Friday, October 24, 2014

காத்திரமான விஷயங்களைப் பொழுதுபோக்காக மாற்றிவிடுகின்ற உத்தி - கத்தி - மதிகண்ணன்

          வழக்கமான விஜய் brand மசாலாவில் எப்படி சமூக நலச் சாம்பார் வைப்பது என்ற முயற்சியில் தீட்டப்பட்ட கத்தி கொஞ்சம் பதமாகத்தான் இருக்கிறது. கைப்பிடி துருப்பிடித்திருக்கிறது என்பதால் கத்தியைத் தொடும் நமது கையும் பத்திரமாகத் தப்பிக்க வேண்டும். தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட தமிழ் சினிமாவிற்குப் பழக்கப்படுத்தப்பட்ட நாம் கதிரேசனின் கதைக்குள் ரொம்பவும் நுழையக்கூடாது. திருடிவிட்டுக் கல்கத்தா சிறையிலடைக்கப்பட்டு அங்கிருந்து தப்பி வரும் தில்லாலங்கடி கதிரேசனின் மனமாற்றம் ஒத்துக்கொள்ளும் விதமாக பக்குவமாக சொல்லப்பட்டுள்ளது.
          ஒரு குருவி சாப்பிடக்கூட நெல்விளையாத கிராமம்தான் ‘தன்னூத்து’ என்று அறிமுகப்படுத்தப்படும் கிராமத்தின் விவசாய நிலத்தை காப்பாற்றப் போராடும் ‘ஹைட்ராலஸி’ படித்த ஜீவா. ஜீவாவிற்கு ஜீவாவை காணொளி மூலமாக அறிமுகப்படுத்தும் அறிமுகப் படலத்திலேயே ‘பக்கத்தில இருக்கிற 200 கிராமங்கள கார்ப்பரேட் கம்பெனி கபளீகரம் பன்னீருச்சு’ன்னு கார்ப்பரேட்டுக்கு எதிரான அல்லது அரசு வார்த்தைகளில் ‘வளர்ச்சிக்கு எதிரான’ வார்த்தைகளை விதைக்கிறார். இந்த ஜீவாவின்
வார்த்தைகளில் முன்வைக்கப்பட்டதை விட கதிரேசன் ஜீவாவின் இறுதிக்கட்ட வசனங்களில் (அசுர) வளர்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விஷயங்கள் அதிகம். ஆனால் அவற்றைச் சரிசெய்வதற்காக அவர்கள் செய்யும் முயற்சி என்பது அரசு இயந்திரத்தைப் பற்றிய சரியான புதிதலின்மையைக் காட்டுகிறது. இந்த அளவிற்கு மனிதாபிமானம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் அரசு (அசுர) வளர்ச்சிக்கு எதிராக தன்னை நிலை நிறுத்தும். இப்படியெல்லாம் கண்டதையும் சொல்லி படத்தின் மீது நம்பிக்கையின்மையை விதைக்கக் கூடாது. பன்னாட்டுக் கம்பெனிக்கு எதிராகப் போராடுகின்ற ‘ஜீவா’விற்கு அரிமாசங்கம் 4லட்சம் ரூபாய் கொடுக்கிறதா படத்துல வர்றத சகிச்சிக்கிற மாதிரி இதைச் சகிச்சுக்க முடியாதா என்ன? அந்த 4 லட்சமும் அரிமா சங்கத்தின் ஏழைகளின் காசு இல்லையாம். தன்னூத்து கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து கொடுத்ததாம். அதை ஏம்ப்பா அரிமா சங்கத்துல கொடுத்தாங்க? கண்டபடி கேள்வி கேட்கப்படாதுங்கிறத அடிக்கடி நியாபகப்படுத்த வேண்டியிருக்கு.
          பேசாப் பொருளைப் பேசத் துணிந்தமைக்கு பாராட்டத்தான் வேண்டும். விவசாயத்திற்கு ஆதரவாக என்பதை விட விளைநிலத்திற்காகக் குரல் கொடுப்பது என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான குரலாக எழுப்புவதில் தொடங்கப்பட வேண்டிய ஒன்று என்பதை படம் தெளிவாகச் சொல்கிறது. அழுத்தமாகச் சொன்னால் படம் விஜய் படமாக இருக்காது. நிறைய பன்னாட்டு நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி அவை விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் எதிரானவை என்று படம் பேசுகிறது. தைரியமான முயற்சி என்பதைவிட தன்னை பெரிதும் பாதிக்காதபடி நிறுவனங்களின் பெயர்களையும் அவைபற்றிய விஷயங்களையும் தேர்ந்தெடுத்தது என்பது பாதுகாப்பான முயற்சி. அதையும் செய்யாதவர்கள் மத்தியில் இதைச் செய்ததாகப் பாராட்டலாம் என்றால், காத்திரமான விஷயங்களைப் பொழுதுபோக்காக மாற்றிவிடுகின்ற உத்திக்கு முன்னோட்டமாக இத்திரைப்படம் அமைந்துவிடுமோ என்ற பயம் தவிர்க்க முடியாததாகிறது.

          படம் நிறைய எதிர்ப்புகளுக்குப் பின்னர் வெளியாவது என்பது அந்தப் படத்தை சமூக அக்கறையுள்ள படமாக காட்வதற்கான விளம்பர உத்தியின் ஒரு பகுதியாக இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம். வெகுஜன பத்திரிகை / தொலைக்காட்சி பாணியில் கடைசி வாக்கிய விமர்சனங்கள் சொல்வதென்றால் ‘புத்தியை அடகு வைக்காமல் - அவசியம் பார்க்க வேண்டிய படம்’

No comments:

Post a Comment