Monday, August 8, 2011

மூக்கில் வியர்த்த வல்லூறுகளும் பனித்திவலைகள் ஏந்திய துருவப்பறவைகளும் – சுப்புராயுலு


ஆண்டுதோறும் துருவப்பறவைகள்
பனிபடர்ந்த ஈரத்தை
தங்கள் கால்களிலும்
அலகில் பனித்திவலைகளையும் ஏந்தி
புவிப்பரப்பின் எல்லைகள் கடந்து
விசாக்களின்றி வான் வழி பயணித்து
நம் நதிக்கரையோரங்களிலும்
வாயகன்ற ஏரிகளின் உயர்ந்த விடுதிகளிலும்
அலைகள் மோதித் தெறிக்கும்
கடலின் கரைகளிலும்
தரையிறங்குகின்றன.

கிராமத் தெருக்களில் தாயின்
சிறகணைப்பில் மேயும் கோழிக்குஞ்சுகளை
பாய்ந்து கவர்வதற்கு தருணம் பார்த்திருக்கும்
கருடன்கள் மேற்கின் வல்லூறுகளை
நம்நாட்டிற்கு வர அழைப்பு விடுத்தன.
அவைகள் தம் சிறகுகளில் ஏந்திவந்த
நச்சு விதைகளை நம் நிலங்களில்
தூவி விதைத்தன.

அது முளைவிட்டு வளர்ந்து நம்
நிலங்களின் செழுமையைச் சிதைத்து
கருவறையின் மறுஉயிர்ப்பு ஆற்றலை
தம் வேர்களில் உறிஞ்சிக் கொண்டது.

கிராமங்கள்தோறும்
நம் மரபின் அடையாளங்களை அழித்த
யந்திரக்கலப்பைகள் நம் நிலங்களை
உழத் தொடங்கின போதெல்லாம்
ஒவ்வொரு சாலிலும் புதைந்திருந்த
நம் முன்னோர்கள்
திடீரென்று சீறியெழுந்து
மேற்கு நோக்கி கைநீட்டி
உரத்த குரல்களில் சாபமிடுகின்றனர்.

நாம் கனவுகளில் நச்சுமரங்கள் இல்லா
நம் ஆதிநிலத்தை மீட்பதற்கு
முயன்று போராடிக் கொண்டிருக்கிறோம்
சாத்தியங்களின் போதாமைகளோடு.

பசியின் வெறி கண்களில் தெறிக்க
இரைக்காய் பாயும் புலியும்
பயமும், மிரட்சியும் கொண்டு
உயிர்க்காய் ஓடும் மானும்
இயற்கை வரையறுத்த உயிர்ச்
சங்கிலியின் அரூப வரிவடிவங்கள்.

வல்லூறுகள் தம் சிறகுகளின்
நிழல்பட்ட நிலங்களையெல்லாம்
பாலையாக்கிய கொடூரத்தை
மறைப்பதற்கு இக்கதையாடலை
உலகெங்கும் உரத்துச் சொல்லி
நியாயப்படுத்துகின்றன.

துருவத்தின் தூதுவர்களே…
எம் நிலத்திலிருந்து உங்கள் தாயகம் நோக்கிச்
செல்கையில் உங்கள் சிறார்களுக்கு
பரிசளிக்க எம்மிடம்
எதுவுமே இல்லை கபடத்தையும்
கயமையையும் தவிர.

நீங்கள் உங்கள் பயணப் பாதை முழுவதும்
இசைத்துச் செல்லும் விடுதலை கீதத்தின்
ஆரோகன, அவரோகன ஸ்வரங்கள்
எங்கள் மனக்காயங்களுக்கு மருந்திட்டபடி
என்றும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

(2011 ஆகஸ்ட் 7ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக‘வின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment