Monday, November 6, 2017

அ-நிக்ரகம் - சிறுகதை - மதிகண்ணன்

விடியறதுக்கு முன்னால யாபாரத்துக்குக் கௌம்புனது ரொம்பத் தப்பாப் போச்சு. அதுவும் இந்த மார்கழி மாசத்துல, வாசத்தெளிக்கக்கூட ஒரு சோம்பேறியும் எந்திரிக்கல. இதுல நம்ம பொம்மைய வித்து...” கூடையில் சுமந்து பொம்மை விற்கும் தெரு வியாபாரி பொன்னுச்சாமி சலித்துக் கொண்டார். ஓய்வெடுக்கும் நினைவோடு தெருக்கோடியில் இருந்த அடிகுழாய்த் திட்டில் படுத்துக் கொண்டார். தலைமாட்டில் பொம்மைக்கூடை. பழைய செய்யுள் ஒன்று காட்சி ரூபங்கொண்டது...
கையது கொண்டு மெய்யது பொத்தி...’
உழைப்பின் பரிசு நல்ல உறக்கமுந்தானே? நல்ல உறக்கம் என்றால் கனவு வரவேண்டாமா? பொன்னுச்சாமிக்கு பல்வேறு நினைவுகளைத் தொடர்ந்து கனவு வந்தது.
மனிதன் உருவாக்கியதால்தான் மனிதன் வணங்கும் கடவுள்கள் எல்லாம் மனித உருவில் இருக்கின்றன. எருமைகள் வணங்குவதற்கென ஒரு கடவுளை அவை உருவாக்கத் தலைப்பட்டால் அந்தக் கடவுள் எருமை உருவத்தில் இருப்பதுடன் மனித வாகனம் கொண்டும் இருக்கலாம்உண்மைதானே! வேட்டையாடிய மனிதன் உருவாக்கிய கடவுள் புலித்தோல் உடையணிந்து, பாம்பைக் கழுத்தில் சுற்றிக்கொண்டு சடாமுடியுடன் இருந்தார். மேய்ச்சலைத் தொழிலாகக் கொண்ட மனிதன் உருவாக்கிய கடவுள் மாடு மேய்த்தார். மேய்ப்புக் குச்சியை (புல்லாங்குழல்?) கடித்துக் கொண்டே (வாசித்துக் கொண்டே?) இருந்தார். அந்தக் குச்சிக்கு மாடுகள் கட்டுப்படும். ஆடு மேய்க்கும் காலத்தில் கையில் நீளமான மேய்ப்புக் கம்புடன் ஆடு சுமந்த கடவுள்.
பொன்னுச்சாமி கனவில் கடவுள் வந்தார். அவரும் மரபு மாறாமல் பொம்மைகள் செய்து கூடையில் சுமந்து விற்கும் தொழில் செய்பவராக வந்தார். அந்தக் கனவில்...
ஒரு பெரிய அறையில் கடவுள் குளிரில் நடுங்கிய உடலை கைகளைத் தேய்த்து, கன்னத்தில் ஒற்றிச் சூடேற்றியபடி பொம்மை செய்துகொண்டு இருந்தார். “ராத்திரி மணி பத்துக்கு மேல ஆயிருச்சு. தூக்கம் வேற சொக்குது. நாளைக்கி யாபாரத்துக்கு இன்னங் கொஞ்சம் பொம்மைகளுக்கு வண்ணந்தீட்ட வேண்டியிருக்கு. வெளியில போயி ஒரு சாயாக் குடிச்சிட்டு வந்து வேலையை முடிக்கலான்னா, எந்த நேரத்துல எந்தச் செலையை யாரு ஒடைப்பாங்க? யாரு தலையை யாரு வெட்டுவாங்ஞ்க? யாரு யார வெரட்டி வெரட்டி அடிப்பாங்க? ஒன்னுந் தெரியல. சாமத்துல... சாமத்துல என்ன சாமத்துல சமயத்துல பகல்லயே வெளிய போறதுக்குப் பயமா இருக்கு. சாயாவும் வேணாம். ஒண்ணும் வேணாம். கொஞ்ச நேரம் தலையச் சாச்சுப்புட்டு பெறகு எந்திரிச்சு வேலையப் பார்க்கலாம். ஒரு சாயாவுக்காக சாகவெல்லாம் முடியாது
கடவுள் இப்படித்தான் தனக்குத்தானே பேசி ஒரு முடிவுக்கு வந்து தலை சாய்த்தார்.
பொன்னுச்சாமி பொம்மை செய்தான். படுத்தான். தூங்கினான். கனவு கண்டான். அவன் கனவில் கடவுள் வந்தார். அவரும் பொம்மை செய்தார். அவரும் படுத்தார். அவரும் தூங்கினார். அவருக்கும் கனவு வர வேண்டாமா? வந்ததே... அந்தக் கனவுல...
பொம்மை செய்து கொண்டிருந்த கடவுள் கொஞ்ச நேரம் வேலையை நிறுத்திவிட்டு, தன் படைப்புகளை தானே மெச்சி ரசித்தார். “எத்தனை விதமான படைப்புகள் என்னுடையவை. ஒவ்வொரு பொம்மையும் ஒவ்வொரு விதமாய். ஒல்லியாய், குண்டாய், கருப்பாய், வெளுப்பாய், ஆணாய், பெண்ணாய், அழகாய், அதிஅழகாய்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் பேரழகாய். அற்புதமான படைப்புகள் என்னுடையவைரசித்த கடவுளுக்கும் உறக்கம் வந்தது. ஆனாலும், சிந்தனை ஓடியது. “இந்தப் பொம்மைகளுக்கெல்லாம் உயிர் கொடுத்தால்...” சிந்தனை செயல் வடிவம் பெற்றது. பொம்மைகள் அசைந்தன. உயிர் பெற்றன. பாடின. கடவுளுக்கு உறக்கம் மீண்டும் தலையைக் குலுக்க வைத்தது. காலார நடந்து வரலாம் என முடிவு செய்து பொம்மைகள் விளையாட ஒரு பந்தைக் கொடுத்துவிட்டு அறையைப் பூட்டிவிட்டு வெளியில் வந்தார்.
அறையின் உள்ளே... உயிர் பெற்ற பொம்மைகள் ஒரே குரலில் பாடின. ஒன்றே போல் ஆடின. பந்து விளையாடின. அப்போது, அவற்றின் இடையே ஒரு விசித்திர உருவம் தோன்றியது. புரியாத மொழியில் பார்த்துவிட்டு, நாம் தலைக்கு ஒரு கதை சொல்லும் சீனப்படங்களில் கூட்டமாகத் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்களேட்ராகன் பொம்மைஅதைப் போலவே மிகவும் பெரியதாய், நீளமாய் இருந்தது அது. அந்த உருவம் மிகவும் அழகானது. பல வண்ணம் கொண்டது. கம்பீரமானது. ரசிக்கத் தகுந்தது. எல்லாம் மனிதன் கூட்டமாக இருக்கும் போது மட்டும். ஓர் ஆறறிவு உயிர் அதனைத் தனிமையில் சந்தித்தால்... அது கோரமானது. ஒழுங்கற்ற வண்ணங்களின் கலவை. மிகக் கொடூரமானது. அச்சமூட்டக் கூடியது. அப்படிப்பட்ட உருவத்திற்கும் உயிர் இருந்தது. ‘அவ்வுயிர்விளையாடும் பொம்மைக் கூட்டத்தை ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்தது. பொம்மைகள் விளையாடிய விளையாட்டில் பந்து விலகி ஓடியபோதெல்லாம் எடுத்து வந்து கொடுத்து உதவியது. புன்சிரிப்புடன் சேவை செய்து உள்ளார்ந்த நட்பையும், அதற்கான மரியாதையையும் வளர்த்துக் கொண்டது.
விளையாடிய பொம்மைகள் சோர்வுற்றபோது - சோர்வே வராத, ஆர்வமூட்டும் விளையாட்டை தான் கற்றுத்தருவதாய்க் கூறி, கூட்டத்தின் உள்ளே நுழைந்ததுஅவ்வுயிர்’. விளையாடக் கற்பித்தது. புதிய விதிகள் சொன்னது. மதிப்பீடுகளை உருவாக்கியது. நிறம், பால், உடை, நடை, ஓசை என பேதம் இருப்பதாய்ச் சொல்லி பொம்மைகளை இரண்டு அணிகளாகப் பிரித்ததுஅவ்வுயிர்’.
இந்த மதிப்பீடுகளுடன் விளையாட்டு தொடர்ந்தது. விளையாட்டிற்கு போட்டி எனப் பெயரிடப்பட்டது. சில விதிகள் மீறப்பட்டன. விதிகள் என்றாலே சில நேரங்களில் மீறப்படுவதற்குத்தான் என்ற மதிப்பீட்டையும் மிகக் கமுக்கமாகக் கற்பித்திருந்ததுஅவ்வுயிர்’.  விதிகள் மீறப்பட்டதால் பிரச்சனை உருவானது. பந்து கல்லாக மாறி எதிரணியின் மேல் வீசப்பட்டது. ஒரு அணியில் எறிந்தவன், எறியாதவன் - மறு அணியில் எறிபட்டவன், எறிபடாதவன் என்ற பேதம் இருப்பதைஅவ்வுயிர்சுட்டிக்காட்டியது. (பல இடங்களில்  ‘ன்விகுதி முப்பாலுக்கும் பொதுவாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளது) மேலும், புதிய மதிப்பீடுகள் உருவாக்கப்பட்டன. புதிய மதிப்பீடுகள் புதிய அணிகளை உருவாக்கின. இப்போது களத்தில் நான்கு அணிகள். கல் எறிதல் நிறுத்தப்பட்டு கம்புகள் கைகளில் கொடுக்கப்பட்டன. போட்டி தொடர்ந்தது.
இப்போது அடிபட்டவன், அடித்தவன், அடிபடக் காரணமானவன், அடிக்கத் தூண்டியவன், அடிக்க உதவியவன், அடிபட்டுக் கத்தியவன், கத்தாதவன், திருப்பி அடித்தவன், அடிக்காதவன்... இப்படி அணிகள் பலவாக மாறும்படி புதிய புதிய மதிப்பீடுகள் அவ்வப்போது கற்பிக்கப்பட்டன. இதனிடையே பயந்த அணி, சோம்பேறி அணி, எதற்குமே கவலைப்படாத அணி, கவலை மட்டுமே படும் அணி என சில புதிய அணிகள் இருப்பது அடையாளம் காணப்பட்டது. பார்வையாளர் திடல் உருவாக்கப்பட்டது. இந்த அணிகள் அத்திடலில் அமர்த்தப்பட்டு பார்வையாளர்களாக்கப்பட்டன. அதிலும் கூட எதையும் பாராத அணி, பார்த்தும் புரியாத அணி, புரிந்தும் உணர்வை வெளிக்காட்டா அணி, உணர்வை வெளிக்காட்டும் அணி, எதுவும் புரியாவிட்டாலும் உணர்வை அவ்வப்போது வெளிக்காட்டும் அணி... எனச் சிலப் புதிய அணிகள் இருப்பதும் அடையாளம் காட்டப்பட்டது.
இப்படி ஒவ்வொரு பொம்மையும் ஒவ்வொரு தனி அணியாய் உருவாகிக் கொண்டிருந்த நேரத்தில் விளையாட்டுப் பொருட்களும் மாறிக் கொண்டே வந்தன. கம்பு, வேல், கத்தி, வாள், சாட்டை... துப்பாக்கி, பீரங்கி... வேதிப் பொருட்கள், கிருமிகள்... அணுகுண்டு என. இறுதியாய் பயன்டுத்திய விளையாட்டுப் பொருள் விளையாட்டிற்கு உகந்ததா என ஒவ்வொரு பொம்மையும் சோதனை நடத்தத் துடித்தன. சில சோதனைகள் நடத்தின. பிற பொம்மைகள் அச்சோதனையை எதிர்த்தன. இந்த விளையாட்டுப் பொருளே கூடாது என்றன. ஆனால், அப்படிக் கூறிய பொம்மைகளில் சில இவ்விளையாட்டுப் பொருட்களை பகிரங்கமாக வைத்திருந்தன. முன்னரே இவ்விளையாட்டுப் பொருளை வைத்து விளையாடிய பொம்மைகளும் இப்பொருளை வைத்து மற்றவர்கள் விளையாடக் கூடாது என்றன. தங்களுக்கென வரைந்துகொண்ட கட்டத்தின் ஓரம் அழிந்ததிலும், அழிக்கப்பட்டதிலும், திருத்தி வரையப்பட்டதிலும் சில, பல பிரச்சனைகள் உண்டாயின.
எல்லாம்ஒழுங்காகநடக்கும்படிஅவ்வுயிர்பார்த்துக் கொண்டது. இப்படியான பிரச்சனைகள் நடந்து கொண்டிருந்தபோது ஒருவல்பொம்மைவிளையாட்டாய் தன் விளையாட்டுப் பொருளைத் தூக்கிப் போட்டுப் பிடித்தது. பின்னர் தூக்கி எறிந்தது. பொருள் விழுந்த இடத்தைச் சுற்றிலும்கூட சில பொம்மைகளைக் காணவில்லை. பதட்டமான மற்ற பொம்மைகளும் தங்கள் விளையாட்டுப் பொருளை ஒரே நேரத்தில் கண்டபடி தூக்கி எறிய எல்லாப் பொம்மைகளும் காணாமற் போயின. பேரோசை கேட்டது. அறை வெடித்துச் சிதறியது. எங்கும் இருள். தெறிக்கும் துகள்களில் பிரகாசம்.
உலாப்போன கடவுள் திரும்பி வந்தார். பார்த்தார். பரிதவித்தார். துடித்தார். புரண்டார். அழுதார். ஓலமிட்டார். “யார்... யார்... யார் இதற்கெல்லாம் காரணம்?” என.
சிரிப்பொலிஅவ்வுயிரின்சிரிப்பொலி. எங்கும்... எங்கும் சிரிப்பொலி. சிரிப்பினூடே  “இதெற்கெல்லாம் காரணம்... நான்... நான்தான்...”
நான் என்றால் யார்...?”
நான்... நான்நான்தான்... நான்... தான்...?”
யா...ர்...?”
நான்... ‘தான்’...”
தான் என்றால்?”
தான் எனும் அகம்
ஏன் என் படைப்புகளை அழித்தாய்?”
நான் எப்போதும் எதையும் அழிப்பதில்லை. அவற்றின் மனதிற்குள் புகுந்து உட்கார்ந்து கொள்வேன்அவ்வளவே
மனதுக்குள் உட்கார்ந்து என்ன செய்தாய்?”
எப்போதும் போலத்தான். ‘தான்தான் பெரியவன் என்ற உணர்வை ஒவ்வொரு மனத்திலும் உருவாக்குவது மட்டுமே என் வேலை. அதைத்தவிர நான் வேறு ஒன்றும் செய்வதில்லை. தான்தான் பெரியவன் என்ற அந்த உணர்வு மற்றவற்றை மதிப்பற்றதாக நினைக்க வைக்கும். அது போதும் எனக்கு. அழிவு தானே நடக்கும்
என் படைப்புகளின் மனதில் புகுமளவிற்கு உனக்குத் துணிச்சலா?”
ஆம்
என்னிடமே ஆமென்கிறாயா? என்ன துணிச்சல் உனக்கு. நான் யாரென்று தெரியுமா?”
யார்?”
நான் எல்லாவற்றையும் படைப்பவன். எல்லாம் அறிந்தவன்
அப்படியென்றால்...?”
நான்தான் அனைத்திலும் பெரியவன்
சிரிப்பொலி காதைப் பிளந்தது. அந்தச் சிரிப்பினூடேஎப்படி... எப்படி... பெரியவன்... பெரியவன்... அனைத்திலும் பெரியவன்... இந்த நினைவு உன் மனதில் உருவாகிவிட்டதென்றால்... என்ன பொருள்... நான்தான் பெரியவன் என்கிறாயென்றால்... உன் மனதில் நான் உட்கார்ந்து விட்டேன்இப்போது சொல்... நீ... நீ பெரியவனா?... அப்படியென்றால் உன்னையும் மீறி உனக்குள்ளேயும் புகுந்த நான்...? நான் சிறியவனா?”
இல்லை... இல்லை... நான்தான் பெரியவன்... நான்தான் பெரியவன்...”
கடவுளின் புலம்பலினூடாக சிரிப்பொலி கொஞ்சங் கொஞ்சமாக அதிகமாகி பெரும் ஓலமாக மாறுகிறது.
கனவு கண்டு கொண்டிருந்த கடவுள் பதறி எழுந்தார். அவர் உதடுகள்நான்தான் பெரியவன்... நான்தான் பெரியவன்...” என முணுமுணுக்கின்றன. பொம்மைகளைப் பார்த்தார். அவை அப்படியே இருந்தன. ஏதோ மணம் வீசியது. மூக்கினைக் கூர்மையாக்கியபோது உடல் வெப்பமாக உணர்ந்தது. உடல் வேர்த்தது. பதறி எழுந்தார் பொன்னுச்சாமிவிடிந்து வெயில் ஏறியிருந்தது. தலைமாட்டிலும் பொம்மைக் கூடையின்மீதும் வெயிலடித்தது. தெருக்கோடிக் குப்பைமேட்டிற்கு யாரோ தீ வைத்திருந்தார்கள்.

(1998 ஆம் ஆண்டு ‘கதவு’ இதழில் வெளியானது - மறுபதிப்பாக இங்கு)