Monday, April 6, 2020

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் - கவிதை - கார்த்திகைச் செல்வம்

                        தமிழ்த்தாயே!
                        தவமிருந்தும் கிடைக்க இயலாத
தமிழ்கவி ஆசான்களை
அறிமுகப்படுத்தி இருக்கிறாயே!
அழகுபடுத்தி இருக்கிறாயே!
தவமிருந்தது பத்து மாசமா…
இல்லை –
பற்பல வருசமா…
உன்
தவ விமோசனத்தைக் கண்டு
என்
கைகளே
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தாளம் போடுகிறது.

அன்னைத் தமிழே!
ஆசான்களுக்கு
அமுதூட்டியது தாய்ப்பாலா
இல்லை
தமிழ்ப்பாலா
இடி இடியாய் முழங்க
இப்படி
இன்பத் தமிழ்க் கவிதைகளை
இசைத்து முழங்குகிறார்களே!
இதைக் கண்டால்…
என் கைகளே
தத்தரிகிட தத்திரிகிட தித்தோம்
தாளம் போடுகிறது.

அன்னைத் தமிழே!
அற்புத ஆசான்களை
அலைகடல் தமிழில்
குளிப்பாட்டி வளர்த்தாயா?
குதுகலமாய் குளித்து விளையாடுகிறார்களே
இப்படி
கவிதைகளில்!
உன்னை கண்டால் என்
கைகளே
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தாளம் தட்டுகிறது.

தாய்த்தமிழே! தாய்த்தமிழே!
உருவெடுத்து வருகின்ற
உன்னத கவிஞர்களுக்கு
ஊட்டி வளர்த்தது சோறா?
அல்லது
சோர்வு இல்லாத சொர்க்க
கவிதையா!
இப்படி எங்களை
சொக்க வைக்கிறார்களே!
உன் கைகளைக்
கண்டால்…
கன் கைகளே
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தாளம் இசைக்கிறது.

அரவணைப்பு அன்னைத் தமிழே!
கவி அறிஞர்களுக்கு
அறிவை கற்றுக் கொடுக்க
அனுப்பியது கல்விக் கூடமா?
அல்லது
கவிதைக் கலைக் கூடமா?
எழுத்துத் திறத்தாலே…
இப்படி
எழுச்சி பெறச் செய்கிறார்களே!
நீயே
உன் கைகளால்
அவர்கள் கைகளை
அணைத்துப் பிடித்து
எழுத வைத்தாயோ
முத்தமிழை!
உன்னைப் பார்த்தால்
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தாலாட்டுப் பாடுகிறது
என் கைகள்!

அட்சயப் பாத்திரமாய்
அள்ளிக் கொடுக்கும்
அருந்தமிழே!
அடக்குகிறாயே அனைவரையும்
ஆதித் தமிழுக்கு!
அனுப்புகிறாயே அனைவரையும்
அழகிய வாழ்வுக்கு!
திசை திருப்புகிறாயே
என் தனி திறமைக்கு!
வர்ணிக்க வார்த்தை இல்லை
வலிமைத் தமிழே!
ஐம்பூதங்களை அடக்கிய பூவுலகே!
என்
ஐ விரல்களும்
அடக்க துடிக்கின்றன
ஆதித்தமிழை
கவிதைகளில்!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தாளம் போடுகிறது
என் கைகள்
கவிதைகளாக!
0
2020 மார்ச் 1_ கல்லூரி மாணவர்களுக்கான கவியரங்கக் கவிதை

No comments:

Post a Comment