Monday, October 24, 2011

உறுத்தலின்றிக் கழியும் பொழுதுகள் - கேகே



(தோழர் கருப்புவிற்கும்... இயக்குநர் வெங்கட்பிரபுவிற்கும்)

1      சந்தன மணத்தைத் தேடியலைந்த
நேசத்தின் நாற்றத்தை ரூபாய்த்தாளின் வீச்சம்
துடைத்தெடுக்கையில் பார்த்துக் கொண்டு மட்டும்தானிருந்தான்
உங்களைப்போல வெறுமனே.

2.     பறவைகள் விரட்டியடிக்கப்பட்ட ஊரில்
       மரங்கள் வெறுமையாய் நிற்கின்றன.

3.     மானமும் பசியும் பந்தாடப்பட்டபோது
       எழுந்த ஓலங்கள்
       உங்கள் மின்சாதனங்களின் இரைச்சலில்
       அழுகிப் போயின.

4.  *  வயிறு உப்பிய சோமாலியக் குழந்தை
செத்துவிழக் காத்திருக்கிறது கழுகு.

·                                 அறம் தூக்கிலிடப்படும் காலத்தில்
செய்வதறியாது பிதற்றியலையும் அவனை
       ஒன்றுஞ் செய்வதற்கில்லை.

(2011 அக்டோபர் 9 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் நடத்திய படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற விதை)

Sunday, October 23, 2011

கவிதைகள் – பா.இராஜேந்திரன்


சிதறும் கோர்வை

முட்டைகள் அடங்கிய
அட்டைப் பெட்டிகளை
எத்துனை கவனமாய்
கையாளும் போதிலும்
எப்போதாவது...

எதிரபாராவிதமாய்
உடைந்துவிடுவதைப்போல்
சிதறித் தெறிக்கிறது
கவிதைக்கான் கோர்வையும்.

அடைமொழிகள்

மிருகத்தின் பெயர்தனை அடைமொழியாக்கி
அடைமொழியாய் வைக்கப்பட்ட
மிருகமாகவே மாறி வாழ்ந்து வருவோர்க்கு
மத்தியில் –
மனிதரகளாக வாழ்வது
கொஞ்சம் கடினம்தான்.

எனினும் நம்மால்தானே முடியும்
அத்தகைய மிருகங்களையும்
அடக்கி ஆள...

தேநீரின் சுவை

காத்திருந்த எச்சில் குவளைகளை
அழுக்கு நீர் அலசி...

அலசிய தண்ணீர்
வடியும் முன்பே
சீனியும் தேயிலைத்தூளும்
பாலின் நிறத்திலே
சுடுநீரும் கலந்து...

ஆற்றி நம் கைகளில்
கொடுக்கப்பட்ட தேநீரை நாம்
செய்தித்தாள்களின் கவனத்திலேயே
பருகிவிடுவதால்
தொடர்ந்து...
சுவையாயிருக்கிறது தேநீரும்.

எம் தந்தை பெரியார்

வள்ளுவர் வழியில் வாழ்ந்து வந்த
தமிழ்ச் சமுதாயம், திராவிடச் சமுதாயம்
பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பினால்
பொசுக்கப்படுவதைக் கண்டு
பொறுக்க முடியாமல்
யாரடா – நீ
எம் இனத்தின் மீது
இழிவைச் சுமத்தி, அறிவைக் கெடுத்து
மானம் இழக்கச் செய்வது?
என
உரக்க்க் குரல் கொடுத்து, ஆரியக் குரல்வளையை
இறுக்கிப் பிடித்த வீரிய கரங்களுக்கு உரியவர்
எம் தலைவர் பெரியார்...

கூறு கூறாய் பிரிந்து இருந்த மக்களை –
ஓர் வழியில் நிறுத்தி, சீர் செய்து,
நேர் வழியில் நடத்திட
திராவிடர் இயக்கம் அமைத்திட்ட
பகுத்தறிவுப் பகலவன்
எம் தந்தை பெரியார்...

(2011 அக்டோபர் 9 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் நடத்திய படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற விதைகள்)

Saturday, October 22, 2011

மண்ணை அரித்துச் சென்ற பேரலைகள் - சுப்புராயுலு


ஓயாத கடல் அலைகள் தரையைச்சாடி
மண்ணை அரித்து மடிந்து சரிவதைப்போல்

மேற்கு திசையிலிருந்து புரண்டுவந்த பேரலையொன்று
வாழ்வுப் பரப்பில் அனைத்தையும்
வாரிச் சுருட்டிக் கொண்டு விரைந்து சென்றது.

அன்னிய சாரங்களில் ஊறிய
நாற்றங்கால்களில் வளர்ந்த பயிர்கள்
பாத்திகளிலும், வயல்களிலும் நடப்பட்டு
நம் மண்ணின் சாரமற்ற சுவையாக வளர்க்கப்படுகிறது.

அறுவடை செய்யப்பட்டு களத்திலடிக்கப்பட்ட தானியத்தை
மூடைகளில் கட்டி வண்டிகளிலேற்றுவதற்கு
களத்திற்கே வந்து
காத்திருக்கும் மேற்கின் தரகர்கள்.

தங்களை அழுத்தும் வாழ்வு தரும் சுமைகளை
கீழிறக்க முயலாமல்
நுகத்தடியில் தானே தலைகொடுக்கும்
எருதுகளாய் மாந்தர்கள்.

தூரத்தில் தெரியும் நகரின் கான்கரீட் வனத்தின் மீது காலைப்பனி
மனப்பதிவு ஓவியத்தின் தூரிகைத் தீற்றலாய் படிந்திருக்க
நகரின் காலைப் பொழுது
வாகன ஊர்வலத்தின் அடர்த்தியினூடாக
இரும்புக் குரைகளின் பாய்ச்சலோடு தொடங்குகிறது -
நடந்து செல்பவர்களின்
அர்ச்சனை மொழியை வாங்கிக்கொண்டு.


புதிது புதிதாய் முளைக்கும் நுண்ணலைக் கோபுரங்களின் பெருக்கம்
சிற்றுயிர்களின் சிறகடிப்பிற்கு முற்றாய் விடைகொடுத்தது.
உயிர்களின் சங்கிலிக் கோர்வையில்
சில கரணைகளை துண்டிப்பதில் முடிந்தது.

உறவுப் பாலங்களில் நடந்து பழகிய எனக்கு
பகல் பொழுதுகளிலும் இரவின் மௌனம் உறைந்திருக்கும்
இப்புறநகர்
உள்ளிழுக்கப்பட்ட ஆமையின் கால்களாய்
உறவாட மறுத்து முடங்கிக் கிடந்தது
சோர்வினைத் தந்தது.

வாழ்வின் உன்னதங்களைப் பெறமுடியாத
ஏக்கங்கள் புலம்பல்களாய் வெளிப்படும்
என்துணைவியின் துயரத்தினை
காணச்சகியாது மனம் துடித்துக் கொண்டிருக்கிறது.


காலம் உழுது புரட்டிய எம்மண்ணில் புதைந்த
திணைவாழ்வின் தடயங்களை கிளறிக் கொண்டிருக்கிறேன்
கிளைகளற்ற மரத்தில்
சிறகுகளற்ற பறவையாய்.

(2011 அக்டோபர் 9 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் நடத்திய படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற விதை)