Tuesday, July 17, 2012

துயர் கவிழும் பொழுதுகளில்... – மு. பழனிக்குமார்

துயர் கவிழும் பொழுதுகளின்
சந்திப்புகள்
தவிர்க்க முடியாதவையாயிருக்கின்றன.

மௌனமும் ஆகாய நோக்கும்
தலை கவிழ்ப்புமாய்
அழுந்தித் தேய்ந்து நகர்கின்றன
நொடிப் பொழுதின் கால்கள்

ஆற்றுப்படுத்தும்
மொழிகள் இல்லாதவர்களாய்
தோற்றுப் போய் நிற்கின்றோம்
நானும் என் சந்திப்புகளும்

இலையுதிர்த்த கிளைகளுக்கும்
மலருதிர்த்த காம்புகளுக்கும்
கூறுவதற்கு
எங்கேயிருக்கின்றன சொற்கள்

வெறுமையாய் பேசவும்
நடப்புக்குச் சொல்லவும்
வார்த்தைகளற்று
தவிக்கிறது மனசு

வறண்டு கிடக்கும்
கரிசல் காட்டின் வெடிப்புகளாய்
விரிவோடிப் போயிருக்கிறது
மனசும் வாழ்க்கையும்

மழை வரும் சந்தோஷ தருணங்களை
நழுவவிடாது நனைந்து கொள்ள வேண்டும்
கண்ணீரோடு
காயங்களும்
கவலைகளும் கரைந்து போகுமாறு.
(2012 ஜூலை முதல்நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment