Tuesday, July 5, 2016

இருத்தலுக்கான ஓட்டம் - சிறுகதை - மதிகண்ணன்


அவனுக்குக் கீசு பூசுன்னு பேய் மூச்சு வாங்கிய சத்தம் எனக்குக் கேட்கிறது. எனக்கு மூச்சு வாங்குவதும் அவனுக்குக் கேட்கலாம். அது எப்படி கேட்காமலிருக்கும். இரண்டு பேரும் ஒன்றாகத்தானே ஓடிக்கொண்டிருக்கிறோம். ஓடிக் கொண்டிருக்கும் எங்களுக்கு எதிரில் ஏதாவது திருப்பங்களோ, பிரிவுகளோ தென்பட்டால் ஒருவர் கையை மற்றவர் பிடித்துக் கொள்கிறோம். அப்படிப் பிடித்துக்கொண்டால்தானே இருவரும் ஒரே திசையில் திரும்ப முடியும். முறைவைத்துக் கொண்டதுபோல் இருவரும் மாறி மாறிப் பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம். முகம் பாத்தலின் புரிதலில் ஓட்ட வேகம் சில நேரங்களில் மட்டுப்படுகிறது. சில நேரங்களில் அதிகப்படுகிறது. இப்போது என் முறை என்பது போல நான் பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். தெருமுனையில் கருகருவென ஓங்குதாங்காக இருக்கும் ஒருவன் எங்களைப் பார்த்தபடியே சைக்கிளை எடுக்கிறான். அவன் மொட்டையடித்திருக்கிறான். பார்க்கும்போதே பயமுறுத்தும்படியான உருக்கொண்ட அவனை மொட்டை மேலும் பயங்கரமானவனாகக் காட்டியது. மொட்டை சைக்கிளில் ஏறி எங்களை நோக்கி வருகிறான். பின்னால் பார்த்தபடியே ஓடுவதற்கு வாகாக அவனுடைய கையைய் பிடித்திருந்த நான் அவனை அருகிலிருந்த குறுகலான சந்தை நோக்கி இழுக்கிறேன். அவன் என் முகம் பார்க்க ‘ஆம்’ என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்து ஓட்டத்தை விரைவுபடுத்துகிறேன். குறுகலான சந்து. கை கோர்த்தபடி ஓட முடியவில்லை. நான் சைகை காட்டி அவனை முன்னால் ஓடச் செய்கிறேன். அவன் முன்னேற நான் ஓரடி தாமதித்து அவனைத் தொடர்கிறேன். எங்கள் பார்வையும் கவனமும் எங்களைத் துரத்திக் கொண்டிருக்கும் மொட்டையை எதிர்நோக்கி சந்தின் தொடக்க முனையிலேயே இருக்கிறது. நீளமான அந்தச் சந்தின் முடிவில் கட்டிட மூலையில் ஆளுக்கொருபுறம் நின்று ஒற்றைக் கண்ணால் பார்த்தால் போதுமென்ற அளவிற்குப் பாதிக்கும் குறைவாகத் தலையை நீட்டி ஓடிக்கடந்த சந்தை நோட்டமிடுகிறோம். சந்தில் எந்தச் சலனமுமில்லை. சந்தின் மேற்குப் புறமிருக்கும் ஏதோ ஒரு மாடியிலிருந்து ஜன்னல் வழியாக காலி பிராந்தி பாட்டில் வீசப்பட்டு கீழே விழுந்து சிதறுகிறது. ஓடிக்கடந்த சந்தின் தரையை இப்போதுதான் பார்க்கிறேன். அவனும் பார்க்கிறான். இந்தக் குப்பைச் சந்தில் நடப்பதே சிரமம் என்று தோன்றுகிறது. இதிலா ஓடி வந்தோம் என்று அதிர்ச்சியாயிருக்கிறது. சந்தின் எதிர்ப்புறம் பிரதான ரோட்டில், அந்த மொட்டை சைக்கிளை நிறுத்திவிட்டு சந்தை நோக்கி வருகிறான். இருவரும் தலையை உள்ளிழுத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம். காதுகளைக் கூர்மையாக்கிக் கவனிக்கிறோம். எந்தச் சத்தமும் கேட்கவில்லை. மெதுவாக மீண்டும் தலைசாய்த்துப் பார்க்கிறோம். மொட்டை எதிர்முனையில் நின்று சந்துக்குள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறான். தலையை உள்ளிழுத்து பெருமூச்ச விட்டுக் கொண்டோம். ‘அப்பாடா… தப்பித்தோம்…’ என்கிறேன். ‘இப்போதைக்கு…’ என அவன் திருத்துகிறான். ‘ஆம்…’ என்பதுபோல் அவனைப் பார்த்து தலையசைக்கிறேன். எங்கள் எதிரில் ஐந்தடி தூரத்தில் ரயில்வே பென்சிங்கும் அதன் பின்னால் தண்டவாளங்களும் இருந்தன. இரும்புப் பட்டை வேலியில் ஒரு பட்டையை நீக்கி யாரோ, எதற்கோ பாதை உருவாக்கி இருந்தார்கள். அதன் வழியாக குனிந்து நுழைந்து உள்ளே சென்றேன். அவனைப் பார்த்தேன். சுவற்றில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான்.
தவிர்க்க இயலாக் கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன் திரும்பிய அவன் நான் நுழைந்த இடைவெளி வழியாக என்னைப் பின்தொடர்கிறான். நான்கு வரிசைத் தண்டவாளங்களுடன் எதிர்புறம் அஸ்பெஸ்டாஸ் கூரைக் கட்டிடம். கட்டிடத்தின் கதவுகள் பெயர்த்தெடுக்கப் பட்டிருக்கின்றன. மூன்று வரிசைத் தண்டவாளங்கள் இங்கேயே நின்று போயிருந்தன. ஒரு காலத்தில் பரபரப்பாக இயங்கிய குட்ஷெட்டாக இருக்கும். நீண்டு செல்லும் தண்டவாளம் தவிர்த்த மற்றவற்றில் சமீபத்தில் ரயில்கள் வந்து சென்றதற்கான அறிகுறிகளே இல்லை. ஆள் நடமாட்டம் ஏதுமில்லை. நாங்கள் தண்டவாள ஜல்லியில் கால் வைத்ததும் ஏற்பட்ட சிறு சத்தத்திற்கு குட்ஷெட்டின் உள்ளிருந்து ஒரு தொத்தல் நாய் வேகமாக வெளியில் வருகிறது. வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே திட்டுத் திட்டாக செவ்வண்ணம் கொண்ட கொஞ்சம் வயதான நாய். எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்க்கிறது. நாங்களும் பார்த்துக் கொள்கிறோம். உடம்பை சிலிர்த்து, உலுப்பி, லம்பி, நிதானித்துப் பின் சுறுசுறுப்பான நாய் மீண்டும் எங்கள் இருவரையும் பார்த்துவிட்டு யாருக்கோ தகவல் சொல்வதற்காக குட்ஷெட்டின் பக்கவாட்டுச் சுவருக்கு நெருக்கமாக ஓடுகிறது. ஷெட்டின் பின்புறம் போவதற்கு முன்னர் நின்று, எங்களிருவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு ஓடி மறைகின்றது. நாங்கள் அசைவற்று நின்று கொண்டிருக்கிறோம். நாய் போனபிறகு நான் அவனைப் பார்க்கிறேன். அவன் இன்னும் நாய் சென்ற திசையையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான். விட்டாலாச்சார்யா, சாண்டோ சின்னப்பா தேவர், ராம. நாராயணன் படங்களில் நடப்பதுபோல் ஏதோ ஒன்றை அவன் எதிர்பார்த்துக் காத்திருப்பது அவனுடைய பார்வையில் தெரிகிறது. ‘ரிங் மாஸ்டர்மலையாளப் படத்தில் வரும் ‘டோபிபோல் அது பழக்கப்படுத்தப்பட்ட ‘கைடுநாய் என அவன் நினைத்திருக்கலாம்.


‘அந்த அளவிற்குப் பயப்படத் தேவையில்லை’ என்றேன்.
‘ம்…’ என்றான்.
‘இருந்தாலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். முதலில் இந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும்.’
அதற்கும் ‘ம்…’ என்றான்.
கிழக்குத் திசை நோக்கி தண்டவாளத்தின் ஓரமாக நடக்கத் தொடங்கினோம். கண்ணுக்கு மறைந்த பிறகும்கூட இருவருமே நாய் சென்ற திசையைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடக்கிறோம். எதனை எதிர்பார்த்து திரும்பிப் பார்க்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவனுக்குத் தெரிந்திருக்கலாம். அவன் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. உச்சிப் பொழுது என்றபோதும், வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் வெயில் அவ்வளவாக உரைக்கவில்லை. நான்கு பிரிவுகளாக இருந்த தண்டவாளங்கள் ஒவ்வொன்றாய் இணைந்து ஓரிணையானது. ஆளுக்கொரு தண்டவாளத்தில ஏறி கைகளை விரித்து பேலன்ஸ் செய்தபடி நடக்கிறோம். தள்ளாடும் இடங்களில் அருகில் விரிக்கப்பட்டிருந்த மற்றவரின் கையைத் தொட்டும் பிடித்தும் பேலன்ஸ் செய்து கொள்கிறோம். சில நேரங்களில் சிறிது தூரத்திற்கு ஒருவர் கையை மற்றவர் பிரித்தபடி நடந்து இளைப்பாறிக் கொள்கிறோம். எனக்கு சிறுவயதின் நினைவுகள் வருகின்றன. அக்கா, தம்பி, தெருப் பிள்ளைகளுடன் அதிகாலையிலும் முன்னிரவிலும் மட்டுமே ரயில் வரக்கூடிய, பள்ளி செல்லும் பாதையில் ஒருமைல் தூரத்திற்கு எங்களை அழைத்துச் செல்லும் அந்தத் தண்டவாளம். தண்டவாளத்தில் யார் அதிக தூரம் நடக்க முடியும் என்ற போட்டிகள். யார் கையை யார் பிடித்துக் கொண்டு இணையாக நடப்பது என்பதற்கும் போட்டி, பகைமையற்ற சண்டைகள். சண்டைகள் முடிந்து சமாதானமாய்க் கைகோர்த்துத் திரிந்த அந்த தண்டவாள நாட்கள். நினைத்தபடியே இப்போது என்கையைப் பிடித்திருக்கும் அவன் முகத்தைப் பார்க்கிறேன். அவன் முகத்தில் சிறு மலர்ச்சி தெரிகிறது. அவனுக்கும் மகிழ்ச்சியான அவனுடைய தண்டவாள நாட்கள் நினைவில் தாலாட்டுகின்றன போலும். அவன் ஊரில் தண்டவாளம் இருந்ததா? எனக்குக் கிடைத்தது போன்ற தண்டவாள நாட்கள் அவனுக்குக் கிடைத்திருக்குமா? தெரியவில்லை. என்றபோதும் இப்போது அவன் பதட்டம் குறைந்து கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறான். தொடர்ந்த ஓட்டத்திற்கு இடையில் இந்தக் கணம் மகிழ்ச்சியானதுதான். ரயிலின் ஊதல் சத்தம் கேட்கிறது. எங்கள் முகத்தில் படர்ந்திருந்த மகிழ்ச்சி வினாடியில் ஓடி மறைந்து இருள் கப்பிக் கொள்கிறது. எங்கள் எதிரில் தூரத்தில் ரயில் வருவது தெரிகிறது. இருவரும் அவரவர் தண்டவாளப் பகுதியின் சரிவில் இறங்குகிறோம். நான் இறங்கிய பகுதியில் ஒரு முந்திரித் தோப்பு இருக்கிறது. தோப்பிற்கு பனைமட்டையால் நெரிசல் கட்டி வேலியமைத்திருந்தார்கள். ஒரு திறப்பு இருக்கிறது. திறப்பைத் திறந்து உள்ளே நுழைந்த நான் கவனமாக மீண்டும் திறப்பை மூடி தோப்புக்குள் நுழைகிறேன். தரைவரையிலும் கிளைபரப்பிப் படர்ந்திருந்த முந்திரி மரங்கள் மறைந்து கொள்வதற்கு வசதியாக இருந்தன. மறைவில் இருந்தபடியே ரயிலின் வரவுக்காகக் காத்திருக்கிறேன். அவன் இறங்கிய பக்கம் என்ன இருக்கிறது? மறைவிடம் இன்றித் தவிக்கிறானோ என்னவோ? இங்கிருந்து எட்டிப் பார்த்தாலும் தெரியாத அளவிற்கு தண்டவாள மேடு உயரமாக இருக்கிறது. அவனையும் இந்த இடத்திற்குக் கூட்டி வரலாமா? முடிவெடுப்பதற்கு முன்னதாகவே ரயில் வந்துவிடுகிறது. நான் என்னை நன்றாக மறைத்துக் கொண்டு சிறுகிளை விலக்கி ரயிலைப் பார்க்கிறேன். ரயிலின் ஜன்னல்கள் வழியாகவும் வாசல்கள் வழியாகவும் பலநூறு ஜோடிக் கண்கள் எங்களைத் தேடிக் கொண்டிருப்பது தெரிகிறது. நான் தப்பிக்கும் நோக்கத்துடன் கிளையை விட்டுவிட்டு கண்களை நன்றாக மூடிக் கொள்கிறேன். ரயில் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருக்கிறது. ரயில் நிற்கிறதா என்பதை அதன் சத்தத்தின் மூலமாகக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றேன். ரயில் நிற்கவில்லை. சென்றுகொண்டே இருக்கிறது. கண்ணுக்கெட்டாத தூரத்திற்கு சென்றிருக்கும் என்பது உறுதியான பின்னர்தான் கண்களைத் திறந்து பார்க்கிறேன். இப்போதும் தப்பித்துவிட்டதாகத் தோன்றுகிறது.


அவன் எதிர்ப்புறமிருந்து தண்டவாள மேட்டில் ஏறி என்னைத் தேடிக் கொண்டிருக்கிறான். நான் மறைவிலிருந்து வெளியில் வந்து கையசைத்து, அவனைக் கீழே அழைக்கிறேன். முந்திரித் தோப்பின் வாய்க்காலில் கிடந்த தண்ணீரில் தொண்டையை நனைத்துக் கொள்கிறோம். அடர்ந்த மரத்தினடியில் கிடைத்த நிழலில் உடல் கிடத்தி, அடுத்த ஓட்டத்திற்காக எங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கிறோம். ஓடுவதை நிறுத்திய பிறகுதான் உடலில் வலி தெரிகிறது. உடம்பின் இயங்கு தசைகள் அத்தனையும் இறுகத் துடித்துத் தெறித்துக் கொண்டிருக்கின்றன. சின்ன இரும்புக் கம்பியால் தசைகளில் எலும்பு முறிந்து விடாதபடிக்கு யாரோ தொடர்ந்து அடித்துக் கொண்டிருப்பதுபோல் இருக்கிறது வலி. படுத்தபடியே வலியின் துடிப்பை அவதானிக்கிறேன். அதில் ஒரு தாளலயம் இருப்பது போல் தெரிகிறது. அந்தத் தாளலயத்தை கண்மூடி ரசிக்க முயற்சிக்கிறேன். இப்போது என்னை ஆட்கொண்ட தாளலயமும், இதயத் துடிப்பும், மூச்சும் ஏதோ ஒரு புள்ளியில் இணைவதாக உணர்கிறேன். இந்த இயக்கங்கள், இயக்கங்களின் இணைப்புப் புள்ளி எல்லாம் எனக்கு உள்ளே இருந்தாலும் அதற்கான காரணங்கள் எனக்கு வெளியேதானே இருக்கின்றன. புறம்தானே எனக்குள்ளான இந்த இயக்கத்தைத் தீர்மானித்தது. அதுதானே இயக்கங்களையும் அவற்றின் இணைவையும் என்னை உணரவைக்கிறது. என்னைப்போல்தான் அவனும் லயத்திருக்கின்றானா? அவன் பெயர் என்ன? மிகவும் சம்பிரதாயமான அறிமுகமாக அவனிடம் உன் பெயர் என்ன என்று கேட்க எனக்கு விருப்பமில்லை. அவன் பெயர் இப்போதைக்கு எனக்குத் தேவையுமில்லை. அருகில் படுத்திருக்கும் அவனைப் பார்க்கிறேன். அவன் கைகளைக் கட்டி முகத்திற்கு அடைக்கொடுத்து குப்புறப் படுத்திருக்கிறான். அவன் உளைச்சல் தாங்காமல் கால்களை மாற்றி மாற்றி மடக்கி நீட்டிக் கொண்டிருக்கிறான்.
0
எங்கேயோ எதற்கோ சென்றுவிட்டு எனக்கான இடம் நோக்கி, பொட்டல் காட்டில் நடந்து திரும்பிக் கொண்டிருந்தேன். வரும் வழியில் ஒரு குடிசை. எங்கேயோ அடிக்கடி பார்த்த உணர்வைத் தந்தது. எங்கே என்பது சட்டென நினைவில் வரவில்லை. குடிசையை ஒரு சுற்று சுற்றி வந்தேன். கனவில் பார்க்கும் அந்தக் குடிசை இதுவாகத்தானிருக்கும் என்று நினைத்தேன். என்னை மிகவும் நெருக்கமாக உணரவைத்தது அந்தக் குடிசை. உள்ளே சென்று பார்ப்பது என்ற முடிவுடன் உள்ளே நுழைந்தேன். அவன் வாசலுக்கு நேராக தரையில் அமர்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தான். முதன் முதலாக அவனை அப்போதுதான் பார்க்கிறேன். ஆனால், ஏற்கனவே எங்கேயோ பார்த்ததுபோல் இருக்கிறது. பார்த்திருக்கலாம். அடிக்கடி வரும் அந்தக் கனவில்கூட பார்த்திருக்கலாம். நினைவில்லை. குடிசையிலிருந்த மற்றவர்கள், ஒரு பத்துப் பதினைந்து நாற்காலிகளை வட்டமாகப் போட்டு அதனைச் சுற்றி மெதுவாக ஓடிக்கொண்டிருந்தார்கள். அதில் ஆண்களும் இருந்தார்கள். பெண்களும் இருந்தார்கள். பெண்களின் எண்ணிக்கை 33 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருந்தது. மியூசிக் சேர் விளையாட்டு நடந்து கொண்டிருப்பதுபோல் தெரிந்தது. என்னை யாரும் கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் அவர்களுக்கு அதைப்பற்றி எந்தப் பிராதும் இல்லாதிருக்கலாம். ஒலி எழும்பி விடாதபடிக்கு எல்லோரும் மிகவும் கவனமாக எதற்கோ காதுகொடுத்து அமைதியாக ஓடிக்கொண்டு இருந்தார்கள். ஒரு தும்மல் சத்தம் கேட்டது. ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்து கொண்டார்கள். ஓடிக் கொண்டிருந்த அனைவருக்குமே நாற்காலி கிடைத்தது. யாருமே அவுட்டாகவில்லை. யாரை அவுட்டாக்கி வெளியேற்ற இப்படி சுற்றிக் கொண்டிருந்தார்கள் என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நாற்காலியில் அமர்ந்து கொண்ட அனைவருமே ஓரமாக உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த அவனை நோக்கி கை நீட்டி “அவுட்..என்றார்கள்.
“ஓட வைப்பவர்களின் பட்டியல் உடனே வேண்டும் என்று நீங்கள் சொன்ன வேலையைத்தானே நான் செய்து கொண்டிருந்தேன். நான் ஓடவே இல்லையே. பின்னர் எப்படி அவுட்டாக முடியும்.என்றான் அவன்.
மீண்டும் அவர்கள் அவனை நோக்கிக் கை நீட்டி “அவுட்…என்றார்கள்.
“ஓடாததால் நீ அவுட்…என ஒருவர் சத்தமாகச் சொன்னார். அவன் காகிதங்களைக் கீழே வைத்துவிட்டு, அமைதியாக எழுந்து நின்றான். ஓட வைப்பவர்களின் பட்டியலைத் தயார் செய்து கொண்டிருந்த அவனை, ஓடியவர்கள் ஓட்டி விட்டார்கள் என்பது எனக்குப் புரிந்தது. இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. அது அவனது முகத்தைப் பார்க்கும்போதே தெரிந்தது. அனைத்து நாற்காலிகளுக்கும் நடுவில் சற்றே உயரமான ஒரு நாற்காலி இருந்தது. அதை நோக்கிச் சிலர் கை நீட்டினார்கள். வேறுசிலர் ஓடிச்சென்று நாற்காலியின் கால்களை இறுகப் பற்றிக் கொண்டார்கள். ஒருவர் அந்த நாற்காலியின் கைப்பிடிகளை தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு நாற்காலியின் மேல் குப்புறப் படுத்துக் கொண்டார். அந்த உயரமான நாற்காலியில் வழக்கமாக உட்காருபவர் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என்ன செய்யப் போகிறார் என்று வேறு சிலர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாற்காலியில் குப்புறக் கிடந்தவர் அவரை முறைத்தபடியே தன்னுடைய வேலையில் கவனமாயிருந்தார். குப்புறக் கிடந்தவரை ஒருவர் தலையில் அடித்தார். ஒருவர் முதுகில் குத்தினார். இன்னுமிருவர் தோள்பட்டைகளிலும் பின்புறத்திலும் கடித்தார்கள். தொடர்ந்து தாக்கப்பட்ட போதும் அவர் எதற்கும் நிமிர்ந்து கொடுப்பதாக இல்லை. திடீரென ஒரு ஒளி பளீரிட நூலிடை இடைவெளியில் சராசரிக்கும் அதிக உயரமாக இருந்த ஒருவர் அந்த உயரமான நாற்காலியில் அமர, நாற்காலியின் கால்களைப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் நாற்காலியைத் தூக்கிப் பிடித்து மேலும் உயரமாக்கினார்கள். சந்தோஷக் கூச்சல் கூரையைத் தூக்கியது. பலரும் கை தட்டினார்கள். அந்த நாற்காலியில் ஏற்கனவே அமர்ந்திருந்தவரும்கூட கை தட்டினார். குப்புறக் கிடந்து கடிபட்டவரின் பின்புறத்தை ஒருவர் இதமாகத் தடவிக் கொடுக்க, கடிபட்டவர் அந்த அனுதாபியிடம் “என்ன ஆனாலும் நாற்காலியை விடவில்லையில்ல… கைப்பற்றீட்டமுல்ல… இனி எங்கயோ போயிருவமுல்ல…என்றார். இவ்வளவு நேரம் இத்தனையையும் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த அவன் அமைதியாக வெளியேறினான். இங்கே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அறிந்து கொள்வதைவிட அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான் என்பது எனக்கு முக்கியமானதாகப்பட்டது. அவனைப் பின் தொடர்ந்து நானும் வெளியே வந்தேன்.
0
அவனைத் பார்க்கிறேன். அவன் கால்கள் ஆட்டுவதை நிறுத்தியிருந்தான். முதுகின் ஏற்ற இறக்கம் மூச்சு சீராக இருப்பதைக் காட்டுகிறது. தூங்கியிருக்கலாம். அல்லது ‘தூக்கம் என்பதும்கூட பாவனைதானே என்கிற அபத்தத் தத்துவார்த்தப் புரிதலுடன், பாவனை செய்து கொண்டிருக்கலாம்.
0
பின்தொடர்ந்த அவனைத் தொட்டுவிடும் தூரத்தை நான் நெருக்கியபோது ‘மாற்றுப் பாதையில் செல்லவும்என வழிகாட்டும் அறிவிப்புப் பலகை போல அவனை மறித்து வலதுபுற காம்பவுண்ட்க்குள் சிலர் திருப்பி விட்டார்கள். திருப்பி விட்டவர்கள் ‘என்ன?என்பதுபோல் என்னை முறைக்க நான் அவனை நோக்கி கை நீட்டினேன். என்னையும் அந்த காம்பவுண்ட்க்குள் திருப்பிவிட நான் அவனைப் பின் தொடர்ந்தேன். வெளியில் பார்க்க பாழடைந்த கட்டிடம் போல் இருந்த அது உள்ளே சகல வசதிகளும் கொண்ட நவீனமான ஓரிடமாக இருந்தது. அவனை ஒரு ஸ்டூலில் அமர்த்தியவர்கள் எனக்கும் ஒரு இருக்கை தந்தார்கள். நான் அவனைப் பார்த்தேன். அவனும் என்னைப் பார்த்தான். இருவரும் நட்பாகச் சிரித்துக் கொண்டோம். நாங்கள் அமர்ந்திருந்த ஹாலில் அவரவர்களுக்கான மேசையில் ஐந்துபேர் இருந்தார்கள். மூன்றுபேர் பேர் கணினியில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள் அல்லது யாரையோ கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். எல்லா மேசைகளிலுமே கணினி இருந்தது. இரண்டுபேர் தொலைபேசியைக் காதில் வைத்துக் கொண்டு டைரியில் எதையோ குறித்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் நுழைந்த வாசலுக்கு நேரெதிரில் இருந்த கொல்லைப்புற வாசல்போக அந்த அறையில் எதிர் மூலையில் இரண்டு அறைகள் அடைக்கப்பட்டு, காந்தி படம்போட்ட திரைச்சீலைகள் போடப்பட்டிருந்தன. நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்குப் பின்னால் ஒரு அறை இரட்டைப் பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தது. இன்னொரு அறையிலிருந்து வெளிப்பட்ட மீசைக்காரர் எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு “நீ வாஎன அவனை அந்த அறைக்குள் அழைத்துச் சென்றார். அவர்கள் உள்ளே நுழைந்ததும் கதவு தானே அடைத்துக் கொண்டது.
ஹாலில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியேறினார்கள். காலியாக இருந்த மேசைக்கு வேறு இரண்டுபேர் வந்தார்கள். ரொம்ப நேரத்திற்குப் பிறகு அவன் திரும்பி வந்தான். அவனுடன் வந்த மீசைக்காரர் அடுத்ததாக என்னை “ம்என்றார் நான் அவரைப் பின் தொடர்ந்தேன். உள்ளே இருந்த அந்தக் கனிவான முகத்தின் வழக்கமான கேள்விகளுக்குப் பின்னர், அவனுக்கும் எனக்கும் எத்தனை ஆண்டுகளாகத் தொடர்பு என்று கேட்டார்கள். நான் அவனைத் தெரியாது என்றேன்.
“ரெண்டு பேரும் ஒன்றாகத்தானே வந்தீர்கள்?
எங்க ரெண்டு பேருக்குமே பாதை ஒன்றாக இருந்ததால், ஒன்றாக வந்தோம்
“அவன் இப்போ எங்க போய்க்கிட்டு இருக்கான்?
எனக்குத் தெரியாது?
சரி… நீ இப்ப எங்க இருக்க?
இங்கதான்…
அப்படீன்னா ரெண்டு பேரும் ஒரே இடத்துல இருக்கீங்கன்னுதானே அர்த்தம். அப்புறம் எப்படி அவனத் தெரியாதுங்குற…
தெரியாது…
தெரியாதா? சொல்ல முடியாதா?
தெரியாது…
“தெரியாதுன்னா என்ன அர்த்தம்…
தெரியாது…
அவன் ஒன்னயப் பத்தி நெறைய சொல்லியிருக்கான். அது தெரியுமா?
தெரியாது…
உங்க ப்ளான் பத்தி அவன் சொன்னான்
தெரியாது…
“இந்த அசைன்மென்ட்டுக்கு ஹெட் யாரு?
தெரியாது…
“சரி அசைன்மென்ட் டீடெய்ல்ஸ் சொல்லு
தெரியாது…
உனக்கு என்னதான் தெரியும்?
தெரியாது…
உங்ககிட்டயெல்லாம் வேற மாதிரிதான் கேட்கணும். அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு இன்னும் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் விசாரிக்கலாம். வெளியில உட்காரு
மீசைக்காரர் கனிவான முகத்திற்கு எதிரில் அரைகுறையாக ஒரு நாற்காலியின் ஓரத்தில் தொங்கிக் கொண்டு, ஏதோ பேச எத்தனிக்கையில் நான் அறையைவிட்டு வெளியில் வந்தேன். ஹாலில் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. காந்தியைத் தொங்கவிட்டிருந்த எதிர் அறைகளில் ஒன்று திறந்திருந்தது. நான் அவனிடம் கைகாட்டிவிட்டு நேராக பின் வாசலை நோக்கி நடந்தேன். அவனும் பின் தொடர்ந்தான். நான்கடி உயரம் மட்டுமே இருந்த காம்பவுண்ட் சுவறில் ஏறி வெளியில் குதித்தோம். குதித்த இடம் ஒரு கார் ஷெட். மெதுவாக நடந்து கார்ஷெட்டின் வாசல் வழியாக வெளியேறினோம். திரும்பிப் பார்த்தபோது, இரண்டு பேர் எங்களை நோக்கி கைகாட்டி, எங்களை நோக்கி விரைவாக வந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் நெருக்கமாக கண்காணிக்கப்படுவதாக உணர்ந்த அந்தக் கணத்தில் தொடங்கிய ஓட்டம். பஸ் ஸ்டாண்ட், பழக்கடை, கிழக்கு ரோடு, பூக்கடைவீதி, வடக்கு ரோடு, ஜவுளிக் கடைத் தெரு, மேற்கு ரோடு, வெற்றிலை வீதி, தெற்கு ரோடு என்று ஓடி நகைக்கடைச் சந்தில் திரும்பும் நேரத்தில்தான் மொட்டை எங்களை விரட்டினான். ஒவ்வொரு இடத்திலும் வேறுவேறு ஆட்களால் துரத்தப்பட்டோம். தொடர்ந்து கொண்டிருக்கும் ஓட்டத்தின் மத்தியில் எங்களுக்குள் ஒருவரைப்பற்றி ஒருவர் எந்த முறையான அறிமுகங்களுக்கும் நேரம் கிடைத்ததேயில்லை. பெரும்பொழுதுகள் ஓட்டத்திலும் கிடைத்த சிறு பொழுதுகளும், அடுத்த ஓட்டத்திற்கான ஆயத்தப்படுத்தலாக பதட்டமான ஓய்விலுமே கழிந்தது, இப்போது கழிந்துகொண்டிருப்பதைப்போல்.
0
கையில் சுரீர் என அடிவிழ பதறி விழிக்கிறேன். அவன் ஏற்கனவே எழுந்து என் அருகில் ‘சப்தம் செய்யாதேஎன தனியார் மருத்துவமனைகளில் ஒட்டப்பட்டிருக்கும் குழந்தையின் படங்களில் இருப்பதைப்போல், குவித்த உதடுகளின் குறுக்கே ஆள்காட்டி விரல் வைத்தபடி என்னைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறான். அவன் கண்களும் காதுகளும் எதையோ கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதாய்த் தெரிய நானும் கவனிக்கிறேன். அருகில் எங்கோ மாடுகளின் குளம்படிச் சத்தம் கேட்கிறது. அது எங்களுக்குப் பின்னால் முந்திரித் தோப்பின் பக்கம் கேட்பதாய்த் தெரிகிறது. இருவரும் மெதுவாக எழுந்து அமைதியாக நெரிசலின் திறப்பு வழியே வெளியேறி தண்டவாள மேட்டை அடைகிறோம். ‘டொப்என ஒரு சப்தம் கேட்கிறது. பறவைகளின் கிறீச்சிடல்களுக்கும் படபடப்புகளுக்கிடையே ‘தப்பிச்சுருஎன்ற அலறலுடன் தலையைப் பிடித்தபடி அவன் தண்டவாளத்தின் ஓரமாக சரளிக் கற்களில் சரிந்து கொண்டிருக்கிறான். என் அருகில் கொஞ்சம் பெரியதாக ஏதோ ஒன்று வந்து விழுகிறது. விழுந்தது என்ன என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. தண்டவாள மேட்டின் எதிர்ப்புறம் இறங்கி, இறங்கு பொழுதின் இறுதி வினாடிகளில் தன்னந்தனியாக நான் எனக்கான ஓட்டத்தை ஓடத் தொடங்கியிருக்கிறேன் - புலனுக்கு அப்பாற்பட்ட அவற்றின் துரத்தலுக்கு எதிராக – நாளை விடியல் நிச்சயம் என்ற நம்பிக்கையுடன்.
 (உயிர் எழுத்து – மே 2016)

Monday, July 4, 2016

19 - சிறுகதை - சத்யா

         19.1:
      சப்னா
வாழ்க்கை ஏன் சிலரை நமக்கு அறிமுகம் செய்கிறது? அதைப் புரிந்துகொள்வதிலேயே பெரும்பாலானோரின் ஆயுள் கடந்துவிடுகிறது, ஒரு சில சந்திப்புக்கள் அப்படியே வாழ்கையை, குறிக்கோளை, இலட்சியத்தை புரட்டிப்போட்டு விடுகிறது. ஒருவேளை எனக்கான அப்படி ஒரு சந்திப்புதான் சப்னாவோ? அவளில் நான் தொலைந்து போவேனோ? ஒருவேளை அவளை நோக்கிய ஏன் தேடல்தான் இந்த வாழ்க்கையோ? நான் எதற்காக அவளை சந்தித்தேன்? அவள் ஏன் என்னை அப்படிப் பார்த்தாள்? ஒருவேளை நான் அவளை இதற்கு முன்பே சந்தித்திருப்பேனோ? ஒருவேளை ஆம் என்றால் எங்களுக்குள் என்ன உறவு? நான் தான் அம்மாவைப் பார்த்துக்கொள்ள அவளை அனுப்பியிருப்பேனோ? ஏன் ஏன் வாழ்க்கை விநோதங்களை சுமந்துள்ளது? இந்த இரண்டு நாட்களாக நான் யார் என்ற கேள்வியை விட 'எனக்கு சப்னா யார்?' என்ற கேள்வி என்னைத் துளைக்கத் தொடங்கிவிட்டதே. நான் ஏன் அவளை சந்திக்க வேண்டும்? என்னை நோக்கிய எனது தேடல் அவளில்லாமல் முழுமையடையுமா? அவளின் அவளின் கண்களுக்குள் ஏதும் கருந்துளை உள்ளதோ? என்னை அப்படியே இழுத்து சலித்து பொடிப்பொடியாக்கி விடுகிறதே, ஆனால் அவளுக்குள் கரைவதில்தான் எத்தனை இன்பம். ஒருவேளை எல்லா நட்சத்திரங்களும் கருந்துளைகளை நோக்கித்தான் பயணிக்கிறதோ? கரைவதில்தான் அவை முழுமையடையுமோ? அவளைபிரிந்து வருவது ஏன் இப்படி வலிக்கிறது? அவள் ஏன் என்னை காந்தப்புயலில் சிக்கிய இரும்புத்துகளாய் அவளை நோக்கி இழுக்கிறாள். ஏன் மனம் ஏன் நியுட்ரானை சுற்றும் ஏலெக்ட்ரானாய் அவளையே சுற்றி வருகிறது? ஒருவேளை நியுட்ரான் போல நானும் கடைசிவரை ஆவலுடன் சேர முடியாதோ? அவளைக்கண்டால் ஏன் நான் அனுசிதைவு கொண்ட ஆஞ்சியோஸ்பெர்ம் விதைகளாய் அழிந்து போவதுபோல் உணர்கிறேன்? ஏன் அவளைப்பிரிவது நானோவரில் ஊசி செய்து நகக்கண்ணில் குத்துவதுபோல் வலிக்கிறது? அவளும் என்னைக் காதலிப்பாளா? நான் தேடும் என் இறந்தகாலத்தில் எனக்கு வேறு காதலி இருந்தால்? அதை எப்படி எதிர்கொள்வது? எதிர்காலத்துக்காக இறந்தகாலத்தை இழப்பதா இறந்தகாலத்துக்காக எதிர்காலத்தை இழப்பதா?
ஏன் இப்படி ஹேக் செய்யப்பட்ட கம்ப்யூட்டராய் நான் குழம்பிப் போகிறேன்? என்ன செய்வது? ஏன் வாழ்வை நானோவரால் அணு எண் குறைக்கப்பட்டதுபோல் சுருக்கிக்கொள்ளவா இல்லை பெருவெடிப்பு அண்டமாய் விரித்துச் செல்லவா? என்னைத் தேடவா? அவளுக்குள் தொலைந்து போகவா? இவளின்.. – சடாரென முடியை ஹேர் டிரைவிலிருந்து பிடுங்கியதும் பேசிக்கொண்டிருந்த சத்யாவின் உருவம் சுருங்கி மறைந்துபோனது. கையிலெடுத்த சத்யாவின் முடியை ஆட்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவில் வைத்து உருட்டியபடி நிலைகுத்திய பார்வையோடு அமர்ந்திருந்தாள் சப்னா. வெகுநேரம் கழித்து அவள் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் வழிந்து ஓடியது.
எதற்காக அவனது முடியை எடுத்தோம் என தன்னைத்தானே திட்டிக்கொண்டாள். இன்று காலை படுக்கையில் உதிர்ந்திருந்த சத்யாவின் முடியைக்கண்டதும் அவளுக்கு இனம் புரியாத ஆர்வம் பிறந்தது. அவன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான் என்று தெரிந்துகொள்ள நினைத்தாள். உண்மையில் அவனைக் கொலை செய்ய அவனுடைய எண்ண ஓட்டத்தை தெரிந்து வைத்திருப்பது நல்லது என்று தன்னை சமாதானப் படுத்திக்கொண்டாலும் உண்மையில் அவளது கூரார்வமும்(curiosity) ஒரு காரணம். அவளின் இந்த செயலால் இவ்வாறு தடுமாறுவாள் என அவள் நினைக்கவில்லை. வெகுநேரம் யோசித்துக்கொண்டிருந்தாள், சத்யா நினைவிலிருந்ததுபோலவே 'இவனை ஏன் சந்தித்தோம்' என நினைத்துக்கொண்டாள். சிறு வயது முதலே அனாதையாகவே வாழ்ந்த அவளுக்கு எதையும் தர்க்கப்பூர்வமாகவே பார்க்கும் அவளுக்கு இந்த உணர்வுப் பூர்வமான தருணம் புதிய அனுபவமாக இருந்தது. ‘ஒருவேளை தான் ஒரு ஹ்யுமனாய்டை காதலிக்கப் போகிறோமா?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். “இந்த ஹ்யுமனாய்டு சுயமாக சிந்துக்கக் கூடியது. கட்டளைகளுக்கு அடிபணியாது.” என்று ஜார்ஜ் சொன்னது நினைவில் வந்தது. பயிற்சியின்போது சத்யா கேட்ட “மனிதர்கள் இவ்வாறு யந்திரம் போல் வாழ்வதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கவில்லையா?” என்ற கேள்வி நினைவுக்கு வந்தது. இவனை அழிக்காமல் விட்டால் அது நிறுவனத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் என நினைத்துக் கொண்டாள். இருப்பினும் அவனது நினைவுகளைக் கண்டது இவளை மன ரீதியாக பாதிப்படைய வைத்திருந்தது, அவனைக் கொலை செய்ய தயாராக வேண்டும் என சொல்லிக்கொண்டாள். காஸரிடம் கவுன்சிலிங் செல்ல வேண்டும் என்று நினைத்தபடி படுத்து உறங்கினாள். ஏனோ அவளது தலையணை நனைந்து கொண்டிருந்தது.
காஸர்:
காஸர்: வா சத்யா. நீ யார் எனத்தெரிந்ததா?
சத்யா: இல்லை அங்கே எதுவும் கிடைக்கவில்லை, அவன் எதுவும் சொல்லவில்லை. அவனுடைய அறையின் நினைவுகளை எடுத்துப்பார்த்தேன் அங்கும் எதுவுமே இல்லை.
கா: அவன் மூளை செல்களைப் பார்த்தாயா? முடியாவது எடுத்துவந்தாயா?
ச: இல்லை, அவன் முன்னெச்சரிக்கையாக பால்டர் செய்திருந்தான், ஒற்றை முடி கூட இல்லை.
கா: இப்போது என்ன செய்யப் போகிறாய்?
ச: நான் ஒரு ரகசிய ஏஜெண்ட், என்னைப்பற்றிய விவரங்களை கண்டு பிடிக்கப் போகிறேன். கண்டு பிடித்து நான் யார் செய்துகொண்டிருந்த வேலையை தொடரப் போகிறேன். முதலில் சப்னாவைப் பார்க்கப் போகிறேன்.
கா: அவளும் ரகசிய ஏஜெண்டா? (கிண்டலாக கேட்டது)
(சத்யா எழுந்து வெளியே கிளம்பினான்)
கா: ஏய் இரு இந்த ட்ராஜன் ஹார்சை நீக்கிவிட்டுப்போ.
ச: இன்னும் இரண்டு நாள் இரு, என்னை கிண்டல் செய்ததற்கு தண்டனை.

19.2
சப்னா பதட்டமாக இருந்தாள். குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தாள். திடீரென ஓரிடத்தில் நின்று கண்களை மூடி ஆழமான பெருமூச்சு விட்டாள். முடிவு செய்தவளாய் ஓரிடத்தில் அமர்ந்தாள். கைகளை விரித்து மஞ்சள் நிற ஒளியை டேபிளின் மீது கொட்டினாள், அது சிறிய திரையாக உருமாறியது. அதில் எதையோ தட்டினாள். அதில் ஜார்ஜ் முளைத்தார்.
“ஹலோ ப்ரொபசர். எப்படி இருக்கிறீர்கள்?”
“நன்றாக இருக்கிறேன் சப்னா, நமது ப்ரோக்ராம் வெற்றி”
“தெரியும் சத்யா கூறினான். இன்று என்னைப்பார்க்க வருவதாக கூறியிருக்கிறான்”
“ஓ,, அந்தளவு v18 ஐ நம்பவைத்து விட்டாயா? நன்று நன்று.”
“ஆம், சத்யா என்னை நம்புகிறான்” சப்னாவின் குரல் பலவீனமாக ஒலித்தது.
“அது இயல்பான மனிதர்களைப்போல் தான் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது, நம்பிக்கை, விசுவாசம் எல்லாம் அதற்கு தெரியும். நீ அதை அழிக்க தயாராகி விட்டாயா?”
“ம்ம்ம் தயாராக இருக்கிறேன் என்று நினைக்கிறேன்”
“நாங்கள் v0 வின் வீட்டை சோதனையிட்டுப் பார்த்தோம். ரெகார்ட் ஆனவீடியோ பிரமிக்கும்படி உள்ளது. V18னின் வேகம் நம்ப முடியாத அளவு உள்ளது. நீ அவனிடம் கவனமாக இருக்க வேண்டும்.”
“ம்ம்ம்”
“துப்பாக்கியை பயன்படுத்தாதே, v18னுடைய ரிப்லெக்ஸ் அதீத வேகமாக உள்ளது, சரேலென உடலை சுருக்கியோ விரித்தோ தப்பி விடுகிறான், நீ இங்கு வந்ததும் காட்டுகிறேன். நம் பாதுகாவலர்களாய் இவனைப்போன்ற ஹ்யுமனாய்டுகளை இனி எதிர்காலத்தில் பயன்படுத்தலாம். நீ அவனைக்கொல்ல முதலில் பிரீசரைப் பயன்படுத்து, அது v18னை செயல்பட விடாமல் முடக்கி விடும் மேலும் அது ஒலியின் வேகத்தில் இயங்கும் அதனால் V18னால் தப்பிக்க முடியாது.”
“சரி ப்ரொபசர் அப்படியே செய்கிறேன்”
“குட், வேறென்ன பெண்ணே?”
“ப்ரொபசர் ஹ்யுமனாய்டுகள் காதலிக்குமா?” என்றாள்.
“ஹ ஹ ஹா... அதற்கு மட்டும் என்ன குறைச்சல், ஆம் காதலிக்கும், என்ன பரிதாபம் அதைத்தான் யாரும் காதலிக்க மாட்டார்கள்”
“ஏன் ப்ரொபசர்?” என்றாள்.
“பொம்மையை யாரும் காதலிப்பார்களா? இது போனால் இன்னொன்று. ஹ ஹ ஹா”
“ம்ம்ம்..”
“சரி பெண்ணே நான் சொன்னது நினைவில் இருக்கட்டும், துப்பாக்கியைப் பயன்படுத்தாதே, முதலில் ப்ரீசர் பின்பு துப்பாக்கி”
“சரி ப்ரொபசர். நீங்கள் யாரையாவது கொலை செய்திருக்கிறீர்களா?”
“ஹ்யுமனாய்டை கேட்கிறாயா? முதலில் ஒன்றை புரிந்துகொள் இதற்கு பெயர் கொலை அல்ல அழித்தல், நம் வீட்டில் வீணாய்ப்போன பொம்மையை அழிப்போமே அது போல தான் இதுவும் புரிந்துகொள். ஆங்.. உன் கேள்விக்கு பதில். நான் நூற்றுக்கணக்கில் ஹ்யுமனாய்டுகளை ‘கொலை’ செய்திருக்கிறேன். என் வேலையே அதுதான்”
“சரி நன்றி ப்ரொபசர்”
“குட் லக் டியர்” என்றபடி மறைந்து போனார்.
சப்னா நெற்றியை சுருக்கியபடி நடந்தபடி நானோவரைக் கையில் எடுத்தாள். “ப்ரீசர்” என்றாள். அது குட்டியாக ரிமோட் போன்ற ஒன்றைத் துப்பியது. “துப்பாக்கி” என்றாள். உடனே துப்பாக்கி வந்து விழுந்தது. இரண்டையும் எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டாள்.
கொஞ்ச நேரத்தில் கதவைத் திறந்துகொண்டு சத்யா வந்தான், “சப்னா... எப்படி இருக்கிறாய் உன்னிடம் நிறைய சொல்ல வேண்டும்” என்று குதூகலமாய் கத்தியபடி அவளை நெருங்கினான்.
சப்னா ஒருநொடி தயங்கியவள் சட்டென்று துப்பாக்கியை எடுத்து அவனை நோக்கி சுட்டாள்.
அவன் தடுக்கவில்லை, தப்பிக்க முயலவில்லை, சப்னாவையே பார்த்தபடி நின்றிருந்தான். துப்பாக்கி குண்டு அவன் நெற்றியை உரசும்போது அவன் கண்களில் ஒரு துளி கண்ணீர் தேங்கியது.
“ஆ...” வென அலறியபடி சப்னா விழித்துக்கொண்டாள். வேகமாக அருகிலிருந்த சத்யாவை இழுத்து மாரோடு அணைத்துக்கொண்டாள். தூக்கத்திலிருந்து முழுவதும் விழிக்காத சத்யா அவளின் வெற்று மார்பை சப்பியபடி “அம்மு நான்தான் குட்டிப்பையன்” என்றான். “ஆமாண்ட்டா செல்லம், நீதான் என் குட்டிப்பையன்” என்று தேம்பியபடியே சொல்லி அவனை இன்னும் இறுக்கி அணைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள். பின்பு அவனை அணைத்தபடி படுத்தாள். அவள் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.
காஸர்:
காஸர்: என்ன உதவி வேண்டும்.
சப்னா: நான் பேசிக்கொள்கிறேன், நீ வெளியே இரு சத்யா.
சத்யா: சரி (வெளியே போனான்.)
தி: எனக்கு ஹ்யுமனாய்டுகளைப் பற்றிய விவரங்கள் வேண்டும்.
கா: எந்தமாதிரி விவரங்கள்?
தி: வடிவமைப்பு, செயல்திறன் முக்கியமாக உருமாற்றம், அடையாள மாற்றம் போன்ற கோப்புகள் வேண்டும்.
கா: நீ கேட்கும் கோப்புகள் தலைமையிடத்தில் இருக்கும், அதனை தசக் செய்வது முடியாத காரியம்
தி: முடியும், நான் உனக்கு உதவுகிறேன், நான் ஒரு கோட் தருகிறேன், அதன்மூலம் உன்னால் சூப்பர் கம்ப்யுட்டரை ஹேக் செய்யலாம்.
கா: சரி நான் தேடுகிறேன், ஆனால் அவர்களின் 'லாவாவாலு'க்குள் ஊடுருவ எனக்கு கொஞ்ச நேரம் வேண்டும்.
தி: சரி உன்னை ஒரு வாரத்தில் பார்க்கிறேன்.
கா: சத்யாவிடம் என் மரியாதையை தெரிவி.

19.3
“நான் நமக்கு பாதுகாப்புக்கு ஒரு செல்லப்பிராணி வாங்கப்போகிறேன்” என்றாள் சப்னா.
“சரி நான் என்ன செய்யட்டும்?” என்றான் சத்யா.
“வீட்டில் பத்திரமாக இரு”
“என்னைப்பற்றி தேட வேண்டாமா?”
“அதைத்தான் காஸரிடம் சொல்லியிருக்கிறேன், அதனைக் கண்டுபிடிக்க ஒரு வாரம் ஆகும், அதுவரை பத்திரமாக இருக்க வேண்டும், நீ கூறியதிலிருந்து நம் எதிரிகள் பெரிய தீவிரவாத கூட்டமாக இருக்க வேண்டும். அதனால் நீ எங்கும் போகாமல் வீட்டிலேயே இரு. நான் விரைவில் வந்துவிடுகிறேன்” என்றபடி சப்னா கிளம்பினாள்.
சத்யா வீட்டிற்குள் நுழைந்துகொண்டான், வீட்டு சுவர்களை கண்ணாடி போல் மாற்றி சுற்றிலும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். நானோவரிடம் டீ போடச்சொல்லிவிட்டு வீட்டு சுவற்றை டிவியாக மாற்றினான். பெட்ஸ் சேனலில் செல்லப்பிராணிகள் அவற்றின் உருவாக்கம் குறித்து விளக்கிக்கொண்டிருந்தார்கள். போருடன் எல்லா உயிரினங்களும் அழிந்துவிட்டிருந்தன. மீதமிருந்த உயிர்களையும் 'ஆர்கானிக் உணவு ஆர்வலர்கள்' என்ற குழு தின்று விட்டிருந்தது. பின்பு எல்லா செல்லப் பிராணிகளையும் செயற்கையாக உருவாக்கத் தொடங்கிவிட்டனர். அவைகளின் உருவாக்கத்தை பார்த்துக்கொண்டே சத்யா தூங்கிப் போனான்.
சப்னா கையில் பையோடு திரும்பி வந்தாள். “என்ன வாங்கி வந்தாய்?” என்றபடி ஆர்வமாக கேட்டபடி அவளை நெருங்கினான். பைக்குள்ளிருந்து ஒரு பாம்பு கீழே விழுந்தது. இவனைப்பார்த்ததும் படமெடுத்து, இவனை மிரட்டியது. “ஸ்நேக்கி, இது சத்யா, அவனை பயமுறுத்தாதே.” என்று சப்னா சொன்னதும், அவளையும் இவனையும் மாறி மாறி தலையை திருப்பிப் பார்த்தது. பின்பு சரசரவென்று வளைந்து நெளிந்து பொய் அவன் காலை சுற்றிக்கொண்டது. சத்யா அதை கையிலெடுத்து விளையாட ஆரம்பித்தான்,  சப்னா புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
இரவு படுக்கும்போது ஸ்நேக்கியை எடுத்து வெளியே விட்டார்கள்,அது மிகப்பெரியா மலைப்பாம்பாக மாறி இவர்களின் வீட்டை விழுங்கிக்கொண்டது. அதன் வயிற்ருக்குள் இருந்த கோடிக்கணக்கான அறைகளில் ஒன்றில் இவர்களை தேக்கி வைத்துக்கொண்டது.
“இது பாதுகாப்பானது தானா?” சத்யா கேட்டான்.
“ஆம் நம்மை யாராவது தாக்க முற்பட்டால் இந்த அறைகளிலிருந்து நம்மை கண்டுபிடிக்க வேண்டும். மாறி தவறான அறைகளுக்குள் நுழைந்தால் அதுவே அவர்களை அழித்துவிடும்.”
“மொத்தமாக செயற்கை மின்காந்தப் புயலை உருவாக்கி நம்மை ஸ்நேக்கியோடு அழித்துவிட்டால்?”
“அப்படி நடந்தால் நம்மை ஒரு பலூனோடு துப்பிவிட்டு ஸ்நேக்கி அழிந்து போகும். அந்த பலூன் வலிமையானது, உள்ளீடற்றது. அதனால் லேசராலும் நம்மை அழிக்க முடியாது. அட்வான்ஸ்டு ரெடாராலும் நம்மை கண்டுபிடிக்க முடியாது.”
“சரி, இப்போது தூங்கலாம்.” என்றபடி அவளை அணைத்துக்கொண்டான்.
அடுத்த வாரத்துக்குள் 30 தாக்குதல்களை ஸ்நேக்கி முறியடித்திருந்தது.
“அவர்களை உயிரோடு பிடித்து விசாரித்தால் உண்மை தெரியுமல்லவா?” என்றான் சத்யா.
“இல்லை ஸ்நேக்கி அவர்களை கொள்வதற்காக தான் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது.” என்றாள் சப்னா.
“நான் வேண்டுமானால் ரீப்ரோக்ராம் செய்யட்டுமா?”
“இல்லை வேண்டாம் அதனால் பிரயோஜனமில்லை, நாம் காசரிடம் தேடச்சொன்ன விவரங்கள் இன்று தயாராக இருக்கும். நாம் போய் அதைப் பார்த்துவிட்டு அடுத்த நடவடிக்கையை முடிவு செய்வோம்”
“காஸரிடம் என்ன தேடச் சொன்னாய்?”
“பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து விசாரிக்கச் சொன்னேன்.”
“எதற்காக?”
“உன்னை யாரும் கண்டுபிடிக்க முடியாதல்லவா, அதனால்தான்”
“ஹஹஹா.. ஏன் கண் ரேகையைக் கொண்டு கண்டுபிடித்துவிட்டால்?”
“ஆம் அதுதான் எனக்கும் பயமாக இருக்கிறது” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
காஸர்:
சப்னா: நீ சொல்வது உண்மையா. அவ்வாறு ஒட்டுமொத்தமாக உருமாற்றம் செய்ய முடியுமா?
காஸர்: ஆம் கண்டிப்பாக, ஹ்யுமனாடை நீ மொத்தமாக மாற்ற முடியும்.
தி: கண் ரேகை?
கா: எல்லாமே.
தி: சரி விவரங்களைக் கொடு.
கா: (மஞ்சள் நிற ஒளியை அவள் கண்ணுக்குள் செலுத்தியது)
தி: என்ன இது, ஹ்யுமனாய்டின் ப்ரோக்ராமை மறுஆக்கம் செய்ய வேண்டுமா? அப்படி செய்தால் நினைவுகள் அழிந்து போகாதா?
கா: ஆம்.
தி: வேறு வழி இல்லையா.
கா: இல்லவே இல்லை. நீ வேண்டுமானால் பயிற்சின் மூலம் ஹ்யுமனாய்டுக்கு நினைவுகளை ஏற்றலாம்.
தி: இல்லை அதற்குப் சில மாதங்களாகும்.என்னிடம் அவ்வளவு நேரம் இல்லை.

19.4
தூங்கிக்கொண்டிருந்த சத்யாவையே பார்த்துக்கொண்டிருந்தாள் சப்னா. அடிக்கடி கண்களை துடைத்துக்கொண்டிருந்தாள். சத்யா தூக்கத்தில் இயல்பாக கைகளால் சப்னாவை தேடினான். அவளைக்காணாமல் எழுந்து பார்த்தான். அமர்ந்திருந்த அவளிடம் நெருங்கினான்.
“சப்னா.. என்ன ஆச்சு?” என்றான்.
“ஒன்றுமில்லை கொஞ்சம் வேலை இருக்கிறது, யோசனையாக இருக்கிறேன்.” என்றாள்.
“என்ன வேலை நான் எதுவும் உதவ முடியுமா?”
“இல்லை, நான் பார்த்துக்கொள்கிறேன். நீ தூங்கு.”
“சரி” என்றபடி எழுந்து சமைலறைக்குள் போனான். திரும்ப வரும்போது கையில் காபி கப் இருந்தது. அதை சப்னாவிடம் கொடுத்துவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவள் அவனைக் கட்டிக்கொண்டாள்.
அவளை விட்டு விலகி கட்டிலில் படுத்தவனிடம் “எனக்கு ஒரு சந்தேகம், நீ உதவுவாயா?” என்றாள்.
“என்ன அன்பே?” என்றான்.
“என்னிடம் ஒரு கம்ப்யூட்டர் இருக்கிறது. அது மிகப் பழையது, பல கோப்புகள் அதில் உள்ளது. ஆனால் வைரஸ் அதன் வன்பொருளை அழித்துக் கொண்டிருக்கிறது. ஒன்று அதன் இயங்குதளத்தை மறுஆக்கம் செய்ய வேண்டும். இல்லையென்றால் அது அழிந்து போகும். அனால் எனக்கு ஏன் கோப்புகளும் முக்கியம் என்ன செய்ய?”
“இது எளிமையான கேள்விதான் உனக்கு கம்ப்யூட்டர் வேண்டுமென்றால் மறுஆக்கம் செய், இல்லை கோப்புகள் வேண்டுமென்றால் இருக்கும் வரை பயன்படுத்திவிட்டு கம்ப்யூட்டரை தூக்கிப் போட்டுவிடு” என்றான். சப்னா வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். உதடுகளைக் கடித்தபடி விட்டதைப் பார்த்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள்.
சத்யாவிற்கு அனைத்தும் புதுமையாக இருந்தது. சப்னா அதிகமாக எங்கும் வெளியே வந்தது இல்லை, இவனை தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று சொல்லி வீட்டை விட்டு எங்கும் கூடி வர மாட்டாள். ஆனால் அன்று பகல் முழுதும் சத்யாவோடு பல இடங்களை சுற்றிப் பார்த்தாள். அடிக்கடி அவனை முத்தமிட்டாள். கட்டிக்கொண்டு நிகழ்படம் எடுத்துக்கொண்டாள். அன்று முழுவதும் சந்தோசமாக இருந்தான்.
இரவு வீட்டுக்கு வந்ததும், “நீ தூங்கு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது” என்றாள் சப்னா. “சரி” என்று தூங்கிய சத்யாவை வெகுநேரம் பார்த்தபடி. பிரீசரை எடுத்தாள். கைகள் நடுங்க அவனை நோக்கி நீட்டியவள், காண்ணீர் வழியும் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு உதடுகளைக் கடித்தபடி பட்டனை அமுக்கினாள். அப்படியே சரிந்து விழுந்து சத்யாவைப் பார்க்க விரும்பாமல் கொஞ்ச நேரம் அழுதவள் பின்பு தேறி எழுந்து வந்து அவனைப் பார்த்தாள். மெதுவாக அவன் நெஞ்சில் கை வைத்து தாளம் போடுவது போல் தட்டினாள். அவன் நெஞ்சு பிளந்துகொண்டு ஒரு சிறிய சிப் வெளியே எட்டிப்பார்த்தது. அதைப் பிடுங்கினாள். சத்யாவின் வாய் பிளந்துகொண்டது. அதைப்பார்த்ததும் கால்களை உதைத்துப் பின்னால் போய் விழுந்து அழ ஆரம்பித்தாள். வெகுநேரம் அழுதவள் சிப்பை எடுத்து கம்ப்யூட்டரில் சொருகி எதோ டைப் செய்தாள். எல்லாம் முடிந்து திருப்தியானவளாய் சிப்பை எடுத்துக்கொண்டு போய் சத்யாவின் நெஞ்சில் சொருகினாள். அவன் வாய் மூடிக்கொண்டது. இவள் சந்தோசமாய் பார்த்துக்கொண்டிருந்தபோதே அவன் உருவம் மாறத் தொடங்கியது. அவள் பிரீசரில் அவனை ரிலீஸ் செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.
அடுத்தநாள் காலையில் உருமாறிய அவன் வெளியேறுவதை அவனுக்கு தெரியாமல் ரகசியமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஹலோ, நான் உங்களை இந்த பகுதியில் பார்த்ததில்லையே” என்று சத்யாவை அணுகி ஒரு புதியவன் கேட்டான்
“நான் இங்கேதான் இருக்கிறேன். என் பெயர் விக்கி” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டான் சத்யா. சப்னா கண்ணீரோடு அவனைப் பார்த்துக்கொண்டிருந்தவள் பின்பு திரும்பி வேறு திசையில் நடந்தாள்.

Saturday, July 2, 2016

எப்படி அழைப்பது? - மதிகண்ணன்

மிகச் சாதாரண விஷயங்களை
நுட்பமாகவும்
நுட்பமான விஷயங்களை
மிகச் சாதாரணமாகவும்
சொல்பவர்களை
எப்படி அழைப்பது?

வாத்தி
சட்டாம்பிள்ளை
… … …
ஞாயஸ்தன்
நீதிமான்
… … …
குழப்பவாதி
வளவளா கொலகொலா
… … …
படைப்பாளி
பைத்தியம்
… … …
அழைப்பது எப்படி என்றாலும்
உரைப்பது தத்துவம்தானே?