Monday, July 25, 2011

அன்னா ஹசாரேயும் ஆட்டுப்பால் சாயாவும் - கேகே



ஒரு திருமண வீட்டில் உணவு உண்டபின் சற்று ஓய்வாக லஞ்சம், கையூட்டு, ஊழல் போன்ற பதங்களை வைத்து ஒவ்வொன்றிற்கும் என்ன வித்தியாசம், ஒற்றுமை என்பது பற்றி பேசிக்கொண்டிருந்தோம் ஒருநாள். வெகு இயல்பாக ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் பக்கம் திரும்பியது உயர் நடுத்தர வர்க்கத்தை நோக்கிப் பாயும் நடுத்தர வர்க்கத்து, நடுத்தர வயது இளைஞர்களின் பேச்சு. ஊழலில், வருவாய் ஏய்ப்பில் கைமாறிய நோட்டுகளின் எண்களைக்கூட துல்லியமாகக் கணித்துவிடுவார்கள் போலிருந்தது அங்கிருந்த சிலர். அந்தளவிற்கு விரல்நுனியில் நடனமாடினார்கள். செரிமானப் பேச்சு முடிந்த பின்னர் ஒவ்வொருவராய் நழுவிப் போனோம்.

ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிடத்தக்க தனித்துவமிக்க சிறிய, பெரிய அளவில் ஊழல்கள் கண்டறியப்பட்டு நிறையப் பத்திரிகைகள் விற்பதற்கும், டி.வி., டி.ஆர்.பி.யைக் கூட்டுவதற்கும் அந்த ஊழல்கள் பெரிதும் உதவியிருக்கின்றனவேயொழிய ஊழலின் ஊற்றுக்கண் என்று சொல்வார்களே அந்த ஊற்றுக்கண் பற்றி யாரும் அலட்டிக் கொண்டதேயில்லை. ஊழல்கள் காரணமாக யாரும் தண்டிக்கப்பட்டதாகவும் எனக்கு எந்த நினைவும் இல்லை.

இந்தியா நடுத்தர வர்க்கத்தினரால் வேகமாக நிரம்பி வருகிறது. இதன் பொருள் அடித்தட்டு மக்கள் பொருளாதார மேம்பாடு பெற்று நடுத்தர வர்க்கமாகி வருகிறார்கள் என்பதல்ல. அடித்தட்டு மக்கள் வாழ வழியற்றவர்களாக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதே. இவர்களின் வாழ்வாதாரங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன. இருப்பிடங்களிலிருந்து நிர்வாகக் காரணங்காட்டி விரட்டியடிக்கப்படுகிறார்கள். பணிப்பாதுகாப்பு கிடையாது. அடுத்தவேளை சோறு என்பதே கேள்விக்குரியது என்றளவில் இருக்கிறார்கள். இன்னமும் சொல்வதானால் இவர்களது உயிர் வாழும் உரிமையே மறுக்கப்பட்டு ‘கர்மி கட்டோவ்’ என்ற முழக்கம் மூலமாக எல்லாவகையிலும் ஏதிலிகளாக மாற்றப்பட்டு பின் இவர்களது இருப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டு மாயையான புள்ளிவிவரங்கள் பரப்பப்படுகின்றன.

இந்த அடித்தட்டு மக்களுக்கு லோக்பால் தெரியாது. ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம் எதுவும் தெரியாது. தேவையுமில்லை. ஆனால் பல்கிப்பெருகியதாகக் காட்டப்படும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த ஆதர்ஷ், காமல்வெல்த் எல்லாமே தம்மை நேரடியாகப் பாதிக்காத, ஆனால் நாட்டை ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் விஷயம் என்பது மட்டும் தெரியும். உண்மையில் நடுத்தர வர்க்கம் என்பதும், நடுத்தர வர்க்க மனோபாவம் என்பதும் மிகச் சிக்கலானது. குழப்பமானது. சமூக இயங்கியலை தனக்குச் சாதகமானதாக மட்டுமே மாற்ற முயலும் தன்மையச் சிந்தனை கொண்டது. மேல்தட்டு வர்க்கத்தால் சூப்பிப் போடப்பட்ட எலும்புத் துண்டுகளும், எச்சில் பர்கர்களும், கெண்டகி சிக்கன்களும், மிச்ச மீதி கோலா பானமும் நேரடியாக நடுத்தர வர்க்கத்தினருக்கே போய்ச் சேருகின்றன. அம்பேத்கர், பெரியார் இன்னபிற சமூகப் போராளிகளின் இடையறாத செயற்பாடுகளால் நடுத்தர வர்க்கத்திற்கு (அநேகமாக இடைச்சாதிகள்) கிடைத்த ஓரளவு கல்வி வாய்ப்பும், மேல்வர்க்கம் தின்றதுபோக மிச்சமீதியும்தான் தரப்படுகிறது.

இந்த நடுத்தர வர்க்கம்தான், எளிதில் வசியம் செய்யப்படக் கூடியதாய் இருப்பதால் அநேகமாக ஊடகக் கதாநாயகர்கள் யாவரும் இந்த நடுத்தர வர்க்கத்திலிருந்து பார்வைக் குறியை விலக்குவதில்லை. திரைக்கதாநாயகர்கள், மலிவான அரசியல்வாதிகள் இதில் எப்போதுமே கில்லாடிகளாக இருந்து வருகிறார்கள். ஒரே பாடலில் கோடீஸ்வரனாகும் கனவு காணும் நடுத்தர வர்க்கம் ஒரே நாளில் நாட்டையே மாற்றிவிடும் கனவு காணச் சொல்லும் நிறைய பேரைச் சந்தித்திருக்கிறது. இந்த வர்க்கம் ஆதர்ஷ், காமன்வெல்த் ஊழல், ஸ்பெக்ட்ரம் என புதுப்புது ஊழல்கள் அம்பலமாகி வந்த கட்டத்தில் கையில் அற்புத விளக்குடன் அலாவுதீன் வந்தால் அசந்தே போகாதா என்ன? அன்னா ஹசாரே வந்தார்.

நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிறைய பாடங்கள் சொல்லித்தரப்பட்டன. இதோ மீண்டும் வந்துவிட்டார் காந்தி. புதியதோர் சத்தியாகிரகம், மீண்டுமொரு சுதந்திரப் போராட்டம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டன. அன்னா ஹசாரே ஊழலுக்கெதிராகத்தன் உயிரையே கொடுப்பேனென்றார். இவருக்காதரவாக பெரும் கூட்டம் கூடியது அல்லது அப்படிச் சொல்லப்பட்டது.

உண்மையில் அன்னா ஹசாரேயின் போராட்டம் எத்தகைய பின்புலத்தில் நடைபெறுகிறது. காந்தியின் சீடரான, இன்னொரு காந்தி எனச் சொல்லப்படும் அவரது மேடையில் காந்தியைக் கொன்றவனின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்த்துகிறார்கள். சங்பரிவாரங்கள் அவருக்குக் காவல் நிற்கின்றன. பதற்றத்துடன் ஜெயப்பிரகாஷ் நாராயணன் காட்சி மீண்டும் அரங்கேறி விடக்கூடது எனக் கவனமாக காங்கிரஸ் சமாதானக் கொடியசைத்து வைக்கிறது.

இந்த அரசியல் ட்ரெண்டிற்கு ஏற்ப புரட்சிப் புயல், ஆன்மீக அரிச்சுவடி ராம்தேவ் நிறைய வித்தைகளைச் செய்து பார்க்கிறார். சில யோகாசனங்கள் எடுபடுகின்றன. சில யோகாசனங்கள் கால்களைச் சிக்கிக்கொள்ளச் செய்கின்றன. ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’க்குப் பிறகு மிகச்சிறந்த மாறுவேடதாரியாக, சடுதியில் மாறுவேடம் புனையும் ஆற்றலுடையவராய் மாறுகிறார் ராம்தேவ். அவரது அடுத்த பயிற்சியில் அவரது இந்த யோகாவும் சேரக்கூடும். அதென்ன மதியம் உண்ணாவிரதம் 2 மணிநேரம் நிறுத்தம் என்கிறார்கள். சாப்பிட்டுக் கொள்வார்களோ?

ஆனால் ராம்தேவுக்குச் சற்று முன்பாகவே அரசியல் பேசத்துவங்கிய மற்றொரு கார்ப்ரேட் சாமி பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ க்கு (இவர் இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வுத் தூது போகிறேன் என்றார். நக்சலைட்டுகள் நல்லவர்கள் அவர்களுடன் சமாதானம் பேசுவேன் என்றெல்லாம் குட்டிக்கரணம் செய்து பார்த்தார். ம்… ஸ்ரீஸ்ரீ யை யாரும் கண்டுகொள்ளவில்லை) இப்போது காட்சியில் நாம் இல்லையே என்ன செய்தென்ற கவலை. ராஜா நாடகத்தில் சாமரம் வீசும் பணியாளனாகவாவது காட்சியில் இருக்க நினைத்து இங்கும் ஒரு தூதுப்படலத்தை நிகழ்த்தினார். ‘அப்பாடா நானும் சீனுக்கு வந்துட்டேன்’ என்று சிரிக்கிறார். நல்லவேளை நித்யானந்த சுவாமிகள்ஜிக்கு இன்றைக்கு இமேஜ் டேமேஜ் ஆகவில்லை என்றால் அவரும்கூட உண்ணாவிரம் இருந்திருப்பார். பத்திரிகைகளுக்கு கூடுதலாய் சிறிது செய்தி கிடைத்திருக்கும்.

அதிருக்கட்டும். காந்தியின் சீடராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் அன்னா ஹசாரே காந்தியின் அரசியல் பற்றி எந்தளவிற்குப் புரிந்து வைத்திருக்கிறார் எனத் தெரியவில்லை. காந்தியின் அரசியல் மனுதர்மத்தை முன்னிறுத்திய அரசியல். ஆனால் அவரது இறுதிக்காலத்தில் மனுதர்மத்தை விடவும் நிகழ்கால செயல்தந்திரங்களைச் சரிவரப் புரிந்து கொண்டிருந்தார். அதனால்தான் இந்தியா அரசியல் சுதந்திரம் பெற்றபிறகு, பாகிஸ்தான் பிரிவினையை (மனமில்லாவிட்டாலும்) ஏற்றுக்கொண்டது, பாகிஸ்தானுடன் சொத்துப்பிரிப்பு (அதன் காரணமாகத்தான் அவர் கொல்லப்பட்டார் என்றொரு கூற்றும் உண்டு) சமூக வேறுபாடுகளைக் களைவது, மத விரோதத்திலிருந்து மத சகிப்புத் தன்மைக்கு மக்களை மடைமாற்றம் செய்வது என முற்றிலும் நேரடி அரசியலிருந்து விலகிய சமூகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்தினார்.

தற்போது நந்திகிராமில் விளைநிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. விவசாயிகள் விரட்டப்படுகிறார்கள். நாடு முழுவதும் பசுமைப்புரட்சியின் விளைச்சலாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு இந்தியச் சொத்துகள் விருந்தாக்கப்படுகின்றன சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்றபெயரில். சனாதன வருணாசிரமத்தின் கொடூர(கௌரவக்-?) கொலைகள் நிகழ்கின்றன. பசுமைவேட்டை என்ற பெயரில் ஆதிகுடிகள் விரட்டப்பட்டு பசுமை கொள்ளையடிக்கப்படுகிறது. பகாசுரக் கம்பெனிகள் நாடு முழுவதும் பசியுடன் மேய்ந்து கொண்டிருக்கின்றன. போபால் விஷவாயுக் குற்றவாளி ஆன்டர்சன் தனித்தீவில் நிதானமாய் சுகமாய் குளித்துக் கொண்டிருக்கிறான்.

காந்தியின் சீடரான ஹசாரேக்கு இந்த சமூக, அரசியல் பிரச்சனைகள் எதுவுமே கண்ணில் படவில்லை போலும். சம்மந்தமே இல்லாமல் மோடியைப் புகழ்கிறார். மறுநாள் மராட்டிய அரசின் ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தை எண்ணி அகமகிழ்கிறார்.

இந்தியா மிகப்பெரிய (மக்கள் தொகையில்) ஜனநாயக நாடு. ஆனால் இந்திய ஜனநாயகம் என்பது முற்றுப்பெறாத ஜனநாயகம். வார்த்தை அலங்கரிப்புகளினாலான ஜனநாயகம் நிலவும் நாடு இது. அதனால்தான் இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் சிலபகுதிகளை அம்பேத்கார், பெரியார் போன்றவர்கள் எரித்தார்கள். அதிலும் இந்திய ஜனநாயகத்தை வடிவமைத்துக் கொடுத்ததே முதலாளித்துவ, ஏகாதிபத்தியம்தான். மக்களைப் புறக்கணித்த, அதிகார மட்டத்தை உள்ளடக்கிய, முதலாளித்துவம் வடிவமைத்துக் கொடுத்த ஜனநாயகத்துக்குச் சொந்தமான பெரிய ஜனநாயகநாடு இந்தியா. முதலாளித்துவம் இருக்குமிடத்தில் ஊழலும், சுரண்டலும், அடக்குமுறையும் இருப்பதென்பது வியப்பானதல்ல. அவ்வகையில்தான் இந்திய ஜனநாயகத்தின் ஊழலும், சுரண்டலும். இதன் பொருள் ஊழலை ஏற்றுக்கொள் என்பதல்ல. ஊழலைவிடவும் சுரண்டலை ஒழிப்பது மிகவும் முக்கியமானது என்பதை ஹசாரே போன்றவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள். ஊழல் என்பது நிர்வாகப் பிரச்சனை சார்ந்தது. சுரண்டல் என்பது பூமியின் ஒட்டுமொத்த அவலங்களுக்கும் காரணமான கோரமுகம் கொண்டது. முதலாளித்துவத்தின் தலைப்பிள்ளையும், தலைமை ஆயுதமும், அதேசமயம் இதன் இயக்கியும்கூட இந்தச் சுரண்டல்தான் என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொண்டால் ஊழலின் சரியான முடிச்சினைக் கண்டுபிடித்து ஊழலை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல அதைச் சரிசெய்யவும்கூட முடியும்.

இதையெல்லாம் தெரியாமல் அல்லது மறைத்துவிட்டு ஊழல் எதிர்ப்பு நாடகமும், சமாதான நாடகமும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள் - ஊழலுக்கே காரணமாயிருக்கும் அத்தனை பேரும், அவர்களைப் பின்னால் இருந்து இயக்குபவர்களும்.

உண்ணாவிரத அரங்கேற்ற அரிதாரப் பூச்சுகளுக்கிடையில் ஒரு சிறுமி 200 பேரால் பலவந்தப்படுத்தப்படுகிறாள். தலித் தொழிலாளி மனிதக் கழிவுகளைச் சுமக்கும்படி நிர்பந்திக்கப்படுகிறான். மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் அடித்துக் காயப்படுத்தப்படுகிறார்கள். இதற்காக யாரும் பெரிய போராட்டங்களை ஒருங்கிணைக்க முடியவில்லை. இதையெல்லாம்விட ரஜினிக்காக யாகம் நடத்தப்படுகின்ற செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.

பெண்களைப் பாலியல் துன்புறுத்தலுக்ள்ளாக்கிய இந்திய ராணுவத்திற்கெதிராகப் போராடிய ஐரோம் ஷர்மிளா பல்லாண்டுகளாக உண்ணாவிரதம் இருப்பது பற்றிய செய்தியை ஒரு ஓரத்தில்கூட சொல்லாத சர்குலேசன், டி.ஆர்.பி. ஈனப்பிறவிகள் உண்ணாவிரதத்திற்கு இண்டர்வெல் விடும் கோமாளிகளுக்கும், வாய்ச்சவடால் பேசும் போலிகளுக்கு வெற்று விளம்பரம் தேடித்தருகிறார்கள்.

எல்லா உண்ணாவிரதத்திலும் முடிவில் பழச்சாறு தந்து முடிப்பது வழக்கம். காந்தியின் சீடன் அன்னாஹசாரேவுக்கோ ஆட்டுப்பால் சாயாதான் தரவேண்டும்போல. அந்தளவிற்குத்தான் அவர் காந்தியைப் புரிந்து கொண்டிருக்கிறார். இந்த ஆட்டுப்பால் சாயாக்களின் அரசியல் பிஜேபிக்கோ, காங்கிரசுக்கோ போக்கினைப்பொறுத்து யாருக்கேனும் உதவலாம். இப்போதைக்கு ஆட்டுப்பால் சாயா வழங்கியபிறகு சியர்ஸ் சத்தத்துடன் ஜெய்காளி சத்தமும் கேட்கிறது. எனினும் பின்னாளில் ஆட்டுப்பால் சாயாவின் அரசியலோ அல்லது மாட்டுக்கறி எதிர்ப்பு அரசியலோ இங்கு தாண்டவமாடும். அப்பொழுதும் இங்கு ஊழல் இருக்கும். சுரண்டலும் இருக்கும். ஏனென்றால் இது முதலாளித்துவம் வடிவமைத்துத் தந்த ஜனநாயகம். அது அப்படித்தானிருக்கும்.


(அருப்புக்கோட்டையில் 2011 ஜூலை 2 ஆம் நாள் மாவிபக நடத்திய தோழர் கு.பா. நினைவுநாள் கருத்தரங்கில் முன்வைக்கப் பெற்ற கட்டுரை)

வார்த்தைகளுடன் ஒரு யுத்தம் - கந்தகப் பூக்கள் ஸ்ரீபதி



நான் என்னுள் எழுந்த வார்த்தைகளுக்கெல்லாம் வர்ணம் பூசிக்கொண்டிருந்தேன். கடிகாரம் நேரத்தைத் தின்றுகொண்டிருந்தது. அந்த சத்தம் அறையெங்கும் நிறைந்திருந்தாலும் என்னை மறந்து நான் வர்ணம் பூசுவதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். அந்த வார்த்தைகள் என்னுள் எப்படி எழுகின்றன என்ற சிந்தனையில் சிறிது நேரம் பயணம் செய்யத் தொடங்கினேன்.

சிறுவயதில் வண்ணத்துப் பூச்சியின் பின்னாலேயே அதைப் பிடிக்கச் சென்றபோது கீழே விழுந்து முள் குத்தியது. பின்னொருநாளில் தும்மல் போட்டதற்காக ஒரு நீள மூங்கில் பிரம்பால் எனது வகுப்பாசிரியர் வெள்ளாளப்பாண்டியன் எனது கையைப் பதம் பார்த்தது. முதன் முதலில் மிதிவண்டி ஓட்டிப் பழகிய நாட்களில் எனது தந்தையின் பெரிய மிதிவண்டியை ஓட்டியதும், எதிரே ஒரு கிழவி வந்ததால் வண்டியை நிறுத்த கால் எட்டாததால் முன்னால் குதித்து மர்மப்பகுதியில் அடிபட்டது.

வகுப்பறையில் பெண்கள் மத்தியில் என்னைக் காட்டிக் கொள்ள வார்த்தைகளைப் பிடித்து மடித்து மடித்து கவிதையென ஒரு பிரதிக்குள் புதைத்தது. சிகரெட் ஒன்றை நண்பனிடம் வாங்கி இழுத்து இருமி இருமிக் கண்கள் கலங்கியது. எதிர் வீட்டுப் பெண்ணுக்குக் காதல் கடிதம் எழுதி அவளது அண்ணனுடன் சண்டையிட்டுக் கை ஒடிந்தது.

ஆனால் இப்போது வந்த வார்த்தைகளுக்கும் இந்த நிகழ்வுகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை மூளை ஆய்வு செய்து சொன்னது. ஏதோ ஒன்று உள்ளிருந்து இயக்கியே நான் எழுதுகிறேனா? “இதுவரை யாரும் எழுதாததை யாருக்கும் தெரியாத வார்த்தைகளை ஒன்றும் நீ எழுதிவிடவில்லை“ என்று சுவரில் படிந்த எனது நிழல் சொல்லிச் சிரித்தது.

எழுந்து சென்று கண்ணாடியில் என்னைப் பார்த்தேன். எனது பிம்பம், “நிழலோடு வா” என உத்தரவிட்டது. “என்னைப் பார்க்கத்தான் உன்னை தேடி வந்தேன்” என்றதும் அமைதியாக என்னைப் பிரதிபலித்தது. எழுதிக்கொண்டிருந்த பேனாவிற்குள் இருந்த ஊதா நிற மை வெளியேறி ஒரு பூதம் போல் உருவமாகி, “வந்து எழுதித் தொலை. என்னால் தாங்க முடியவில்லை. எத்தனை வார்த்தைகளை எத்தனை காலங்களுக்குத்தான் என்னுள்ளே வைத்துக் கொண்டு நான் அவதிப்படுவது?” என்று கத்தியதும் திடுதிடுவென ஓடிவந்து மீண்டும் கையில் பேனாவை எடுத்தேன்.

எழுத்துக்கள் எல்லாம் தெரியும். எத்தனை எழுத்துக்களைச் சேர்ப்பது? எந்த வார்த்தையை உருவாக்குவது? தூங்கிக் கொண்டிருந்த என் துணைவியின் கூந்தலிலிருந்து நசுங்கிக் காய்ந்து போன பூக்கள் எல்லாம் நாரைவிட்டு வெளியேறி என் அருகே வந்து வார்த்தைகளாகி “நீ கோக்க மட்டுமே செய்கிறாய்” எனச் சிரித்தன.

எனக்குள் கோபம் எழுந்தது. அத்தனை பூக்களையும் எடுத்து சன்னல் வழியே வெளியே வீசினேன். அவைகள் நிலவின் மீது பட்டு நிலவின் பல பகுதிகளில் கருப்பான காயமாகின. தென்றல் என் கோபத்தைத் தணிக்க வார்த்கைள் இல்லாமல் வந்து வருடிக் கொடுத்தது.

வர்ணம் தீட்டிக் கொண்டிருந்த வார்த்தைகள் நிறைந்த அந்தக் காகிதத்தைக் கசக்கி வெளியே எறிந்தேன். இரவுப்பயணம் சென்று கொண்டிருந்த வெள்ளைப் பறவைகள் ஏதோ உணவு கிடைத்ததே என காகிதங்களில் இருந்து கொட்டிய வார்த்தைகளை எடுத்துக் கொண்டு உற்சாகச் சத்தமிட்டுப் பறந்தன.

என் மகள் ஒன்றுக்கு இருந்தாள். அவளது ஆடையைக் கழட்டி வேறு போர்வையில் படுக்க வைத்தேன். ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இருந்தாலும் அவைகள் ஒன்றாக இணையும்போது என்ன அர்த்தத்தை உருவாக்குகின்றன? அந்த ஒற்றை அர்த்தம் வாசகனுக்குள் என்ன செய்யும்? அதை எண்ணி வார்த்கைளைத் தேடலாம் என மீண்டும் வார்த்தைகளோடு ஒரு யுத்தத்திற்குத் தயாரானேன்.

காலவெளிதாண்டி செல்ல என் ஆழ்மனதிற்குள் பயணமானேன். வட்சவட்சமாய் வார்த்தைகள் முளைத்துக் கொண்டே இருந்தன. வண்ணத்துப் பூச்சிகள் போல் அழகானவற்றைப் பறித்து வந்து காகிதத்தில் கொட்டினேன். நாய் ஒன்று ஊளையிட தொடர்ந்து நான்கைந்து நாய்கள் சேர்ந்து இசைபாட விசில் சத்தம் கேட்டுக் கொண்டே வந்தது. கொஞ்ச கொஞ்சமாய் கரைந்து காணாமல் போனது. வந்த வார்த்தைகள் எல்லாம் அறுந்துபோய்விட மீண்டும் வெறுமையாகிப் போனேன்.

ஒரு காகிதத்தில் இன்னதென்று சொல்ல முடியாதபடி என் விரல்கள் ஏதோ ஒன்றைக் கிறுக்கிக் கொண்டிருந்தன. பலமுறை இதுபோன்ற யுத்தத்தில் ஈடுபட்டு புறமுதுகு காட்டி ஓடிச்சென்று போர்வைக்குள் ஒளிந்துகொண்டது உண்டு. இன்றும் அப்படித்தானா? என்ற சலிப்பு வந்தது.

அந்தத் தாடிக்காரக் கிழவன் நாளை எதிரே உட்கார்ந்துகொண்டு நக்கலாகச் சிரிப்பான். அவனுக்காகவாவது ஏதாவது எழுதித் தொலைக்க வேண்டும். அவனது தாடியிலிருந்த மயிர்கள் பாம்புபோல் வளர்ந்து வந்து என் கைகளை இறுக்கித் தொத்தத் தொடங்கின.

எந்தத் தலைப்பை நினைத்தாலும் எவனாவது ஒருவன் அதுகுறித்து ஏற்கனவே எழுதி வைத்திருக்கிறான். ஏன்தான் இந்த இரண்டாயிரம் ஆண்டுகால பழமையான மொழியில் வந்து பிறந்து தொலைத்தேனோ? எதை எழுதினாலும் “போலச் செய்துள்ளாய். அதில் உள்ளது இதில் உள்ளது” என்று விமர்சனங்கள்.

இந்த ஒற்றை அர்த்த வெளியில் நடப்பதைவிட இரட்டில் நடந்தால் இலகுவாகத் தப்பித்துவிடலாம் என யோசனை தோன்றியது. கயிறு என்றால் பாம்பு எனலாம். பாம்பு என்றால் விழுது எனலாம். விழுது என்றால் துண்டு எனலாம். எந்த வார்த்தைக்கும் அதன் அர்த்தம் தருகின்ற மையத்தை நொறுக்கிவிட்டால் போதும் அவனவனுக்கு வேண்டியதை வேனவனே ஊகித்துக் கொள்வான்.

அர்த்தம் குறித்தோ வார்த்தை குறித்தோ விமர்சனப் பேய்களின் வாய்களுக்குள் சிக்காமல் தப்பிவிடலாம். வர்ணம் தீட்டி வாழ்வதை விட வார்த்தை உடைத்து எளிதாக நிற்கலாம். அர்த்தம் சிதைத்து வார்த்தை உடைத்து எழுத எத்தனித்தபோது இதயத்திலிருந்த ஒளி சட்டென என்னை நிராகரித்து வெளியேறி ஒரு பறவை போல வடிவெடுத்துச் சடசடவென பறந்து போனது.

வார்த்தைகளைக் கடித்துக் குதறி அர்த்தத்தைத் சிதைத்து மொழியின் குருதியை வாய்களில் ஒழுகவிட்ட ரத்தக் காட்டேறிகளின் கூட்டத்தில் யாருக்கும் தெரியாமல் பறவை அமர்ந்தது. ஒவ்வொன்றும் புதியதாய் ஒவ்வொரு காட்டேறியின் பேச்சும் புதுமையாய் புதியாததாய் இருந்தன. எங்கெங்கோ செத்துப்போன இசப்பிணங்களின் நாற்றத்தை வாசமென எண்ணி அதில் மொய்த்திடத் துடித்தன. வார்த்தைகளை மட்டுமல்ல சொற்களையும் கடித்துத் துப்புக்கொண்டிருந்தன.

அவர்கள் இழுத்து வந்த பலநூற்றாண்டு கன்னி ஒருத்தி துகிலுறியப்பட்டு ஒரு மூலையில் அழுது கொண்டிருந்தாள். ரத்தக் காட்டேறிகளின் வாயிலிருந்து வெளியேறிய சொல்லம்புகள் அவளைக் குத்திக் கிழித்தன். அவர்களது நூல்களுக்குள் செத்துக் கிடக்கும் பிரதிகளில் இருந்த சிதைந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் முள்கயிறுகளாகி அவளைத் துண்டு தண்டாக்கி அழித்திட அவளையே சுற்றிக் கொண்டிருந்தன.

தங்களை கவிதாயினியாக அடையாளம் காட்டிக் கொள்ள தங்களது இருப்பை அதிர்வுகளால் உலகுக்கு உணர்ந்தத அங்கிருந்த பெண்கள் தங்களது அந்தரங்க உறுப்புகளை அறுத்து அறுத்து இரத்தம் சொட்ட சொட்ட காகிதங்களில் ஒட்ட வைத்துக் கொண்டு வந்திருந்தார்கள்.

கூரைமேலிருந்த ஒளிப்பறவை அரண்டுபோய் செய்வதறியாது நிர்வாணமாய் நின்று கொண்டிருந்த அந்த கன்னியை அப்படியே மூடி வானில் பறந்து கடலுக்குள் இருந்த விழிநீர் வடிவ தேசத்திற்கு காப்பாற்றச் சென்றது. குறிகள் குறித்த விவதங்களின் மூலம் கைகலப்பில் ரத்தக்காட்டேறிகள் இருந்ததால் கன்னி மறைந்து போனதை அவைகள் உணரவில்லை. அந்தக் கூட்டம் இலக்கியப் பத்திரிகைகளின் தாகங்களுக்கு நீர் வார்த்தது.

சிங்கத்தின் விந்தில் ஜனித்த அசிங்க மிருகமொன்று நரிகள் உதவியால் புலிக்கறி தின்று கொண்டிருந்த காட்டிற்குள் முள்வேலிகளுக்கிடையே முடங்கிக் கிடந்த அவளது பிள்ளைகளிடம் ஒளிப்பறவை அவளை ஒப்படைத்தது. அங்கிருந்த அவளது நல்லபிள்ளைகள் “உனக்குப் பிள்ளையாக பிறந்ததால்தான் நாங்கள் நாடிழந்து வீடிழந்து உறவிழந்து உரிமையிழந்து உயிரிழக்காது அவதியுறுகிறோம்” எனப் புலம்பி அவளை ஒதுக்கினார்கள். “நாம் ஓலமிட்டடபோது மௌனத்தை முழுங்கிக் கொண்ட தேசத்திலிருந்து வந்த இந்த பறவையும் நது விரோதிதான்” என ஒரு குரல் எழுந்தததும் ஒளிப்பறவை நோக்கி பல்லாயிரம் கற்கள் பறந்து வந்தன.

அப்போது மேகங்களிடையே இருந்து இறங்கி வந்த ஒரு கூட்டம் அந்தக் கன்னியைத் தங்கச் சங்கிலியால் பிணைத்து வானவீதி வழியே ஒழுத்துச் சென்றது. வேசியின் மார்வில் பால்குடித்து வளர்ந்த அவளது பிள்ளைகள் ஆயிரக்கணக்கில் கூடிய பெருவிழவின் மத்தியில் இறக்கிவிட்டது.

அவளுக்குப் பட்டாடைகள் அணிவித்து அவளது புகழைப்பாடி பரவசமாக்கியது. அவளை உச்சத்திற்கு ஏற்றுகிறோமெனக் கூறி வெள்ளைத்துரை விட்டுப்போன கழுமரத்தின் உச்சியில் ஏற்றியது. கருடன் ஒன்று விண்ணில் பறந்தபடி பார்த்துச் சிரித்தது.

ஆனால் தனது பிள்ளைகள் ஒருபுறம் அவதிப்படும்போது தனக்கிந்த ஆர்ப்பாட்டம் தேவையில்லை என கழுமரத்திலிருந்து குதித்து பட்டாடைகள் களைந்து நிர்வாணமாய் ஓடத் தொடங்கினாள். பதினோரு கோடி ரூபாய் மதுபானங்களை அவள்மீது கொட்டி மகிழ்ச்சியை அந்தக் கூட்டம் கொண்டாடியது. ‘தனது பிள்ளைகள் உடன்பிறந்த சோதரனுக்கு உதவிக்கரம் நீட்டாமல் மூளையை விற்றுவிட்டார்களே’ என எண்ணி அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த கவியரங்கின் மத்தியில் தூக்கில் தொங்கினாள்.

நட்சத்திரமாய் விண்ணில் மினனிக் கொண்டிருந்த முண்டாசுக்காரன் கையில் தடியுடன் அங்கே வந்து தாயின் பாதத்தில் விழுந்து அழத்தொடங்கினான். “ஏனடா அழுகிறாய். தீர்க்கதரிசி நீ சொன்னது இன்றுதான் நிறைவேறியுள்ளது. இங்கே நான் கொல்லப்பட்டாலும் எனக்குச் சாவில்லை. எத்தனைபேர் எத்தனைமுறை என்னைக் கொன்று பார்த்தார்கள். உன்னைப் போன்றோர் என்னை மீண்டும் பிறப்பித்துவிடுவதில்லையா? அழாதே வா போகலாம்” என அவன் கைபிடித்துச் சென்றாள்.

இதுகுறித்து அக்கறைப்பட அங்கே எந்த பிள்ளையும் இல்லை. மாலை விரும்பிகள் ‘பெருவிழா பெரும் வெற்றி’ என உலகெங்கும் தெரிவித்தார்கள். ஒளிப்பறவை ஒன்றும் செய்ய இயலாது பூமியெங்கும் ஒளியின் வேத்தில் கிறுக்குப் பிடித்தாற்போல் சுழன்று சுழன்று வந்தது.

அப்போது அதன் காதுகளில் உலகெங்கும் ஒரே குரல் விழுந்தது. “எங்கள் வயிற்றை மட்டும் எப்படியாவது அறுத்துவிடுங்கள். அது எழுப்பும் ஒலி எங்களால் தாங்கமுடியவில்லை” அவர்கள் பெயர் எழுதப்பட்ட அரிசியை திருடித் தின்றவர்கள் வானத்தில் பறந்து கொண்டே இவர்கள் குரல் கேட்காத திசைநோக்கிப் பயணம் செய்கிறார்கள்.

என் வயிறும் ஓலமிடத் தொடங்கியது. என் பெயர் பொறித்த அரிசியைத் தேடி எலியாகி ஓடினேன். ரேசன் கடையிலிருந்த பதிவேட்டில் எனக்கு வழங்கப்பட்டிருந்தது. நானும் முடிந்தவரை தேடிப் பார்த்தேன். சிக்கவே இல்லை. அவைகள் ஏதோ ஒரு சரக்குந்தில் கேரளத்திற்குச் சென்று கொண்டிருந்தன. என்ன செய்தென்று தெரியாமல் ஒரு செம்பு தண்ணீரைக் குடித்தேன். சத்தம் கொஞ்சம் குறைந்தது.

குறிகள் குறித்தோ அர்த்தம் சிதைத்தோ இந்த ஓலத்தை ஒழித்திட வழியுண்டா? வர்ணம் பூசி வார்த்தைகள் கோத்து எந்தப் பிணத்திற்கு மாலையிடுவது? கேள்விகள் வார்த்தைகளாகி வார்தைகள் ஆயுதங்களாகி என்னைத் துரத்தத் தொடங்கின. இதுபோன்று கோடிக்கணக்கான மக்களின் வயிற்றிலிருந்து எழுந்த ஆயுத வார்த்தைகளை தன் அலகில் சேகரித்து சுமந்து வந்த ஒளிப்பறவை என் மனதிற்குள் புகுந்து கொண்டது.

வர்ணம் பூசப்பட்ட வார்தைகள் எல்லாம் மலமாக மாறி அருவருப்பூட்டின. கண்களை மூடிக் கொண்டு அந்த வெற்று வார்தைகள் நிறைந்த காகிதத்தைக் கசக்கி எறிந்துவிட்டு காலத்தைப் பார்த்தேன். ஐந்து மணியில் கடிகாரம் ஆடிக்கொண்டிருந்தது. விடியலைத் துயிலெழுப்ப காகங்கள் கரையத் தொடங்கின. எழுந்து தேநீர் குடிக்க கிளம்பி விட்டேன். உங்களுக்கும் தேநீர் வேண்டுமா?

(மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் 2011 ஜூலை 2 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடத்திய தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப் பெற்ற சிறுகதை)

சாமி(யார்)? - பாண்டூ


கடவுளர்களால்(!)
உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் !?

வரம் வாங்குவதே,
சபிக்கத்தான் என்கிறபோது…
இவர்கள் தவங்கள்
கேள்விக்குள்ளாக்கப்படுகிறது!

இவர்கள்…
அவதரிக்கும் போதெல்லாம்,
அதர்மம் தலைதூக்கும்!

ஆசிர்வதிக்கும் போதெல்லாம்,
அஞ்ஞானம் அருளப்படும்!

தலையாட்டினால் பக்தன்…
கேள்வி கேட்டால் பித்தன்…
நல்லதென்றால் அவன் செயல்…
அல்லதென்றால் இவன் விதி…
இவர்கள் பிழைப்பிற்கு,
இதுவே நல்ல வழி ?!

இவர்கள்…
பற்றற்றவர்கள்…
அதனால்தானோ
வரவை மட்டுமே பார்க்கிறார்கள்!

ஏழு சக்கரங்களைப் பற்றி சிலாகித்தாலும்…
இவர்களது இறுதிக்காலம் என்னவோ
சக்கர நாற்காலியில்தான்…

பிராணாயாமா, யோகா, ஜீவ சமாதி என
ஆயிரம் பிதற்றினாலும்…
இவர்களது ஆவி பிரிவதென்னவோ
ஐ.சி.யூ.வில்தான்…

மனிதக் கண்களில்
மிளகாய்ப் பொடித் தூவும் இவர்களால்…
கேமராக் கண்களிலிருந்து
தப்ப முடிவதில்லை!

பக்தர்களே…
கால் கழுவக்கூட
காசு வாங்கும் இவர்களைக்
கை கழுவுங்கள்!

உதிர்ந்த மயிரைக்கூட
இவர்களால் ஒட்ட வைக்க முடியாது
உணருங்கள்!

விழித்திருங்கள்…
இதுவே சிறந்த தியானம்!

இனியாரும் கண்களை மூடச்சொன்னால்…
காதுகளை மூடுங்கள்!
முடிந்தால்…
ஆசிரமங்களையும்!

(மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் 2011 ஜூலை 2 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடத்திய தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப் பெற்ற கவிதை)

மௌனம் பேசும் வார்த்தைகள் - செண்பகராஜன்



குளிர் காலத்தின் இரவொன்றில்
நீ எனக்குப் போர்த்திய போர்வையில்
உன் பிரியத்தின்
கதகதப்பை உணர்ந்தேன்.

மழைக்காலத்தின்
மாலை நேரத்தில்
நீ தந்த தேநீரைவிட
சுவையாக இருந்தது
உனது அன்பான முத்தம்.

அறை முழுக்க
மின்விளக்குகள் ஒளிர்ந்தாலும்
நீ இல்லாத அறை
இருண்மையை எனக்குள் தடம் பதித்தது.

‘வான்கா’வின் நவீன ஓவியத்தைப் போன்று
என் உணர்வுகளைப்
புரிந்துகொள்ளாமல்,
உதிர்க்கும் வசைக் சொல்
உன் மனதின் வன்மத்தை எதிரொலித்தது.

சண்டைக்குப் பிறகு
சங்கீதமாய் ஒலிக்கும்
உனது சமாதான முயற்சி
மெல்லிய குரலில்
ஆயிரம் அதிர்வலைகளைப் பிரசவிக்கும்.

தனிமையில் நான் இருக்கும் தருணத்தில்
உன் புகைப்படத்தின் வழியே கசியும்
மௌனம் பேசும் வார்த்தைகளை
யாரால் கவிதையாக மொழிபெயர்க்க முடியும்?

(மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் 2011 ஜூலை 2 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடத்திய தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப் பெற்ற கவிதை)

சில கவிதைகள் - அருணோதயம்



இலக்கைச் சரிபார்த்தபடி
சுவர்விட்டு சுவர் தாவுவதும்
அடுக்களைப் பாத்திரங்களின்
அடுக்குகள் கலைத்து
திட்டு வாங்கி அலைவதும்
பொறுப்பான காவலாளிபோல்
வீடெல்லாம் உலவுவதும் கண்காணிப்பதும்
மின் விசிறியின் காற்றனுபவித்தபடி
என் படுக்கையில் உறங்குவதும்
ஊர் சுற்றிக் களைத்து
பதுங்கிப் பதுங்கி பின்வாசல் நுழைவதும்
என் செல்லப் பூனையின் இயல்புகள்
அதனழகுகளில் ரசித்தபடி
நாட்கள் நகர செல்லப் பிராணியோ
செல்லப் பிள்ளை போலானது.
சகுனம் பார்த்துத் திரியும் நீங்களோ
அதன் முகத்தில் விழிக்க
அருகதையற்றவர்களாய்.

0

அப்பா சொல்லி
மறுத்த வேலைகளை
இப்போது
ஒழுங்காகச் செய்கிறேன்
அப்பாவாகி.

0

உன் போன்ற சாயலில்
என்னைக் கடந்து போகிறவர்
தன்னையறியாமல்
எனை காலத்தின் பின் தள்ளுகிறார்.
எதிர்பாரா அத்தருணத்தில்
உன் ஞாபகம்
சுகமான நினைவாய்
நிறம் கொள்கிறது.

0

அதிகாலைப் புல்லில்
ஒட்டியிருந்தன
இரவின் பருக்கைகள்.

0

கடல் நமக்கு
மீன்களைத் தருகிறது.
அக்கரையோ
பிணங்களைத் தருகிறது.
நமது அரசாங்கமோ
இன்னும்
(கண்டன) அறிக்கைகளை மட்டுமே தருகிறது.

0

புற்று முற்றியபின்தான்
கவனத்திற்கு வருகிறது
கரையான்களின் கடுந்தவம்.

(மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் 2011 ஜூலை 2 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடத்திய தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப் பெற்ற கவிதை)

என்னவாயிற்று - மு.பழனிக் குமார்



இப்போதெல்லாம்
முணுக் முணுக்கென்று
கோபம் வருகிறது.

சொன்னதைக் கேட்கவில்லையென்று
மனைவி குழந்தைகள் மீது
சாட்டையாய், சப்தமாய் வருகிறது வார்த்தைகள்.

சட்டென முகம் சுழித்து, திருப்பி
உட்கார நேர்கிறது.

மிருகத்திலிருந்து மனிதன் என்று
பரிணாம வளர்ச்சி
மனிதனிலிருந்து மிருகம் என
மாறிக் கொண்டிருக்கிறது.

“நாற்பதில் நாய் குணம்
உண்மைதானா?”

ஊர் வேலையெல்லாம்
ஓடோடிச் செய்த காலம் போய்…
“இது என் வேலையில்லை,
என் நேரம் முடிஞ்சு போச்சு”
எப்படி வந்தது இந்த வார்த்தைகள்?

சலவை செய்ய வேண்டும்
எண்ணங்களை, வார்த்தைகளை, செயல்களை.
கறையாய் மாறி
கணக்கும் முன்பு
துடைத்தெறிய வேண்டும்
நெஞ்சின் அழுக்குகளை.

மணிக்கணக்காய், நாட்கணக்காய்,
இரவெல்லாம் பேசிய நாட்களெல்லாம்
என்னவாயிற்று?

இப்போதெல்லாம்
ஒரு நிமிடத்திற்கு மேல் என்ன பேசவென
யோசிக்கிறது மனசு.
‘அப்புறம்’ என்ற வார்த்தை
அடிக்கடி வருகிறது.
‘பார்ப்போம்’ என்ற சொல்
படக்கென வருகிறது.
என்னவாயிற்று?

(மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் 2011 ஜூலை 2 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடத்திய தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப் பெற்ற கவிதை)

இருக்குமிடத்திற்கேற்ப - கேகே



இவர்களாயிருக்க விழைகிற அதே கணத்தில்
அவர்களாயும் இருக்க விழைகிறாய்
என்ன இது?
நியூட்டனின் ஆப்பிள் நகைக்கிறது
சிரிப்பொலியைப் பிடித்துத் தொங்குகிற
குட்டிச் சாத்தான் பல்லிளித்துச் சிரிக்கிறது.
வெள்ளத்தில் வந்த மீன்
நீந்தவில்லை குளத்திற்கு வர.
எப்படி மாறுகிறாய் இவ்வளவு எளிதாய் –
நியூட்டனின் ஆப்பிளும் ஏவாளின் ஆப்பிளும்
ஒரே சுவையா?
தூண்டிலில் சிக்கிய போதும்
குளத்துமீன் துள்ளவில்லை.




(மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் 2011 ஜூலை 2 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடத்திய தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப் பெற்ற கவிதை)

எல்லாம் விதி வசம் - விஜி




விதிகள் நியாயமானவை – ஆனால்
விதிகளின் விளையாட்டில்
நியாயங்கள் வெல்வதில்லை.

நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்குப் பின்னே
நிர்ணயிக்கப்படா விதிகளுண்டு
வெற்றியைத் தீர்மானிக்க.

உலகையே தன்
சூட்சுமக் கரங்களால்
கட்டியாளுவது விதி.

விதிகள் சிக்கலானவை
நோக்கத்தில் எளிமையாக
பார்வைக்குக் கடினமாக
நடைமுறைக்குச் சவாலாக
விதிகள் சிக்கலானவைதான்.

விதிப்பவரையும் சிக்க வைக்க
வலியது விதி.
காலம் மாற சூழல் மாற
மாறிக் கொள்ளும் விதி…

விதித்ததை மாற்றி
புதிதாய் விதிக்க
தேவை விதிக்கான மதி.

(மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் 2011 ஜூலை 2 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடத்திய தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப் பெற்ற கவிதை)

பிரம்மாண்டங்கள் - விஜி




பிரம்மாண்டங்கள் வரவேற்கப் படுகின்றன
பிரம்மாண்டங்கள் முன்மாதிரிகளாக்கப் படுகின்றன
பிரம்மாண்டங்கள் வளர்ச்சியின் அடையாளங்களாய்
சுட்டிக் காட்டப் படுகின்றன
பிரம்மாண்டங்களே வாழ்வாய் மாறும்போது
2ஜி, எஸ்,பேன்ட், விதர்பா என
வீழ்ச்சியும்கூடப் பிரம்மாண்டமாய்.

பிரம்மாண்டங்களின் அணிவகுப்பில்
பிரம்மாண்ட உலகமும்
துகள்களாய்த் தோன்ற
துகள்களை அழுத்தி
மேலெழுந்து நிற்கிறது
பிரம்மாண்டத்தின் ஒவ்வொரு தூணும்…
பிரம்மாண்டத்தைத் தாங்கிக் கொண்டு
வியந்தவாறு நிற்கிறது
ஒவ்வொரு துகளும்…

(மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் 2011 ஜூலை 2 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடத்திய தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப் பெற்ற கவிதை)