Tuesday, June 28, 2016

மீன்களும் தூண்டில்களும் - கவிதை - சத்யா

மீன்கள் தங்களை கடித்துவிட்டதாய்
புலம்புகின்றன தூண்டில்கள்
இதோ ரத்தமென்று உடலெல்லாம் வழித்து
எறிகின்றன மீனின் முகத்தில்
துடுப்புகள் இருப்பதால்தான்
கடித்து இழுத்துச் சென்று தங்களை
மூச்சடைக்க வைப்பதாய் புலம்பி
துடுப்பறுத்து மீன் வளர்க்க துடிக்கின்றன தூண்டில்கள்
எனக்குதான் வலியென்று எத்தனை மீன் சொன்னாலும்
வலித்தால் அழவேண்டும் மீன் அழுவதுண்டோ என்று
எக்காளமிடுகின்றன தூண்டில்கள்.
மீன் முள் குத்தி வலிப்பதாய்
வளைந்த தொண்டையைத் தடவி
நீதி கேட்கின்றன தூண்டில்கள்.
நீதிபதி வலையோ தன் அத்தனை கண்களாலும்
மீனை முறைக்கிறது
கூசும் உடல் மறைக்க துடுப்புகளை கட்டிக்கொண்டு
பார்வையை தாழ்த்துகிறது மீன்
ஆயிரம் கண்களோடு சந்தேகக் கண்ணும் கொண்டு
மீனின் உடலில் துழாவுகிறது வலை
தனிமையில் விசாரிப்பதாய் சொல்லி
தண்ணீர் தொட்டியில் குதித்து
மீனை வெளியே இழுத்து
மூச்சடைக்க வைக்கின்றது வலை
பின்பு தீர்ப்பு எழுதுகிறது
தன்னை மீன் தண்ணீருக்குள் இழுப்பதாய்
மீனை பரிசோதனைக்கு கத்தியிடம் அனுப்புகின்றன
வலைகளும் தூண்டில்களும்
கத்தியோ மீனின் தொண்டையில்
குத்திப்பார்த்து சொல்கின்றன
மீன் தூண்டிலின் ரத்தத்தை குடித்திருக்கின்றது என்று
தண்ணீர் இருப்பதால்தான்
மீன்கள் நீந்துவதாய் தீர்ப்பெழுதுகிறது வலை
குளத்தின் தண்ணீரை இறைத்து
மீனை மட்டும் வாழ விட முடிவெடுக்கின்றன
வலைகளும் தூண்டில்களும்
குளத்து நீரை
அள்ளி அள்ளி வெளியே இறைக்கின்றன
வலைகளும் தூண்டில்களும்.

No comments:

Post a Comment