Monday, December 9, 2019

சட்டை - சத்யா


தண்ணீர் தீர்ந்த நெகிழி போத்தலைக்
கசக்கியதுபோல்
படபட ரரரரவென்னும்
காது கூசும் புலம்பல்

'எங்கே... எங்கே...'
ரம்பமாய் கிழிக்கும்
நரிகளின் பேரழுகை

'காணோமே காணோமே'
நெருப்புக் காற்றின்
மூங்கில் கீதமாய்
யாக்கை உருகும் அழுகை

மழைவழியும் தகரமாய்
காதுக்குள் வழிந்தது

'என்ன காணோம்?' என்றதற்கு
விசும்பலை அடக்கி
'அழகான
அருமையான
பளபளக்கும்
முப்பாட்டன் தந்து
நான்
பொத்திக்காத்த ரத்தச்சட்டை' என்றது

'ரத்தமா? யார் ரத்தம்?'
'யாருடையதோ நான்தான் காப்பான்'
'களவு போனதா?'
'இல்லை'
'கிழிந்து போனதா'
'இல்லையில்லை'
'சாயம்போனதா?'
'இல்லவேயில்லை'
'பிறகு'
'நான்தான் எறிந்தேன்'

அவசரமாய் சுரண்டி
மண்ணுக்குள் கைவிட்டு
முக்கி இழுத்தது

'இதோ... இதோ'

வட்டக் குழலாய்
சிவப்புத்துணியொன்று
கையோடு வந்தது

'வலக்கையை வைத்துக்கொண்டேன்'
குட்டியை நக்கும் பூனையாய்
தடவிக் கொடுத்தது
பின்பு எக்காளமாய்ச் சொன்னது
'மிச்சமீதிகளை எறிந்துவிட்டேன்'

திடீரென
மழை பெய்ந்த சாலையாய்
அவசர கருமையை அப்பிக்கொண்டு
ஓ... வென்றழுதது
'அது காணோமே'யென்று

தேடிச்சலித்து
கை உதறி
மண் தெறித்து எழுந்தது

'எனக்கு எல்லா சட்டையும் சேரும்
எனக்கு மட்டும்தான் எல்லா சட்டையும் சேரும்
சிவப்பு சட்டை
கருப்பு சட்டை
நீல சட்டை
பச்சை சட்டை
ஏன் காவிச் சட்டை கூட எனக்கு சேரும்'

கழுத்து நரம்பு புடைக்க
கை முஷ்டியை மடக்கி
வான்நோக்கி காற்றில் குத்துவிட்டபடி
வலக்கை துணிகொண்டு
குறி மறைக்க இயலாமல்
அக்குளில் அடக்கி
குறிகள் குலுங்க குதித்து சொன்னது

'எனக்கு எல்லா சட்டையும் சேரும்
எனக்கு மட்டும்தான் எல்லா சட்டையும் சேரும்'
சுய அம்மணத்தை சட்டை செய்யாமல்
000 000 000

No comments:

Post a Comment