Monday, January 6, 2020

ஓட்டம் - சிறுகதை - சத்யா


1
‘மகனே உனது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. நீ ஆசைப்பட்ட வண்ணமேற்றப்பட்ட பம்பரங்கள் உனக்குக் கிடைக்கக்கடவது. கண்களைத் திறக்க முடியாத மாபெரும் வெளிச்சத்துக்கு அப்பாலிருந்து குரல் மட்டும் கேட்டது. குரலுக்கான உருவம் எதுவும் தென்படவில்லை. வெளிச்சத்தால் கூசும் கண்களை மூடிக்கொண்டு கைகளைக் குவித்து குரல் வந்த திசையை நோக்கி மண்டியிட்டு வணங்கினான். மனதுக்குள் மகிழ்ச்சியாய் இருக்க சிரித்துக்கொண்டான். அவன் சிரிப்பு சுற்றிலும் சத்தமாய்ப் பிரதிபலித்தது. அந்த ஆகப்பெரிய அண்டப்பெருவெளியில் எல்லைகள் தெரியாத எல்லா மூலைகளிலிருந்தும் அவன் சிரிக்கும் சத்தம் கேட்டது. இடப்புறம் கேட்கும்போது இடப்புறமாகவும் வலப்புறம் கேட்கும்போது வலப்புறமாகவும் திரும்பிக்கொண்டிருந்தான். சில சமயங்களில் சத்தம் கேட்ட திசையை நோக்கி ஓட யத்தனித்தபோது உடலை அசைக்க முடியாமல் ஒட்டிக்கொண்டிருந்ததை உணர்ந்தான். சில சமயங்களில் சிரிப்புச்சத்தம் நெருங்கி வருவதாகவும் விலகி ஓடிப்போவதாகவும் மாறி மாறிக் கேட்டது. சிரிப்பு சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி கூச்சல்களாகவும் இனம்புரியாத சத்தங்களாகவும் மாறியது. இப்போது அவனைச்சுற்றி பலர் ஓடும் காலடி சத்தம் கேட்டது. கூச்சல் அதிகரித்தது. கண்ணைத் திறந்து பார்த்தால் அருவமான பல குரல்களும், கூச்சல்களும், காலடிச் சத்தங்களுமாய்க் கேட்டது. கண்ணை மூடும்போது பக்கத்தில் ஓடுவதையும், இவன் கால்களை மிதிப்பதையும் உடலில் மோதுவதையும் உணர முடிந்தது. கூச்சலும் காதுகளுக்கு அருகில் ஒலித்தது. அவ்வப்போது பயந்து கண்களை மூடுவதும் திறப்பதுமாய் இருந்தான். அவ்வாறு ஒருமுறை மூடிக்கொண்டிருக்கும்போது காதுகளைக் கிழிக்கும் கூச்சலுடன் யாரோ நெஞ்சை இடித்தார்கள். அதிரிச்சியில் ஓவென்று அலறியபடி விழித்தான். மடையை உடைத்துக் கிளம்பும் தண்ணீர் போல் கண்களுக்குள் பாய்ந்த வெளிச்சத்துக்கு கண்களை மூடிக்கொண்டு கொஞ்சமாகத் திறந்தபோது கட்டிலில் அமர்ந்திருந்தான்.
அவனுடைய அப்பா ஏதேதோ கூச்சலிட்டுக்கொண்டிருந்தார், எல்லாம் புரிவதற்கு கொஞ்ச நேரம் பிடித்தது. வீட்டிலிருந்த அனைத்தையும் இவனது அப்பாவும் அம்மாவும் வாரிச்சுருட்டிக்கொண்டிருந்தனர். வீட்டிற்கு வெளியில் பலரும் ஓடும் காலடிச்சத்தங்களும் கூச்சல்களும் கேட்டன. இவன் கட்டிலுக்குக் கீழிருந்த பம்பரத்தைத் தேடினான். கட்டையைச் செதுக்கிச் செய்திருந்த பம்பரம். வண்ணங்களற்று மரப்பழுப்பு நிறத்திலிருந்தது இவனுக்கு ஏமாற்றமாய் இருந்தது. பம்பரத்தைத் எடுத்து காற்சட்டைப்பையில் சொருகிக்கொண்டு அப்பாவுடன் ஓடினான். சுற்றிலும் ஒரே கூச்சலும் குழப்பமுமாய் இருந்தது. சிலர் ஓடிக்கொண்டும் சிலர் துரத்திக்கொண்டும் இருந்தனர். சில நேரங்களில் ஓடுபவர்கள் துரத்துபவர்களாகவும் துரத்துபவர்கள் ஓடுபவர்களாகவும் மாறிக்கொண்டிருந்தனர். எங்கே போகிறோம் என்ற சந்தேகம் இவனுக்குள் எழுந்தது. அப்பாவிடம் கேட்டபோது மேல்நோக்கி கையை நீட்டினார். மேல்நோக்கி இவர்கள் ஓடிக்கொண்டிருக்கும்போதே சிலர் கீழ்நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். இவர்களை துரத்துபவர்களைத் திரும்பிப் பார்த்தான். நேற்று இவனுடன் விளையாடும்போது அவர்கள் ஓட, இவன் துரத்தவென்றிருந்தவர்கள் இன்று அவனைத் துரத்திக்கொண்டிருன்தனர். ஆனால் நேற்று போல் சிரித்துக்கொண்டிருக்காமல் இன்று முகத்தினைக் கோரமாக வைத்துக்கொண்டிருந்தது இவனுக்குள் பயத்தினைக் கொடுத்தது. அப்பாவின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு வேகமாக ஓடினான். கொஞ்ச தூரத்தில் எதிர்திசையில் சிலர் ஓடிக்கொண்டிருந்தனர். எதிர்திசையில் ஓடிக்கொண்டிருந்தவர்கள் முகம் கொஞ்சகொஞ்சமாக இவர்களைத் துரத்துபவர்கள் முகமாக மாறிக்கொண்டிருந்தது. எதிர்திசையில் துரத்துபவர்கள் முகம் இவர்களுடன் ஓடிக்கொண்டிருந்தவர்கள் முகமாக மாறிக்கொண்டிருந்தது.
இவனுக்கு ஓடுவதா துரத்துவதா என்று தீர்மானிக்க தெரியவில்லை. துரத்துவதைவிட ஓடுவதே சிறந்ததாக அப்பா சொல்லிக்கொண்டே ஓடினார். ஓடும்போது ஆசுவாசப்படுத்த நின்ற ஓரிடத்தில் அவனது தலையில் இருந்த பட்டு நூலால் நெய்யப்பட்ட கிரீடத்தினை அவசரமாக எடுத்த அப்பா அதனை அவனது உள்ளாடைக்குள் ஒளித்து வைத்தார். அது அவனுக்குப் பிடிக்கவில்லை. தன் எதிர்ப்பை அப்பாவிடம் தெரியப்படுத்தியபோது அவர் இங்கிருப்பவர்கள் கிரீடங்களுக்காக அலைந்து திரிந்து தேடிக்கொண்டிருப்பதாகவும், கிடைக்கும் கிரீடங்களைத் தலையோடு வெட்டிக்கொண்டுபோய் வீட்டின் முகப்பில் வேட்டையாடிய விலங்குகளோடு பாடம் செய்து மாட்டிவிடுவார்கள் என்றும் கூறினார். அதைக்கேட்டதும் இவனுக்கு பயம் வந்து உள்ளாடையிலிருந்து கிரீடத்தை எடுத்து வெளியில் போட யத்தனித்தான். அவசரமாகத்தடுத்த அப்பா போகுமிடத்தில் கிரீடமில்லாத தலையை அலைந்தது திரிந்து தேடிக்கொண்டிருப்பார்கள் என்றும் கிரீடமில்லாத தலைகளை வீட்டின் முகப்பில் பாடம் செய்து வேட்டையாடிய விலங்குகளோடு மாட்டிவிடுவார்கள் என்றும் எச்சரித்தார். அதைக்கேட்டதும் கிரீடத்தை இடுப்புக் கச்சைக்குள் இறுக்கமாகக் கட்டிக்கொண்டான்.
ஓடத்துவங்கியதும் ஓடிக்கொண்டிருந்த பாதையில் ஒரு வண்ணமேற்றப்பட்ட பம்பரம் கிடந்தது. அதைப்பார்த்ததும் இவனுக்கு இவன் கண்ட கனவு நினைவுக்கு வந்தது கேட்டதைக் கொடுத்த முகம் தெரியாத அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அதைக் குனிந்து எடுத்தான். அப்பாவின் கையை மீண்டும் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்தாலும் கையில் எடுத்த பம்பரத்தினை வாஞ்சையோடு பார்த்துக்கொண்டிருந்தான். சிகப்பும் மஞ்சளும் பச்சையும் ஊதாவுமாய்  அழகான வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்த பம்பரம் அவனுக்குள் மகிழ்ச்சியைத் தந்தது. அதன் மீதிருந்த மண்ணையெல்லாம் தன் சட்டையில் துடைத்தான். பின்பு வண்ண பம்பரத்தை வீட்டிலிருந்து கொண்டுவந்த பம்பரம் வைத்திருந்த காற்சட்டைப்பையில் வைக்காமல் இன்னொரு பையில் வைத்தான். வைத்துக்கொண்டு ஓடியவன் தனக்குப் பசிப்பதை அப்பாவிடம் கூறியபடி அவர் முகத்தினைப் பார்த்தான். பிடித்து ஓடி வந்த கை அப்பாவினுடையதாக இருக்கவில்லை. அதிர்ச்சியோடு யாரென்றே தெரியாத அந்த மனிதரைப் பார்த்தான். அவரும் இவனை அதிர்ச்சியோடு பார்த்தது தெரிந்தது. கொஞ்ச நேரம் விலகி நின்றுவிட்டு அப்பாவையும் அம்மாவையும் தேடத் தொடங்கினான். பின்பு தேடிக்கொண்டே ஓடியவன் எவ்வளவு தூரம் ஓடினான் என்று அறியாத அளவுக்கு வெகுதூரம் ஓடியபிறகு திடீரென்று ஓடிய கூட்டமெல்லாம் இரண்டு பக்கமாகப் பிரிந்தது. இவனுக்கு எங்கேபோவது என்று தெரியவில்லை. யாருக்கும் இவனை மதித்து கேட்கவும் நேரமில்லை. வேகமாக ஓடிக்கொண்டிருந்தனர். இவனுக்கு ஒரே அழுகையாக வந்தது. இவனைக் கண்டு பரிதாபப்பட்ட ஒரு கிழவர் இவனிடம் மெதுவாக நீ மேற்கே ஓடுகிறாயா கிழக்கே ஓடுகிறாயா என்று விசாரித்தார். இவனுக்கு பதில் சொல்லத்தெரியவில்லை. தன் காற்சட்டையில் போட்டுக்கொண்ட வண்ணமேற்றப்பட்ட பம்பரத்தை தொட்டுப் பார்த்தபடி அது இருந்த பக்கம் கையை நீட்டினான். அவர் இவன்மீது பரிதாபப்பட்டு கொஞ்சம் ரோட்டிகளைக் கொடுத்தார்.
2
இவனுக்கு மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது. அவள் முனகிக்கொண்டிருந்தாள். அவளது முனகல்கள் இவன் காதுகளுக்கு இனிமையாய் ஒலித்துகொண்டிருந்தன. இவனது வியர்வை அவள் மூக்கில் ஒழுகிக்கொண்டிருந்தது அவள் கண்களைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்தான். அவள் புன்னகைத்தபடி முனகினாள். அவளது உதட்டினை இவன் கடித்த லேசான ரத்த மணம் இவனது நாசிக்குள் நுழைந்தது. கண்களை மூடிக்கொண்டதில் அவளது இதயம் துடித்த சத்தம் இவன் காதுகளுக்குள் கேட்டது. இதயத்துடிப்பும் முனகலும் சேர்ந்து மெல்லிசையைப்போல இவனுக்கு இதமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக முனகலும் இதயத்துடிப்பின் சத்தமும் கூடிக்கொண்டே போனது. முனகல் கொஞ்சம் கொஞ்சமாக ஓலமாக மாறியது, டம் டம்மென்ற சத்தத்துடன் துடித்த இதயம் இவன் காதுகளை கிழிப்பது போலிருந்தது. காதுகளைப் பொத்திக்கொள்ள கைகளைத் தூக்கிக்கொள்ள முயன்றான். தூக்க முடியாமல் கைகள் எங்கேயோ சிக்கிக்கொண்டன. கடினப்பட்டு கைகளைத் தூக்க முயன்றதில் இமைகள் விலகிக்கொண்டன.
அவனால் இன்னும் விலக முடியவில்லை என்றாலும் அவளது ஓலம் இப்போது தெளிவாகக் கேட்டது. அவளது ஓலம் கேட்ட திசையை மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். அவள் கொஞ்ச தூரத்தில் படுத்திருந்தது தெளிவில்லாமல் தெரிந்தது. அவள் மீது யாராரோ படுத்து நகர்ந்துகொண்டிருந்தது தெரிந்தது. ஒவ்வொரு நகரலுக்கும் அவளிடமிருந்து ஓலம் வந்துகொண்டிருந்தது. இவன் காதிலிருந்து ஈரப்பசையுடன் எதோ சிவந்த திரவம் ஒழுகிக்கொண்டிருந்தது தெரிந்தது. இவனது நாசியில் ஊடுருவிய ரத்த மணத்தின் திடம் கூடிக்கொண்டேபோனது. அவளை யாரோ வந்து கொஞ்ச கொஞ்சமாய் இழுத்துக்கொண்டு போனது தெரிந்தது. அவள் கைகளையும் கால்களையும் பிடித்து தூக்கி ஆட்டியபோது அவளது தலைமுடி சாய்ந்து தரையைத் துடைப்பதுபோல் தடவியது. அவளைத் தூக்கி எறிந்தபின் இவனிடம் வந்தவர்கள் இவனையும் அதேபோல் பிடித்து தூக்கி எறிந்தனர். அவன் அவளது உடையற்ற உடல்மீது விழுந்தான். கொஞ்ச நேரத்தில் முனகல்களோடு எழுந்தவன் அவள் கன்னத்தைத் தட்டிப் பார்த்தான். பின்பு அவளைத் தூக்கி தன் தோளில் போட்டுக்கொன்டபடி ஓட ஆரம்பித்தான்.
இப்போதும் அவனோடு ஓடுபவர்களும் துரத்துபவர்களும் இருந்தனர். ஓடுபவர்கள் அவளை நிர்வாணமாக தூக்கிக்கொண்டு ஓடும் இவனை வித்தியாசமாகப் பார்த்தனர். துரத்துபவர்கள் இவனைக் கண்டு ஏளனமாக சிரித்தனர். இவன் முகத்தருகில் அவளது ரத்தம் தோய்ந்த புட்டம் இருக்க கண்ணீருடன் அவ்வப்போது அவளது புட்டத்தில் தலை சாய்த்துக்கொண்டான். ஒடுபவர்களிடம் அவ்வப்போது அவளைப் போர்த்த துணி கேட்டபோதும் யாரும் கொடுக்க முன்வரவில்லை. துரத்துபவர்கள் அவளை இவனிடமிருந்து பறிக்க யத்தனித்ததும் முன்னைவிட வேகமாய் ஓடினான். அவள் இன்னும் விழிக்காதது அவனுக்குக் கவலையை அளித்தது. ஓடுபவர்கள் கூட்டத்திலிருந்து விலகி அருகில் ஓடிய ஆற்றினை நோக்கி ஓடினான்.
கரையில் அமர்ந்தபடி ஒரு கையால் அவளைக் கட்டிக்கொண்டு இன்னொரு கையால் தண்ணீர் அள்ளி அவள் முகத்தில் அடித்தான். கிழிந்திருந்த உதடுகளையும், கீறல்விழுந்து ரத்தம் தோய்ந்திருந்த மார்புகளையும் கழுவினான். அவளிடமிருந்து லேசான முனகல் கேட்டது. அவளின் பெயரைச் சொல்லி அழைத்தபோது அவளது கண்கள் மெல்ல திறந்தது. மகிழ்ச்சியோடு கண்கள் அகல அவளது நெற்றியில் முத்தமிட்டான். திடீரென கோரமான கூச்சலோடு துரத்துபவன் ஒருவன் இவன் முதுகில் ஓங்கி உதைத்தான். ஓவென்று அலறியபடி இவன் அவளுடன் நதியில் விழுந்தான். விழுந்த அதிர்ச்சியில் சில மடக்கு நீர் குடித்தபின் அவளது கையைப் பிடித்தபடி தண்ணீரில் அளைந்து நீந்தினான். நீரின் வேகம் இருவரையும் எங்கோ இழுத்துச் சென்றது. அருகில் வந்த மரக்கட்டையை தாவிப் பிடித்தபோது இவளைக் கைவிட்டிருந்தான். சுற்றிலும் எங்கும் மிதக்கிறாளா என்று பார்த்தபடி கைகளை அலசி அலசி தேடி ஓய்ந்தபின் அவன் அழுத அழுகை நதியோடு கலந்து உப்புச்சப்பின்றி போனது.
3
அவன் மிதந்து மிதந்து போவதுபோன்ற உணர்வில் இருந்தான். அவன் கட்டில் காற்றில் பறக்கின்றதோ என்ற சந்தேகம் கூட அவனுக்குள் எழுந்தது. சுற்றிலும் நான்குபேர் அவனது படுக்கையை தூக்கிக்கொண்டு போனார்கள். மரணத்தின் வாசம் அவன் நாசிகளில் பரவிப் படர்ந்தது போலிருந்தது. அந்த துர்நாற்றம் தாளாமல் தனது கைகளை எடுத்து மூக்கைப் பொத்திக்கொள்ள வேண்டும் போலிருந்தது. ஆனால் அவனது யத்தனிப்பு வெற்றிபெறவில்லை. நடப்பவர்களின் காலடிச் சத்தம் அதிகரித்துக்கொண்டேயிருந்தது இவன் காதுகளுக்குள் இடிப்பதுபோன்ற உணர்வினைத் தந்தது. ஒரு புறம் காதுகளில் ரத்தம் வழிவது போன்ற உணர்வு ஏற்பட்டது. கடின முயற்சியின் விளைவாக கைகளை விடுத்து கால்களை உதறி எழுந்தான். தண்டவாள அதிர்வும் துர்நாற்றமும் இவனைக் கட்டிலிலிருந்து எழுப்பியிருந்தன. இன்னும் செத்துவிடவில்லை என்று பெருமூச்சு விட்டான். அது நிம்மதியும் ஏக்கமும் கலந்த பெருமூச்சு.
கதவுகளன்றி கோணி தொங்கவிடப்பட்ட வாசலிலிருந்து அதிகாரத்தின் அகங்காரம் பொங்கி வழியும் குரல் கேட்டது. வயோதிகத்தால் சுருங்கிய பார்வையை மேலும் சுருக்கி கூன் விழுந்த முதுகை ஊன்றுகோலால் நிமிர்த்தி வெளியே வந்தான். அவனிடன் ஏதேதோ கேட்கப்பட்டது. இவனிடம் அதற்கெல்லாம் பதிலில்லை. வீட்டுக்குள்ளிருந்த புத்தகங்களை அள்ளி எடுத்து அவர்களிடம் நீட்டியபோது அவர்கள் பக்கவாட்டில் தலையை ஆட்டியது இவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவர்கள் இவனை அழைத்து கையை நீட்டிய இடத்தில் பலரும் ஓடிக்கொண்டிருந்தனர். இப்போதும் அவர்களைப் பலர் துரத்திக்கொண்டிருந்தனர். இவன் இயலாமையால் வெடித்த கண்ணீரோடு பக்கவாட்டில் தலையை ஆட்டினான். அதைப்பார்த்ததும் வந்திருந்தவன் கண்களை உருட்டி நாக்கைத் துருத்தி இவனை பயமுறுத்தினான். இன்னொருவன் வெளுத்துத் தொங்கிய இவனது தாடியைப் பிடித்து இழுத்து இவனை வெளியே வீசினான். சாக்கடையில் விழுந்த இவனிடம் ஆட்காட்டி விரலை நீட்டி எச்சரித்துவிட்டு வெளியேறினர்.
இவன் சாக்கடையிலிருந்து கோபமாக எழுந்தான். வீட்டுக்குள்ளிருந்த புத்தகங்களை அள்ளி எடுத்து சாக்கடையில் எறிந்தான். வீட்டுக்குள்ளிருந்த துணிகளையும் பெட்டியையும் தூக்க முடியாமல் தூக்கி வெளியே எறிந்தான். ஏதேதோ சாபமிட்டபடி பண்டங்களையும் பாத்திரங்களையும் விட்டெறிந்தான். கட்டக்கடைசியாய் இருட்டில் ஏதோ தட்டுப்பட்டது. அதைத் தூக்கி வந்து சுருங்கிய கண்களால் வெளிச்சத்தில் இருத்திப் பார்த்தான். அதை நெஞ்சோடு அணைத்தபடி குலுங்கிக்குலுங்கி அழுதான். பக்கத்து வீட்டிலிருந்து வந்த குழந்தை பரிதாபமான கண்களோடு இவனைப் பார்த்தது. நெஞ்சிலிருந்து எடுத்து அந்தக் குழந்தையின் கையில் திணித்துவிட்டு வேகமாக வீட்டுக்குள் போய் மறைந்துபோனான். குழந்தை புன்னகையுடன் ஏந்திப்பார்த்தது. வண்ணமேற்றப்பட்ட பம்பரத்தினை.
(2020யின் முதல் ஞாயிறு ஜனவரி ஐந்தாம் நாள் மாவிபகவின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற சிறுகதை)

No comments:

Post a Comment