Tuesday, December 29, 2015

படைப்பரங்கம் மற்றும் கலந்துரையாடல்


மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
படைப்பரங்கம் மற்றும் கலந்துரையாடல்

அருப்புக்கோட்டை – மதி இல்லம்
2016 ஜனவரி 3 – ஞாயிற்றுக்கிழமை
காலை 10.00மணி முதல் பிற்பகல் 1.30 வரை

‘சாதியும் வர்க்கமும்’ என்ற பொதுத் தலைப்பிலான கலந்துரையாடலில்…

துணைத் தலைப்புகளிலான விவாதக் குறிப்புகளை முன்வைக்க…

தோழர் முனியசாமி – கிராமப்புறங்களில் வர்க்கம்
தோழர் மாணிக்      - மின்னணு ஊடகங்களில் (இணையத்தில்) சாதியம்
தோழர் அஷ்ரஃப்    - மின்னணு ஊடகங்களில் (இணையத்தில்) வர்க்கம்

படைப்பரங்கையும் கலந்துரையாடலையும் ஒருங்கிணைக்க தோழர்கள் ரமேஷும் வருணும்
வரவேற்கவும் நன்றி கூறவும் தோழர்கள் ராமராஜும் கேகே’யும்

தொடர்புகளுக்கு 94431 84050 & 9442184060
maveepaka@gmail.com

அன்புடன் வரவேற்கும்
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்

Wednesday, December 23, 2015

மாடி வீடுகள் - சிறுகதை - ஹரி ராஜா

முடி திருத்தும் கடையின் வாசலில்  முன்னாள் கடைக்குட்டியாகிய நான்  நின்றிருந்தேன். “முடி வெட்ட வேண்டுமென்றால் உள்ளே வாஎன்றான் கடைக்காரன்.
இல்லைஎன்றேன் நான்.
வேறென்ன?”
ஒரு சந்தேகம்என்று இழுத்தேன்.
என்ன?”
இவ்வளவு தரித்திரத்தை வைத்துக் கொண்டு ஏன் இன்னும் ஏழையாகவே இருக்கிறீர்கள்?”
தரித்திரத்தோடு இருப்பதாலேயல்லவா ஏழையாய் இருக்கிறேன்?”
இங்கெல்லாம் தரித்திரத்துக்கு மதிப்பில்லையா?”
தரித்திரத்துக்கு மதிப்பா? பேசாமல் போய்விடுஎன்று கத்திவிட்டு நாட்டில் குடிகாரர்கள் தொல்லை தாங்க முடியவில்லை’ என்று முனங்கிக் கொண்டான்.
ஒரு மாதம் கழிந்திருந்தாலும் இப்போதும் என்னைப் பார்த்தால் முறைப்பான். அதனாலேயே எனக்கிருந்த இன்னொரு சந்தேகத்தை தற்காலிகமாக கேட்காமலிருக்கிறேன்.
என் கதையை என்னவென்று சொல்வது. விடுதலை என்பது என் வாழ்வில் அடுத்த துன்பத்துக்கான இடைவெளி என்றே ஆகிவிட்டது. வெறுப்புணர்வு மேலிட எருமை ரோமங்களாலான கூரை வீட்டிலிருந்து தப்புவதென்று முடிவெடுத்தேன். எங்கே போவது? ஒன்றும் புலப்படவில்லை.
கூரை வீடுகள் சலிப்பை ஏற்படுத்தி விட்டன. எங்கே போனாலும் விதிகளை மாற்றிவிட்டுநீ தான் கடைக்குட்டி, சொல்வதைக் கேள்என அதட்டுகிறார்கள். அந்தக் கிழவியின் தொல்லையோடு உளவாளிகளின் இம்சை வேறு. கடைக்குப் போனால் உளவாளி தண்டனை கொடுப்பான்; போகவில்லையென்றால் கிழவி மயிலிறகை வைத்து அடித்து நொறுக்குவாள். தீவிர யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தேன்.
ஆளரவமற்ற இருள் சூழ்ந்த நண்பகலில் தப்பி ஓடினேன். யதார்த்த உலகம் குறித்து தங்கக் கூரை வீட்டிலிருந்த சமயத்தில் கிழவர் நிறைய சொல்லியிருக்கிறார். இங்கு வந்து வேலை தேடிக் கொள்வதே  ஒரே தீர்வு என்று எண்லானேன். ஆனால் அது எவ்வளவு பெரிய மூடத்தனமென்பதை வந்த இரண்டாம் நாளேயல்லவா உணர்ந்து கொண்டேன்!
வழியில் கடைக்குச் செல்ல வேண்டியிருக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக கையில் கொஞ்சம் தரித்திரம் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். குட்டையைக் கடந்தால் யதார்த்த உலகத்தை அடைந்துவிடலாம். ஆனால் எனது உருவம் அவ்வளவு பெரியதாக இல்லை என்பதால் அங்கிருந்த எறும்பின் உதவியை நாடினேன். இப்படியாக எறும்பின் முதுகில் ஏறிக்கொண்டு என் பயணத்தைத் தொடர்ந்தேன். பத்தே நிமிடத்தில் என்னை கரை சேர்த்த்து எறும்பு.
வந்த சேர்ந்த உடனேயே பேரதிர்ச்சி காத்திருந்த்து. குட்டையைப் பார்த்தேன். அது கடலாக மாறி விட்டிருந்தது. எனக்கு உதவிய எறும்பு சிரஞ்சீவியாவதில் உடன்பாடு இல்லை என்பதால் அக்கரை செல்ல வேண்டாமென அதைத் தடுத்து விட்டேன். மத்தியானத்தில்  வெயில் சுட்டெரிக்கிறது. தரித்திரம் கொடுத்து சாப்பாடு கேட்டால் அடிக்க வருகிறார்கள். மட்டுமல்லாமல் தரித்திரக் குவியலில் வாழ்பவனுக்குக் கூட அதன் அருமை தெரியவில்லை. இங்கே யாரிடம் என்ன வேலை கேட்பது என்றும் விளங்கவில்லை.  இங்கே கூரை வீடுகளையே பார்க்க முடியவில்லை. இவர்களது மாடி வீடுகள் எனக்கு வினோதமாக இருந்தன.
ஆனால் அன்றே ஒருவன் எனக்கு வேலை தருவதாக வாக்குறுதி கூறி மறுநாள் அதிகாலை வருமாறு கூறினான். அன்றிரவு நடைபாதையில் (மக்கள் நடுத்தெருவில் நடக்காமல் இதில் தான் நடந்து செல்கிறார்கள்) தூங்கினேன்.  
மறுநாள் காலை அவனிடம் சென்றேன். அந்தப் பகுதியிலிருக்கும் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்வதுதான் வேலை. பால்பாக்கெட்டுகளையும் மிதிவண்டியையும் கொடுத்துவிட்டு வீடுகளின் விலாசங்களையும் எழுதிக் கொடுத்தான்.
ஒருமணி நேரம் கழிந்திருக்கும். ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பிலிருந்து மிதிவண்டியை நோக்கி வந்து கொண்டிருந்தேன். பால் பாக்கெட்டுகளை வைத்திருந்த பை வெறுமையாக இருப்பது சில அடி தூரத்திலேயே புலப்பட்டது. சோர்வுற்று மரத்தடியில் சாய்ந்து கொண்டேன். இவ்வுலகில் தேவையற்ற ஒருவனாய் வந்து சேர்ந்த என்னைப் போல அந்தக் கட்டிடத்தின் முன் தேவையில்லாத ஒற்றை மரம். எப்படியும் ஐந்து அல்லது ஆறு பாக்கெட்டுகள் இருக்கும். முதலாளிக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.
என் மீது விழுந்த துளிகளை தொட்டுப் பார்த்தேன். அது பால் தான் என்று தெரிந்தது. மரத்தை நிமிர்ந்து பார்த்து அதிர்ந்து போனேன். ஒரு குரங்கு எந்தக் கவலையும் இல்லாமல் ரசனையோடு சுவைத்துக் குடித்துக் கொண்டிருந்தது.
“குடியிருப்புக்குள் குரங்கா? நல்ல கதை. இதோ பார். ஏற்கனவே காது குத்திவிட்ட காரணத்தினால்தான் கடுக்கன் அணிந்திருக்கிறேன். உன்னை இன்னொரு முறை நான் பார்த்தால் என்ன செய்வேன் என எனக்கே தெரியாது” என்று கத்தினான்.
ஆதரவளிக்க எவரும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். இவ்வளவு பெரிய இடத்தில் என் மீது பரிவு காட்ட ஒருவரும் இல்லை என நொந்து போனேன். அந்தச் சமயத்தில் தான் இட்லிக் கடையில் வேலை கிடைத்தது. . கடைக்காரன் தயவில் அவன் வீட்டிலேயே தங்கிக் கொண்டேன். அவனும் அனாதை தான்.  
நாட்கள் உருண்டோடின. எல்லாம் சகஜமாக இருப்பதாகவே தோன்றியது. இவ்வுலக இயல்புகளை முதலாளி மூலமே தெரிந்து கொண்டேன். அதற்கேற்றார் போல் என்னை தகவமைக்கும் முயற்சியிலிருந்தேன். ஆனால் வாழ்க்கை விடுவதாக இல்லை. நேற்று நடந்த சம்பவம் என் அமைதியை மீண்டும் குலைத்து விட்டது.
இரவு சாப்பிட்டுவிட்டு கை கழுவி வருவதற்காக உள்ளே சென்றேன். வந்து பார்த்தால்…… நடு வீட்டில் பசு மாடு பரோட்டா தின்று கொண்டிருக்கிறது. அதை விரட்டி விட்டாலும் வாயில் பரோட்டாவை கவ்விக் கொண்டு சென்று விட்டது. கடை சென்று திரும்பிய முதலாளி உணவு பரிமாறுமாறு கூறினான்.
“மன்னித்துக் கொள்ளுங்கள். ரொம்பப் பசி. நானே தின்று விட்டேன்” என்றேன்.
”சரி பரவாயில்லை” என்று சொல்லிவிட்டு வீட்டிலிருந்த முட்டையை உடைத்துக் குடித்துவிட்டு தூங்கிப் போனான்.
என் அதிர்ஷ்டம் என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. படகு வலித்துக் கொண்டு போனால் கடல் குட்டையாகியதும் அது மூழ்கிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.
எப்படிக் கடப்பேன்?
(ஹரி ராஜா’வின் கூரை வீடுகளின் தொடர்ச்சியாகக் கட்டப்பட்டவை இந்த மாடி வீடுகள். கூரை வீட்டை மீண்டும் ஒருமுறை பார்க்க நீங்கள் கீழுள்ள இணைப்பின் வழிவாயக நுழையுங்கள்.)

Tuesday, December 22, 2015

சட்டம் - சிறுகதை - சத்யா

“ட்டப்... ட்டப்...”
துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது, இவன் ஜன்னலுக்குக் கீழே ஒளிந்துகொண்டான். இடுப்பை தடவிப்பார்த்தான். துப்பாக்கி நெருடியது. மெதுவாக வெளியே எடுத்து பக்கவாட்டில் நீட்டி பாதுகாப்பு விசையை நீக்கினான். மீசையைத் தடவியபடி காத்திருக்கத் தொடங்கினான்.
“ட்டப்... ட்டப்...”
துப்பாக்கி சத்தம் நெருங்கியது. சட்டென்று புரண்டுபடுத்து, முதுகை தரைக்குக்கொடுத்து, கால்களால் சுவற்றில் உதைத்து, அந்தபாசி படர்ந்தஈரமான தரையில் சர்ர்ரென்று வழுக்கிக்கொண்டு போனபடியே சுட்டான். ‘ட்டப்..’ நடுவிலிருந்தவன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விழுந்தான், ‘ட்டப்..’ இடதுபுறமிருந்தவன் கையிலிருந்த துப்பாக்கியைப் போட்டுவிட்டு வயிற்றைப் பிடித்தபடி விழுந்தான், ‘ட்டப்.., ட்டப்..’ வலதுபுறமிருந்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு திரும்பி ஜோடியாக விழுந்தனர். சட்டென்று ஒருமுறை புரண்டு படுத்து தன் அருகில் விழுந்த தோட்டாவைத் தவிர்த்துவிட்டு ஐந்தமாவனை நோக்கிச் சுட்டான், அவன் தலையை பின்னால் வெட்டிவிட்டு நெற்றியில் ரத்தத்தை தெறித்தபடி விழுந்தான். இவன் ஆசுவாசமாக துப்பாக்கியை இறக்கினான்.
‘ட்டப்..’
ஒரு தோட்டா இவன் தோளை உரசியபடி சென்றது. சட்டென்று தலையை நிமிர்ந்து பார்த்தான். பின்னால் ஒருவன் நின்றிருந்தான். சடாரென புரண்டு படுத்து துப்பாக்கி பிடித்த கையை தலைக்குமேல் வீசி அவனைக் குறிபார்..... ‘ட்டப்..’. இவன் துப்பாக்கி பறந்துபோய் விழுந்தது. கையில் அமிலம் பட்டதுபோல் எரிந்தது, கையை எடுத்துப்பார்த்தான், ஒரே ரத்தம், வலி தாங்க முடியாமல் ‘ஆ...’வென கத்தியபடி கையை உதறினான்.
முழித்துக்கொண்டான். உடலெல்லாம் வேர்த்திருந்தது. ‘ட்டப்... ட்டப்...’ ஜன்னல் அடித்துக்கொண்டிருந்தது. ‘கனவு’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். கை மட்டும் நிஜமாகவே வலித்தது.விளக்கைப்போட்டு கையைப் பார்த்தான், லேசாக வீங்கியிருந்தது. கனவு கண்டு சுவற்றில் குத்தியிருப்பதை உணர்ந்தான். கையை தடவி விட்டுக்கொண்டான். ‘ட்டப்..ட்டப்..’ இன்னும் அடித்துக்கொண்டிருந்த ஜன்னலை சாத்தி தாழிட்டான். கைகளை நீர் ஊற்றி கழுவினான். குளிர்ந்த நீர்வலிக்கு இதமாக இருந்தது.
‘ட்டப்... ட்டப்...’
மறுபடி ஜன்னல்கள் அடித்துக்கொண்டன, இந்தமுறை பக்கத்து அறையில். உஷாரானான்... சட்டென்று விளக்குகளை அணைத்துவிட்டு பாய்ந்துசென்று மேசைமேல் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தான். ‘கிளிங்..’ பாதுகாப்புவிசையை நீக்கினான். துப்பாக்கியை நீட்டியபடிபூனைபோல் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்துப் போனான். ஜன்னல் இன்னும் அடித்துக்கொண்டிருந்தது. ஜன்னலை நெருங்கி சட்டென்று பாய்ந்துதுப்பாக்கியை நீட்டியபடி ஜன்னலுக்கு வெளியே பார்த்தான், தாழ்வாரம் காலியாய் இருந்தது.துப்பாக்கியை தாழ்த்திவிட்டு இடதுகையால் ஜன்னலை கவனமாக சாத்தித் தாழிட்டான். புருவத்தை நெரித்தபடி துப்பாக்கியின் பாதுகாப்புவிசையை திரும்ப பூட்டி அதனாலேயே கன்னத்தை சொறிந்துகொண்டான்.
“மடார்....”
துப்பாக்கியை படுக்கையில் போட்டுவிட்டு படுத்தவனை மறுபடி இன்னொரு சத்தம் எழுப்பியது. டக்கென்று துப்பாக்கியை வாரிக்கொண்டு கட்டிலுக்குக்கீழே குதித்தான். பாய்ந்துசென்று தாழ்வாரத்தின் விளக்கைப்போட்டான். உள்ளேயிருந்து ஒன்றும் தெரியவில்லை. கதவைத்திறந்துகொண்டு தாழ்வாரத்தில் குதித்து நின்றான். நேராக நீட்டிய இவனது கையில் துப்பாக்கி மூக்கை நீட்டிகொண்டிருந்தது.
தாழ்வாரத்தில் யாரும் இல்லை, இரண்டு பூந்தொட்டிகள் மட்டும் உடைந்திருந்தன. மெதுவாக அடியெடுத்து காலால் பூந்தொட்டியை தள்ளிப்பார்த்தான். தாழ்வாரத்தின்வெளியே எட்டிப்பார்த்தான். எதோ பின்புறமாக அசைவதுபோல் தெரிந்தது. திடீரென தாழ்வாரத்தின் படிக்கட்டை ஒட்டியிருந்த இரும்புக்கதவு அடித்துக்கொண்டது. இரண்டடி முன்னாள் வைத்து தாழ்வாரத்தின் இரும்புச்சட்டத்தில் கையை வைத்து கால்களை லாவகமாக காற்றில் வீசி தாவி கீழே குதித்தான்.
அந்த நான்கடி உயர தாழ்வாரத்திலிருந்து குதித்து எழுந்து துப்பாக்கியை கையில் பிடித்தபடி பின்புறமாக ஓடினான். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் படிக்கட்டு வந்தது, சுற்றிலும் பார்த்தவன் மேலே எட்டிப்பார்த்தான். ஏதோ அசைவதுபோல் இருந்தது. முதல் தளத்துக்கு வந்தவன் சுற்றிலும் தேடிப்பார்த்தான். ஒன்றும் சிக்கவில்லை. சரி என்று மேலே மேலே தேடி பத்து தளங்களை தேடிவிட்டான். யாரும் சிக்கவில்லை.
கால்கள் சலித்து நெஞ்சை இழுத்துக்கொண்டு மூச்சு வாங்கியது. தாகத்தில் தொண்டை ஒட்டிக்கொண்டதுபோல் இருந்தது. அருகிலிருந்த வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு அப்படியே கொஞ்சம் விசாரிக்கலாம் என்று நினைத்தான். அழைப்புமணியை அடித்தான், யாரும் வரவில்லை, கதவைத்தட்டிப் பார்த்தான், “ம்ஹும்” பலனில்லை. இவன் காவல்துறை மூளையில் சந்தேகமணி அடித்தது. மெதுவாக பலகணியில் நடந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தான். இருட்டில் உள்ளே ஒருவன் தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. சந்தேகம் போய் தாகம் வந்தது, “ஏங்க..ஏங்க..” என்று கத்தினான். பலனில்லை. ‘அவன் தூங்குகிறானா, செத்துவிட்டானா?’ இவன் சந்தேக மூளை திரும்பியது. கொஞ்சநேரம் கத்திப்பார்த்துவிட்டு கோபம் அதிகமாகி ஜன்னலை ஓங்கி அடித்தான், இரண்டு மூன்று முறை அடித்தற்கு பலன் இருந்தது. உள்ளே இருந்தவன் முழித்துக்கொண்டான், விளக்கைப்போட்டுதனக்குள்எதோ பேசிக்கொண்டவனைப்பார்த்து இவன், “ஏங்க.. கொஞ்சம் தண்ணி வேணும் கதவ திறங்க” என்று அதிகாரமாய் சொன்னான். உள்ளே இருந்தவன் சாவகாசமாக எழுந்துவந்து, ஜன்னல் வழியாக இவனை முறைத்துவிட்டு ஜன்னலை சாத்திவிட்டுப்போனான்.
உள்ளே தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டது, இவன் இன்னொரு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தான். உள்ளே இருந்தவன் கை கழுவிக்கொண்டிருந்தான். இவனுக்கு அவமானமும் கோபமும் மாறிமாறி வந்தது, “ஏன்டா வெண்ணை, நான் இங்க தண்ணிக்கு தவிச்சுட்டு இருக்கேன், நீ அங்க கைய கழுவிட்டு இருக்க, மரியாதையா கதவை திறக்கறியா இல்லை உன்ன சுட்டுத் தள்ளவா?” ஜன்னலை அறைந்தபடி கத்தினான்.
உள்ளே இருந்தவன் இதைக்கேட்டு சட்டென்று திரும்பி ஓடிப்போய் விளக்குகளை அணைத்தான். ஜன்னல் வழியாக இருட்டில் இவன் உற்று நோக்கினான். உள்ளே இருந்தவனின் கரிய உருவம் லேசாக மேசையை நோக்கி நழுவி அங்கிருந்து எதையோ எடுத்தது. ‘கிளிங்..’ துப்பாக்கி விசை விலகும் சத்தம் கேட்டது. இவனுடைய காவல் மூளைக்கு புரிந்தது, ‘உள்ளே இருப்பவன் எதோ ஒரு சமூக விரோத கும்பலை சேர்ந்தவன், ஒருவேளை அவன்தான் தன்னை கொல்ல சற்று நேரம் முன்பு தன் வீட்டுக்கு வந்தவன்’. ஒரு முடிவெடுத்தவனாய் ஜன்னலுக்கு கீழே அமர்ந்தான் துப்பாக்கியை பக்கவாட்டில் நீட்டி பாதுகாப்பு விசையை நீக்கினான்.
அந்த இருட்டின் அமைதியாலும், நுணுக்கமாக கேட்டு பழகிய இவன் காதுகளாலும் அவன் காலடி ஓசையை கேட்க முடிந்தது. ‘இதோ வருகிறான், இன்னும் மூன்றடி.... இரண்டடி... அவ்வளவுதான்’ என்று கணக்குப் போட்டு சட்டென்று திரும்பி துப்பாக்கியை உள்ளே நீட்டினான். இவன் நெற்றியில் உள்ளே இருந்து நீட்டிக்கொண்டிருந்த துப்பாக்கிமுனை இருந்தது. அவன் முகத்தை ஏறிட்டான், இவன் கை துப்பாக்கியை நழுவவிட்டது. இவனுக்கு தலையை சுற்றியது. உள்ளே இருந்தவன் துப்பாக்கியை எடுத்துவிட்டு ஜன்னலை சாத்திக்கொண்டு போய்விட்டான். இவன் தளர்ந்துபோய் பலகணியின் இரும்பு சட்டத்தில் சாய்ந்து உட்கார்ந்தான்.
திடீரென எதோ நினைத்தவனாய் எழுந்து பலகணியில் எட்டிப்பார்த்தான். கீழே எதோ கூட்டமாய் இருந்தது. சட்டென்று படிகளில் தாவி இறங்கி கீழே ஓடினான். கூட்டத்தில் புகுந்துபோய் என்னவென்று பார்த்தான். எவனோ கீழே விழுந்திருந்தான். ஒருகாலை மடித்து, ஒரு காலை நீட்டி, ஒரு கையை இடுப்புக்குக் கீழே நீட்டிக்கொண்டு ஒரு கையை தலைக்கு மேலே நீட்டிஅந்த நிலையிலும் கையிலிருந்ததுப்பாக்கியை விடாமல் விழுந்து கிடந்தவனின் முகத்தை குனிந்து பார்த்தான்.
ஒரு பக்கம் ரத்தத்தில் மிதந்து கொண்டிருந்தது, இன்னொரு பக்கத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். ஆம் அதே முகம், இங்கே விழுந்து கிடக்கும், சற்றுமுன் ஜன்னலின் உள்ளே தெரிந்த, இவன் தினமும் கண்ணாடியில் பார்க்கும் இவனுடைய முகம். முகமெல்லாம் வேர்ப்பதுபோல் இருந்தது. இதயம் வேகமாக துடித்தது. திரும்ப படிகட்டில் ஏறி ஓடினான். ‘அவன காப்பாத்தனும்’ என்று சொல்லிக்கொண்டான். அந்த வீடை அடைந்து பலகணியில் குதித்து ஜன்னலில் எட்டிப்பார்க்க ஓடினான். ஓடிய அவசரத்தில் காலில் எதோ இடறி விழுந்தது, என்னவென்று திரும்பிப்பார்த்தான்.
இரண்டு பூஞ்சட்டிகள் உடைந்திருந்தன.
பலகணியின் விளக்கு எறிந்தது, “வேண்டாம் வேண்டாம் வராதே” என்று இவன் கத்தினான். கையில் துப்பாக்கியோடு உள்ளே இருந்தவனின் உருவம் பலகணியில் முளைத்தது. இவன்“ஓ...”வென்று அழுதபடி அவனைக் கட்டிப்பிடிக்கப் பார்த்தான், முடியவில்லை. அவன் இவனைத்தாண்டிப்போய் பலகணியின் இருப்புச் சட்டத்துக்கு வெளியே எட்டிப்பார்த்தான். “ஆங்.. அங்கதான்.. கீழ பாரு... கீழபாரு.. நான் செத்துக்கெடக்கறேன்பாரு” என்று ஆர்வமாக சொல்லியபடி இவனும் கீழே எட்டிப்பார்த்தான். கீழே தரையை துடைத்துப் போட்டதுபோல் இருந்தது.
“அய்யோ அய்யோ கீழே குதிக்காதடா...” என்று இவன் அலறியது அவன் காதில் விழுந்ததாக தெரியவில்லை. “ஓ..” வென்றுஅலறியபடிபலகணியின் இரும்புக்கதவில் இவன் தலையால் முட்டிக்கொண்டான். அவன் இவன் பக்கம் மெல்ல திரும்பிப் பார்த்தான். ஒரு எட்டு முன்னால் எடுத்துவைத்தான். இவன் ஆர்வமாக “வாடா.. வாடா.. இப்படியே படிக்கட்டு வழியா இறங்கி போயிடுவோம்...” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் பலகணியின் இரும்புச் சட்டத்தில் கையை ஊன்றி கால்களை காற்றில் லாவகமாய் வீசி தாவி குதித்தான்.

Thursday, December 17, 2015

நீ வருவாயென... – அஷ்ரப்

          அநேக மதிய வேளைகளில் என் வேலை அவனைப் பார்ப்பதுதான்என்னை அவன் பார்க்கப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். அவனை அவன்  சொந்தக்கார பொண்ணு ஒருத்தி  சுத்தி சுத்தி வருவா, இவன் அவளை அவ்வளவாக கண்டு கொள்வது போல் இல்லைநான் ஒரு ஆணை ரசிக்கின்றேன் என்று சொன்னால் என்ன நினைப்பார்கள். குறிப்பாக என் தோழியர்கள்.   நினைக்கட்டும் அவர்களுக்கும் ரசிக்கும் எண்ணம் இருக்கும், இல்லையென்றால் வேறுயாரையாவது ரசிப்பார்கள் அல்லது வேறு எதையாவது ரசிப்பார்கள்..

                ஆனால் இரண்டு நாட்களாக அவன் வரவில்லை என்பதுதான் எனக்கு வருத்தம். என்ன செய்ய? யாரிடமும் போய் கேட்கமுடியவில்லை. சொல்லவும் முடியவில்லை. என் வகுப்பறை சன்னலில் வானம் முதல் கானகம் வரை தெரியும் ஆனால் எனக்கு அந்த சன்னல் அவனைப் பார்ப்பதற்கு மட்டுமே.. ஏதேனும் பிரச்சனையா என்று தெரியவில்லை, அவனையும் காணவில்லை அந்த பெண்ணையும் காணவில்லை...

                ஒரு வேளை அப்படி இருக்குமோ. அப்படி ஆகியிருந்தா நாம என்ன செய்ய முடியும்இரண்டு பேரும் சேர்ந்து நடந்து வருவார்கள். நான் அவனை மட்டும் பார்த்து கொண்டிருப்பேன்.

                ஏன் இப்படி எல்லாம் எண்ணங்கள் ஓடுகிறது என்று நினைக்கையில், அருகில் வந்துயேய் வாத்தி வந்துட்டார்யாஎன்று சொல்லியதும் நிகழ்வுகளை கவனிக்கலானேன்.

             கரும்பலகை வெள்ளை ஜிலேபிகளால் நிரம்பிக் கொண்டிருந்தது.

அவன் தலை, அழகான சுருள்முடி, கூர்மையான பார்வை, அவன் ஏதேனும் சத்தம் கேட்டு திரும்புவதும் ஒரு அழகுதான்.

                அவன் இருக்கும் நாட்களில் எப்படியும் மூன்று அல்லது நான்கு முறை நான் இருக்கும் திசை நோக்கி திரும்புவான்அவன் என்னை பார்க்க வேண்டும் என்று திரும்பியிருக்க மாட்டான். ஆனால் நான் என்னை பார்க்கவே அவன் திரும்புகிறான் என்று திரும்ப திரும்ப நினைப்பேன்.

                மாலை நேர விடுதலை மணி ஒலித்தது. கிளம்ப தயாராகும் போதும் அந்த சன்னலை பார்த்தவாறு நாளையாவது வருவான் என்று கிளம்பிவிட்டேன்எனக்கு பின்னால்இவன் மனுசங்களோட பழகுவானா?என்று என் நண்பர்கள் கிண்டலடிப்பது கேட்டது.

Tuesday, December 15, 2015

படைப்பரங்கமும் கலந்துரையாடலும்

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
படைப்பரங்கம் மற்றும் கலந்துரையாடல்

அருப்புக்கோட்டை – தமிழ்க்குமரன் இல்லம்
2015 டிசம்பர் 19 – சனிக்கிழமை – மாலை 5.30மணி

‘சாதியும் வர்க்கமும்’ என்ற பொதுத் தலைப்பிலான கலந்துரையாடலின்…
முதல் அமர்வில்
துணைத் தலைப்புகளிலான விவாதக் குறிப்புகளை முன்வைக்க…

தோழர் முனியசாமி   – கிராமப்புறங்களில் வர்க்கம்
தோழர் மாணிக்       - மின்னணு ஊடகங்களில் (இணையத்தில்) சாதியம்
தோழர் அஷ்ரஃப்       - மின்னணு ஊடகங்களில் (இணையத்தில்) வர்க்கம்

கலந்துரையாடலை ஒருங்கிணைக்க தோழர்கள் ரமேஷும் வருணும்

வரவேற்கவும் நன்றி கூறவும தோழர்கள் தமிழ்க்குமரனும் கேகே’யும்

Wednesday, December 9, 2015

கலந்துரையாடல்...

2015 டிசம்பர் 5ஆம் நாள் நடைபெற்ற மாவிபக படைப்பரங்கில் தோழர் ஸ்ரீபதியின் சிறுகதை வாசிக்கப்பெற்றது.
தோழர் தமிழ்க்குமரனின் நாவல் பகுதி வாசிக்கப்பெற்றது.
மழை பெய்த போதிலும்கூட கூட்டத்தில் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
கலந்துரையாடலுக்கான தளத்தை தேர்வு செய்வதற்கான கலந்துரையாடலில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி ‘சாதியும் வர்க்கமும்’ என்பதை மையமாகக் கொண்டு இனிவரும் கூட்டங்களில் தோழர்கள் கீழ்கண்ட தளங்களில் கலந்துரையாடலுக்கான தங்களின் விவாதக்குறிப்புகளை முன்வைப்பார்கள்.

தோழர் முனியசாமி   – கிராமப்புறங்களில் வர்க்கம்
தோழர் மாணிக்       - மின்னணு ஊடகங்களில் சாதியம்
தோழர் அஷ்ரஃப்      - மின்னணு ஊடகங்களில் வர்க்கம்
தோழர் ஸ்ரீபதி         - அடையாளங்களை அழித்தல்

ரமேஷ் உள்ளிட்ட பிற தோழர்கள் தங்களுக்கான தளத்தினை விரைவில் கூறுவதாகக் கூறியிருக்கிறார்கள்.
பிற தோழர்களும் தங்களுக்கான தலைப்புகளைத் தெரிவிக்கலாம்.
அடுத்த கூட்டம் 2015 டிசம்பர் 19ஆம் நாள் சனிக்கிழமை மாலை நடைபெறும்.

இடம் தமிழ்க்குமரன் இல்லமாக இருக்கலாம். பின்னர் உறுதி செய்யப்படும்.

Thursday, December 3, 2015

படைப்பரங்கமும் கலந்துரையாடலும்

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
படைப்பரங்கமும் கலந்துரையாடலும்

2015 டிசம்பர் 5, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு

வரவேற்க : தோழர் தினகரன்
நன்றிகூற : தோழர் ராஜ்
படைப்பரங்கை ஒருங்கிணைக்க : தோழர் கேகே
கலந்துரையாடலை ஒருங்கிணைக்க : தோழர் முனியசாமி

நவம்பர் 22 நிகழ்வு பற்றிய மீள்பார்வை
படைப்பரங்கம்
வரும் நாட்களின் கலந்துரையாடலுக்கான தலைப்புகளை இறுதிப்படுத்தல்
மேலும் சில நாடகங்களுக்கான பகிர்தலும், நாடகங்களை ஆவணப்படுத்தல் தொடர்பான உரையாடலும்

அனைவரையும் தோழமையுடன் வரவேற்கும்
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
+91 94431 84050 & +91 94421 84060


Monday, November 23, 2015

(தேடாமல் கிடைத்த) கவிதை - ரமேஷ்

ஆழ்ந்து நோக்குகையில்
சுழிவுகள் புலப்படும்
சிலபோது…

நகரும் குழிகள்
பயமுறுத்தும்
உற்று நோக்கலுக்குப்பின்
வாய்கள்
தரையாய் தோன்றும்

உதிர்ந்த இழைகள்
காட்சிப்பிழை

சுழியிலிருந்து தொடரும்
பெரும் வட்டங்கள்
காணாமல் போனது அனைத்தும்

வலிந்து திரும்புகையில்
காலில் அகப்பட்டது
சுழி.

-    (என்றோ எழுதியது)

‘நிக்ரகம்’ - நிகழ்துதலும் - நிகழ்த்துகளமும்...







நன்றி : நாராயணனுக்கும் சம்சுதீன் ஹீராவுக்கும்

Saturday, November 21, 2015

வரவேற்கிறோம்...

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் நடிப்புச் சுதேசிகள் கலைக்குழு நிகழ்த்தும் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் ‘நிக்ரகம்’ நாடகம் நடைபெற உள்ளது.
அனைவரையும் வரவேற்கிறோம்...

Monday, November 16, 2015

ஆர்டருக்காகக் காத்திருப்பவர்கள் - மதிகண்ணன் - சிறுகதை

அஞ்சு வருஷம் இருக்கும். அவ கல்யாணத்தன்னிக்கு அவளைக் கடைசியாப் பாத்தது. கல்யாணத்துக்கு என்ன பரிசு குடுக்கலாம்ன்னு ஒருநாள் பூராம் யோசிச்சு ஒரு முடிவுக்கும் வரமுடியாமப் போச்சு. மறுநாள் கைவினைப் பொருள்கள் விக்கிற கடைக்குள்ள நுழையும்போதே கண்ணுலபட்ட தாஜ்மஹால் மனசைப் பறிக்க, அதையே அவளுக்கு திருமணப் பரிசாக் குடுத்தேன். தாஜ்மஹால் குடுக்கலாமா வேணாமான்னு ரொம்பவெல்லாம் யோசிக்கல. தாஜ்மஹாலுக்குக் கீழ எங்க ட்ராவல்ஸோட விசிட்டிங் கார்ட ஒட்டி வச்சிருந்தது எவ்வளவு நல்லதாப் போச்சு. அதுல இருந்த நம்பரப் பாத்துட்டுத்தான் அவ போன் பண்ணியிருக்கா. நாளைக்கு எங்க வீட்டுக்கு வர்றதாச் சொல்லியிருக்கா. அவ பேசுன நம்பருக்குக் கூப்புட்டுப் பாப்பமுன்னு பாத்தா, எப்பக் கூப்புட்டாலும் அந்தக் கம்பெனிப் பொண்ணு குறுக்க புகுந்து ‘நெட்ஒர்க் பிஸி’ ‘நெட்ஒர்க் பிஸி’ன்னு சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டு இருக்கு. கேக்குற எனக்குத்தான் சலிப்பா இருக்கு. இனிய குரல்தான். இருந்தாலும் எரிச்சலாயிருக்கு. என் ப்ரண்டோட பேசுறதுக்குத் தடையா அந்தக் குரல் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டிருக்கு. தடையின்னாலும் மீறமுடியாத தடை. எதிர்வினையாற்ற எந்த வாய்ப்பும் இல்லாத இப்படியான தொழில்நுட்பச் செயல்திட்டங்களுக்கு எதிரா நாம என்னதான் செஞ்சுற முடியும்.
மத்தியானம் சாப்புட வரும்போது “ஒன் ஃப்ரண்டு பாத்திமா ஃபோன் பண்ணுச்சு. நம்ம ஊரு என்ஜினியரிங் காலேஜில அவுக வீட்டுக்காரருக்கு ஏதோ வேலை இருக்காம். நாளைக்கு ஆத்தாங்கர பள்ளிவாசலுக்குப் போகணுமாம். சாயங்காலமா பேமிலியோட நம்ம வீட்டுக்கு வருதாம்”ன்னு சொல்லிட்டு, இவர்பாட்டுக்கு சவாரி இருக்குன்னு குற்றாலம் போயிட்டாரு. நாளைக்குக் காலையிலதான் வருவாரு. இடையில பேசுனப்பகூட நம்பர் சரிதானான்னு அவருகிட்ட கேட்டேன். இதே நம்பர்ன்னுதான் சொல்றாரு. சரி இருக்கட்டும். அதான் நாளைக்கு வர்றாளேன்னு நினைக்கவும் முடியவில்லை. ஒரே பரபரப்பா இருக்கு.
கோட்டைமேட்டுல ‘விஏஓ’வா இருந்த அப்பாவுக்கு கடலூர் பக்கத்தில மாற்றல் வந்ததுனால, நாங்க குடும்பத்தோட சிக்கந்தர் சாவடிக்கு குடிபோனோம். சிக்கந்தர் சாவடியில இருந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியில நான் புதிய மாணவியாக ஒன்பதாம் வகுப்புல காலடி எடுத்துவைச்சப்ப, எனக்குக் கிடைச்ச தோழி பாத்திமா. இன்னொருத்தி ஸ்டெல்லா. இந்த ரெண்டுபேரையும் தவிர சொல்லிக்கிற மாதிரி தோழிகள்ன்னு யாரும் கிடையாது. ஸ்டெல்லா காலேஜ்ல படிச்சுக்கிட்டிருந்தப்ப அவ அப்பா இறந்துட்டார். அம்மா திருச்சபை நடத்துற அனாதை இல்லத்தில சமையல் வேலைக்குப் போயிட்டாங்க. ஸ்டெல்லா விடுதி மாணவியாயிட்டா. அவளோட படிப்புச்செலவ திருச்சபை பார்த்துக்கிருச்சு. படிச்சு முடிச்சதும், கன்னியாஸ்த்திரியா திருச்சபையின் சேவைக்காகன்னு ஸ்டெல்லா தன்னையே ஒப்புக்கொடுத்துக்கிட்டா. பி.எட். முடிச்சு இப்ப பாண்டிச்சேரியில ஒரு கான்வெண்ட்டுல டீச்சரா இருக்கா. போனவருஷம் கோட்டைமேட்டுக்கு ஒரு கல்யாணத்துக்காகப் போனப்ப பாத்தேன். எம்ஃபில் படிச்சுக்கிட்டு இருக்குறதாவும் சீக்கிரமே அதே கான்வெண்டுல ப்ரின்சிபாலா ஆயிருவேன்னும் சொன்னாள். சம்பளம்பத்திக் கேட்டதுக்கு, வழக்கம்போல சத்தமில்லாமச் சிரிச்சிக்கிட்டே, “தேவையில் இருக்கிறவங்களுக்காக உழைக்கிறது வேலை இல்லை, சேவை. என்னோட ஆசிரியப்பணி சேவை”ன்னுசொன்னா.  அவ சொன்னப்ப எனக்கு என்னமோ மாதிரி இருந்துச்சு. ஆனா, அவசொல்லுற விஷயத்துல  அவ உறுதியா இருக்கான்றது நல்லா தெரியுது. நமக்குத்தான் மனசு கெடந்து அடிச்சுக்கிறுது. சரி அவளுக்கு விதிச்சது அவ்வளவுதான்னு நெனச்சுக்கிட்டேன்.
பன்னண்டாப்பு முடிச்சதும் எனக்கு நல்ல வரன் வந்துச்சுன்ற காரணத்துக்காக நானு குடும்பத்தலைவியா மாறி கீழக்கரையில குடிபுகுந்தேன். பாத்திமா பி.இ. முடிச்சுட்டு ஒரு இன்ஜினியர் கையப்பிடிச்சா. அவளோட கல்யாணத்துக்குப் பிறகு நாங்க ரெண்டுபேரும் தொடர்பு எல்லைக்கு வெளியில இருந்தோம். இப்ப தொடர்பு எல்லைக்குள்ள மட்டுமில்ல எங்க வீட்டிற்கும் வரப்போறா. மூன்றாம் வகுப்புல அடியெடுத்து வச்சுருக்குற என் மகள் பவானியப் பள்ளிக்கூடத்திலயிருந்து கூட்டிட்டு வரும்போது பாத்திமா வர்றதாச் சொன்னேன். “பாத்திமா யாரும்மா?”ன்னு பவானி கேட்ட கேள்விக்கு “பிறகு சொல்றேன்”ன்னு பதில் சொல்லி வச்சேன். சாயங்காலத்தில இருந்து இரவு படுக்கைக்குச் போறதுக்குள்ள, இருபது முறையாவது சலிப்பற்ற அந்தப் பெண்ணின் குரல செல்பேசியில கேட்டேன். ராத்திரி இட்டிலியை ஊட்டிக்கிட்டிருக்கும்போது மறக்காம பவானி கேட்டாள் “பாத்திமா யாரும்மா?”
“என்னோட க்ளாஸ்மேட்”
“பக்கத்து சீட்டா…?”
“ம்… சுந்தர்மாமா கல்யாணத்துக்குப் பாண்டிச்சேரி போகும்போது பார்த்தோமே… கான்வெண்ட் மிஸ்… ஸ்டெல்லா ஆன்ட்டி… அவங்க, நானு, பாத்திமா மூனு பேருமே ஒரே டெஸ்க்”
கொஞ்ச நேரம் யோசிச்ச பவானி… “ம்… ப்ரௌன் கலர்ல நீளமா முழுக்கை நைட்டி போட்ருந்தாங்கல்ல அந்த ஆன்ட்டியா?” என்றாள்.
ஸ்டெல்லா போட்டிருந்த கன்னியாஸ்த்திரிகளோட அங்கியைத்தான் பவானி அப்படிக் கேட்டாள்ன்றத புறிஞ்சுக்கிட்டு “ம்… அவங்கதான்…” என்றேன்.
“பாத்திமா ஆன்ட்டியும் அதுமாதிரிதான் ட்ரஸ் போட்டிருப்பாங்களா?”
“அப்புடி இல்லம்மா… அவங்க நன்… அதுனால அப்படி ட்ரஸ் பண்ணியிருந்தாங்க… இவங்க முஸ்லிம்” என்று மகளுக்கு நான் விளக்கம் சொன்னோன்.
“அப்படீன்னா… இவங்க தலைய மூடுற நைட்டி போட்டிருப்பாங்க…” என்ற பவானி கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ”ரெண்டும் ஒன்னுதாம்மா… கலர்தான் வேற…” என்றபடி சிரித்தாள். மகளின் அந்தச் சிரிப்பு என்னை மிகவும் தொந்தரவு செய்தது. கீழக்கரைக்கு நான் கல்யாணமாகி வந்தப்ப இருந்ததவிட இப்ப பர்தா போடும் பெண்களோட எண்ணிக்கை அதிகம். சரியாச் சொன்னா பர்தா போடாத முஸ்லிம் பெண்களை இப்ப வெளியில எங்கயும் பார்க்க முடியுறதில்ல. முந்தியெல்லாம் அப்புடி இல்ல. இன்றைய கீழக்கரையோட நிலைமைதான் நான் படிக்கிற காலத்துல சிக்கந்தர் சாவடியில. இப்படி மனம்போனபடியெல்லாம் யோசிச்சுக்கிட்டே ராத்திரி வேலையெல்லாம் முடிச்சுட்டு படுக்கைக்குப் போனேன். படுக்கையிலயும் பவானி பாத்திமா பத்திக் கேட்டாள்.
“பாத்திமா ஆன்ட்டி வீட்டுல குட்டிப் பிள்ளைங்க இருக்காங்கலாம்மா?”
“தெரியலடி…”
“ஃப்ரண்டுன்னு சொன்ன…”
“ஃப்ரண்டுதான்… ஆனா பாத்து ரொம்ப நாளாச்சு. அவ கல்யாணத்தன்னைக்குப் பாத்தது”
“நாளைக்கு குட்டிப் பிள்ளையக் கூட்டிட்டு வருவாங்களா?”
“கூட்டிட்டு வருவாங்க… இப்ப நீ தூங்கு…”ன்னு சொன்னதுக்கப்பறமும் அவ கேட்ட சின்னச் சின்னக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லித் தூங்க வைச்சேன். பவானி தூங்கினபிறகு அவ கேட்ட கேள்விகளால நான் தூக்கமில்லாதவளா ஆயிட்டேன். என் மனசு பழைய விஷயங்கள அசைபோட ஆரம்பிச்சுச்சு.
சுனாமிக்கு அப்புறம் வந்த பொங்கல் லீவு முடிஞ்சு பள்ளிக்கூடத்துக்குத் திரும்பின மறுநாள் காலையில கிளாசுக்கு ஒரு சுற்றறிக்கை வந்துச்சு. ‘நாளை மாலை 4 மணிக்கு சுனாமி பற்றிய விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி இருப்பதால், நாளை பள்ளி 6 மணிக்குத்தான் முடியும். மாணவிகள் வீட்டில் தகவல் சொல்லிவிட்டு வரவேண்டும்’ன்னு அந்தச் சுற்றறிக்கை வலியுறுத்திச் சொல்லுச்சு. சுனாமி வந்து ஒரு மாசம்கூட ஆகல. அப்பயெல்லாம் எங்க பள்ளிக்கூடத்துக்கு யாராவது வந்து எதையாவது குடுத்துக்கிட்டே இருந்தாங்க. ஏதாவது சொல்லிக்கிட்டே இருந்தாங்கள். ஏதாவது செஞ்சுக்கிட்டே இருந்தாங்க. அப்படி வர்றவங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து பிள்ளைகள சகஜவாழ்க்கைக்குக் கொண்டு வர்றது அவசியம்ன்னு எல்லாப் பள்ளிக்கூடத்துக்கும் உத்தரவு போட்டிருந்ததா சொன்னாங்க. சுனாமியால அப்பாவ அம்மாவ அக்காவ தம்பிய சொந்தக்காரங்கள நண்பர்கள இழந்த பிள்ளைகள் நிறையப்பேரு எங்க பள்ளிக்கூடத்துல இருந்தாங்க. வீடு வாசல மட்டுமில்லாம பள்ளிக்கூடப்பையைப் பறிகொடுத்தவங்களுங்கூட எங்க பள்ளிக்கூடத்துல நிறையப் பேர் இருந்தாங்க. எங்கள் பள்ளிக்கூடப் பிள்ளைகள்லயும்கூட மூனுபேரு சுனாமியினால இறந்துபோயிருந்தாங்க. பாதிக்கப்பட்டவங்களோட சோகம் எங்க எல்லாரையும் சேர்த்துப் பிடிச்சிருந்துச்சுன்னுதான் சொல்லணும். சோகபூதங்கள் பள்ளிக்கூடத்து மாடியில சுத்திலும் நின்னுக்கிட்டு அதுகளோட நிழல எங்க மேல விழவச்சு அப்புடியே எங்களையெல்லாம் இருட்டுல வச்சிருந்தமாதிரி இருந்துச்சு. பள்ளிக்கூடத்து ரூமெல்லாம் இருட்டு. எங்கள் முகமெல்லாம் இருட்டு. யாரும் யாரையும் பாத்து சிரிக்கிறதுன்றது மறந்து போன நாட்களா இருந்துச்சு அந்த நாட்கள். எங்க டீச்சர்ஸும் யாரையும் கண்டிக்காம, எதையும் கண்டுக்காம அமைதியாப்பேசி, பாடங்களையெல்லாம் அப்படியே நகர்த்தி விட்டாங்க.
சுனாமி விழிப்புணர்வுன்னு சொல்லிக்கிட்டு பள்ளிக்கூடத்துக்கு வர்றவுங்க ஏற்கனவே உள்ளூர் சோகத்தோட இருக்குற எங்க மேல வெளியூர் சோகத்தையும் எறக்கி வச்சுட்டு எல்லாத்தையும் மறந்துட்டு நல்லா இருங்கன்னு சொல்லிட்டுப் போயிக்கிட்டிருந்தாங்க. அதுலயும் சிலரு அவசர அவசரமா மிஷின் மாதிரி வந்து எங்களை வரிசையாக்கி, ஏந்திய எங்கள் கைகள்ல பிஸ்கட் பாக்கெட்களை வைச்சுட்டு அதே அவசரத்தோட வெளிய போனாங்க. இதன் மூலமா தங்கள் கடமைய நிறைவேத்திட்டதா அவங்க நெனச்சிருப்பாங்க போல. பிண ஊர்வலத்தில ஆவி வீடு திரும்பாம இருக்குறதுக்காக வழிநெடுக கடுகையும் பொரியையும் விதைச்சுக்கிட்டே போவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். எங்க பள்ளிக்கூடத்துக்கும் வீடுகளுக்கும் இடையில நாங்க விதைச்சுட்டுப்போன பிஸ்கட் பாக்கெட்டுகல்லாம் யாருக்கு வழிகாட்டுறதுக்குன்னு தெரியல. வழியெல்லாம் இறைஞ்சு கெடக்குற பிஸ்கட் பாக்கெட்டுகள நாய்கள்கூட சீண்டல. இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்தபிறகும்கூட பிஸ்கட் விநியோகம் நிக்கவேயில்ல. தொடர்ந்து யாராவது வந்து எதையாவது கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. எங்களுக்கு உண்மையிலேயே என்ன தேவைன்றத யாருமே கேட்கல. பேரிடர் நெருக்கடி முடிஞ்சு, வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பிக்கிட்டிருக்கிற சூழ்நிலையில பள்ளிக்கூடங்கள்ல பிஸ்கட் பாக்கெட் குடுக்கிறது எந்தவகையான நிவாரணம்ன்னு இன்னைக்கு வரைக்கும் எனக்குப் புரியல.
பாதிக்கப்பட்டவங்களுக்கான நிவாரணம்ன்னும் மறுவாழ்வுன்னும் சொல்லிக்கிட்டு சுனாமியைக் காட்டிலும் அதிகமாச் சுருட்டுன சிலரையும் எங்களுக்கு அப்பவே தெரியும். ‘உணர்வுகளின் விளைச்சலை அறிவால அறுவடை’ செய்றதா நினைக்கிற அவங்கக்கிட்ட நாங்க என்ன சொல்ல முடியும். பொய்யா ’நன்றி’ சொல்லி அனுப்பி வச்சோம். மனசார யாருக்கும் நன்றி சொன்னதில்ல. இப்படி இருந்த நேரத்துலதான் ‘சுனாமி விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி’ன்ற அறிவிப்பு. அவங்களும் பிஸ்கட் பாக்கெட் தரலாம். யாரும் பார்க்காம இருக்கும்போது அதையெல்லாம் எறியுறதுக்கு இடம் தேடணும். பள்ளிக்கூடத்துக்குள்ள பிஸ்கட் பாக்கெட்களை போடக்கூடாதுன்னு ஏற்கனவே தடைவிதிச்சிருக்காங்க.
மறுநாள் நாலு மணிக்கு முன்னாலயே எங்க பி.டி.யோட விசில் சத்தம் எங்களயெல்லாம் கிரவுண்டுல நெட்டு நெட்டா நிறுத்தி அப்படியே உட்கார வச்சுது. ஜனவரி மாசம்னாலும்கூட வெயில் சுள்ளுன்னு உரைச்சுச்சு. பொம்மலாட்டக்குழு வந்துட்டாங்க. நாங்க உட்கார்ந்திருக்கிறதப் பாத்துட்டு அவங்களுக்குள்ள ஏதோ பேசிக்கிட்டாங்க. அதுல ஒருத்தர் பி.டி.கிட்டயும் பிறகு எச்.எம்.கிட்டயும் எங்களக் காட்டி ஏதோ சொன்னார். பிறகு பி.டி. ஊதி ஊதி எங்கள நிழல் இருந்த இடத்துக்கு நகத்துனாங்க. இருந்தாலும் சிலர் வெயில்லதான் உக்காந்திருந்தாங்க. வரவேற்புரை, எச்.எம்.மோட தலைமையுரை, அது இதுன்னு அஞ்சு நிமிஷம் வழக்கம்போல சுனாமி கிளிசரின எங்க கண்கள்ல தடவுற வேலையப் பாத்தாங்க.
“மேடை அமைக்க இன்னும் சிறிது நேரம் ஆகும் என்பதால் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு அம்புலி அவர்கள் இப்போது உங்கள் முன்னே சுனாமி பற்றி கருத்துரை வழங்குவார்”ன்னு  எங்கள் தமிழம்மா சொன்னதும் நாங்க ரொம்பவே பயந்து போயிட்டோம். வெளுத்துப்போன சாம்பல் கலர் சட்டையை கருப்பு பேண்டுக்குள்ள ‘இன்’ பண்ணியிருந்த அவர் எங்கள் முன்னால வந்து நின்னார். இவருதான் எங்கள நிழல்ல உட்கார வைக்கிறதுக்காக எச்.எம்.கிட்ட பேசுனவர். பாக்கெட்டுல இருந்த கர்ச்சீப்பை எடுத்து அழுத்தமாக முகத்தத் துடைக்சுக்கிட்டார். கண்களையும் துடைச்சுக்கிட்டார். சோகத்தப் பிழியறதுக்கு தயாராகுற அந்த மனுஷனை காதால் எதிர்கொள்ள நாங்களும் தயாராயிக்கிட்டிருந்தோம்.
“வணக்கம். தலைவர் உள்ளிட்ட ஆசிரியைகளுக்கும், குழந்தைகளுக்கும் வணக்கம். பொம்மலாட்டம் பார்க்கலாம் என வந்த உங்களை காக்க வைப்பதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். பொம்மலாட்டம் எப்படி இருக்கும்? அதைத்தான் பார்க்கப் போறோமே. இப்ப நாம வேற சில விஷயங்களைப் பார்க்கலாம்…”ன்னு ஆரம்பிச்சு அவர் பேசிக்கிட்டிருந்தார். அன்னைக்கி என்ன பேசுனார்ன்னு இன்னைக்கி ஞாபகமில்லைன்னாலும் அவரு பேசத்தொடங்குன கொஞ்ச நேரத்திலயே எங்களக் கவ்விப்பிடிச்சு, தன்னோட கடவாயில ஒதுக்கியிருந்த சோக பூதத்தோட பிடியில இருந்து நாங்க கொஞ்சங் கொஞ்சமா தப்பிச்சு இயல்பான நிலைக்கு வர்றத எங்களால உணர முடிஞ்சுச்சு. நிச்சயமா அவரு சுனாமி பத்தி ஏதும் பேசல.
“இப்ப ஒரு சின்ன விளையாட்டு… வேற ஒன்னும் இல்லை. நான் உங்கள ஏமாத்த முயற்சி பன்றேன். நீங்கள் ஏமாறாம இருக்கணும். இதுதான் விளையாட்டு… ரூல்ஸ விளைடலாமான்றத முடிவு பண்ணதும் சொல்றேன். விளைடலாமுல்ல…”
விளையாட்டுன்னு சொன்னதும் நாங்க கொஞ்சம் உற்சாகமாயிட்டோம்ன்னுதான் சொல்லணும். “விளையாடலாம்…”ன்னோம். நீண்ட நாள் சோகம் எங்கள் வார்த்தைகள்ளல அப்பியிருந்துச்சு.
“எல்லோரும் கலந்துக்கலாம்… எல்லோரும்னா எல்லோரும்தான்… குழந்தைகளிடம் தோற்கத் தைரியமிருக்கும் ஆசிரியைகளும் கலந்து கொள்ளலாம். குழந்தைகள்தான் அவங்கள விளையாடக் கூப்பிடணும்”ன்னு அவர் சொன்னதும் டிசம்பர் 26க்கு முந்தைய நாட்கள்ல இருந்த அதே பழைய உற்சாகக் குரல்ல எங்க டீச்சர்ஸ நாங்க விளையாடக் கூப்பிட்டோம். எங்க சந்தோஷத்தப் பார்த்ததாலயோ இல்லையின்னா வேற வழியில்லாமயோ எங்க எச்.எம்.ஐயும் பி.டி.யையும் தவிர மத்த எல்லாரும் விளையாட்டுல கலந்துக்கிட்டாங்க. விளையாட்டு தொடங்குறதுக்கு முன்னால மேடை போட்டுக்கிட்டிருந்தவங்கள அவர் திரும்பிப் பார்த்தார். அவங்க “15”ன்னாங்க.
“இன்னும் கால்மணி நேத்தில் பொம்மலாட்டம் தொடங்கவிருக்கிறது. அதுவரைக்கும் நாம விளையாடலாம். விளையாட்டின் பெயர் நான் ஆணையிடுகிறேன்…. …. …. …. விளையாட்டு முடிந்ததாக நான் அறிவிக்கின்ற வரைக்கும் விதிகளை கண்டிப்பா பின்பற்றனும்றத மறந்துறாதீங்க”ன்னு சொல்லி விளையாட்டைத் தொடங்கினார். ரூல்ஸக் கேட்கும்போது ரொம்ப ஈஸியாத் தெரிஞ்சுச்சு. விளையாடும்போதுதான் பிரச்சனை என்னன்றதே புரிஞ்சது. அவரு மொதல்ல சொன்ன மாதிரி எங்கள ஏமாத்த முயற்சி பண்ணல. நிச்சயமா ஏமாத்திக்கிட்டிருந்தார். அடிக்கடி நாங்க ரூல்ஸ மீறுனதுனாலயே ‘அவுட்’ ஆனோம். கூட்டம் கூட்டமா ‘அவுட்’ ஆனோம். ஒருதடவை மொத்தமா நிறையப் பேர் ‘அவுட்’டானதும் விளையாட்டை முதல்லயிருந்து தொடங்கினார். எங்க டீச்சர்ஸ் ரொம்ப வேகமா ‘அவுட்’டானாங்க. டீச்சர்ஸ் ‘அவுட்’டாகுற ஒவ்வொரு தடவையும் நாங்க சந்தோஷமா விதவிதமா சத்தம் போட்டோம். விளையாட்ட அவரு நடத்தினவிதம் விளையாடத் தூண்டுறமாதிரி இருந்துச்சு. யாராவது ‘அவுட்’ ஆகுற ஒவ்வொரு தடவையும், அவுங்க அவுட் ஆனதுக்கான காரணமா அவரு சொன்னதெல்லாம் இன்னைக்கும் என் காதுல அப்படியே கேக்குது.
“உணர்ச்சி வசப்படும்போதெல்லாம் தோற்றுப் போக வாய்ப்பிருக்குன்றத மறக்காதீங்க”
“நமக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கிறதுதான்… தோற்றுப் போறதுக்கு முக்கிய காரணம்”
“பார்க்கிற விஷயம் ரொம்பப் பாதிக்கும் மகளே. நாம்தான் கவனமா இருக்கணும்”
“நம்மள அளவுக்கு அதிகமா புகழ்ந்தா… கவுத்தப் போறாங்கன்னு அர்த்தம்… ஜாக்கிரதை”
இப்படி நிறைய. எங்கள்ல யாராவது ஒருத்தர்கிட்ட அவரு ஏதாவது சொல்லும்போது ரொம்ப இயல்பா ‘மகளே’ன்னு கூப்பிட்டுப் பேசுனது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. ஏன்னா, அப்படிக் கூப்பிடற யாரையும் நான் இன்னைக்கிவரைக்கும்கூட பாத்ததில்ல.  பாத்திமாவையும் என்னையும் தவிர எல்லோரும் அவுட்டாயிட்டாங்க. நாங்க ரெண்டு பேரு மட்டும்தான் நிக்கிறோம். ஒரே நடுக்கமா இருக்கு. பாத்திமாவ ஆதரவாப் பிடிச்சுக்கிறலாமுன்னு அவ கையத் தொட்டா பயந்து போயி உதறிவிடுறா. அவ எப்புடிப் பயந்துக்கிட்டிருந்தாளோ.
“இந்த விளையாட்டைப் பொறுத்தவரைக்கும் நான் எங்கேயும் யாரையும் ஜெயிக்க விடுறதில்லை. ஏன்னா… உங்கள்ல யாராவது ஜெயிச்சா நான் தோற்றுப் போனதாத்தானே அர்த்தம்”ன்னு சொல்லிட்டு வாட்டர் பாட்டில எடுத்து தண்ணி குடிச்சார்.
முதல்லயே அவுட்டாயிருந்தா எந்தப் பிரச்சனையும் இல்ல. கூட்டத்தோட கூட்டமாப் போயிருக்கும். இப்ப கடைசியா மாட்டிக்கிட்டதால நாங்க ரெண்டு பேரும் எப்புடி அவுட்டாகப் போறோம்ன்றது எல்லாருக்கும் விளாவாரியாத் தெரியப்போகுது. விழுகுறதுல எந்தப் பிரச்சனையுமில்ல. அது மத்தவுங்களுக்குத் தெரிஞ்சுரும்றத நெனைச்சாத்தான் வெட்கமா இருக்கு.
“இருந்தாலும், இங்க நிற்கின்ற இரண்டு குழந்தைகளையும் வெற்றி பெற்றவங்களா அறிவிச்சு, நான் தோற்றதா நீங்க நினைச்சாலும் பரவாயில்லை, விளையாட்டை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். வெற்றி பெற்றவர்களுக்காக ஒரு சிறிய பரிசு காத்திருக்கிறது. பரிசைப் பெற இருவரையும் மேடைக்கு முன் அழைக்கிறேன்”ன்னு சொல்லிட்டு திரைபோட்டு மூடியிருந்த பொம்மலாட்ட மேடைக்குள்ள அவரு போயிட்டார்.
கைதட்டல்… கைதட்டல்… கைதட்டல்… ஒட்டு மொத்தப் பள்ளிக்கூடத்தோட உளமார்ந்த கைதட்டல். அது ஜெயிச்ச எங்களுக்கா… இல்லையின்னா தன்னைத்தானே தோத்துப்போனதா அறிவிச்சுக்கிட்டாரே அவருக்கா….
உட்காந்திருக்கிற பிள்ளைங்கள விலக்கிவிட்டு, குனியச்சொல்லி, தாண்டி மேடைக்கு நாங்க முன்னேறிக்கிட்டிருக்கும்போது பாத்திமாவுக்கான ஆலோசனைகள் காத்துல மிதந்து வந்தன.
“பாத்து… பர்தாவ எடுத்துரு”
“எடுக்காத… அத்தா உரிச்சுருவாரு”
“பரவாயில்லை எடுத்துரு” பாத்திமா என்ன செய்யலாம்ன்னு முடிவு பண்றதுக்குள்ள நாங்க மேடைக்கு முன்னால வந்துட்டோம். அம்புலி ரெண்டு பேருட்டயும் பேர் கேட்டார். சொல்லிக்கிட்டோம். ரெண்டு பேரு பேரையும் சொல்லி மறுபடியும் ஒருதடவ நாங்க ஜெயிச்சதுக்காக கைதட்டச் சொன்னார். பிள்ளைங்க இப்பத்தா எங்க ரெண்டு பேருக்காகவும் கை தட்டினாங்க. “பரிசு சிறியது என்றாலும் வெற்றி பெரியது”ன்னு சொல்லி எனக்கு பரிசக் குடுத்தார். அடுத்ததா பாத்திமாவுக்கு பரிசு தரப்போகையில எச்.எம். “பாத்திமா… பர்தாவ வேண்ணா எடுத்துருப்பா”ன்னாங்க. பாத்திமா என்னயப் பாத்தா. நான் ‘எடுத்துரு’ன்றதுக்கு அடையாளமா லேசாச் சிரிச்சுக்கிட்டே தலையாட்டிட்டுனேன். மத்த பிள்ளைங்க இருந்த பக்கம் திரும்பிப் பாத்தா. பர்தாவுக்குள் இருந்த நானூறுக்கும் அதிகமான கண்கள் எல்லாமே பாத்திமாவையே உறுத்துப் பார்ப்பது மாதிரி எனக்குப்பட்டது. மறுபடியும் பாத்திமா எச்.எம்.ஐப் பாத்தா. எச்.எம். “ம்…”ன்னாங்க.  தயக்கத்தோடயும் பயத்தோடயும் அவள் பர்தாவை எடுக்க தயாரானாள். அம்புலி “வேண்டாம் மகளே… இருக்கட்டும்”ன்னு சொல்லி அவளுக்கான பரிச அவகிட்ட குடுத்தார். கூட்டத்துல இருந்த மத்த பிள்ளைங்களப் பாத்து, “யாருடைய கட்டாயத்திற்காகவும் உங்களுக்கு விருப்பமில்லாத எதையுமே செய்யாதீங்க. விருப்பமானதைச் செய்யாமலும் இருக்காதீங்க”ன்னார். நாங்க எங்க இடத்துக்குத் திரும்பினோம்.
சுனாமிபத்தி கருத்துரையாற்றுவார்ன்னு எங்க தமிழம்மா அறிமுகப்படுத்துன அம்புலி சுனாமின்ற வார்த்தையைக்கூட உச்சரிக்கல. ஆனா, அது ஏற்படுத்திய ரணங்களுக்கு மருந்து போட்டிருந்தார். எங்கள மனஅழுத்தத்திலிருந்து வெளிய கொண்டு வந்திருந்தார். அந்த வயசுல புரியாத இந்த விஷயம் கொஞ்ச நாளைக்கப்புறந்தான் எனக்குப் புரிஞ்சது. பொம்மலாட்டம் முடிஞ்சு பிள்ளைகள்லாம் வீட்டுக்குக் கிளம்பிக்கிட்டிருந்தாங்க. ‘ஸ்கூல் பேக்’கை எடுத்துக்கிட்டு நானும் பாத்திமாவும் ஸ்டெல்லாவும் மேடையப் பிரிச்சுக்கிட்டிருந்த இடத்தில இருந்த அம்புலியைப் பாக்கப் போனோம். இப்ப பாத்திமா பர்தா போட்டிருக்கல. என்னைப் பார்த்ததும் சிரித்த அம்புலி உடன் வந்திருந்த பாத்திமாவிடம், “மகளே பாத்திமா… பர்தா எங்கே…?” என்றார். நாங்கள் ஆச்சரியமாக அவரைப் பார்க்க “உன்னோட வர்றது பாத்திமான்னு கண்டுபிடிக்கிறதில எந்தச் சிரமமும் இல்லை மகளே” என்றபடி ஸ்டெல்லாவைப் பார்த்தார். “இவள் ஸ்டெல்லா… நாங்க மூனு பேரும் திக் ஃப்ரண்ட்ஸ்” என்றேன் நான். “நல்ல ப்ரண்ட்ஸ். எப்பயும் இப்படியே நல்ல ஃப்ரண்ட்ஸா இருங்க”ன்னார்.
நான் “சரி”ன்னேன்.
பாத்திமா “சாரி…”ன்னு சொன்னாள்.
அவரு “எதுக்கு?”ன்னு கேட்டார்.
“நான் அப்படி நடந்துக்கிட்டிருக்கக்கூடாது”
“எப்படி?”
“எனக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சு. அதான் உங்களைப் பார்த்து சாரி சொல்லலாம்ன்னு வந்தேன்” என்றாள்.
“மகளே… எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை”
“நாங்க எப்படி இருக்கணும்ன்னு சொல்லுங்க” என்று பாத்திமா கேட்டதும் மென்மையாகச் சிரித்தார்.
“நீங்க நீங்களாவே இருங்க. யாருக்காவும் உங்கள மாத்திக்காதீங்க. கேட்கிறதுக்கு ஈஸியா இருக்கிற இந்த விஷயம்தான் வாழ்க்கையில செயல்படுத்துறதுக்கு ரொம்பக் கஷ்டமானது”ன்னு சொன்னார். அப்புறம் கொஞ்ச நேரம் நாங்க பேசுறதக் கேட்டுக்கிட்டிருந்தார். அவரோட போன் நம்பர் கேட்டதுக்கு விசிட்டிங் கார்டு குடுத்தார்.
படிச்சு முடிக்கிற வரைக்கும் தவழ்ந்துக்கிட்டிருந்த என்னோட வாழ்க்கை அதுக்கப்புறமா நாலுகால் பாய்ச்சல் வேகமெடுத்தது. விசிட்டிங் கார்டு வாங்குன ஞாபகமே பத்து வருஷத்துக்கப்புறம் இப்பத்தான் வருது. கடைக்குப் போட்ட பழைய நோட்டுப்புத்தகத்தோட அது அப்பவே போயிருக்கும். ஆனா அவர் மட்டும் அடிக்கடி “நீங்க நீங்களாவே இருங்க. யாருக்காவும் உங்கள மாத்திக்காதீங்க. கேட்கிறதுக்கு ஈஸியா இருக்கிற இந்த விஷயம்தான் வாழ்க்கையில ரொம்பக் கஷ்டமானது”ன்னு என் மண்டைக்குள்ள இருந்து சொல்லிக்கிட்டே இருந்தார். நிதானமா யோசிச்சுப் பாத்தா ஸ்டெல்லாதான் யாருக்காகவும் அவள மாத்திக்காதவளா, தான் தானேவே இருக்காளா? என்னால அப்படி ஏன் இருக்க முடியல. சுதந்தரமா இருக்கிறதா நம்பிக்கிட்டிருக்கிற என்னோட நெலைமையே இப்படி இருக்கும்போது பாத்திமா… நாளைக்கி நான் எப்படிப்பட்ட பாத்திமாவ சந்திக்கப் போறேன்.

லேசாகத் தலை சுற்றுவதுபோல் இருந்தது. எப்பத் தூங்கினேன் எப்படித் தூங்கினேன்னே தெரியல. தூங்கிட்டேனான்றதும்கூடச் சரியாத் தெரியல… கனவா நனவான்னும் தெரியல… நான் பர்தாவோடயும் பாத்திமா அங்கியோடயும் ஸ்டெல்லா சுடிதாரோடயும்…. இல்ல… இல்ல… நான்தான் அங்கியில… பாத்திமா புடவையில… ஸ்டெல்லா பர்தாவோட… இல்ல… இல்ல… மூன்று பேருமே முக்கால் ஜீன்ஸ், காலரில்லாத டீ சர்ட்டோட கால்மேல கால்போட்டபடி சிரிச்சுப் பேசிக்கிட்டு கடற்கரையோர ஹோட்டல்ல உக்காந்து பெரிய கண்ணாடி ஜக்குல வளைஞ்ச ஸ்ட்ரா போட்டு ஜூஸ் சாப்பிட்டுக்கிட்டிருக்கோம். பக்கத்துல வெள்ளை அங்கி போட்ட ஒருத்தர், பச்சை அங்கி போட்ட ஒருத்தர், காவி அங்கி போட்ட ஒருத்தர்ன்னு சொந்த முகமில்லாத மூனுபேர் மிகவும் பணிவா எங்களோட அடுத்த ஆர்டருக்காகக் காத்துக்கிட்டிருக்காங்க…
நன்றி : அக்டோபர் கணையாழி
அக்டோபர் கணையாழியில் வெளியான சிறுகதைகளில் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.