Sunday, February 5, 2012

சாதாரணனுக்குப் புரியாத மின்வெட்டு மர்மம் - வீரா

“6 மணி நேரம் 7 மணி நேரம் மின்சார வெட்டில் தமிழகம் சிக்கித் தவிக்கிறது. இதைச் சரிசெய்ய ஒரு துரும்பைக்கூட எடுத்துப்போடவில்லை தமிழக அரசு. சென்னை, திருச்சி நகரங்களில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா என்ன வேண்டிக்கிடக்கு?“ என ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது.
“மின்வெட்டைப் போக்க தமிழக அரசு ஏதும் செய்யவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது! கூடங்குளம் அணுமின் திட்டம் துவங்கப்படாமல் இழுத்துக் கொண்டு போவதில் தமிழக அரசும் தன்னாலான ‘பங்களிப்பை‘ச் செய்துகொண்டுதானே இருக்கிறது“ என பதில் சொல்லப்படுகிறது.
இது ஏதோ பேச்சுவார்த்தைக்குச் சென்ற கூடங்குளம் அணுஉலை எதிரப்பு போராட்டக் குழுவினரைத் தாக்கிய இந்து முன்னணி, இ.காங்கிரஸ்காரர்களின் பதில் என்றோ, கேள்வியின் மையத்தை விட்டுவிட்டு துணை எழுத்துக்களுக்கு விளக்கம் சொல்லும் தி.மு.க. தலைவரின் பதில் என்றோ, துக்ளக் பத்திரிகையில் வந்த சோ.ராமசாமியின் பதில் என்றோ முடிவுக்கு வரவேண்டாம்.
கடலூர் இரா.இராஜேந்திரன் கேள்விக்கு இளமதியின் பதில். (2012 ஜனவரி செம்மலர்) 123 ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவில் அனைவருமே இரண்டு அணிகளாகத் திரண்டபோது, உலைக்கு எதிரணியில் இருந்த இளமதி இப்போது அணுஉலை (கூடங்குளத்திற்கு மட்டும் அல்லது ரஷ்ய இறக்குமதி அணுஉலைகளுக்கு மட்டும்) ஆதரவு அணியில் முனைப்புடன் இருப்பதற்கு காரணங்கள் இருக்கலாம். இருக்கட்டும்.
123 ஒப்பந்த விவாத காலத்திலும் தமிழகத்தில் மின்வெட்டு இருந்தது. ‘மின்தடை இல்லாத தமிழகம் அமைய 123 ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்துப் போட்டே ஆகணும். இந்த கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்கதான் தடுக்குறாங்க. அதனால மின்தடைக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகள்தான்‘ என்று அணுஉலை ஆதரவு / 123 ஆதரவு அணி பிரச்சாரம் செய்தது.
மக்களும் அதை நம்பியபோது ‘சாதாரண மக்களுக்குப் புரியவில்லை‘ என்றார்கள். சரிதான். ஆனால் இப்போது இளமதியில் பதிலின் வாயிலாக போராட்ட அவதூறுப் பிரச்சார அணி மாறியிருப்பது தெரிகிறது. அன்றைக்கும் இன்றைக்கும்  உரையாடல் ஒன்றாக இருந்தாலும் ஆட்களின் இடம் மாறியிருக்கிறது. மின்வெட்டுக்கு அணு உலை எதிர்ப்பாளர்கள்தான் காரணம் என்பது போலவும், கூடங்குளம் அணு உலை திறக்கப்பட்டால் தமிழகத்தில் அணைக்கவே முடியாத அளவிற்கு ஒளிவெள்ளம் பாயும், மின்வெட்டே இருக்காது என்பது போலவும் இருக்கிறது இளமதியின் பதில். இப்போதும் சொல்கிறார்கள் ‘சாதாரண மக்களுக்குப் புரியவில்லை‘ என்று. நமக்கும் ஒண்ணும் புரியமாட்டேங்குது.
அது சரி நானும் சாதாரணன்தானே. ‘சலவை‘ செய்யப்பட்ட பரிசுத்தன் இல்லையே.

2 comments:

  1. MathiKannan Sir, U support or Oppose Koodankulam project Sir?...I guess you oppose it. What is your suggestion to end the power cut? - Sankar.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சங்கர்,

      கூடங்குளத்தை மட்டும் எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

      நாம் பயன்படுத்துகின்ற மொத்த மின்அளவில் இதுவரை நிறுவப்பட்ட அணுஉலைகள் வழியாக 3 விழுக்காடு மின்சாரம் மட்டுமே கிடைக்கின்ற சூழலில், இன்னும் 20 ஆண்டுகளுக்கு இதே வீச்சில் அணுஉலைகள் நிறுவப்பட்டாலும்கூட அன்றைய நிலையில் வெறும் 5 விழுக்காடு மட்டுமே மின்சாரம் தரப்போகின்ற ஆபத்தான (நிறுவப்பட்ட / நிறுவப்பட உள்ள) அணுஉலைகள் அனைத்திற்குமே ஆதரவு தரும் நிலையில் மதிகண்ணனும் இல்லை. வீராவும் இலலை. விரிவாக விரைவில் நானோ அல்லது தோழர்களோ பகிர்ந்து கொள்வோம் என நம்புகிறேன். தொடர்ந்து அனைத்து பதிவுகள் பற்றியும் விவாதியுங்கள். விரிவாக... மின்னஞ்சலிலும்கூட...

      Delete