Thursday, November 25, 2010

EMSன் பார்வையில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு - சுப்புராயுலு

நூல்விமர்சனம்

நூல்    :  இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு
மலையாள மூலம் : E.M.S நம்பூதிரிபாட்
ஆங்கிலவழி தமிழாக்கம் : கி. இலக்குவன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
                         421, அண்ணாசாலை
                         தேனாம்பேட்டை
                         சென்னை – 600 018

                         இப்புவியில் மற்ற உயிரினங்களைப் போல் மனிதனும் நிலப்பரப்பில் தோன்றி படிப்படியாக, குகை மனிதனிலிருந்து வேட்டைச் சமூகமாக, இனக்குழுவாக வளர்ந்து, இன்றைய நிலையை அடைந்து சூழலை தன் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றான்.

குடும்ப அமைப்பாக்கத்தின் வழியாக சமூக வெளியில் அரசு என்ற அமைப்பை உருவாக்கி, அது பல்வேறு வடிவங்களில் - குறிப்பாக நிலப்பிரப்புத்துவ சமூகத்தில் மன்னராட்சி வடிவமாக, முதலாளித்துவ சமூகத்தில் பாராளுமன்ற ஜனநாயகமாக, பின்னை மானுடத்தளைகளில் இருந்து விடுபடும் சோசலிஸ சமூகமாக உருமாறி வந்ததை நாம் நடைமுறையில் காண்கிறோம்.

மேலை நாடுகளில் குறிப்பாக ஜரோப்பாவில் மறுமலர்ச்சி காலம் தொட்டு, ஓர் வேங்கைப் பாய்ச்சலில் மனித சமூகம் தாண்டி வந்ததை வரலாற்றுப் பக்கங்களில் படித்திருக்கிறோம். அறிவியல் முன்னேற்றத்தைப் பயன்படுத்தி, ஜரோப்பிய நாடுகள் மனித வாழ்வின் தேவைக்கான பொருட்களை உற்பத்தி செய்வதற்க்கு யந்திரங்களை பயன்படுத்திய போது தேவையை விட பெருமளவிலான பொருட்கள் எஞ்சியதால், அவற்றை விற்பதற்கு சந்தையைத் தேடி, பல நாடுகளை, குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை நாடி வணிகம் செய்வதற்கு வந்தார்கள். முதலில் வணிகம் செய்வதற்கு வந்தவர்கள், அந்த நாடுகளின் அரசியல் சூழல் அவர்களுக்கு சாதகமானன நிலையிலிருந்த போது அந்த நாடுகளின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி காலனி நாடுகளாக்கினார்கள். இந்த அடிப்படையில், போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள், கடைசியில் வந்த ஆங்கிலேயர்கள் என அவர்களுக்குள் ஏற்பட்ட வணிகப் போட்டியில் இந்திய நிலப்பகுதியிகளைப் படிப்படியாகப் போரிட்டு வெற்றி பெற்றார்கள்.

1757 – பிளாசிப் போருக்குப் பின்பு வட இந்தியாவில் மொகலாயர்களின் பிரதிநிதிகளான நவாபுகளின் ஆளுகையிலிருந்த நிலப்பரப்புகளைக் கைப்பற்றி, அவர்களிடமிருந்து திவானி உரிமை என்ற நிர்வாக அதிகாரத்தைப் பெற்றார்கள். சென்ற காலத்தின் இந்திய நிலப்பகுதியின் வரலாற்றிலிருந்து, ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தியதையும் அதை எதிர்த்து இந்திய மக்கள் பல்வேறு இயக்கங்களை உருவாக்கிப் போராடியதையும் காலவரிசைப்படுத்தி விரிவான ஒரு நூலாக இந்தியக் கம்யூனிஸ்ட் மாக்சிஸ்ட் கட்சியின் முன்னணித்தலைவர்களின் ஒருவரான E.M.S நம்பூதிரிபாட் அவர்கள் எழுதியிருக்கிறார்.

ஏனெனில் E.M.S அவர்களும், ஆங்கிலேயர்களை எதிர்த்த இந்தியவிடுதலைப் போராட்டத்தில் இணைந்து பங்கெடுத்துக் கொண்டவர். இந்தப் போராட்ட வரலாற்றை தனக்கேயுரிய வகையில், தன் பார்வையில், தன் போராட்ட அனுபவங்களூடாக, இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் உருப்பெறுவதையும், அதில் பொதுவுடைமை இயக்கத்தவர்கள் அழுத்தமான தடம் பதித்த வரலாற்று தடயங்களையும் எழுதிச் செல்கிறார். முதலில் இந்த வரலாற்றை 1857-ல் இருந்து 1547-வரையிலான கால கட்டத்தில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை, இயங்கியல் பொருள் முதல்வாத கோட்பாட்டினூடாக விவரித்துச் செல்கிறார்.

1857-ல் நடந்த இந்திய முதல் சுதந்திரப் போரை ஆங்கிலேயர் ‘சிப்பாய்க் கலகம்’ என்றே வரலாற்றில் எழுதிவைத்தனர். அதை மறுத்து, அந்தப் போர் ஒர் உண்மையான சுதந்திரப் போர் தான் என்று நிறுவி, சில வரலாற்று உண்மைகளையும், போர் நடந்ததிற்க்குக் காரணமான சமூகப் பொருளாதாரப் பின்னணிகளையும் சரியான முறையில் தரவுகளைக் கொண்டு விவரிக்கிறார். ஆங்கிலேயர்களுக்கு முன்பு மொகலாயர் ஆட்சியில், நிலவரி வசூலிப்பவர்கள், அவர்களின் பிரதிநிதிகளான நவாபுகளும், தாலுக்தார்களும், மன்சூப்தார்களும். ஆங்கிலேயர்கள் தாங்கள் கைப்பற்றிய திவானி உரிமையை நிலைநாட்டும் விதமாக, மக்களிடம் வரி வசூலிப்பதற்க்கு ஜமீன்தார்கள் என்ற இடைத்தரகர்களை நியமித்தார்கள். இந்த இடைத்தரகர்கள் வரையறை செய்யப்பட்ட தொகைக்கும் அதிகமாக மக்களிடம் வரி வசூலிப்பதில் மிகவும் கொடூர முறையைக் கையாண்டதால் அரசு மீது மக்களுக்கு கோபமும், அதிருப்தியும் பொங்கி எழுந்தது. இந்த முறையினால் ஏற்கனவே சலுகைகளும், அதிகாரமும் பெற்ற தாலுக்தார்களும், மன்சூப்தார்களும், தங்கள் உரிமையையும் சலுகைகளையும் இழந்ததை எண்ணி ஆங்கிலேயர்கள் மேல் பகைமை உணர்வைக் கொண்டனர். ஒரு சமஸ்தானத்து மன்னருக்கு அடுத்து வாரிசு இல்லையென்றால் அந்த மன்னருடைய அரசு ஆங்கிலேயர்களுக்குத்தான் சொந்தம், என்ற சட்டங்களை ஆங்கிலேயர்கள் உருவாக்கியது, அன்றைய வட இந்தியாவில் உள்ள சமஸ்தான மன்னர்களிடையே கோபத்தையும், ஆத்திரத்தையும் உண்டாக்கியது. எனவே வடஇந்தியப் பகுதியில் மன்னர்களும், தாலுக்தார்களும், ஆங்கிலேயரிடம் பணியாற்றிய இந்தியச் சிப்பாய்களும் இணைந்து ஒரு பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். இதைத்தான் ‘சிப்பாய்க்கலகம்’ என்று வரலாற்றில் ஆங்கிலேயர் எழுதிவைத்தனர். இந்தப் போரை தலைமை தாங்கி நடத்தியது மன்னர்களும், நிலப்பிரபுகளும் தான் என்பதை விவரிக்கிறார். அதே சமயம் நம் இந்தியப் பகுதியில் தெற்கே 1857 க்கு முன்பே அதாவது 1750க்கும் முன்பு, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகப் பகுதிகளில், ரயத்துலாரி முறையை புகுத்தியதும் பலரை அதிருப்திக்குள்ளாக்கியது. ஆங்கிலேயருக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் நாட்டை 72 பாகங்களாக நிர்வாக வசதிக்காக பிரித்து ஆட்சி செய்தனர். பாளையக்காரர்கள் நிலவரி வசூலித்து மன்னர்களுக்கு செலுத்தினார்கள். எனவே ரயதவாரி என்பது தாசில்தார், ரெவின்யூ இன்ஸ்பெக்டர் என்ற படித்த அதிகார அமைப்பைப் பெற்ற முறையாகும். இதனால் சலுகைகளையும், அதிகாரத்தையும் நுகர்ந்து இழந்த தென்னாட்டுப் பாளையகாரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர்க்கோலம் கொண்ட வரலாற்றுண்மைகளை, தரவுகளோடு விளக்கிச் செல்கிறார்.

1857-ல் ஏற்பட்ட முதலாவது சுதந்திரப் போருக்குப் பிறகு இந்திய நிர்வாகத்தை பிரிட்டிஷ் ராணி தன்னுடைய நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்ததையும், அதற்கு காரணமான வணிக கம்பனியின் நிர்வாகம், கணக்கற்ற வரிகளை மக்கள் மீது சுமத்தி, நிதி நிர்வாகத்தைச் சரிவர நடத்தாமல் ஊழல் மிகுந்ததாக நடத்தியதால், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளின் கடுமையான எதிர்ப்புகளை சமாளிக்கும் விதமாகத்தான் ராணியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வந்த நிகழ்வுகளை காரணகாரியங்களோடு எழுதிச் செல்கிறார். அதாவது கவர்னர் ஜென்ரல் என்ற கம்பெனி நிர்வாகத்தின் பதவியை ராணியின் பிரதிநிதியாக வைஸ்ராய் என்பவரின் கீழ் இந்திய நிர்வாக அமைப்பைக் கொண்டு வந்த பின்னணியை விரிவான விவரணையோடு எழுதிச் செல்கிறார்.

இந்திய வைஸ்ராய்களுக்கு நாட்டை நிர்வாகிப்பதற்க்குரிய கல்வியைப் பரவலாக்குவதற்கான தேவை ஏற்பட்டது. அதனால் ஒரு புதிய ஆங்கில ஜரோப்பியக் கல்வி கற்ற ஒரு புதிய மத்தியதர வர்க்கம் உருவாகியது. இந்த நாட்டை இங்கிலாந்தின் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பதற்கான சந்தையாக மாற்றினார்கள். இந்தியாவில் உள்ள மூலப்பொருட்களை, தங்கள் தொழிற்சாலைகளுக்கு விரைந்து கொண்டு செல்வதற்காக, இரயில் பாதைகளையும், கப்பல் போக்குவரத்திற்காகத் துறைமுகங்களையும் அமைத்தனர். இரும்புப் பாதைகள் உருவாக்க வேண்டிய சூழலும், அதற்க்கேற்ப சிறு தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டிய நிர்பந்தமும் உள்ள நிகழ்வுகளை விரிவாகப் பேசுகிறார். இதனால் படித்த மத்திய தரவர்க்கமும், தொழிற்சாலைகளில் உழைப்பதற்கு தொழிலாளி வர்க்கமும் உருவான சூழலை விவரிக்கிறார்.

இந்த சுழலில் வங்கத்தில் ஆங்கிலக் கல்வி பெற்ற படித்த மத்திய தரவர்க்க அறிவாளிகளிடையே ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. தங்கள் பழைய சமயங்களையும், கலாச்சாரத்தையும் ஓர் புதிய கண்ணோட்டத்துடன் கூடிய மீட்டுருவாக்கம் பெற்றதையும், அதைத் தொடர்ந்து ராஜாராம் மோகன் ராய், கேசலசந்திரசென் போன்றோர் பிரம்ம சமாஜம் இயக்கத்தை தோற்றுவிக்கின்றனர். பஞ்சாபில் சுவாமி தயானந்த சரஸ்வதி தலைமையில், இந்து சமய மறுமலர்ச்சியாக ஆரியசமாஜம் என்ற இயக்கம் கட்டப்படுகிறது. பம்பாயில் பார்சி சமூகத்தாரும், ராஜஸ்தான் மார்வாரிகளும் வணிகத்திலிருந்து யந்திரத் தொழில்களில் முதலீடு செய்வதையும், புதிய இந்திய முதலாளி வர்க்கம் உருப் பெறுவதையும் சொல்கிறார்.

அன்னிய வர்த்தகர்கள் இந்தியாவில் முதலாளித்துவ அடித்தளத்தை அமைத்தனர். இந்தியாவில் இயந்திரத் தொழில்களை உருவாக்கினால், அது ஆளும் ஆங்கிலேயர்களின் சொந்த நலன்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை அவர்கள் அறிந்திருந்திருந்தாலும், ரயில் பாதைகள் அமைந்ததனால், அவற்றை பராமரிப்பதற்க்கு இங்கே தொழில் தொடங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. தங்கள் தொழில்துறை உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்களை இந்தியாவிலிருந்து குறைவான விலைக்கு வாங்கி, தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அவர்களுக்கு சாதகமான விலைக்கு விற்பதற்க்கேற்ற சந்தையை உருவாக்கி இந்தியாவைச் சுரண்டுவதுதான் அவர்களின் நோக்கமாக இருந்தது.

இந்தியாவில் சுயேச்சையான முறையில் தொழில் தொடங்குவதற்க்கு இடையூறாக விளங்கும் காரணி அப்போது இந்தியாவில் நிலவிய சமூக அமைப்பு முறை, பல்வேறு சாதிகளாகப் பிளவுபட்டு, ஒர் நவீன தொழிற்துறை உருவாகி வளர்வதற்கேற்ற புறச் சூழல் சாதகமாக இல்லை.

இந்தச் சூழலில் படித்த மத்தியதர வர்க்க அறிவாளிகளிடையே தேசீய உண்ர்வுகள் மேலோங்கி கல்கத்தாவில், பிரிட்டிஷ் இந்தியன் அசோசியேசன், பூனாவில் சர்வஜனிக்சபா, சென்னையின் மதராஸ் மகாஜன சபா போன்ற அமைப்புகள் உருவாகி செயல்பட்டு வந்தன. அவைகள் தங்களுடைய நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கருதி அதற்கான செயல் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தன. இவற்றின் விளைவாக ‘சர் ஆலன் ஆக்சேலியன் ஹியூம்’ என்ற ஆங்கிலேயர் தலைமையில் இந்திய தேசீய காங்கிரஸ் பேரியக்கம் உருவாகி வளர்ந்தது. ஆரம்பத்தில் ஆங்கிலேயர் நலனுக்கான அமைப்பாகத்தான் அதன் செயல்பாடுகள் இருந்தன என்பதை தெளிவுபடுத்துகிறார். 1885ல் துவக்கப்பட்ட இந்தப் பேரியக்கம் ஒவ்வோரு ஆண்டும் மாநாடு நடத்தித் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தது. ஆரம்பத்தில் சுரேந்தர் நாத் பானர்ஜி, கோகலே போன்றவர்கள் தலைவர்களாக இருந்து வழி நடத்தியதும், பின்னர் இயக்கத்தின் செயல் வழியில் தீவிரவாதம் மிதவாதப் போக்குகள் உருவாகி வந்ததும், அடுத்து திலகர் தலைமையில் தீவிரவாத நிலையெடுத்ததையும், மிகக் கூர்மையாக விளக்குகிறார். குறிப்பாக தீவிரவாத, மிதவாத தலைவர்களின் சிந்தனைப்போக்குகளில் உள்ள நமது மரபான மதம் தழுவிய, பழைமையில் ஊறிய கருத்தியல்களின் வழி அவர்கள் செயல்பட்டதை விளக்குகிறார். குறிப்பாக திலகரின் அரசியல் வழி தீவிரமாக இருந்தாலும், அவருடைய கருத்தியல் போக்குகள் மதவழிபட்ட சனாதனப் போக்குகளாக இருந்ததையும் விவரிக்கிறார். 1919 வரை திலகர் தலைமையில் இருந்த காங்கிரஸ் பேரியக்கம் பின்னர் தென்னாப்பிரிக்காவிலிருந்து ‘மோகன்லால் கரம்சந்த் காந்தி’ இந்தியா வந்து காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து, அதை படிப்படியாக தன்னுடைய ஆளுமைக்குக் கொண்டு வந்ததன் பின்னணியை விவரித்துச் செல்கிறார். தென்னாப்பிரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தன்னுடைய அரசியல் ஆயுதமான அஹிம்சைப் போர் முறையை வெள்ளையர்களை எதிர்த்துப் போரிடுவதற்கான உத்தியாகப் பயன்படுத்துகிறார் காந்தி. காந்தி இயக்கத்திற்கு தலைமை தாங்கியபின் போரிடுவதற்கான அவரின் செயல் திட்டங்கள் நமது நாட்டின் பரந்தளவிலான மக்களின் மனங்களை கவர்ந்து அவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துமளவிற்கு இருந்ததை, அவருடைய ஆளுமையின் பரிமாணங்களை ஆசிரியர் விரிவாக விளக்குச் செல்கிறார். திலகர் சிறந்த தலைவராக இருந்தாலும் காந்தியைப் போல் பரந்த அளவில் மக்களை திரட்டும் ஆற்றல் குறைந்தவராக இருந்ததைச் சொல்கிறார்.

ஆனால் காந்தியின் சிந்தனைகள், கொள்கைகள், இவற்றின் பின்னே உள்ள உண்மை என்பது இந்திய முதலாளிக்குச் சாதகமான அம்சமாக இருந்தது என்பதும், சாதிகளாகப் பிரிந்திருக்கும் இந்திய சமூகத்தை, நியாயப்ப்டுத்துவதாகவே அவருடைய சிந்தனைகள் விளங்கி வந்தனவென்றும் துல்லியமாகத் திறனாய்வு செய்து விவரிக்கிறார்.

இந்திய தேசீய காங்கிரஸ் என்பது புதிதாக வளர்ந்து வரும் இந்திய பூர்ஷ்வாக்கள் அல்லது முதலாளிகளின் கட்சி என்பதையும்; இந்திய முதலாளிகள் தொழில் தொடங்குவதும், தங்கள் தொழிலுக்கு எதிராக பிரிட்டிஷ் முதலாளிகள் முரணாக இருப்பதும், அதனால் தங்கள் மூலதனம் லாபகரமாக விளங்க வேண்டுமென்றால் வெள்ளையர்களை எதிர்ப்பதுதான் நிதர்சனமான உண்மையென்பதையும் அறிந்து கொண்டு, இந்திய பூர்ஷ்வா/முதலாளி வர்க்கம் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டத்தையும், காங்கிரஸ் பேரியக்கம் உண்மையிலேயே இந்திய முதலாளிகளின் நலனுக்கானதுதான் என்பதையும் தோலுரித்துச் சொல்கிறார்.

காங்கிரஸ் பேரியக்கம் பல்வேறு போராட்டங்களை காந்தியின் தலைமையில் நடத்துகையில், அடுத்தடுத்து மோதிலால் நேரு, படேல், ஜவகர்லால் நேரு, அபுல்கலாம் ஆசாத் போன்ற அடுத்தகட்டத் தலைவர்கள் உருவாகி வருவதையும் அவர்களின் ஆளுமையையும் தெளிவுபடுத்துகிறார்.

இந்தச் சூழலில் காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சிப் போக்கின் வழியே இந்தியாவின் பொதுவுடைமை இயக்கம் உருவாகி வளர்ச்சியுறுவதை கால வரிசைப்படுத்தி விவரிக்கிறார். எம்.என்.ராய் தொடங்கி முஸாபர் அகமது போன்ற தலைவர்கள் பொதுவுடமை இயக்கத்தைக் கட்டமைக்க முயன்றதையும், காங்கிரஸ் அமைப்பிற்க்குள்ளேயே இருந்து (பரந்தளவிலான பொதுமக்கள், தொழிலாளர்கள் போன்றவர்களுக்காக) உள்ளிருந்து கட்டுப்படுத்தி காங்கிரஸ் இயக்கம் சரியான நெறிகளில் செல்வதற்கு முயன்றதையும் விவரிக்கிறார். குறிப்பாக 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் உள்நேக்கங்களை வெளிப்படுத்தும் விதமாகவும் பொதுவுடைமை இயக்கத்தை கொச்சைப்படுத்தும் விதமாக காங்கிரசார் நடந்து கொண்டதையும் அன்றைய நிலையில் சர்வதேச அரசியல் போக்குகளுக்கு இணங்க பொதுவுடைமை இயக்கம் மேற்கொண்ட உத்திகளும் திசைவழியும் நியாமானதுதான் என்பதையும் விரிவாக விளக்கிச் செல்கிறார்.

தெலுங்கானா ஆயுத எழுச்சியின் உண்மையான தன்மையையும், அதன் பல்வேறு விதமான கூறுகளையும் பொதுவுடமை இயக்கத்திற்கு எதிராக காங்கிரஸ் அடக்குமுறையைக் கைக்கொண்டதையும் தெளிவுபடுத்துகிறார்.

சைமன் கமிஷன் வருகையை எதிர்த்து பஞ்சாபில் லாலா லஜபதிராய் மக்கள் இயக்கத்தை தலைமை தாங்கி ஊர்வலம் சென்றபோது பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி விண்டர்ஸ் ஊர்வலத்தை கலைப்பதற்காக தடியடி நடத்தியதில் லஜபதிராய் காயமடைந்து மரணமடைகிறார். இதைக்கண்ட பஞ்சாப் இளைஞர்கள் வெகுண்டெழுந்து இதற்கு பழி தீர்ப்பதற்காக முயன்று பகத்சிங் தலைமையில், ‘நவ ஜவான் பாரத் சபா’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, விண்டர்ஸை சுட்டுக் கொலை செய்கிறார்கள். எனவே அகிம்சைப் போர், ஆயுதங் தாங்கிய போராட்டமாக வடிவெடுக்கும் நிலைக்குச் சென்றது. விழித்துக் கொண்ட ஆங்கில அரசு கடுமையான அடக்கு முறைகளை ஏவியது. பின்னர் டில்லி பார்லிமெண்ட் மேல்சபையில், சுகதேவ், பகத்சிங், ராஜகுரு ஆகிய மூவரும் டம்மி வெடிகுண்டுகளை வீசி துண்டுப் பிரசுரங்களை வீசி வெள்ளையர்களுக்கு ஒர் அச்சுறுத்தலாகவும், எச்சரிக்கை செய்யும் விதமாக விளங்கினர். இந்தச் சம்பவத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகின்றனர். சதிவழக்கு புனையப்பட்டு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. சிறையிலும் அவர்கள் செயலற்று இருக்கவில்லை, உண்ணவிரதம், ஆர்ப்பட்டம், அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் என பல்வேறு விதமான போராட்ட வடிவங்களை மேற்கொண்டார்கள். சிறைக்கைதிகளை கொடுமை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதமிருந்த வங்கத்து ஜதீந்தாஸ் 45வது நாளில் மரணமடைந்தார். இது நாடு தழுவிய ஒரு பெரிய எதிர்ப்புப் பேரலையை உருவாக்கியது. பகத்சிங் அவர்களுடைய தோழர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று நாடெங்கும் கோரிக்கை குரல்கள் எழுந்தன. அந்த சமயத்தில் இர்வின் பிரபுதான் இந்தியாவின் வைஸ்ராயாக இருக்கிறார் எனவே மரண தண்டனையை நிறைவேற்றும் வகையில் வைஸ்ராய் தேதியை அறிவித்தது நாட்டு மக்களுக்குக் கோபத்தையும், ஆத்திரத்தையும் அதேசமயத்தில் கவலையையும் ஏற்படுத்தியது.

இத்தகைய சூழலில் தான் தீவிரமான சட்ட மறுப்பு இயக்கம் நடந்து கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சிக்கும் வெள்ளை அரசாங்காத்திற்குமிடையே ஒரு ரகசிய உடன்பாடு ஏற்பட்டு வருகிறது என்றும், போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என்றும் பரவலாக ஒரு கருத்து மக்கள் மத்தியில் உருவாகி வந்தது. 1931 மார்ச் 5ம் தேதி காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஒப்பந்த்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இரண்டு விதமான உணர்வுகள் காங்கிரஸ் தலைவர்களிடையே நிலவி வந்தன. அந்த ஆண்டு மார்ச் இறுதியில் கராச்சியில் நடை பெற்ற மாநாட்டிலும் இதே போன்ற உண்ர்வுகள் வெளிப்பட்டன.

இந்த ஒப்பந்தமானது அறப் போராட்டக்காரர்களை மட்டும் விடுதலை செய்வதற்க்கு வழிவகுத்தது. வெடிகுண்டு அரசியல் மற்றும் கம்யூனிஸ்ட் வழிமுறைகள், தொழிற்சங்கவாதிகள் ஆகியவர்களின் விடுதலையைப் பற்றி இந்த ஒப்பந்தம் தன் வரம்பிற்க்குள் கொண்டுவரவில்லை. பகத்சிங்கின் மரண தண்டனையைக் குறைப்பதற்கு மறுத்துவிட்ட வைஸ்ராயுடன், காந்தி ஒப்பந்தம் செய்து கொண்டதே மக்களின் மன அமைதியைக் குலைத்திருந்தது. காந்தி அவரிடம் பகத்சிங்கின் மரண தண்டனையை நீக்குவது பற்றி எதுவும் பேசவில்லை. உலக வரலாற்றில் ஆயுதமேந்திப் போராடிய போராளிகளின் செயல்கள் சரியானது தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் காந்தியின் இந்த நடவடிக்கையானது நம்மை அடக்கியொடுக்கிய வெள்ளையர்களுக்கு, மறைமுகமான ஆதரவாகத்தான் எண்ண வேண்டியுள்ளது என்பதை ஆசிரியர் இந்த நிகழ்வுகள் வழியாக விவரிக்கிறார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் காந்தியின் அனைத்து விதமான செயல்பாடுகளும், சிந்தனைப் போக்குகளும் உயர்வானது என்ற உன்னதமான இடத்தில் வைத்து ஒரு பெரிய பிம்பமாக வரலாற்றாசிரியர்கள் வடிவமைத்துக் கொண்டதையும், ஒரு பெரிய மனிதன் என்ற முறையில் இந்த பிம்பம் உடையப்பட்டு நொறுங்கிப் போனதயும் காந்தியின் இந்த செயல் மூலம் அம்பலப்பட்டுப் போனது என்பதை ஆசிரியர் விரிவாக விவரிக்கிறார்.

இந்திய விடுதலைக்கு பயன் கருதாது அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்று கட்டமைக்கப்பட்ட ஒரு வடிவத்தின் பின்னே எவ்வளவு கொடூரமான மனம் செயல்பட்டது என்பதையும் நமக்குத் தெரிவிக்கிறார். எனவே காந்தி யார் என்பதும், யாருக்காக உண்மையிலயே செயல்பட்டார் என்பதும், அவருக்குப் பின்னே எத்தகைய சக்திகள் இருந்தன என்பதும் இதன் மூலம் தெளிவுபடுத்துகிறார். கராச்சி மாநாடு 29ம் தேதி, மாநாடு நடைபெறும் நேரத்தில் பகத்சிங்கும் அவரது தோழர்களுக்கும் தூக்கிலிடப்பட்டால் காங்கிரசுக்கும் காந்திக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை உணர்ந்திருந்த வைஸ்ராய், மாநாடு முடிவடையும்வரை தூக்குத்தண்டனையை நிறைவேற்றாமல் ஒத்திவைப்புக்கு முனைந்தார். அந்த ஆலோசனையை காந்தி நிராகரித்துவிட்டார். ‘இந்த இளைஞர்களை தூக்கிலிடுவதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தால், அதனால் ஏற்படும் விளைவுகளைத் தான் சந்திப்பதற்க்குத் தயார்’ என்றும், ‘இப்பிரச்சனையில் எத்தகைய சலுகையும் தமக்குத் தேவையில்லை‘ என்றும் கூறியதால், இதனையடுத்து மார்ச் 23ல் பகத் சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிலிடப்பட்டனர். மாநாடு 25ம் தேதி துவங்கியது.

போராட்டங்கள் என்று நாம் செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தும் போது, இத்தகைய வடிவங்கள் உருவாவது இயற்கை. அகிம்சைதான் உயர்வானது, பலாத்காரம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற போர்வையில், மகத்தான அரசியல் தலைவர்களாக உருவாகக் கூடிய இளைஞர்களின் (அநியாயமாகப்) பறிக்கப்பட்ட உயிருக்கு ஈடாக எத்தகைய சித்தாந்தத்தை முன்னிருத்தியும் அதை நியாயப்படுத்த முடியாது.

காந்தி, நேரு, ஜின்னா, போஸ் போன்ற தலைவர்களின் தனிப்பட்ட உணர்வுகள் எவ்வாறு சுதந்திரப் போராட்டத்திற்க்கு ஆதரவாகவும், அதே சமயம் எதிராகவும் அமைந்திருந்தது என்பதையும், முதல் உலகப் போருக்குபின் நடந்த ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் போன்ற போராட்டங்களில் மக்களைத் திரட்டியது என்பது இந்தப்போராட்டங்களின் வழி வெள்ளையர்களோடு சமரசம் செய்து கொள்ளுவதற்கான ஓர் உத்தியாகத்தான் இருந்தது என்பதை தெளிவுபடுத்துகின்றன.

காந்தியின் ஆளுமையின் மற்றொரு பரிமாணம் அம்பேத்கர் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத அளவிற்கு உண்ணாவிரதமிருந்து அவரை நிராசைபடவைத்ததிலும் வெளிப்பட்டது. நேரு ஒரு இடதுசாரி என்ற கட்டமைப்பையும், உண்மையில் அவர் யார் பக்கம் என்பதையும் உடைத்துச் சொல்கிறார். கொள்கையில் ஊசலாட்டம் கொண்ட ஆளுமையுடையவர் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதிகாரத்தை வெள்ளையர்கள் நம்மிடையே அளிப்பதற்க்கு நாட்களைத் தள்ளும் வகையில் நம்மிடையே உள்ள இன, மத அடையாளங்களைப் பயன்படுத்தி இந்து-முஸ்லீம் கலவரங்களைத் தூண்டி லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்த சூழலையும், ஜின்னா மற்ற முஸ்லீம் தலைவர்கள், முஸ்லீம் சமூதாயத்தில் உருவான முதலாளிகளின் பிரதிநிதிகள் என்பதையும், எனவே அவர்கள் அதிகாரத்தில் பங்கெடுப்பதற்கு முனைப்பாகச் செயல்படும் வழியாகவே இந்தியப் பிரிவினை ஏற்பட்டதையும், நேரு, வல்லபாய் படேல் போன்ற தலைவர்கள் அதிகாரத்தை நுகர்வதற்கு ஆவலாக இருந்ததைப் போல, முஸ்லீம் லீக் தலைவர்களும் அதிகாரப்பசி கொண்டிருப்பதையும் பார்த்த வெள்ளையர் நிர்வாகம், இவர்களிடையே பிளவை ஏற்படுத்தி ஒட்டு மொத்த இந்தியாவின் விடுதலையை தள்ளிப் போடுவதற்கான உத்தியை வகுத்து, அதற்கு இவர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தியதை தெளிவுபட விவரிக்கிறார்.

இனம் மதம் போன்ற இயல்பான உணர்வுகளைப் பயன்படுத்தி மானுட உணர்வுகளையும், மானுட வாழ்வின் உன்னதமான விழுமியங்களை தங்களின் அதிகாரப் பசிக்கு உணவாக்கி, லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட சூழலில் தங்கள் அதிகாரம் தான் பெரிது என்று கருதிய பல பெரிய மனிதர்களின் முகங்களுக்குப் பின்னே உள்ள கறைபடிந்த பிம்பங்களை நமக்குத் தெளிவுபடுத்துகிறார்.

இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இந்தக்காலகட்டம் மிகவும் துயரம் வாய்ந்ததாக இருந்தது. அதே சமயம் இக்காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் பின்னே இருந்த தலைவர்களின் சுயநலத்தை எண்ணி ஆத்திரம்தான் ஏற்படுகிறது. எனவே இந்திய விடுதலை என்பது காந்தியின் அஹிம்சைப் போராட்டத்தில் மட்டுமல்ல, லட்சக்கணக்கான மக்களின் குருதி சிந்தப்பட்டதின் மேல்தான் பெறப்பட்டது என்பதும் நமக்கு தெளிவாகிறது. சுபாஸ் போஸ் அவர்களுடைய பங்களிப்பு இந்திய விடுதலைப் போரில் மகத்தானது என்றாலும் இடதுசாரிப் போக்குள்ளவர் என்ற தோற்றம் அவரைப் பற்றிக் கட்டமைத்திருந்தாலும், கடைசியில் நாஜிகளோடும், ஜப்பானியர்களோடும் சேர்ந்து ஆயுதப் போராட்டம் மூலம் இந்தியாவை விடுவிக்கலாம் என்ற அவருடைய கருத்த்மைவும் அதையொட்டிய அவருடைய ராணுவ நடவடிக்கையையும் நம்மால் செரித்துக் கொள்ள முடியாது என்பதை விரிவாக விளக்குகிறார்.

படிப்பதற்க்கு சரளமான நடையில் நூலை தமிழாக்கியவர், கி. இலக்குவன். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றி, அதன் தொழிற்சங்க அரங்கிலும் தீவிரமாக உழைத்தவர். மொழிபெயர்ப்பு நிதானமான நீரோட்டம் போன்று வாசிப்பில் உறையப்பட்டாலும் ஒரு சில இடங்களில் சலிப்பைத் தோற்றுவிக்கிறது. இது அவருடய விவரிப்பு மொழியின் தன்மையா? என்பது பரிசீலிக்கப்பட வேண்டியது.

1947-ல் கடற்படை கலகம் பற்றி இதில் விரிவாக விளக்கப்படவில்லை என்றாலும் அப்பொழுது பம்பாய் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும், நாடெங்கும் கொந்தளிப்பான உணர்வுகள் மேலோங்கியிருந்ததாலும் இவற்றை ஒருங்கிணைத்துப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்துவதற்கு காங்கிரஸ் பேரியக்கம் தயங்கியதால் அதன் விளைவுகள் பிரிட்டிஷாருக்குத்தான் சாதகமானது என்பதை விரிவாக விளக்கிச் செல்கிறார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களை தலைமை தாங்கி காங்கிரஸ்தான் வழி நடத்த வேண்டுமென்று மிகவும் எதிர்பார்த்தனர் என்றும், அப்பொழுது அதை பயன்படுத்தி பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் அளவிற்கு பொதுவுடமை இயக்கம் வலிமையற்று இருந்தது என்பதையும் தெளிவுபடுத்துகிறார். இந்தக்கடற்படை கலகம் தான் இந்தியவிடுதலையை துரிதப்படுத்தியது என்ற உண்மையை விளக்குகிறார். நமது விடுதலைப் போராட்டத்தில் காந்தியை பற்றிய பொய்யான பிம்பங்களைதான் மற்ற ஆசிரியர்கள் கட்டமைத்திருந்தார்கள். ஆனால் நூலில் ஆசிரியர் எந்த விதமான பக்கச்சாய்வில்லாமல் காந்தி போன்றவர்களுடைய ஆளுமையின் இருண்ட பகுதியை வெளிச்சப்படுத்திக் காட்டியிருக்கிறார்.

சிறந்த வடிவமைப்பும், அச்சுப் பிழைகளற்றும் பாரதி பதிப்பகம் சிறந்த முறையில் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது, ஒரு தகவல் பிழையைத் தவிர.

இன்றைய காங்கிரஸ் கலாச்சரம் என்பது, அதிகார வெறி, கோஷ்டிப் பூசல், தன்னை மையப்படுத்துதல், போன்ற தலைமைப் பண்புகளுக்கு மாறான, குணங்களின் வேர்கள், அன்றைய காங்கிரஸ் பேரியக்கத்தில், மிக ஆழமான முறையில் வேரோடிப் போயிருப்பதையும், இந்நூல் மூலமாக தெரிந்து கொள்கிறோம்.

மானுட வாழ்வின் உன்னதமான விழுமியங்கள், நெறிமுறைகள் ஆகியவற்றைச் சிதைத்து, அதன் விளைவான வகுப்புக் கலவரங்களில் லட்சக்கணக்கான மக்கள் பலியானதைக் கண்டும், அதைப் பற்றி எந்தவித உறுத்தலற்றும், குற்ற உணர்வற்றும், பதவியைக் கைப்பற்றி அதிகாரத்தை நுகர்வதற்க்கு ஆவலாய் பறந்த வரலாற்றின் துயரம் கலந்த நிகழ்வு தான் இது என்பதை நாம் உணரலாம். இதை E.M.S. தான் பங்கெடுத்துக்கொண்டதால் தன் பார்வையில் நிகழ்வுகளை ஒரு வரலாற்றாளரைப் போல் விவரித்து காந்தி கொலையான நாள் 1948 நிகழ்வோடு முடிக்கிறார்.

இத்தகைய அரசியல் விடுதலை பெற்ற நாம் அதை சரியாக பயன்படுத்தி மக்களை சரியான வழியில் நெறிபடுத்தி வருகிறோமா? என்ற கேள்விகளை இந்நூல் எழுப்புகிறது.

(2010 நவம்பர் 7 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ‘மதிப்பு’ கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரை)

No comments:

Post a Comment