Monday, November 10, 2014

கலந்துரையாடல் – கடிதம் 4 - தோழர் மதியின் பாவ புண்ணியம் கடிதத்தைத் தொடர்ந்து … சுப்புராயுலு

அன்புத் தோழமைக்கு

வணக்கத்துடன் சுப்புராயுலு

இறைமறுப்பு, இறைநம்பிக்கை என்ற எதிர்வுகள் நம் வரலாற்றில் தொடர்ந்து வருவதான இருவேறு போக்குகள் இதுவரையிலும் இருந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதிகாரம் செலுத்தும் ஆட்சியாளர்கள், அதிகாரத்திற்குட்பட்டவர்களை இத்தகைய எதிர்வுகளை விதைத்து அவர்களின் சம்மதத்தோடு ஆட்சியில் நிரந்தரமாக நீடிப்பதற்கான ஒரு உத்தியாக இதைப் பயன்படுத்துகிறார்கள். இதைத் தங்களிடம் உள்ள கருத்தியல் சாதனங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து உருவாக்கிக் கொண்டும், வளர்த்துக் கொண்டுமிருக்கிறார்கள்.

வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் ஊடேதான் தொடர்ந்திருக்கிறது என்று மார்க்ஸ் கூறியிருக்கிறார். ஆனால் நமக்கு கற்பிக்கப்பட்ட வரலாறு என்பது திட்டமிட்டே, உண்மைகளை
மறைத்து கற்பிக்கப்பட்ட வரலாறு. ஆளும் வர்க்கத்திற்கு சாதகமான வரலாறு. ஆளுபவர்கள் புண்ணியம் செய்தவர்கள். ஆளப்படுபவர்கள் பாவம் செய்தவர்கள் என்ற இத்தகைய கருத்தியல்கள் நமது நாட்டில் பண்டைக்ககால வேதங்களிலிருந்து பகவத் கீதைவரை உண்டு. இவற்றின் வழியாக இத்தகைய கற்பிதங்களையே வரலாறு என்று நமக்குப் புகட்டினார்கள். அதே கருத்தியல்கள் இன்று காலத்திற்கேற்றவாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு, ஆன்மீக ஆசிரமங்கள் வழியாக விதைக்கப்படுகிறது. அறிவியலை ஆதாரமாகக் கொண்ட புதிய ஆன்மீகத் தத்துவங்கள் என்ற பேரில் அறிவுசார் கருத்து முதல்வாத அடையாளத்துடன் அமைப்பு ரீதியில் அரவிந்தர் ஆசிரமம், வேதாந்திரி மகரிஷி நிறுவனம் போன்ற நிறுவனங்கள் மேல்மத்தியதர வர்க்கத்தார், இடைமத்தியதர வர்க்கத்தாரின் மனநிலைகளை தமக்குச் சாதகமாக வடிவமைத்து உண்மை நிலைகளுக்கு எதிராக நிறுத்துகிறார்கள். பிராமணியம் காலந்தோறும் தன்னை உருமாற்றிக் கொள்ளும் செயல்பாட்டின் உதாரணமாகத்தான் இதை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

அறிவொளி இயக்க காலத்தில் அறிவொளி இயக்கத்தின் துணைத்திட்ட அலுவலர், கட்சியின் உறுப்பினர், தோழர் என்ற நிலையிலிருந்து நண்பராகிப் போனதற்கான அவருடைய செயல்பாடு, முதலாளித்துவத்தை எதிர் கொண்டு சமூகமாற்றத்திற்கான போரில் ஈடுபடும் தோழர்களுக்கு சரியான தத்துவார்த்த நிலைப்பாடும், அரசியல் வியூகமும் பண்பாட்டுச் செயல்பாடுகளில் சரியான புரிதலையும் அவருக்குப் புகட்டாத அவர் சார்ந்த கட்சியின் செயல்பாடே. முதலாளித்துவத்தின் சிதைவுகளின் வழியே தடம் மாறிச் செல்லும் ஒன்றாகத்தான் அதைப்பார்க்க முடிகிறது. இங்கே இருக்கின்ற பொதுவுடமைக்கட்சிகள் இன்றைய நிலையில் அரசியல் அதிகாரம் என்ற ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டதின் நிலையாகவும் இதைப் பார்க்கலாம். தடம் புரண்ட தொடர்வண்டிகளாய் முடங்கிப் போய் வழியை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

பாவபுண்ணிய நம்பிக்கைகள் கடவுளுடனும் மதத்துடனும் தொடர்புடையது. ஆனால் முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக தனக்கேற்றவகையில் அவற்றை வரையறை செய்திருக்கிறது. பாவம் புண்ணியம் போன்ற சொற்களை நாம் உள்வாங்கி அச்சொற்களைக் கடக்க வேண்டும். மறுவரையறை செய்ய வேண்டுமென்றால் தத்துவம், அரசியல், பண்பாடு போன்ற களங்களில் நாம் சரியான தெளிவுடன் நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கும். அதையொட்டி சரியான செயல்பாட்டிற்குரிய வேலைத்திட்டத்தை நாம் உருவாக்குவதற்கான முயற்சியில் தொடரவேண்டும். இந்த வழிகளில் நாம் செயல்படுவது மிகவும் எளிதானதல்ல. ஆனால் அடுத்துவரும் தலைமுறைகளுக்காகவும், அவர்களுக்கு நல்ல ஒரு சூழலை உருவாக்குவதற்காகவும் இதை நாம் செய்தே ஆக வேண்டும்.

என்றென்றும் அன்பு


சுப்புராயுலு

No comments:

Post a Comment