Wednesday, August 17, 2011

கவிதைகள் – கேகே


வெவ்வேறு காலங்களில்
(நம்) உடைகள்
வெவ்வேறாய் இருக்கின்றன.
விருப்பத்தின் நியதியா?
கிடைப்பருமையா?
மாற்றமா? வளர்ச்சியா?
கவிஞர் விக்ரமாதித்யனும்
தோழர் மதியும்
நிறையச் சொல்லியிருக்கிறார்கள்
உடுத்துவது பற்றி; வெளுத்துப் போகும் நிறம் பற்றி.

இப்போதெல்லாம்
உடுப்புகள் ஆயத்தமாயுள்ளன
தேர்வது அவரவர் தோதுப்படி.
சிலபோது தேர்ந்தெடுத்துத்
தைத்துக் கொள்கிறோம்.
உடுப்பிற்கேற்ப உறுப்புகளை
நெளித்தும் கொள்கிறோம்.

ஒரு செந்நிற
குத்தாலத் துண்டு மட்டும்தான்
தேவைப்படுகிறதெனக்கு
என் கருத்த உடலில் வழிந்தோடும்
வியர்வையைத் துடைக்க.

0

இவரைப் பார்க்கும் போதெல்லாம்
அவர் நினைவு வருவதிலிருந்து
அவரைப் பார்க்கும்போது
இவர் நினைவு வருகிறது.

0

விபத்துச் செய்தியை வாசித்ததன் முடிவில்
முத்தாய்ப்பாகச் சிரிக்கும் வாசிப்பாளினி போல்
தன் வெற்றிச் செய்தியை
அறிவிக்கிறான் கயவன்.

(2011 ஆகஸ்ட் 7ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக‘வின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment