Tuesday, January 10, 2012

பிக் பக் பன்னி – பெர்முடாசனம் - ஜெயகணேஷ்


                எனக்கு கோபம் கோபமாக வருகிறது. கார்ட்டூன் படம் பார்க்க வேண்டிய வயசுல பார்க்கவே விடாத அப்பா அம்மா மேலயும்... உட்கார்ந்து படம் பார்க்க முடியாத சூழ்நிலையில படம் பார்த்து விமர்சனம் பண்ண சொல்ற மதி மேலயும்... இருந்தாலும் இரண்டு பேரும் நம்மை புரிஞ்சிக்கிட்டுதான் சொல்றாங்க அப்படிங்கிற ஒரு மனசோட ஆரம்பிக்கிறேன்.
                உண்மையில் உட்கார்ந்து படம் பார்க்க முடியல. அப்படியே பார்த்தாலும் ரசிக்க முடியல. ரசிச்சாலும் வெளியில சொல்ல முடியல. இதகூட ரசிக்க தெரியலன்னு சொல்லுவாங்கன்னு ஒரு பயமும். இதையெல்லாம் ரசிக்கிற வயசான்னு கேட்டுறுவாங்களோன்னு ஒரு பயமும் வந்து வந்து போகுது. இப்படி இருக்குறப்ப எப்படி திரைப்படங்களை (அ) குரும்படங்களை விமர்சனம் (அ) அறிமுகம் செய்வது. அதனாலதான் இந்த பெர்முடாசனம். பெர்முடாயிசத்தில இருந்து இட்டுக்கட்டிக்கிட்ட வார்த்தைதான் பெர்முடாசனம். படத்த பத்தி என்ன தோணுதோ அத அப்படியே சொல்லிடுறேன்.
                பிக் பக் பன்னி. படம் பார்க்கும் போது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எந்த படமாயிருந்தாலும் கிளைமேக்ஸ்ல வரும் அழுகை காட்சிக்கு நிஜமாகவே அழுகுற ஆள் நான். அவ்வளவுதான் நம்ம சினிமா அறிவு. அப்படிப்பட்ட எனக்கு பிடிச்சிப் போனதுல ஆச்சர்யப்படுறதுக்கு ஒண்ணும் இல்ல.
                மை டியர் குட்டிச்சாத்தான் படத்துக்கு அப்புறம் நான் பார்க்குற 3டி படம் இது. படம்தான் 3டி. நான் பார்த்தது சாதாரணமாகத்தான்.
                ஒரு மலையடிவார வயல்வெளியில் பசுமையான காலையில் ஒரு பறவையின் காலை நேர புத்துணர்சியோடு இறக்கை விரித்து சிலிர்ப்போடும், அதன்பின் அதற்கு கிடைக்கும் கல்லடியோடும் தொடங்குகிறது படம்.
                காலை வேளையில் பிக் பன்னி எனும் பெரிய முயல் தன் வலையில் உறக்கத்திலிருந்து எழுந்து சோம்பல் முறித்து வெளியில் வருகிறது. அதன் முகத்தில் எனக்கு ஏனோ கிறிஸ்துமஸ் தாத்தா தெரிந்தார்.
                பிக் பன்னி பூக்களை முகர்ந்து வண்ணத்துப் பூச்சியை ரசித்துக்கொண்டிருக்கையில் மரத்திலிருக்கும் ஆப்பிள் விழுந்து வண்ணத்துப்பூச்சி இறந்து போனதும் அதன் முகம் வாடினாலும்  வழக்கமாய் நடப்பதுதான் என்கிற தொனியில் ஆப்பிளை எடுத்து தின்று கொண்டே செல்கிறது. பின்னாலேயே வேறொரு வண்ணத்துப்பூச்சி வருகையில் இறந்த வண்ணத்துப்பூச்சிதான் வருகிறதென நினைத்து அதன் முகத்தில் தெரிகிற சந்தோசம் அதன் அப்பாவித்தனத்தை நமக்கு சொல்கிறது.
                அந்த வண்ணத்துப் பூச்சியையும் பிக் பன்னியின் கண் முன்னாடியே மூன்று சேட்டைக்கார மிருகங்கள் கொன்று விளையாடும் போதும், பிக் பன்னியையே பழங்களையும் முள் கொட்டைகளையும் வைத்து தாக்கும் போதுதான், பிக் பன்னிக்கு அந்த சேட்டைக்கார மிருகங்களின்  போக்கிரித்தனம் புரிகிறது.
                தமிழ் படங்கள் போலவே அவற்றை பழிவாங்க கிளம்புகிறது. ஆக்சன் கிங் அர்ஜுன் படங்களில் தீவிரவாதிகளை அழிக்க நடக்கும் முன் ஏற்பாடுகளைப்போல் தாக்குதலுக்கு தேவையான ஆயுதங்களையும் பயிற்சிகளையும் தயார் செய்து முகத்தில் போருக்கு தயார் ஆவதைப்போல் வேடமும் இட்டுக்கொள்கிறது. இதெல்லாம் நான் அர்ஜுன் படங்களின் பார்த்ததுதான். தோழர் கேகே சொல்லித்தான் ராம்போ படத்தில் இருந்து சுட்டது என்பது தெரிந்தது. நம்மையும் தாக்குதலுக்கு தயாராக்குவதுபோல இசையும், கையை பிடித்து இழுக்கிறது. ரஜினி படத்தில் ஒரு பாடலிலேயே பால் வித்து கோடீஸ்வரனாக்கும்போது ரசிகனும் கோடீஸ்வரனாவது போல உணர்வு ஏற்படத்தான் செய்தது.
                தயார் செய்த ஆயுதங்களை வைத்து மூன்று சேட்டைக்கார பிராணிகளையும் எப்படி மென்மையாகப் பழி வாங்குகிறது என்பது அழகாகவே சொல்லப்பட்டிருக்கும். இந்த இடத்தில் விக்கிரமன் படங்கள் நினைவிற்கு வரத்தானே செய்யும்.
                முடிவில் மீண்டும் அமைதியாய் தோட்டத்தை காவல் காத்துக்கொண்டு வண்ணத்துப் பூச்சியை ரசித்துக்கொண்டும் படம் முடிகிறது.
                படம் முடிவில் படத்திற்காக உழைத்தவர்களின் பெயர்கள் வருகிறது. 8 நிமிட படத்திற்கு உழைத்தவர்களின் பெயர் மட்டும் 1.30 நிமிடங்கள் திரையில் ஓடியது. எழுத்துக்கள் முடிந்த பின் முதலில் கல்லடிபட்ட அந்தப் பறவை, தண்டனையில் இருக்கும் சேட்டைக்கார பிராணியின் தலையில் கக்கா போவதோடு திரை இருள்கிறது

                2008ம் ஆண்டு வெளியான இந்த அனிமேசன் படமானது ‘பிளெண்டர்‘ எனும் திறந்த மூல மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்டது. திறந்த மூல மென்பொருள் என்பது பயமுறுத்தும் வார்த்தையாக உள்ளதால் அதன் விளக்கம். சில நிமிட அல்லது சில நொடி அனிமேசன் காட்சிகளுக்கு கோடிக்கணக்கில் செலவழிப்பதாக சினிமா கிசு கிசுக்கள் வருகின்றதே. அவர்களுக்கான பதில்தான் இந்த திறந்த மூல மென்பொருள். இணையத்தில் இலவசமாக கிடைக்கும் ‘பிளெண்டர்‘ எனும் மென்பொருள் மூலமாக தயாரான இரண்டாவது படம் இது. முதல் படம் ‘த எலிபண்ட்ஸ் ட்ரீம்‘.
                நெதர்லாந்தைச் சேர்ந்த இயக்குநர், ஜெர்மனியைச் சேர்ந்த இசையமைப்பாளர், அமெரிக்கடென்மார்க், பெல்ஜியம், ஆஸ்திரேலிய தொழில்நுட்ப கலைஞர்கள், இத்தாலி நாட்டைச் சேர்ந்த முன்னணி கலைஞர் இவர்களின் ஒட்டு மொத்த உழைப்பின் சாரம்தான் இந்த திரைப்படம்.
                8 முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மிகவும் ரசித்த திரைப்படத்திற்கான அவார்டை பெற்ற திரைப்படம் இது.
                வசனமே இல்லாத படம் இது. வசனமே தேவைப்படாத படம் இது. கதையில் வரும் சில பாத்திரங்களே ஆனாலும் ஒவ்வொன்றின் முகத்திலும் பாத்திரத்திற்கான உடல் மொழிகள், படத்திற்கான வசனங்களை தேவையில்லாததாக்கி விடுகின்றன.

(2011 டிசம்பர் 25 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் திரைவிமர்சன அரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரை)

No comments:

Post a Comment