Saturday, November 8, 2014

கலந்துரையாடல் – கடிதம் 2 - தோழர் மதியின் பாவ புண்ணியம் கடிதத்தைத் தொடர்ந்து … கேகே


அன்புத் தோழமைக்கு அன்புடன் கேகே

சில முக்கியமான விஷயங்களை நினைவூட்டுவதாக / கவனமூட்டுவதாக அமைந்தது தோழர் மதிகண்ணனின் கடிதம். இக்கடிதம் அக்கடிதத்திற்கு நேரடியாய் தொடர்பற்றதாய் இருக்கலாம். ஆனாலும் ஒரு கிளையில் சந்திக்கும் என நம்புகிறேன்.

1980-கள் வரைக்குமான பகுத்தறிவு (முற்போக்கு) என்பது (பொதுப்புத்தியினடிப்படையில்) கிளிஜோஸ்யக்காரனை கடுமையாகச் சாடுவது என்ற அளவில் மட்டுமே நின்றுவிடும். உலகளாவிய கண்ணோட்டத்துடன் பரந்த அளவிலான கல்வியறிவு பெற்று வளர்ந்த, சென்ற தலைமுறையினர் (குறிப்பாக 60-களுக்குப்பிறகு) நாகரீகம் பெற்றவர்களாகத் தங்களைக் கருதியதுடன், முற்போக்காக சிந்திப்பவர்கள், செயல்படுபவர்கள் என்றும்கூட நினைத்து வந்தார்கள். மதமாச்சர்யங்களை எதிர்த்தல்; சடங்குகளைப் புறக்கணித்தல்; நாகரீகமாக நடந்து கொள்ளுதல் என்கிற இவர்களது முற்போக்கு முலாம் என்பது மேற்சொன்னபடி கிளிஜோஸ்யக்காரனைத் திட்டுவது,
மரத்தடியில் ரெண்டு ரூபாய்க்கு குறி சொல்பவனை மோசக்காரனாகக் காட்டுவது, சாமக் கோடாங்கி ஜக்கம்மாவை விரட்டுவது என்பதாக மட்டுமே இருந்தது எனக்கருதுகிறேன்.

இப்போது அநேகமாக யாரும் கிளிஜோஸ்யம் (விளையாட்டுக்காகத் தவிர) பார்ப்பதில்லை. ஃபார்மெட் ஜாதகம் பார்க்கிறார்கள். சோழி போட்டுப் பார்க்காவிட்டாலும் நியூமெராலஜி பார்க்கிறார்கள். ஜக்கம்மா வாக்கு கேட்காவிட்டாலும் வாஸ்து பார்க்கிறார்கள். இதெல்லாம் கவனிக்கும்போது எனக்கொன்று புலனாகிறது. வாழ்க்கையோடு, வாழ்வின் நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்திருந்த சடங்குகளும், குலக்குறியீடுகளும் (rituals and tatooism) முற்றிலும் வணிகமயமாகிப் போனதுதான் காரணமோ?

நியூமெராலஜி, வாஸ்து உட்பட அனைத்து நவீன சடங்குகளும் நவீன முறையில், வடிவத்தில் உருவாக்கப்பட்டவை. இன்னும் சொல்லப்போனால் இவை வெறும் சடங்கு / சம்பிரதாயம் என்றுகூட நம்மால் உணரமுடியாத அளவிற்கு நாகரீக முலாம் பூசப்பட்டுவிட்டன. இவை முற்றிலும் வாழ்விற்கு அந்நியமாயிருந்து வாழ்வை நடத்துகின்றன.

கார்ப்பரேட் சாமியார்கள் குறித்து என்றைக்குமே நம்மால் சந்தேகம் கிளப்பமுடியாது. நம் சந்தேகத்தையும் சாதகமாக மாற்றிவிடக் கூடிய சாமார்த்தியம் படைத்தவர்கள் அவர்கள். நித்யானந்தா மீதான (பாலியல்) குற்றச்சாட்டு ஓஷோவிடம் எடுபட்டிருக்குமா என்பது கேள்விக்குறி. சில வருடங்கள் கழித்து நித்யானந்தாவே இது குறித்து பிரசங்கம் பண்ணக்கூடும். (தலையணை சைஸில் கோர்ஸ் புத்தகம்கூட வரலாம். Quotes on spiritual sex என்பதாக இருக்கலாம்)

இந்த கார்ப்பரேட் சாமியார்கள், ‘வாழ்க்கையை வாழ்வது எப்படி?’ என்று வகுப்பெடுக்கிறார்கள். இந்த வகுப்புகளுக்கு இவர்கள் வைக்கும் தலைப்பு மிக வேடிக்கையானது. “வாழும் கலை” “கதவைத்திற காற்று வரட்டும்” (இது சு.ரா.வின் கவிதைத் தலைப்பு என்று நினைவு) “செருப்பைக் கழட்டும் முன் காலைக் கழட்டுஎன்கிற ரீதியில் போகிறது. இந்தக் கார்ப்பரேட் சாமிகள் தட்சணைத் தட்டு எதுவும் வைத்திருப்பதில்லை. தோழர் முனியசாமி சொன்னதுபோல பேங்க் அக்கௌண்ட் நம்பர் இருக்கிறது. கட்டணம் செலுத்தியே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம் தனது தாராளமான ஐந்து இலக்க சம்பளத்தை, இல்லாத இந்தத் தட்டுகளில் போடத் தயங்குவதில்லை. இந்தியா முழுதும் பரவிக்கிடக்கும் கார்ப்பரேட் சாமிகளின் கிளைகளையும் சொத்துக்களையும் நினைத்துப் பார்த்ததால் பாவமாவது; புண்ணியமாவது. ‘Robert Frost’ன் ‘Materialistic Universe’ என்ற கவிதை வரிதான் நினைவுக்கு வருகிறது.

பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்” – குறள்
குறிப்பு :  பாரம்பரியமிக்க மடங்களும் மடாதிபதிகளும், ஆதினங்களும் இவர்கள் முன் ஒன்றுமில்லாமல் போகிறார்களோ?

எட்டி நின்றால் எவரெஸ்ட்
தம்பி நீதான் அடுத்த CM” (இதை எழுதிய உதயமூர்த்தி கவுன்சிலர் எலக்ஷனில் தோற்றார்)
You Can Win” (இதை எழுதிய ஷிங்கெரோ ஒரு தேர்தலில் படுதோல்வியடைந்தார்)
இந்தா பிடி, எவரெஸ்ட்டுக்கு ஏணிப்படி
உனது முன்னேற்றத்திற்கு நீயேதான் தடைஇந்த வரிசையில்
நீங்களும் அம்பானியாகலாம்

எப்போதுமே, இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு Role Models அவசியம். வரலாற்று நாயகர்களோ, தேசத் தலைவர்களோ, சமூகப் போராளிகளோ, அறிஞர்களோ, சாதித்தவர்களோ, ஏன் கற்பனைக் கதாபாத்திரங்களும்கூட இத்தகைய Role Model-களாக இருப்பது இயல்பு. கடந்த இருபது ஆண்டுகளாக இளைஞர்களின் Role Model-களாக இருப்பவர்கள் பலரும்சந்தைச் சாதணையாளர்களாக இருப்பது யோசிக்க வேண்டிய விஷயமாயிருக்கிறது. பில்கேட்ஸ், ராக்பெல்லர், நாராயணமூர்த்தி, டாடா-பிர்லா, அம்பானி என இன்னும். இதில் டாடா-பிர்லா பற்றி குக்கிராமங்களில்கூட சொலவடைகள் புழக்கத்தில் உள்ளன. “ஆமா இவரு பெரிய டாடா-பிர்லா” “டாடா-பிர்லான்னு நெனப்பு, கூலிங்கிளால் போட்டிருக்காருஎன நீளும் சொலவடைகள் இந்த Role Model-களின் செல்வாக்கை உணர்த்தும்.

தொடர்ந்து இந்த Gadget Guru-களை Role Model-களாக வைத்திருப்பதில் ஊடகங்கள் தீவிரமாய் இருக்கின்றன. Infosys-ல் பணிபுரியும் நண்பனொருவன் சாதாரணமாகச் சொன்னான்எங்க கம்பெனி ஒன் இயர் பட்ஜெட், தமிழ்நாட்டு பட்ஜெட்டவிட அதிகம்என. ”எங்க கம்பெனி…” எனச்சொல்லும்போது அவன் அந்த வார்த்தைகளுக்கு அழுத்தம் சேர்த்தபோது அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. இப்பொழுது ஒரு நாட்டின் பட்ஜெட்டை விட அதிகமான பட்ஜெட் போடும் ஒரு MNC யில் இருக்கிறான். நாட்டை ஆளத்தகுதி படைத்தவர் CEO நாராயண மூர்த்தி எனக் கூறிய அவன், இப்பொழுது உலகை ஆளத்தகுதி படைத்தவர் CEO பில்கேட்ஸும் பால்ஆலனும்தான் எனக் கூறுவதற்கும் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறான்.

பண்பாட்டு மார்க்சியம்பேசக்கூடியவர்கள் நிறைய மாறியிருக்கிறோம். வறட்டுத்தனமான பகுத்தறிவிலிருந்து (தோழர் மதியின் வார்த்தைகளில் பகுத்தறிவின் வன்முறை) விலகி, வாழ்வை (மார்க்சிய) அழகியலோடு உற்று நோக்குகிறோம்.

வாழ்க்கையை முற்றிலும் அகவயத்தில் வடிவமைத்துக் கொடுக்கப்பட்ட விளையாட்டுப் பொருளாக காட்டமுயலும் கார்ப்பரேட் சாமியார்களிடமும்; ஒவ்வொரு தலையையும் நுகர்வோனாகவும்; உயிரையும், உணர்வையும் பண்டங்களாகவும் மாற்றி, வியாபாரம் செய்துகொண்டிருக்கும் CEO-களிடமும் எதிர்ப்பேதுமில்லாமல் தலையைக் கொடுக்கும் சகலரையும் பார்த்தால் வருத்தம்தான் வருகிறது.

பண்பாடு தொடர்பான ஆழமான விவாதங்களை கருத்தியல் மட்டத்தில் எடுத்துச் செல்வது, தீவிரமான களச்செயல்பாடு இரண்டுமே இன்றைய காலக்கட்டத்தின் உடனடித்தேவை எனக்கருதுகிறேன். காத்திரமான ஒருசில பேருங்கூட கவனம் சிதறிப்போவதுதான் என் வருத்தம். மார்க்சியத்தின் மீதான நம்பிக்கையும், மார்க்சியம் தரும் நம்பிக்கையுமே வாழ்வை பிடிப்புள்ளதாக, அர்த்தமுள்ளதாக ஆக்குவதாக உணர்கிறேன் ஆழமாக.

தோழமையுடன்
கேகே

No comments:

Post a Comment