Sunday, July 19, 2015

இனி வரும் ஒரு தலைமுறைக்கு... - சத்யா

இனி வரும் ஒரு தலைமுறைக்கு இங்கு வாழ்வது சாத்தியமோ?
புதர் மூடிய மலைகளும் - செங் 
கதிரு மூடிய வயல்களும் 
                                                              (இனி வரும்)

ஏரு பூட்டிய உழவனும் - அதை
ஏந்தி நடக்கிற காளையும்
சேறு வாரி வீசியடித்து
சிறுவராடிய நதிகளும்,
மாரு முட்டிய மழலையும் - பால்
மகிழ்ந்து ஊட்டும் அன்னையும்
சோறுபோடும் உழவன் கண்டு
சொக்கி வணங்கும் பயிர்களும்
                                                              (இனி வரும்)

கனலி கொட்டும் வெப்பம் - வடித்து
காற்று செய்யும் வித்தையும்,
புனல் வடியும் பூமியும் - அதை
பூசும் பனிமலை சிகரமும்
தணல் பட்ட கால்கள் போலே
துள்ளி ஆடும் மான்களும்
பிணத்தை தூக்கிய கால்களும் - அதை
புதைத்து திரும்பும் பொறுமையும்
                                                              (இனி வரும்)

வளர்ச்சி முழக்கம் கேட்டது-எங்கள்
வயல்கள் சாலைகள் ஆனது
மலரை மலடியாக்கச் சாம்பல்
மழையை ஆலை பொழிந்தது
பலரின் குடலை சுரண்டி தின்று
பிழைக்கும் முதலாளித்துவம்
கிளர்ச்சி செய்யும் புரட்சியாளரை
கொன்றொழிக்கும் ராணுவம்
                                                              (இனி வரும்)

புரட்சி என்றொரு வாசகம் - அது
பகத் சிங்கின் ஆயுதம்
புரட்சி என்றொரு மந்திரம் - அது
பூமி காக்கும் தந்திரம்
புரட்சி ஏற்றத்தாழ்வு கொல்லும்
பொதுவுடைமையை கொணர்ந்திடும்
புரட்சி செய்யும் புதுயுகம் - அப்
புதுயுகம் செய்யும் புரட்சியும்
                                                              (இனி வரும்)
(2015 ஜூலை 19 ஆம் நடைபெற்ற படைப்பரங்கில் தோழர் சத்யாவால் பாடப்பெற்ற பாடல்)

No comments:

Post a Comment