Monday, August 8, 2011

நடுகல் – கருப்பு


உயிரனைய மண்ணைத்
தொலைத்த புற்கள்
வெட்டி எறியப்படுகின்றன
நான்கு வழிச்சாலையில்.

தூளியில் உறங்கும்
குழந்தையை
சுவற்றில் மோதிக் கொல்வதைப் போல
பயிர்களை அழிக்கின்றன
கரன்ஸிவாசம் பிடித்த கைகள்.
முதன்முறையாக ஒரு உவமை
துன்புறுகிறது…

மத்திமமான இடம்
பேருந்து வசதி
குழந்தைகள் விளையாட பார்க்
பத்திரச் செலவு இலவசம்
நடுகற்களை கூவி
விற்கிறாள் சின்னத்திரை யுவதி.

வீரத்தை பறைசாற்ற
நடப்பட்டவை
இன்று ரியல் எஸ்டேட்களின்
பிளாட்டுகளுக்கு
காவல் தெய்வங்களாய்

ஓய்ந்த கலவரத்திற்குப் பின்
காட்சியுறும் வெளியென
மனம் விக்கித்துத் திரிகிறது
தனக்கான நடுகல்லைத் தேடி…

(2011 ஆகஸ்ட் 7ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக‘வின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment