Sunday, July 1, 2012

மதம் ஒரு அபின் – லண்டன் செல்வா

புதிய சொற்களை 
 தேடிப்பார்கிறார்கள்
வசைப் பாடிட
அகப்படுவதில்லை
அழுக்கு நிறைந்த வார்த்தைகள் .

புறத்தில்
அடையாளப்படுத்தப்பட்ட
அடிக் கட்டுமான
சமன்பாட்டை
அகம் ஏற்றுக் கொள்வதில்லை
இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும்
பாரத, இதிகாச, புராண புழுகுகளால்...
அகத்தில் உருவாக்கப்பட்டவை
தவறுகளென அறிந்தும் .

தவறுகளிலிருந்துதான்
கற்றுக் கொள்ள முடியும்
சரியை
இணங் காண முடியும்.

சரியாக்கப்பட்ட
தவற்றை
அகத்திலிருந்து
பிரதிபலிக்க முடிவதில்லை
கழுத்துகள்
இறுக்கப்படுகின்றன
அவர்களால்
யாருக்கோ
பின்னப்பட்ட
சுறுக்குக் கயிற்றைக் கொண்டே

புதியவற்றைத்
தேடுகிறார்கள்
அதுவும் கனக்கிறது
கணம்
பல பரிமாணங்களை உருவாக்குகிறது
அங்கும்
ஆயிரமாயிரம் கேள்விகள்
புதிர்கள் .

அவர்கள்
எப்போதும்
மக்களின் மொழியில்
பேசியதில்லை
ஏனெனில்
சாஸ்திர, சம்பிரதாயங்கள்
தூதுவர்கள்

சோளங்களின்
வர்ணக் குடிலுக்குள்
அடைக்கப்பட்
தடித்த தோல்களின்
உணர்வுகள்
திமிறி எழுகின்றன
மேற்கட்டுமானத்தை
அசைத்து
அடிக்கட்டுமானத்தை
மீட்டுருவாக்கம் செய்ய...
(2012 ஜூலை முதல்நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment