Friday, June 29, 2012

தோழர் கு.பா. நினைவுநாள் விமர்சனஅரங்கம் - படைப்பரங்கம்


தோழர் கு.பா. நினைவுநாள்
விமர்சனஅரங்கம் - படைப்பரங்கம்
ராஜா பிரஸ் (மாடி)
திருச்சுழிசாலை
அருப்புக்கோட்டை
01-07-2012
ஞாயிற்றுக்கிழமை
காலை 9.30 மணி

தலைமை : தோழர் கேகே
விமர்சன அரங்கு
நூல் : மனிதாபிமான ஏகாதிபத்யத் தலையீடு
தோழர் சுப்புராயுலு
திரைப்படம்  : வழக்கு எண் 18/9’
தோழர் ரமேஷ்
கலந்துரையாடல் அரங்கு
செயல் திட்டம்

படைப்பரங்க ஒருங்கிணைப்பு
தோழர் பழனிக்குமார்
வரவேற்றல்
தோழர் முனியசாமி
நன்றி கூறல்
தோழர் ஜெயகணேஷ்

அன்புடன் அழைக்கும்
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
94431 84050, 94421 84060 & 94428 39398

Thursday, June 28, 2012

புரிந்தும் புரியாத 'உயிர்த்திருத்தல்' - கருப்பு

யூமா வாசுகியின் ‘உயிர்த்திருத்தல்‘ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து...
மொத்தம் 14 சிறுகதைகள் தொகுப்பாகியுள்ளது. புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் அச்சாகியுள்ள ஆசிரியரின் மதிப்புரையைப் போல (அர்த்தம் புரியாமல், வார்த்தை ஜாலத்தில்) பல கதைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கதையையும் இருமுறையும் அதற்கு மேலும் படித்து, பின்தான் புரிந்துகொள்ளும் சூழல் ஏற்பட்டது. சிறுகதை உத்திகள், குறியீடு, படிமம், நனவோடை முறை போன்றவற்றைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இச்சிறுகதைத் தொகுப்பில் சில கதைகளில் இவை பயின்று வருவதாய் நம்புகிறேன். சில கதைகளில், சில இடங்களில் மொழியின் கடினத்தன்மையால் திக்குமுக்காடுகிறது. நடை – சமஸ்கிருதச் சொற்களைக் கவ்விக்கொண்டு மூச்சிறைக்கிறது. முதல் கதையான உயிர்த்திருத்தல் அடிப்படைத் தேவைக்காகப் போராடும் ஒரு ஏழை ஓவியக் கலைஞனின் சுயஅனுபவ உரையாடலை செழுமையாக வெளிப்படுத்துகிறது. தன் ஏழ்மைச் சூழலிலும், ஒரு கலைஞனுக்கே உரித்தான சமூக அக்கறை, உதவும் மனப்பான்மை போன்றவை இயல்பாக வெளிப்படுகிறது. இக்கதையில் வாசகராகிய நம்மையே கதை மாந்தராக மாற்றியுள்ளார் யூமா வாசுகி. எவ்வாறு நமது செல்போன் சார்ஜ் இல்லாமல் சுட்ச் ஆஃப் ஆவதைத் தவிர்க்க தகுந்த இடைவெளியில் சார்ஜ் செய்கிறோமோ, அதைப்போல வாழ்க்கை ஓட்டமானது பசியால் உயிர் போகாமல் உயிரைத் தக்க வைக்க அல்லது உயிர்த்திருக்க உணவு தேடி அலையும் காட்டாண்டி வாழ்க்கைக்கு தள்ளிவிட்டு, பின்பு அதனினும் கலைஞனின் மகோன்னதத்தைத் தேடிச்செல்கிறது.
பெயர் சொல்லாதது என்ற சொல் நிரம்பி வரும் ‘களவுஎன்ற கதை உண்மையில் களவுக் காதலை நினைவுபடுத்துகிறது. இக்கதையை எளிதாக காட்சிப்படுத்த முடிகிறது. இறுதி நிகழ்வான கதாநாயகி விஜயா, பெயர் சொல்லாததுடன் கட்டியணைத்து உறங்கும்போது வாசகருக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது.
ஜனனம், விபத்து போன்ற கதைகளில் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் அசாதாரண நிகழ்வை வெகு இயல்பாய் அதனதன் போக்கில் பதிவு செய்துள்ளார்.
தொகுப்பில் இரண்டாவது கதையான ‘வேட்டைஉண்மையில் பொருத்தமான தலைப்பிடப்பட்டுள்ளது. பாரம்பரிய இஸ்லாமிய முறைப்படி மிகுந்த ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் வாழும் உஸ்மானி, தன் மகனின் காதலியை பழி வாங்க, கத்தி ஏந்தும் அந்த சமயம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒடுங்கி இருக்கும் பழி வாங்கும் உணர்வையும், விலங்கினுணர்வையும் வெளிப்படுத்துவதாய் உள்ளது.
வருணனைகள் நிரம்பிய ‘எச்சம்என்ற கதை சற்றே வித்தியாசமானது. ஒரு வனக்கிராமத்தில் ஒரு குடும்பம், ஏதோ ஒன்றைத் தொலைக்கிறது. அதைத் தேடி கானகம் முழுவதும் இரவில் அலைகிறது. இக்கதையில் நிகழ்வுகள் அனைத்தும் பூடகமாகவே விளக்கப்பட்டுள்ளன. கதையின் இறுதிப் பத்தியில்தான் அனைத்தும் வாசகருக்கு விளங்கும்படி உள்ளது. ‘மலைப்பாம்பின் தலைக்குப் பக்கத்தில் கிடந்த ஒரு ஜோடி சிறிய வார் செருப்புகளைத் திரும்பப் பெறக் காத்திருந்தான் அவன்‘ என்ற ஒற்றை வரி மட்டுமே முன்னம் நடந்த அத்துனை நிகழ்சிகளையும் பொருளுடையதாக்குகிறது.
கிராமத்துத் திருவிழா நிகழ்வு, நம்பிக்கைகள் பற்றி ‘காவடியாட்டமும்‘, நெருங்கிய நண்பரிடத்திலும் சில சமயங்களில் வெளிப்படும் வினோத முகம் பற்றி ‘மழைக்குறிப்புஎன்ற கதையிலும் சொல்லப்பட்டுள்ளது.
காவடியாட்டத் திருவிழாவில் பருந்து ஒன்று பறந்து வந்து ஆசீர்வதிக்கும் என்பது கிராமத்து நம்பிக்கை. ஆனால் இம்முறை பருந்து வரவில்லை. இதனால் கிராமத்தில் உள்ள ஒரு கட்சியின் இளஞ்செயலாளன் சாமியை பழித்துப் பேசப்போக, கிராமமே வெட்டுக்குத்தில் இரத்தக்காடாகிறது. கிராமமே அலங்கோலக் காடாக காட்சியுறும் சமயத்தில் அவற்றைப் பார்வையிட வருவதுபோல் பறந்து வருகிறது பருந்து. சரியான எள்ளல் கதையாக அமைந்துள்ளது இது.
பிரிந்து போன மனைவியைத் தேடி அவள் வாழ்ந்த வாடகை வீட்டிற்குச் செல்கிறான் கணவன். அங்கே வேறொருவர் குடியிருக்கிறார். அவர் மகள் பெயர் வான்நிதி. வான்நிதி என்றால் மழை என்று பொருள். இந்த அழகிய சொல்லைத் தவிர இக்கதையில் எந்த ஒரு ரசமோ, உணர்வோ எழவில்லை.
இதுவரையிலான கதைகள் கதைத்தொகுப்பின் வரிசைக் கிரமமாக கூறப்பட்டுள்ளவை அல்ல. மேற்சொன்ன கதைகள் அனைத்தும் ஓரளவு எளிய நடையிலும், அதிக சிரமமின்றி கதைக்கரு புரியும் வகையிலும், நேர்கோட்டு கதை சொல்லுதல் உத்தி மூலமும் இருந்துள்ளதாய் உணர்கிறேன். இவற்றில் நடைமுறை வாழ்வியல் எதார்த்தங்கள், எள்ளல் சுவை, வருணனைகள் மிகுந்துள்ளன. அமானுஷ்ய விஷயங்கள் ஏதுமில்லை.
ஆனால், இத்தொகுப்பில் வரும் ‘நாதம்‘, ‘இரத்த ஒளி‘ ‘சாவித்திரி‘ போன்ற கதைகள் எதார்த்தத்திற்கு வேறுபட்டோ, உளவியல் பற்றி பேசுபவையாகவே அமைந்துள்ளதாக நினைக்கத் தோன்றுகிறது.
இரண்டு நண்பர்கள் ஓர் ஆராய்ச்சிக்காக கோவில் சிற்பங்களைப் படமெடுக்கிறார்கள். அவர்களில் ஒருவனுக்கு கோயில் கோபுர உச்சியில் ஆண் குரலுமல்லாது, பெண் குரலுமல்லாது ஒரு குரலில் வசீகரப் பாடல் கேட்கிறது. வேலை பரபரப்பிற்கிடையே அப்பாடல் வந்த இடம் தேடுகிறான். இறுதிவரை கண்டுணர முடியவில்லை. இக்கதையில் அவனுக்கு கோயிலில் ஏதோ அமானுஷ்யம் இருப்பதாய் உணர்கிறான். ஒரு சிலையில் உள்ள வண்ணப் பூச்சுக்கள் மாறுவதாய் உணர்கிறான். ஆனால் அவை ஏதோ பூச்சிகள் ஊர்வதால் மாறுவதுபோல் விளக்கப்படுகிறது. இறுதியில் அப்பாடல் குளத்தில் இறங்கி நீர் அலையாய்ப் பரவுகிறது. உள்ளே கைவிட்டுப் பார்த்தால் கையில் மிஞ்சுவது ஒரு ‘செத்த மீன்‘. அந்தப் பாடல் வந்த இடம் கூறாமல் இறுதிவரை புதிராகவே முடிகிறது ‘நாதம்‘ கதை.
சாவித்திரி என்ற அற்புதமான கதையில் கடக்கவொண்ணா இழப்பின் துக்கம், நெஞ்சில் நிழலாடுகிறது. தாயை இழந்த மகன் பல ஆண்டுகள் கழித்தும் தாயின் நினைவுடன் அன்றாடம் வாழ்கிறான். அவன் வெளியில் படுத்து உறங்குகையில் சன்னமாக (காதருகே) ஒரு குரல் “உள்ளே போய் படு“ என்கிறது. மயிர்கால்கள் குத்திட எழுந்து அமர்கிறான். உடனே கொட்டுகிறது மழை. தாயின் அருகாமைக்கு ஏங்கும் இளைஞனின் உளவியலை அடிப்படையாகக் கொண்டது இக்கதை.
ரத்த ஒளி என்ற கதையில், வயோதிகர் ஒருவர் யாருமற்ற தனிமையான சூழலில் பழப் பொட்டலக் குப்பையான தன் உடலையும் வெளியே எறியும் முயற்சியில் தன் மரணத்தைத் தானே பார்க்கும் உணர்வுநிலையில் இறந்து போகிறார். வாழ்நாள் முழுதும் ஏற்படும் பிரிவு, துக்கம், வலி, முதுமை, தனிமை என்ற உணர்வு நிலையில் இக்கதையில் நடை மற்றும் காட்சிப்படுத்துதல் அற்புதமாக உள்ளது. அலமாரியைச் சுத்தம் செய்யும்போது தன் பிரேத உடலைக் கண்டு திடுக்கிடுகிறார். தன் கால் பெருவிரலில் வழிந்து கொண்டு இருக்கும் இரத்தம், பிரேதத்தின் கால் பெருவிரலில் இருந்தும் வழிந்து கொண்டிருக்கிறது. இது தேவையில்லை என்று தூக்கி வெளியில் எறிகிறார். இறுதியில் அறையில் காற்றாடி மட்டும் உயிர்ப்புடன் சுழன்று கொண்டிருக்கிறது என்று முடியும் கதை ‘காலமற்ற காலேமா‘ என்று அச்ச உணர்விற்குள் தள்ளுகிறது. இக்கதை வாசிக்கும்போது எனக்கு “The Grudge“ என்ற ஆங்கிலப் பேய்ப்படம் ஞாபகம் வருகிறது.
பேய்ப்படங்களில் ஒவ்வொரு பேய்க்கும் ‘ப்ளாஷ் பேக்‘ இருக்கும். நான் எப்படிப் பேயானேன் என்று பேயே விளக்கும். ஆனால் “The Grudge“ என்ற சீனப் படத்தில் நிகழ்காலமும் பேயின் ப்ளாஷ் பேக்கும் இணைந்துவிடும். மிக அற்புதமான திரைக்கதை உத்தி. அதே போன்ற உணர்வைத்தான் இரத்த ஒளி கதையில் மரணத்தைத் தானே பார்க்கும் வயோதிகரும் தருகிறார்.
மீறல் என்ற சிறுகதை குறியீட்டுக் கதைபோல் தோற்றம் அளிக்கிறது. முன்னிலையாக வாசகனை அமைத்து ஒரு அறையில் உள்ள ஏதோ ஒன்றை (கரப்பான் பூச்சியாகவோ, வேறு ஏதாவது புழுவோ) எவ்வாறு விரட்டுவது என்று ஆலோசனைகள் கூறுகிறது. அவற்றின் மீது வெந்நீர் ஊற்று, விசையுடன் காற்றாடியை முடுக்கு, செய்தித்தாளை சுழற்றி அடி, செருப்புக் காலால் அடி, அவற்றின் மீது சிறுநீர் கழி என்பன போன்ற ஆலோசனைகள் பல.
இக்கதையில் ஆலோசனை சொல்வது யார்? யாருக்கான ஆலோசனை. அறையை வியாபித்திருக்கின்ற அந்த உயிரி எது? அறையில் நுழைந்தவனின் பிரார்த்தனை வாசகங்கள் கேட்டவுடன், ஆலாசனைகள் நிறுத்தப்படுகின்றனவே? ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. கதை புரியவில்லையென்ற போதும் இவை ஒவ்வொன்றிற்கும் எதோ ஒன்றைக் குறியீடாகக் கொண்டுள்ளார் யூமா வாசுகி என்று புரிகிறது.
இத்தொகுப்பில் கடைசிச் சிறுகதை. வனசாட்சி இத்தொகுப்பிலேயே மிகச் சிறிய கதை. மூன்றே பக்கம். இக்கதையைப் படித்துத் தெரிந்தவர்கள் தெளிவுபடுத்துங்கள்.
வாசித்தபின் யோசிக்கவும், வாசித்தவர்களுடன் கலந்துரையாடவும் தேவையாயிருக்கின்ற தொகுப்பு உயிர்த்திருத்தல்.