Thursday, July 20, 2017

களவாடப்பட்ட மணித்துளிகள் - சிறுகதை - சத்யா


“கிக்கீ.. குக்கூ... குவாவ். குக்குக்குக்குக்குக்....” குயில்களின் சத்தத்தில் விழித்துக்கொண்டேன். இரவு குடித்த ஆல்கஹாலெல்லாம் வயிற்றிலிருந்து வழுக்கிக்கொண்டு கண்களில் வந்து நின்று தொலைத்ததுபோல கண்கள் எரிந்தன. கண்களைத் கசக்கிக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தேன். முந்தைய நாள் குடித்துவிட்டுப் போட்டிருந்த பாட்டில் காலில்பட்டு உருண்டு ஓடியது. அதைத்துரத்த மனமின்றி கபோர்டினைத் திறந்து சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தேன். இதமான புகையை நெஞ்சில் நிறையவிட்டு வெளியே ஊதினேன். முதலில் என்னைப் பற்றி சொல்லிவிடுகிறேன், நான் ஒரு எழுத்தாளன். அப்படிதான் சொல்லிக்கொள்கிறேன். என்னுடைய முதல் நாவலான “பூனைகளின் கனவுக”ளைப் படித்திருக்கிறீர்களா? ஆம் எனில் இப்படி புருவத்தைத் தூக்கி என்னை முறைக்க மாட்டீர்கள். இரண்டாவது “சாம்பலின் சாபங்கள்”. அதைக் கிட்டத்தட்ட தென்னிந்தியாவின் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்த்தாகிவிட்டது. மூன்றாவது நாவலுக்குத்தான் சாகித்திய அகாடமி விருது கிடைத்தது. ஆம் அதே நாவல்தான், “ஒரு படிக்கட்டின் சறுக்கல்”. உண்மையில் அதன் பிறகுதான் நான் சறுக்கத் தொடங்கினேன். இல்லையில்லை.. அவன் வந்தான், சிறுவன், இருபது வயது மீறாதவன், கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னால் நான் வந்ததுபோலவே வந்தான். அவன் எழுத்துக்களுக்கு என்னுடைய ரசிகர்களெல்லாம் வாசகர்களாகிப் போனார்கள்.
அதன்பிறகு நான் எழுதியதுதான் “சாத்தானின் புனிதம்” அது ஒரு மாபெரும் தோல்வி என்று விமர்சகர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் சொல்லிக்கொண்டனர். பெரும்பாலானவர்களுக்கு அந்த நாவல் பிடிக்கவில்லை. நான் பழைய பாணியில் எழுதுவதாக பேசிக்கொண்டனர். உண்மையில் நான் எப்போதும்போல்தான் எழுதிக்கொண்டிருந்தேன். அவர்கள் ரசனைதான் மாறித்தொலைத்துவிட்டிருந்தது. எல்லாவற்றிற்கும் காரணம் அவன்தான், மிக அழகாக ரசனை உணர்வுடன் இருந்த வாசகர்களை கண்ட கழிசடைகளையும் படிக்க வைத்திருந்தான். அவன் எழுத்துக்களை நானும் படித்திருக்கிறேன், அழகியலெல்லாம் தற்கொலை செய்துகொள்ளும் வக்கிரங்களின் வாந்திதான் அவனது எழுத்துக்கள். அதைப் படிப்பவர்கள் உளவியல்ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள். இந்த உண்மையை தெரியாமல் ட்விட்டரில் போட்டுத் தொலைத்துவிட்டேன். உடனே அவனது ரசிக குஞ்சுகள் எனக்கு உளவியல் ரீதியான சிகிச்சை தேவை என்று ஹேஷ்டேக் போட்டு என்னைத் திட்டத் தொடங்கிவிட்டனர். இந்த “வத்தி டிவி”க்காரன் இதை தலைப்பாக வைத்து விவாத நிகழ்ச்சி நடத்தி TRPயை ஏற்றிக்கொண்டான். கடைசியில் தீர்ப்பு வழங்குவதுபோல் அந்த போண்டாத் தலையன் சொன்னான், ஒரு மூத்த எழுத்தாளராக என்னை எல்லோரும் மதிக்கிறார்களாம், நான் என்னுடைய எழுத்துக்களில் கவனம் செலுத்த வேண்டுமாம், படைப்பாளிகள் படைப்புகள் மூலம் மட்டுமே பேச வேண்டுமாம். இல்லையென்றால் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டுமாம். அடேய்.. ஒரு எழுத்தாளன் எத்தனை வயதிலடா ஓய்வெடுத்துக்கொள்வது? முப்பது வயதிலா? அதற்குள் நான் மூத்த எழுத்தாளனாகிவிட்டேனா? சுவற்றில் முட்டிக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
ஆனாலும் அவர்கள் வத்தி வைத்ததிலும் ஓர் உருப்படியான (இதை அந்த கிறுக்கன் அவன் நாவலில் ஒரு உருப்படியான என்று எழுதுவான், எவ்வளவு பெரிய இலக்கணப் பிழை..) விஷயம் நடந்திருந்தது. நான் அடுத்த நாவலை எழுதி என் மீதான விமர்சனங்களுக்கும் அவனுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப் போகிறேன். இந்த முறை அவனது பாணி என்கிறார்களே அதுபோல விறுவிறுப்பாகவும் அதே நேரம் என் அழகியல் உணர்வினை விடாமலும் ஒரு புதிய பாணியை உருவாக்கப் போகிறேன். ஆம், இதுவரை உணர்வுகள் மீதான கதை சொல்லியாக இருந்த நான் இனி உணர்ச்சிகள் மீது கதை சொல்லப் போகிறேன். இந்த சினிமா சனியன் வந்து தொலைத்ததும் எதிலும் திரைக்கதை பாணியை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்தமுறை ஒரு த்ரில்லர் நாவலை எழுதுவதாக முடிவுசெய்திருந்தேன்.
அதற்காகத்தான் நான் சில நாட்களாக வெளியே திரிந்துகொண்டிருக்கிறேன். இந்த முறை கொஞ்சம் மனிதர்களை அனுபவித்து எழுதவேண்டும் என்று முடிவுசெய்துகொண்டேன். நான் முதலில் தினமும் சில மனிதர்களைப் பின்தொடர ஆரம்பித்தேன். தினமும் காலையில் எழுந்து கூட்டமான சென்னை நகர வீதிகளில் யாரையாவது பின்தொடர்வது மிகவும் எளிமையானது. முதலில் நீலநிற கட்டம்போட்ட சட்டையுடன் போன சுருட்டை முடிக்காரனைப் பின்தொடர்ந்தேன். நேராகப் போனவன் எதோ ஷாப்பிங் மாலுக்குள் புகுந்து அங்கிருந்த காபி பாரில் யாருக்கோ காத்திருக்கத் தொடங்கினான். கையிலிருந்த போனைப் பார்த்துக்கொண்டு அதைச் செல்ல நாய்க்குட்டிபோல் தடவிக்கொண்டிருந்தான். பின்பு அவன் மீதான சுவாரசியம் அற்றுப்போய் அவனைக் கடந்து நடந்துபோன சிகப்புநிற கட்டம்போட்ட சட்டையும் நீல நிற ஜீன்சும் அணிந்த பெண்ணைப் பின்தொடர்ந்தேன். அவளும் சுவாரசியமாக ஒன்றும் செய்யவில்லை. மாநகரப் பேருந்தில் ஏறி எதோ ஒரு கல்லூரி வாசலில் இறங்கிவிட்டாள். அவளைப் பிக்கப் செய்ய பாய் பிரண்ட் கூட வரவில்லை. அவளை யாரவது கடத்தியிருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். இப்படியே ஒரு வாரம் ஒன்றுமேயில்லாமல் கழிந்தது.
அந்த ஒரு வாரத்தில் சரியான கதைக்கரு கிடைக்காமல் செத்துப்போய்விடலாம் என்று முடிவு செய்துவிட்டேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள், எனது “பூனைகளின் கனவுக”ளில் வரும் கதாநாயகியைப் போல செத்துவிடலாம் என்று முடிவுசெய்து அதே பாணியில் பேனில் தூக்குக் கயிறு மாட்டிவிட்டேன், பின்பு கடைசி நொடி சபலத்தில் கொஞ்சம் குடித்துவிட்டு சாவோம் என்று ஆசைப்பட்டு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு அப்படியே படுத்துத் தூங்கிவிட்டேன். ஆல்கஹாலுக்கு நன்றி, நல்லவேளை நான் சாகவில்லை. ஏனென்றால் அடுத்தநாளான இன்றுதான் எனக்கு அழகான கதைக்கரு கிடைத்தது. இல்லையில்லை கிடைத்தான். முதல்நாள் ஒரு பெண்ணைப் பார்த்தேனல்லவா? அவளுடைய தோழி ஒருத்தியினை இரண்டுநாள் முன்பு பின்தொடர்ந்திருந்தேன். இன்று அந்த தோழியின் தங்கையைப் (தங்கையாகத்தான் இருக்க வேண்டும், முகசாடை ஒரே மாதிரி இருந்தது) பின்தொடர்ந்தேன். அவள் தி.நகரின் பிரதான நீரோட்டத்தில் கலந்து போய்க்கொண்டிருக்கும்போது எதோ ஒன்றை தெருவோரக் கடையிலே வாங்கினாள். பின்பு தனது பர்சை கைப்பைக்குள் போட்டவள் சரியாகப் போடாமல் அது கீழே விழுந்தது. நான் அவளிடம் அதைச் சொல்ல குரலெடுப்பதற்குள் அவளைத் தாண்டி வந்த ஒருவன் சட்டென்று குனிந்து அதை எடுத்துக்கொண்டு போனான். இப்போதுதான் எனக்குப் புரிந்தது. அவன் இவளைக் கடக்கும்போது லேசாக அவளது மார்பில் இடித்தபடி வர இவள் எரிச்சலோடு அவசர அவசரமாய் கைப்பைக்குள் பர்சை வைக்க முயலும்போது அது கீழே விழுந்திருந்தது.
என் மனதுக்குள் மகிழ்ச்சி பீறிட அவனைத் தொடர ஆரம்பித்தேன். நடக்கும் வேகத்திலேயே அவள் பர்சை துழாவி பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பர்சைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டிருந்தான். இதெல்லாம் இருபதடிக்குள் செய்து முடித்த அவனது லாவகம் எனக்குப் பிடித்துப் போனது. கொஞ்ச தூரம் போனதும் ஸ்டைலாக தலைக்குப் போட்டிருந்த குல்லாவை கழற்றி பின்னால் விட்டுக் கொண்டான். இப்போதுதான் அவன் முகத்தைப் பார்த்தேன். இருபத்தைந்து வயது தாண்டாத வாலிபன். நேராக ஒரு ஷாப்பிங் பிளாசா போனான். கீழ் தளத்திலிருந்த ஒரு காபிபாரில் டீ சொல்லிவிட்டு சிகரெட் வாங்கிப் பற்றவைத்தான். நானும் சிகரெட்டை வாயில் வைத்தபடி அவனை கவனித்துக்கொண்டிருந்தேன். பின்பு நேராக ஒரு துணிக்கடைக்குப் போனான். ஒரு ஜீன்ஸ். டீ சர்ட் வாங்கினான். பிறகு எதோ வெளிநாட்டு பிராண்ட் உள்ளாடைகளை வாங்கினான். எல்லாம் அவள் பணம்தான். வாங்கியதை ஒரு பிளாஸ்டிக் பையில் சுமந்துகொண்டு வெளியேறி நடந்துபோனான். பிறகு ஏதும் பெரிதாக செய்யவில்லை. சாப்பிட்டான். எதோ தியேட்டரில் ஈவினிங் ஷோ படம் பார்த்தான். அந்த நேரத்தில் கூட தூங்கிதான் வழிந்தான். அவன் படம் பார்க்க வரவில்லை என்று புரிந்துகொள்ள முடிந்தது. அவனோடு நானும் ஒரு செட் ட்ரெஸ் வாங்கியிருந்தேன். என் சொந்தக் காசில். அவன் என்னை அடையாளம் கண்டுவிடாமலிருக்க எச்சரிக்கையாக சட்டையை மாற்றி மேலே ஜாக்கட் போட்டுக்கொண்டேன். படம் முடிவதற்கு கொஞ்சம் முன்பே வாட்சைப் பார்த்தபடி எழுந்து வெளியேறி பேருந்து நிறுத்தத்தில் நின்றவன் வந்த முதல் பேருந்தில் ஏறினான். ‘இவனுக்கு மட்டும்  போக வேண்டிய பேருந்து உடனே வந்து விடுகிறது, நான் நிற்கும்போது பேருந்தே வராது’ என்று மனதுக்குள் கறுவிக்கொண்டே நானும் பேருந்தில் ஏறி அதன் கடைசி ஸ்டாப்பை சொல்லி டிக்கட் எடுத்தேன். அவனை விட்டு ஆறேழு சீட்டுகள் தள்ளி உட்கார்ந்துகொண்டேன். எதோ ஒரு இடத்தில இறங்கி அபார்ட்மென்ட் குடியிருப்புக்குள் போனான். அவன் பின்னாலேயே போன என்னை வாட்ச்மேன் பிடித்துக்கொண்டான். “யார் சார் நீங்க? உங்களைப்பார்த்ததே இல்லையே?”என்றான், நானும் சளைக்காமல் “E ப்ளாக்ல ராஜேஷ் வீட்டுக்கு வந்துருக்கேன், கெஸ்ட்” என்றேன். சந்தேகமாகப் பார்த்தபடி, கையெழுத்து வாங்கிக்கொண்டுதான் விட்டான். நான் இவனை தவறவிட்டுவிடுவோமோ என்ற தவிப்போடு பார்த்துக்கொண்டே இருந்தேன், அவன் A பிளாக்கில் நுழைந்திருந்தான். நான் கையெழுத்துப் போட்டுவிட்டு வருவதற்கும் அவன் இறங்கி வருவதற்கும் சரியாக இருந்தது. பின்பு வேறு எதோ பிளாக்குக்குள் நுழைந்தான்.
பொறுமையாக மாடியேறிப் போனவன் வாசலில் பேப்பர் சிதறிக் கிடந்த ஒரு வீட்டின் வாசலில் நின்றான், சட்டென்று திரும்பி என்னைப் பார்த்தான். ‘நாசமாப்போச்சு என்னைப் பார்த்துத் தொலைத்துவிட்டான்', என்று நினைத்தபடி நான் அவனைக் கண்டுகொள்ளாததுபோல் மெதுவாகப் படியேறி மேலே போனேன், அவன் தலையைக் குனிந்தபடி பின்னால் மாட்டியிருந்த பையில் கைவிட்டு எதையோ தேடினான், பைக்குள் சாவி சிணுங்கியது. நான் மேலே போய் மறைந்து சட்டென்று குனிந்து மாடிப் படியின் வழியாக கண்ணிடுக்கி அவனைப்பார்த்தேன். அவன் சாவிக்கொத்தில் பல்வேறு வகையான சாவிகள் இருந்தன. அதில் இரண்டு, மூன்று சாவியை உள்ளே நுழைத்து எப்படியோ அந்த கதவைத் திறந்தான். பின்பு வேகமாக உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டுக்கொண்டான். “வாவ்" என எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
அவன் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருந்தான். ஆம், அடுத்த சில நாட்கள் என் போலிஸ் நண்பர்களை வைத்து அந்த அபார்ட்மெண்டில் ஏதும் திருடு போயிருக்கிறதா என்று விசாரித்தேன். அப்படி ஏதும் நடந்திருக்கவில்லை. ஆம் அப்படிதான் நானும் ஊகித்திருந்தேன். அவனைப் பார்த்த அன்றிரவு எதிரில் இருந்த லாட்ஜில் ரூம் போட்டு பால்கனியில் அமர்ந்து இரண்டு மூன்று சிகரெட் பாக்கெட்டுகளை வீணாக்கி தூங்காமல் அந்த அப்பார்ட்மெண்டின் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தேன். எதிர்பார்த்தது வீணாகவில்லை. விடிவதற்கு சிறிதுநேரம் இருக்கும்போதே அவனது ப்ளாக்கிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தேன். கேட் வாசலில் வாட்ச்மேன் ஷெட்டில் நின்று கதவைத் தட்டினான். ஆம் அவனேதான். நேராக வெளியேறியவன் கொஞ்ச தூரத்தில் இருந்த குப்பைதொட்டியில் எதையோ போட்டுவிட்டு வந்த ஆட்டோவில் ஏறிப்போனான். உடனே கதவைப் பூட்டிக்கொண்டு இறங்கி ஓடிப்போய் சுற்றிலும் பார்த்துவிட்டு அவன் போட்ட குப்பைத்தொட்டிக்குள் குதித்து அந்த பையை அடையாளம் கண்டு எடுத்துவந்தேன். அதற்குள் அவன் முத்தைய நாள் போட்டிருந்த உடைகள் இருந்தன. இந்தமுறை “வாவ்” சொல்ல வாயைத் திறந்தவன் மூடவே வெகுநேரமானது.
“களவாடப்பட்ட மணித்துளிகள்” இந்த நாவலை நான் எழுத ஆரம்பித்து பல நாட்கள் ஆயிருந்தது, இதற்காக நான் சில பரிசோதனைகளை செய்திருந்தேன். முதலில் சாவியின்றி பூட்டைத்திறப்பது எப்படி என்று கற்றிருந்தேன். உங்களுக்கு சொல்லிதரட்டுமா? எல்லா பூட்டுகளும் சில எண்ணிக்கையிலான குழல்களால் செய்யப்பட்டு அதற்கேற்றார் போல உருளையான மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த மணிகளை ஒவ்வொன்றாக குழல்களுக்குள் தள்ளிவிடவேண்டியது. அதைதான் சாவிகள் செய்கின்றன. இதற்கு இரண்டே இரண்டு ஹேர் பின்கள் போதுமானது. மேலோட்டமாக இது புரியவில்லையல்லவா? “களவாடப்பட்ட மணித்துளிகளி”ல் இதைப்பற்றி விலாவாரியாக எழுதியிருக்கிறேன். பொறுங்கள் கொஞ்ச நாளில் வெளிவந்துவிடும். இப்போதெல்லாம் வாட்ச்மேன்களிடம் சிக்குவதில்லை. கேட்டைக் கடக்கும்போது போனில் பேசிக்கொண்டோ அல்லது மிகவும் சீரியஸாக எதையும் படிப்பதுபோல் பாவனை செய்துகொண்டோ போகும்போது வாட்ச்மேனைக் கண்டு சிநேகமாக ஒரு புன்னகை செய்தால் போதும். இந்த யோசனையின் உபயமும் அவன்தான். கிட்டத்தட்ட அவனைப்போலவே மாறியிருந்தேன். திருடுவதைத்தவிர. இந்த உலகம்தான் எத்தனை சுவாரசியமான மனிதர்களால் நிரம்பியிருக்கிறது? மனிதர்களின் வீடுகளுக்குள் நுழைந்து அவர்கள் வாழ்க்கையைப் படித்து எழுதத் தொடங்கினேன். மனிதர்கள், அவர்களின் பிஸினெஸ், சொந்த வாழ்க்கை இதையெல்லாம் படிக்க முன்புபோல் டைரிக்களை எழுதுவது இல்லை என்பதால் கொஞ்சம் கடினம்தான் என்றாலும், போட்டோக்கள், வீட்டிலுள்ள டாக்குமெண்ட்கள் இதையெல்லாம் பார்த்து என் கற்பனைகளை சேர்த்து தினமும் குறிப்புகள் எடுத்து எழுதிக்கொண்டே இருந்தேன். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கம்ப்யூட்டர்களோ, லேப்டாப்போ கிடைத்து டுவிட்டரிலோ, பேஸ்புக்கிலோ நுழைந்து பார்க்க முடியும். கொஞ்ச நாட்களில் இது எனக்கு பழக்கமாகிப்போனது வாரத்தில் என் வீட்டிற்கு வரும் நாட்கள் குறைந்து போனது. கடைசியாக எப்போது வீட்டுக்குப் போனேன்? தெரியவில்லை. ஒருவேளை ஒரு வாரம் இருக்கலாம், அல்லது ஒரு மாதம் இருக்கலாம், கையிலுள்ள குறிப்புகளை வைத்து அடையாளம் காணத் தெரியவில்லை, வீட்டில் போய் ஒப்பிட்டுப் பார்த்துதான் முடிவுசெய்ய வேண்டும். எந்த மனிதர்களை வைப்பது யாரை விடுவது என்று. எனது கதையின் பாத்திரங்கள் மாறிக்கொண்டே இருந்தன. அல்லது புதிய பாத்திரங்களை சேர்த்துக்கொண்டே இருந்தேன். பிஸினெஸ்மேன்கள், மாத சம்பளத்தில் ஆடம்பரத்துக்கு அடிமையாகிப்போனவர்கள், கிரெடிட்கார்டுகளின் பில்கள், லோன் திருப்பி செலுத்த தவறியவர்கள் என மனிதர்களில்தான் எத்தனை வகைகள். ஒரு வீட்டில் கண்ணும் காதும் குறைந்துபோயிருந்த கிழவியை வீட்டில் விட்டுப் போயிருந்தார்கள், அந்தக் கிழவியோ என்னை வீட்டு வேலைக்காரி என்று நினைத்து ‘ஏன்மா ரெண்டு நாளா வரல? உன் குழந்தைக்கு உடம்பு சரியில்லையா? சரி சரி.. அவகிட்ட சொல்லாத, கேட்டா நீ வந்துட்டு போனன்னு நான் சொல்லிக்கறேன்’ என்று சொன்னாள். மனிதர்கள், மனிதர்கள், மனிதர்கள்... இப்படியே என்னுடைய நேரங்கள், எண்ணங்கள் அனைத்திலும் மனிதர்கள் நிறைந்துபோனார்கள். இப்போதெல்லாம் குடிப்பதுகூட குறைந்துபோயிருந்தது, வீட்டுக்குப் போனால்தானே குடிக்க?
இன்றும் வழக்கம்போல ஒரு வார பத்திரிக்கைகள் சிதறிக்கிடந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்தேன். அடுக்கிவைக்கப்பட்ட காலி பாட்டில்களைப் பார்த்தவாறு படுக்கையறையில் நுழையும்போதே லேசான துர்நாற்றம் நாசியைத் துளைத்தது, படுக்கையறையில் பேனில் ஒருவன் தூக்கில் தொங்கிகொண்டிருந்தான். மனதுக்குள் விசிலடித்துக்கொண்டு வேகமாகப் போய் கர்ச்சீபினை எடுத்து என் கை பட்டதாக தோன்றிய இடத்தையெல்லாம் துடைத்துவிட்டு வந்தேன். கதவை வெளிப்புறம் துடைக்கவேண்டும் என்று எண்ணியபடி மெதுவாக நடந்து சுற்றிவந்து அவனது முகத்தைப் பார்த்தேன். முப்பதைந்து வயது தாண்டாது. குறைந்தபட்சம் ஒரு வாரம் முன்பு இறந்திருக்க வேண்டும். கண்கள் பிதுங்கி மூக்கிலிருந்து ஒழுகிய இரத்தம் காய்ந்து தோல் லேசாக அழுகி வெடிக்கக் காத்திருந்தது, முகம் சற்று பரிச்சயமாக இருந்தாலும் நாக்கு தொங்கி கண்கள் பிதுங்கிய கோரத்தில் அடையாளம் காண முடியவில்லை. யாரேனும் நடிகனாக இருக்கும் என நினைத்துக்கொண்டேன். இப்போதெல்லாம் காதல் தோல்வியிலும், வாழ்க்கைத் தோல்வியிலும் செத்துபோகும் இளம் நடிகர்கள்தான் எத்தனைபேர். சுற்றிலும் பார்த்தேன், ஒரு மூலையில் மேசை மீது பேப்பர் வெயிட்டை சுமந்தபடி சில காகிதங்கள் இருந்தன. ஒருவேளை இவனது தற்கொலைக் கடிதமாக இருக்கலாம். ஆர்வமாகப் போய் படித்துப் பார்த்தேன். அதிர்ச்சியில் உறைந்துபோனேன். அதில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது.


“கிக்கீ.. குக்கூ... குவாவ். குக்குக்குக்குக்குக்....” குயில்களின் சத்தத்தில் விழித்துக்கொண்டேன். இரவு குடித்த ஆல்கஹாலெல்லாம் வயிற்றிலிருந்து வழுக்கிக்கொண்டு கண்களில் வந்து நின்று தொலைத்ததுபோல கண்கள் எரிந்தன. கண்களைத் கசக்கிக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தேன். முந்தைய நாள் குடித்துவிட்டுப் போட்டிருந்த பாட்டில் காலில்பட்டு உருண்டு ஓடியது. அதைத்துரத்த மனமின்றி கபோர்டினைத் திறந்து சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தேன். இதமான புகையை நெஞ்சில் நிறையவிட்டு வெளியே ஊதினேன். முதலில் என்னைப் பற்றி சொல்லிவிடுகிறேன், நான் ஒரு எழுத்தாளன். அப்படிதான் சொல்லிக்கொள்கிறேன்......

Sunday, July 16, 2017

சொர்க்கத்துக்குப் போவோமா? - சிறார் நாடகம் - மதிகண்ணன்

ராக நாட்டைமதிஎன்ற ராஜா ஆண்டு வந்தார். ஆனால் பெயருக்கு ஏற்ற அளவுக்குப் புத்திசாலியாக அவர் இல்லை. மந்திரி வரதனின் புத்திசாலித்தனத்தை வைத்துதான் ஓரளவு நாட்டை ஆண்டு வந்தார். ஆனால் மந்திரி அவ்வளவு நல்லவர் இல்லை. ஒருநாள் ராஜாவும் மந்திரியும் காட்டு வழியாக வந்துகொண்டிருந்தனர்.

காட்சி 1

(அப்போது நரிகள் ஊளையிட்டன.)

ராஜா : மந்திரியாரே என்ன சத்தம் இது?

மந்திரி : நரிகள் அழுகின்றன மன்னா!

ராஜா : என் நாட்டில் நரிகள்கூட அழக்கூடாது. ஏன் அழுகின்றன?

மந்திரி : மார்கழி குளிரை அவற்றால் தாங்க முடியவில்லை. உங்களிடம் போர்வை வேண்டுமென்று கேட்டு அழுகின்றன மன்னா.

ராஜா : அப்படியா! உடனடியாக ஒவ்வொரு நரிக்கும் போர்வை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

மந்திரி : உத்தரவு மன்னா.

ராஜா : சரி, நரி பாஷை உங்களுக்கு எப்படிப் புரிகிறது?

மந்திரி : எனக்கு விலங்குகளின் மொழி தெரியும் மன்னா.

ராஜா : அடடா! இப்படிப்பட்ட மந்திரி கிடைத்தது நான் செய்த புண்ணியம். எப்போதும் என்னை விட்டுப் பிரியக் கூடாது.

மந்திரி : நீங்கள் சொர்க்கம் சென்றாலும் வருவேன் மன்னா.

காட்சி 2

(மறுவாரம் மீண்டும் நகர் உலா கிளம்பினர். அப்போது நரிகள் ஊளையிட்டன.)

ராஜா : வரதா, போர்வை கொடுத்தும் ஏன் நரிகள் ஊளையிடுகின்றன?

மந்திரி : மன்னா, அவை தங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றன.

ராஜா : அப்படியா!

(அப்போது கொழுத்த பன்றி ஒன்று அந்தப் பக்கமாகச் சென்றது. இதுவரை ராஜா பன்றியைப் பார்த்ததில்லை.)

ராஜா : இது என்ன புது விலங்கு?

மந்திரி : மன்னா, தங்கள் பட்டத்து யானைதான் இப்படி மெலிந்துவிட்டது!

ராஜா : என்னது, பட்டத்து யானையா? மெலியக் காரணம் என்ன?

மந்திரி : யானைக்குக் கொடுக்கும் பணத்தை எல்லாம் யானைப் பாகன் சுருட்டிவிடுகிறார் மன்னா.

ராஜா : அவரை முதலில் வேலையை விட்டு அனுப்புங்கள். நல்ல ஆளை வேலைக்கு அமர்த்துங்கள்.

மந்திரி : உத்தரவு மன்னா.

காட்சி 3

(அடுத்த மாதம் ராஜாவும் மந்திரியும் மகிழ்ச்சியாக நகர்வலம் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஒரு பன்றி ஓடியது.)

ராஜா : புதுப் பாகனைப் போட்டும் யானை ஏன் இன்னும் மெலிந்திருக்கிறது அமைச்சரே?

மந்திரி : மன்னிக்கவும் மன்னா. அது யானை இல்லை எலி. சமையல்காரரின் கவனக்குறைவால் உங்களுக்குச் சேர வேண்டிய சத்தான உணவெல்லாம் இந்த எலிக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது.

ராஜா : என்னது, மன்னரின் உணவை எலிக்குக் கொடுப்பதா? இன்று இரவே சமையல்காரரின் உயிரை எடுக்கிறேன். உடனே கைது செய்யுங்கள்.

மந்திரி : அப்படியே மன்னா!

காட்சி 4

(தன் சொல் கேளாத சமையல்காரருக்குத் தந்திரமாக தண்டனை வாங்கிக் கொடுத்து, தன் பழியைத் தீர்த்துக்கொண்டார் மந்திரி. சமையல்காரரின் மகனோ தன் தந்தையைக் காப்பாற்ற மந்திரியிடம் ஓடிவந்தான்.)

.மகன் : மந்திரியாரே. நீங்கள்தான் என் தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்.

மந்திரி : அரசர் கட்டளை. என்னால் ஒன்றும் செய்ய இயலாது.

.மகன் : நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது. உங்களால் முடியாதது எதுவும் இல்லை.

மந்திரி : உன் தந்தையைக் காப்பாற்றுவதால் எனக்கென்ன பலன்?

.மகன் : எங்கள் சொத்தில் பாதியை உங்களுக்குத் தருகிறோம். எப்படியாவது காப்பாற்றுங்கள்.

மந்திரி : சொன்ன சொல் தவற மாட்டாயே?

.மகன் : நிச்சயமாகத் தருகிறேன்.

மந்திரி : சரி போ. நான் காப்பாற்றுகிறேன்.

.மகன் : நன்றி மந்திரியாரே!

காட்சி 5

(நள்ளிரவு. சமையல்காரருக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்காக அவை கூடியிருந்தது. மந்திரி அவசரமாக ஓடிவந்தார்.)

மந்திரி : மன்னா, ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேன்.

ராஜா : என்ன மந்திரியாரே?

மந்திரி : இன்று நள்ளிரவு உயிர் இழப்பவர் நேரே சொர்க்கத்துக்குச் செல்வார். இப்போது தண்டனை அளித்தால், அது தண்டனை அல்ல. வெகுமதி. எனவே அவரை விட்டுவிடுங்கள்.

ராஜா : அப்படியா! உங்களுக்கு எப்படித் தெரிந்தது மந்திரியாரே?

மந்திரி : அதுதான் என் மதியூகம்.

ராஜா : அடடா! நீங்கள் எனக்கு மந்திரியாகக் கிடைத்தது நான் செய்த பாக்கியம். எப்போதும் என்னை விட்டுப் பிரியக்கூடாது.

மந்திரி : நீங்கள் சொர்க்கம் சென்றாலும் உடன் வருவேன் மன்னா.

ராஜா : உண்மையாகவா?

மந்திரி : ஆமாம் மன்னா.

ராஜா : நன்றி. இன்று உயிர் பிரிந்தால் நேரே சொர்க்கம் என்றீரே, நாம் இருவரும் உயிர் துறக்கலாமா மந்திரியாரே?

மந்திரி : என்ன சொல்கிறீர்கள் மன்னா?

ராஜா : நீர்தானே சொன்னீர், இன்று நள்ளிரவில் இறப்பவர் நேரே சொர்க்கத்துக்குச் செல்வர் என்று.

மந்திரி : ஆம் மன்னா.

ராஜா : அப்படியென்றால் இப்போது நாம் இருவரும் சொர்க்கம் சென்றுவிடுவோம்.

(மந்திரிக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. பயத்தில் உடல் நடுங்கியது.)

மந்திரி : மன்னா, நான் சட்டை மாற்றிக்கொண்டு வந்துவிடுகிறேன்.

ராஜா : சட்டையெல்லாம் சொர்க்கத்தில் மாற்றிக் கொள்ளலாம். நேரமாகிவிட்டது.

மந்திரி : என் மனைவியிடம் சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன் மன்னா

(அவையை விட்டுச் சென்ற மந்திரி, உயிரைக் கையில் பிடித்தபடி நாட்டை விட்டே ஓடிவிட்டார்.)

(நன்றி : தமிழ் இந்து – மாயா பாஜார்

Wednesday, July 12, 2017

மன்னிப்புக் கடிதம் - சிறுகதை - சத்யா


அன்பார்ந்த தலைமைக்குழு சகோதரர்களுக்கு, ஆண்டவர் உம் அனைவரோடும் இருப்பாராக. நான் பொதுவெளியில் நமது திருச்சபைகளின் தலைவர் குறித்தும், அவரது செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்ததற்காக என் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பங்குத் தந்தையாகிய என்னை பதவியிறக்கம் செய்து கிராமங்களுக்கு சென்று ஊழியம் செய்யும் சுவிசேஷகனாக மாற்றியிருப்பதாக தங்கள் அறிக்கை மூலம் அறிந்தேன். என்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் பட்சத்தில் நடவடிக்கை மறுபரிசீலனை செய்யப்படும் என்பதையும் தங்கள் கடிதம் வலியுறுத்தியிருந்தது. நான் எந்த இடத்திலும் அமைப்பின் தலைமையைக் குறிப்பிட்டு எந்த விமர்சனமும் வைக்கவில்லை, மேலும் என் விமர்சனம் எந்தவிதத்தில் தலைமையைக் குறிப்பிடுவதாக தலைமைக்குழு கருதுகிறது என்பதை விளக்கக் கூறி எனக்கு அனுப்பப்பட்ட, காரணம் விளம்பு (show cause) கடிதத்திற்கு நான் அனுப்பிய பதிலுக்கு எனக்கு எந்த விளக்கமோ, பதிலோ அளிக்கப்படவில்லை.
ஒருவேளை நான் திருச்சபையின் தலைவரை விமர்சனம் செய்திருந்தது உண்மையாக இருப்பின் என்செயல் எந்த வகையில் அமைப்பின் விதிமுறைகளை மீறியது? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் தவிர இப்பரந்த உலகிலே அனைவரும் விமர்சனங்களுக்கு உட்பட்டவர்கள்தானே? அப்படி இருக்க தலைவர் எப்போது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரானார்? மேலும் நான் தலைமை மீது வைத்த விமர்சனம் என்ன? விதிமுறைகளை மீறி சாதிய மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறார் என்பதுதானே? அதுகுறித்து திருச்சபையின் தலைமைக்குழு எப்போதேனும் விசாரணை நடத்தியதுண்டா? சக மனிதனை வேறுபாடின்றி நடத்த மறுப்பவன் திருச்சபைகளின் தலைவராகவோ, பங்குத் தந்தையாகவோ ஏன் ஒரு கிறிஸ்தவனாக இருக்கக்கூட தகுதி இல்லாதவனாயிற்றே? இவை போகட்டும், என் செயலுக்கு வருத்தம் என்ற பெயரில் மன்னிப்பை கேட்கச் சொல்லி தலைமைக்குழு பரிந்துரைத்திருக்கும் பட்சத்தில் ஆண்டவராகிய தேவனின் சபையிலே, மனசாட்சிக்கு பணிந்து, என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடம் மன்றாடி இந்த மன்னிப்புக் கடிதத்தினை எழுதிகிறேன்.
சகோதரர்களே, 80களின் தொடக்கத்தில் என் கல்லூரி படிப்பினை முடித்துவிட்டு கல்லூரியில் பாடம் கற்றுக்கொடுத்த ஆசானால் கிழக்கத்திய பழமைவாத பிரிவையும், ரோமன் கத்தோலிக்க பிரிவையும் புறந்தள்ளி மறுமலர்ச்சிமிக்க புரொட்டஸ்டண்ட் பிரிவினையும் ப்ரொட்டஸ்ட் செய்து வெளியேறிய இந்தத் திருச்சபை பற்றி அறிந்துகொண்ட நான், தினமும் பாவத்திலே கிடந்தது உழலும் அடித்தட்டு மக்களுக்கான உண்மையான ஜீவ பாதையைக் காட்டும் நோக்கத்திலே அந்த மக்களுக்கான உண்மையான தேவ பயணத்தினை ஏற்பாடு செய்யும் நமது திருச்சபையின் விசுவாசியான எனது பயணத்தில் அழுக்குக் கோவணத்தோடு விவசாயப் பணிகளை செய்துகொண்டிருந்த இரு ஊழியர்களைக் கண்டேன். ஆண்டவராகிய இயேசுவின் மகிமையை அப்போதுதான் தெரிந்துகொண்டேன் சகோதரர்களே, நாள் முழுதும் உழைத்துக் களைத்த அந்த சகோதரர்கள், இரவு நேரத்திலே தங்கள் குடிசையில் ஒற்றை சிம்னி விளக்கிலே புனித பைபிளைப் படித்து தம்மைச் சுற்றியிருந்த மக்களின் துயருக்காக ஆண்டவரிடம் மன்றாடிய அந்த நொடியிலே நான் முடிவு செய்தேன், எனது வாழ்க்கை அவர்களைப்போன்றுதான் இருக்கப்போகிறதென்று. அந்த காலகட்டத்தினை இப்போதுள்ள தலைமைக்குழு சகோதரர்களில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை, சிலர் அந்த காலத்திலே பிறந்தவர்கள்கூட இல்லை. ஆண்டவரின் ஊழிய வாழ்வுக்கு என்னை அர்ப்பணித்த வேளையிலே எனக்கு கொடுக்கப்பட்ட சுயவிவர பட்டியலில் சாதியின் பெயர் இருந்தது. அதை நிரப்பிட வேண்டிய அவசியமில்லை என்று சொன்ன சகோதரர்களிடம் நான் சொன்னேன், ‘திருச்சபையிலும், ஆண்டவரிடமும் நான் எதையும் மறைப்பதில்லை’ என்று, அந்த வார்த்தைகளுக்காக இப்போது அவர்களிடம் மன்னிப்புக்கோருகிறேன்.
ஒரு பத்து வருடங்களில் என்னை கோடம்பாக்கத்துத் திருச்சபைக்கு பங்கு தந்தையாக திருச்சபை அனுப்பியது, அப்போது ஒரு புதிய சிறுவன் அதைக்குறித்து காரசாரமாக தலைவரிடம் விவாதித்ததை தற்செயலாக கேட்டேன், அப்போது தலைவர் கூறிய வார்த்தைகள் இன்னும் என் ஹிருதயத்தில் உள்ளன, ‘குப்பத்திலிருந்து வந்தவன கோடம்பாக்கத்துக்கு எதுக்கு அனுப்புறேன்? ஒன்னு கரைஞ்சு போவான், இல்ல காணாம போவான்’. நான் கதவைத் திறந்து உள்ளே வரவும் பேச்சு மாறினாலும் அந்த சிறுவன்தான் இப்போதைய தலைவர் கேலிடா சாமுவேல் (Kelitah Samuel) என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. அப்போது சிறப்பாக செயல்பட்டாலும் எத்தனை விசுவாசிகள் வந்தாலும் எனது தேவாலயத்தில் சுவிசேஷ கூட்டங்களையும், உரைகளையும் நிகழ்த்தத் தலைவர் வந்ததே இல்லை. அந்த கட்டத்திலே ஓட்டுரிமை பெற்ற என் சாதிமார் பலர் என்னிடம் வந்து ‘சகோதரர், நீங்கள் சொல்லுங்கோ, உங்களுக்காய் சேவகம் பண்ணுவோம், நாம் அமைப்பின் தலைமையை கைப்பற்றுவோம், நம்முடே சாதிமார்தான் தேவாலயங்களில் அதிகமுண்டு’ என்று சொன்னபோது, அதை மறுதலித்து, ‘தேவனுக்கு சேவகம் செய்யுங்கோ, அன்றி மனிதனுக்கு சேவகம் செய்யாதிருங்கள்’ என்று கூறினேன். அதற்காக அந்த சகோதரர்களிடம் மன்னிப்புக்கோருகிறேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேடாதிருங்கள், உங்கள் தலைமைக் குழுவில் மட்டுமல்ல, அமைப்பை விட்டே பிரிந்து தனியாய் சேவகம் செய்கிறார்கள் அந்த சகோதரர்கள்.
பிந்தைய காலகட்டத்திலே அமைப்பின் மாதாந்திர பிரசுரமாகிய ‘தேவனின் அப்ப’த்தை தயாரிக்கும் பணி என்னிடம் நிறுவப்பட்டது. அந்த காலகட்டத்திலே தேவனுடைய கிருபையாலே பைபிள் வாசகங்களின் கதைகளை எழுதவும், தலைமையின் பேச்சுக்களை மொழிபெயர்க்கவும் என என் பெரும் நேரங்களை பதிப்பகத்திலேயே செலவிட்டேன். குடும்பத்தினையும் குழந்தைகளையும் கூட மறந்து தேவனின் ஊழியதிலேயே இருந்த என்னை எந்த காரணமுமின்றி பெங்களூருக்கு இடமாற்றம் செய்தது திருச்சபை நிர்வாகம். மக்கள், சொந்தம், பாஷை எல்லாம் மாறிய சூழலில், என் ஜீவனும் மனுஷியுமாய் இருந்தவளைப் பிரிந்து தனியாக வேலை பார்த்தேன். குழந்தையின் படிப்புக்காய் கொஞ்ச காலம் மட்டும் என்னைப் பிரிந்து இருந்தவள், பின்பு மொத்தமாய்ப் பிரிந்து போனாள். அப்போது ஏற்பட்ட விபத்தில் நான் சில காலம் ஓய்வெடுக்க, என்னை மாற்றம் செய்து என் பதவியைப் பிடுங்கி பரிபூரண சந்தோஷமடைந்தீர்கள். அப்போதும் என் வலி, பிரிவு தனிமை அனைத்தையும்விட தேவனுக்கு மண்டியிட்டு பிரார்த்திக்க முடியாததை எண்ணியே நான் அழுதேன், அந்த நிலையிலும் என்னைப் பார்க்க வராத என் மனுஷி கடிதம் மட்டும் அனுப்பினாள், அவள் என்னைப் பிரிந்ததற்கு அமைப்பு நிர்பந்தமே காரணமென்று. அப்போதும் அவளை நம்பாமல் தேவாலயங்களின் கூட்டமைப்பையே நம்பினேன். அதற்காக அவளிடம் இன்று மன்னிப்புக்கோருகிறேன்.
சுகவீனம் தேறி வந்த என்னை பெங்களூரிலிருந்து ஹைதராபாத்துக்கு மாற்றினீர்கள், அங்கே கன்னியாஸ்திரிகளின் சிறப்பு பூஜையை என் முயற்சியாலும் தேவனின் கருணையாலும் நடத்தினேன், தேவனின் கருணை மீதான கர்வத்தோடு கூறுகிறேன் சகோதரர்களே, அப்படி கன்னியாஸ்திரிகளே நடத்திய சுவிசேஷ கூட்ட பூசை போல இன்றுவரை எங்கும் நடைபெற்றதில்லை. அதையும் மறுதலித்தீர்கள், எந்த செய்தியும் பிற பகுதி அமைப்பு சகோதரர்களிடம் செல்லாமல் பார்த்துக்கொண்டீர்கள். பிறிதொரு நாளில் பக்கத்திலுள்ள கிராமத்திலே ஈடான் தோட்டத்து விஷம் கலந்த நீரை பருகினதாலே 87 பெண்கள் கர்பப்பையை இழந்த செய்தி கேட்டு அங்கே போனேன். சாத்தானிண்ட பிடியிலும் சனாதன செம்பூதங்களின் பிடியிலும் சிக்கித் தவித்த அந்த மக்களிடம், தேவ மகிமையைப் பரப்பினேன். அவர்களுடே மறுவாழ்வுக்கு அமைப்பின் மத்திய நிதியின் பங்கினைக் கேட்டேன், கடைசி வரை மத்தியக்குழு அதை எனக்கு அனுப்பவே இல்லை. சுகபோகமாக வெள்ளிக்கிண்ணத்திலே ஒயினருந்தும் தலைவருக்கும், அவர் பிள்ளை, மனைவிமார்களுக்கும் அந்த ஏழை ஜனங்களின் கஷ்டம் எப்படி தெரியும்? உங்களைப் பொறுத்தவரை அந்த வேலைகள் தேவையற்றது, பலன் தராதது, உருப்படியில்லாதது, உபயோகமற்றது. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா சகோதரர்களே? எந்த உதவியும் கிட்டாமல் போக, அந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் பிரிந்து ஆண்டவருக்குத் தூர தூரமாய்ப் போனார்கள். அந்த மக்களிடத்திலே மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.
பின்பு ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலே ஞாயிற்றுக் கிழமைகளில் சுவிஷேச கூட்டங்கள் நடத்தி வந்தேன். பக்தியோடும் சிரத்தையோடும் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான மாணவர்களைக் கண்டேன், மிகச்சிறந்த இரண்டு மாணவர்கள் ஆரோனும் (Aaron), பெந்தபோலிஸ்ராஜனும் (PentapolisRajan) தேவனுடைய ஊழியத்துக்காக தங்களையே கொடுக்க முன்வந்தனர். இதுவரை எங்குமே கேட்டிராத வகையிலே ஒரு மாதம் தொடர் சுவிஷேச கூட்டங்களையும் தேவ நாடகங்களையும் நடத்தினர். அந்த மாபெரும் செய்தி தானாகவே நாடு முழுவதும் செய்தியாக பரவினாலும், ‘தேவனுடைய அப்ப’த்திலே ஒற்றை வரி செய்தியாக முடித்துக்கொண்டீர்கள். அதுமட்டுமா? பலநாட்கள் கெஞ்சியும் தலைவர் எந்த சுவிசேஷ கூட்டத்திற்கும் தலைமையேற்று உரையாற்ற வரவில்லை, அதற்கு எந்த உருப்படியான காரணமும் தெரியவில்லை, என் தொடர்ச்சியான அழைப்புகளால் எரிச்சலடைந்த ஒரு மூத்த சகோதரர் சொன்னார், 'விமானத்தில் முதல் வகுப்பில் மட்டுமே தலைவர் பயணிப்பார்' என்று. ரயிலில் இரண்டாம் வகுப்பு பயணத்துக்கே என்னுடைய பணம் போதாமல் இருக்கையில் உங்களை அழைக்கும் திட்டத்தை நான் கைவிட்டேன். இருப்பினும் தொடர் நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக  ஒரு சுவிஷேச கூட்டத்துக்கு வந்த தலைவர் அருட்தந்தை கே.எஸ்.ஸின்  மகன் அருட்சகோதரர் பார்திமியஸ் (bartimeus) அந்த புதிய சகோதரர்களை ஊக்குவிக்காமல் அவர்களின் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டி திட்டிவிட்டுப்போனார். வெறுத்துப்போன அந்த மாணவ சகோதரர்கள் திருச்சபையினைவிட்டு விலகி நின்றாலும் தேவ மகிமையை உணர்ந்தவர்களாக அதைப் பரப்புபவர்களாகவே இருந்தனர். அந்த நிலைமையில் பெந்தபோலிஸ்ராஜனின் மனைவி ஜன்னெட் மெர்சி ப்யுலா (Janet Mercy Beula) தன்னுடைய பி.எச்,டியை முடித்து, கல்லூரி வேலைக்கு நமது திருச்சபைகளின் கட்டுப்பாட்டிலே செயல்படும் பிரசித்திபெற்ற கல்லூரியிலே விண்ணப்பித்தாள். தகுதியிலும் அனுபவத்திலும் முன்னிலையில் இருந்த அவளை நிராகரித்து அவளுக்கு பல மடங்கு பின்னால் இருந்த ஒருத்தியை தேர்ந்தெடுத்தீர்கள். ஒரே காரணம் அவள் உங்கள் சாதிக்காரி என்பது மட்டுமே. கடைசிவரை திருச்சபையின்மீது மாறாத நம்பிக்கைகொண்டு அவளை விண்ணப்பிக்கச் செய்ததற்காக அவளிடம் நான் உளப்பூர்வமாய் மன்னிப்புக்கோருகிறேன்.
கடைசியாக ஒன்று, சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் நான் பங்குத்தந்தையாக இருக்கையிலே, ஒரு இளம்பெண் பாவ மன்னிப்புக்கோர என்னிடம் வந்தாள். அவள் வேறு வழியின்றி விபச்சாரத்தைத் தனக்கான தொழிலாகக் கொண்டவள் என்பதை அவளின் மன்னிப்பு கோரிக்கைகளின் மூலம் அறிந்துகொண்டேன். பாவத்தில் உழலும் நிலையிலும் அவள் வாரம் தவறாமல் தேவாலயக் கூட்டங்களுக்கு வருவதும், கண்ணீர் சிந்தி அழுவதுமாயிருந்தாள். அவளுடன் பேசியதில், அவள் கிராமமே இப்பாவத்திலே கிடந்து உழலுவது தெரிந்தது. தங்கள் கிராமத்தின் மறுவாழ்வுக்கு ஏதேனும் உதவுமாறு அவள் என்னை மன்றாடிக்கொண்டாள். அவள் தனக்காக கேட்கவில்லை, அவ்வாறு கேட்டிருந்தால் அவளை திருச்சபையை சுத்தம் செய்யும் பணியிலாவது அமர்த்தியிருப்பேன். அப்போதாவது அவளுக்கு திருச்சபையுடன் தன் ஆவியையும் சுத்தம் செய்யும் வாய்ப்பு கிட்டியிருக்கும். ஆனால் அவளோ தன் ஒட்டுமொத்த கிராமத்தையும் அந்த இழிதொழிலிலிருந்து விடுவிக்கக் கோரினாள். அதற்கு உதவுமாறு தலைமைக்கு பல கடிதங்கள் எழுதியபின், ‘அமைப்பு மூன்றாந்தர மக்களைக் குறித்து சிரமப்படுவதில்லை’ என்று பதில் கிடைத்தது. இப்போது கூறுகிறேன் சகோதரர்களே, ‘பிறருக்காய் சிரமப்படுகிறவன் பாக்கியவான்’ என்ற இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்கு இலக்கணமாய் திகழ்ந்த அந்த விபச்சாரியே சிறந்த கிறிஸ்துவச்சி. உங்கள் மத்தியக்குழுவிடம் நான் கேட்கவேண்டிய மன்னிப்புகளைவிட அவளிடம் ஆயிரம் மடங்கு அதிக மன்னிப்புக்....
“அச்சா....” சத்தம் கேட்டு எழுதிக்கொண்டிருந்த கடிதத்தை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தான், இப்போது அவன் கேரளாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தான். அவனது அறைக்கு வெளியில் கறுத்து சுருங்கிப்போன முகத்துடனும் வயது மூப்பில் கூனிப்போன முதுகுடனும் இடுப்பில் பேத்தியை வைத்துக்கொண்டு வெள்ளை நிறச் சேலையுடன் எஸ்தர் நின்றிருந்தாள். முன்னறையில் எழுதிக்கொண்டிருந்த அட்டையை எடுத்துவைத்து, பேப்பர் வெயிட்டை அதன்மேல் வைத்துவிட்டு “சொல்லுதாயி.. என்ன இந்நேரத்துல?” என்றான்.
“அச்சா.. நம்ம தங்கம்மா பேத்தி இருக்குல்ல, அது பைபிள படிச்சுட்டு என்னென்னமோ சந்தேகம் கேட்டுட்டு இருக்கு, எனக்கு ஒன்னும் புரியல, நீ வந்து என்னன்னு பாக்குறியா?” என்றாள்.
“குழந்தைகளுக்கு சந்தேகம் வரத்தான் செய்யும், நான் வந்து விளக்குறேன். அவளை மாதிரி சூட்டிகையான பெண், தேவனைப் பற்றி தெரிந்துகொண்டால் நாளைக்கு அவளே எல்லாருக்கும் சொல்லிதருவா. அதுசரி நீ காலையில வர வேண்டியதுதான?” என்றான் பத்தரையை நெருங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தபடி.
“இல்ல அச்சா, காலையில வெள்ளென வேலைக்கு போவணும், இப்ப தான் வேலை முடிச்சு வந்தேன், அப்படியே சொல்லிட்டு போலாம்னு வந்தேன்”
“ஒரு போனாவது பண்ணிருக்கலாம்ல?”
“போனெல்லாம் எனக்கு பண்ணத் தெரியாது அச்சா.. சும்மா அப்படியே ஒரு எட்டு நடந்து வந்துட்டேன்” ஐந்து கிலோமீட்டர் தூரத்தை சாதாரணமாக சொன்னவள், “நீ நாளைக்கு தங்கம்மா பேத்திய போய்ப்பாரு, நம்ம வீடு இருக்குல்ல அதுலருந்து கெழக்கால அஞ்சாவது வீடு, நான் வேலைக்கு போயிடுவேன்” என்று குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
அவளைத் தடுத்து, இவன் பைக்கில் கொண்டுபோய் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தான். தங்கம்மா தூங்கியிருந்தாலும் வீட்டை அடையாளம் காட்டியிருந்தாள் எஸ்தர். “அவகூட பேசுறது இல்ல அச்சா. போனவாரம் தண்ணி எடுக்கையில சின்ன சண்டையாப் போயிட்டு, பைபிள்ல சந்தேகம்னு வரும்போது அத உன்கிட்ட உடனே சொல்லணும்ல அதான் வந்தேன். இந்த ஞாயித்துக்கிழம திருச்சபை கூட்டத்துலதான் அவகிட்ட சமாதானம் சொல்லணும்” என்று சொல்லிவிட்டு வெள்ளந்தியாய் அவள் சிரித்தது இவன் பின் மண்டையில் யாரோ சம்மட்டியால் அடித்ததுபோல் இருந்தது.
முன்னறையில் அட்டைமீது வைக்கப்பட்ட கடிதத்தைப் பார்த்தபடி வெகுநேரம் உட்கார்ந்திருந்தான். “இந்த ஞாயித்துக்கிழம திருச்சபை கூட்டத்துலதான் அவகிட்ட சமாதானம் சொல்லணும்” என்ற எஸ்தரின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப இவன் காதில் ஒலித்தபடி இருந்தன. இன்னொருமுறை லெட்டரை எடுத்து படித்துப்பார்த்தான். அதைக்கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு புதியதாக ஒரு வெள்ளைக் காகிதம் எடுத்து எழுத ஆரம்பித்தான்.
“அன்பார்ந்த தலைமைக்குழு சகோதரர்களுக்கு, ஆண்டவர் உம் அனைவரோடும் இருப்பாராக. நம் அமைப்பின் தலைவரைப் பொதுவெளியில் விமர்சனம் செய்தது அமைப்பு விதிமுறைக்கு எதிரானது என்று அறிந்துகொண்டேன். அதற்காக தேவனின் முன்னிலையில் உளமார்ந்த மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எனவே இக்கடிதத்தினை ஏற்றுக்கொண்டு என் மீதான நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன், தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் சமாதானத்தினை உம் அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறேன்”
இப்படிக்கு
ஆண்டவரின் சேவகத்தில்
உண்மையுள்ள…

Tuesday, July 11, 2017

தோழர் கு.பா. நினைவுநாள் கருத்தரங்கும் படைப்பரங்கும்

2017ன் ஜூலை மாதத்தின் 8ஆம் நாள் இரண்டாம் சனிக்கிழமை
தோழர் கு.பா. நினைவுநாள் கருத்தரங்கும் படைப்பரங்கும்‘
‘இன்றைக்கான இலக்கியம்’ என்ற தலைப்பில்
கருத்துரை தோழர் அழகு பாரதி
லென்ஸ் - பார்வை - தோழர் ரமேஷ்
ஒருங்கிணைப்பாளர்கள்
தோழர் கேகே
தோழர் சத்யா
சில காட்சிப் பதிவுகள்















காகிதம் மடிக்கும் கலை (ORIGAMI) பயிற்சி

            2017 ஜூலை 7ஆம் நாள் பழனியிலிருந்து தாராபுரம் செல்லும் பழைய தாராபுரம் சாலையில் உள்ளடங்கி அமைந்துள்ள ராஜாம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியிலும் மேலகரைப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியிலும் 

காகிதம் மடிக்கும் கலை பயிற்சியில்  

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக தோழர் கேகே