Thursday, September 29, 2011

உண்மையறியும் குழு அறிக்கை


23, செப்டம்பர் 2011 அன்று மதுரை பத்திரிகையாளர் சங்கத்தில்
இகக (மா-லெ) கட்சியின் மாநில செயலாளர் பாலசுந்தரத்தால் வெளியிடப்பட்ட
உண்மையறியும் குழு அறிக்கை
·          
           காவல்துறை உயர்அதிகாரிகள் ஆய்வாளர்கள் மற்றும் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட   காவல்துறை தலைவர்கள் மீது வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும். அவர்களை பணி நீக்கம் செய்யவேண்டும்.
·                     தலித்துகளை தனிமைப் படுத்துகிற வகையிலும் இழிவுபடுத்துகிற வகையிலும் காவல்துறையின் மிருகத்தனமான வன்முறைகளை நியாயப் படுத்துகிற வகையிலும் முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதை திரும்பப்பெற வேண்டும். சட்டமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கப் பட வேண்டும்.
·                     தேவர் ஜெயந்தி ஆண்டு தோறும் அரசாங்க விழாவாகக் கொண்டாடப் பட்டு வரும் நிலையில் தலித் மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று இமானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்ச்சியை அரசாங்க விழாவாக அறிவிக்கவேண்டும்.
·                     தலித்துகள் மீது அரசாங்க இயந்திரங்கள் தாக்குதல், வன்முறை நடத்தும் விசயங்களில் அவர்களை விசாரித்து உரிய தண்டனை வழங்கும் வகையில் வன்கொடுமை தடைச்சட்டம் 1989 விதிகள் 1995 திருத்தப்பட வேண்டும்.

1. செப்டம்பர் 11 அன்று காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு நடவடிக்கைகள் எதுவும் காவல்துறை சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்கு விதிகளின் படி நடத்தப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் கையாளப் படவில்லை. பல்வேறு ஆதாரங்கள், வாக்குமூலங்கள், நிகழ்ச்சிவிவரங்கள் அனைத்தும் உறுதிப் படுத்துவது, அமைதி, ஒழுங்கை ஏற்படுத்துவதற்கு மாறாக அச்சம், பீதியை ஏற்படுத்தும் வன்மத்துடனும் முன்முடிவுடனும் பரமக்குடியிலும் மற்ற பிற இடங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
2.      பரமக்குடி 5 முக்கு சாலையில் திரண்டிருந்தவர்களை அமைதிப் படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளோ மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களோ முயற்சி எதுவும் எடுக்கவில்லை. மாறாக தியாகி இமானுவேல் சேகரன் பேரவையின் மாநிலத்தலைவர் சந்திரபோஸ், சாலைமறியலை கைவிடச் செய்யவும் நிலமையை கட்டுக்குள் கொண்டுவரவும் கூறிய அனைத்து ஆலோசனைகளையும் கூட காவல் துறை உயர் அதிகாரி சந்தீப் பட்டீல் முரட்டுத்தனமாக மறுத்துவிட்டார். இதன்மூலம், உயர்அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்துவதையே குறியாகக் கொண்டிருந்தது உறுதியாகிறது. கூட்டத்தைக் கலைப்பதற்கு தண்ணீர் பீச்சியடிப்பதற்கென்று நிறுத்தப்பட்டிருந்த வஜ்ரா வாகனம் பயன்படுத்தப்பட வில்லை. கலைப்பது நோக்கமல்ல, சுடுவதே நோக்கம் என்பது தெளிவாகிறது.
3.      தடியடியும் துப்பாக்கிச்சூடும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. எனவே தடியடி பயனளிக்காமல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்ற காவல்துறை கூற்றும் முதலமைச்சரின் அறிக்கையும் உண்மைக்கு மாறாக உள்ளன. துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்கள் பலர், நெற்றியிலும், மார்பிலும் வயிற்றிலும் குண்டுபாய்ந்து பலியாகி உள்ளனர். இது கூட்டத்தைக் கலைப்பதற்கு நடத்தப்படும் துப்பாக்கிச்சூடாக அல்லாமல் குறி பார்த்து சுட்டு உயிரைப்பறிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டிருக்கிறது.
4.      ஐந்து முக்கு சாலையில் திரண்டிருந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது எனும் காவல்துறை கூற்று உண்மைக்கு புறம்பானது. மாறாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பின்னரே திரண்டிருந்தவர்கள் கல்வீசுவது போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் சிதறிய பின்னரும் துப்பாக்கிச் சூடு மாலை வரை பலமுறை  நடத்தப் பட்டிருப்பதும் 5 முக்கு சாலை சந்திப்பை மாலைவரை காவல்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததும் இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு யாரும் செல்ல முடியாது என்ற நிலமையை ஏற்படுத்துவதற்கென்றே செய்யப்பட்டிருக்கிறது. *மாலை 4 மணிக்கு மேல் இரண்டுஇளைஞர்கள் பிடிக்கப் பட்டு கொல்லப் பட்டிருக்கின்றனர் என்பதை நேரடி சாட்சியங்கள் உறுதிப் படுத்துகின்றன. இவர்கள் காவல் துறையினரால் அடித்தோ அல்லது சுட்டோக் கொல்லப் பட்டிருக்கின்றனர் என்பதும் தங்களைக் காத்துக்கொள்ள, பொதுமக்களை காக்க, வேறுவழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையும் சட்டமன்றத்தில் முதலமைச்சரும் கூறியதும் தவறு என்பது நிரூபணமாகிறது.
5.      ஜான்பாண்டியனுக்கு முதலில் அனுமதி அளித்துவிட்டு பின்னர் கைது செய்து தடுத்து நிறுத்தியதற்காக கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. அவரது பயணப்பாதையையும் நேரத்தையும் முன்கூட்டியே முடிவு செய்து போதிய போலிஸ் காவலுடன் அவரது வருகையை சச்சரவற்ற ஒரு நிகழ்ச்சியாக நடத்தியிருக்கமுடியும். மாறாக நினைவு நிகழ்ச்சிக்கு கூடியிருப்பவர்களை ஆவேசமடைய செய்யவும் ஆத்திர மூட்டுவதற்காகவுமே ஜான்பாண்டியனது வருகை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சற்றேறக்குறைய அதே நேரத்தில், 25-30 பேர்கள் மட்டுமே கூடியிருந்த மதுரை சிந்தாமணியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது! இவை அனைத்தும் பரமக்குடியை நோக்கி அணிதிரள்பவர்களை ஆங்காங்கே தடுத்து திருப்பி அனுப்புவது, தலித் சமூகத்தினரை ஆத்திரமூட்டுவது, துப்பாக்கிச்சூடு நடத்தி இமானுவேல் சேகரன் நினைவஞ்சலி நிகழ்ச்சியை தடுத்து நிறுத்துவது என்ற முன்முடிவுடன் செய்யப்பட்டிருக்கிறது.
6.      தனியாக சிக்கியவர்களை, குண்டடிபட்டவர்களை, பலியானவர்களை, பலியானவர்களின் உறவினர்களை காவல்துறை நடத்தியவிதம் மனிதத் தன்மையற்ற கொடூர சம்பவங்களாகவே உள்ளன. தனியாக சிக்கிய முதியவர்கள் பலரும் கொடூரமாக அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் இருவர் பலியாகி இருக்கிறார்கள். 20 பேர் கூடிய இடத்தில் 200 பேர் மீது வழக்கு, 500 பேர் கூடிய இடத்தில் 1000க்கு மேற்பட்டோர் மீது வழக்கு, இரவு நேர தேடுதல் வேட்டை போன்ற அடக்குமுறை நடவடிக்கைகள் தொடருகின்றன. இவை பரமக்குடியை சுற்றியுள்ள தலித் இளைஞர்கள், தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை நிரந்தரமான அச்சத்தில் ஆழ்த்தவும் அடுத்தடுத்து அணிதிரளாமல் செய்யவுமான திட்டத்துடன் செய்யப்பட்டு வருகிறன்றன.
7.      துப்பாக்கிச்சூடு, தடியடி, உள்ளிட்ட அனைத்தையும் உள்ளூர் போலிசே முன்னின்று நடத்தியுள்ளனர். ‘அனுபவம் வாய்ந்தவர்கள்’ என்று கூறப் படுவோரான, கடந்தகாலத்தில் சாதிய பாரபட்சத்துடன் தலித்துகள்மீது வன்முறை நடத்திய அனுபவம் உள்ள அதிகாரிகள் செந்தில்வேலன், இளங்கோ, சிவக்குமார் போன்றவர்களின் தலைமையிலேயே அனைத்தும் நடந்துள்ளன.    
8.      உள்துறைப் பொறுப்பை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், லட்சக் கணக்கான தலித் மக்கள் சம்பந்தப்பட்ட உணர்ச்சிபூர்வமான இந்த விவகாரத்தில் பொறுப்பற்ற முறையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமலும் முழுக்க முழுக்க காவல் துறையிடம் விட்டு விட்டதாகவே தெரிகிறது. காவல்துறை உயர் அதிகாரிகள், ஆட்சித்தலைவர்களின் கூட்டத்தை முன்கூட்டியே கூட்டி அமைதி குலையாமல் இருக்கவும், இமானுவேல் சேகரன் நினைவுநாள் நிகழ்ச்சி அமைதியாக நடக்கவும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாணவர் பழனிக் குமார் திட்டமிட்ட கொலை, இமானுவேல் சேகரன் குருபூஜை நிகழ்ச்சியை தடுக்கும் நோக்கத்துடன் ஆப்பநாட்டு மறவர் சங்கம் நடத்தியக்கூட்டம் இவற்றை முன்கூட்டியே அறிந்து உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கத்தவறியுள்ளது. மாறாக, நினைவுநிகழ்ச்சியை சீர்குலைக்க விரும்புவோரது திட்டத்தை நிறைவேற்றுகிற வகையில் அனைத்தும் அரங்கேறுவதற்கு காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது.


பரிந்துரைகள்:

1.      தலித் மக்களின் அச்சத்தைப் போக்கி அவர்களிடம் நம்பிக்கையைக் கொண்டுவரும் வகையில், செப்டம்பர் 11 அன்று பரமக்குடிக்கு அழைக்கப்பட்டிருந்த சந்தீப் பட்டீல் உள்ளிட்ட காவல்துறை உயர்அதிகாரிகள் ஆய்வாளர்கள் மற்றும் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட மாவட்ட காவல்துறை தலைவர்கள் மீது வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும். அவர்களை பணி நீக்கம் செய்யவேண்டும். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யவேண்டும். அரசாங்கம் அறிவித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்ட ஒரு நபர் கொண்ட விசாரணைக் கமிஷனுக்குப் பதிலாக பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் பல உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக்கமிஷன் அமைத்திட வேண்டும். செப்டம்பர் 11 நிகழ்வை ஒட்டி, முதலமைச்சர் பொறுப்பிலுள்ள உள்துறை அமைச்சகத்தின் செயல்பட்டவிதம் குறித்தும் விசாரணைக் கமிஷன் விசாரிக்க வேண்டும்.
2.      தலித்துகள் வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள், இனக் கலவரத்தை தூண்டுபவர்கள் என்றவகையில் தலித்துகளை தனிமைப் படுத்துகிற வகையிலும் இழிவுபடுத்துகிற வகையிலும் காவல்துறையின் மிருகத்தனமான வன்முறைகளை நியாயப் படுத்துகிற வகையிலும் முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதை திரும்பப்பெற வேண்டும். சட்டமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கப் பட வேண்டும்.
3.      மருத்துவமனைகளில் உள்ளவர்களுக்கு உயர்மருத்துவ வசதியை அரசே தன் முழுப்பொறுப்பில் செய்திட வேண்டும். சிறையிலுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும். அடக்குமுறை, அச்சுறுத்தல் நோக்கத்துடன் பெண்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் மீது போடப் பட்ட வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். போலீஸ் தேடுதல் வேட்டை காரணமாக இருவர் இறந்துள்ள நிலையில் இது போன்ற தேடுதல் வேட்டைகளை உடனடியாக நிறுத்திட வேண்டும்.
4.      நேர்த்திக் கடனாக நாக்கை வெட்டிக் கொண்ட தனது கட்சிக்காரப் பெண்ணுக்கு ரூ 5 லட்சமும் அரசாங்கவேலையும் வழங்கும் அளவுக்கு ‘தாராள’ மனது படைத்த முதலமைச்சர், காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் அளித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பழனிக்குமார் உள்ளிட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ 25 லட்சமும் அரசாங்க வேலையும் அளித்திடவேண்டும். தலித் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் பச்சேரி கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்திட வேண்டும். புதிய சாலை அமைத்து தர வேண்டும். வேலை இல்லாமலிருக்கும் அந்த கிராம மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் உடனடியாக வேலை வழங்கிடவேண்டும்.
5.      ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்யவேண்டும். கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட ஜனநாயக நடவடிக்கைகளை அனுமதிக்கவேண்டும். தலித் அமைப்புகளின் தலைவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைவதற்குள்ள தடையை நீக்க வேண்டும்.
6.      தேவர் ஜெயந்தி ஆண்டு தோறும் அரசாங்க விழாவாகக் கொண்டாடப் பட்டு வரும் நிலையில் தலித் மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று இமானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்ச்சியை அரசாங்க விழாவாக அறிவிக்கவேண்டும்.
7.      ‘‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற கோட்பாட்டின்படி அரசாங்கம் இயங்குவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தலித்துகள் மீதான அரசாங்க வன்முறையும் காவல்துறை வன்முறையும் (கொடியங்குளம், தாமிரபரணி, பரமக்குடி) அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர், அரசாங்க அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்படுவது அவசியம். எனவே தலித்துகள் மீது அரசாங்க இயந்திரங்கள் தாக்குதல், வன்முறை நடத்தும் விசயங்களில் அவர்களை விசாரித்து உரிய தண்டனை வழங்கும் வகையில் வன்கொடுமை தடைச்சட்டம் 1989 விதிகள் 1995 திருத்தப்பட மத்திய/மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உண்மை அறியும் குழு செப்டம்பர் 19-20 தேதிகளில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டது. 700 கிலோமீட்டர்களுக்கு மேலாக பயணம் மேற்கொண்ட குழு, பலியானவர்கள் அனைவரது குடும்பத்தினர், பொதுமக்கள், தலித் அமைப்புகளின் தலைவர்கள், காவல்நிலையங்கள், மாவட்டக் காவல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், சம்பவம் நடந்த இடங்கள் அனைத்தையும் பார்வையிட்டு கருத்தறிந்தது. கட்சியின் மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் சென்ற குழுவில், டி.சங்கரபாண்டியன் (எஅய்சிசிடியு மாநிலத் துணைத்தலைவர்), ஆவுடையப்பன் (அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர்), திவ்யா (அகில இந்திய மாணவர் கழக மாநிலக் குழு உறுப்பினர்), சி.மதிவாணன் (மதுரை மாவட்டச் செயலாளர்), ஜீவா (சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர்), கே.ஜி.தேசிகன் (ஒருமைப்பாடு ஆசிரியர்குழு உறுப்பினர்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

Tuesday, September 20, 2011

மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) ஆர்ப்பாட்டம்

துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது வன்கொடுமை சட்டத்தின்  கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

2011 செப்டம்பர் 16 ஆம் நாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஐ எம்எல் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. பரமக்குடி, இளையான்குடி மற்றும் மதுரையில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ எம்எல் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மதிவாணன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிபிஐ எம்எல் கட்சியின் மாநிலச் செயலாளர் மாற்றம் தந்த மக்களுக்கு மரணம் அளித்த ஜெயலலிதாவின் அரசே திட்டமிட்ட முறையில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியது என்று கூறினார். தாக்குதலுக்குப் பின்பு சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் தலித்துகளின் மீது பழிபோடும் வகையில் அவதூறாகப் பேசியதைச் சட்ட மன்றக் கூட்டக்குறிப்பிலிருந்து நீக்குவதன் மூலம் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

தலித்துகள் தங்களின் ஒன்று சேர்வதற்கும் உரிமை கோருவதற்கும், அவர்கள் விரும்பும் தலைவர்கள் பின்னால் அணி திரள்வதற்கும் உரிமை இருக்கிறது. எந்தவித தூண்டலும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. தலித்துகள் அணி திரள்வதைப் பொறுக்க முடியாத அரசின் செயல் ஜனநாயக விரோதமானது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி அமைப்பாளர் சிம்சன், பாமக விவசாயப் பிரிவின் மாநில துணைச் செயலாளர் காதை முருகன் ஆகியோரும் உரையாற்றினர்.


ஆர்ப்பாட்த்தில் பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
·         பரமக்குடியிலும் மற்ற பல இடங்களிலும் சாதிய காழ்ப்புணர்ச்சியுடன் துப்பாக்கிச் சூடு நடத்தி 7 பேர்களைக் கொன்ற காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்களைப் வன்கொடுமை சட்டத்தின் படி பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியிலிருக்கும் நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.
·         தலித்துகளை வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள், பொது மக்களுக்கு ஆபத்தானவர்கள் என்று அவதூறாகவும் காவல்துறை அத்துமீறல்களை ஆதரித்தும் பேசியுள்ள முதலமைச்சரின் கருத்தை சட்டமன்றத்திலேயேத் திரும்பப் பெற வேண்டும்.
·         பள்ளி மாணவன் பழனிக் குமாரைக் கொன்றவர்களை உடனடியாக கைது செய்! தலித்துகளின் பாதையை மறிப்பது (மண்டல மாணிக்கம்) போன்ற வன்கொடுமைக் குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் வன்கொடுமை சட்டத்தின்படி கைது செய்ய வேண்டும்.
·         கைது செய்யப்பட்டுள்ள  தலித் இளைஞர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்! அச்சுறுத்தி அராஜகம் செய்யும் காவல்துறையை தலித் பகுதிகளில் இருந்து திரும்பப்பெற வேண்டும்.
·         கொல்லப் பட்டவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடாக குறைந்த பட்சம் 10 லட்சமும் காயமுற்றவர்களுக்கு குறைந்த பட்சம் 5 லட்சம் வழங்கிடு! அத்துடன் கொல்லப்பட்டவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும்.
(செய்தி  அனுப்பியவர் சி.மதிவாணன் - மாவட்ட செயலாளர்)

வெள்ளித்திரை விழுங்கிய பண்பாட்டு விழுமியங்கள் - மு.பழனிக்குமார்


              இன்றைய தமிழ்ச்சூழலில் பண்பாடு என்கிற சொல்லை காலாவதியாகிவிட்டதோ என்றென்னும் காலநிலையில், இருப்பதாய் நாம் நம்பிக்கொண்டிருக்கின்ற எச்ச சொச்சங்களையும் ஆழிப்பேரலையாய் வந்து நித்தம் கபளீகரம் செய்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறது வெள்ளித்திரை.
ஆரம்ப காலங்களில் புராணங்களையும், கடவுளர் கதைகளையும், மன்னர்களையும் சாகசக்காரர்களையும் மட்டுமே கொடுத்து வந்த திரைத்துறை கொஞ்சம் மாறி அல்லல்படும் குடும்பக்கதை, அண்ணன் தங்கை, அண்ணன் தம்பி, தாய் மகன் எனப் பாசக்கதைகளாய் பரிணாமம் பெற்றது. பின்னர் கல்லூரி என்ற பெயரில் பெண்களைக் கேலி செய்வது மட்டுமே கல்லூரிப் படிப்பெனவும், கல்லூரியில் படிக்கும் அனைத்துப் பெண்களும் டைட்டான உடையணிந்து தலைக்கணம் பிடித்தவர்களாக மட்டுமே காட்ட முடிவெடுத்தது. இந்தமுறை சமீபகாலம் வரை நீட்டித்துத் தொடர்கிறது.
அதற்கடுத்து பழிவாங்கல் கதைகள். ஒரு வில்லன், அவனுக்கு ஒருகூட்டம் சில வில்லன்களின் கூட்டணி, ஒரு கூட்டம், கதாநாயகனின் பெற்றோரைக் கொலை செய்தல், சகோதரியைப் பலாத்காரம் செய்தல் என முரட்டு மீசை, தடித்த கேரா, பரட்டைத் தலை, ஆஜானபாகு உடலோடு கூடிய வில்லன்கள், பலிவாங்கும் கதாநாயகன் என காலம் உருண்டோடியது.
இதற்கிடையே இயக்குநர் சிகரங்கள் தோன்றி முக்கோணக் காதல் கதைகளில் காதல் ரசம் எடுத்து பண்பாட்டுச் சூழலில் விஷம் கலக்கினர். முறையற்ற உறவுகள் முறைப்படுத்தப்பட்டது. தவறு செய்பவரின் குற்றஉணர்வுகள் குறைக்கப்பட்டு நல்ல குடிமகனாக சித்தரிக்கப்பட்டனர். அப்படங்கள் அனைத்திலும் ஆண் பரிசுத்தமானவனாகவும் சூழ்நிலையால் ஒரு சிறு தவறு செய்தவனாகவும் காட்டிய அதே வேளையில் பெண்ணை வேசியாகவும், கீழ்த்தரமாகவும் காட்டின.
அதற்கு அடுத்த நிலையில் கொள்ளைக்கூட்ட ‘பாஸ்’ கதைகள் ஆரம்பமாகின்றன. வில்லன் கொள்ளைக்கூட்டத் தலைவனாக இருந்த காலம் போய் கதாநாயகனே இன்னுமொரு கொள்ளைக் கூட்டத் தலைவனாகி ஸ்டைல், சாகசங்கள் புரிந்து கைதட்டல் வாங்கிக் கலக்கினார்கள். இங்கே கொள்ளையடிப்பது, திருடுவது நன்மைக்கென்றால் அது தவறல்ல என்ற கருத்து நிலை உருவாக்கப்பட்டு தற்போதைய படங்கள் வரை தொடர்கிறது. இந்த வரிசையில் பில்லா, ரங்கா, தாய்வீடு அதற்கு முந்தைய கங்கா எல்லாம் சக்கை போடு போட்ட படங்கள். இது மட்டுமில்லாமல் இப்படங்கள் அனைத்திலும் ஒரு காபரே அல்லது கிளப் டான்ஸ் எனப்படும் கவர்ச்சி நடனம் இருக்கவேண்டுமென்பது கட்டாய சட்டமாக்கப்பட்டு, அப்பாடல்களுக்கான பிரத்யோக வடிவமைப்புகள், செட்டுகள் என படத்தின் பாதி பட்ஜெட் ஒதுக்கப்பட்டது.
கவர்ச்சி நடிகைகளின் அணிவகுப்புகள் ஆரம்பமாகின. சில திரையரங்குகளில் அப்பாடல்கள் படம் முடிந்ததும் மீண்டும் மறுஒளிபரப்பு செய்யப்பட்டன. ‘கனவுக் கன்னி’ என்ற புதிய வார்த்தை இளைஞர்கள் மனதில் விதைக்கப்பட்ட காலகட்டம் அது.
அடுத்ததாக பூ ஒன்று புயலானது என்ற தெலுங்கு டப்பிங் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மக்கள் போர்க்குழு செல்வாக்குப் பெற்றிருந்த பகுதியான ஆந்திராவில் இருந்து அதிரடி அரசியல் படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கு வந்து சேர்ந்தன. போலி அரசியல்வாதிகளையும் கொடூரம் புரியும் அரசியல் வாதிகளையும் பழிவாங்கும் கதைகளாக அவை அமைந்தன. மக்களுக்குள் இருந்த அனைத்துக் கோபமும் வழிந்தோடும் வடிகாலாய் அமைந்தன அப்படங்கள். அப்போது நான் +2 படித்துக் கொண்டிருந்தேன். அரசியல்வாதிகள் மேல் எனக்குள் வெறுப்பு தோன்ற ஆரம்பித்த பருவம். உண்மையைச் சொன்னால் எனக்குள்ளேயும் போலி அரசியல்வாதிகளைப் பழிவாங்க வேண்டும் என்ற அந்த வெறி இருந்தது. இப்படியான அரசியல் படங்கள் வந்தபின்தான் திரையில் ‘வன்முறைக் கோட்பாடு’ மிக வேகமாய் பரவத் தொடங்கியது. அரசியல் வாதிகளை மிகவும் கொடூரமான மனிதர்களாகக் காட்டுவதற்கு எனக் காரணம் சொல்லி சினிமா மிகமோசமான காட்சிப் பதிவுகளை மேற்கொள்ள ஆரம்பித்தது. அருவருக்த்தக்க வன்முறைக் காட்சிகளும், வசனங்களும் முகம் சுளிக்க வைத்தன. மட்டுமல்லாமல் மக்களை மனோவியாதிக்காரர்களாக மாற்ற முயற்சி செய்தன.
அவற்றைத் தொடர்ந்து அதேபோல் நிறையப் படங்கள் தமிழில் எடுக்கப்பட்டு வீர்யம் குறைந்தபோது அக்கால கட்டத்தில் வெளியான கோமல் சாமிநாதனின் நாடகமான ‘தண்ணீர் தண்ணீர்’ பேச வேண்டிய படமாக, பேசப்படும் படமாக திரைக்கு வந்தது. அதன் பாதில் உருவான ‘ஒரு இந்தியக் கனவு’ ... ... போன்ற கதையைக் கதாநாயகனாகக் கொண்ட படங்கள் வரத் தொடங்கி விரைவில் ஒரு முடிவுக்கு வந்தன.
தொடர்ந்து கேமராமேன்களின் காலம் தொடங்கி அண்டா குண்டாவிற்கெல்லாம் செமி போகஸ் லைட் போட்டு ‘கேமரா சூப்பர்’ என்ற சொல்லாடலைக் கொண்டு வந்தது. (பாலுமகேந்திரா, ஸ்ரீராம்... ...) பிறகு மெல்லப் பேசும் பண்பாட்டை மணிரத்னம் இறக்குமதி செய்தார். அழகானவர்கள், உயர்தட்டு வகுப்பினரின் மொழி என்பதை உறுதிப்படுத்தி மெல்லப் பேசவைத்து எத்தனை முறை உற்றுக்கேட்டாலும் கேளாத மொழியைப் படைத்தளித்தார்.
தற்போது மையம் கொண்டிருக்கும் புயல்காதல்இந்தச் சொல்லை படுத்தும் பாடும், அலைக்கழிக்கும் விதமும் சொல்லி மாளாது. உயிரைக் கொடுப்பது, உயிரை எடுப்பது, உயிரை விடுவது என சமூகப் பிரச்சனைகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி முன்னே துருத்திக் கொண்டிருக்கிறது இது.
எதற்காகவும் காதலை விட்டுக் கொடுக்காதே
எல்லாவற்றையும் காதலுக்காக விட்டுக்கொடு
என்று உலகத்தில் வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதுபோல ஒரு தனிமனிதனின் காதல் மிகவும் முக்கியமானதாகவும் பெரிதாக்கப்பட்டு ஒரு திரைப்படம் முழுவதும் அதுபற்றி மட்டுமே பேசுவது, நம்மைத் தியேட்டருக்குப் போக அச்சுற வைக்கிறது. அதுவும் சமீபத்திய விஜய் படங்கள், ஓவர் பில்டப்புகள், ஹாரிபார்ட்டரின் மாயஜாலக் கதைகளையெல்லாம் மிஞ்சி, காட்டூன் கதைகளைப்போலஇல்லை இல்லை இவற்றை அவற்றோடு ஒப்பிடக் கூடாது. அவை பார்க்கும்படி இருக்கும்.
சமீபத்திய படங்களும் நெஞ்சைத் தொட்டனவா? என்ற கேள்விக்கு நாம் சில காட்சிகளை மட்டுமே சொல்ல முடியும். மொத்தப் படத்தையும் சொல்ல முடியாது. பொதுவில் குழந்தைகளோடு அமர்ந்து ஒரு படம் பார்க்க முடியுமா?
1.        இன்று காதல் ரசம் சொட்டாத படங்கள் இல்லை. (குழந்தைகளுக்கான படம், ஒரு குழந்தையின் படம் என்று சொல்லிக் கொள்ளும்தெய்வத் திருமகள்படத்திலும் ஒரு அருமையான (கொடுமையான) பாடல் காட்சி தொட்டவுடன் ஷாக் அடிக்கிறது) குழந்தைகளுட்ன் பார்க்கும் நமக்கும் ஷாக் அடிக்கிறது. மனம் படபடக்கிறது.

2.        முத்தக் காட்சிகள் இல்லாத படங்கள் இல்லை. ஆங்கிலப் படங்களை முன்பு இதற்காகவே பார்க்கப் போன கூட்டம் ஒன்று இருந்தது. இப்போது அவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள்.

3.        வன்முறைக் காட்சிகள் இல்லாத படங்கள் இல்லை. இரத்தம் சொட்டும் அரிவாள்கள். குண்டு பட்டுத் தெறித்து துளைத்துச் செல்லும் காட்சி.

4.        கொச்சையான வார்த்தைகள் ஏதேனும் பேசவேண்டும் என்பது அனைத்துப் படங்களுலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

5.        வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.சந்திரன், வெண்ணிறஆடை மூர்த்தி இப்போ, சந்தானம். இந்தப் பட்டியலைப் பார்த்தாலே புரியும். இவர்களது பாணி என்னவென்று. இரட்டை அர்த்த வசனங்களைப் பேசிக் கொல்லுவார்கள்.

6.        ரவுடிகள், பொறுக்கிகள், போக்கிரிகள் இவர்களை நல்லவர்களாய்க் காட்டும் படங்கள்.
அதில் அழகிய, வசதியான, படித்த கதாநாயகிகள் அவர்களை விரட்டி விரட்டி காதலிப்பதாகக் காட்டப்படுகின்றனர். நிஜவாழ்க்கையில் இதேபோல மேற்கூறியவர்களைப் போன்றவர்களை நம்பி அவனுக்குள் இருக்கும் நல்லவனைக் கண்டு கொண்டதாய்க் கூறி ஏமாந்து வாழ்க்கையைப் பறி கொடுத்துக் கொண்டிருக்கும் பள்ளி கல்லூரி மாணவிகளின் எண்ணிக்கையை இவர்கள் பெருக்கிக் கொண்டே போகிறார்கள்.
ஒரு தகப்பன் என்ற முறையிலும் ஒரு ஆசிரியர் என்ற முறையிலும் இவைகள் மிக்க கலையளிப்பதாய் உள்ளன. கல்லுக்குள் ஈரம் தேடுகிறார்களாம். இங்கே நெல்லுக்குள்ளேயே அரிசி இல்லையே. அனைத்தும் பொக்காய்க் கிடக்கிறது. இவற்றிற்கிடையில் வித்தியாசமான கிளைமாக்ஸ் என்பதற்காக மெனக்கெட்டு எதை எதையோ செய்வது இன்னும் ஆத்திரத்தைக் கூட்டுகிறது.
கண்டந்துண்டமாய் வெட்டுவது, காணாப் பொணமாய் வீசுவது, மனம் பதற வைப்பது போன்றவை தவிர்த்து ஒரு மகிழ்வான அல்லது ஒது நெகிழ்வன, கொஞ்சம் கனமான, முண்டும் அசைபோடு வண்ணம் இதை இப்படிச் சொல்லியிருந்தால் என்று சிந்திக்க வைக்கிற எந்தக் கதையும் இல்லை.
கேள்விகள்
1.    வன்முறைக் காட்சிகளை தினந்தோறும் பார்க்கும் குழந்தைகளின் / இளைஞர்களின் மனநிலை எப்படி இருக்கும்.

2.   ரவுடியாய் இருப்பது, நாகரீகமில்லாமல் இருப்பது, அழுக்காய் இருப்பது, அசிங்கமாய் இருப்பது, அதையும் கதாநாயகிகள் ரசிப்பதெனக் காட்டும் காட்சிகளைப் பார்ப்பவர்களின் மனநிலை என்னவாகும்.

3.   விளிம்பு நிலை மக்களைப் பற்றிப் பேசும் படங்கள் என்று சொல்லிக் கொண்டு கொச்சையான வசனங்கள், செயல்கள், மோசமான சூழல் இவற்றைக் காட்டி அம்மக்களின் மீது அருவருப்பைத் தூண்டுகின்ற காட்சிகளைப் பார்ப்பவர்கள் மனநிலை என்னவாக இருக்கும்.

4.   கட்டிப் பிடித்து, முத்தமிட்டு ரொமான்ஸ் காட்சிகள் வரும் படங்களையும் பாடல்களையும் பார்ப்பவர்களின் மனநிலை எப்படியிருக்கும்.

5.   பேருந்துகளில் அனைத்து மக்களுக்கும் பொதுவாகப் போடும் குத்துப்பாடல்களையும், கிரங்கும் பாடல்களையும் என்னவென்று சொல்வது.

6.   எந்தக் கொள்கையும் வேண்டாம், கோட்பாடும் வேண்டாம், நல்லவனாய் இருக்க வேண்டாம், தனிமனித முன்னேற்றம் மட்டுமே முக்கியம் எனப் போய்க்கொண்டிருக்கும் தமிழகச் சூழலை இன்னும் அதிகமாய் பண்பாட்டு விழுமியங்களை உள்ளிழுத்து விழுங்கிக் கொண்டிருக்கிறதுவெள்ளித்திரைஇல்லையில்லைகொள்ளித்திரை
(2011 செப்டம்பர் 04ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை)

Tuesday, September 13, 2011

அவர்களோடு அவர்களாய் நான் - சுப்புராயுலு



இவர்கள் நம்மவர்கள் எனும் சொல்லாடல்கள்
அந்த வெளியெங்கும் பரவி ஒலித்துக் கொண்டிருந்தன.
ஆலைகளிலும் குடியிருப்புகளிலும்
அதிகாரத்தின் அந்தகார இருள்
பனிப்பாளங்களாய் படிந்திருக்கின்றன.
நடைபாதைகளிலும் குடியிருப்பின் வெளியெங்கிலும்
கண்காணிப்பின் கனத்த வலைகளை
நுட்பமாக கண்ணில்படாது விரித்து வைத்திருந்தனர்.
இவர்கள் வாழ்வின் சாரங்களை
மென்று தின்று உமிழ்ந்தவர்களையே
அரங்க வெளிச்சத்தின் உயர் பீடங்களில்
கொலு வைத்துப் போற்றித் தொழுதனர்
கண்களில் அதிருப்தியின் ரேகை படர
அவர்களைப் பார்த்த போது
இவர்கள் நம்மவர்கள்
இவர்களோடு இருப்பதே நமக்கு
மகிழ்வைத் தரும் என்றனர்.
அடர்ந்த பனைகளினூடாக கசிந்த வைகறை
வெளிச்சத்தில் நடைபயிற்சியில்
என்னோடுகூட வந்த நண்பர்
அவர்களைப் பற்றிய கதையாடல்களை
புதிர்மொழியில் வார்த்தைகளுக்கிடையே
நீண்ட இடைவெளிகள் தந்து பேசினார்.
அவர் சொன்ன அடையாளங்கங்களோடு
அவர்களைத் தேடிச் சென்றேன்.
தூரத்தில் மேற்கு திசையின் அடிவானத்தில்
செம்மண் பாவிய சாலையின் முடிவில்
உயர்ந்த அடர்ந்த பசுமையைப் பேசிய மரங்களுக்கிடையில்
சிறுசிறு கட்டிடங்கள் தென்பட்டன.
குறுக்கும் நெடுக்குமாக ஓடிய இளைஞர்கள்
பணியின் வேகத்தில் கவனம் கொண்டனர்.
ஓரிடத்தைச் சுட்டிக் கேட்டபோது
இது மனிதர்களின் புற அகத் தளைகளை
உடைக்கும் கருவிகளை வார்க்கும்
உலைக்கூடம் என்று பகர்ந்தனர்.
சற்று நகர்ந்து வேறொரு திசையை நோக்குகையில்
அது திசைவெளிகளில் விரிந்து
பயணிக்கும் வாகனங்களைப்
பழுதுபார்க்கும் பணிமனை என்றனர்.
அந்த வெளியும் சூழலும் என்னை உள்ளீர்த்துக் கொண்டதால்
தொடர்ந்து அங்கே சென்று கொண்டிருந்தேன்.
முரண் எதிர்வுகளையே வாழ்வின் தரிசனங்களென் கண்டவர்கள்
அங்கே போகாதே.
அவர்கள் நம்மவர்கள் அல்ல என்றனர்.
முன் முடிவுகளில் நனைந்த சொற்களோடு.
ஆனால் இப்பொழுது நான்
அவர்களோடு அவர்களாய்.

(2011 செப்டம்பர் 04ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் படைப்பரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கவிதை)

Wednesday, September 7, 2011

ஒன்றுமில்லை - செண்பகராஜன்



அண்ட வெளியெங்கும்
படர்ந்திருக்கும் இருளா?
இசையை மொழிபெயர்க்காத
நிசப்தமா?
எழுதப்படாமலிருக்கும்
நாட்குறிப்பின்
வெள்ளைப் பக்கங்களா?
தனிமையைக்
குடி வைத்திருக்கும்
வெற்று அறையா?
வேலையற்ற
பொழுதுகளின் நிகழ்வுகளா?
வார்த்தைகளைப்
பிரசவிக்க முடியாத மௌனமா?
ஆடைகளை அணியாத
நிர்வாணமா?
காலத்தையும் வெளியையும்
அடையாளப்படுத்தும்
‘குவாண்டம் சூத்திரப் பூஜ்யமா?
‘இருத்தல் இல்லாத
இருத்தல் நிலையா?
தங்களிடம்
சொல்வதற்கும்தான்

(2011 செப்டம்பர் 04ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் படைப்பரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கவிதை)

காத்திருத்தல் - அருணோதயம்



அப்பாக்கள்
காத்திருக்கிறார்கள்
பிள்ளைகளுக்காக.

பிள்ளைகள்
காத்திருக்கிறார்கள்
வகுப்பு முடிவதற்காக.

(2011 செப்டம்பர் 04ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் படைப்பரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கவிதை)