Friday, June 16, 2017

காகிதம் மடிக்கும் கலை (ORIGAMI) பயிற்சி

         2017 ஜூன் 15 ஆம் நாள் (நேற்று) கொக்கரக்கல் வலசு அரசு உயர் நிலைப்பள்ளியின் 
9 ஆம் வகுப்பு மாணவர்களுடன் அர்த்தமுள்ளதாகக் கழிந்த 
மூன்று மணி நேரத்தின் சில நொடிகள்...

Friday, April 21, 2017

கலந்துரையாடல் - கடிதம் 13 - காயத்ரி சத்ய கிருஷ்ணன்

001/18-04-2017
பாவ புண்ணிய கடித உரையாடலின் தொடர்ச்சியாக...
காயத்ரி சத்யகிருஷ்ணன்
பெரியாரையும் அம்பேத்கரையும் எனக்குத் தெரியாது. மார்க்ஸ்ஸையும் எங்கெல்ஸ்ஸையும் சத்தியமாய் தெரியாது. ஆய்வு செய்து அரசியல் வார்த்தைகள் கொண்டும் எழுத தெரியாது. பார்த்து உணர்ந்தவற்றை எழுதியுள்ளேன். - காயத்ரி சத்யகிருஷ்ணன் 
பாவ புண்ணியங்கள் நம் வாழ்வில் நம்மை அனு தினமும் விடாது துரத்தி வருகின்றன. இறைநம்பிக்கையுடன் தொடர்பு படுத்திப் பார்க்கப்படும் பாவ புண்ணியங்களை கேள்வியே கேட்காமல் ஏற்றுக்கொண்டு கடை பிடித்தும் வருகிறோம். உண்மையில் புண்ணியம் செய்தவர்கள் சந்தோசமாகவும் பாவம் செய்தவர்கள் கஷ்டபட்டுக்கொண்டும் இருக்கிறர்களா??
        இந்த பாவ புண்ணிய கணக்குகள் மனிதர்களை குற்றவாளிகள் ஆக்கி கடவுளை உன்னதபடுத்தவே கையாளபடுகின்றன. நம்மால் நேரும் குற்றங்களை மூடி மறைக்க பாவம் புண்ணியம் என கதை சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
        பக்க்தியில் சிறந்து கோவிலிலேயே கிடையாய் கிடந்த ஒருத்தர் அகால மரணம் அடைகிறார். அதோடு நிற்காமல் அவரது மகனும்  விபத்தில் இறக்கிறார். பேரன் அப்பார்ட்மென்ட் குடியிருப்பின் மேல் மாடியில் கிரிக்கெட் விளையாடிகொண்டிருக்கும் போது அங்கிருந்து கீழே விழுந்து இறக்கிறான். அவ்வளவு பக்க்தியாய் இருந்தவரின் சந்ததி ஏன் இப்படி நாசமானது?? அவர் செய்த புண்ணியங்கள் எங்கே போனது?
        மதகுருவின் மடத்தில் பார்ப்பனர்களுக்கு மட்டும் தான் சாப்பாடு. இது தெரியாமல் பார்ப்பனர் அல்லாதவர் ஒருத்தர் பந்தியில் அமர்ந்து விட்டார். பார்க்க டிசன்ட்டாக இருந்தவர் சோத்துக்கு வக்கில்லாமலா சாப்பிட வருவார்? கடவுளின் பிரசாதம் என நினைத்து தான் வந்திருப்பார். பந்தியில் அமர்ந்தவரை தயவு தாட்சிண்யம் பார்க்காமல் எழுந்திரிக்க சொல்லி விட்டார்கள். பார்பனர் அல்லாதவர் அங்கு சாப்பிட்டால் தீட்டு பாவம் எனில் சாப்பிட உட்கார்ந்தவரை எழ சொன்னவனை அந்நியன் படத்தில் வரும் சொக்கன் 65 போல் வருத்தாலும் தகும்.
        புண்ணிய ஆத்மா கஷ்டம் இல்லாமல் இறைவனை அடையும் என்று சொல்வது உண்மையானால் எனக்கு தெரிந்த சிங்காரி பாட்டி புஷ்பக விமானத்தில் அழைத்து செல்லப் பட்டிருக்க வேண்டும். மூன்றரை வருடம் நாய் படாத பாடு பட்டு படுத்த படுக்கையிலேயே இருந்து இறந்து போனார்.
        பாவ புண்ணிய கணக்குகள் முற் பிறவியில் இருந்து தொடரும் என்பதில் இருந்து பல பிறவிகள் உண்டு என்பதை நம்புகிறோம் என உறுதி ஆகிறது. ஆக இறந்து போன ஜீவன் குறிப்பிட்ட வருடங்களில் மறு பிறவி எடுத்து விடுகிறது. அனால் இன்றும் நான்கு தலைமுறை தாண்டியும் அந்த ஆத்மாக்களுக்கு தர்ப்பணமும் திதியும் கொடுக்கா விட்டால் பாவம் என்றும் நம்புகிறோம். எங்கோ பிறந்து விட்ட ஆத்மாவுக்கு எதற்கு தர்ப்பணமும் திதியும். ஒன்று முற் பிறவி மறு பிறவிகளை நம்ப வேண்டும் அல்லது நம்பாமல் திவசம் கொடுக்கச் சொல்ல வேண்டும். கேள்வி கேட்டால் பதில் வராது. இப்படி கேள்வி கேட்டால் மழை பெய்யாது என்று சாபம் தான் வரும்.
        பாவ புண்ணிய கதைகளால் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் தனி டிப்பார்ட்மென்ட்.

        பாவ புண்ணிய கணக்குகளை பொய்யாக்கும் ஆயிரம் கதைகள் இருந்தாலும் மீண்டும் மீண்டும் நம்மை முட்டாளாக்கும் வேலையைதான் சமூகம் செய்து கொண்டு இருக்கிறது.

Monday, April 17, 2017

கலந்துரையாடல் - கடிதம் 12 - செல்வா

002/13-11-2011
பாவ புண்ணிய கடித உரையாடலின் தொடர்ச்சியாக...  செல்வா
அன்புத் தோழருக்கு
மரங்கள் அமைதி விரும்பினாலும் காற்று விடுவதில்லை...
கரைகள் அமைதி விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை...
ஓடி ஓடி ஒளிந்த போதும் வாழ்க்கை விடுவதில்லை.”
அன்பே சிவம் – படத்தில் இருந்து கேட்ட வரிகள். மிகவும் பிடித்த வரிகளும் கூட.
சமூகத்தில் பழக்கத்தில் உள்ள எந்த ஒரு நாகரீக, பாவ, புண்ணிய உள்மதிப்பீடுகளையும் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட முடியாது. அவை தேவையற்றது என்றும் முடிவு செய்தல் முடியாதது.. காலத்திற்கேற்ப அவை மாற்றம் பெற்று, நிலைத்து, வேரூன்றி, பரவலாக பரவிக் கிடக்கிறன, சமூகம் முழுவதும்.
புரியவில்லை என்பதற்காக ஓதுக்கி விடவும் முடியாது. தனிமனித வாழ்விலும், சமூக நிகழ்வுகளிலும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது இந்த பாவ-புண்ணிய வரையறைகள்.
சமூகத்தை ஒர் கட்டுக்குள்ளும், கட்டுப்பாட்டுக்குள்ளும் வைத்திருக்கிறது என்றால், அதன் வரையறையும், செயல்பாடும், மாற்றமும் கவனிக்கப்பட வேண்டியவை.
நான் செய்வது தவறா? அல்லது சரியா? - என்று இந்த பாவ-புண்ணியம் கட்டுப்படுத்துகிறதா? தவறு செய்வதில் இருந்து தடுக்கிறதா? எனக்கு இது புரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கேள்விகள் கேட்காமல் ஏற்றுக் கொள்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது... சரிதான் ஒரு சில கேள்விகளுக்கு உடனடி பதில் அல்லது தீர்வுகள் கிடையாது... ஆனால் “இன்று செய்து முடிக்கப் பட்டவை யாவும் முன்னர் முடியாதெனக் கைவிடப் பட்டவைதான்“.
இந்த பாவ-புண்ணிய வரையறைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவையே...அவை அனைத்தும் சமூகத்தை சமத்துவமாக மாற்றியிருக்க வேண்டும்...சமத்துவத்திற்குப் பதிலாக படிநிலை சமூகத்தையே ஆதரிக்கின்றன. எல்லாப் படிநிலைகளிலும் இது இருக்கிறது. கீழ்நிலையில் உள்ளவர்களிடம் மிகவும் ஆழமாகவே இருக்கிறது... (கீழ்நிலை – உழைப்பாளிகள், பாட்டாளிகள்)
பாவ-புண்ணிய வரையறைகள் யாரால் வரையறுக்கப்படுகின்றன... காலத்திற்க்கேற்ப எப்படி மாற்றம் அடைகிறன... அவை எவ்வாறு திணிக்கப்படுகிறன... இதனைப் புரிந்து கொள்வதும்... அரசியல் உள்நோக்கங்களை தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது.
Facebook –ல் படித்த ஒரு சிறிய கதை அல்லது ஆய்வு என்று நினைக்கிறேன்.
ஒரு ஆய்விற்க்காக 5 குரங்குகள் ஒரு அறையில் பூட்டி வைக்கப்படுகின்றன. அங்கு ஒரு ஏணியும், அதன் மீது வாழைப்பழங்களும் வைக்கப்படுகின்றன. குரங்குகள் அதை எடுக்க முயற்சிக்கும் போது, அந்த அறை முழுவதும் மிகவும் குளிர்ந்த நீர் தெளிக்கப்படுகிறது. ஒரிரு முயற்சிகளுக்குப் பிறகு அந்தக் குரங்குகள் பழத்தை எடுக்க முயற்சிப்பதை நிறுத்திவிடுகின்றன.. ஆனாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு குரங்கு ஆவலினால் தூண்டப்பட்டு எடுக்க முயலும் போதும் குளிர்ந்த நீர் தெளிக்கப்படுகிறது. இதனால் மற்ற குரங்குகள் ஆத்திரமடைந்து, பழத்தை எடுக்க முயற்சிக்கும் குரங்கை தாக்குகின்றன. சில நாட்களுக்குப் பிறகு எந்தக்குரங்கும் பழத்தை எடுக்க முயற்சிக்கவில்லை.
ஜந்து குரங்குகளில் இரண்டு புதிய குரங்குகளால் மாற்றப்படுகிறன. புதிதாக வந்த குரங்குகள் பழத்தை எடுக்க முயற்சிக்கும்போது அதை பழைய குரங்குகள் தாக்குகின்றன. புதிதாக வந்த குரங்குகளும் பழத்தை எடுக்கும் முயற்ச்சியை கைவிடுகின்றன...மீதமுள்ள மூன்று பழைய குரங்குகளையும் ஒவ்வொன்றாக மாற்றும்போதும் இதே விளைவுதான்.. ஒரு கட்டத்தில் அனைத்து பழைய குரங்குகளும் புதிய குரங்குகளாக மாறியிருந்த போதும்... குளிர்ந்த நீர் தெளிக்கப்படாத போதும்... குரங்குகள் பழத்தை எடுக்கவில்லை.
       பாவ-புண்ணிய வரையறைகள் கேள்வி கேட்க முடியாத இடத்தில் உள்ளன.
முந்தைய சமூகத்தில் பின்பற்றப்பட்ட பல நடைமுறைகள் இன்னும் கேள்விகளே கேட்கப்படாமல் பின்பற்றப்படுகின்றன. பல வரையறைகள் இன்றைய சமூக சூழலுக்கு ஏற்ப மாறியுள்ளன. இதனைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது  - அடுத்த மாற்றத்தை அறிந்து கொள்வதற்கு. இந்த மாற்றம் யாருக்கானது என்பதையும், யாரால் என்பதையும் அறிவுப்பூர்வமாக அணுகவேண்டியுள்ளது.
ஸ்ரீபதி அவர்களின் கடித்தின் வரிகள் – “தவறு செய்யத் தெரிந்தவனே வாழத் தகுதியானவன். அதையே பிரம்மாண்டமாக மாட்டிக் கொள்ளாமல் செய்பவன் ஆளத் தகுதியானவன்; அப்படியே மாட்டினாலும் அதையும் அரசியல்படுத்த தெரிந்தவன் தலைவன்“.
யாருக்கான வரையறை இது? யாரால் உருவாக்கப்பட்டது? ஒட்டுமொத்த சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? முந்தைய வரையறைகளோடு ஒத்துப்போகிறதா? எதிர்மறையாக இருக்கிறதா? பாவ-புண்ணிய வரையறைகள் விவாதிக்க, கவனிக்க வேண்டியவைதானா? சமூக மாற்றத்திற்கும் பாவ-புண்ணியத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என நிறைய கேள்விகள் எழுகின்றன.
அன்புடன்

செல்வா

Sunday, April 16, 2017

கலந்துரையாடல் - கடிதம் 11 - மதிகண்ணன்

002-12/10/2011
அன்புத் தோழர்களுக்கு
வணக்கத்துடன் மதிகண்ணன்.
நாம் சந்தித்துக் கொள்வதற்கும், கலந்துரையாடுவதற்கும், விவாதிப்பதற்குமான தேவைகள் அதிகமாக உள்ளன. ஆனால் சூழல் தேவைகளுக்கு எதிராக தன் செயல்திறம் காட்டுகிறது. இப்படியான சூழலில் நாம் மார்க்சிய வழியான ‘அறிவு அரசியல்‘ (Knowledge Politics) தளத்தில் இருந்து விலகி நீட்ஷே வழியிலான, ஃப்ராய்டிய வழியிலான ‘வேட்கை அரசியல்‘ (Desire Politics), ‘உடல் அரசியல்‘ (Body Politics) போன்ற பின்நவீனத்துவ அரசியல் தளங்களை நோக்கி நம்மையுமறியாமல் நகர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். வேட்கையும், உடலும் அதிகாரத்திற்கு உட்பட்ட தனிநபர் சார்ந்த விஷயங்கள். அவை சமூகத் தளத்தில் இயங்குவது அல்லது அவற்றை சமூகத்தளத்தில் இயக்குவது என்பது இயலாத ஒன்று. மீறி இயக்க நினைத்தால் அது பாலச்சந்தர் திரைப்படக் கதைகளைப்போல் ஆகிவிடும். வேட்கை அரசியலும், உடல் அரசியலும் தனிநபர் விருப்பம் / ஆசை / இச்சை சார்ந்தவை என்பதால் திசைவிலக வாய்ப்புள்ளது. காத்திரமான தர்க்க வழிப்புரிதல் இல்லாத சூழலில் விருப்புறுதி சார்ந்த எதையும் செயல்திட்டமாக ஏற்கவல்ல மனித இயல்பிற்கு நாம் மாற்றாக மாறுவதற்கான முயற்சியில்தானே இருக்கிறோம்.
‘சூழல் மனிதனைப் பாதிக்கிறது என்பது உண்மையில் ஒரு பாதி மட்டுமேஇன்னொரு பாதி, சூழலுக்கு எதிராக மனிதன் செயல்பட்டு அதனை மாற்றுகிறான்‘
-    கார்ல் மார்க்ஸ் (பயர்பாக் ஆய்வுரையில்)
சூழலுக்கு எதிரான புதிய சூழல் உருவாக்க முயற்சியாக, நாம் நம்மை கடித ஊடாடலுக்கு உட்படுத்திக் கொண்டோம். இக்கடித ஊடாடலில் எண்வர் உள்ளோம். எண்வருக்கும் பகுதி தெரிந்தும் தெரியாமலும் இருக்கின்ற ஒரு இடத்தில் தொடங்கலாம் என்ற முடிவுடன் ‘பாவ-புண்ணியம்‘ விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 2011 செப்டம்பர் 26 ஆம்நாள் முன்வைப்புக்கடிதம் கொடுக்கப்பட்டது.
எனது முழுஅறிவு ரீதியான உருவாதலும் விவாத இயல்பைக் கொண்டிருக்கும். ஆகவே விருப்பமற்று ஈடுபடுதல் எனச்சிந்திப்பது என்னளவில் சாத்தியமில்லை. படிப்பதற்காகப் படிப்பது என்பதுகூட என்னளவில் சாத்தியமில்லை. அபூர்வமான சில சந்தர்ப்பங்களில் மட்டுமே குறிப்பிட்ட சிந்தனை உக்கிரத்திலிருந்து விடுபட்டு நிற்பேன். ஒன்றின் உள்ளார்ந்த தன்மை கருதி பகுப்பாய்வு செய்கையிலேயே இதுவும் நேரும். ... ... ... எனக்கு எப்போதும் உரையாடுவதற்கென ஒருவர் வேண்டும். ஒரு ஸ்தூலமான எதிராளி வேண்டும்
-    மைத்துனி தாந்தியானாவிற்கு கிராம்ஸி சிறையிலிருந்து எழுதிய கடிதத்தில் இருந்து.
முன்வைப்பிற்கு ஸ்தூலமான எதிர்வினை ஐவரிடமிருந்து கிடைத்துள்ளது. சிரத்தைக்கு நன்றி கூறி அவர்களுடனான ஊடாடலைத் தொடரும்விதமாக அடுத்த கட்டத்திற்கு நகர்வோம்.
28/10/2011
கடிதம் எழுதத் தொடங்கி 16 நாட்களுக்குப் பிறகு இன்று தொடர்கிறேன். இதுவும் ஒருவகை விதி(rule)தான். வெறிநாயால் துரத்தப்படும் வாழ்வின் ஓட்டம் வேலைகளை வரிசைப்படுத்துகிறது. வாழ்க்கை நிறுத்திய வரிசையில் கடிதத்தின் தொடர்ச்சி 16ஆம் நாள் காரியமாக மாறியதைத் தவிர்க்க இயலவில்லை.
கேகே கடிதத்தின் தொடக்கத்தில் அவருடைய கடிதம் முன்வைப்புக் கடிதத்திற்கு நேரடியாய் தொடர்பற்றதாய் இருக்கலாம் எனவும், ஆனாலும் ஒருகிளையில் சந்திக்கும் என நம்புவதாகவும் எழுதியிருந்தார். மற்றவர்கள் இவ்வரிகளைச் எழுதவில்லை என்றாலும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. அதுதான் நிகழும். அதுதான் நிகழவும் வேண்டும்.
ஒவ்வொருவரும் கடிதங்களில் தொடர்புடைய நிறைய இடங்களைத் தொட்டிருக்கிறீர்கள். வாஸ்து, கார்ப்பரேட் சாமியார்கள், செக்ஸ் சாமியார், பாவத்திற்கான தண்டனை, மனச்சாட்சி, பொருளாதாரக் குற்றங்களுக்குக் காரணம் தனிச்சொத்தே, கதை நாயகர்கள் கடவுளர்களானது, பணக்காரர்களுக்காக புதிய வரலாறுகள் எழுதப்படுவது, பரம்பரை வழி வந்த வழிபாட்டு ஒழுங்கு, அறிவியலை ஆதாரமாகக் கொண்ட ஆன்மீக தத்துவங்கள், முற்பிறவி, இப்பிறவி, மறுபிறவி, எதிர்வுகள் இப்படிப்பல்வேறு இடங்களைத் தொட்டிருக்கிறீர்கள். தொடப்பட்ட இடங்கள் எல்லாம் அழுத்தமாக, மீண்டும் மீண்டும் ‘பொருளாதார அதிகாரத்துடன் தொடர்புடையதாக முதலாளித்துவ சமூகம் பாவபுண்ணியத்தை வரையறை செய்துள்ளதுஎன்பதை நிறுவுவதாகவே உள்ளது.
முன்வைப்புக் கடிதத்தின் மையக் கேள்விகளான ‘நிலவிவரும் ஒழுக்கம் தொடர்பான சொற்களான பாவம், புண்ணியம், தீட்டு, புனிதம் போன்ற சொற்களை நாம் எப்படி உள்வாங்கிக் கொள்வது? அச்சொற்களை எப்படிக் கடப்பது? கடக்கத்தான் வேண்டுமா? அல்லது அச்சொற்களுக்கு பாட்டாளி வர்க்கப் பார்வையுடன், சுரண்டலுடன் தொடர்புடையதாக மறுவரையறை தரவேண்டுமா? பண்பாடு இவற்றுடன் நெருக்கமான தொடர்புடையது என்று உறைந்துபோன புனிதம், புண்ணியம் போன்ற சொல்லாடல்களில் / இடங்களில் நம்முடைய நிலைப்பாடு என்னவாக இருக்கலாம்? இருக்க வேண்டும்?இடம் நோக்கி கடிதங்கள் நகரவில்லை. ஆனால், கேள்விகளின் காத்திரமான நிழல் கடிதங்களில் படிந்துள்ளது. நிழலின் நீட்சியாய்...
‘பண்பாடு தொடர்பான ஆழமான விவாதங்களை கருத்தியல் மட்டத்தில் எடுத்துச் செல்வது, தீவிரமான களச்செயல்பாடு இரண்டுமே இன்றைய காலக்கட்டத்தின் உடனடித்தேவை எனக்கருதுகிறேன். காத்திரமான ஒருசில பேருங்கூட கவனம் சிதறிப்போவதுதான் என் வருத்தம். மார்க்சியத்தின் மீதான நம்பிக்கையும், மார்க்சியம் தரும் நம்பிக்கையுமே வாழ்வை பிடிப்புள்ளதாக, அர்த்தமுள்ளதாக ஆக்குவதாக உணர்கிறேன் ஆழமாக. என மார்க்சிய வழியிலான நகர்தலுக்கு இட்டுச் செல்லும் தன் முன்வைப்பைத் தருகிறார் தோழர் கேகே.
இத்தகைய சமூக அமைப்புக்குள் பொருளியல் தேவை, அளவு குறித்து நாம் கொள்ள வேண்டிய நிலைப்பாடு பற்றிய கேள்வி அவசியமாகிறது. எந்தளவு பொருளைத் தேடுதல், எந்தளவு பொருளைச் செலவிடுதல், எவ்விதம் பொருளைப் பயன்படுத்துதல் போன்ற கேள்விகளுக்கு நமக்குள் பதில் காண தொடர்ந்து விவாதிப்போம்.‘ என தோழர் விஜி அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறார்.
கடவுள் என்ற ஒன்று உள்ளவரை பாவ, புண்ணியம் தொடர்ந்த செயல்பாடுகள் இருக்கத்தான் செய்யும். பொதுவுடைமை தத்துவத்தை முன் வைப்பவர்கள், இவற்றைக் கடக்கத்தான் வேண்டும். எப்படிக் கடப்பது? அதற்கான மறுவரையறை என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை. கணக்கற்ற கேள்விகள் எனக்கும் உண்டு. அவையெல்லாம் பொருளுடையதுதான? சரியா? என்ற குழப்பமும் உண்டு. என உழைக்கும் வர்க்கத்திற்கான பாடுகள் பெரும்பாடாய் இருக்கும் வரை இப்படியான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அவற்றை எதிர்கொள்வது எப்படி? எதிர் கேள்வி எழுப்புகிறார் தோழர் கருப்பு.
பாவபுண்ணிய நம்பிக்கைகள் கடவுளுடனும் மதத்துடனும் தொடர்புடையது. ஆனால் முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக தனக்கேற்றவகையில் அவற்றை வரையறை செய்திருக்கிறது. பாவம் புண்ணியம் போன்ற சொற்களை நாம் உள்வாங்கி அச்சொற்களைக் கடக்க வேண்டும். மறுவரையறை செய்ய வேண்டுமென்றால் தத்துவம், அரசியல், பண்பாடு போன்ற களங்களில் நாம் சரியான தெளிவுடன் நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கும். அதையொட்டி சரியான செயல்பாட்டிற்குரிய வேலைத்திட்டத்தை நாம் உருவாக்குவதற்கான முயற்சியில் தொடரவேண்டும். இந்த வழிகளில் நாம் செயல்படுவது மிகவும் எளிதானதல்ல. ஆனால் அடுத்துவரும் தலைமுறைகளுக்காகவும், அவர்களுக்கு நல்ல ஒரு சூழலை உருவாக்குவதற்காகவும் இதை நாம் செய்தே ஆக வேண்டும் என, சிரமமான வேலை என்றாலும் செய்துதானே ஆகவேண்டும் என்கிறார் தோழர் சுப்புராயுலு.
புனித(?) பூமியான இந்தியாவில் கடவுளாக சித்தரிக்கப்படும் அனைவரும் ஒரு கதையின் கதாப்பாத்திரங்களாகத்தான் இருக்கிறார்கள். இப்போதும்கூட பணம்படைத்தவர்களின் வரலாறுகள் புத்தகமாவதை நாம் பார்க்கலாம். அங்கும் நமக்கு கதைதான் சொல்லப்படுகிறது. நீங்கள் சொல்வதைப்போல எழுதுகிறவர்கள் அல்லது எழுதுகிறவர்களை கவனிப்பவர்கள் அங்கு முன்னிலைப்படுத்தப்படுவதும், மற்றவர்கள் அங்கு இல்லாமல் இருப்பதும் சாதாரணமான உண்மையாகி விடுகிறது. அவர்களின் பாவ, புண்ணிய வரையறை அவர்களின் சமூகத்திற்கானதாகத்தான் இருக்கும்.‘ என்ற வரிகள் மூலமாக நமக்கான மறுவரையறை தேவை என்பதைச் சொல்லாமல் சொல்லும் செல்வா.
இக்கருத்துக்கள் எல்லாம் அப்படியே நிற்க. கடித ஊடாடலில் நாம் தொட்ட இடங்களின் அடிப்படைகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம். வரலாற்றுப் பொருள்முதல்வாதம் பற்றிய அறிமுகமாக எங்கல்ஸ், டூரிங்கிற்கு எழுதிய மறுப்பில் சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் மெய்யான அடித்தளமாய் எப்போதும் அமைகிறது. இதிலிருந்து தொடங்கினால்தான் வரலாற்றில் அந்தக் காலக்கூறுக்குரிய நீதிநெறி, அரசியல் நிறுவனங்களும் மற்றும் சமயக் கருத்துக்களுமாகிய மேற்கட்டமைப்பு அனைத்திற்கும் நாம் முடிவான விளக்கம் காணமுடியும்…. இதுவரை செய்யப்பட்டது போல மனிதனது உணர்வைக் கொண்டு அவனுடைய வாழ்நிலைக்கு விளக்கம் கூறுவதற்குப் பதில், மனிதனது வாழ்நிலையைக் கொண்டு அவனுடைய உணர்வுக்கு விளக்கம் கூறுவதற்கு ஒரு வழி கண்டறியப்பட்டது.  என்று முன்வைக்கிறார்.
அதாவது வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின்படி ‘சமூக உற்பத்திமுறைதான், எல்லாவகையான சமூக உணர்வுநிலைகளையும் தீர்மானிக்கிறது. உற்பத்திமுறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும். இந்தப் பொருளாதார அமைப்பே அடித்தளம். தத்துவம், மதம், அரசியல், சட்டம், அறநெறி, பண்பாடு, கலை இலக்கியம் போன்றவை குறிப்பிட்ட பொருளாதார நிலைக்கு ஏற்பத் தோன்றும் மேற்கட்டமைப்பாகும்.
அடித்தளமும் மேற்கட்டமைப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பைத் தோற்றுவிக்கும் காரணமாகவும் அமைகிறது. அதாவது சமூகத்தின் அடித்தளத்திற்கு (உற்பத்திமுறைக்கு) ஒத்த மேல்கட்டமைப்பு உருவாகிறது.
மேல்கட்டமைப்பின் சுதந்திரம் சார்பு நிலையானது. அது தோன்றிய அடித்தளத்தை வலுப்படுத்தும் அல்லது அதன் வழியாக தான் நவீனப்பட்டு வளருமே ஒழிய அடித்தளத்தில் பெரியஅளவில் எந்த மாற்றத்தையும் நேரடியாக ஏற்படுத்திவிடாது.
மேல்கட்டமைப்பு அடித்தளத்தின் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதல்ல இதன் பொருள். பெரிய அளவில் ஏற்படுத்தாது. மேல்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது இடையீடு செய்வதை இயக்கவியல் முறையில் புரிந்துகொள்ள வேண்டும்‘
வறட்டுத்தத்துவமாக இந்தக் கருத்துக்களை முன்வைக்கவில்லை. மார்க்சும், எங்கல்சும்கூட அப்படிச் சொல்லவில்லை. “...வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருதுகோளின்படி மெய்யான வாழ்க்கையின் உற்பத்தியும் மறுஉற்பத்தியுமே வரலாற்றை முடிவாக நிர்ணயிக்கின்ற சக்திகளாகும். மார்க்சோ, நானோ இதற்கு மேல் ஒருபோதும் சொல்லவில்லை. ஆகவே, பொருளாதாரக்கூறு ஒன்றுதான் நிர்ணயிக்கின்ற ஒரே கூறு என்று யாராவது இதைத் திரித்துக் கூறினால், அவர் இந்தக் கருதுகோளைப் பொருளில்லாத, சூக்குமமான, அர்த்தமில்லாத சொற்றொடராக மாற்றிவிடுகிறார்.“ என 1890 செப்டம்பர் 22ல் பிலோஹுக்கு எங்கெல்ஸ் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான வரலாற்றுப் பொருள்முதல்வாத கருதுகோளின்படி பார்த்தால், நிலவுடமைச் சமூக காலம்வரை இறையுடன் தொடர்புடையதாய் இருந்த பாவ புண்ணியங்கள், முதலாளித்துவ சமூகத்தில பொருளதிகாரத்துடன் தொடர்புடையதாய மாறியதை நாம் புரிந்து கொள்ள முடியும். இதன் தொடர்ச்சியாக ஏகாதிபத்தியத்தின் நவீன வடிவமான உலகமயமாதல் காலகட்டத்தில் நிறுவன அதிகாரம், அதிலும் குறிப்பாக பன்னாட்டு நிறுவன அதிகாரமும், பொருளாதார நிலையில் உச்சத்தில் உள்ள பன்னாட்டுப் பரதேசி மடங்களும் பாவ புண்ணியத்தை வரையறை செய்வதற்கான அங்கீகார மையங்களாக மாறுவது தவிர்க்க முடியாதது.
அடித்தளமாக உள்ள உற்பத்தி உறவுகளுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடிய பாவம், புண்ணியம், புனிதம், தீட்டு போன்ற நம்பிக்கைகள் அவற்றையும் மீறி இன்னும் நிலவுகின்றனவா? என்றால் ஆம் என்பதே பதில். ஏனெனில், எப்படி எல்லாக் குரங்கும் மனிதனாக மாறவில்லையோ, அப்படி நிலவுடமைச் சமூகத்தின் எல்லா நம்பிக்கைகளும் முதலாளித்துவக் கருத்துக்களாக மாறவில்லை. இந்தியா ஒரு அரை முதலாளித்துவ நாடாக / கால் நிறுவனமய நாடாகத்தான் இன்னும் இருக்கிறது. ஆனால் அதனை முழு ஏகாதிபத்திய சக்தியாக மாற்றுவதற்கான இச்சை / விருப்பம் / ஆசை (ஃப்ராய்டிய மனோநிலையுடன்) சில தொழில் நுட்ப வணிகர்களால் இந்தியர்கள் என தம்மை (ரொம்ப ரொம்ப) ஆழமாக நம்புபவர்கள் மனதில் ஊன்றி வளர்க்கப்படுகிறது.
இவற்றுக்கு மத்தியில், இவை பற்றிய புரிதலுடன் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருதுகோளின்படி நாம் இயங்கியல் ரீதியாக பாவம், புண்ணியம், புனிதம், தீட்டு போன்றவற்றை நிராகரிப்போம். அதே நேரத்தில், நிலவுடமைச் சமூகத்தின் மிச்ச சொச்சங்களை, வர்க்க உணர்வுடன் எதிர்கொள்வோம். அவர்களின் அந்த நம்பிக்கை வளர்ப்பிற்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். இக்கடிதத்தை இத்துடன் தற்காலிகமாக முடித்துக் கொள்கிறேன். மீண்டும் தொடர்வோம்.
என்றென்றும் தோழமையுடன்
மதிகண்ணன்
பி.கு. : (கடித ஊடாடலின் இடையே வெளிப்பட்ட ‘பண்பாட்டு மார்க்சியம் என்ற சொற்பிரயோகம் தொடர்பான கருத்துக்களை தோழர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்)