Tuesday, November 16, 2010

இரத்தப் படலம் XIII ஐ முன்வைத்து - கேகே


          ஒரு வழியாக வந்துவிட்டது ‘இரத்தப்படலம்’. சுமார் 2 ஆண்டுகள் வாசகர்களைக் காக்கவைத்தபிறகு மகா ‘மெகா’ சைஸில் வந்தேவிட்டது லயன் காமிக்ஸின் இரத்தப்படலம். 858 பக்க தடிமனான அந்த காமிக்ஸ் புத்தகத்தை கையில் ஏந்தும் எந்தவொரு காமிக்ஸ் வாசகனும் சிலிர்த்துத்தான் போவான். காமிக்ஸ் உலகில் நிச்சயமாய் இது குறிப்பிடத்தக்க முயற்சிதான்.

          காமிக்ஸ் எனப்படுகின்ற சித்திரக்கதை அல்லது படக்கதைகளை - வாசிக்கும் பழக்கம் கொண்ட - அனைவரும் கடந்துதான் வந்திருப்போம். குறைந்த பட்சம் ‘கன்னித்தீவின்’ கரைப்பக்கமாவது ஒதுங்கியிருப்போம்.

          சில நாளிதழ்களில் தினமுமோ, வாரச் சிறப்பிதழ்களிலோ அல்லது வார இதழ்களிலோ 3,4 படங்களில் படத்துடன் ஒரு கதையும் இடம் பெற்றிருந்தன சுமார் பத்தாண்டுகளுக்கு முன்புவரை. இன்றைக்கும் சில ஆங்கில நாளிதழ்களிலும் சில தமிழ் நாளிதழ்களிலும் தொடர்கின்றன. குமுதம், ஆனந்த விகடன் போன்ற வெகுஜன ரசனை மட்டத்தில் இயங்கும் சில (வணிக) இதழ்கள் காமிக்ஸைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. ‘பிளாஷ்கார்டன் காமிக்ஸ்’ - குமுதத்தில் 90களில் தொடராக வந்தது இன்னும் பசுமையாய் நினைவில் நிற்கிறது. 50,60-களில் நிறைய நகைச்சுவைப் படத்தொடர்கள் (துப்பறியும் சாம்பு...), துப்பறியும் தொடர்கள் வந்நதுள்ளன. தற்போதும் அரசியல் நிகழ்வுகளை நையாண்டி செய்வதற்கு இந்த காமிக்ஸ் வடிவம் ஒரு நல்ல வசதியாய் இருக்கிறது.

காமிக்ஸ் அல்லது படக்கதை என்றால் என்ன?

ஒரு கதையோ அல்லது ஒரு சிறு நிகழ்வையோ நிறைய படங்களுடன் மட்டுமோ, தேவையான குறைந்தளவு விவரணைகள், உரையாடல்களுடனோ கூறுவது படக்கதை எனலாம். இங்கு படமே பிரதானம். சுருக்கமாகச் சொன்னால் அதிகபட்ச சாத்தியங்களுடனான படங்களுடன் ஒரு கதையை/நிகழ்வைக் கூறுவது படக்கதை எனலாம்.

          இங்கு இயல்பாய் ஒரு கேள்வி எழும். படங்களுடன் கதை சொல்வது எனில் கார்ட்டூன், கேரிகேச்சர், காமிக்ஸ் (Cartoon, Caricature. Comics) இவையெல்லாம் ஒன்றா...? கேரிகேச்சர் என்பது கேலிச் சித்திரம். குறிப்பிட்ட கதா பாத்திரங்களின் - நபர்களின் அங்க அசைவுகளை, நடவடிக்கைகளை, குணாதிசயங்களை கேலியான பாவனையில் வரைந்து வெளிப்படுத்துவது கேலிச்சித்திரம். ஒரு கருத்தையோ, கதையையோ, நிகழ்வையோ படங்களுடன் விளக்குவது கார்ட்டூன் எனப்படும் படத்தொடர். (நிறைய கார்டூன்களுக்கு உரையாடல், விவரணைகள் தேவைப்படுவது இல்லை. ஒற்றைப் பட கார்டூன்களும் இப்பொழுது நிறைய வருகின்றன) நகைச்சுவை இழையோடும் கேலியான படங்கள் இதன் சிறப்பம்சம். மனிதனையே வரைந்தாலும் சற்றேனும் மிகையான அல்லது கேலியாக - ஒல்லிக் கால்கள், பூசணித்தலை, குண்டு உடம்பு, முட்டைக் கண்கள், யானைக் காதுகள் வரையப்படும். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், இன்றைய நாளிதழ்களின் மதி, மதன் கார்டூன் வரை நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

          இந்த கார்டூன்களை அப்படியே திரையில் நொடிக்கு 24 பிரேம்கள் வீதம் ஓடவிட்டால் அதுதான் கார்டூன் படங்கள். டாம் அண்ட் ஜெர்ரி, பாபே (Popeye) டோரா போன்றவை. இவை புத்தக வடிவிலும் திரை வடிவிலும் வருகின்றன.

          இந்தக் கார்டூன்களையும், உள்ளடக்கியதாய் நகைச்சுவை மட்டுமன்றி காதல், சோகம், வீரசாகசம், திகில் என பல்வேறு உணர்வு தளத்தில் கதைக் களங்களைக் கொண்டது காமிக்ஸ் எனப்படும் படக்கதைகள். ஆனால் பொதுவாய் காமிக்ஸ் என்றவுடன் நாம் நகைச் சுவைக் கதைகள் என்றே நினைக்கிறோம். ‘காமிக்’ என்றாலே நகைச்சுவை என்றுதான் அர்த்தம். ஆனால் சூப்பர் மேன், டார்ஜான், XIII போன்றோரும் காமிக்ஸ் கதைகளில் வலம் வருகிறார்கள் என்பதிலிருந்தே காமிக்ஸை நாம் பிரித்தறிய முடியும்.

          Cartoon, Caricature, Comics strip, Comics story என இவற்றைப் பற்றி வலைத்தளங்களில் ஆங்கிலத்தில் நிறைய தகவல்கள் கிடைக்கின்ற நிலையில் காமிக்ஸைப் பற்றிய சில விஷயங்களை தமிழில் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

காமிக்ஸ்

          காமிக்ஸ்களை - கதை உருவாக்கப்படுமிடங்கள் (கதை தயாரிப்பாளர்கள் - கதாசிரியர் உட்பட) கதைக்களங்கள், கதை நிழும் சூழல், கதை மாந்தர்கள், கதைகளின் உள்ளடக்கம் இவற்றைப் பொறுத்து வகைப்படுத்தலாம்.

          1. அதீத சக்தி கொண்ட அசாத்திய வீரர்களைக் கதைநாயகர்களாகக் கொண்டவை. அதிவீர சாகசமே இக்கதைகளின் மையம். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், ஹி மேன் (எல்லாம் மேன்கள்தாம். பின்னாளில் போனால் போகிறதென்று பென்டாஸ்டிக் ஃபோர் போன்றவற்றில் குழுவில் ஒருவராக ஒரு பெண் வருவார்) இந்த வீரர்களின் எதிரிகள் பராக்கிரமசாலிகளாக (வேற்றுலகவாசிகளாக) இருப்பார்கள். பெரும்பாலும் உலகைக் காக்கும் பணியில் ஈடுபடுவார்கள். ஆக்ஷன் காமிக்ஸின் சூப்பர்மேன் நிறைய மேன்களுக்கு இரத்தினக் கம்பளம் விரித்து வைத்தார்.

          2. யதார்த்தமான மனிதர்களைக் கொண்ட நடைமுறை வாழ்விலிருந்து கதைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. வீரம், காதல், புத்தி சாதுர்யம், செயல்வேகம் என ரொமான்டிச பாணியில் அமைந்த கதைகள் ஒரு வகை. இக்கதை மாந்தர்கள் சாதாரணமானவர்கள். உணர்ச்சிவயமிக்கவர்கள். உடல் ஆற்றல், மனஉறுதி படைத்தவர்கள். டார்ஜான், பேண்டம், ஷீனா போன்றவர்கள். வியத்தகு உடலாற்றல் பெற்றவர்கள். அதிரடி சண்டைகள் நிறைந்த கௌ-பாய் கதைகளும் இதிலடங்கும்; காதலும், சோகமும் பொங்கும் காதல் கதைகளை மட்டுமே வெளியிடும் காமிக்ஸ் நிறுவனங்களும் உள்ளன.

          3.காமிக்ஸ் கதைகளில் குறிப்பிடத்தகுந்த அளவிலானவை துப்பறியும் கதைகள்தாம். 60,70 களில் உலகமெங்கும் இந்தப் பாணியிலான கதைகள்தாம் நிறைய வந்தன. மர்மங்களை அவிழ்ப்பது, குற்றங்களைப் புலனாய்வு செய்வதான பாணியில் விறுவிறுப்பான தன்மையில் கதை சொல்லப்பட்டிருக்கும். ஜேம்ஸ்பாண்ட், ரிப்கெர்பி, காரிகன், இந்தியாவில் இன்ஸ்பெக்டர் கருடா, சங்கர்லால் போன்றோர் புகழ்பெற்ற நாயகர்கள். துப்பறியும் மேதை எனப்புகழ்பெற்ற ஷெர்ல்லாக் ஹோம்ஸ் காமிக்ஸ் வடிவில் பெரிதும் எடுபடவில்லை என்பது வியப்பான விஷயம்தான். இக்கதைகளில் போதுமான அளவு திடீர் திருப்பங்களும், விறுவிறுப்பும் இல்லை என்பது தோல்விக்கு ஒரு முக்கிய காரணம். இவை தவிர யுத்தங்களை மையமாய் வைத்து உளவாளிகள், இராணுவ தளவாடங்கள், பீரங்கிகள் என யுத்த மேகங்கள் சூழ்ந்த கதைகளுக்கு குறிப்பிட்ட வாசகர் வட்டம் உலகெங்கிலும் உண்டு. இவை தவிர திகில் கதைகள், பேய்க்கதைகளும் கணிசமாக வெளிவருகின்றன.

          4. அறிவியல் புனைகதைகள் என்ற பெயரில் புருடாக்களை அள்ளிவிடும் கதைகள் ஒருவகை. அநேகமாக சைன்ஸ் ஃபிக்சன் என்று சொல்லப்படும் கதைக் கருக்களை என்றைக்கோ கடந்துவிட்டன இந்தவகைக் கதைகள். மர்ம மனிதன் மார்டின், விண்வெளி வீரர் ஃபிளாஷ்கார்டன், யந்திர மனிதன் ஆர்ச்சி இன்னும் வேற்று கிரகவாசிகள் பற்றிய கதைகள் நிறைய. ‘கன்னா-பின்னா’ வென்று தொழில்நுட்பம் வளர்ந்ததாகக் காட்டும் ஸ்பைடர், இரும்புக்கை மாயாவி போன்ற அறிவியல் இல்லாத (அறிவியல்) தொழில்நுட்பக் கதைகள் ஏராளம். இதில் கம்ப்யூட்டர், ரோபோட், எல்லாம் ‘ENIAC’ காலத்திலேயே. ஆர்தர் சி.கிளார்க், ஐசக் அஸிமோவ், ஹெச்.ஜி.வெல்ஸ் இவர்களை மிஞ்சுமளவிற்கு கதைக்கப்பட்ட கதைகள் இவை. ‘அறிவியல் விநோதங்க’ளை விட ‘விநோத அறிவியலு’க்கு முக்கியத்துவம் தந்தன இவ்வகை காமிக்ஸ் கதைகள்.

          5. உலகின் உன்னதமான இலக்கியங்களை காமிக்ஸ் வடிவில் எளிமையாக குழந்தைகளுக்கும், பாமரருக்கும் கொண்டு சேர்த்தவை ஒரு வகை. அழியாக் காவியங்களை இப்படிச் சுருக்கி மடித்துத் தருவது உவப்பான விஷயமில்லைதான் எனினும் இளஞ்சிறார்க்கான ஓர் எளிய அறிமுகமாக இம்முயற்சியை ஏற்றுக் கொள்ளலாம். அவ்வகையில் ஷேக்ஸ்பியரின் சில குறிப்பிட்ட படைப்புகள், ஜேன் ஆஸ்டினின் மேன்மையான நாவல்கள், செர்வாண்டிஸின் ‘டான் க்விஸாட்’ ரூப்யார்ட் கிப்ளிங்கின் ‘ஜங்கிள் புக்’ போன்ற கதைகள், கிரேக்க புராணங்கள், இந்திய இதிகாசக் கதைகள் போன்றவை காமிக்ஸ் வடிவில் வெளிவந்து இளம்பருவ வாசிப்பினை பரந்த தளத்தில் எடுத்துச் செல்கின்றன. அதே நேரத்தில் மதம் சார்ந்த ‘பைபிள் கதைகள்’ ‘இந்து கடவுளர் கதைகள்’ மற்றும் பிற மதக்கதைகளும் வெளிவந்து மதரீதியான சிந்தனைகளை உருவாக்கவும் செய்தன.

          6. குறிப்பிடத்தகுந்த ஒரு முக்கியமான வகை குழந்தைகளுக்கான காமிக்ஸ். குழந்தைகளுக்கான காமிக்ஸா? அப்படியானால் மற்ற காமிக்ஸ் கதைகள்? உண்மையில் காமிக்ஸ் என்றாலே குழந்தைகளுக்கானவை என்னுமளவிற்கு காமிக்ஸ் உலகில் குழந்தைகளும், குழந்தைகள் உலகில் காமிக்ஸும் உலாவுகின்றனர். காமிக்ஸ் படிப்பவர்கள் பல்வேறு வயதினராய் இருந்தபோதிலும் குழந்தைகளுக்கான - குறிப்பாய் நகைச் சுவைக்கதைகளே நிறைய வெளிவருகின்றன. விலங்குகள், பறவைகள், தாவரங்கள், பூச்சிகள் இவற்றோடு (அதிசய) மனிதர்கள் பற்றிய கதைகள், பல்வேறு நாடுகளின் நாடோடிக் கதைகள், தேவதைக் கதைகள் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை. சிண்ட்ரெல்லா, மிக்கி மௌஸ், லயன் கிங், பீர்பால், தெனாலியின் நகைச்சுவைக் கதைகள் போன்றவை நல்ல உதாரணங்கள். எல்லா காமிக்ஸ் கதைகளையும் இந்த வகைமைச் சட்டத்திற்குள் நிறுத்திவிடலாம்.

          சூப்பர் மேன், ஸ்பைடர் மேன்... இன்னும் நிறைய மேன்கள், டின்-டின், ஆர்ச்சி, ஆஸ்ட்ரிக்ஸ் ஒபிலிக்ஸ், XIII, ரிப்கெர்பி, ஜேம்ஸ் பாண்ட், மிக்கி மௌஸ் போன்றவை (இன்னும் நிறையவே உள்ளன) உலகப் புகழ் பெற்றவை.

          இந்திய அளவில் பைகோ, சம்பக் (PAICO, CHAMPAK) போன்றவை புகழ் பெற்றவை. மேலும் பல்வேறு மாநில மொழிகளிலும் குறிப்பிடத்தகுந்தளவில் காமிக்ஸ்கள் வெளிவருகின்றன.

          என்னைப் பொறுத்தவரை தமிழில் காமிக்ஸின் பொற்காலம் என்றால் நான் எழுதப் படிக்கக் கற்று வளர்ந்த 80கள்தாம் என்பேன். 70களின் இறுதியிலிருந்து 90களின் மத்திமம் வரை காமிக்ஸ் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

          அணில், பாலமித்ரா, அம்புலிமாமா, ரத்னபாலா, பூந்தளிர், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், இராணி காமிக்ஸ், பொன்னி காமிக்ஸ், மேகலா காமிக்ஸ், அமர் சித்திரக் கதைகள், பார்வதி சித்திரக் கதைகள், தினமணி, தினமலரின் சிறுவர் இதழ்கள், கோகுலம் என திகட்டத் திகட்ட சிறுவர் இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்த காலமி(ம)து.

          இவற்றுள் பாலமித்ரா, அம்புலிமாமா போன்றவை காமிக்ஸ் இல்லாத சிறுவர் இதழ்கள். கோகுலம், பூந்தளிர் போன்ற இதழ்கள் காமிக்ஸ் கதைகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. இதில் ‘பூந்தளிர்’ வட இந்திய சம்பக், பைகோவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு நிறைய படக்கதைகளைப் பயன்படுத்திக் கொண்டது. காக்கை காளி, வேட்டைக்கார சாம்பு, கபீஷ், நாடோடிக்கதைகள், கர்ண பரம்பரைக் கதைகள் போன்றவை குறிப்பிடத்தகுந்தன. பின்னாட்களில் நான் படித்த உலக நாடோடிக் கதைகள் பலவும் அதில் வந்திருந்தன. மலையாளத்திலும் ‘பாலரமா’ என்ற பெயரில் ஒரு பல்சுவை சிறுவர் இதழ் (கோகுலம் போல்) இன்னமும் வந்து கொண்டிருக்கிறது. இன்று தமிழில் ‘சுட்டி விகடன்’ பரவலான கவனிப்பைப் பெற்ற போதிலும் குழந்தைகளின் உலகினை சுட்டிவிகடனால் சரியாய்ப் புரிந்து கொள்ள முடியவில்லையோ எனத் தோன்றுகிறது.

          70-களின் இறுதியில் துவங்கப்பட்ட முத்து காமிக்ஸ் தமிழக காமிக்ஸ் வரலாற்றில் மிகப் பெரிய மாறுதலைச் செய்தது. ‘இரும்புக்கை மாயாவி’ என்று அந்த காமிக்ஸ் அறிமுகப்படுத்திய ஓர் அசாத்திய வீரனின் சாகசங்கள் நம்பமுடியாதவை. ஆனால் கிளர்ச்சியூட்டுபவை. இன்னமும் பேட் மேன் போன்ற அமானுஷ்ய கதைகளை நிறைய வெளியிட்டது முத்து காமிக்ஸ்.

முத்து காமிக்ஸைத் தொடர்ந்து 80களில் லயன் காமிக்ஸ், மினிலயன், காமிக்ஸ் கிளாஸிக்ஸ், திகில் காமிக்ஸ் என வகைவகையாய் காமிக்ஸ்கள் வெளிவந்தன. அதிரடி சண்டைகள், சாகசம், திகில், அமானுஷ்யம், அறிவியல் கற்பனைகள், கௌபாய் கதைகள், நகைச்சுவைக் கதைகள் என ஏகப்பட்ட கதைகள் வழியே டெக்ஸ் வில்லர் (பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல) கேப்டன் டைகர், லக்கிலூக், சிக்பில், ப்ரின்ஸ், ஜானி, ஜார்ஜ், ஆர்ச்சி, ஸ்பைடர், இரும்புக்கை மாயாவி, மாண்ட்ரேக், மாடஸ்டி பிளைஸி, நார்மன், கறுப்புக்கிழவி போன்ற வகை வகையான அருமையான கதாபாத்திரங்களை தமிழ் காமிக்ஸிற்கு அறிமுகப்படுத்தினார்கள். இக்கதைகளை வெளிநாட்டு (காமிக்ஸ்) நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். (லயன்காமிக்ஸ் அச்சிடமான சிவகாசியில் லயன்காமிக்ஸ் என்று கேட்டால் நிறையப் பேருக்குத் தெரியவில்லை - படித்தவர்களுக்கும்)

          பொன்னி, மேகலா, கண்மணி என சில காமிக்ஸ் இதழ்கள் வெளிவந்த போதிலும் தரமான கதைகள் படங்கள் இல்லாததால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ராணி காமிக்ஸ் ஜேம்ஸ்பாண்ட், முகமூடி வீரர் மாயாவி (புகழ் பெற்ற பேண்ட்டம் - முன்பே வேதாளம் என்ற பெயரிலும் வந்திருக்கிறது) கதைகளை நிறைய வெளியிட்டது. ஆனால் தற்போது தரமற்ற கதை-படங்களுடன் (பெரும்பாலானவை ஏனோ-தானோ ரகம்) பொலிவிழந்து நிற்கிறது. தற்போதைக்கு காமிக்ஸ் என்ற அளவில் லயன், முத்து காமிக்ஸ் மட்டும்தான் ஓரளவு தாக்குப்பிடித்து நிற்கிறது. அதுவும் குறைந்த எண்ணிக்கையிலான காமிக்ஸ் ‘காதலர்’களால். வெளிநாட்டுக் கதைகளை இறக்குமதி செய்யும்போது மிக அதிக செலவாகிறது. (அங்கு படைப்பாளிக்கான ராயல்டி அதிகம்) உலகளவில் புகழ் பெற்ற ‘டின்-டின், ஆஸ்டிரிக்ஸ்’ காமிக்ஸ் கதைகள் பெரிய அளவில் கண்ணைக் கவரும் வண்ணப் படங்களுடன் ‘வழுவழு’ காகிதத்தில் வெளிவருகின்றன. விலையும் அதற்கேற்ப நம்மூர் மதிப்பில் 200 ரூபாயில்தான் தொடங்கும். இந்தியாவில்-தமிழ்நாட்டில் அது சாத்தியமில்லை 20 ரூபாய் என்பதே சில நேரங்களில் அதிகமென்பதால் ஒரு காமிக்ஸ் வெளிவருவது பெரும்பாடாகி விடுகிறது. அந்த சந்தை விலைக்கேற்பத்தான் காமிக்ஸ் தயாரிப்பும் (தரமற்ற காகிதம், சுமாரான அச்சு) அமைகிறது. காமிக்ஸ் கதைகளை வண்ணத்தில் படிப்பது தமிழ் வாசகனுக்கு நிறைவேறாக் கனவுதானே. (லக்கி லூக்கின் சில கதைகளை வண்ணத்தில் பார்க்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது) வெளிநாட்டுக் கதைகளைத் தவிர்த்து உள்ளூர்க் கதைகளை வெளியிடலாமென்றால் அரதப் பழசான கதைகள், உயிரோட்டமற்ற படங்கள் (வில்லியம் வான்ஸின் படங்களைப் பாருங்கள். உயிரோட்டம் என்றால் என்னவென்று தெரியும்.) சேர்ந்து பெரும் சொதப்பலாய் அமைகின்றன.

          குழந்தையாயிருக்கும்போது காமிக்ஸ் படித்தவர்கள்தாம் இன்று(னு)ம் படிக்கிறார்கள். புதிதாய்ப் படிப்பவர்கள் குறைவு. Comics Stripகளை வேகமாகத் திரையில் ஓட்டினால் அதுதான் கார்ட்டூன் தொடர். டி.வி,யில் 24 மணிநேர கார்ட்டூன் சேனல்களே நிறைய வந்துவிட்டன. பின் எந்தக் குழந்தை நிதானமாய் காமிக்ஸ் படிக்கும்...?

          ஆனாலும் லக்கிலூக் காமிக்ஸ் படிக்கும்போது ஏற்பட்ட நகைச்சுவை உணர்வும், மகிழ்ச்சியும் சுட்டி டி.வி.யில் ‘டெலக்ஸ் பாண்டி’யாகப் பார்த்தபோது... ‘சகிக்கவில்லை’ என்பதுதான் உண்மை.

          எந்த ஒரு ஊடகத்தையும் போலவே காமிக்ஸ் கதைகளும் வாசகனை குறிப்பிட்ட விதத்தில் பாதிக்கின்றன. காமிக்ஸ் வாசகனை ஒரு அமானுஷ்ய வெளிக்கு இழுத்துச் செல்கிறது. கற்பனை உலகில் சஞ்சரிக்க வைக்கிறது. விநோத உருவங்கள், பறக்கும் தட்டுகள் என மெய்மறக்கச் செய்கின்றது. ‘இரும்புக்கை மாயாவி’யின் வாசகனுக்கும் இரும்புக்கை வந்துவிடுகிறது. தன் (கற்பனை) எதிரிகளை வீழ்த்த ரிவால்வரையும், வின்செஸ்டரையும் உபயோகப்படுத்தத் தூண்டுகிறது. பழுதேற்பட்டு வீழும் விமானத்தை விரைந்து தாங்கிக் காப்பாற்றச் செய்கிறது. கானகக் கோட்டையைக் காவல் காக்கும் கொரில்லாவுடன் சண்டைபுரியச் செய்கிறது.

          இப்படி ஒட்டு மொத்தமாக வாசிப்பவனை கற்பனை உலகில் இருத்தி வைத்துவிடும் (எதிர்மறை) ஆற்றல் காமிக்ஸ் கதைகளுக்கு இருக்கத்தான் செய்கிறது. சில கௌபாய் கதைகள் செவ்விந்தியர்களுக்கெதிரான வகையில் அமைக்கப்பட்டிருக்கும். மதரீதியான காமிக்ஸ் கதைகள் இளம் சிறார்களை கடிவாளம் போட்ட குதிரைகள் போல் வளர்க்கின்றன.இப்படி தனிப்பட்ட எதிர்(மறை) விளைவுகள் உண்டெனினும் கவனமாக, பக்குவமாகப் பயன்படுத்தினால் காமிக்ஸ் கதைகள் வாசிப்பவரின் மனஉறுதியினை வலுப்படுத்துகின்றன. தளராமல் முயற்சி செய்யும் பக்குவத்தைத் தருகின்றன. நிதானமாக ஆனால் விரைந்து முடிவெடுக்கும் திறமையைத் தருகின்றன. கூர்ந்து நோக்கும் திறன், செயல்வேகம் போன்றவற்றை வலுப்படுத்துகின்றன. முக்கியமாய் வரம்பிலா கற்பனைத் திறனை அளிக்கின்றன. உண்மையில் 6-16 வயதுள்ள குழந்தைகளுக்கு இந்த கற்பனை உலகம் அவரவர்கேற்ற அளவில் அவசியம் என்கிறது குழந்தை உளவியல்.

          இது ஒருபுறமிருக்க குழந்தைகளின் கல்வி சார்ந்த செயற்பாடுகளில் காமிக்ஸை பயன்படுத்துவது மிகப் பெரிய பலனளிக்கும் என்பது தெரிந்தும் நம் கல்வியாளர்கள் இவ்விஷயத்தில் மிகவும் பின்தங்கியே உள்ளனர். குறிப்பிட்ட சில தொண்டு நிறுவனங்கள் இம்முயற்சியை மேற்கொண்டிருப்பது வரவேற்கத் தகுந்த விஷயம். தொடக்கக் கல்வித் துறையில் ‘காமிக்ஸ் பாடங்கள்’ ஒரு முயற்சி என்ற அளவில் நிற்கிறது. நிறைய புராண, இதிகாசக் கதைகள் காமிக்ஸ் கதை வடிவில் குழந்தைகளை எளிதில் எட்டியிருக்கின்றன எனும்போது பாடப் பொருளை குறிப்பாய் அறிவியல் பாடங்களை இம்முறையில் மிக எளிதில் கற்பிக்க இயலும்.

          இங்கு எனக்கு பூந்தளிரின் நினைவு வருகிறது. நிறைய அறிவியல் செய்திகளை காமிக்ஸ் வடிவில் சொல்லியிருப்பார்கள். ‘ஜுராஸிக் பார்க்’ படத்தில் ‘மீண்டும் டைனோசர்’ என்னும் நம்பமுடியாத விஷயத்தின் அறிவியல் விளக்கத்தை கார்ட்டூன் வடிவில் விளக்குவார்கள்... பாருங்கள். போரடித்துவிடக் கூடாது. ஆனால் படத்தில் அதுதான் மிக முக்கியமான விஷயம். யோசித்துப் பாருங்கள்... ஒரு கொசுவின் கதைதான் ‘ஜுராஸிக் பார்க்’ என்றால்... எப்படி...? (கார்ட்டூன்) காமிக்ஸின் பலம்?
          பூந்தளிரில் இப்படி நிறைய அறிவியல் தகவல்கள், பல்வேறு கலாச்சாரங்கள் பற்றி காமிக்ஸ் வடிவில் தருவார்கள். பூந்தளிர் போன்ற இதழ்கள் மூலம் கதைகளின் ஊடே, விளையாட்டின் ஊடே நிறையக் கற்க முடிந்த- அறிவியலை, சமூகத்தை, மனிதர்களை, வாழ்க்கையை, தாவர-விலங்கு உலகத்தைக் கண்ணுற முடிந்தது. நான் சேகரித்து வைத்திருக்கும் ‘பூந்தளிர்’ இதழ்களை நினைத்துப் பார்த்தால் மனதிற்கு இதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
          இன்னமும் பல்வேறு வகையான காமிக்ஸ்களை வாசிக்கிறேன். எனது வாசிப்பின் வளர்ச்சி நிலையின் ஒரு கட்டத்தில் காமிக்ஸ் மீது சற்றுத் திகட்டல் வந்தது. அனால் அது சிறு தேக்கம்தான். இப்பொழுது காமிக்ஸ் நிறைய மாறியிருக்கிறது. ஜப்பானியர்களின் அலட்சியமான கோட்டுப் படங்கள், மேற்கத்திய பாணியில் வித்தியாசமான கோணங்களில் படங்கள், வேறுபட்ட பார்வைகளில் கதை கூறுதல், முப்பரிமாண கோணத்தில் படங்கள் என நிறைய மாற்றங்களுக்கு வாசகர்கள் பழகிக் கொள்ள வேண்டியிருக்கிறது. வெற்றியடையும் (ஹாலிவுட்) திரைப்படங்களின் தொடர்ச்சியாக, வெற்றி பெற்ற நடிகர்களை நாயகர்களாகக் கொண்ட கதைகள் வெளிவருவது இப்பொழுது தொடர்கிறது. முன்பு ரோஜர் மூர், புரூஸ் லீ. இப்பொழுது கரீபியன் கடற் கொள்ளையன், ஏலியன், ஜாக்கிஜான் என கதைகள் வருகின்றன. இந்த மாற்றங்களை உள்வாங்கியதால் காமிக்ஸ்களை இப்போது தரம்பிரிக்க முடிகிறது என்னால். தயாரிப்பு முறை, உள்ளடக்கம், படங்கள், படங்களின் கோணங்கள் பற்றியெல்லாம் கூட கவனித்து நிறைய இரசனையோடு காமிக்ஸ் படிக்கிறேன்.

          காமிக்ஸ் எனக்கென்று ஓர் தனி உலகத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. என் பள்ளிக் காலங்களில் கேப்டன் டைகர், டெக்ஸ் வில்லர், லக்கிலூக்குடன் சேர்ந்து நிறைய பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். நெவேடா பாலைவனமும் மிஸிஸிபி நதியும் நான் பிரியமாய் உலாவுமிடங்கள். எனது வலது கை இரும்பினால் ஆனது. சுட்டுவிரலை நீட்டினால் சிறு சிறு குண்டுகள் பாயும். ஹிட்லரின் நாஜி படைகளை ஊடுருவி அவர்களை எதிர்த்துச் சண்டை போடுவேன். வேற்று கிரக எதிரிகள் பூமியைத் தாக்க வரும்போது ஹெலிகாரில் பறந்து எ¢ந்திரமனிதன் ஆர்ச்சியின் துணையோடு எதிரிகளைத் துரத்தியடிப்பேன். நயவஞ்சகமிக்க மாஃபியா கும்பலை தோழி மாடஸ்டி பிளைஸியோடு சேர்ந்து வீழ்த்துவேன். வேட்டைக்காரன் தோப்பையாவிடமிருந்து யானை பந்திலாவை பத்திரமாயக் காப்பாற்றுவேன். எந்த ஈட்டியையும் தாங்கும் கேடயத்தையும் எந்தக் கேடயத்தையும் சிதைக்கும் ஓட்டியையும் விற்கும் வியாபாரியிடம் அவனது ஈட்டியையும், கேடயத்தையும் மோதச் செய்யக் கோருவேன். இப்படியாக எனக்கென்று ஓர் உலகம் இருந்தது. இருக்கிறது (சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு)

          என் அடிமனதின் ஆழத்தில் ஓர் ஆசை (சின்ன வயதிலிருந்தே) புதைந்திருக்கிறது. பின்னாளில் எந்தத் துறையில் என்னை ஈடுபடுத்திக் கொண்ட போதிலும் ‘பூந்தளிர்’ போன்று ஓர் இதழை நடத்த வேண்டுமென்பதுதானது. என் அடிமன ஆழத்து உணர்வு அது. குறைந்த பட்சம் சிறிய/பெரிய அளவில் ஓரிரு சிறப்பிதழ்களையாவது கொண்டுவந்துவிட வேண்டும். இ¢ல்லையென்றால் அடிமனத்தின் அந்த ஆவல் சித்ரவதை செய்துவிடும் என்னைக் கனவிலும் நனவிலும்.

(2010 நவம்பர் 7 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ‘மதிப்பு’ கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரை)

3 comments:

  1. காமிக்ஸ் எனக்கென்று ஓர் தனி உலகத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. என் பள்ளிக் காலங்களில் கேப்டன் டைகர், டெக்ஸ் வில்லர், லக்கிலூக்குடன் சேர்ந்து நிறைய பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். நெவேடா பாலைவனமும் மிஸிஸிபி நதியும் நான் பிரியமாய் உலாவுமிடங்கள். எனது வலது கை இரும்பினால் ஆனது. சுட்டுவிரலை நீட்டினால் சிறு சிறு குண்டுகள் பாயும். ஹிட்லரின் நாஜி படைகளை ஊடுருவி அவர்களை எதிர்த்துச் சண்டை போடுவேன். வேற்று கிரக எதிரிகள் பூமியைத் தாக்க வரும்போது ஹெலிகாரில் பறந்து எ¢ந்திரமனிதன் ஆர்ச்சியின் துணையோடு எதிரிகளைத் துரத்தியடிப்பேன். நயவஞ்சகமிக்க மாஃபியா கும்பலை தோழி மாடஸ்டி பிளைஸியோடு சேர்ந்து வீழ்த்துவேன். வேட்டைக்காரன் தோப்பையாவிடமிருந்து யானை பந்திலாவை பத்திரமாயக் காப்பாற்றுவேன். எந்த ஈட்டியையும் தாங்கும் கேடயத்தையும் எந்தக் கேடயத்தையும் சிதைக்கும் ஓட்டியையும் விற்கும் வியாபாரியிடம் அவனது ஈட்டியையும், கேடயத்தையும் மோதச் செய்யக் கோருவேன். இப்படியாக எனக்கென்று ஓர் உலகம் இருந்தது. இருக்கிறது


    ---------------

    என் பெட்றோர்கள் என்னிடமிருந்து பிடுங்கிய உலகம் இது.
    பக்கத்துக்கு போலீஸ்காரர் வீட்டில் படிக்காமல் கிடக்கும் குழந்தை மலரில் அறிமுகமான பலமுகமன்னன் ஜோ திரும்பவும் வந்துவிட்டான்.
    என் பையனிடம் அறிமுகப்படுத்துவேன் அவனை.
    நன்றி

    ReplyDelete
  2. மிகவும் நல்லதொரு பதிவு. வாழ்துக்கள். காமிக்ஸ் புத்தகங்கள் இப்பொதும் கிடைக்கின்றன என்பதெ ஒரு ஆறுதலான செய்தி தானே. கபீஸ் போன்ற வேறு ரக காமிக்ஸ்களும் இப்போது நினைவில் வருகின்றன. மந்திரவாதி மான்ட்டிரேக் பலமுகமன்னன் ஜோ, பிராம்போ போன்ற சிறுவர்மலர் தினத்தந்து காமிக்ஸ் கதைகளையும் கட்டுரை கண்முன் கொண்டு வந்தது. வாசித்த நண்பருக்கு வாழ்துக்கள். உங்கள் பிளாக்கின் லச்சினை அட்டகாசம். மிகவும் நல்ல லோகோ. அருமையாக இருக்கிறது. தொடர்ந்து பதிவிடுங்கள்.

    ReplyDelete
  3. டிகுடுக்..டிகுடுக்..டிகுடுக்..டிகுடுக்..

    உங்களின் இந்த பதிவு என் முகமூடி வீரர் மாயாவியைக் கிளப்பி விட்டுவிட்டது.
    இதோ புயல் வேகத்தில் கையில் மண்டையோட்டு முத்திரை கொண்ட மோதிரத்துடன், வெண்புரவியில், கருஞ்சிறுத்தையும் கிலி கொள்ளும் 'டைகர்' உடன் கிளம்பிவிட்டார்..

    வாடகைக்கு வாங்க முடியாமல் இருந்த நிலையிலும் அசிங்கப்படாமல்
    அவசரமாய் வாசித்து, வசித்து வந்த அந்த காமிக்ஸ் உலகத்திற்கு ஒரு நுழைவனுமதி(வீஸா) வழங்கியதற்கு நன்றி...

    ReplyDelete