Tuesday, January 28, 2020

சராசரி தாளத்திலிருந்து கொஞ்சம் தள்ளி… – நூல் விமர்சனம் - ஏகாதசி



அதிசயங்களை சதா நிகழ்த்திவிட்டு ஆச்சரியங்களைப் படைத்துவிட்டு, என்ன செய்ய.. தேங்காய் சட்னியுடன் இட்லி தோசை மாதிரியான உணவைத் தான் உண்ணவேண்டியிருக்கிறது. 'என்னை வெட்டிக் கூறு போட்டாலும் ரெட்டை இலைக்கும் உதய சூரியனுக்கும் தவிர வேற எதுக்கும் ஓட்டுப் போட மாட்டேன்' என்கிற மரியாதைக்குரிய மகாசனங்களிடம்தான் பேசிக்கிடக்க வேண்டியிருக்கிறது. அப்படித்தான் பூவிதழ் உமேஷ் போன்ற கவிஞர்கள் இந்த சமூக புகை மூட்டத்திற்குள் மூச்சு முட்டித் திணறிக் கிடக்கிறார்கள்.
"ஒழுகும் குடம்
ஒற்றையடிப் பாதையின்மீது
உருவாக்குகிறது
மேலும் ஓர்
ஒற்றையடிப் பாதையை
யாரோ ஒருவருடைய தாகம்
அதன்வழியே வருகிறது"
இப்படி ஒரு கவிதையை எழுதியவரை மேற்படியன்றி வேறு எப்படிக் கூறுவது.
சில மாதங்களுக்கு முன் முகநூலில் இந்த " வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி" பெயரையும் இந்த நூலின் அட்டைபபட அழகையும் பார்த்துக் காதலுற்றேன். சில நாட்களில் என் கையில்  அந்த அழகி.
இந்த வாழ்வை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தொண்டைக்குள் இறக்குவது.. மலைப்பாம்பு ஆட்டை விழுங்குவது போன்றா அல்லது மான் குளத்தில் நீரருந்துவது போன்றா. சூழலுக்கேற்ப சாமானியன். எந்தச் சூழ்நிலையிலும் கவிஞன் இரண்டாம் விதமாக வாழ்வை சுகிக்கவே விரும்புகிறான்.
"நீரின் சாயலில்
ஒரு பெண்
மணலாற்றில் நடக்கிறாள்
கூந்தலில் பெருகிய நதியில்
அவள் காலடித் தடங்கள்
மீன்களாகி நீந்துகின்றன"
இந்தக் கவிதையை எழுதியபோது உமேஷ் மணலாறாகத்தான் இருந்திருக்க முடியும்.  இனி, மீன்கள் அவள் பாதங்கள் அல்ல இந்த கவிதைதான். இது மாதிரியான கவிதைகள் அல்லது மீன்கள் இத்தொகுப்பு நிறைய நீந்தித் திரிகின்றன.
'தோழரின் பயணம்' என்கிற கவிதையில்,
"பத்து ரூபாய் பயணச்சீட்டு
சிறு குருவியாய் சட்டைப் பையில் கூடடைந்தது" எனச் சொல்லும் போதும்  'பறத்தலின் மிச்சம்' என்கிற கவிதையில், 
"பறவையின் பெயரை
மறைத்துக் கொண்ட இறகு ஒன்று
கொஞ்சம் கொஞ்சமாகப் பறந்து தீர்க்கிறது
தன் பறத்தலின் மிச்சத்தை" எனச் சொல்கிறபோதும் "எங்கே இந்த கவிதைகளுக்கெல்லாம் என் எழுத்து குறைந்தபட்ச நியாயத்தை செய்துவிட தவறிவிடுமோ என்கிற அச்சம் தொற்றிக் கொள்ளத்தான் செய்கிறது. அப்படியான கவிதைகள் தான் இத்தொகுப்பு முழுக்க அணிவகுத்திருக்கின்றன.
அடடா.. இத்தனை அழகாய் இப்பிரபஞ்சத்தின் பொருட்களை உமேஷால் பார்க்க முடிகிறதே.. அவரின் கண்கள் எனக்கேன் இல்லை என்கிற ஏக்கம் எனக்கு இல்லாமல் போனால் நான் நல்லவன் இல்லை என்றாகிவிடும்.
"நானே
எனக்குத் தம்பியாய் இருந்த நாள்களை
அப்படியே அளவெடுத்து வைத்திருக்கின்றன
என் பழைய சட்டைகள்"
-இந்தக் கவிதை தம்பி இல்லாதவர்களுக்கெல்லாம் ஒரு  தம்பியை தானம் செய்கிறது.
"கதவில் ஒட்டிய படத்திலிருந்து
சிறுவனைப் பார்த்து
குலைத்தபடியே இருந்தது நாய்
ஏன் காகிதத்தின் பின்னால்
சோற்றை வைத்தாய் என்று" - என்ன அழகு.. என்ன நுட்பம் . இந்தக் கவிதை உருவாக்கித் தந்துள்ள காட்சியை ஒரு முறையேனும் ஓட்டிப்பாருங்கள். ஒரு நாள் பசி அடங்கும்.
இப்படியாக.. இப்படியாக முற்றின்றி எழுதிச்செல்ல இத்தொகுப்பு தகுதி படைத்தது. பொதுவாக , காதலைப் பாடலாம், இயற்கையைப் பாடலாம், சமூக அவலங்களைப் பாடலாம், உமேஷும் இவையைத்தான் பாடியிருக்கிறார் ஆனால் சராசரி தாளத்திலிருந்து கொஞ்சம் தள்ளியெடுத்து மனதைப் பிசையச் செய்கிறார்.
துணிக்கடை சென்று எல்லா உடைகளையும் கலைத்துப் போட்டு 'எல்லாமே நல்லாருக்கு எதை எடுப்பதென' பெருமுழி முழிப்போமே அப்படி இருந்தது, இந்த தொகுப்பிற்குள் நான் சென்று வந்த அனுபவம். உங்களுக்காக சிலவற்றை தேர்வு செய்துவிட்டேன். இனி மற்றவற்றை என் மன அலமாரியில் நான்தான் அடுக்க வேண்டும். பேரன்பின் வாழ்த்துக்கள் பூவிதழ் உமேஷ். வேறொரு உயரம் உங்களுக்காகக் காத்திருக்கும். நன்றி!
நூலின் பெயர்:
வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி
நூலாசிரியர்:
பூவிதழ் உமேஷ்
விலை: 80 ரூ
படி வெளியீடு ,
கே.கே. நகர் மேற்கு ,
சென்னை - 600 078
(பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்)
தொடர்பு எண்:
87545 07070

Monday, January 27, 2020

அழகான… - கவிதை - சத்யா

நீலப் பெட்டியின்
விளிம்பில் முளைத்த இலைகளைக் கழித்துவிட்டு
ஒற்றை குச்சியை உடைத்து
பல் தேய்த்து துப்பிவிட்டு
கொய்யாப்பழங்களை விற்கத் தொடங்குகிறாள் ராக்காயிப்பாட்டி
பேருந்துகளின் ஜன்னல்வழி
பேரம் பேசும் தலைகளுக்கெல்லாம் 
சலிக்காமல்
தன் ஒடுங்கிய கைகளில் ஐந்து பெரிய பழங்களை
அள்ளிப்பிடித்தபடி ஓடுகிறாள்
கையே வராமல் பணம் கொடுத்தாலும்
கடைசியில்
கூட ஒரு பழம் போடாமல் கொடுக்கமாட்டாள்

கரையேறிய மஞ்சள் சாக்கை விரித்து
மண்ணெண்ணையை ரேஷனாக ரெண்டு சொட்டு விட்டு
முகத்துக்கு நேரே கால்வைத்த ஷூக்களுக்கு
பாலிஷ் போடுகிறார் கந்தசாமி தாத்தா
கருத்துச் சுருங்கி ஒடுங்கிய கண்கள்
கூசும் என்பதால் அவர் எவனையும் நிமிர்ந்து பார்ப்பதேயில்லை
இப்போதும் தடித்த ஊசியால்
தோல் வார்களைப் பிணைத்து
தைத்துக்கொண்டிருக்கிறார்
விளம்பரத்தையும் கடைகளையும் மீறி
ஏதேனும் ஒரு ஜோடிக் கால்கள் வரும் என்ற நம்பிக்கையில்
பிய்ந்த செருப்புடன் நொண்டியபடி
பேருந்துகளைத் தேடி அலையும்
பள்ளிச் சிறுவர்களை அழைத்து
செருப்பு தைத்துக்கொடுப்பார்
சிரிப்புகளை மட்டும் பெற்றுக்கொண்டு

மணலுக்குள் புதைந்த பானைகளுடன்
நீல பெயிண்ட் அடித்த தள்ளுவண்டியில்
ஏதேதோ சாமிகளின் பெயரை
எழுத்துப்பிழையுடன் துணைக்கழைத்து
தூக்குச்சட்டியில் கொண்டுவந்த கம்மஞ்சோற்றைக்
கரைத்து அண்டாவில் ஊற்றுகிறாள் பேச்சியம்மா
பச்சை சிவப்பு மஞ்சளென நட்சத்திர அப்பளங்களும்
கொத்தவரங்கா மோர் மொளகா வத்தல்களும்
கணக்கேயில்லாமல் மாங்காய்த் துண்டங்களும்
ஒரு சொம்பு கூழுக்குத் தருவாள்
பேருந்து டயர் நிழலில் உறங்கி
ஒரு காலையும் கொஞ்சம் வாலையும் பறிகொடுத்து
இவள்வண்டி நிழலில் உறங்கப் பழகிய 
பழுப்பும் வெள்ளையும் கலந்த
நாய்க்குப் பங்கிடாமல்
மதியச் சோற்றைத் தின்னதேயில்லை

மீசையைக் காட்டி அரிவாள் செஞ்சதா
அரிவாள் காட்டி மீசை செரைச்சதா 
என்று குழப்பும் அறிவாளில்
பச்சைக் கரும்புகளை 
சுரண்டி சுரண்டி
மெசினில் திணித்து
'ஹேப்' என்ற சத்தத்துடன்
கண்களை உருட்டியபடி மூச்சை இழுத்து
கைப்பிடியைப் பிடித்து சுற்றி சாறு பிழிகிறார் பேய்க்காமய்யா
'சட்டப்'படி அளந்து
மதியப்பசிக்கு பீடி குடித்துக் கிடந்தாலும்
அம்மாவோடு வரும் குழந்தைக்கு
அரைக்கிளாசு சும்மா கொடுத்துவிட்டு
பீடிக்கரையுடன் சிரிக்கத் தவறுவதில்லை

அஞ்சரைக்கு ஏறிய பஸ்ஸிலேயே
மடியில் போட்டு கட்ட ஆரம்பித்த மல்லியை
விடாமல் கட்டியபடி புறணி பேசுவாள் மலரக்கா
கடை தாண்டி நீட்டப்பட்ட
மரப்பலகைகளில் ஈரத்துணி முண்டில்
மல்லிச்செண்டை வைத்தபின்
வாழைநாரைக் கிழித்து
துளசியையும் ரோஜாவையும் சாமந்தியையும் கலந்து
மாலை பண்ணுவாள்
சாமிக்கென்றால் சாமிக்கு
எழவுக்கென்றால் எழவுக்கு
எல்லா மாலைகளும் விற்றுத்தீர்த்தாலும்
கடைசி பஸ்ஸைப் பிடிக்கும் முன்பு
அவசரமாய் ரெண்டு மாலைகள் பின்னி
வெளியே தொங்கவிட்டுத்தான் கடையை மூடுவாள்
சாமிக்கென்றால் சாமிக்கு
எழவுக்கென்றால் எழவுக்கு

பஸ்ஸ்டாண்ட் வாசலில்
சிவப்பும் நீலமும் மஞ்சளும் பச்சையுமான குடை விரித்து
மடக்கு சேரையும் டீபாயையும் விரித்து
வரிசையாக பேனாக்கள் சொருகி வைத்த
பெட்டிகளை அடுக்குவார் காதரண்ணன்
அக்குளிலிருந்து அரையடி மட்டுமே நீண்ட
மூளியான வலக்கையை 
மீன் துடுப்பாக ஆட்டி ஆட்டிப்
பேசும்போது இல்லாத அவரது கை
மெய் நிகர் கையாகி காற்றில் ஆடும்
பேனாக்களை அக்குளில் சொருகி
மூடியைத் திருகிக் கழற்றி
பேனாவின் பின்னால் சொருகி
வெள்ளைத்தாளில் கிறுக்கிக் காட்டுவார்
அதுபோக சிவப்பும் நீலமும் பச்சையும் வெள்ளையும்
கோடாக நீண்ட ஓரடி மைபேனாவும்
மரத்தாலான வேலைப்பாடுகளுடைய பேனாக்களும்
அவரிடம் உண்டு
சரசரவென்று ஓடிவந்து
பையைக் கழற்றி
ஜாமெட்ரி பாக்ஸை கடித்துத்திறந்து
பேனாவைக் கழற்றி
உரிமையாய் இங்க் ஊற்றிப்போகும் குழந்தைகளுக்காகவே
தினமும் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை மையால் நிரப்பி வருவார்

எல்லாவற்றிலும்
குழிதோண்டி
மண்ணள்ளிப்போட்டு
இடித்துத்தள்ளிவிட்டு
தயாராகிறது
ஸ்மார்ட் சிட்டியின்
எல்லாவற்றிலும் அழகான பேருந்து நிலையம்

Thursday, January 23, 2020

நகர்வு - கவிதை - சத்யா


ஒவ்வொரு முறை விசைப்பலகை அடிபடும்போதும்
பரிதாபப்பட்டு நகர்கிறது சுட்டி
அடிபட்ட தழும்பினை திரையில் பதித்து

இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்து
உள்ளேனய்யா சொல்கிறது சுட்டி
அம்புக்குறியை உயிர்ப்பித்தபடி

அழுத்தி இழுக்கும்போதெல்லாம்
நகர்ந்து உருண்டு போகிறது
உலக வரைபடம்

உருட்டும்போதெல்லாம்
சரசரவென்று ஏறி
தலைதாண்டிக் காணாமல் போகின்றன எழுத்துக்கள்

அடித்தாலும்
இழுத்தாலும்
நகர்த்தினாலும்
உருட்டினாலும்
நகராமல் இருக்கின்றன கண்கள்

குறுங்கவிதை - சத்யா


மேலே பிடித்திருக்கும
கண்ணியை உடைப்பதே
விடுதலை என்றன
ஒவ்வொரு கண்ணியும்

Monday, January 20, 2020

வரம் - கவிதை - சத்யா

அழுக்கேறிய வெள்ளை சும்மாடில்
ஊஞ்சலாடும் கருவேல விறகுகளாய்
வெளுத்துத் தொங்கும்
மீசையோடு போட்டிபோடும் தள்ளாட்டத்துடன்
நீண்ட இரக்கமற்ற பாதையில்
செருப்பு தாண்டி மண்ணோடு உரசிய கால்களோடு
நடந்துகொண்டிருந்தான்

கால்களிரண்டும்
மழை பார்த்து ஏங்கி
இதயம் உடைந்து
பொத்துப் பிளந்த
அவன் நிலம் போல பிளந்து கிடந்தன

மூனாம் மகள் உக்காந்து
ரெண்டு வருஷம் ஆவதையும்
ரெண்டாம் மருமகன்
காலுடைஞ்சும் கள்ளுக் குடிப்பதையும்
பெருமூச்சால் பொசுக்கப் பார்த்தான்

நாலாம் பிரசவத்தில்
பிள்ளையோடு மரித்த தாயின் சாபம்
மகளுக்கும் பலித்துத் தொலைக்குமோவென்று
மூத்தவளோடு சுமக்கத்தொடங்கிய பாரத்தினை
இன்னும் பட்டுப்போகாமல்
சுமைதாங்கி கல் பிடித்துக் கிடைக்கும்
பனை மரத்தின் வேரோடு
குத்தி நிறுத்தினான்

வருத்தமாக
ஏக்கமாக
அசூயையாக
காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி பெற்ற
வார்த்தைகளை யாரிடமோ சொல்வதுபோல் சொன்னான் 
'மவராசி போய் சேந்துட்டா'

கன்னத்தைக் கூட நனைக்காமல்
கண்ணுச் சுருக்கத்தில்
காணாமல்போன ஈரத்தை
துண்டாகிப்போன சும்மாட்டில் துடைத்தான்

பதியம் போட்ட தக்காளிக்கு
எலி பங்காளியானதறியாமல்
வஞ்சனத்தை மனதுக்குள் வதக்கியபடி
சும்மாட்டில் விறகை ஏற்ற எத்தனித்தான்

நெஞ்சில் சுருக்கென்று
பட்டுத்தெறித்து முதுகெலாம் ஓடி படர்ந்து
இறுக்கிக்கொண்ட வலியில்

மவராசியையும்
மகள்களையும்
பேரன்களையும்
உதவிக்கழைத்து
பராசக்தியை மொத்தமாய் மறந்து
நரைகூடிக் கிழப்பருவமெய்தி கொடுங்கூற்றுக்கிரையென மாய்ந்தான்
காணி நிலம் வரமாய்ப் பெற்ற ஏதோவொரு பாரதி

Thursday, January 16, 2020

விருதுகள் 2019 - விருதுகள் அறிவிப்பு



விருதுகள் 2019 - மாவிபக செயற்குழு
2020 ஜனவரி 16ஆம் நாள் மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் செயற்குழு நடைபெற்றது. நடுவர்குழு 2019 விருதுகளுக்கான தொகுப்புகளைத் தேர்வு செய்து, தேர்வுக்கான விளக்கங்களுடன் சமர்ப்பித்தது.
ü  தோழர் சுப்புராயுலு நினைவு விருதிற்கான தேர்விற்காக 16 கவிதைத் தொகுப்புகள் இணைந்திருந்தன.
ü  தோழர் கு.பா. நினைவு விருதிற்கான தேர்விற்காக 28 சிறுகதைத் தொகுப்புகள் இணைந்திருந்தன.
ü  இந்த எண்ணிக்கையை ஆரோக்கியமான ஒன்றாகவே உணர்கிறோம்.
ü  மூவரை மட்டும் தேர்வு செய்வது, அதையும் வரிசைப்படுத்துவது என்பது நடுவர் குழுவிற்கு சவாலான ஒன்றாகவே இருந்திருக்கிறது.
ü  படைப்பாளிகளை நீக்கி படைப்பை மட்டும் அணுகுவது என்கிற முறையில் தேர்வு நடைபெற்றது.
ü  விருதுக்காகத் தேர்வு செய்யப்படாத நூல்களில் பலவும் சிறந்த நூல்களாகவே இருந்தன.
ü  எங்களுக்கு வந்த நூல்களில் தேர்வு வரிசையில் பின்தங்கி இருந்தாலும் அவற்றில் பலவும் பல்வேறு விருதுகள் பெறத் தகுதியானவையே.
ü  படைப்பாளிகளை நீக்கிப் படைப்புகளை அணுகியபோதும் படைப்பாளிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையிருப்பதை நடுவர்குழு உணர்ந்தபோது, கவிதைத் தொகுப்புகளில் ஒன்றும் சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்றும் என இரண்டு நூல்கள் ஊக்கவிருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இறுதியில்
தோழர் கு.பா. நினைவு விருதுகளுக்காக
1.   அண்டனூர் சுராவின் ‘பிராண நிறக் கனவு
2.   புதியமாதவியின் ‘ரசூலின் மனைவியாகிய நான்
3.   க.மூர்த்தியின் ‘கள்ளிமடையான்
ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும்
ஊக்க விருதிற்காக மதிவாணனின் ‘அவஸ்தைசிறுகதைத் தொகுப்பும் தேர்வு செய்யப்பட்டன.
தோழர் சுப்புராயுலு நினைவு விருதுகளுக்காக
1.   ஷக்தியின் ‘அபோர்ஷனில் நழுவிய காரிகை
2.   ஸ்டாலின் சரவணனின் ‘ரொட்டிகளை விளைவிப்பவன்
3.   முத்துராசா குமாரின் ‘பிடிமண்
ஆகிய கவிதைத் தொகுப்புகளும்
      ஊக்க விருதிற்காக யாழினிஸ்ரீயின் ‘மரப்பாச்சியின் கனவுகள்கவிதைத் தொகுப்பும் தேர்வு செய்யப்பட்டன.

Monday, January 6, 2020

குறுங்கவிதைகள் - இவான்சங்கர்


0
செடி பிரிந்து
தரை சேரும் பூ
இன்னும் பூவாகவே இருக்கிறது.
0
மின்னல் இடியுடன் பெருமழை
நீரோடை துறந்த ஊர்
அகதியாகும் சின்னஞ் சிறு மீன்.
0
நிறைந்தது; குறைந்தது;
வற்றியது - எல்லாம்
அதே குளம்தான்.
0
கடுந்தவம் புரிகிறது
மழை வேண்டி -
விதை
0
2020யின் முதல் ஞாயிறு ஜனவரி ஐந்தாம் நாள் மாவிபகவின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற இவான்சங்கரின் குறுங்கவிதைகள்

கவிதைகள் - தமிழ்மணி


சகதி
காய்ந்த இலையின்
முன்னிருந்த நிறமொத்த நீரை
வான்புனல் குழிதோண்டி
சேகரம் செய்திருந்தது
புவனத்தில்!

துரு ஏறிப் போயிருந்த
மக்காடுடன்
நீருள் புகுந்து வெளியேறியது
மிதிவண்டி.

ஸ்கூட்டர்களும்
கார்களும்
லாரிகளும்
மேற்கொண்டு கலக்கிவிட்டுப்
போயிருந்தன.

நாட்கள் கழிந்தொழியவே
தெரிய வந்தது
காணாமல்போன கலங்கல் நீர்
மறைத்து வைத்திருந்தது
பல்வேறு டயர் தடங்கள் கூடிய
துருப்பிடித்த மண்ணை.
0

மீட்பர்
தேங்கியிருக்கும் குட்டையில்
துடித்துக் கொண்டிருக்கின்றன
நீந்தத் தெரியாத
தூறல்கள்
காக்கையின் அலகும்
தெருநாயின் நாவும்
அதன் மீட்பர்

இச்சையின் கூட்டில்
விறைத்து தனித்திருக்கும்
சிசினத்தின்
நரம்பு சொல்கிறது
உனக்கான மீட்பர்
இன்னும் வரவில்லை

பிரம்மச்சாரியத்தின்
குட்டை பல்கி
குளமாகி நதியாகி
சமுத்திரமானது
அலைகளின் ஆர்ப்பரிப்பில்
கணுக்கால்களைகூட
நனைக்க முடியாதபடி
ஆட்டுக் குட்டியோடு
கரையில் அமர்ந்திருந்தார்
ஒரு மீட்பர்
0

சுகத்தின் மோட்சம்
ிரயத்தனத்தின்
பெருவெளியில்
நுரைத்து திரளும்
ஆன்மாவின் கட்டளை
மீச்சிறுவடிவம் எய்துமுன்
களியாட்டம் ஆடிவிடுகிறது
தொங்கும் தோட்டம்

ஊசலிற்கு ஏற்ப
பிரம்மைகளை கூட்டித் திரியும்
பாழ்மனிதர்களின் வன்முறை
வெற்றிடம்

சரீரத்தில்
புல்லரிப்பின் தயவால்
நீண்டிருக்கும் கேசம்
தூண்டல் விளைதலின்
முதற்கட்டம்

இருளுக்குள் ஒளிந்திருக்கும்
ஒளி புறப்பட்ட பிறகே
விடியல் வெளிக்கிட
அலுப்புத்தட்டும் கவசமாய்
காதல்
0

நெருப்பை நெய்பவன்
பவர்லூம் தறிகளின்
ஆதிக்கப் பகுதியில்
மின்சாரத் தடைநேரத்தில
கேட்கிறது
டட்டக் டட்டக் டட்டக்
கைத்தறியோசை

அறுபத்தைந்து வயதொன்று
அறுபதுரக நூலை
நெய்துகொண்டிருக்கிறது

பாவுப்பிணைக்கும்
நாளொன்றில்
பிணமாய்போனது
அந்த அறுபத்தைந்து

மயான எரியூட்டலில்
எந்திரிக்கும் அப்பிணத்தின்
கைக்கு இழுவைக் கயிறும்
காலிற்கு மிதிப்பலகையும்
கொடு வெட்டியானே!

நெருப்பை நெய்து
சாம்பல் சேலை
படைக்கட்டும்!
0
2020யின் முதல் ஞாயிறு ஜனவரி ஐந்தாம் நாள் மாவிபக’வின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற தமிழ்மணியின் கவிதைகள்