Sunday, December 7, 2014

கவிதை – பா.ராஜேந்திரன்

ஒவ்வொரு முறையும் – நீ
மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும்போது
இம்முறை மரணம் தொட்டுவிடுவாயோ
மரணம் – உன்னை விட்டுவிடுமோ – என்றே
எண்ணம் பிறக்கிறது.
உன் மூச்சுத் திணறல்
உன் பேச்சுத் திணறல் – இரண்டும்
என் மன உளைச்சலை அதிகப்படுத்துகிறது…
உன் கண்களின் பார்வை
யாரின் முகம் தேடித் துடிக்கிறது…
உன் உதடுகளின் உச்சரிப்பு
உடல் இயக்கம் தடைபடுவதை
அறிவிக்க முடியாமல் தவிக்கிறது…
உன் இதயம் தன் துடிப்பை
நிமிடத்திற்கு நிமிடம் மாற்றிக் கொள்கிறது…
முதன் முறை உடல் நலப் பாதிப்பில்
கலக்கம், துடிப்பு, பதற்றம் எனக்கும்…
தொடர்ச்சியான பாதிப்பில் என்னை நான்
பக்குவப்படுத்த கற்றுக் கொண்டேன்…
குடும்பத்தில் குழப்பம் இல்லாமல்
பொருளாதார நட்டத்தை ஈடுசெய்ய முடியாமல்
திணறிக் கொண்டும் – உனக்கான பொறுப்பை
உதறித் தள்ளாமல் சமாளிக்கும் முயற்சியில்
வெற்றி காண்பது எளிதல்ல…
என் பயணம் உன் மரணத்திலே
புதிய பாதை பெறும்…
புதிய பாதையில் பயணம்
கடுமையானதா எளிதானதா தொடங்கும்வரை
மலைக்க வைக்கும் பல கேள்விகளின் தொகுப்பாய்
என் மரணம் தெடும் வரை…

No comments:

Post a Comment