Thursday, February 23, 2012

அரிப்பு - சு.மதிவண்ணன்


அரிப்பு வியப்பானது அல்ல
நிர்ணயம் செய்யப்பட்ட மதிப்பீடு.

அரிப்பின் வாசம்
நாசியில் நுகர
நுகர்பவன் நுட்பமாய் உணர
அரிப்பு அவசியம் அறியப்படுகிறது.

வாசம் பிடித்துப் பழக்கப்பட்டவன்
வழக்கமான வழிகள் தேடுகிறான்.
எதிர்நோக்கி வருபவர்களிடம்
எடுத்து இயம்புகிறான்.
வாடை உணர்ந்தவன்
வாதம் செய்வது இல்லை
இயலாமையில் சிக்கித் தவிப்பவன் மட்டுமே
இருமித் தொலைக்கிறான்.

நச்சரிப்புகள் நயமாய்ப் பேசுகின்றன.
உச்சரிப்புகள் உள்வாங்கப்படுவதில்லை.

அரிப்பு பற்றி யாராவது அங்கலாய்த்தால்
சிரிப்புத்தான் வரும்.
சொறிதலின் சுகம் உணர்ந்தவர்கள்
புண்களைப் புறந்தள்ளுகிறார்கள்.

அசிங்கத்தில் மிதித்துவிட்ட
முகச்சுழிப்பு இல்லை
அடுத்தவர் மலத்தை முகர்ந்து பார்க்கும்
மனப்பக்குவம் பெற்றவர்கள்.

தேடித் திண்ணும் நாய்கள்
தெருவில் திரிகின்றன
நாய்கள் நன்றியுள்ளவை
எஜமானர்களுக்கு மட்டும்.

எலும்புகளை வீசிப் பழக்கப்படுத்தியதால்
நாய்கள் கவ்விக் கொள்வதை நாம்
கௌரவப்படுத்துகிறோம்.

நாம் உடைந்த கண்ணாடித் துண்டுகளில்
முகம் பார்த்துப் பழகிவிட்டதால்
ஒவ்வொரு முகத்தையும்
பழக்கப்பட்ட முகமாகவே பார்க்கிறோம்.

நேர் கோட்டை
நெடுமரமாய் நிற்கவிடுவதில்லை
அசைத்துப் பார்க்கிறோம்.
முடியாது போனால்
வேரறுத்து வீழ்த்தவே விரும்புகிறோம்.

எவரும் கைகளை வைத்துக்கொண்டு
சும்மா இருப்பது இல்லை.
நினைப்பைக் குப்பைத் தொட்டியாக்கி
பைகளை காலியாகவே வைத்து இருக்கிறோம்.
தினம்தினம்
காரியம் ஆற்றுவதற்கு.

(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மாவிபகவின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment