Monday, January 20, 2020

வரம் - கவிதை - சத்யா

அழுக்கேறிய வெள்ளை சும்மாடில்
ஊஞ்சலாடும் கருவேல விறகுகளாய்
வெளுத்துத் தொங்கும்
மீசையோடு போட்டிபோடும் தள்ளாட்டத்துடன்
நீண்ட இரக்கமற்ற பாதையில்
செருப்பு தாண்டி மண்ணோடு உரசிய கால்களோடு
நடந்துகொண்டிருந்தான்

கால்களிரண்டும்
மழை பார்த்து ஏங்கி
இதயம் உடைந்து
பொத்துப் பிளந்த
அவன் நிலம் போல பிளந்து கிடந்தன

மூனாம் மகள் உக்காந்து
ரெண்டு வருஷம் ஆவதையும்
ரெண்டாம் மருமகன்
காலுடைஞ்சும் கள்ளுக் குடிப்பதையும்
பெருமூச்சால் பொசுக்கப் பார்த்தான்

நாலாம் பிரசவத்தில்
பிள்ளையோடு மரித்த தாயின் சாபம்
மகளுக்கும் பலித்துத் தொலைக்குமோவென்று
மூத்தவளோடு சுமக்கத்தொடங்கிய பாரத்தினை
இன்னும் பட்டுப்போகாமல்
சுமைதாங்கி கல் பிடித்துக் கிடைக்கும்
பனை மரத்தின் வேரோடு
குத்தி நிறுத்தினான்

வருத்தமாக
ஏக்கமாக
அசூயையாக
காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி பெற்ற
வார்த்தைகளை யாரிடமோ சொல்வதுபோல் சொன்னான் 
'மவராசி போய் சேந்துட்டா'

கன்னத்தைக் கூட நனைக்காமல்
கண்ணுச் சுருக்கத்தில்
காணாமல்போன ஈரத்தை
துண்டாகிப்போன சும்மாட்டில் துடைத்தான்

பதியம் போட்ட தக்காளிக்கு
எலி பங்காளியானதறியாமல்
வஞ்சனத்தை மனதுக்குள் வதக்கியபடி
சும்மாட்டில் விறகை ஏற்ற எத்தனித்தான்

நெஞ்சில் சுருக்கென்று
பட்டுத்தெறித்து முதுகெலாம் ஓடி படர்ந்து
இறுக்கிக்கொண்ட வலியில்

மவராசியையும்
மகள்களையும்
பேரன்களையும்
உதவிக்கழைத்து
பராசக்தியை மொத்தமாய் மறந்து
நரைகூடிக் கிழப்பருவமெய்தி கொடுங்கூற்றுக்கிரையென மாய்ந்தான்
காணி நிலம் வரமாய்ப் பெற்ற ஏதோவொரு பாரதி

No comments:

Post a Comment