Sunday, September 27, 2015

கடவுளும் மதமும் தலைப்பிலான இரண்டாவது கலந்துரையாடலும் படைப்பரங்கமும்

2015 செப்டம்பர் 26ஆம் நாள் மாலை 6 மணி அளவில் அருப்புக்கோட்டை மதிஇல்லத்தில் படைப்பரங்கமும் கலந்துரையாடலும் நடைபெற்றன.

படைப்பரங்கில் தோழர் தமிழ்க்குமரன் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் இரண்டு அத்தியாயங்களை வாசித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற ‘மதமும் கடவுளும்’ கலந்துரையாடலை தோழர் விஜி முறையான  தொடக்கவுரையுடன் ஒருங்கிணைத்தார்.

கலந்துரையாடலின் முதல் கட்டுரையாக ‘அம்பேத்காரிய நோக்கில் மதமும் கடவுளும்’ என்ற தலைப்பில் ரமேஷ் தன் கருத்துரையை முன்வைத்தார்.

தொடர்ந்து ‘பெரியாரியல் நோக்கில் மதமும் கடவுளும்’ என்ற தலைப்பிலான தனது முன்வைப்பை தோழர் கேகே பகிர்ந்து கொண்டார்.

இரண்டு முன்வைப்புகளின் மீதான விவாதம் பல்வேறு திறப்புகளுக்கு வழிவகுப்பதாய் அமைந்தது. ‘மார்க்சிய நோக்கில் மதமும் கடவுளும்’ என்ற தலைப்பிலான தோழர் மதியின் விவாதக் குறிப்பு எதிர்வரும் அமர்வில் தொடரவுள்ளது.

Tuesday, September 22, 2015

‘படைப்பரங்கமும் கலந்துரையாடலும்’

2015 செப்டம்பர் 26 – சனிக்கிழமை
மாலை சரியாக 6 மணி
அருப்புக்கோட்டை
மதி இல்லம்மாடியில்

படைப்ரங்க ஒருங்கிணைப்பு
தோழர் அஷ்ரஃப்

கலந்துரையாடல் ஒருங்கிணைப்பு
தோழர் சுப்புராயுலு

‘மதமும் கடவுளும்’ கலந்துரையாடலுக்கான விவாத முன்வைப்புகள்

பெரியாரியல் நோக்கில் கடவுளும் மதமும்
தோழர் கேகே

அம்பேத்காரிய நோக்கில் கடவுளும் மதமும்
தோழர் ரமேஷ்

மார்க்சிய நோக்கில் கடவுளும் மதமும்
தோழர் மதிகண்ணன்

அனைவரையும் வரவேற்கும்
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
9443184050 & 9442184060

Sunday, September 20, 2015

கூலி என்பது என்ன? அது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? – Retold – ஹரி

         இது கொஞ்சம் எளிமையாக வாசிப்பதற்கான வடிவம். ஒருவேளை இதில் பயனில்லாமல் போகலாம். தெரியவில்லை. வேறுவகையில் காரல் மார்க்ஸ் கண்மாய்க் கரையில் அமர்ந்து விளக்குவது மாதிரியான நெருக்கம் ஏற்பட்டால் கருத்துக்களை எளிதாக உள்வாங்கிக் கொள்ளலாம். மறுமொழிக்காகக் காத்திருக்கிறேன். தொடங்கியதைத் தொடர்வதும் தொலைப்பதும் உங்களின் எதிர்வினைகளில் இருக்கிறது. - ஹரி

கூலி என்பது என்ன? அது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? – Retold – ஹரி

         “உங்களுக்கு கெடைக்கிற கூலி எவ்ளோ?”ன்னு பல தொழிலாளிங்கக்கிட்ட கேட்டா ஒருத்தரு “எனக்கு ஒரு நாளைக்கி நூறு ரூபா கெடைக்கிது”ன்னும் இன்னொருத்தரு “எனக்கு எரநூறு ரூபா கெடைக்கிது”ன்னும் பல திணுசா பதில் சொல்லுவாங்க. குறிப்பான ஒரு வேலையச் செஞ்சு முடிக்க அவங்க வேலைக்கு ஏத்த மாதிரி அவங்கவங்க மொதலாளிங்கக்கிட்ட இருந்து வாங்குறதச் சொல்லுவாங்க. உதாரணமாச் சொல்லனும்னா ஒரு மீட்டர் துணி நெய்யிறதுக்கு இல்லன்னா ஒரு அச்சுக்கு தேவைப்படுற வேலையைச் செய்யிறதுக்குன்னு சொல்லலாம். ஒவ்வொருத்தரும் சொல்றது ஒவ்வொரு மாதிரி இருந்தாலும் இவங்கள்லாம் ஒரு விஷயத்த ஏத்துக்கிடுவாங்க. குறிப்பிட்ட நேரத்துக்கு இல்லன்னா குறிப்பிட்ட அளவு வேலைபாக்குறதுக்கு மொதலாளி கொடுக்குற பணம்தான் கூலி.

         இதுல இருந்து, மொதலாளி காசு குடுத்து இவங்க உழைப்ப வாங்குற மாதிரியும், காசுக்காக இவங்க உழைப்ப மொதலாளிக்கு விக்கிற மாதிரியும் தோணுது. ஆனா இது அப்படித் தோணுதே தவிர பெரிய பொய்யி. நெசத்துல, தொழிலாளிங்க அவங்களோட உழைக்கிறத் சக்தியத்தான் மொதலாளிக்கு விக்கிறாங்க. இந்த சக்திய ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மொதலாளி வெலைக்கி வாங்குறாரு. இப்புடி சக்திய வெலைக்கி வாங்குனதுக்கு அப்புறமா அந்த நேரம் முழுக்கவும் தொழிலாளிய வேலை செய்ய வெச்சி, அந்தத் தொழிலாளியோட சக்தியப் பயன்படுத்திக்கிடுதாக. தொழிலாளியோடத் சக்திய மொதலாளி வாங்குன அதே பணத்துக்கு கொஞ்சம் சீனி வாங்கிருக்கலாம், இல்லன்னா வேற ஏதாச்சும் வாங்கிருக்கலாம். நூறு ரூவா குடுத்து ரெண்டு கிலோ சீனி வாங்கிருந்தா, அந்த நூறு ரூவாதான் ரெண்டு கிலோ சீனியோட வெலை. 12 மணிநேரம் உழைக்கிறதுக்காக அவரு குடுக்குற வெலைதேன் நூறு ரூவா. அப்டின்னா காசு குடுத்து வாங்குற சீனிய மாதிரி வேலை பாக்குறதுக்குத் தேவையான சக்தியும் ஒரு பொருளுதான். சீனியத் தராசுல அளக்கறது மாதிரி உழைக்கிறத கடிகாரத்துல அளக்குறாக.

         தொழிலாளிங்களோட சொத்து உழைக்கிறத் சக்தி. அத மொதலாளியோட பணத்துக்காக பரிமாறிக்கிடுறாக. இந்த பரிமாத்தம் ஒரு குறிப்பிட்ட அளவுல நடக்குது. இத்தன நேரத்துக்கு வேலை பாக்க இத்தன ரூவா பணம் அப்டின்னு. 12 மணி நேரம் துணி நெய்ய 200 ரூவான்னு வெச்சிக்கிடுவோம். இந்த 200 ரூவாங்கறது, நம்ம வாங்குற மத்தப் பொருளுங்க எல்லாத்தையும் குறிக்குது இல்லையா? அப்டின்னா, தொழிலாளி நெசத்துல தன்னோட சொத்தா இருக்குற சக்திய மத்த பொருளுங்களுக்கு பதிலா மாத்திக்கிறாங்க. அதுமட்டும் இல்லாம, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மாற்றம் செஞ்சிக்கிடுதாக. மொதலாளி தொழிலாளிக்கு 200 ரூவா குடுத்ததுனால கொஞ்சம் துணிமணியும், கொஞ்சம் வெறகும், திங்கிறதுக்கு சோறும் மத்த தேவைப்படுறதுகளையும் குடுக்குறாரு. அப்ப, 200 ரூவாங்கறது மத்த பொருளுகளுக்காக உழைப்ப மாத்திக்கிற அளவுன்னு புரியுது. அதாவது, உழைக்கத் தேவப்படுற சக்திய மத்த பொருளுங்களோட மாத்திக்கிறாங்க. அந்த மாத்திக்கிறதோட அதாவது பரிமாறிக்கிற மதிப்புத்தான் 200 ரூவா. 

         பணத்துல கணக்கு பண்ற ஒரு பொருளோட பரிமாற்ற மதிப்புத்தான் ஒரு பொருளோட விலைன்னு சொல்றாங்க. அப்ப, கூலிங்கறது வேலை பாக்குற சக்தியோட வெலையக் குறிக்கிறதுக்குத் தோதான பேரு. பொதுவா இத உழைப்போட விலைன்னு சொல்லப்படுது. மனுசனோட இரத்தத்தையும் சதையையும் தவிர வேற போக்கிடம் இல்லாத பொருளோட (அதுதான் உழைக்கத் தேவப்படுற சக்தி) வெலையச் சொல்றதுக்குப் பேருதான் கூலி.

         யாராச்சும் ஒரு தொழிலாளிய எடுத்துக்கிருவோம். உதாரணமா ஒரு நெசவாளி இருக்காருன்னு வெச்சிக்கலாம். மொதலாளி அவருக்கு தறியும் நூலும் குடுப்பாரு. நெசவாளி வேலை பாப்பாரு. நூலு துணியா மாறிரும். மொதலாளி அந்தத் துணிய நெசவாளிகிட்டருந்து வாங்கி அத விப்பாரு. 100 ரூபாய்க்கு விக்கிறாருன்னு வெச்சிக்கிருவோம். இப்ப நெசவாளிக்குக் கெடக்கிற கூலி துணியில ஒரு பங்கா? இல்ல 100 ரூவாயில ஒரு பங்கா? இல்ல அவரோட உழைப்பில உருவான பொருளுல ஒரு பங்கா? இல்லவே இல்ல. துணிய விக்கிறதுக்குப் பலநாளு முன்னாடியே நெசவாளி அவரோட கூலிய வாங்கிக்கிறாரு. அதாவது, இந்த துணிய வித்து நெசவாளிக்கி மொதலாளி கூலி தரல. அவரு கைக்காசுல இருந்து கூலி தராரு. தறியையும் நூலையும் மொதலாளி நெசவாளிக்கித் தராரே தவிர்த்து நெசவாளி உற்பத்தி பண்ண பொருளுங்கள இல்ல. அதுமாதிரியே நெசவாளி அவரோட உழைப்புக்குப் பதிலா வாங்கிக்கிற பொருளுங்க அவரு உற்பத்தி பண்ணுன பொருளுங்க இல்ல. மொதலாளி விக்கிற துணிய வாங்குறதுக்கு ஒருத்தருகூட இல்லாமப் போலாம். வித்தகாசு கூலி குடுக்கக்கூட பத்தாமப் போகலாம். நெசவாளியோட கூலிக்கிக் கணக்குப் பண்ணிப் பாத்தா ரொம்ப அதிகமான லாபத்துக்கு துணிய விக்கக்கூட வாய்ப்பிருக்கு. ஆனா இதுகளுக்கும் நெசவாளிக்கும் ஒரு ஒட்டுறவும் இல்ல. மொதலாளி முன்னாடியே அவருகிட்ட இருக்குற சொத்தல இருந்து ஒரு பங்குக்கு நெசவாளியோட சக்திய வெலைக்கி வாங்குறாரு. அவரு சொத்துல இன்னொரு பங்குக்கு துணி செய்ய மூலப்பொருளான நூலையும் கருவியா இருக்குற தறியையும் எப்புடி வெலைக்கி வாங்கிருக்காரோ அதே மாதிரிதான் உழைக்கிற நெசவாளியோட சக்தியையும் வாங்குறாரு. உழைக்கத் தேவப்படுற சக்தியையும் மத்ததுகளையும் வாங்குனதுக்கு அப்பறமா மொதலாளி அவருக்கு சொந்தமான உற்பத்திப் பொருளையும் கருவியையும் மட்டுமே வெச்சிக்கிட்டு துணியத் தயாரிக்கிறாரு. ஏன்னா நம்ம நெசவாளியும் ஒரு கருவியாத்தான் இருக்காரு. இந்த வகைக்கி நெசவாளியும் தறி மாதிரிதான். துணியிலையோ இல்ல அதோட வெலையிலயோ தறிக்கி என்ன பங்கோ அதே பங்குதான் நெசவாளிக்கு.

(எதிர்வினைகளை maveepaka@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்)

படைப்பரங்கமும் கலந்துரையாடலும்...

2015 செப்டம்பர் 19ஆம் நாள் மாலை 6 மணி அளவில் அருப்புக்கோட்டை மதிஇல்லத்தில் படைப்பரங்கமும் கலந்துரையாடலும் நடைபெற்றன.

படைப்பரங்கினை தோழர் மாணிக் ஒருங்கிணைத்தார்.
கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி ‘அவள்ன்களின் ஊதிப்பெருக்கம்’ என்ற சிறுகதையையும்
மாணிக் ‘பாணிபூரி சாப்பிட்ட பாம்பு’ என்ற குழந்தைகளுக்கான சிறுகதையையும்
ராஜேஸ் கண்ணா எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் இரண்டு அத்தியாயங்களையும்
பாண்டூ கவிதை ஒன்றும் வாசித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற ‘மதமும் கடவுளும்’ கலந்துரையாடலை தோழர் வருண் முறையான  தொடக்கவுரையுடன் ஒருங்கிணைத்தார்.

கலந்துரையாடலின் முதல் கட்டுரையாக ‘வரலாற்றியல் நோக்கில் பொதுப்புத்தியில் பதிந்த மதம் மற்றும் இறைகள்’ ஐ முன்வைத்தார்.


காத்திரமான கட்டுரை மீதான நேர் எதிர் விவாதங்கள் கலந்துரையாடலில் வெளிப்பட்டன. இந்த ஒற்றைக் கட்டுரை மட்டும் அதன் மீதான விவாதம் சுமார் இரண்டு மணி நேரம் தொடர்ந்தது. ‘மதமும் கடவுளும்’ பிற கட்டுரைகள் எதிர்வரும் சனிக்கிழமை (26-09-2015) மாலை 6 மணிக்கு மதி இல்லத்தில் தொடரவுள்ளன.

Thursday, September 17, 2015

பண்பாடும் மார்க்ஸியமும் - விஜி

அன்புத் தோழர்களுக்கு…
‘பண்பாடு’ ‘மார்க்ஸியம்’ போன்ற சொற்களின் வரையறைகளுக்குள் சென்று மீள்வது சாத்தியமா எனத் தெரியவில்லை. எனினும் மார்க்ஸியத்தை ஒரு சிந்தனா முறையாகக் கொண்டு அதன் அடிப்படையில் பண்பாட்டினையும் அதன் கூறுகளையும் சற்றே ஆராய்ந்து அறிந்து கொள்வது சாத்தியமே.
பண்பாடு என்பது மனிதர்களின் வாழ்வியல் செயல்பாடுகளோடும், எண்ணங்களோடும் தொடர்புடையது. சமூக மற்றும் தனிமனித நடத்தையை பண்பாட்டுக் கூறுகளான மதிப்பீடுகளும் நெறிகளுமே வழிநடத்துகின்றன. தீர்மானிக்கின்றன. மனிதனின் செயல்பாடுகளில் மனதின் ஒத்திசைவை ஏற்படுத்துவது பண்பாட்டின் பிரதான பணியாகும்.
‘சமூக உற்பத்திமுறைதான் எல்லாவகையான சமக உணர்வு நிலைகளையும் தீர்மானிக்கிறது’, ‘மேல்கட்டமைப்பின் சுதந்திரம் சார்பு நிலையானது’ என்ற வரிகள் மார்க்ஸியத்தின் அடிப்படையை எளிமையாய் உணர்த்துகின்றன.
பண்பாடு என்பது மேல்கட்டமைப்பு. இன்றைய சூழலில் உற்பத்தி முறை அல்லது பொருளாதார அமைப்பு என்பது முதலாளித்துவமே. எனவே முதலாளித்துவம் பண்பாட்டுக் கூறுகளை தனக்கேற்ப மாற்றியமைக்கவே விரும்பும். முதலாளித்துவம் தனது அடிப்படையான (தொழிலாளர்களின்) உழைப்பு – சுரண்டல் (முதலாளிகளின்) என்பதை கேள்விக்குட்படுத்தான பண்பாட்டினை தகவமைத்து வளர்க்கவே செய்யும்.
பண்பாடு வாழ்க்கை முறை சார்ந்து அமைவது. இன்றைய சூழலில் மனிதர்களின் வாழ்க்கைமுறை வர்க்க, பால், இன, மத, ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாய் பலவித கலவையாய் பிரிந்து அமைந்துள்ளன. ஒற்றை வாழ்க்கைமுறை நிலவவில்லை. பிரிந்து கிடக்கும் மனிதர்களின் வாழ்வைப் போலவே பலவிதப் பண்பாடுக் கூறுகளும் சமூகத்தில் நிலவி வருகின்றன. அவற்றில் தனக்கானவற்றை முதலாளித்துவம் வளர்த்தெடுத்து, தனக்கு எதிரானவற்றை அழித்தொழிக்க தொடர்ந்து முயன்று வருகின்றது.
நேர்மை, நியாயம் போன்ற மதிப்பீடுகளை காலாவதியாக்கி முன்னேற்றம் என்ற பேரில் ஏமாற்றுவதை வாழ்வின் யதார்த்தமாக்கி வருகிறது. ஏமாற்றி வெற்றியை (பணம் சேர்ப்பது, அதிகாரத்தை அடைவது) அடைவது ராஜ தந்திரம் (முதலாளித்துவ சொற்களில் வியாபார தந்திரம்) என போற்றிப் புகழப்படுகிறது.
அம்பானியின் ஏமாற்றுத்தனம், டாடாவின் ஏமாற்றுத்தனம், பெப்ஸி, கொக்கோ-கோலாவின் ஏமாற்றுத்தனம், நோக்கியா, சத்யம், இன்போசிஸ்… என நீண்டு கொண்டே செல்லும் ஏமாற்றுத் தனங்களின் பட்டியல் வெற்றிகள் வரலாறாய், சாதனைகளின் சிகரமாய், சமூகத்தில் சுட்டிக் காட்டப்படுகிறது. இந்தப் பாதையில் பெருங்கனவுகளோடு முன்னேறுபவர்களுக்கு இது குற்றமென தோன்றாத நிலையை முதலாளித்துவம் ஏற்படுத்தியுள்ளது. (இப்படியெல்லாம் பேசினால் சண்டைக்கு வருகிறார்கள்) இந்த ஏமாற்றுத்தனங்களை பல்வேறுவித பூச்சுகள் மூலம் மறைத்துக் கொண்டுள்ளது. மேலும் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது.
மக்களின் உணவுப் பழக்கத்தை வீட்டிலிருந்து வெளியேற்றி ஹோட்டல்களிலும், பாஸ்ட் புட் சென்டர்களிலும் தஞ்சமடைய வைத்து தன் வலாபத்தை பெருக்குகிறது. ஆரோக்கியமான உணவு பழக்கத்தை தகர்த்து உடனடி, பாக்கெட் உணவுகளை பரவலாக்கி தன் வணிகத்தை எதிர்ப்பின்றி சந்தைப்படுத்தியுள்ளது. (இளநீரைக்கூட பாக்கெட்டில் அடைத்து விற்கத் தொடங்கியது என்பது சமீபத்திய உதாரணம்.)
மக்களின் அழகியல் உணர்வைத் தூண்டி, பயன்படுத்தி, பாரம்பரிய மஞ்சள் மற்றும் அரைத்த மாவுகளை ஓரங்கட்டி பேசியல் கிரீம், பவுடர், போப் என வகைவகையான வேதிப்பொருட்களை நிலைநிறுத்தி தன் லாபத்தை பெருக்குகிறது முதலாளித்துவம். பேசியல், பிளீச்சிங் என பியூட்டி பார்லர் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தி தன் வணிகம் குன்றாமல் பார்த்துக் கொள்கிறது முதலாளித்துவம்.
உணவே மருந்தாய் கொண்ட மக்களின் ஆரோக்கியத்தை கெடுத்து மருந்தையே உணவாய் கொள்ளும் நிலைக்கு ஆளாக்கி அதிலும் தன் வணிகத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. உணவுப் பழக்கத்தை மாற்றி, சுற்றுச் சூழலை சீரழித்து பலவித நோய்களை ஏற்பட காரணமாய் அமைந்ததோடு அதன் விளைவாக மருத்துவத்திலும் தன் லாபத்தை பெருக்கி கொழுத்துள்ளது முதலாளித்துவம். உடல் ஆரோக்கியத்துக்கு நவீன மருத்துவம் ஒரு வரப்பிரசாதம் என்று நம்பவம் வைத்துள்ளதே முதலாளித்துவம் பண்பாட்டுத் தளத்தில் பெற்ற வெற்றி.
மக்களின் உறவுநிலைகளைக்கூட உணர்வு நிலையிலிருந்து விலக்கி பணத்தின் அடிப்படையில் தீர்மானிக்க பழக்கப்படுத்துகிறது முதலாளித்துவம். தான் கட்டமைக்கும் வாழ்க்கைமுறை மூலம், சக மனிதன் மீதான உறவு மட்டுமல்லாமல், குடும்பத்திற்குள்ளும்கூட பணமே உறவை, அன்பை அளக்கும் அளவுகோலாக மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவின் அடையாளங்களே பெருகிவரும் முதியோர் இல்லங்கள், சொத்துச் சண்டைகள், சமூக விரோதச் செயல்பாடுகள்.
மக்களின் கல்வி உரிமையைக்கூட கட்டணத்திற்கேற்ப வழங்குகிறது முதலாளித்துவம். கட்டணம் அதிகம் செலுத்துவோருக்கு கன்வெண்ட் பள்ளிப் படிப்பு முதல், கட்டணம் செலுத்த இயலாதோர்க்கு அரசுப்பள்ளிப் படிப்பு ஈறாக  பல்வகையாகத் தரம் பிரித்து (பணத்தின் அடிப்படையில்) வழங்குகிறது முதலாளித்துவம். தன் செயல்பாட்டிற்கேற்பவே பாடத்திட்டமும், ஆங்கிலக் கல்வியும் மற்றனைத்தும். ஏட்டுப் படிப்பும் (முதலாளித்துவத்தின்) வாழ்க்கைக்கு உதவுகிறது.
மக்களின் வழிபாட்டு முறைகளையும்கூட முதலாளித்துவம் தனக்கேற்றவாறு மாற்றி அமைத்துள்ளது. நாட்டார் தெய்வங்களை புறக்கணித்து பெருந்தெய்வ வழிபாட்டினை முன்னிறுத்துகிறது. கோயில்களை சுற்றுலாத் தளங்களாக, வணிகவளாகங்களாக மாற்றி வருகின்றது. கடவுளைக்கூட டிக்கெட் போட்டு திரைப்படம்போலக் காட்டி வருகிறது. கடவுளை தனது ஏஜண்டாக்கி கடவுளின் பெயரைப் பயன்படுத்தி (Brand Name) கல்லா கட்டத் துவங்கியுள்ளது. அக்ஷ்ய திருதியை, பிரதோஷம், யாத்திரை, காணிக்கை, மாலையிடல்… என வகைவகையாக தன் வணிகத்தைப் பெருக்குகிறது. உள்ளூர் சாமிகளைவிட வெளியிட சாமிகளை விளம்பரப்படுத்துகிறது. அற்புதங்களை பரப்பிவிட்டு அதிலும் காசு பார்க்கிறது. பச்சை சேலை, அம்மன் தாலி அறுந்தது என புரளிகள் கிளப்பியும்கூட பணத்தைப் புரள வைத்துக் கொள்கிறது.
யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதனை காசு வாங்கிக்கொண்டு கொடுக்கும் முதலாளித்துவம் மனிதனின் சகல வாழ்க்கைக் கூறுகளிலும் நுகர்வியத்தைத் திணித்து தன் லாபத்தை தொடர்ந்து பெருக்கிக் கொண்டே வளர்கிறது. தன் இருப்பில், இயக்கத்தில் பணத்தை மட்டுமே பிரதானமாய்க் கொண்ட முதலாளித்துவம் விஸ்வரூபம் எடுத்து ஏகாதிபத்தியமாய்த் திரண்டு உலகத்தைத் தன் காலடியில் வைத்துக் கொள்ள விழைகிறது.
இதனை மக்கள் தாமே விரும்பி அங்கீகரித்திட அனைத்து பண்பாட்டுக் கூறுகளையும் தன் வளர்ச்சிக்காக மாற்றியமைத்துக் கொண்டுள்ளது. அதில் பெரிதும் வெற்றியடைந்தும் உள்ளது. அதனைத் தகர்த்து முதலாளித்துவத்தின் கோர முகத்தை, அதன் அடிப்படையான உழைப்பு-சுரண்டல் தன்மையை, அம்பலப்படுத்துதலின் முதல்படியாய பண்பாட்டுக் கூறுகளை மார்க்ஸிய சிந்தனையில் நாம் உணர்ந்து கொள்வது பிறருக்கு உணர்த்துவதும் இன்றைய தேவையாக உள்ளது.
தொடர்ந்து விவாதிப்போம்… …
தோழமையுடன்
        விஜி

Monday, September 14, 2015

‘படைப்பரங்கமும் கலந்துரையாடலும்’

2015 செப்டம்பர் 19 – சனிக்கிழமை
மாலை சரியாக 6 மணி
மதி இல்லம்மாடியில்

படைப்ரங்க ஒருங்கிணைப்பு
தோழர் மாணிக்

கலந்துரையாடல் ஒருங்கிணைப்பு
தோழர் வருண்

கலந்துரையாடலுக்கான விவாத முன்வைப்புகள்

வரலாற்றியல் நோக்கில்… (பொதுப்புத்தியில் பதிந்த) மதமும் கடவுளும்
தோழர் சுப்புராயுலு

பெரியாரியல் நோக்கில்
தோழர் கேகே

அம்பேத்காரிய நோக்கில்
தோழர் ரமேஷ்

மார்க்சிய நோக்கில்
தோழர் மதிகண்ணன்

அனைவரையும் வரவேற்கும்
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
9443184050 & 9442184060