Saturday, November 8, 2014

கலந்துரையாடல் - கடிதம் 1 - பாவபுண்ணியம் – மதிகண்ணன்

          அன்புத் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் வணக்கம்.


          வெறிநாயாய் விரட்டும் வாழ்க்கையின் ஒட்டத்தில் நாம் சந்திக்கின்ற நேரமும் கால இடைவெளியும் குறைந்து வருகின்றன. ஆனால் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் முயற்சி குறையவில்லை.

          இதனைத் தொடரும் கடிதத்தில் ஒரு கலந்துரையாடலுக்கான தொடக்கப்புள்ளியைத் தொட்டிருக்கிறேன். இது போன்ற உரையாடல்களைத் தொடர நினைக்கின்றேன். தாங்களும் அதுபோல் நினைத்தால், எழுத்தில் எதிர்வினையாற்றுங்கள்.


          மானுட விடுதலைப் பண்பாட்டுக் கழகத்தின் தோழர்களுடன் கடிதங்கள் வாயிலாக நிகழ்த்தப்பட்ட உரையாடல் இப்போது பொதுவெளியில் அனைவருக்குமான கலந்துரையாடலாக மாற்றப்படுகிறது.

          தங்கள் எதிர்வினையும் உரையாடலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் எனில் நிச்சயமாக வலைவேற்றப்படும். தொடக்கப் புள்ளியாகவும், தொடர்புப் புள்ளியாகவும் மட்டுமே இங்கு நான். தொடருங்கள். இதற்கான எதிர்வினையுடன், தங்கள் வினையையும் ஆற்றுங்கள்.


பாவ புண்ணியம்கடிதம் 1

அன்புத் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் வணக்கம்.
இறைமறுப்பாளர்கள் அல்லது இறைமறுப்பு உள்ளடக்கத் தத்துவத்தைப் பின்பற்றுகிறவர்கள் அனைவருமே பாவபுண்ணியம் பற்றிக் கவலைப்படாதவர்கள். அதனால் அவர்கள் பாவிகள்இதுதான் இறைநம்பிக்கையாளர்களின் பொதுக்கருத்தாக / நம்பிக்கையாக என்றென்றைக்கும் இருந்து வருகிறது. இங்கே இறைநம்பிக்கை, இறைமறுப்பு என்பதெல்லாம் ஒரு அடையாளத்திற்காகத்தான்.

வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால்கருத்துமுதல்வாதிகள் பாவபுண்ணியத்தை நம்புகிறார்கள் என்பதால் பாவம் செய்ய மாட்டார்கள். செய்யக்கூடாது. பொருள்முதல்வாதிகள் சமூக மாற்றத்திற்கான முக்கியக் காரணியாக அடிக்கட்டுமானத்தை நம்புவதால் அவர்கள் பொருளியல் குற்றங்களில் ஈடுபடமாட்டார்கள். ஈடுபடக்கூடாது. பொதுக்கருத்தாக சிலகால முன்புவரை ஓங்கி வளர்ந்து நிமிர்ந்து நின்று கொண்டிருந்த இந்த நம்பிக்கை, சமீபகாலத்தில் நொறுங்கி விழுந்து கொண்டிருகிறது என்கிற புரிதலோடு இக்கடிதத்தைத் தொடங்குகிறேன்.

இதுபோன்றபொதுக்கருத்துகளை உருவாக்கும் கருத்துருவாக்க சக்திகளாக யார் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

இப்படியான பொதுக்கருத்துக்களை அவர்கள் எப்படி உருவாக்கிப் பரப்புகிறார்கள்?

வரலாறு என்பதே வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான்என்றார் கார்ல் மார்க்ஸ். ஆனால், நாம் வரலாறு என்ற பெயரில் வர்க்கப் போராட்டங்களின் வரலாற்றை பாடத்திட்டங்களுக்குள் படித்திருக்கிறோமா? இல்லை. பாவம், புண்ணியம் என்பது வர்க்கம் சார்ந்த விஷயமாக இல்லை என்றாலும், ஆளும் / அதிகார வர்க்கத்தின் (தனிமனிதர்களின்) புண்ணியங்களும், ஆளப்படுகின்ற  / அடிமை வர்க்கத்தின் (தனிமனிதர்களின்) பாவங்களும் இணைந்ததாக வரலாறு எழுதப்பட்டது. இன்றுவரை எழுதப்படுகின்றது.

வரலாற்று ஆசிரியர்களை (நல்லவிதமாக) கவனித்தவர்கள் வரலாற்றின் பக்கங்களில் (நல்லவிதமாகக்) கவனிக்கப்பட்டார்கள். வரலாற்றாசிரியர்களைப் புறக்கணித்த மற்றவர்கள் வரலாற்றின் வரிகளில் வார்த்தைகளுமின்றி புறக்கணிக்கப்பட்டார்கள்என்ற உண்மை நீண்ட நெடுங்காலமாக இருளில் கிடந்தது. இன்று ஒருசிலர் அவ்வுண்மையை வெளிச்சத்துக்கு இழுத்துவர மூச்சிரைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளும் / அதிகார வர்க்கத்தின் தனிமனிதர்கள் என்று வரும்போது எப்படி அவர்களை அண்டிப் பிழைப்போரும் அதற்குள் அடக்கமோ, அதன்படியே ஆளப்படுகின்ற / அடிமை வர்க்கத்தின் தனிமனிதர்கள் என்று வரும்போது அவர்களின் விடுதலைக்காக நிற்பவர்களும் அதற்குள் அடக்கம். அடிமை வர்க்கத்திற்காக நின்றவர்களை அதிகார வர்க்கப் பிரதிநிதிகளான வரலாற்றாசிரியர்கள் முடிந்தவரை புறக்கணிப்பதும், புறக்கணிக்க வாய்ப்பற்ற சூழலில் வரலாறெழுதுதல் என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி வார்த்தைகளால் இடக்கரடக்கல் செய்வதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இச்சூழலினை ஒரு பெருந்தளத்தில் மனதில் கொள்வோம்.

இருபத்தோறாம் நூற்றாண்டின் நவீன விஷவிருட்சம் என சமீபத்தில் அடையாளம் காணப்பட்டநித்திய ஆனந்தா’. நித்திய ஆனந்தாவின் அந்த(ரங்க) விவகாரத்திற்குள் நான் போகவில்லை. அந்த(ரங்க) விவகாரம் தொடர்பான ஆராய்ச்சி இந்த இடத்தில் வேண்டாம். நித்திய ஆனந்தா தன் பக்தர்களுக்கான விளக்கமாக / விளம்பரமாக தன் நிறுவனம்பற்றிக் கூறுகையில் அகவாழ்வினைப்பற்றி மட்டுமல்லாமல் புறவாழ்வினைப்பற்றியும் பேசுகிறார். ‘அகவாழ்வில் புத்தராகவும், புறவாழ்வில் பில்கேட்சாகவும் உருவாக என் பக்தர்களுக்கு என்னுடைய நிறுவனம் உதவும்என்கிறார். ‘முப்பதே நாட்களில் பரவசத்தின் உச்சம்புத்தகம் கிடைக்காத சூழ்நிலையில் உச்சத்தின் பரவசத்தை 30 நாட்களில் அடையத் துடிக்கும் மேல்நடுத்தர வர்க்கத்தை அவரது நிறுவன விளக்கம் / விளம்பரம் ஈர்ப்பது ஒன்றும் ஆச்சர்யப்படுத்தும், அதிர்ச்சியான விஷயம் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று மேல்நடுத்தர வர்க்கத்திற்கு சர்வதேசியச் சுரண்டல் நாயகன் பில்கேட்சும், வளரும் மேல்நடுத்தர வர்க்கத்திற்கு இந்தியதேசியச் சுரண்டல் சகோதரர்களான அம்பானிகளும், நடுத்தர வர்க்கத்திற்குச் சில தமிழ்த்தேசிய சுரண்டல் பெருமுதலாளிகளும், கீழ்நடுத்தர வர்க்கத்திற்குச் சில உள்ளூர் சுரண்டல் நாயகர்களும், முகம் தெரியாவிட்டாலும்கூட முன்மாதிரிகளாக (ROLE MODELSஆக) இருப்பதை நாம் பார்க்கிறோம். இப்படியான முன்மாதிரிகளை தானே தனக்கென வரித்துக் கொண்டவர்களுக்கு நிம்மதி தரும் இடமாக நித்திய ஆனந்தம் தரும் இடமாக நித்திய ஆனந்தாவின் நிறுவனம் தன்னை நிறுத்திக் கொள்ள முயற்சி செய்தது. தொழில் நுட்பத்தால் பின்னப்பட்ட சதிவலையில் மாட்டிக் கொள்ளாதவரை அவரது புகைப்படத்தை அரசு ஆசிரியப் பயிற்சி நிறுவனத்திலும் பார்த்திருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அறிவொளி இயக்க காலத்தில் அறிவொளி இயக்கத்தின் துணைத்திட்ட அலுவலராகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஒன்றில் உறுப்பினராகவும் இருந்த ஒரு நண்பர். தற்போது உயிருடன் இல்லாத அவரின் பெயர் இப்போது வேண்டாம். (இறந்தவர்களைப் பற்றி நல்லதையே பேச வேண்டும் என்று எனக்கு சின்ன வயது முதலே உரைஇலக்கணம் ஒன்றைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த உரைஇலக்கணத்தை தமிழகத்தில் பெரியாருக்கும், சர்வதேசிய அளவில் ஸ்டாலினுக்கும் பொருத்திப் பார்க்க சொல்லிக் கொடுத்தவர்கள் ஏனோ ஆயத்தமாக இல்லை) நம்முடைய வழக்கமான விளையாட்டானநான் யார்?’ விளையாட்டில் வரும் கேள்விகளில் ஒன்றானஉன்னுடைய இலட்சியம் என்ன? என்ற கேள்விக்குதொழிலதிபராகி நிறைய தான தர்மங்கள் செய்ய வேண்டும்என்று பதில் சொன்னார். இந்த மனோநிலை கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக உள்ள, முந்தைய தலைமுறையின் கல்விக்கான களப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்கு எப்படி வந்தது. அதனால்தான் தோழராக நிற்க முடியாமல் அவர் நண்பராகிப் போனார். அவருக்கும் உள்ளூர் பெருமுதலாளி ஒருவர் முன்மாதிரியாக இருந்தார் என்பதை நினைவுகூர்வோம்.

இந்த முன்மாதிரிச் சுரண்டல் நாயகர்களின் சுரண்டல் பாவம் இல்லையா?’ எனக் கேள்வி எழுந்தால்அது வணிக உத்திஎன்ற பதிலுடன்அந்தப் புண்ணியவாளன் எத்தனை குடும்பங்களைக் காப்பாற்றுகிறார் தெரியுமா?’ என்ற கேள்வி துணைப்பதிலாக நம்மை நோக்கி எறியப்படுகிறது. நாமும் அந்தப் பதில்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் எறியப்பட்டதைக் கவ்விக்கொண்டு திரும்பிவிடுகிறோம். ‘அந்தப் புண்ணியவாளன்களின் மூலதனத்தால் எத்தனை குடும்பங்கள் வாழ்கிறது என்ற சிந்தனையே தவறு. எத்தனை குடும்பத்தினரின் உழைப்பைச் சுரண்டி அந்தப்பாவியின் மூலதனம் வளர்கிறது தெரியுமா?’ என நாம் திருப்பிக்கேட்டால்சொந்தத் தாயைப் பழித்தவனையும் மன்னிக்கக்கூடியசுரண்டல் நாயகர்களை முன்மாதிரிகளாகக் கொண்ட இந்தக் கும்பல்நம்மை மன்னிக்காது. இதனை நாம் ஒவ்வொருவரும் சந்தித்த பலரின் செயல்பாடுகள் நமக்கு உணர்த்தியிருக்கின்றன.

இவர்களின் இப்படியான செயல்பாட்டிற்கான உளவியல் காரணம் என்ன?

பாவபுண்ணிய நம்பிக்கைகள் உண்மையில் கடவுளுடன் / மதத்துடன் தொடர்புடையது. ஆனால் பாவபுண்ணியச் செயல்பாடுகள் கடவுளுடனும் மதத்துடனும் தொடர்பற்று இருக்கின்றன. பொருளாதார அதிகாரத்துடன் தொடர்புடையதாக முதலாளித்துவ சமூகம் பாவபுண்ணியத்தை வரையறை செய்துள்ளது. இந்தியா போன்ற புனித பூமியில்(?) நிலவிவரும் ஒழுக்கம் தொடர்பான சொற்களான பாவம், புண்ணியம், தீட்டு, புனிதம் போன்ற சொற்களை நாம் எப்படி உள்வாங்கிக் கொள்வது? அச்சொற்களை எப்படிக் கடப்பது? கடக்கத்தான் வேண்டுமா? அல்லது அச்சொற்களுக்கு பாட்டாளி வர்க்கப் பார்வையுடன், சுரண்டலுடன் தொடர்புடையதாக மறுவரையறை தரவேண்டுமா? பண்பாடு இவற்றுடன் நெருக்கமான தொடர்புடையது என்று உறைந்துபோன புனிதம், புண்ணியம் போன்ற சொல்லாடல்களில் / இடங்களில் நம்முடைய நிலைப்பாடு என்னவாக இருக்கலாம்? இருக்க வேண்டும்?

இப்படியான நிறையக் கேள்விகளுடன் இக்கடிதத்தை தற்காலிகமாக முடிக்கிறேன்.

இக்கடிதம் தொடர்பான தங்கள் வினைஅறிந்து தொடர்வோம்.

என்றென்றும் அன்பு

மதிகண்ணன்

No comments:

Post a Comment