Friday, November 14, 2014

கலந்துரையாடல் – கடிதம் 7 - கந்தகப் பூக்கள் ஸ்ரீபதி

அன்புத் தோழமைக்கு ஸ்ரீபதி
சிறுவயது முதலே ஒவ்வொன்றை பற்றிய வினாக்கள் நம்முள் எழும்பிக் கொண்டே இருக்கின்றன. அனைத்திற்குமான விடைகள் கிடைப்பதில்லை. இருந்தபோதும் அந்த வினாக்கள் நம்மை விடாது துரத்திக் கொண்டே இருக்கின்றன. அவற்றைப் பற்றி அறிவதையும், தெரிவதையும், புரிவதையும் தேடித்தேடி மனது ஓடிக் கொண்டே இருக்கிறது.
விடைகளைக் காண முயலும் வேட்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களைத்தான் நம்ப வேண்டியுள்ளது. அவர்களது அறிவுக்கும் அனுபவத்திற்கும் தக்கன நமக்கு விடைகள் கிடைக்கின்றன. இந்த விடைகள் எல்லாம் சரியானவைதானா? என்ற தெளிவை பல்வேறு மனிதர்கள் தரும் விடைகள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் மனது ஏற்றுக் கொள்ளுகிறது.
ஒரு கட்டத்திற்குப் பிறகு நமது வாசிப்பு விசாலப்படும்போது நாம்
கண்டறிந்த விடைகளின் மீது மிகப் பெரிய கேள்விகள் மீண்டும் நம்முள் எழுகின்றன. நம்முள் உருவாக்கப்பட்ட சித்திரங்கள் எல்லாம் உடைகின்றன. உண்மை தன்னை வெளிப்படுத்தி நம்மை ஆச்சரியப்படுத்துவதுடன் நமது சிந்தனையையும் மாற்றி அமைக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் உண்மையை பற்றி அக்கறைப் படுவதில்லை.
குழந்தைகளின் கேள்விகளுக்கெல்லாம் நம்மால் விஞ்ஞானப் பூர்வமாக பதில் அளித்து விட முடிவதில்லை. சொன்னாலும் அதை புரியும் அறிவோ அனுபவமோ குழந்தைக்கு இருக்காது என்பதால் ஏதோ ஒன்றை சொல்லி அந்த கேள்வியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவே முயற்சிக்கிறோம்.
அதுபோலத்தான் இந்த உலகிலோ நமது வாழ்க்கையிலோ சில விசயங்கள் நடக்கும்போது தர்க்கரீதியாக அதன் காரணத்தை நாம் கண்டுணர முடியா தருணங்களில்தான் பாரம்பரியமாக நம்மிடையே புழங்கும் பல நம்பிக்கைகள் நமது அறிவை வென்று நம்முள் ஆழங்கால் பதிக்கின்றன
அத்தகைய நம்பிக்கைகளில் ஒன்றுதான் பாவபுண்ணியம் என்பதும்  
மேலும் பல கெட்ட விசயங்களில் மனிதன் உடுபடாமல் தடுக்கும் கருவியாகவும் இதுபோன்ற நம்பிக்கைகள் கதைகள் வடிவத்த்தில் புழக்கத்தில் இருந்தன  குழந்தைகளுக்கான கதைகளில் பெரும்பாலானவை இத்தகைய நம்பிக்கைகளை அடிநாதமாக கொண்டு இயங்கின. இன்றோ கூட்டு குடும்ப சூழல் நொறுங்கி, டிவியின் இராட்சத கரங்களில் நமது குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் ஏற்பட்ட இழப்புகளில் இதுவும் ஒன்று. சற்றே சிந்தித்துப் பார்த்தால் ஒரு மனிதனை நல்லவனாக உருவாக்கும் முயற்சியில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த நம்பிக்கை சார்ந்த கதைகளை தொகுப்பதும் நாம் அடுத்த தலைமுறைக்கு செய்ய வேண்டிய வேலைகளில் முக்கியமான ஒன்றாக உள்ளது.
புள்ளைகளுக்கு புண்ணியத்தைச் சேக்கலைனாலும் பாவத்தச் சேக்கக் கூடாது…” என்று ஒருதலைமுறைக்கு முன்னால்வரை மக்களிடையே புழக்கத்தில் இருந்தது. நாம பாவம் செஞ்சா அது வம்சத்தை பாதிக்கும்என்றும் மக்கள் பயந்து பிறருக்கு தீங்கு செய்ய பயந்த காலம் என்று ஒன்று இருந்தது. இதற்குள் உடல் ரீதியாக மன ரீதியாக பண ரீதியாக என அனைத்துச் செயல்பாடுகளும் அடங்கும். நம்பிக்கைத் துரோகம், துரோகம், விசுவாசம் என பல விசயங்கள் இதற்குள் கட்டுப்பட்டு கிடந்தன. எத்தனைதான் அடிமையாக இருந்தாலும் எஜமானனையோ அரசனையோ அதிகாரியையோ எதிர்த்து சிந்திப்பது தவறு என நிறுத்தி வைத்திருந்தது. இது ஆளும் வர்க்கத்தின் மூலமே வளர்த்தெடுக்கப்பட்டு மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டிருந்தது.
தனது நிலையிலிருந்து அடுத்த உயர்ந்த நிலைக்கு வளர்வதையோ, உயர்ந்த நிலையில் இருப்பவரின் வாழ்க்கைத் தரத்தைப்பற்றி ஏக்கப்படுவதையோ, பொறாமை படுவதையோ, அந்த நிலையை நம்மால் அடைய முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுவதையோ, அதற்கான முயற்சி செய்வதையோ என பல செயல்பாடுகளை தடுத்து வைக்க இந்த பாவபுண்ணியம் உதவியது. ஆகவே பரம்பரை அடிமைகளாய் வாழ்வதையும் உருவாவதையும் சரியெனக் கூறி இந்த சமூகத்தை ஆண்டான் அடிமையாக நிறுத்தி வைக்க உதவியது. மதரீதியாக இந்த வலை பின்னப்பட்டு மிக சாமர்த்தியமாக வரலாற்றில் வலம்வந்து கொண்டிருந்தது.
பண்ணையடிமைகள் தொழில்புரட்சியின் போது தொழிலாளர்களாக மாற்றம் பெற்றபோதும் சில முன்னேற்றங்களை அடைந்த போதும் இவர்களுக்கு புதிதாக கிட்டிய கல்வி, தொழிலாளர் வாழ்க்கை சூழல் ஆகியவை ஒரு படி மட்டுமே மேலே ஏற அனுமதி அளித்தது. அடிமைகளுக்கு அந்த வளர்ச்சியே மிகப் பெரிய வெற்றியாக தெரியத் தொடங்கின. அவர்களது முந்தைய தலைமுறையை விட சில வளர்ச்சிகள் வசதிகள் கிடைத்ததில் பெருமிதம் கொள்ளத் தொடங்கினார். அதற்கு அடுத்த படிக்கு செல்ல விடாமல் பாவபுண்ணியம் என்ற தடைகள் அவர்களை நிறுத்தி வைத்தது. விசுவாசம் என்ற பெயரில் முடங்கச் செய்தது.
உலகமயமாக்கல் காலமான இப்போது சுதந்திர தொழிலாளியாக வளர்ச்சி பெற்று தனது கைக்குள் எல்லாம் வந்துவிட்டதாக கருத வைத்துவிட்டன. அவனது உழைப்பிற்கு அவனே ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள முடிகிறது. பரம்பரை தொழில் செய்யவேண்டிய கட்டாயத்திலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. உழைப்பை அவனே வரையறை செய்துகொள்ள முடிகிறது. யாரும் கட்டாயப்படுத்தி யாரையும் அடிமை கொள்ள முடிவதில்லை. ஆனாலும் விண்ணை முட்டும் விலைவாசி சுதந்திர தொழிலாளியையும் வாழ்க்கை சிக்கலில் அடிமைப்படுத்திவிடுகிறது.
இந்தச் சூழலில் பாவபுண்ணியம் என்பது மக்களிடையே எப்படி இயங்குகிறது?
இன்றைக்கு பாவம் செய்யாதவர்களே பாவிகளாகவும்; பாவம் செய்பவர்களே புண்ணியவான்களாகவும் மாறிவிட்டனர். ஏச்சிப்பிழைக்கத் தெரிந்தவனே திறமையானவனாகவும், ஏச்சிப் பிழைத்ததில் கொஞ்சம் எடுத்து செலவு செய்தால் புண்ணியவானாகவும் மக்கள் மத்தியில் நினைக்கப்படுகிறான். இன்றைய கோட்பாடே என்ன செய்தாவது எப்படியாவது முன்னேறு என்பதாகிவிட்டது.
ஆயிரம் பேரை ஏமாற்றி ஒரு பத்து பேருக்கு உதவி செய்து புண்ணியம் தேடிக் கொள் என்ற புதிய நடைமுறை உலவத் தொடங்கியுள்ளது. இந்த விஞ்ஞான உலகம் பல வசதிகளை மனிதனுக்கு பழக்கிவிட்டது. இப்போதெல்லாம் ஒரு சாண் வயிற்றுக்காக உழைப்பதை விட மற்ற விசயங்களுக்காகத்தான் மனிதன் மெனக்கெடுகிறான். ஓடுகிறான். சுயமுன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும்போது தனது பாதத்தின் அடியில் சிக்கியவர்களை கவனிக்கத் தவறுகிறான். அதுபோலவே இவன் தலையும் யாரோ சிலரின் பாதங்களுக்கு அடியில் சிக்கியதையும் கவனிக்கத் தவறுகிறான். கழுத்து நசுங்கி உயிர்போகும்போதும் காரணம் புரிவதில்லை. பாரதி கூறியதுபோல் காரணம் இதுவெனும் அறிவுமிலார் என்பதில் மாற்றம் ஏதும் இல்லை.
நல்லவனாக இருப்பது புண்ணியம் என்றும் கெட்டவனாக வாழ்வது பாவம் என்றும் இயங்கி வந்த சமூகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து நல்லவனாக இருப்பதே பாவம் (வாழத்தெரியாதவன்) என்றும் கெட்டவனாக இருந்தாலும் வெளிக்காட்டுதலில் நல்லவனாக நடிப்பது புண்ணியம் (திறமைசாலி) என்றும் மாறிவிட்டது.
எனக்கு தெரிந்த ஒரு ஆளும் கட்சியின் தொண்டர் ஒருவரின் கூற்று, “அந்தக் காலத்துல நாங்க எட்டணா, ஒரு ரூபா கொடுத்து வளத்த கட்சி இன்னைக்கி கோடிகோடியா ஊழல் செய்யுதுனாஅதுக்கும் ஒரு திறமை வேணும்ல. எல்லாராலையும் முடியுமா?” என்று ஆச்சரியப்பட்டு தொடர்ந்து அந்த கட்சியிலேயே பெருமிதத்தோடு இருக்கிறார். அதற்கே தொடர்ந்து வாக்கும் அளிக்கிறார்.
தவறு செய்யத் தெரிந்தவனே வாழத் தகுதியானவன்; அதையே பிரம்மாண்டமாக மாட்டிக் கொள்ளாமல் செய்பவன் ஆளத் தகுதியானவன்; அப்படியே மாட்டினாலும் அதையும் அரசியல்படுத்தத் தெரிந்தவன் தலைவன் என புதிய நீதி உருவாகியுள்ளது.
இன்றைய பாவ புண்ணியம் என்ற வார்த்தைகள் இவர்களைதான் வளைக்கிறது. இவர்களுக்காக வளைகிறது. இவர்களிடமிருந்தே பணம்பறிக்கிறது. இவர்கள் பொதுவாக நடுத்தர வர்க்கத்திலிருந்து மேல்தட்டுவரை பல அளவுகளில் உலவுகிறார்கள்.
வயிற்றுக்காக மட்டும் ஓடுபவர்களை இந்த பாவபுண்ணிய கணக்கு எதுவும் செய்வதில்லை. ஏனெனில் அவர்களிடம் இந்த கணக்கை கூறி எதையும் பறித்துவிட முடியாது.
பாவபுண்ணியத்தை பயன்படுத்துபவர்கள் யார்?
உடல் உழைப்பில்லாமல் வாஸ்து, ஜோதிடம், ஆன்மீகம் போன்ற விசயங்களை காசாக்கி கொண்டு வாழும் நபர்கள் மட்டுமே மேற்கூறிய அளவுகளில் உள்ளவர்களிடம் பாவபுண்ணியங்களை கூறி காசாக்கி வாழ்கிறார்கள்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பிச்சையெடுக்கும் (ஏமாற்றி வாழும்) பெருமாளிடம் புடுங்கித்திண்ணும் அனுமார்களே பயன்படுத்துகிறார்கள். உழைக்காமல் வந்து சேரும் பணம் தன்னை ஏதாவது செய்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர்களும் அதில் கொஞ்சத்தை எடுத்து தங்களது பாவச் செயலை உடுகட்டிவிட துணிகிறார்கள். அவர்களது அச்சத்தை லாபமாக்கிக் கொள்ளும் கூட்டமே இன்றும் பாவபுண்ணியத்தை உயிரோடு வைத்திருக்கிறது.
ஒரு சிறிய கதை (உண்மைக்கதையும் கூட)
ஒரு பெண் அரசு பள்ளியில் தலைமையாசிரியை. நல்ல சம்பளம் பெற்று வாழ்ந்தவள். ஒரு மிகப் பெரிய பள்ளியையே கட்டியாண்டவள். அவளுக்கு ஒரே மகன். சென்னையில் அவனுக்கு வேலை. அவளது கணவன் இறந்துவிட்டான். அவனுக்கு திருமணம் செய்து வைத்தாள். மருமகளும் வேலைக்கு செல்பவள். தனக்கு மகள் இல்லையே என்பதால் தனது மருமகளையே மகளாக பாவித்தாள். தன்னை ஒரு மாதிரி மாமியார்என்று கூறி பெருமைபட்டுக் கொண்டாள். தனது ஊரிலிருந்து விடுமுறைக்கு சென்னைக்கு தானாகவே காரை ஓட்டிச் சென்று மகன் மருமகள் பேரனையும் சந்தித்து சந்தோசமாக வாழ்ந்தாள். ஒவ்வொரு முறை மருமகளை பார்க்கும்போதும் நகை நட்டு பட்டு என்று வாங்கிச் செல்வாள். மகனிடமிருந்து ஒரு பைசாவையும் அவள் எதிர்பார்த்தது கிடையாது. அவளது வருமானத்தின் பெரும்பங்கையும் அவர்களுக்கே செலவழித்து திருப்தி அடைந்தாள்.
மகன் சென்னையில் சொந்தமாக ஒரு வீடு கட்டத் தொடங்கினான். மகனும் மருமகளும் வேலைக்குச் செல்வதால் வீடு கட்டும் பணியை கவனிக்க விஆர்எஸ் வாங்கிக் கொண்டு சென்னை சென்றாள் அந்த பெண். வீடு கட்டி முடியும் வரை மருமகள் அவளை நன்றாக கவனித்தாள். புதுமனை புகுவிழா நடந்த பின் மருமகள் வேலைக்குச் செல்லும்போது சமையலறை கதவை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு வேலைக்கு செல்லத் தொடங்கினாள். இதைபற்றி மகனிடம் சொல்லி பிரச்சனை செய்யக் கூடாது என எண்ணி காரை எடுத்துக் கொண்டு தினமும் மதிய உணவை ஹோட்டலில் வைத்துக் கொண்டாள்.
ஒருநாள் இந்த பிரச்சனை மகனின் கவனத்திற்கு வந்துவிட பிரச்சனை அரங்கிற்கு வந்தது. மருமகள் ஒரே வார்த்தையில் மாமியார் தன்னுடன் இருப்பது பிடிக்கவில்லை என்றும் இங்கே இருக்க கூடாது என்றும் கூறிவிட்டாள். காரணம் தெரியவில்லை. இப்போது அந்த மாமியார் சொந்த ஊரில் பங்களா இருந்தும் முதியோர் இல்லத்திற்கு சென்று விட்டாள்.
அவளுக்குள் எழுகின்ற கேள்விகள் நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் மருமகளுக்கு பிடிக்கவில்லை? நான் அவர்களிடமிருந்து அன்பை தவிர பணத்தையோ வேறு எதையோ எதிர்பார்க்கவில்லையே? என்னை ஏன் ஒதுக்குகிறாள்?
இதுபோன்ற காரணமற்ற செயல்களுக்கு அவள் கொண்ட பதில், ‘நான் எந்த சென்மத்துல என்ன பாவம் செய்தேனோ? இப்ப என்ன அலைக்கழிக்கிறதுஎன்று முதியோர் இல்லத்தில் வாழ்க்கையை தொடர்கிறாள். தனது இறப்பிற்கு பின் அந்த முதியோர் இல்லமே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் தனது சொத்துக்கள் அனைத்தும் அந்த முதியோர் இல்லத்திற்கே சேரும் என்றும் உயில் எழுதி வைத்துவிட்டு காலம் தள்ளுகிறாள்.
நிறைவாக
ஒரு கட்டம் வரை மனிதனுக்கு பணம் பிரச்சனையாக உள்ளது. பணம் பிரச்சனையாக உள்ளவனிடம் இந்த பாவ புண்ணியங்கள் எதுவும் செய்ய இயலாமல் போகிறது. அல்லது அவன் பாவ புண்ணியம் என்பதை தாண்டி இந்த சமூகத்திற்கு தீங்கிழைக்க அடிமையாக்கப் படுகிறான்.
வயிற்றுப் பிரச்சனை இல்லாதவர்களிடமே இந்த பாவ புண்ணியம் புழங்குகிறது. உடலுழைப்பு இல்லாதவர்களே இதை பயன்படுத்துபவர்கள்.
சுய முன்னேற்றம் என்ற அடிப்படையில் இயங்குபவர்களை ஒட்டுமொத்த சமூக முன்னேற்றம் குறித்து சிந்திக்க வைக்கும்போதே, இந்த சமூகம் மேன்மையடையும்போதே இதுபோன்ற போலிகள் தானே காணாமல் போகும். எனவே பாவ புண்ணியம் குறித்து அக்கறைப்படுவதோ கவலைப்படுவதோ புதிய வரையறை தேட முயல்வதோ சமூக மாற்றத்திற்கான பயணத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வேலை. நமது சமூக மாற்றம் குறித்தான பயணம் சரியாக இருக்கும்பட்சத்தில் அந்த பாதையில் அனைவரையும் ஒன்றுசேர்க்கும் முயற்சியில் விரைவாக செயல்படும்பட்சத்தில் இதுகுறித்த புதிய வரையறைகள் அநாவசியமே.
தெரியாமல் குழிக்குள் விழுபவர்களை காப்பாற்ற முயற்சிக்கலாம்; தெரிந்தே விழுபவர்களை?
கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி

No comments:

Post a Comment