Monday, August 8, 2011

தனிமையெனும் சாபம் - அருணோதயம்


நாலைந்து பிள்ளைகளிருந்தும்
ஏழெட்டுப் பேரன் பேத்திகளிருந்தும்
தனிமையின் கைகளில்
ஒப்படைத்துவிட்டார்கள் பாட்டியை.

மூப்பும் நோயும்
அழுத்தமாய் ஆணியறைய
கட்டில் சிலுவையில்
அரை உயிராய்க் கிடந்தாள்.

சம்பிரதாய நலம் விசாரிப்பாய்
எவரேனும் வந்தால்
சிக்கிக் கொள்வார்கள்
ஒண்டிக்கட்டையாய்
பிள்ளைகளை வளர்த்த
இவள் கதையில்.

சொல்லொனாத் துயரோடும், வலியோடும்
தனிமைக்குத் துணையிருந்தவள்
ஓர்நாள்
தனிமையைத் தனிமையாக்கி
மரித்துப் போனாள்.

சீவன் போவதற்குள்
அவள் பார்க்கத் துடித்தவர்களெல்லாம்
ஏதேதோ கதைகள் பேசியபடி
வந்து கொண்டிருக்கிறார்கள்
அவள் பாடைக்குப் பின்னால்.

(2011 ஆகஸ்ட் 7ஆம் நாள் நடைபெற்ற மாவிபக‘வின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment