Monday, December 23, 2013

பட்ட மனம் – சுட்ட நிஜங்கள்.... - வேழம்

படம் : ஜென்னிமா
நிஜங்களல்ல என நிஜங்களை
நிராகரித்த வேளையில்…
கனவுலகில் கவிழ்ந்திருந்தேன்.
கண்மூடிவிட்டால் – கவலையே
கடுகளவுகூட இல்லையே…
ஆழமான எண்ணம்!...
போலியான யதார்த்தம்
காலியாக வேண்டும்.
நடிப்பு நாற்காலியில்
அமர்ந்து கொண்டேன்.
நடிக்கத் தெரியாத அவலம்,
நடிப்பென்று தெரிந்தால் கேவலம்.

எனக்கு நானே சொல்லிக் கொண்டது - கேகே

படம் : ஜென்னிமா

               சிறகை இழந்துவிட்ட மனசு
               எப்படிப் பறக்கும்?
               யௌவனத்தின் பாதையில்தான்
               எத்தனை முட்கள்.
               கஷ்டம்தான் கலங்கியதில்லை.
               தூரத்துப் பச்சை அல்லது
               பாலைவனச் சோலை அல்லது ஏதோ ஒன்று.
               மெல்லிய சிலிர்ப்பில் உடல் மிளிர்ந்து
               எழுந்துவிட்டான் அவன்
               சிறிய புன்னகையில் உதிர்ந்தன வடுக்கள்.
               சிறகே உதிர்ந்து விட்டாலும்
               பறக்கத்தான் துடிக்கும் மனசு.
               வெளி வியாபித்திருக்கிறது
               வரவேற்க.

Tuesday, December 17, 2013

THE BICYCLE THIEF – திரைப்படமும் வாழ்க்கையும் – முனியசாமி

உலகத் திரைப்படம், விளைவு இதைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா ஒன்று மட்டும். தெரியும் காமராஜருக்குப் பிறகு, இப்ப வரையிலும் ஓ,பன்னீர் செல்வத்தைத்தவிர மற்ற எல்லாருமே சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான். உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் எங்க ஊரில் ஒரு அம்மாவிடம் “என்னம்மா யாருக்கு உங்க ஓட்டு”ன்னு கேட்டதுக்கு, “இந்தத் தடவ விஜயகாந்துக்குத்தான் போடணும்” என்றார். “ஏம்மா இப்படி ஒரு முடிவு”ன்னு கேட்டதுக்கு, “அம்மாவுக்கும் போட்டாச்சு… அய்யாவுக்கும் போட்டாச்சு… ஒன்னும் சரியா வரல… விஜயகாந்த் கொஞ்சம் தைரியமான ஆளு… எத்தனை படத்துல தீவிரவாதிகளை சுட்டுக் கொல்றாரு. அவரு நாட்டுக்கு நல்லது செய்வாருன்னுதான் அவருக்குப் போடலாம்ன்னு பார்க்கிறேன்” என்றார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும், நாம் ஒத்துக் கொள்ளாவிட்டாலும்கூட சினிமாவேறு, அரசியல்வேறு என்பது புரிவதில்லை. அப்படியெல்லாம் முன்புதான் இருந்தது. இப்போது இல்லை என்று நாம் நம்பினால் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக வந்திருக்கவே முடியாதே. கட்சி தொடங்குவதற்கு முன்னால் அவருடைய அரசியல் நடவடிக்கைகள் என்ன? சினிமா தவிர வேறு ஒன்றும் இல்லையே…
நான் பள்ளியில் படிக்கும்போது என் அப்பா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தந்திருந்தார். எங்க ஊரு ரோட்டுல சைக்கிள் பஞ்சர் ஆகாட்டி அந்த சைக்கிள் சைக்கிளே இல்லை. என்னோட சைக்கிளும் அடிக்கடி பஞ்சராச்சு. அடிக்கடி பஞ்சர் ஒட்டுறதுக்குக் காசு இல்லை. இரண்டு டயரப்போட்டு ஒருவழியா பஞ்சராகுறதக் குறைச்சேன். பள்ளிக்கூடம் முடிஞ்சு லீவு விட்டதும் சைக்கிள ஓரம் கட்டியாச்சு. மறுபடியும் பள்ளிக்கூடம் தொடங்கும்போது சைக்கிள் சக்கரத்தில சீவனே இல்லை. வைக்கோலைத் தினிச்சு ஏதாவது செய்யமுடியுமான்னு ஒரு ஆராய்ச்சி. அதுலயும் இரண்டு நாள் ஓடுச்சு. இப்படித் தொடங்கின என்னோட சைக்கிள் வாழ்க்கை. இப்ப நானு தொலைபேசித் துறையில தற்காலிகமா கேபிள் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். செம்பட்டியில ஒரு வேலைக்காக காலையில ஆபிஸ்ல இருந்து 9 கிமீ போய் பாத்து முடிச்சதும், புளியம்பட்டி அப்புறம் மறுபடி வேற ஒரு பகுதி இப்படி ஒரு நாளைக்கு சுமாரா 30 கிமீ வரைக்கும் சைக்கிள் ஓட்டுற மாதிரியான நிலைமை. இன்னைக்கு என்னோட வாழ்க்கையின் ஒரு அங்கமா, வேலைக்கான கருவிகளில் ஒன்னா சைக்கிளும் மாறிருச்சு.
‘பை சைக்கிள் தீஃப்‘ ஒரு அருமையான திரைப்படம். வறுமை பற்றிய விஷயங்களும் வேலையில்லாத் திண்டாட்டமும் நன்றாக எடுத்துரைக்கப்படுகின்றன. குறிப்பாக வறிய குடும்பச் சுழலில் வளரும் ஒரு அன்பான குழந்தையின் உணர்வுகள் நன்றாகச் சொல்லப்பட்டுள்ளன. முதல்காட்சி ஆடைகளைப்பற்றிய விஷயங்கள். வேலை போன அவனுக்கு வேலை கிடைக்கிறது. அந்த வேலைக்கு சைக்கிள் வைத்திருப்பது ஒரு அடிப்படைத் தகுதியாக இருக்கிறது. குளிர்ப்பிரதேசத்தில் வாழ்கின்ற அந்தக் குடும்பத்தினர் போர்வை உட்பட படுக்கைப் பொருள்களை அனைத்தையும் அடகு வைத்து, ஒரு சைக்கிளை வாங்குகிறார்கள். ஏணியைத் தூக்கிக் கொண்டு போய் சுவற்றில் வால் போஸ்ட்டர் ஒட்டும் வேலை. ஏணியில் ஏறி போஸ்ட்டர் ஒட்டிக் கொண்டிருக்கும்போது கண் முன்னே ஒருவன் சைக்கிளைத் திருடிக் கொண்டு ஓடுகிறான். அவனைப் பிடிக்க முடியவில்லை. வேலை பறிபோகிறது. அவனைத் தேடிப்போயும் பயனில்லை. காவல் துறை எல்லா நாடுகளிலும் ஒன்றே போல் இருக்கிறது. கடவுளும் கைவிடுகிறார். குறிபார்க்கிறார்கள். பயனில்லை. தன் மகனுடன் சைக்கிளைத் தேடிப்போன அவன் இறுதியில் மகனை பேருந்தில் வீட்டிற்குச் செல்லச் சொல்லிவிட்டு, காத்திருந்து ஒரு சைக்கிளைத் திருடுகிறான். மாட்டிக்கொண்டு உதைபடுகிறான். மகன் அப்பாவை அடியிலிருந்து காப்பாற்ற முயற்சிக்கிறான். பரிதாபப்பட்ட பொதுமக்கள் புத்திகூறி அனுப்புகிறார்கள். அப்பாவும் மகனும் வீடு நோக்கி நடக்க அவர்களின் நடை பின்னணியில் இருந்து செய்யப்பட்ட கேமிரா பதிவுடன் படம் முடிவடைகிறது.
மகன் ஒவ்வொரு முறை தவறு செய்யும்போதும் அம்மாவிடம் சொல்லி விடுவேன் என்கிறார் அப்பா. இப்போது மகன் அப்படி ஏதும் சொல்லாமல் அப்பாவுடன் நடந்து செல்கிறான் என்பது என்னை மிகவும் பாதித்தது. அவருக்கு (திருடியாவது) ஒரு சைக்கிள் கிடைக்காதது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இப்படியான திரைப்படங்கள் நம்மை நம் வாழ்க்கையைச் சொல்வதன் மூலம் நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கின்றன. இப்படியான உணர்ச்சிவசப்படல் இன்றைய தேவையாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியாகி 65 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.