Tuesday, April 7, 2020

தப்புகளும் தப்பித்தலும் – கவிதை - வே.சங்கரபாண்டியன் (வேசன்)

அன்புடையீர்,
நான்தான் வேசன்
தமிழ்நாட்டை எனக்கு மிகவும் பிடிக்கும்
குறிப்பாக தமிழக இளைஞர்களை!

அரசியல் என்றால் என்னவென்று கேட்டு
அரசியல் செய்யும் கெட்டிக்காரர்கள் அல்லவா? நீங்கள்!
இந்த வேசன் கூறும் விடயங்களைக் கேளுங்கள்!

நான் இல்லாத நேரம் பார்த்து
வழிகாட்ட யாருமில்லாமல்
ஏறுதழுவுதல் விடயத்தில்
வழிதவறிச் சென்று விட்டீர்கள்!

இரண்டாவதொரு முறையாக
தஞ்சைக் கருவறையில்
தமிழை ஒலிக்கவைத்து
பெருந்தவறு செய்துவிட்டீர்கள்! !
விடயங்கள் அறிந்துதான்
பதறிப்போய் எழுதினேன் இக்கடிதம்

உங்களுக்காகவே அலைபேசியில் ஐந்தாம் தலைமுறை
முன்னேறட்டும் இளையோர் தலைமுறை
உங்களிடம் கூறிவிட்டேன் பலமுறை
மறந்திடுங்கள் கீழடி வரலாற்றை
பழையன கழியட்டுமே! !

உங்களுக்காகவே ஐந்திற்கும் மேல்
புதிய மருத்துவக் கல்லூரிகள்
இன்னும்கூட கேளுங்கள்
ஏற்பாடு செய்கிறேன்!
ஆனால் அனிதாவை மட்டும் மறந்துவிடுங்கள்!

திருத்தப்பட வேண்டிய திருத்தச் சட்டங்கள் உளதென்று
திருந்தாப் பிறவிகள் சிலர் தெருவில் கூறித் திரிகின்றனர்
இளைய வர்க்கமே!
திருத்தச் சட்டம் பற்றிய
வருத்தம் நமக்கு வேண்டாம்! !

ஆசிபா கொலை நடப்பினும்
அம்பேத்கார் சிலை உடைப்பினும்
உங்களுக்குக் கவலை வேண்டாம்
அது பெரியோர் பிரச்சனை! !

தேர்வு வாகனத்தின் சாவி தந்தாலும்
வள்ளுவர் உடைக்குக் காவி தந்தாலும்
உங்களுக்குக் கவலை வேண்டாம்
அது பெரியோர் பிரச்சனை!

கூடிவாழும் பூமிபற்றி
சிந்தனை சிறிதும் வேண்டாம்!
கும்பிடும் சாமிதனை
என்றும் மறந்திடல் வேண்டாம்!

வீதியில் பெயர்மாற்றம் இந்தியில் வந்தாலும்
கவலை வேண்டாம்!
சாதியில் பெயர் மாற்றி உயர்ந்திடல் வேண்டும்
மறந்திட வேண்டாம்! !

அண்டை நாட்டு மக்களுக்கு
அரிதாய் வரும் நோய்களை
ஆராய்ந்து மருத்துவம் காண்பேன் என்றும்!
தமிழர் திறனை நிறுவுவேன் என்றும்!
அறிவின்றி யாரும் முயலாதீர்கள்! !

விவேகானந்தரின் சக்தி வேண்டுமா?
தனித்தீவு தரும் நித்தி வேண்டுமா?
இரண்டாவதைத் தேர்வு செய்யுங்கள்
இளையோர் வர்க்கமே!

மகிழ்வுதரும் பானம் என்பதால்
மறத்துவிட்டேன் சரக்கு வரியை
மகழ்ச்சிதானே வாலிபர்களே!
எல்லாம் உங்களுக்காகத்தான்! !

வாகனமுகப்பில் சேகுவேரா
பின்பக்க விளக்கில் பிடல் காஸ்ட்ரோ
சட்டைப் பையில் பிரபாகரன்
சற்றே அருகில் பாரதியார்
இன்னும் சிலரின் உருவங்களை
இருக்குமிடங்களில் எல்லாம் பதித்திடுங்கள்!
மறந்துவிடாதீர்கள் மக்களே
உருவங்களை மட்டுமே!

ஆட்காட்டி விரல் நுனியில்
மைவைக்கும் வேளையிலே
ஆளுக்கொரு ஆயிரம் தர
ஏற்பாடு செய்கிறேன்!
அதை உங்கள் அலைபேசிச் செலவுக்குப்
பயன்படுத்திக் கொள்ளுங்கள்! !

புரட்சி! புரட்சி! புரட்சியென்று
மிரட்சி பொங்கக் கத்திடுவார்!
மறந்தும்கூட காதுகளை
திறந்துவிடாதீர் அப்பக்கம்! !

இளையோர் வர்க்கமே!
உங்களுக்குள் உள்ள ஆற்றல் மிகவும் அரியது!
அணுப்பிளப்பாற்றலின் பெரியது!
ஆகவேதான் கூறுகிறேன்
பத்திரமாகப் பூட்டிவைத்துக் கொள்ளுங்கள் என்று! !

சொல்லிய விடயங்கள் யாவும்
சிந்தையில் ஏறியிருக்கும் - நம்புகிறேன்!
நெடுந்தொடர் பார்க்க நேரமாயிற்று
இன்னொருமுறை எழுத்தில் சந்திப்போம்!
கிளம்புகிறேன்! !

இப்படிக்கு
பாசாங்கில்லாத பாசத்துடன்
வேடமிடாத வேசன்
0
2020 மார்ச் 1_கல்லூரி மாணவர்களுக்கான கவியரங்கக் கவிதை

No comments:

Post a Comment