Tuesday, February 14, 2012

ஓடத்தொடங்கிய பந்தயக் குதிரை - மதிகண்ணன்

நூல் விமர்சனம்

கவிதை நூல்   : நிகழ்வெளி
ஆசிரியர்       : சு.மதிவண்ணன்
வெளியீடு      : பயணம் பதிப்பகம்
 மேலத்துலுக்கன்குளம்
 மல்லாங்கிணர்
பக்கங்கள்      : 92
விலை         : ரூ.50
ஒரு நூலை விமர்சனம் செய்வது என்றால் மூன்று விதமாக விமர்சனம் செய்யலாம். இந்த மூன்று என்பது நூலுக்கான விமர்சனத்துக்கு மட்டுமல்ல அனைத்துவிதமான படைப்புகளை விமர்சிப்பதற்கும் பொருந்தும். முதல்வகை எழுதியிருக்கக் கூடிய, தன்னுரை, முன்னுரை, முனைந்துரை போன்றவற்றைப் படித்துவிட்டோ அல்லது அந்நூல்பற்றி / நூலாசிரியர் பற்றி பிறர் முன்வைத்த விமர்சனத்தைப் பின்பற்றியோ விமர்சிப்பது சுயபுத்தி தாண்டிய சொல்புத்தி விமர்சனவகை. இரண்டாவதுவகை நூலைப்படிக்காமலேயே, ‘நூலைப் படித்துவிட்டுத்தான் விமர்சிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதே அராஜகம்‘ என கம்பீரமாக அறிவித்துவிட்டு, விமர்சனம் என்ற பெயரில், தாம் செய்வது இன்னதென்று தெரியாமல செய்யக்கூடிய, நூலையும் நூலாசிரியரையும் உரித்து, உப்புத் தோய்த்து, கட்டித் தொங்க விடக்கூடிய பெர்முடாயிச விமர்சனவகை. மூன்றாவதாக முழுமையாகப் படித்து தான் உணரக்கூடியதை, பொதுவில் சொல்லத்தக்கது, தனிமையில் சொல்ல வேண்டியது, எழுத்தில் வரவேண்டியது, சொல்லத் தேவையற்றது என – பகுத்து, உணர்ந்து செய்யும், தமிழ் மரபின் சங்கப்பலகை வகைப்பட்ட, பகுப்பாய்வு விமர்சனவகை. இங்கு என்னுடைய விமர்சனம் எந்த வகை என்பதை உரையின் இறுதியில் நூலைப் படித்தவர்கள்தான் சொல்லவேண்டும்.
இன்றைய தமிழ்ச் சூழலில் பாலியல், புவியியல், அகவை, துறை, மரபு, சமூகம், பொருளாதாரம், பண்பாடு, அரசியல், வர்க்கம்... என அனைத்தையும் தாண்டி படைப்பாளியின் உணர்வுகளை மிக நுட்பமாக பொதுத்தன்மையுடன் முன்வைக்கக் கூடிய கவிதைகள் நிறைய வருகின்றன. இவ்வகைக் கவிதைகள் எந்நவீன வகைப்பாடுடையவை, இவற்றின் கோட்பாட்டு வகைமை என்ன என்பது பற்றியெல்லாம் இந்த இடத்தில் தேவையில்லை. அப்படியான கவிதைகளில் ஒன்றாக ‘அழுத்தத்திற்கு ஆட்படல்‘ என்ற தலைப்பிலான, வாசிப்போரையும் அழுத்த்த்திற்கு ஆட்படவைக்கும் பின்வரும் கவிதையைப் பார்க்கலாம்.

தேவைகளின் விரட்டலில்
சாசனம் தந்து அடிமையான நான்கில்

பயில்வான் சுழியில்
முதலாவதாய்ச் செத்துப்போன
நான்காவது

அடுத்தடுத்த சுழிகளின் நீரில்
அகப்பட்டு அமிழ்ந்துபோன
இரண்டாவது

சுழிகள் தீண்டா உயரத்தில்
நின்றபோதும் மாண்டுபோன
மூன்றாவது

ஒன்றின் மேலொன்றாய் அடுக்கிய பிணங்கள்மேல்
ஆவிகளின் அழுத்தச் சுமைதாங்கி
முதலாவது

(2012 ஜனவரி 30)

அல்லது இன்றைய கவிதைகள் கேகே‘யின் தலைப்பிடப்படாத இந்தக் கவிதையைப் போல ஒன்றைச் சொல்லி வேறொன்றை நமக்கு உணர்த்துகின்றன. அந்த வேறொன்று ஒவ்வொருவருக்கும் வேறு வேறாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.
வெவ்வேறு காலங்களில்
(நம்) உடைகள்
வெவ்வேறாய் இருக்கின்றன.
விருப்பத்தின் நியதியா?
கிடைப்பருமையா?
மாற்றமா? வளர்ச்சியா?
கவிஞர் விக்ரமாதித்யனும்
தோழர் மதியும்
நிறையச் சொல்லியிருக்கிறார்கள்
உடுத்துவது பற்றி; வெளுத்துப் போகும் நிறம் பற்றி.

இப்போதெல்லாம்
உடுப்புகள் ஆயத்தமாயுள்ளன
தேர்வது அவரவர் தோதுப்படி.
சிலபோது தேர்ந்தெடுத்துத்
தைத்துக் கொள்கிறோம்.
உடுப்பிற்கேற்ப உறுப்புகளை
நெளித்தும் கொள்கிறோம்.

ஒரு செந்நிற
குத்தாலத் துண்டு மட்டும்தான்
தேவைப்படுகிறதெனக்கு
என் கருத்த உடலில் வழிந்தோடும்
வியர்வையைத் துடைக்க.

இந்தக் கவிதைக்குள் தொடக்க வரிகளில் சொல்லப்பட்டதைப் போல்
வெவ்வேறு காலங்களில்
(நம்) கவிதைகள்
வெவ்வேறாய் இருக்கின்றன.
விருப்பத்தின் நியதியா?
கிடைப்பருமையா?
மாற்றமா? வளர்ச்சியா?‘
                யாருக்குத் தெரியும்? எதற்குத் தெரிய வேண்டும் இவையெல்லாம்? ‘என் கருத்த உடலில் வழிந்தோடும் வியர்வையைத் துடைக்கப் போதுமானதென கேகேயின் கவிதைக்குள் சுட்டிக் காட்டப்பட்ட ‘செந்நிறக் குற்றாலத் துண்டைப்போல், நான் எதைக் கவிதை என்று உணர்கிறேனோ அது கவிதை என்கிற முடிவுடன் சிறுகதைத் தளத்தில் தான் பதித்த நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கடந்து கவிஞராக தன்னை நிறுத்தும் முயற்சியில் சு.மணிவண்ணன், கவித்துவத்துடனும், ‘பெயர் ராசி பேர் சொல்லும்என்ற நம்பிக்கையுடனும், சு.மதிவண்ணனாகநிகழ்வெளிகவிதைத் தொகுப்புடன் இன்று நம்முன் நிற்கிறார். நாளை திரைப்படப் பாடலாசிரியராக விருப்பம் கொண்டுள்ளார். இந்தப் புதியதடம் பதிப்பதற்காக ம.ரெட்டியபட்டியில் இருந்த செடிக்கு, ‘விலக்கில் பதியம் போட்டதுடன், சென்னைவரை சென்று நீரூம் ஊற்றி வந்துள்ளார். பதியன் பலன் தந்து இவர் வாகை சூட இந்த நேரத்தில் வாழ்த்துவோம். திரைப்பாடலாசிரியர் ஆவதற்கான இப்படியான களப்பணிகள் தாண்டி, இவர் கவிதைத் தொகுப்பிலும்கூட அதற்கான தெரிப்பு தெரிகிறது.
தொகுப்பின் (பக்கம் 34ல் தொடங்கும்)  ‘ உயிர் ஊசல் ஆடுது‘ என்ற கவிதையை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
உழுது போட்டாச்சு
மழையைக் காணலயே...
விதைச்சு வச்சாச்சு
தூறல்கூடப் பேயலையே...

உயிர் மூச்சு தவிக்குது
உயில் ஊசலாடுதே...
ஒரு சொட்டு மழை பேஞ்சா
ஒரு வாரம் தாங்குமய்யா...

உடம்பெல்லாம் பதறுதய்யா
உயிர் போகத் துடிக்குதய்யா...
அண்ணாந்து பாத்தாலும்
ஆகாயம் அசையலையே....
குனிஞ்சு பாத்தாக்க
குலை நடுங்க வைக்குதய்யா...

காட்டை நம்பித்தானே
கடன் வாங்கினேன்
ஓட்டு வீடு
ஒன்னுதான் இருக்கு
உனக்குப் பொறுக்கலையா?
திரைப்பாடல்களில் மட்டுமல்ல, பொதுவாகவே பாடல்கள் இயற்றும்போது மிகவும் சிரமமானது அவலச்சுவையைக் கொண்டு வருவது. அப்படிச் சிரம்மான காரியமே இவருக்கு நன்கு கைவரப் பெறுகிறது என்றால், நிச்சயமாக சந்தத்துக்கு எழுதும் பிற சுவைகாட்டும் பாடல்களில் இவரால் சுவை கூட்ட முடியும் என்ற நம்பிக்கை தருகிறது மேற்கண்ட கவிதை. திரைத் துறையில் முயற்சிகள் தோல்வியுறும்போது... நம்பிக்கை வேண்டும் என்ற தலைப்பில் அவர் எழுதிய (பக்-59) கவிதை வரிகளை அவரே ஒருமுறை வாசித்துக் கொள்ளலாம்.
‘வெற்றியை மட்டுமே
குறிக்கோளாய்க் கொள்ளாதே.
ஒவ்வொரு வெற்றியும்
மகிழ்ச்சியை மட்டுமே தரும்.

தோல்வியுறு...
காரணங்கள் ஆராய்வாய்
கவலைப்பட்டுத் துன்பம் உணர்வாய்
எப்போதும் விழிப்போடு இருக்க
அறிவைத் தயாராய் வைப்பாய்‘ என்ற அவரின் வரிகள் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வெற்றியை நோக்கி நகர்வதற்காக விழிப்போடு, ஆயத்தமாய் இருக்கச் சொல்கின்றன.
ஆனால்... இந்தக் கவிதைக்கு நான்கு பக்கங்கள் முன்னதாக இவர் எழுதியுள்ள கவிதை (பக்-55) ‘நினைவு கொள்ளுங்கள்‘ என்ற தலைப்பில் அவமானப்படலைப் பற்றிப் பேசி, அவமானப் படலுக்கான காரணங்களை ஆராயச் சொல்லாமல்
... ... ...
உன்னை நம்பி
ஒருநாள் உயர்வாய்.
அல்ட்சியப்படுத்தி
அவமானப்படுத்தியவர்களைப்
பட்டியல் இட்டு பாராட்டு.

அவமானங்கள்தான்
வெற்றியை உறுதி செய்கின்றன.
அவமானப்படுகின்ற பொழுதுதான்
லட்சியத்தை விரைவில்
எட்ட முடியும்
நினைவில் கொள்ளுங்கள்‘ என்ற இறுதி வரிகளுடன் வெற்று நம்பிக்கையை விதைக்கிறது. நீதான் தம்பி முதலமைச்சர்என்ற தலைப்பில் கட்டுரை எழுதியவர் உள்ளூர் கவுன்சிலர் தேர்தலில் தோற்றுப் போனதுதான் என் நினைவிற்கு வருகிறது. வெற்று நம்பிக்கை அல்ல. ஆராய்தலும், சரிசெய்வதற்கான திட்டமிடலும், அதனைச் செயல்படுத்தலுமே நம்மை ஒரு தவறை ஒருமுறை மட்டுமே செய்ய வைக்கும். மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி அவமானப்படுவதினின்றும், தோற்றுப் போவதினின்றும் காக்கும்.
கவிஞர் தன் முனைப்புடன் சில இடங்களில் அரசியல் பேசுகிறார்.
‘இந்தியா வளரும் நாடுதான்
வறுமை...
வேலையின்மை...
விலைவாசி...
இவையெல்லாம் வளர்ந்து
கொண்டேதான் இருக்கின்றன.

ஆகவே...
இந்தியா வேகமாக
வளரும் நாடுதான்...‘ (பக்-57) வறுமை, வேலையின்மை, விலைவாசி தாண்டியும் இந்தியாவில் வளர்கின்ற விஷயங்களாக இன்னும் நிறைய இருக்கின்றன. சிந்தித்தால் தெளிவுக்கு வரும் திகிடுதத்தங்களை பட்டியலிடப் பக்கங்கள் போதாது என்று விட்டிருப்பார் என நம்புவோம்.
‘வண்டி மாடுகள் வச்சு இருந்தால்
வசதியான விவசாயி அப்ப...
இப்ப...
வண்டி மாடு வச்சிருந்தால்
ஏளனமாய்ப் பாக்குறாங்க‘ (பக்-37) என்ற வரிகளின் வழியாக உலகமயச் சூழலில் இயந்திர மயமாகிப்போன விவசாயத்தின் நிலையை முன்வைக்கிறார். இந்த ஏளனப் பார்வையை விதைப்பதற்காக அவர்கள் செய்த அரசியல் தந்திரங்களை எழுதினால் அது தனிக் கட்டுரையாகிவிடும் என்பதால் அவர் எழுதாமல் விட்டிருப்பார்.
‘கொடுத்துப் பழக்கப்பட்டவர்
பழக்கமானவரிடம்
எதிர்ப்பட்டவரிடம்
புலம்பித் தீர்க்கிறார்
“காசு கொடுக்காமல்
காரியம் நடக்காது“
இலஞ்சம் கொடுத்தவர்
இலஞ்சம் பற்றிப் பேசுகிறார்‘ (பக்-79) போன்ற வரிகள் நம்மை எங்கெங்கோ இழுத்துச் சென்று நிறுத்திவிடுகின்றன. நாம் பார்த்தவர்கள்தானே இவர்களெல்லாம். இவர் – அவர். அவர் – இவர். என எவர் எவர் நினைவுகளோ வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
‘மதக்கலவரம்
மாண்டனர் சிலர்,
இனக்கலவரம்
இறந்தனர் சிலர்,
தேர்தல் கலவரம்
செத்தனர் சிலர்,
கலவரம் முடிந்த பின்
காவல்துறை
அமைதியை நிலைநாட்டியது

அரசாங்கம் விசாரணைக் கமிஷன்
அமைத்தது.
கலவரத்தின் உண்மை நிலவரம்
கடைசிவரை வரவே இல்லை.

முடிந்த கலவரங்கள் எல்லாம்
முடிக்கப்படாமலேயே
தொடர்கின்றன.‘ (பக்-80) அரசு பயங்கரவாதத்தின் திட்டமிட்டு நடத்தப்படும் கலவரங்களையும் கலவரச் சூழல் உருவாக்கங்களையும் இக்கவிதை அப்பட்டமாக முன்வைக்கிறது.
‘மற்றவர்களின் நியாயங்களில்
தலையிடுபவன்
தனக்கான நியாயங்களில்
யாரையும் தலையிட விடுவது இல்லை‘ (பக்-83) பிராய்டிய கோட்பாட்டின் வகைப்பட்ட இப்படியான அரசியல் கவிதைகளையும்கூட எழுதியுள்ளார் சு.மதிவண்ணன்.
‘பதவியில் இருக்கும்போது
உதவி கேட்டுப் போனேன்
அலட்சியப்படுத்தினார்.

தேர்தல் வந்ததும்
தெருத் தெருவாய்
ஓட்டுப் பிச்சை கேட்டு,
ஒவ்வொருத்தரிடமும் அக்கறையோடு
குறைகேட்டு,
“ஆட்சிக்கு வந்ததும்
ஆவன செய்கிறேன்
என்னை ஜெயிக்க வையுங்கள்“
என்றார்.

“போன தடவை சொன்ன
அதே பொய்யை
மறுபடியும் கூறுகிறார்“
தொண்டர்கள் தொண்டைக்குள்
முனங்கிக் கொண்டனர்‘ (பக்-92) முதலாளித்துவ ஜனநாயகத்தின் முன்கழிவின் வீச்சத்தை வீச்சுக் குறைவாகவென்றாலும் முன்னெடுத்த அரசியல் கவிதை இது. கவிதையின் கடைசி வரிகள் வாசிக்கையில் தொண்டர்கள் என்று யாரும் இருக்கிறார்களா? என்ற சந்தேகம். வந்தது. இப்போதெல்லாம் கட்சி மாநாடுகளுக்குக் கூட்டம் சேர்ப்பதே லோடு கணக்குதானாம். 20 தலை ஒரு ‘யூனிட்’ 40 தலை என்றால் 2 ‘யூனிட்‘ வண்டி வாடகை தனியாம். இதெல்லாம் நமக்குப் பழக்கமில்லை என்றாலும், ஆட்களை சப்ளை பண்ற ஏஜென்டுகள் நமக்குப் பழக்கமானவர்களாயிருப்பதால் நமக்கும் இந்தப் பொது அறிவு விஷயம் தெரிந்திருக்கிறது.
ஆண் கவிஞர்கள் பலரும் பெண் பெயர்கள் வைத்துக் கொண்டாலும் அவர்களின் கவிதைகள் ஆண் குரலிலேயே எழுதப்படுகின்றன. ஆணுக்கான வார்த்தைகளே பயன்படுத்தப்படுகின்றன. ஆண்களின் உணர்வுகளையே அவை பிரதிபலிக்கின்றன. சு.மதிவண்ணன் ஆண் பெயரில் எழுதினாலும், பெண்களின் உணர்வுகளைப் பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறார், ‘புரிதல் இல்லாக் காமம்‘ (பக்-32), ‘எதிர்க்கேள்வி (பக்-65), ‘தலை குனிவு‘ (பக்-66) போன்ற கவிதைகள் பெண்களின் குரல்களைப் பதிவு செய்கின்றன. ‘மனைவியின் ஏக்கம்‘ (பக்-73) ‘அழகுப்பெண்‘ (பக்-85) இந்த இரண்டுகவிதைகளும் பெண் உணர்வைச் சொன்னாலும் தலைப்பு வைக்கும்போது கவிஞருக்கு தான் ஆண் என்ற நினைவு வந்துவிட்டதால், பெண்களின் குரல்களைப் பதிவு செய்யவில்லை.
‘சிறு வயதில்
அடிக்கடி நிகழும் சண்டையில்
அழுது ஓடி வந்து
அம்மாவிடம் சொல்வேன்
‘ஆம்பளப்புள்ள எதுக்காகவும் அழக்கூடாது‘
அம்மா சொன்ன வார்த்தைகள்
நெஞ்சில் பதிந்துவிட
அம்மா இறந்த செய்தி கேட்டு
அழ முடியவில்லை‘ (பக்-87) என்ற வரிகளுடன் முடியும் ‘அம்மாவின் வார்த்தை...‘ என்கிற கவிதையைப் படிக்கிறபோது, ‘பொம்பளப் புள்ளயின்னா அழணுமா?‘ என்ற கேள்வி எழுகிறது.
இவானின் கவிதை ஒன்று
‘காரணங்கள் ஏதுமின்றி
வாய்விட்டு அழும்
குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம்
பொறாமையாகத்தானிருக்கிறது...
ஆள் அரவமற்ற இடங்களிலும்
அமைதியாகக்கூட
அழுவதற்குத் துணிச்சலில்லா எனக்கு‘
கவலைகள் நம்மை அழுத்தும் நேரத்தில் அழுகை நல்லது. அது மன அழுத்தத்தைக் குறைக்கும். நாம் மனநோயாளியாவதிலிருந்து நம்மைக் காக்கும். இதில் ஆணென்ன? பெண்ணென்ன?
‘கட்டாயப்படுத்தவில்லை‘ (பக்-43) என்ற தலைப்பில் குடி பற்றியும் ஒரு கவிதை எழுதியுள்ளார். தனிமனிதன் உயிரிழப்பதற்குக் தலைக்கவசம் அணியாததே காரணம் என்று முடிவு செய்து, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குகின்ற அரசு, சும்மா கடைதானே திறந்திருக்கிறது. குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை என்கிறார் கவிஞர். குடிக்கக் கூடாது என்பதைக் கட்டாயமாக்கியிருக்க வேண்டாமா? அப்படிச் செய்தால் 2010-2011 ஆண்டு மதுபான விற்பனை அளவு 22,000 கோடியை எட்டியிருக்குமா? இது நட்சத்திர ஓட்டல்களில் இருக்கும் ‘குடி குடில்கள்‘ இணைக்கப்படாத விற்பனை. தமிழக்த்தில் 8 கோடிப் பேர். இதில் 2010 கணக்கெடுப்பின்படி 42 சதவீதம் குழந்தைகள். மீதி 58 சதவீதத்தில் பாதி பெண்கள். அதாவது 29 சதவீதம் ஆண்கள். சரி 30 சதவீதம் என்று வைத்துக் கொண்டாலும் 2கோடியே 40லட்சம் ஆண்கள். மது விற்பனை 22 ஆயிரம் கோடி. அதாவது சராசரியா ஒரு நாளைக்குக் ஆண்களின் ஒவ்வொரு தலைக்கும், 9,166 ரூபாய்க்குச் சாராய வியாபாரம் நடக்கிறது. நான் குடிக்கலை, நீ குடிக்கலைன்றதெல்லாம் இல்லை. நாம குடிக்கலைன்னாலும் நம்ம பேருல யாரோ ஒருத்தர் ஆண்டுக்கு 9,166 ரூபாய்க்குக் குடிக்கிறார். இந்த லட்சணத்தில் ‘கட்டாயப்படுத்தவில்லை‘ என்பது எப்படி... கொஞ்சம் யோசிக்கணும்.
‘இறப்பின் வாசிப்பு‘ (பக்-20) என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதையில்
‘என் இறப்பில்
எவர் அழுவார் : எவர் துக்கம் கொள்வார் :
எவர் மகிழ்வார் :
எவர் கண்டும் காணாமலும் போவர் :
எவர் தூற்றுவார் :
நினைக்கும் வேளையில்
இறப்பின் ரகசியம் எதுவாக இருக்கும்‘
என்று விரக்தியில் புலம்பும் கவிஞர், இறுதியில்
‘இறந்தவர்கள் எல்லோரும்
இப்படித்தான் காலப்போக்கில்
கவனிப்பாரின்றி இறந்து விடுகின்றனர்‘ எனத் தீர்மானிக்கிறார்.
அப்படி எதுவும் ஆகப்போவதில்லை என்பதைவிட, அப்படி ஆகவிடாமல் இருப்பது நம் வாழ்க்கையை நாம் வாழ்ந்த விதத்தில் இருக்கிறது என்பதே உண்மை. இன்று 2012 பிப்ரவரி 12 ஆம் நாள் வீதி நாடகத்தில் முதுகலை தத்துவம் பயின்று, அதையே தன் வாழ்க்கையாக வாழ்ந்த நண்பர் அய்யங்காளையின் முதலாமாண்டு நினைவு நாள். மதுரையில் நாடகம் தொடர்பான கருத்தரங்கத்திற்க ஏற்பாடாகியிருந்தது. ‘பண்பாட்டியல் நோக்கில் குழந்தைகளும் நாடகமும்என்ற தலைப்பில் நானும் கட்டுரை வாசித்துத் திரும்பியிருக்கிறேன். 2012 ஜனவரி 4 வீதிநாடகக் கலைஞனாயிருந்து, தமிழகத்தில் பல வீதிநாடகப் பயிற்சியாளர்களை உருவாக்கிய, தனக்கான சொந்த வாழ்க்கை என ஏதுமற்று, வாழ்ந்த தோழன் சுரேஷ் தர்மாவின் மூன்றாமாண்டு நினைவு நாள், சேலத்தில் நிகழ்த்துகலை விழாவாக, கிராமப்புற நிகழ்த்துகலைப் பயணமாக நடந்து முடிந்திருக்கிறது. 2012 ஜூலை 1 மானுட விடுதலைப் பண்பாட்டுக் கழகத்தின் முன்னோடிகளில் ஒருவனாயிருந்து மறைந்த தோழன் கு.பா.வின்  எட்டாம் ஆண்டு நினைவுநாள். வழக்கம் போல் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கருத்தரங்கமாக நடைபெற உள்ளது. இவையனைத்தும் தமிழக நிலைமை.
இந்திய அளவில் எனில் மார்ச் 23 ‘ஏகாதிபத்தியத்திற்கெதிரான போர் எங்களால் தொடங்கப்படவும் இல்லை. எங்களோடு முடியப் போவதுமில்லை‘ என அறிவித்து தூக்குக் கயிற்றை முத்தமிட்ட தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் (2012ல் 90 ஆவது) நினைவுநாள். இந்தியா முழுவதும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாலும், சமீபகாலமாக ஏகாதிபத்திய அடிவருடிகளாலும்கூட நினைவு கூறப்படுகிறது. அக்டோபர் 9 சர்வதேசிய விடுதலைக்காக அர்ஜென்டைனாவில் பிறந்து, மருத்துவம் பயின்று, கியூபாவின் விடுதலையில் பங்கேற்று, காங்கோவின் விடுதலைக்காகப் பாடுபட்டு, பொலிவியாவில் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வால் சுட்டுக் கொல்லப்பட்ட தோழன் எர்னஸ்ட்டோ சேகுவேராவின் (2012) 45 ஆவது நினைவு நாள் உலக அளவில் நினைவுகூறப்பட உள்ளது.
இப்படி இன்னும் நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். நாம் வாழ்கின்ற வாழ்க்கையே நம் இறப்பிற்குப் பின்னர்
‘என் இறப்பில்
எவர் அழுவார் : எவர் துக்கம் கொள்வார் :
எவர் மகிழ்வார் :
எவர் கண்டும் காணாமலும் போவர் :
எவர் தூற்றுவார்‘ என்கின்ற கேள்விக்குப் பதில்சொல்ல வல்லது. இறப்பிற்குப் பின்னும் வாழ்வு வாழ்வோம் என முடிவு செய்வோம்.
பல கவிதைகள் விரக்தியின் விளிம்பைத் தொட்டாலும், சீர்படுவதற்கான கூர்மையும் தொகுப்பில் தெரிகிறது.
நிரந்தரக் கூலிகள் (என்ற தலைப்பில்)
‘குனிந்து செய்யும்
கூலி வேலையாள்
நிமிர்ந்து நிற்க விடாமல்
நிரந்தரக் கூலிகள் ஆக்கின
பெருச்சாளிகள்‘ (பக்-84) என்ற நுட்பமான கவிதையும் உண்டு.
‘... ... ...
சந்திக்கும் ஆவல்
நினைப்போடு நின்று விடுகிறது.
எப்போதாவது வாய்க்குமெனில்
கேட்டுவிட வேண்டும்
நீயாவது
என் வீட்டிற்கு வரக்கூடாதா? என்று‘ (பக்-68) நிறைய யோசிக்க வைக்கும் கவிதை. யோசிப்பின் முடிவில் ஒரு கேள்வி வருகிறது. இதே நியாயங்கள் உற்ற தோழியாய் கல்லூரியில் இருந்து, காலச் சுழற்சியில் வாழ்க்கை தேடிப் பயணப்பட்ட அவளுக்கும் இருக்கும்தானே? ஒருமுறையாவது, கவிஞர் சு.மதிவண்ணன் குடும்பத்துடன் அந்தத் தோழியின் வீட்டிற்குச் சென்று வரவேண்டும் என்பது என் விருப்பம்.
தோழர் பிரேமாவின் ‘பந்தயக் குதிரைகள்‘ கவிதையின் கடைசி வரிகள் இப்படி முடிகின்றன.
‘தொடர்ந்து கொண்டிருக்கும் ஓட்டம்
எப்போழுதேனும் நிற்குமா?
தெரியவில்லை.
எல்லா நிலைகளும் என்றோ ஒருநாள்
கடக்கப்பட்டே தீரும்.
தூரத்தே தெரியும் இலக்கு
எப்படியேனும் அடையப்பட்டே தீரும்.
கழற்றப்பட்ட பட்டைகளும் பிரிக்கப்பட்ட குதிரையும்
மீண்டும் ஒருநாள் மீண்டு வரும் என்ற நம்பிக்கையுடன்
மனதில் பட்ட வலியுடனும்
உடலில் பட்ட புண்களுடனும்
தொடந்து ஓடிக்கொண்டிருக்கும்
நாங்கள் பந்தயக் குதிரைகள்.
பந்தயத்தில் ஓடத் தொடங்கியிருக்கும் சு.மதிவண்ணனுக்கு நிறைய கற்கவும், தொடர்ந்து கற்கவும், கற்றவற்றைப் பயன்படுத்தவும், தொடர்ந்து சமூகத்திற்கானதாகப் பயன்படுத்தவும், வெற்றி பெறவும், தொடர்ந்து வெற்றி பெறவும், வெற்றிகளை சமூகத்திற்கானதாக மாற்றவும் மானுட விடுதலைப் பண்பாட்டுக் கழகத்தின் வாழ்த்துகள்.



(2012 பிப்ரவரி 12 ஆம் நாள் ம.ரெட்டியபட்டியில் நடைபெற்ற ‘நிகழ்வெளி‘ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய விமர்சன உரையின் எழுத்து வடிவம்)

No comments:

Post a Comment