Monday, June 29, 2020

இரவு – கவிதை - சத்யா

மேகம் உரித்த வான யாக்கையின் உடலில்
பொத்துக்கிடந்த நட்சத்திரங்களின் குறுக்கே
மினுக்கியபடி பறக்கின்றது விமானம்
மின்மினிப்பூச்சியைத் துரத்தி
தோற்ற குழந்தை
மூச்சுவாங்கியபடி டாட்டா காண்பிக்க
சிரித்தபடி தென்றலை உமிழ்கின்றது நிலவு
ஏதோவொரு யானையின் முதுகை
உரசிய மேகம் ஒன்று
நிலவை ஒளித்துக்கொள்ள
சிணுங்கும் குட்டியை அணைக்கும் பூனையின் பாவனையில்
பூமியை இழுத்து அணைத்துக்கொள்கின்றது இருள்
எதோ ஒரு பறவை அவசரமாய்
உதிர்த்துவிட்டுப் போன
சிறகினை குரைத்தபடி பின்தொடர்கிறது நாய்
விருட்டென்று திரும்பி
பயத்தில் அகண்ட கண்களோடு
அம்மாவின் கால்களைக் கட்டிக்கொள்கிறது குழந்தை
ஈரம்பட்ட கால்களை
சிலிர்ப்போடு உதறியபடி
கால்களை உரசுகின்றது பூனை
இன்னொருமுறை சொக்கிவிழும்
நாசிகளில் நுழைந்து
நெஞ்சுக்குள் நிறைகிறது
சுகந்தம் வீசும் இரவு