Friday, April 10, 2020

‘தமிழைக் காக்க தலைப்பட்ட தலைமகன்…’ - மதிகண்ணன்


‘சஞ்சாரம்: தமிழுக்குக் குழிபறிப்பு’ என்ற தலைப்பில் தனித்தமிழ் தேசிய நண்பர் ஒருவர் தான் நடத்தும் சிறுபத்திரிகையில் ஒரு பத்தி எழுதியிருந்தார். அதில் சஞ்சாரம் நாவலுக்கு நடமாட்டம் என்று பெயரிட்டிருக்க வேண்டும். தேசாந்திரி பதிப்பகத்திற்கு வழிப்போக்கன் என்று யெரிட்டிருக்க வேண்டும் என அதிஅற்புத ஆலோசனைகளை முன்வைத்திருந்தார். (தேசாந்திரிக்கு வழிப்போக்கன் என்ற மொழிபெயர்ப்பு சரியா என யாரும் என்னிடம் கேட்காதீர்கள்) எஸ்.ராமகிருஷ்ணன் பெயரை எசு.ராமகிருசுணன் என்று எழுதியிருந்தார். (இதுதான் தமிழ்ப் படுத்துறது அல்லது தமிழைப் படுத்துறது.) தமிழ்ப் பற்றிற்கு வாழ்த்துகள். எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் வளர்ச்சிக்காக எழுதுகிறார் என்று அவரிடம் யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.
இந்தப் பத்தி பற்றி நான் வேறு ஒரு திராவிடர் கழகத்தில் பொறுப்பில் இருக்கும் நண்பரிடம் கூறியபோது “உங்களுடைய சிறுகதைத் தொகுப்பிற்கு ‘ஆர்டருக்காகக் காத்திருப்பவர்கள்’ என ஆங்கிலம் கலந்து பெயர் வைத்ததையும்கூட அவர் விமர்சித்தார்” என்றார்.
“என்னவென்று விமர்சித்தார்” என்றேன் நான்.
“ஆங்கிலம் கலந்து நூலுக்குத் தலைப்பு வைக்கும் இவரை எப்படித் தமிழ் எழுத்தாளர் என்று நான் சொல்வது?” என்று கேட்டாராம்.
“நல்லது. என்னைத் தமிழ் எழுத்தாளரென்று சொல்லுங்கள் என நான் அவரிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்ளவில்லையே.. தயவு செய்து தமிழ் எழுத்தாளர் என்று அவர் என்னை அறிமுகப்படுத்திவிட வேண்டாம் என்று அன்பாகக் கேட்டுக் கொண்டதாக அவரிடம் சொல்லுங்கள்” என்றேன்.
“அந்தப் பத்திரிகையில் இந்தப் பத்தியை யார் பார்த்திருக்கப் போகிறார்கள். விடுங்கள்” என்றார் நண்பர்.
“அப்படிப் படித்தாலும் கவலைப்பட பெரிதாக ஒன்றும் இல்லை” என்றேன் நான்.
ரமேஷ் (பிரேதன்) ஒரு பேட்டியின்போது ஒன்றைச் சொன்னார். “இச்சமூகத்தில் கடைசியாக இருவர் மீந்தால், அதில் ஒருவர் பத்திரிகை நடத்துவார்” அப்படியான ஒருவராக அவர் இருக்க வாழ்த்துகிறேன் நான்.

No comments:

Post a Comment