Wednesday, November 10, 2010

இளமையின் கீதம் நாவல் ஒரு பார்வை - விஜி


நூல் விமர்சனம்

நூல்                 இளமையின் கீதம் (நாவல்)
சீன மூலம்   யங்மோ
தமிழாக்கம்   மயிலை பாலு
வெளியீடு      அலைகள் வெளியீட்டகம்
                            25, தெற்கு சிவன் கோயில் தெரு,
                            கோடம்பாக்கம்
                             சென்னை - 600 024
தொலைபேசி +9144 2481 5474
விலை               ரூ. 300.00

 
           மாணவப் பருவம் துடிப்பு மிக்கது; இளமை வேகம் மிக்கது; செயலூக்கம் மிக்கது. அத்தகைய செயல் திறனுக்கான ஆக்கப்பூர்வமான லட்சியமோ, திசைவழியோ உணரப்படாதவரை அவை சோம்பிப்போய் தீயவற்றின் பாதையில் திசைமாறிச் சிதறி, சிதைந்து போகின்றன. லட்சிய உரமூட்டப்பட்ட மாணவர்கள் ஒன்றிணையும்போது, அவர்கள் ஒரு மாபெரும் சக்தியாக மாறுகின்றனர். அத்தகைய மாற்றம் எத்தனை மகத்தானது என்பதைப் பல நாடுகளின் வரலாறுகள் சுட்டிக் காட்டுகின்றன. நம் கண்முன்னே தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு இதனை தெளிவாக உணர்த்துகிறது. வரலாற்றின் ஒரு பகுதியாக ‘மக்கள் சீனம்’ உருவான புரட்சிப் பாதையில் மாணவர்களின் பங்கேற்பும், போராட்டங்களும் எத்தனை முக்கியமாய் அமைந்தன என்பதை இளமையின் கீதம் என்ற சீன நாவல் உணர்த்துகிறது.

           பழைய சீனத்தின் கிராமப்புற நிலப்பிரபு ஒருவரால் வஞ்சிக்கப்பட்ட ஒரு குடியானவப் பெண்ணின் மகளான ‘லின் டாவோ சிங்’ தனது வாழ்வியல் அனுபவங்களினால் ஒரு கம்யூனிசப் போராளியாக உருமாற்றம் பெறுவதே ‘இளமையின் கீதம்’ என்ற நாவலாய்ப் படைக்கப்பட்டுள்ளது. வாழ்வின் துன்பங்களால் தற்கொலை செய்யத் துணிந்த டாவோசிங், படிப்படியாக தனது வாழ்விற்கு அர்த்தம் உண்டு என உணர்ந்து, கம்யூனிசக் கருத்துக்களால் கவரப்பட்டு, பலவித போராட்டங்கள், அனுபவங்கள் வாயிலாக புரட்சியின் பாதைக்குத் திரும்புகிறாள். கம்யூனிஸ்ட் மாணவர் தலைவர்களால் வழிநடத்தப்பட்டு, தனது சோகங்களை மீறி புரட்சிக்கு தன்னைத் தயார்படுத்தி, பலவித இன்னல்களுக்கு ஆளாகி, சிறை சென்று, இறுதியில் மற்றவர்களை வழிநடத்தும் கம்யூசப் போராளியாக டாவோசிங் வளர்ந்து நிற்பதை நாவல் பேசுகிறது.

           அக உணர்வுகள், மாற்றங்கள் பற்றிப் பேசுவதோடு அதற்குக் காரணமாய் அமைந்த அன்றைய புறச்சூழலைப் பற்றியும், நாவல் விரிவாகப் பேசுகிறது. 1935 காலக்கட்டத்தில் சீனாவில் இருந்த தேசிய நெருக்கடி, ஜப்பானிய ஏகாதிபத்திய அச்சுறுத்தல், ஆளும் கோமிண்டாங் அரசின் சரணாகதி, இவற்றால் பறிபோகும் சீன தேசம், அவற்றை எதிர்த்த போராட்டங்கள், போராட்டங்களின் மீதான அடக்குமுறை என நாடு முழுவதும் இளைஞர்களை, மாணவர்களை கிளர்ந்தெழச் செய்த புறச்சூழல் மிக யதார்த்தமாய் நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1935 டிசம்பர் 9ல் பீக்கிங்கில் நடைபெற்ற ஜப்பானிய எதிர்ப்பு மற்றும் தேசிய விடுதலைக்கான இயக்கங்களை தீவிரப்படுத்திய மாணவர் கலகமான ‘டிசம்பர் இயக்கத்தை’ (நமது ஜாலியன் வாலாபாக் படுகொலை எழுச்சிக்கு இணையானது) அடிப்படையாகக் கொண்டு நாவல் தொடர்கிறது.

          லின் டாவோ சிங் என்ற ஒற்றைப் பெண்ணின் வாழ்க்கை சித்தரிப்பாக தொடங்கும் நாவல் படிப்படியாக இயல்பாய் தேச விடுதலை உணர்வின் வழியாக சமூக மாற்றத்திற்கான புரட்சிப் பாதையில் பயணிக்கிறது. தனி மனிதன் தொலைந்து போய் மக்கள் திரள், புரட்சியை நோக்கி நடைபோடும் போராளிகளின் திரளான சமூக எழுச்சியோடு நாவல் முற்றுப் பெறுகிறது. ஒரு தனி மனிதக் கதை அல்ல இது. அந்தச் சூழலில் வாழ்ந்த எந்த ஒரு மாணவனின் கதையாகவும் இதுவே இருக்க முடியும். பழமைச் சமூகத்தை எதிர்த்துப் போரிட்ட ஒரு இளம் அறிவு ஜீவியின் கதை இது.

            ‘லின் டாவோ சிங்’ மட்டுமல்ல லட்சிய வீரனாய், புரட்சிகர போராளியாய் போராடி மாண்டு போகும் லூ சியா-சுவான், தன் சுயநலத்திற்காக எதையும் செய்கிற, யாரோடும் சேர்கிற யூங்-சே, போராட்ட வீரனாய்ப் புறப்பட்டு இடையில் திசைமாறி துரோகியாய் - காட்டிக் கொடுப்பவனாய் மாறும் தய்-யூ, நிலப்பிரபுத்துவத்தின் பிரதிநிதியாய் வந்து புரட்சியை அழிக்க முனையும் ஹீமெங்-ஆன், அழுது கொண்டே சிறைக்குள் வந்து அசைக்க முடியாக போராளியாய் பரிணாம வளர்ச்சியடையும் ஷீ-சியூ, பிற்போக்காளரான தந்தையை எதிர்த்து நிற்கும் லோ டா-ஃபாங், தாய்ப்பாசத்தால் புரட்சிப் பாதையில் ஈடுபட முடியாமல் தடுமாறும் சூ-நிங், தேசபக்திப் போராட்டத்தில் ஈடுபட வயது பிரச்சினையில்லை என மாணவர்களின் போராட்டத்தில் தன் மனைவியோடு தன்னையும் இணைத்துக் கொண்ட பேராசிரியர் வாங் என பலவகைப்பட்ட மனிதர்களையும் அவர்களின் வழியே புரட்சிப் போராட்டங்களையும் நாம் சந்திக்கிறோம்.

          எளிய நடையில் 748 பக்கங்கள் விரியும் நாவல் பல இடங்களில் நமக்குள் கேள்விகளையும் சிந்தனைகளையும் விதைத்துக் கொண்டே செல்கிறது. கம்யூனிஸப் புத்தகங்களின் வாசிப்பால் புரட்சிப் பாதைக்குத் திரும்புய ‘டாவோ சிங்’கின் வாழ்வு, புரட்சிப் பயணத்தில் புத்தகங்கள் நம்மை எந்தளவு தகவமைக்கும் என்பதற்குச் சான்றாகும். காதல், பாசம் என்பது புரட்சி என்ற பெருங்கனவிற்கு எதிராக திரும்புகையில் போராளிக்கு ஏற்படும் தடுமாற்றங்கள் பற்றியும், அவற்றிலிருந்து மீண்டு வருவது பற்றியும் நாவல் உணர்வுப்பூர்வமாகப் பதிய வைக்கிறது. தத்துவங்களை நடைமுறைப் படுத்துவதற்கான அறிவை அனுபவங்களே தரும் என்பதை நாவல் எல்லா இடங்களிலும் பறை சாற்றுகிறது. ‘தொழிற்சங்கங்கள் மட்டுமல்ல சிறைச்சாலைகளும்கூட கம்யூனிஸப் பள்ளிகள்’தான் என போராளிகளின் வாழ்வு நமக்குக் காட்டுகிறது. சிறைச்சாலை சென்று மீளும் ஒவ்வொரு போராளியும் அதிக வீரியமாய், கிளர்ந்தெழுந்து புரட்சியின் உந்துவிசையாய் மாறும் அற்புதத்தை நாவல் சுட்டிக் காட்டுகிறது. உழைக்கும் வர்க்கத்தினரின் உணர்வுப் பெருக்கை, அனுபவ அறிவை போராளிகள் ஒருங்கிணைக்க வேண்டிய முயற்சியையும் நாவல் நமக்குக் கற்றுத் தருகிறது. நாவல் மீண்டும் மீண்டும் முன்வைக்கும் ஒரே கேள்வி ‘தேசம் பற்றி எரிகின்ற போது நீங்கள் ஒரு பொறுப்பு மிக்க மாணவனாக நூலகத்தில் பாடங்களைப் படித்துக் கொண்டிருப்பீர்களா?’ என்பதுதான். மாணவர்களுக்கு அரசியல் தேவையா? என்ற கேள்வி நாவலில் மட்டுமல்லாமல் இன்றளவும் தேசங்கடந்து உலகம் முழுவதும் முன்வைக்கப்படுகிறது. இதற்கான பதிலை தனது படைப்பின் வழியே அளித்திருக்கிறார்கள் நூலாசிரியர் ‘யங் மோ’வும் மொழி பெயர்ப்பாளர் ‘மயிலை பாலு’வும். இளமையின் கீதத்தை நம்பிக்கையுடன் முன் மொழிவோம்.

(2010 நவம்பர் 7 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ‘மதிப்பு’ கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரை)

3 comments:

  1. ‘தேசம் பற்றி எரிகின்ற போது நீங்கள் ஒரு பொறுப்பு மிக்க மாணவனாக நூலகத்தில் பாடங்களைப் படித்துக் கொண்டிருப்பீர்களா?

    ஆமாம் என்கிறது
    இன்றைய மாடர்ன் மாணவ உலகம்

    ReplyDelete
  2. கணேஷன்,

    ”மாடர்ன் மாண்வ உலகம்” - நூல் பிடித்ததுப் போல ஒரு மாணவனை ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு உபயோகமாகும் படியான் ஒரு கல்விதான் இன்று கற்ப்பிக்கப் படுகிறது...

    எத்தனை ஊடகங்கள் ஒரு இடத்தில் நடக்கும் பிரச்சனையை பல கோணங்களில் அனுகுகின்றன?

    எத்துனை மாணவர்கள் ஒரு விவசாயி படும் பாட்டையும் அவனுக்கு கிடைக்க வேண்டியவற்றை பற்றி பேசுகிறார்கள்?

    மாணவர்களை விடுங்கள், எத்துனை ஆசிரியர்கள் இதனை விவாதத்திற்க்கு கொண்டு வருகிறார்கள்?

    ”மாணவப் பருவம் துடிப்பு மிக்கது; இளமை வேகம் மிக்கது; செயலூக்கம் மிக்கது. அத்தகைய செயல் திறனுக்கான ஆக்கப்பூர்வமான லட்சியமோ, திசைவழியோ உணரப்படாதவரை...”

    உணரப்படும், மாடர்ன் மாணவ உலகத்தாலும்...

    ReplyDelete
  3. மாடர்ன் மாணவன்... அப்டீனா என்ன 2010ல கம்ப்யூட்டர் படிக்கறவனா....?? ஆயிரத்தி தொள்ளாயிரத்தி பத்துல கூட நீங்கள் சொல்கிற மாடர்ன் மாணவன் இருந்திருக்கிறான்... ஆக பிரச்சணை வெள்ளக்காரனுக்கு சாப்ட்டுவேர் எழுதர்துலயோ இல்ல ரெண்டாயிரத்தி பத்துலயோ இல்ல... பிரச்சன ஒழுங்கா ஓட்டு போட்றதுலயும் உலக நடப்ப தெரிஞ்சுக்கிறதுலயும்தான் இருக்கு... மனசும,மனசாட்ச்சியும் எப்பவும் முக்கியம்...

    ReplyDelete