Friday, April 24, 2020

சுபங்களின் தொகுப்பாக காதல் சிறகை காற்றினில் விரித்து… – மதிகண்ணன்


வெகுஜன வாசிப்பில் லயித்துத் திளைத்த ஒருவரால் மட்டுமே இப்படியான ஒரு நாவலை எழுத முடியும். ஓடிப்போன தன் அக்காவை நினைத்து முப்பது ஆண்டுகளாக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தொழிலதிபரின் மகள் கதையின் நாயகி. காதல் கணவன் இறந்தபிறகு கை வேலை பலவும் செய்து ஒழுக்கசீலனாகத் தன் மகனை வளர்த்து ஆளாக்கிய ஓர் அன்பான அம்மாவின் பொறியியல் படித்த மகன் கதையின் நாயகன். நாயகியின் பச்சாதாபத்தில் தொடங்கிய நட்பு பேச்சு வார்த்தையில் காதலாகிறது. மனைவி இறந்தபின் மகளைக் கவனிக்கத் திருமணம் செய்து கொள்ளலாமல், காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்ணை வேலைக்குச் சேர்த்துக் கொண்டு அவளைத் தன் சகோதரியாய் மதிக்கும் தொழிலதிபருக்கு மகளின் காதல் விவகாரம் தெரிய வருகிறது.
மும்பையில் இருந்து ஒரு வரண் வர அவர்களை விசாரிக்கும் வேளையில் தன் காதல் விவகாரத்தை மும்பைக்காரர்களிடம் சொல்கிறாள். கதைநாயகியை அவர்கள் மும்பையில் விற்பதற்காகவே திருமணம் செய்யத் திட்டமிட்டுருக்கிறார்கள் எனத் தெரிகிறது. அவர்கள் தொழிலே அதுதானாம். அவர்களிடம் சிக்கிக் கொண்டு அவர்களின் சதிகளுக்கெல்லாம் நீண்ட நாட்களாக உடன்பட்டிருந்த ஒருவர் மனந்திருந்தி தொழிலதிபர் வீட்டில் விபரம் சொல்ல வருகிறார். வந்த அவருக்கு அங்கு வேலைக்கு இருப்பது தன் காதலி எனத் தெரிவதில் ஒரு சுபம்.
கதைநாயகியைக் காணாமல் தேடும் அவளது அப்பா, கதைநாயகன் வீட்டிற்கு வர, அவளது தாய் தன் தமக்கை என்றறிவதில் ஒரு சுபம்.
கடத்தப்பட்ட நாயகியை நாயகன் ‘வாட்டர் ஜக்’ஐ ஆயுதமாகப் பயன்படுத்தி மீட்டு வருகையில் ஒரு சுபம்.
மும்பைக் கடத்தல் பார்ட்டி கைதாவதில் ஒரு சுபம். என பின்பகுதி முழுவதும் ஏகப்பட்ட சுபம்கள்.
ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் பழைய ஜெமினிகணேசனின் படங்களில் வருவதைப்போன்ற ட்விஸ்ட்.  அத்தியாயத் தொடக்கத்தில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் வருவதுபோல் கடைசிக் காட்சியின் ரீப்ளே.
கடந்த நூற்றாண்டின் மத்தியில் வெகுஜன இதழ்களில் குடும்பக்கதை என்ற முன்னறிவிப்புடன் வந்த தொடர்கதைகளின் வடிவமும், நேர்த்தியும், கருவும் கொண்ட ‘காதல் சிறகை காற்றினில் விரித்து…” சமூக நாவல் என்று தலைப்பிற்கான அடைப்புக்குறி அடையாளத்துடன் வந்திருக்கிறது.
சிறாருக்கான நன்னெறி நாவல் என்ற அடையாளத்துடன் வந்திருந்தால் இதற்கான விமர்சனத்தை வேறு வகையில் நேர்மறையாக எழுதியிருக்க முடியுமோ என்னவோ… முடியல… ஆனா… முடிஞ்சுருச்சு… சுபம்.  0
காதல் சிறகை காற்றினில் விரித்து - நாவல்
-    காஞ்சி மீனா சுந்தர்
-    வசந்தா பிரசுரம் – சென்னை – 600033

No comments:

Post a Comment