Sunday, December 7, 2014

கவிதை – பா.ராஜேந்திரன்

ஒவ்வொரு முறையும் – நீ
மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும்போது
இம்முறை மரணம் தொட்டுவிடுவாயோ
மரணம் – உன்னை விட்டுவிடுமோ – என்றே
எண்ணம் பிறக்கிறது.
உன் மூச்சுத் திணறல்
உன் பேச்சுத் திணறல் – இரண்டும்
என் மன உளைச்சலை அதிகப்படுத்துகிறது…
உன் கண்களின் பார்வை
யாரின் முகம் தேடித் துடிக்கிறது…
உன் உதடுகளின் உச்சரிப்பு
உடல் இயக்கம் தடைபடுவதை
அறிவிக்க முடியாமல் தவிக்கிறது…
உன் இதயம் தன் துடிப்பை
நிமிடத்திற்கு நிமிடம் மாற்றிக் கொள்கிறது…
முதன் முறை உடல் நலப் பாதிப்பில்
கலக்கம், துடிப்பு, பதற்றம் எனக்கும்…
தொடர்ச்சியான பாதிப்பில் என்னை நான்
பக்குவப்படுத்த கற்றுக் கொண்டேன்…
குடும்பத்தில் குழப்பம் இல்லாமல்
பொருளாதார நட்டத்தை ஈடுசெய்ய முடியாமல்
திணறிக் கொண்டும் – உனக்கான பொறுப்பை
உதறித் தள்ளாமல் சமாளிக்கும் முயற்சியில்
வெற்றி காண்பது எளிதல்ல…
என் பயணம் உன் மரணத்திலே
புதிய பாதை பெறும்…
புதிய பாதையில் பயணம்
கடுமையானதா எளிதானதா தொடங்கும்வரை
மலைக்க வைக்கும் பல கேள்விகளின் தொகுப்பாய்
என் மரணம் தெடும் வரை…

கவிதை – மாணிக்

ஆளுயர பெட்டிகள்
அடுக்கி வைக்கப்பட்டிருந்த
கோடோன் ஒன்றின்
தரையெங்கும் சிதறிக் கிடக்கின்றன
பிய்ந்துபோன கதவுகளும்
ஈரம்படிந்து பிசுபிசுத்துக் கொண்டிருக்கும்
மரத்துண்டுகளும்
மிகக் கவனமாக
அடிவைத்து முன்னேறுகிறேன்
ஒவ்வொரு பெட்டியையும்
தரம் பார்த்தபடி
மிக நெருக்கமாகக் கிடந்த
பெட்டிகளின் இடையில்
மாட்டிக் கொள்ளக்கூடாது என்று
பதைபதைக்கையில்
செருப்பின் தடிதாண்டி
பாதம் துளைக்கிறது
துருவேறிய கூர் ஆணி.

குறுங்கவிதைகள் – அருணோதயம்

*        
உனக்கும்
எனக்குமான உரையாடல்
ஏர் செல்லிலோ, ரிலையன்ஸிலோ
என்றான பிறகு
வாழ்வின் அபத்தங் குறித்து
அச்சங்கொள்ளாதிருக்க முடியவில்லை.
*        
எல்லா
கொடுக்கலுக்கும் பின்னால்
ஒரு வாங்கல்
இருக்கத்தான் செய்கிறது.
*        
காலத்துருவேறிய
உன் முறுவலினின்று
உதிர்கிறது
அனுபவச் சலிப்பு.
அதனடியில் ஒளிந்திருக்கிறது
ஓர் பிரிவின் ஆற்றாமை.
*        
தொலைவில் எங்கோ
தறிச்சத்தம் கேட்கிறது.
அதன் பற்சக்கரங்களில்
அரைபடும்
இந்த அதிகாலையின்
அகால மரணத்தை
நிந்தித்த வண்ணம்
தொண்டைக்குச் சூடு வைத்தேன்
மிடறு தேநீரால்.
*        
நீராடி முடித்ததும்
கரையேறித் துடைக்கலானாள்
ஒவ்வொரு கண்களாய்.
*        
ஒப்பனை கலைந்த
உன் முகம்
என்னானதில்லை என்றபோதிலும்
அதில் தீட்ட முயல்கிறேன்
எனக்குப் பிடித்த
வ(எ)ண்ணங்களை.
*        
அன்பற்ற கலவியும்
கலவியற்ற அன்பும் சலிப்பூட்ட
எனதன்பை
ஒரு கலவிக்கான முன்னுரையாய்
நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்.

Monday, November 24, 2014

2014-11-22 சில காட்சிப் பதிவுகள்

2014 நவம்பர் 22 ஆம் நாள் மாலை நடைபெற்ற படைப்பரங்கம் மற்றும் விமர்சன அரங்கின் காட்சிப் பதிவுகளில் சில...
விமர்சன அரங்கக் கட்டுரைகளும்
படைப்பரங்கின் படைப்புகளும் விரைவில் வலையேற்றப்படும்.