Tuesday, March 10, 2020

குழந்தை பனித்துளி - கவிதை - சத்யா


தன் பலமனைத்தையும்
உருட்டித் திரட்டி
மாபெரும் புல்லின் நுனியைத்
தள்ளிவிட யத்தனிக்கிறது
பனித்துளி
அணிலையும் குயிலையும்
எழுப்பிய சிரிப்புடன்
குதித்து வந்த மெத்தைக் காலில்
மிதித்துப் போகிறது
குழந்தை

இரவெல்லாம் சோம்பலாய்
முழித்த பூவில்
வெளிச்சம் பட்டுத் தெறிக்கும்
குட்டி சூரியனாய்
முளைத்திருக்கிறது
பனித்துளி
வாசத்தை நெஞ்சில் ரொப்பி
இதழ்விரித்து
மூக்கில் அப்பிக்கொண்டு போகிறது
குழந்தை

வேலிதாண்டி
வெளிச்சம் பயந்து
இருட்டில் ஒளிந்து
கள்ளத்தனமாய்
ஜன்னலில் எட்டிப் பார்க்கிறது
பனித்துளி
வெடுக்கென்று திறந்து
வழித்து
கன்னங்களில் அப்பிக்கொண்டு
சிலீரென சிரிக்கிறது
குழந்தை

கம்பி வேலியின்
முள்ளைக் கட்டியபடி
விழுவேனாயென்கிறது
பனித்துளி
இரும்புக் கதவில்
இழுத்து ஆடியபடி
முட்டித்தள்ளுகிறது
குழந்தை

வேப்ப மரம் காய்த்த
தித்திக்கும் கனியாக
இலைகளில் பூத்திருக்கிறது
பனித்துளி
அம்மா தொடையென
அணைத்து ஆடி
சிரித்து நனைகிறது
குழந்தை

No comments:

Post a Comment