Saturday, July 4, 2015

அன்பை அடிநாதமாக்கி… லே அவுட்டுக்குள் அமைந்த… குரல்வளையில் இறங்கும் ஆறு - மதிகண்ணன்

ஒரு நாட்டுப் பாடல்
உழவனின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
விதைத்து அறுப்பது
என்றான் உழவன்

தையல்காரனின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
கிழியாத, வெதுவெதுப்பான ஆடைகளைத் தயாரிப்பது
என்றான் தையல்காரன்

தளபதியின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
கொரில்லாவுக்கு எதிராக பூர்ஷ்வா வர்க்கத்தின்
இராணுவத்தை
வழிநடத்திச் செல்வது என்றான் தளபதி

கவிஞனின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
எனக்குத் தெரியாது என்றான் கவிஞன் –
ஆனால் கவிதைகளை எழுதுவது
கவிதையாகாது மகனே!
அரசதிகாரத்திற்கு எதிரான ஆயுதப்போராட்டத்தில் பங்கேற்ற கிரேக்கக் கவிஞரான ‘கோஸ்டிஸ் பாப்பகோங்கோஸ்‘ஸின் கவிதைவரிகளின்படி கவிதை என்றால் என்ன? என்கிற கேள்விக்கு யாரால்தான் சரியான பதில் சொல்லிவிட முடியும். அவர் இப்படியான கவிதை எழுதவேவில்லை என்றாலும் அதுதானே உண்மை.
அய்யப்ப மாதவன் தன்னுடைய முகநூல் பதிவு ஒன்றில் ‘கவிஞன் ஒரு கவிதையை ஓர் அனுபவத்திலிருந்து எழுதும்போது அது ஏற்கனவே எழுதிய கவிதைகளைவிட சிறந்த கவிதையாக வரவேண்டுமென நினைத்துதான் எழுதுகிறான். அது வாசகனை ஈர்க்கும் விதத்தில் எழுதப்பட்டதா என்று கவிஞன் வாசகர்களின் பார்வைகளிலிருந்து உணர்ந்துகொள்ள முடியும். கவிதையின் வலிமை அனுபவத்தின் தீர்க்கத்திலிருந்து சிறந்த கவிதையாகவும் சிலவேளைகளில் சுமாரான கவிதையாகவும் மாறும் தருணங்கள் இயல்பாகவே உண்டென அறியலாம்.
கவிஞனின் ஆழ்ந்த ஈடுபாட்டுடனான கவிதை ஒரு போதும் தோல்வியைச் சந்தித்திருக்காதென நம்புகின்றேன். தோல்வியுற்ற கவிதைகளுக்காக கவிஞன் வருந்தத் தேவையில்லை. அக்கவிதைகளே கவிஞனின் சிறந்த கவிதைகளை அடையாளம் காணவும் உதவுகின்றன என்பது நிதர்சனம்.’ என்கிறார். தன்னுடைய அனுபவத்தின் பட்டியலை கவிஞனாகிய அற்புதம் என்கின்ற கவிதையில்
‘மஞ்சளாய் மாறுகிற நிலவின் அதிசயத்தில்
வண்ணங்களைக் குவித்து இதயத்தைக் கிளறுகிற அந்தியில்
சாலையில் மஞ்சளுடுப்பில் மஞ்சள் பூச்சுடி வடிவாகச் செல்லும் பெண்ணில்
நிலவை விரல் நீட்டி குழந்தைமையை நினவூட்டும் குழந்தையில்’
என மஞ்சளுடன் மங்களகரமாகத் தொடங்கி…..
…. …. ….
‘புழுங்கும்போது மரமசைந்து வரும் தென்றலில்
மழைக்காலம் முடிந்து துவங்கும் பனியின் நடுக்கத்தில்
பகலை வரையும் பரிதியில்
இரவைத் தீட்டும் வான்சுடர்களில்
என் உயிரின் மர்மத்தில்
இவ்வுலகில் தோன்றியதில் சொற்களால் கவிஞனாகிவிட்ட அற்புதத்தில்
விடுபடமுடியாத பால்யத்தில்
பறந்த வண்ணத்துப் பூச்சிகளில்
விட்டில்களில்
மீன்களில்
உலகைக் காட்டிய என் அம்மாவில்
அன்பின் உருவமான தகப்பனில்
தம்பி தங்கை ரத்தத் துடிப்புகளில்
நட்பில் படர்ந்த உயிரில்
ஒரு கவிதை விரிகிறது அனுபவத்தில்
ஒரு சொல் பல சொல்லாய், வாழ்வாய், புனைவாய்….’
என தான் கவிஞனான அற்புதத்தைச் சொல்லும் அய்யப்ப மாதவன் இருள் நீக்கும் சுடரின் ஒளிக்காய் கடும் தவத்தில் ஒளியூட்டிக் கொள்கிறார். ஒளிரும் பாதைகளில் இம்சிக்கும் இருட்டுப் பிசாசுகளை கவிதை உச்சாடனத்தில் விரட்டுகிறார். அய்யப்ப மாதவனின் புழுங்கிய மனம் பற்றுதலுக்காய்த் தவிக்கின்ற காலத்தில் திடுமென நிலத்தில் பாய்ந்தோடும் மழைதான் அவருக்குக் கை நீட்டுகிறது. அக்கணம் பெண்மையின் தொடுவுணர்வினை அடைகின்றார் அவர். குரல்வளையில் இறங்கும் ஆற்றில் மழை அடிக்கடி பெய்கிறது.
கவிதை நூலுக்கான தலைப்புக் கவிதை என்னவோ மரணித்துக் கொண்டிருக்கும் தருணத்தைப்பேசி, உயிர்க் காயம்பட்ட புள்ளினங்கள் முடிவு செய்யப்பட்ட மரண நாளில் கூடு திரும்புவதில்லை என ‘ஊழின் வலிமை’யை முன்னிருத்தினாலும், தொகுப்பு விரக்தியுற்ற மனத்தின் புலம்பலில் வெளிப்பட்ட சொற்களின் பொட்டலமாய் இல்லை என்பது ஆறுதலளிக்கின்றன.
வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் அனுபவங்களாவதில்லை. அனைத்து அனுபவங்களும் பதிவு பெறுவதில்லை. பதிவு பெற்ற அனுபவங்கள் அனைத்தும்  கவிதையாவதில்லை. அப்படிக் கவிதையாகும் அனுபவங்கள் பிறருடைய வாழ்வின் நேரடி நிகழ்வுகளுடனோ, நெருங்கிய நிகழ்வுகளுடனோ இணைந்து போகும்போதும்/விலகிச் செல்லும்போதும் மட்டுமே அவை கவனிக்கத் தக்கதாய் மாறுகின்றன. அய்யப்ப மாதவனின் தொகுப்புக்குள் கவனிக்கத் தக்க நிகழ்வுகள் கவனிக்கத் தக்க கவிதைகளாய் மாறியிருக்கின்றன.
‘அதோ ஓடுகிற ஆற்றில் மிக்கும் என் பரிசல்கள்
அக்கரையினைக் கடக்க
களவாடப்பட்ட துடுப்புகள் இல்லாததால்
கைகளால் நீரினைத் தள்ளிக் கொள்கிறேன்
அப்பக்கம் இருக்கும் நெருப்பு
என் கடுமிருளையொழிக்க எரிந்து கொண்டேயுள்ளது’ (பக் 72)
களவாடப்பட்ட துடுப்புகளுடன் தன்னைக் கடந்து செல்லும் படகுகளை உலகமயப் போட்டிச் சூழலில் பார்த்துக் கொண்டிருக்கும் யாருக்கும் தெரியும் அந்த வேதனை. ஆனால்
‘எத்தனையோ திசைகள் எத்தனையோ சுடர்கள்
எத்தனையோ கதவுகள் இருப்பதான மாயையில்
உயிர்கொடி படர்கிறது.
என் வெறுமை சூன்யம் என்பவற்றை பூஞ்சோலையாக்க
வற்றவே வற்றாத நதியாகிக் கொள்கிறேன்.
சுழன்று வீசும் வாள்கில் சதைகள் பிய்ந்து எலும்புகள்
வெளித் தெரிந்தபோதும் வெளிபிடித்த இலக்குகளால்
தைலங்களில் ஆற்றிக் கொள்கிறேன்.’ (பக்72)
என அய்யப்ப மாதவன் அது அப்படித்தான் இருக்கும், அதிலிருந்து நான் மீள்வேன் என நம்பிக்கை கொள்கிறார். அந்த நம்பிக்கை இல்லாத சூழ்நிலையில்தான் விரக்தி கோலோச்சும். நம்பிக்கை என்றதும் நினைவில் வரும் வருவது இன்றைய தன்னம்பிக்கை எழுத்துக்கள். இந்தத் தன்னம்பிக்கைக் கட்டுரைகள் தோன்றிய இடம் என்னவோ கவிதைகள்தான் 80களின் இறுதியில் ஓ… எல்லது ஏ… என்ற ஒற்றை எழுத்தில் தொடங்கி…. இளைஞனே, பெண்ணே, ஆணே,  சமுதாயமே, மாணவர்களே, கடலே, கடவுளே, மனிதனே நிலவே, மண்ணே, மரமே, எருமேயே, என எதிரில் இருக்கின்ற இல்லாத அனைத்தையும் விளித்து அதற்கு ஆசிரியர்களாக மாறி கவிஞர்கள் பாடம் நடத்தும் விளிக் கவிதைகள் எழுதாதவன் கவிஞனே இல்லை என்றொரு சூழல் இருந்தது. அந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியாமல் இன்னும் அப்படியே எழுதிக் கொண்டிருப்பவர்களும் இன்றும் கவிஞர்கள்தான். (ஓ… மானிட ஜாதியே…, ஓ… பட்டர் ஃபிளை… போன்ற திரைப்பாடல்களும் இவ்வகைதான்.)
அய்யப்ப மாதவன் எதிரில் இருப்பவர்க்குச் சொல்லும்படி நீ, நீங்கள் என குறை விளிக் கவிதைகளாக இத்தொகுப்பில் ஐந்தாறு கவிதைகள் எழுதி உள்ளார். அந்த நீ, நீங்கள் யாராகவும் இருக்கலாம். ஆனால் ஸென்னில் கரைதல் என்கிற ஒரு கவிதை மட்டும் கொடூரஉலகமே என விளித்து விஷயம் சொல்கிறது.(பக் 60) நல்ல வேளையாக கவிதை ஆச்சரியக் குறியுடன் முடியவில்லை. (கவிதைகளின் தொடக்கம் விளித்தலில் இல்லை என்பதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும்) விளித்துச் சொல்லப்படாத கவிதைகளாக இவை இருந்தாலும் தொகுப்பில் 90 விழுக்காடு கவிதைகள் அகவல் தொணி கொண்டுள்ளன என்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது.
இருந்தல் பற்றிய அவரின் கவிதைகளுக்கு இணையாக இல்லாமை பேசும் கவிதைகள் வீச்சுடன் வந்துள்ளன. குறிப்பாக திடுக்கிடல் நீடிக்கும் என்ற தலைப்பிலான கவிதையின் வரிகளில்
‘நான் உணர்வது ஒரு துளியில்
கோடி அளவை விடவும் மிகச் சிறியது
மனிதன் மிகச் சாதாரணமானவன்
யாவும் அறிந்துவிட்டதாக தற்பெருமை கொள்பவன்
சரியான முட்டாள்
என்னை அறியாத நான் என்னை அறியாமல்தான் மறைவேன்
என் மரணமும் ஒரு செய்தியாகும்வேளை
திடுக்கிடல்கள் சில கணங்கள் நீடிக்கக்கூடும்
அவ்வளவுதான்’ (பக் 79)
ஆம்… அவ்வளவுதான். அதற்குப்பிறகு… திடுக்கிடலின் தொடர்ச்சியாக திட்டமிடல் இருந்தால் நாம் வாழ்ந்தோம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஏதோ சிந்தனையில் குக்கிராமத்து ஒற்றையடிப்பாதையொன்றில் தனியாக நடந்து செல்பவனின் பின்னால் கேட்கும் மிதிவண்டியின் மணிஓசைக்கான திடுக்கிடலைப்போன்றதே நம் மரணச் செய்தியும் என்றால் அது நமக்குப் பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
‘இருட்டின் ரகசியங்கள் ரகசியங்கள்தான்
போதை பருகும் மதுவிலோ கற்றுத்தரும் நடனத்திலோ
இருப்பதான பிரமை தவிர்க்கவியலாதது
நான் நீ அவள் விதிவிலக்கல்ல
உயிரென்பது கொண்டாட்டங்களின் விளைவு
மற்றும் மரணம். (நித்யாவிற்கு… பக் 59)
என்ற மரணம் பற்றிய பதிவுடனான அவரின் ‘உயிர்நடனம்’ கவிதையும் குறிப்பிடத்தக்கது.
தொகுப்பில் மேடைக்கவிதைக்கான தொணியுடன்  இணைக்கப்பட்ட கவிதை நாமெல்லாம் அடிமுட்டாள்கள் (பக் 53) என்ற தலைப்பிலானது. உணர்வு நிலையில் ஈழப்பிரச்சினை மற்றும் பிரபாகரனின் இறப்பு, உயிருடனிருத்தல் போன்றவற்றை முன்னிருத்துவது.
குழந்தைமையை நினவூட்டும் குழந்தையில் தனக்கான கவிதை உருவாகும் களம் இருக்கிறது என்று பதிவு செய்த அய்யப்ப மாதவன் அதனை கப்பல் பிராயம்(பக் 102), சிறகசைப்பைத் தவிர வேறொன்றுமில்லை (பக் 38), முள்ளசையும் பால்யம் (பக் 110), மழைச் சிறுவன் (பக் 77) போன்ற கவிதைகளில் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார். நாம் வாழ்ந்த பால்ய வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் அற்புத அனுபவத்தை இக்கவிதைகள் தருகின்றன. இன்றைய குழந்தைகளுக்கு இந்த வாய்ப்புகள் இல்லை என்றாகிவிட்ட சூழ்நிலையில் இக்கவிதைகள் மிகமுக்கியமான பதிவுகள் என்று சொல்லியாக வேண்டியிருக்கிறது.
கவிஞரைத் திசை திருப்பிய இடங்களும் பதிவுக்குள் வருகின்றன. பூப்பதை நிறுத்தாத பூஞ்செடிகள் என்ற தலைப்பிலான கவிதையின் இறுதி வரிகள்.
‘உலகத்தின் கண்களில் ஓடாய்த் தேய்ந்தவனின்
உழைப்பைச் சுரண்டும் சர்வாதிகாரத்தின் கீழ்தான்
கூவி விற்பவளின் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
எதிர்பார்ப்புகளின்றி கொடிய வெயிலிலும்
வெட்கங்கெட்ட மானுடத்தைப் பாடுவதை விட்டொழித்து
இயற்கைக்குத் திரும்பிவிட்டன என் கவிதைகள்.’ (பக் 85)
திருப்பூரில் எனக்கொரு நண்பர் இருக்கிறார். ஒரு பெரிய நிறுவனத்தில் மனிதவளத் துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். சென்னையில் கடந்த நூற்றாண்டின் இறுதியாண்டில் ஒரு நாள் காரில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது கூவம் பாலத்தைக் கடக்கையில் வலப்புற இருக்கையில் இருந்த அவர் இடது ஜன்னலோரம் இருந்த என்னை நிமிர்த்திவிட்டு பாலத்தில் படுத்திருந்த ஒருவரை காரின் ஓட்டத்தினூடே பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் தன்னிருக்கையில் சாய்ந்தார்.  அந்த இடத்தில் படுத்திருப்பவரைப் பார்த்துவிட்டு ஏன் இப்படிப் பெருமூச்சு விடுகிறார் என்று காரணம் கேட்டபோது அது ஒரு காலத்தில் தான் படுத்திருந்த இடம் என்றார். விடுதிக்குப் பணம் கட்ட வழியின்றி நண்பர்களின் உதவியுடன் உடுப்பை மட்டும் விடுதியில் வைத்துவிட்டு பகுதிநேர வேலை பார்த்து இரவு நேரத்தை அந்த எட்டாவது தூணின் அரவணைப்பில் கழித்த நாட்களை நினைவு கூர்ந்தார். அவர் சொன்ன பல்வேறு விஷயங்களை மீண்டும் எனக்குள் கொண்டு வந்து நிறுத்தியது அய்யப்ப மாதவனின் சுரங்கப்பாதை நகரம். (பக் 24). ஒத்த தன்மையுடன் பசியை வறுமையை விரக்தியற்றுப் பாடும் பசிப்பாடல்கள் (பக் 103), விழாமல் கொல்லும் பாதாளம் (பக் 81), அவனுக்கு மேலே நீலவானம் (பக் 61)
அய்யப்ப மாதவனின் இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் பலவும் 1/8 டம்மி சைஸ் கவிதைகளாக இருக்கின்றன. ஒருபக்கத்தைத் தாண்டாத பக்குவமான 108 கவிதைகளும் மாணிக்கம் மேஸ்திரி தெரு இரண்டாவது பக்கத்திற்கு 7 வரி நீண்டிருக்கிறது. கொஞ்சம் பெரிய தெரு போலும். வெண்பனிக்காலை விடிகின்ற பொழுதில்… என்ற தலைப்பிலான (மகள்) சரண்யாவிற்கான கவிதையும் 5 வரிகள் அடுத்த பக்கத்திற்கு நீண்டிருக்கிறது. மற்றபடி ரொம்பப் பாந்தமாக லே அவுட்டுக்குள் அமரும் கவிதைகளாக இருக்கின்றன.
இவருடைய கவிதைகள் பலவற்றில் இவரின் காட்சிப்படுத்தலை நான் பின்பற்றும்போது ஒரு மாயத்திரை விரிகிறது. இந்த விர்ச்சுவல் தன்மை இவருடைய திரைப்படங்களில் இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. எதிர்பார்ப்போம். அய்யப்ப மாதவனுக்கு மொழி நன்கு கைவரப்பெற்றிருக்கிறது. இருந்தாலும் இருட்டு, ஒளி, நிழல், மழை, முத்தம், குளிர், பகல், இரவு, இசை, புத்தன், அகம், நதி, காற்று, அவள், புனைவு போன்ற வார்த்தைகள் திரும்பத் திரும்ப வருவது தொகுப்பாகப் படிக்கையில் கொஞ்சம் அலுப்பாகத்தான் இருக்கிறது. இன்னும் நிறைய தளங்களில் புதிய வார்த்தைகளுடன் அய்யப்ப மாதவன் இன்னும் பலமுடிகள் கட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.
கவிஞனாகிய நான் ஏழ்மையில்தான் வாழ்கிறேன் என்ற தன்னுரையில் அவர் குறிப்பிட்டபடி அவரின் கவிதைகள் எதற்குள்ளும் அடங்க மறுப்பவை என்கிறார். அவை அப்படி இல்லை. அவர் பொய் சொல்கிறார். அவருடைய கவிதைகளின் அடிநாதமாய் அன்பு இருக்கிறது. அது இயற்கையின் மீதானதாக, குழந்தைகளின் மீதானதாக, பாவப்பட்டவர்களின் மீதானதாக, பெண்மையின் மீதானதாக, …. பூர்ணத்துவம் பெறாத போதாமையைச் சொத்தாகக் கொண்டவர்களின் மீதானதாக இருக்கிறது. அந்தஅன்பின் வெளிப்பாடாகவே அவருடைய உணர்வுகளும், வார்த்தைகளும் படைப்புவழி செயல்படுகின்றன.
இறுதியாக அய்யப்ப மாதவனின் வார்த்தைகளில்…

தமிழில் கவிஞர்கள் அரிதாய்த்தான் பிறக்கிறார்கள். அதோ அந்தச் சீரிய விமர்சகர் சொல்வதனாலும் மட்டும் அவன் கவிஞனாகி விடுவதில்லை. … யாரின் சொல்லுக்குக்கும் புகழுக்கும் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் அடங்காதவன் அவனைப் புகழவும் வேண்டாம் தூற்றவும் வேண்டாம். முடிந்தால் அவன் கவிதைகளைப் படியுங்கள். அதுவே அவனுக்குப் போதுமானது.

No comments:

Post a Comment