டிலின் கால் தட்டுப்பட்டது. கனவுகள்தான் எத்தனை நிஜமாய்த் தெரிந்தன என்று பெருமூச்சுவிட்டாள். வேலைக்குப் போகவேண்டும் என்று நினைவுக்கு வந்தது. வேண்டாம் இன்று விடுப்பு எடுத்துக்கொண்டு உறங்கலாம். எத்தனை நாட்களாகின்றன தூங்கி? இன்றொருநாள் விழிக்காமல் தூங்கிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டாள். சரி கட்டிலில் ஏறி தூங்கலாம் என்று எழுவதற்குள் கண்கள் சொருகிக்கொள்ள அவளிடமிருந்து மெல்லிய குறட்டை ஒலி எழும்பி இருட்டியிருந்த அவ்வறையை நிறைத்து தளும்பிக்கொண்டிருந்தது.
************************************************
முந்தைய கனவு:
'மற்றவற்றைப் பற்றி கவலைப்படாமல் மகிழ்ச்சியாய் இரு. மகிழ்ச்சிதான் உன்னை லேசாக்கி தூங்கவைக்கும்' மருத்துவரின் குரல் எங்கோ தூரத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது. அவளது கண்கள் அவரைத்தாண்டி பின்னால் சுவற்றில் மாட்டியிருந்த ஏதோவொரு படத்திற்குள் ஒட்டிக்கொண்டது. என்ன படம் அது? சாமியா? மலையா பூவா? எதுவென்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை அவள் நினைக்கும்போது நினைப்பதாய் மாறிக்கொண்டிருந்தது அந்த படம். வேகமாக இவள் ஓடிப்போய் அந்த படத்துக்குள் நுழைந்துகொண்டதாகத் தெரிந்தது. அது எதுவோ ஒரு நதி. அந்த நதியின் கரையில் இவள் ஓடிக்கொண்டிருந்தாள். அவன் இவள் பின்னாலேயே ஓடி வருகிறான் என்பது இவளுக்குள் மகிழ்ச்சியைக் கொடுத்தது. எங்கோ எங்கோ அவள் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டேயிருந்தாள். அவன் பின்னால் மூச்சுவாங்கியபடி ஓடிக்கொண்டிருந்தது இவளுக்குப் புரிந்தது. கொஞ்ச நேரத்தில் ஓட முடியாமல் நின்றுவிடுவேன் என்று எச்சரித்தபடி வந்துகொண்டிருந்தான். இவள் எதற்கும் நிற்பாளில்லை. ஓடிக்கொண்டேயிருந்தாள். கொஞ்ச நேரத்தில் அவன் நின்றுவிட்டான். அவள் அவனை சீண்ட கொஞ்ச தூரம் ஓடியவள் இப்போது நின்று திரும்பிப் பார்த்தாள். அவனைக் காணவில்லை. கொஞ்சம் அதிர்ந்து அவனது பெயர் சொல்லி கூப்பிட்டாள். பதிலில்லை. மீப்பெரு நொடிகளின் முடிவில் கண்கள் அழத்தயாரானபோது எங்கிருந்தோ வந்து தாவி இவளைத் தள்ளியபடி நதிக்குள் விழுந்தான்.
இருவரும் சொட்டச்சொட்ட வியர்வையில் நனைந்திருந்தனர். அவள் தன் கால்களைப்பின்னி அவன் முதுகினைச் சுற்றி இறுக்கியபடியிருந்தாள். அவனது வியர்வை மூக்கில் வழிந்து அவளது இடக்கண்ணுக்குள் விழுந்தது. கண்களைச் சிமிட்டி புன்னகைத்தபடி கைகளால் அவன் கழுத்தைக்கட்டி அவனை இழுத்து அவனது உதடுகளைக் கவ்விக்கொண்டாள். அவன் மெதுவாக சரிந்து அவளது வலது தோளைக்கவ்வினான். காலை விலக்கி அவனைச் சரித்து அவன் மேல் ஏறிக்கொண்டாள். அவனது முகத்தில் முத்தமிட்டபடி மார்பில் கையை வைத்து எழுந்து அவன்மீது அமர்ந்தாள். அவ்வறையின் மூடிய ஜன்னலிலிருந்து தப்பிக்கிளம்பிவந்த எதோ ஒரு வெளிச்சம் அவளது வியர்வை வழிந்த மார்பில் பட்டுத் தெறித்தது. அவனது கைகள் அவளது இடுப்பிலிருந்து வழுக்கிக்கொண்டு மேலேபோய் அவளது மார்புகளைக்கடந்து கழுத்தினைத் தடவும்போது புன்னகைத்தபடி தலையை மேலே உயர்த்தினாள்
தலைக்கு மேலே கைகளை உயர்த்தி சாமி கும்பிட்டாள். யாருமில்லாத அந்த சிறிய கோவில் அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. அவன் தட்டில் போட்ட ஐநூறு ரூபாயால் வாயில் ஒட்டிக்கொண்ட சிரிப்போடு பூசாரி பூசைத் தட்டில் வைத்திருந்த மஞ்சள் கட்டப்பட்ட தாலியினை அம்மனின் காலடியில் வைத்துவிட்டு அணைத்து வைத்திருந்த கற்பூரத்தினை ஏற்றி அம்மன் முகத்தின் முன்பு காட்டினான். அம்மன் சிலை சிறியதாக மெல்லிய கிரீடத்துடன் படர்ந்த புருவங்களுடன் பாந்தமான கண்களோடு சரிந்துவந்த மூக்கும் அளவெடுத்த புன்னகையுமாய் இவர்களை பார்த்து புன்னகைத்தது. இவள் கன்னங்களில் போட்டுக்கொண்டாள். கற்பூரத்தின் ஒளி அம்மன் முகத்தில் ஆடியாடி படும்போதெல்லாம் அம்மன் இவளை நோக்கி தலையை ஆட்டி ஆட்டி சிரிப்பதுபோல் இருந்தது. ஏதேதோ மந்திரங்களை சொல்லியபடி பூசைத்தட்டினை தாலியுடன் இவர்களிடம் கொண்டுவந்தான். ஐநூறு ரூபாய்க்குட்பட்ட வரையறையில் இவளை வாழ்த்தி பிய்த்துவைக்கட்டத்திருந்த ரோஜா இதழ்களை இவள்மீது போட்டான். அவள் லேசாக வெட்கப்பட்டுக்கொண்டாள். அவன் தாலியை எடுத்து இருகைகளைக் கூப்பி அம்மனை வணங்கிவிட்டு இவளது கழுத்தில் கட்டினான். அவன் கட்டிய தாலியின் குறுகுறுப்பு அவளை கொஞ்சம் சிலிர்க்கச் செய்தது. 
அவளது இதயம் படபடவென பூரித்துப் பொங்கிக்கொண்டிருந்தது. அவளது கைப்பையில் முதல் மாத சம்பளம் இருந்தது. வேகவேகமாக நடந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாள். தன் உழைப்பில், தன்னுடைய வியர்வையில் கிடைத்த முதல் சம்பளம். அவனுடன் செலவு செய்ய வேண்டும். அவனுடன் ஒரு திரைப்படம், அவனுடன் கடையில் உணவு, அவனுக்கு ஒரு சட்டை என்று அவளது குறுகிய பட்டியல் ஒவ்வொன்றும் மனதுக்குள் ஒலித்துக்கொண்டேயிருந்தது. மீண்டும் மீண்டும் அதை சொல்லிப்பார்த்துக்கொண்டாள். அவளுக்கு குதித்துக்கொண்டு ஓட வேண்டும்போல் இருந்தது. அவன் கல்லூரியிலிருந்து வந்திருப்பானா? என்று கணக்குபோட்டுக்கொண்டாள்.  இனி போதும். அவனை அவள்தான் பார்த்துக்கொள்ளப் போகிறாள். மூன்றோ நான்கோ வருடங்கள். அவன் படித்து முடிக்கட்டும். இனி அவள்தான் அவனது குடும்பம். அவன்தான் அவளின் மூத்த குழந்தை. அவன் அவளின் கழுத்தைக்கட்டிக்கொள்ளப் போகும் தருணத்தை நினைத்தபடி வேகமாக நடந்து வீட்டை அடைந்தாள்.
அவனது நண்பர்களுக்கும், அவளது நண்பர்களுக்கும் தம்பதிகளாக அறிமுகமானதில் அவளுக்குள் எங்கேயோ ஒளிந்துகொண்டிருந்த வெட்கம் எட்டிப்பார்த்து சிரித்தது. எந்நேரமும் அவளது மனதுக்குள், பின்னாலிருந்து கைகளை நுழைத்து அவனைக் கட்டிக்கொண்டேயிருந்தாள். அவ்வப்போது தோள்களையும் காதுகளையும் கடித்து அவன் அவளைத் தட்டிவிடுவதை ரசித்துக்கொண்டிருந்தாள். எத்தனை கூட்டத்தில் பேசும்போதும் அவளைப் பார்த்து சிமிட்டும் கண்களை உதடுகளால் நனைத்துக்கொண்டேயிருந்தாள். யாரிடமும் கேட்காமல் அவர்களுக்கு மத்தியில் வந்து படுத்துக்கொண்ட பூனைக்கு செல்ல மிரட்டல்களையும், விரல்களின் ஸ்பரிசத்தினையும் வழங்கியபடி விழித்திருந்தாள். அவனது  மெல்லிய குறட்டை காதுகளுக்கு இசையாய் ஒலித்துக்கொண்டிருக்க அவனது மார்பு முடிகளுக்குள் விரலை விட்டு சுருட்டியபடியிருந்தாள். இவள் சீண்டல்களில் அவன் விழிக்கும் தருணத்தில் குட்டியை சமாதானப் படுத்தும் தாய்ப்பூனையாய் இழுத்து அணைத்தபடி உறங்கவைத்தாள்.
'இந்த மாதிரி மகிழ்வான தருணங்களை நினைத்துக்கொண்டு இருந்தா தூக்கம் வரும்மா, அதுதான் இன்ஸாம்னியாவுக்கு ஒரே மருந்து' என்றார் மருத்துவர். அவள் பதிலேதும் சொல்லாமல் அவரையே விறைத்ததுபோல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவரது வெள்ளை சட்டையில் லேசான கறை தெரிந்தது. எப்படி கறை பட்டிருக்கும் என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது. எப்படி கறை பட்டது, எப்படி கறை பட்டது, எப்படி கறை பட்டது. அவன் கேட்டுக்கொண்டேயிருந்தான். அவனது வெள்ளை கல்லூரி சீருடையைக் கையில் வைத்துக்கொண்டிருந்தான். அவளுக்குத் தெரியும். வெளியே அதிசயமாய்ப் பார்த்தபடி மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். அவளது கண்மைதான் அவனது சட்டையில் கறையாக இருந்தது. முன்தினம் அவர்கள் வந்தவுடன் அவசரமாய் அவன் கழுத்தை இழுத்து உதடு கவ்வியபடி அவளது இடுப்பில் நுழைந்து சேலைகடந்து பின்னால் இறங்கிய அவன் கையைப்பிடித்தபடி அவன் நெஞ்சில் முகம் புதைத்தபடி அவசரமாய் அவனது பெல்ட்டையும் கருப்பு பேண்டின் பொத்தான்களையும் அவிழ்த்துக்கொண்டிருக்கும்போதுதான் கறை பட்டிருந்தது. பேண்டை முழுவதும் கழற்றாமல் தடுமாறி கட்டிலில் சரிந்தவன் மீது முந்தானை சரிய வெறும் ரவிக்கையோடு ஏறி அமர்ந்து அவசரமாய் அவன் சட்டைப் பொத்தான்களை கழற்றி, அவன் கைகள் உருவிப்போட்ட சேலையை தள்ளிவிட்டு அவன் வெற்று மார்பில் பற்களை பதியவிட்டுஇல்லையில்லை... மகிழ்ச்சி அவளுக்கு உறக்கத்தினைத் தரவில்லை. இன்ஸாம்னியா... இன்ஸாம்னியா... இன்ஸாம்னியா... மகிழ்ச்சியாய் சொல்லிப்பார்த்தாள்.
***************************************
இரண்டாம் நிஜம்:
கனவுகள் கொடுத்த மெல்லிய புன்னகையுடன் சலனமற்ற குளிரில் விழித்துக்கொண்டாள். இடுப்புக்குக்கீழே பிசுபிசுவென்று நனைந்திருந்தது. கால்கள் குளிரில் விறைத்துப்போயிருந்தன. நாசிக்குள் பிசுபிசுவென்ற ரத்த வாடை நுழைந்தது. இன்று என்ன தேதி என்று யோசித்தாள். தேதிகளெல்லாம் தள்ளிப்போய்க்கொண்டுதான் இருந்தன. இன்ஸாம்னியாவுக்குப் பிறகு எதுவுமே ஒழுங்காய் இல்லை என்று நினைத்துக்கொண்டாள். எத்தனை மணி இது? கண்களை சுருக்கித் தேடிப்பார்த்தாள். என்ன இருட்டு இது. கண்கள் குருடாகிவிட்டனவா? ஒன்றுமே தெரியவில்லை. வயிற்றில் வலி இல்லாததுபோல் இருந்தது. உடலே லேசாகிப்போனதுபோல் இருந்தது. இரண்டுமுறை மூச்சை ஆழமாக இழுத்து விட்டாள். எழுந்துபோய் குளித்துவிட்டு துணிகளை நனைத்துவிட்டு வரவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். சானிட்டரி நாப்கின்கள் இருக்கின்றனவா, வாங்கி வைத்தோமா என்று யோசித்தாள். எதுவும் சரியாக நினைவில்லை. எழுந்திருக்க யத்தனித்தபோது பாதங்களைத் தாண்டி ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. இவ்வளவு ரத்தமா என்று எண்ணிக்கொண்டாள். உடலின் ரத்தமெல்லாம் வெளியேறி செத்துப்போவதுபோல் கற்பனை செய்துகொண்டாள். உடல் நடுங்கத் தொடங்கியது. கால்களில் விறுவிறுவென ரத்தம் பாய்ந்து பாதங்களில் ஊசி குத்துவதுபோன்ற உணர்வினைத் தந்தது. ஒரு நிமிடம் கால்களுக்கு ஓய்வுத்தர அப்படியே படுத்தாள். இருட்டுக்குள் சுழன்று சுழன்று கண்கள் உறக்கத்துக்குள் நழுவியது.
************************************
முதல் கனவு:
மனது ஒரு புரிந்துகொள்ள முடியாத மர்ம பெட்டகம். அதை அவ்வளவு சீக்கிரம் திறந்துவிட முடியாது. அதன் உள்ளேயும் பல அறைகள் அடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு அறையிலும் ஏதேனும் மர்மம் நிறைந்திருக்கிறது. சில அறைகள் சோகங்கள் நிரம்பியவை, அந்த அறைகளுக்குள் நுழையும்போது நமக்கு நம்மையறியாமல் கண்ணீர் வரும். சில அறைகள் பயங்கரங்கள் நிரம்பியவை, அவற்றுக்குள் நுழைய நினைத்தாலே உடலெல்லாம் நடுங்கத்தொடங்கிவிடும். சில அறைகள் மகிழ்ச்சி ததும்பியவை. அந்த அறைகளுக்குள் நுழையும்போது நாம் எல்லாவற்றையும் மறந்து சிரித்துக்கொண்டிருப்போம். பெரும்பாலானவர்கள் எல்லா அறைகளுக்குள்ளும் நுழைபவர்கள். எங்கே அதிக நேரம் நுழைகிறார்கள் என்பதில்தான் அவர்களின் குணாதசியம் இருக்கிறது. எப்போதெல்லாம் கவலையாக இருக்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்கள் அந்த அறையை விட்டு வெளியேவர முயன்றுகொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் வெளியேறி விடுவார்கள். ஆனால் உன்னிடம் உள்ள சிக்கல் என்னவென்றால். என்னவென்றே தெரியாத அர்த்தமற்ற அறைக்குள் நீ நுழைந்திருக்கின்றாய். நுழைந்ததுமில்லாமல் உள்ளே அழுத்தமாய் தாளிட்டபடி சாவியை எறிந்துவிட்டாய். நீ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தப்பித்து வெளியேறி, சிரிப்புச் சத்தம் கேட்கும் அறைக்குள் நுழைந்துகொள்ளவேண்டும்.”
மருத்துவரின் குரல் மாயாஜாலத்தில் கேட்பதுபோல் பற்பல பிரதிபலிப்புகளாய் கேட்டுக்கொண்டிருந்தது. அவரது கைகளில் இருந்த பேனா மந்திரக்கோலாக மாறி நட்சத்திரங்களைப் பிறப்பித்துக்கொண்டிருந்தது. அவர் ஒவ்வொருமுறையும் கையை ஆட்டும்போது அவரது மந்திரக்கோல் நடனமாடுவதுபோல் குதித்துக்கொண்டிருந்தது. அதிலிருந்து பிறந்த நட்சத்திரங்களின் இனம்புரியாத வாசனை இதமாய் நாசி வழியாக நெஞ்சுக்குள் நிறைந்தது. திடீரென அந்த மந்திரக்கோலிலிருந்து ஒரு குழந்தை பிறந்தது. அது இவளைப்பார்த்து சிரித்தது. இவளும் பதிலுக்கு சிரித்தாள். அது தனது பிஞ்சுக்கைகளை நீட்டி இவளை அம்மாவென்று அழைத்தது. அவள் மெதுவாக அதன் கைகளைப்பற்றியபோது அது எழுந்து இவளது கழுத்தைக்கட்டிக்கொண்டு அம்மாவென்றது. தனது எச்சில் நிறைந்த உதடுகளால் இவளது காதில் உரசியது. இவள் சிலிர்த்து சிரிக்கத்தொடங்கினாள்.
மஞ்சள் நிற இதழ்களுடன் சிரித்துக்கொண்டிருந்த பூக்களுக்கு மத்தியிலிருந்து குதித்தபடி ஒரு பட்டாம்பூச்சியை விரட்டிக்கொண்டிருந்தது குழந்தை. ஒவ்வொரு துள்ளலுக்கும் பிரபஞ்சத்தின் வெடிப்பைப் போன்ற சிரிப்பை உதிர்த்துச் சென்றது. அவ்வப்போது இவளைத் திரும்பிப் பார்த்து கைகளை நீட்டி ஏதோ சொல்லி சிரித்தது. இவளும் பதிலுக்கு சிரித்தாள். குழந்தை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த வெள்ளெலிகளில் ஒன்று வேகமாக குழந்தையை நோக்கி ஓடி வந்து கம்பியில் முட்டியபடி நின்றது. அதைப் பார்த்ததும் ஆவென்று குரல் எழுப்பியபடி சிரித்துக்கொண்டே இவளின் கழுத்தினைக் கட்டிக்கொண்டது. இவள் சிரித்தபடி அதனை அணைத்துகொண்டாள். ‘அப்பாஅப்பாவென்று துள்ளியது. இவள் புன்னகைத்தபடி திரும்பிப் பார்த்தாள். இவள் எதிர்பார்த்தபடி அவன் அங்கே இருக்கவில்லை. வேறு யாரோ முகம் தெரியாத நபர் கைகளில் ஐஸ் கிரீம்களுடன் நின்றுகொண்டிருந்தார். குழந்தை இவளிடமிருந்து ஓடி அவரிடம் சென்று ஐஸ் கிரீமை வாங்கிக்கொண்டது. அவரும் இவளிடம் பலநாள் பழகியவர் போல அமர்ந்து இவள் கையில் ஒரு ஐஸ்கிரீமினைக் கொடுத்தார். குழந்தை முகத்தில் ஒழுகிய ஐஸ் கிரீமினை துடைத்துவிட்டுவிட்டு இவளது தோளில் இயல்பாக கையைப் போட்டுக்கொண்டார். இவளுக்கு தோள் கூசியது.
அவன் இவளின் முன்னால் அமர்ந்திருந்தான். என்ன கனவு அது என்று நினைத்துக்கொண்டாள். அது அவளுக்குப் புரியாத ஏதோவொரு குற்றவுணர்ச்சியைக் கொடுத்தது. அதிலிருந்து விடுபட இவள் சிரித்தாள். என்னவென்றே அர்த்தம் புரியாமல் அவன் பேசிக்கொண்டிருந்ததற்கு சிரித்துக்கொண்டேயிருந்தாள். அவன் மட்டும் நின்றிருந்த யாருமில்லாப் பெருவெளி முன்னாள் விரிந்திருக்க இவள் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தாள். இனம் புரியாத வகையில் அவன் சொல்வதெல்லாம் இவளை சிரிக்கத் தூண்டியது. அவன் கைகளை ஆட்டி கண்களை உருட்டி பேசிக்கொண்டிருக்க இவள் மார்பு குலுங்க சிரித்தபடியிருந்தாள். அவளை அறியாமல் அவளது இடக்கை புடவைக்குள் நுழைந்து, ரவிக்கையைத் தாண்டி தொங்கிக்கொண்டிருந்த தாலிக் கொடியினைப் பிடித்துக்கொண்டிருந்தது. அதன் முனையில் தொங்கிய தங்கத்தாலான தாலியின் கூர்மையான பக்கங்கள் இவளது விரல்களை உறுத்தியபடியிருந்தது. அவன் பேசப் பேச தாலியானது மெல்ல மெல்ல கரப்பான்பூச்சியாக மாறி இவளது உள்ளங்கையில் ஊர்ந்துகொண்டிருந்தது.
அவன் இவளது கையைப் பிடித்துக்கொண்டிருந்தான். அவன் ஒன்றும் சொல்லவில்லை ஆனால் இவள் மெதுவாக சிரித்துக்கொண்டிருந்தாள். உள்ளுக்குள்ளே என்னவோ இனம் புரியாத பயம் நெருடிக்கொண்டேயிருந்தது. தூரத்தில் காலடிச் சத்தம் கேட்கும்போதும், மரத்தில் இலை அசையும்போதும்,  எதோ ஒரு தொட்டிலில் குழந்தை அழும்போதும், வெகுதூரத்து அடுப்பில் குழம்பு கொதிக்கும் மணம் இவள் நாசியை நெருடும்போதும், உள்ளே தொலைக்காட்சியில் எதோ படத்தில் யாரோ யாரையோ அதட்டும்போதும், இவளுக்குள்ளே மெல்லிய மின்னல் வெட்டியது. அவள் பயப்படும்போதேல்லாம் சிரித்துக்கொண்டாள். மனதுக்குள் இடிக்கும் இடியின் ஒலியை சிரித்து வெல்பவள்போல சத்தமாக, சத்தமாக, மிகவும் சத்தமாக சிரித்துக்கொண்டேயிருந்தாள்.
அந்த இருண்ட திரையரங்கில்  அருகில் அமர்ந்திருந்த அவன் முகம் இவளுக்கு மட்டும் வெளிச்சமாய்த் தெரிந்தது. திரையில் எதோ ஒரு பரிச்சயமான நகைச்சுவை நடிகர் குட்டிக்கரணமடித்து ஆடிக்கொண்டிருந்தார். இவளது கை அவனது தொடைகளில் ஊன்றியிருக்க அவன் மார்பில் சாய்ந்தபடி சிரித்துக்கொண்டிருந்தாள். அவனது கை இவளது மார்பில் ஊர்ந்துகொண்டிருந்தது. இவள் சிலிர்த்தபடி நகைச்சுவைக்கும் இவனது ஸ்பரிசத்துக்கும் மாறிமாறி சிரித்துக்கொண்டிருந்தாள். நடுவில் ஒருமுறை அவன்மீது சாய்ந்தபடி அவன் முகத்தினை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் கை விரலை அவன் கழுத்தில் ஓடவிட்டு பிடரி முடியினைப் பிடித்து அவனது உதடுகளில் அழுத்தமாக முத்தம் பதித்தாள். அவன் இவள் இதழ்களைக் கவ்வி இழுத்து கட்டிக்கொண்டான். சட்டென்று அவனை விட்டு விலகி கைகளைத் தள்ளிவிட்டு அவனை இருட்டில் நோக்கி குறும்பாகச் சிரித்தாள். அவன் இவளை கைகளால் விரட்டி இடுப்பினைப் பற்றிக்கொள்ள வெட்கத்துடன் சிரித்தபடி அவன் மீது விழுந்தாள்.
*******************************************
உருவெளி:
'இல்லையில்லை, நீ சொல்வது தவறு. பொதுவா கனவுகள் ஆழ்ந்த உறக்கத்தில்தான் வரும். உனக்குத்தான் உறக்கமேயில்லையே, எப்படி கனவு வரும்? இதுக்குப் பேரு விஷுவல் ஹாலுசினேஷன். அதாவது உருவெளி. ம்ம்ம்... உனக்கு புரியுற மாதிரி எப்படி சொல்றது... ஆங். இருக்கு ஆனா இல்லைன்னு சினிமா வசனம் கேள்விப்பட்டிருக்கல்ல? அதேதான். நிஜத்தில் நடக்கிற மாதிரியே இருக்கும். ஆனா உன்னால தொடவோ உணரவோ முடியாது. அதுனாலதான் அதை நீ கனவுகள்னு நினைச்சுருக்க. பொதுவா மூணு நாலுநாள் தூங்கலைன்னாலே ஹாலுசினேஷன் வரும். உனக்கு வராம இருந்தாதான் ஆச்சர்யம். இந்த ஹாலுசினேஷனுக்கும் ஒரு முறைமை இருக்கு. ஒன்னு உன்னோட குற்றஉணர்ச்சிகளை தூண்டும் சம்பவங்கள். ரெண்டாவது உனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள், மூணாவது உன்னை பயமுறுத்தக்கூடிய சம்பவங்கள்  இவையெல்லாம்தான் ஹாலுசினேஷனா வரும். இதுல பயம்ங்கறது எப்படி வேணும்னா இருக்கலாம். ரொம்ப குழந்தைத்தனமான பேய் பயம் தொடங்கி, எதிர்காலம் குறித்த பயம் உறவுச்சிக்கல்கள் குறித்த பயம்னு ரொம்ப தர்க்கப் பூர்வமான பயங்கள்கூட ஹாலுசினேஷன்ல வரும். ஏற்கனவே உன் வாழ்க்கைல நடந்த சம்பவங்கள் மீண்டும் நாடகம் நடக்கற மாதிரி உங்களுக்கு ஹாலுசினேஷன்ல தெரிய வாய்ப்பிருக்கு. அப்பறம் இன்னொரு விஷயம், விஷுவல் ஹாலுசினேஷன் மாதிரி ஆடிட்டரி ஹாலுசினேஷன்னு ஒன்னு இருக்கு. உங்கள் மண்டைக்குள்ள குரல் மட்டும் கேட்கும். இதைப்பண்ணு, அதைப்பண்ணுன்னு கட்டளையிடுற மாதிரி கேட்கும். இல்லை இயல்பா  மாதிரி கேட்கும்.  உனக்கு எதுவும் குரல்கள் கேட்குதா?'
'ஆமா டாக்டர் உங்க குரல்தான் கேட்குது'
மருத்துவர் பதிலுக்கு சிரித்தது கரைந்து கொண்டே போனது. எதோ உறைந்துபோனதுபோன்றதொரு இருட்டறையில் தனது நிர்வாணக் கால்களைக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். அவளைச் சுற்றிலும் ஓலங்களும் அழுகைகளும் நிரம்பிய இவளின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. இவளுக்கு மூச்சை அடைத்துக்கொண்டிருந்தது. எதோ அடைத்த அறையின் இண்டு இடுக்குக்களில் முட்டி மோதி வெளிவரும் வெளிச்சக் கீற்றுபோல் எங்கோ அவளது சிரிப்பொலி கேட்டுக்கொண்டிருந்தது. வலப்புறம், இடப்புறம், முன்னால், பின்னால், மேலே, கீழே என  எல்லா புறங்களிலிருந்தும் அவளது சிரிப்பொலி ஒழுகியபடி இவள் காதில் ஒலித்தது. அது அவளது சிரிப்பொலியா இல்லை மருத்துவரின் சிரிப்பொலியா? இருட்டில் அவளால் அடையாளம் காண முடியவில்லை. ‘இந்த அறையின் சுவர்களை உடைத்து நீயே வெளியே வா. உனக்காக இருக்கும் மற்ற அறைகளைப் பார். இந்த சோகம் நிறைந்த அறையை உடைத்துவிட்டு மகிழ்ச்சியும் சிரிப்பும் நிறைந்த அறைகளுக்குப் போ. இந்த அறையே வேண்டாம். இதை உடைத்தெறிந்துவிடுமருத்துவரின் குரல் இவள் காதுகளில் மெதுவாய் ஒலித்தது. 'உடைத்தெறிந்துவிடு’, 'உடைத்தெறிந்துவிடுஎனும் மருத்துவரின் குரல் இவள் மண்டைக்குள்  கொஞ்சம் கொஞ்சமாக உரத்துக்கொண்டேயிருந்தது. அவசர அவசரமாய்த் தேடினாள். இருட்டில் ஒன்றும் தெரியாமல்போக மண்டியிட்டு கைகளால் துழாவினாள். எதுவுமே கிடைக்காமல்போக தன் நெஞ்சுக்குள் கையை விட்டு துழாவினாள். இதயத்தையே பிய்த்து எடுக்கும் பிரயத்தனத்துடன் இழுத்ததில் கருப்பாய் என்னமோ வெளியே வந்து விழுந்தது. தொட்டு தடவிப் பார்த்தாள். அம்மிக்கல். அதை எடுத்து மார்போடு கொஞ்சியபடி அணைத்துக்கொண்டாள். அம்மிக்கல்லைத் தலைக்குமேல் தூக்கிப் பிடித்து ஓங்கி தன் கால்களுக்கு கீழேயிருந்த சுவற்றினை இடிக்கத் தொடங்கினாள். ஒருமுறை, இருமுறை என்று எண்ணிக்கை மறந்துபோகுமளவு இடித்தபின் மெல்லிய கீற்றாக வெளிச்சமும் இவளது சிரிப்புச் சத்தங்களும் அவ்வறைக்குள் முட்டி மோதி உள்ளே நுழைந்தன. வியர்வை வழிய ஆங்காரமாய் சிரித்தபடி அம்மிக்கல்லை தலைக்குமேல் ஓங்கி தன் பலங்கொண்டமட்டும் மீண்டும் இடிக்கத் தொடங்கினாள். சீறிப்பாய்ந்த வெளிச்சம் இவள் கன்னங்களிலும், தோளிலும் மார்பிலும் பட்டுத் தெறித்து வழிந்தது.
*****************************************
கடைசி நிஜம்:
ச்சொத்தென்ற சத்தம் கேட்டு விழித்தாள். இவள் கண்ணுக்கும் காதுக்கும் நடுவில் எதோ சொட்டிக்கொண்டிருந்தது. அவளது கன்னங்களில் பிசுபிசுவென்று வழிந்து லேசான உப்புச் சுவையை உதடுகளுக்குக் காட்டிக்கொண்டிருந்தது. கண்களை மெல்ல திறந்தபோது சிவப்பு நிற திரவத்தில் முகம் புதைத்து படுத்துக் கிடந்தாள். கைகள், மார்பு, புடவை எல்லாம் நனைந்து கிடந்தன. பெருமூச்சுவிட்டுக்கொண்டாள். கைகளை முறுக்கி உடலைத் திருகி சோம்பல் முறித்துக்கொண்டாள். கட்டிலின் நெளிந்த விளிம்பிலிருந்து அந்த திரவம் சொட்டிக்கொண்டேயிருந்தது. உடலெல்லாம் பூசிக்கொள்வதுபோல் புரண்டு படுத்தாள். ஜன்னலின் இடுக்கில் நுழைந்து அறையை நிறைத்துக்கொண்டிருந்த வெளிச்சம் இவளுக்கு நன்றாக விடிந்துவிட்டதை உணர்த்தியது. மகிழ்ச்சியான உறக்கம் இவளை முதுகுவழி இறுக்கமாய்க் கட்டிக்கொள்ள புன்னகைத்தபடி உறங்கிப்போனாள்.